
“நேற்றைய கண்ணர்க்கும், நாளைய கண்ணர்க்கும்
வேற்றுமை கேசவ் வரைவதிலே -தோற்றம்
மறைவிலா மாலனோ மானஸசஞ் சாரன்
நிரைநேர் தளைசீர் நமக்கு”….கிரேசி மோகன்….!
கல்லகலிகைக்கு காலடி மோக்ஷம்
புள்ளகன்(ஜடாயு) ஏகிட புல்லிட்டு(தர்ப்பை) மோக்ஷம்
அல்லகல் வித்திடும் ஆதித்ய ரூபம்
வில்லகல் மார்பில் வேய்ந்திடும் ராமம்….!(எழுதித் தந்தேன் ‘’கிரிதரிடம்’’….அதற்கு இசையமைத்து எனது எழுத்துக்கு ஊட்டம் கொடுத்தவர் பாடினார் ‘’கிரிதர்’’…..!)
”கல்ராம் அகலிகைக்கு, இல்ராம்வை தேஹிக்கு,
கொள்ராம் விபீஷணன் காப்புக்கு, -தொல்ராம்
அவதார விஷ்ணு, அனுமான் தனக்கு
சிவராம க்ருஷ்ணா சரண்’’….கிரேசி மோகன்…!
. விசாரிக்காமல் சபித்து விட்டீரே என்ற அகலிகையின் வார்த்தை கவுதம முனியை சாபமாக வாட்ட….அதற்கு விமோசனமாக தில்லை சென்று ”சிவதாண்டவ தரிசனம்” செய்தாராம்….!பசவான் ஸ்ரீ ரமண வசனாம்ருதம்…..!
”ஆண்டவன் ஈசன் அழகுமை யாளோடு,
தாண்டவக் கோலம் தரிசிக்க, -வேண்டிவந்தார்,
கல்ல கலிகைக் கணவர் கவுதமர்,
தில்லைக்குப் போய்சாபத் தீர்வு”….கிரேசி மோகன்.
தூக்கக் கலக்கத்தில் தோன்றியது….CrazY Quotes From Crazy Coat….
”ஆறாவது அறிவுடன் நிறுத்திக் கொள்வ்பவன் அடிமுட்டாள்
ஏழாவது, எட்டாவது என்று தொடர்ந்து படித்து டிகிரி வாங்குபவனே புத்திசாலி’’….(1)
‘’இளமையில் கல்….முதுமையில் சிலை….நடுவயதில் வாழ்வின் நாராசமான உளியின் ஓசை’’….(2)
‘’பாவம் செய்தவன் நரகம் செல்கிறான்
புண்ணியம் செய்தவன் சொர்கம் செல்கிறான்
எதுவும் செய்யாதவன் பூமியில் பிறக்கிறான்’’….(3)
’’கெட்ட பழக்கத்தை நாம விடலாம்….பாழாய்ப்போன
நல்ல பழக்கமோ நம்மை விட்டால்தான் உண்டு’’….(4)
‘’அளவுக்கு மீறிய பசியில் நஞ்சும் அமிர்தமாகும்’’….(5)
‘’சொறிவதற்கு தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’’….(6)
‘’ஐந்தில் வளையாத முதுகு ஐம்பதில் வளையும்’’….(7)
‘’நான் ஆடாவிட்டாலும் KNEE ஆடும்’’….(8)
‘’கற்றோர்க்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு
கல்லாதவனுக்கோ செல்ல வேண்டிய அவசியம்
இல்லாததால் இருக்கும் இடத்திலேயே சிறப்பாக இருப்பான்’’….(9)
’’தானாய் வருவது வெற்றி
முயன்று பெறுவது தோல்வி’’….(10)
‘’முக்கால்வாசி வெற்றி
மயிரிழையில் தோல்வியிடமிருந்து
தப்புவதுதான்’’….(11)
’’பசி தாளாமல் பொய் சொன்ன வாய்க்கு போஜனம் உண்டு’’….(12)
’’5 பெண்ணைப் பெத்தவன் ஆண்டியாகலாம்
5 பிள்ளை பெத்தவன் அந்த ஆண்டிக்கு சம்பந்தி ஆனால்
ஆண்டியாகலாம்’’….(13)
‘’தைரிய சாலிக்கு வீர மரணம்
கோழைக்கோ இருமி இருமி சளி மாரடைத்து
ஈர மரணம்’’….(14)
‘’சுலபமான யோகம் வினியோகம்’’….(15)
‘’மெளனம் சங்கடத்துக்கும் அடையாளம்’’….(16)
‘’அனாவசியமாக அடிக்கடி கசக்கி கட்ட முடியாத அளவுக்குக்
கந்தையாக்காதே’’….(17)
‘’பாம்பு, பூரான்,பூச்சிக்கு பயப்படாதவர்கள்
தாராளமாக இயற்கையோடு ஒன்றி வாழலாம்’’….(18)
‘’சுறுசுறுப்பாக இருக்க உடலில் உறுதி வேண்டும்
சோம்பேறியாக சுகமாக வாழ மனதில் உறுதி இருந்தால் போதும்’’….(19)
‘’இடுக்கண் வருங்கால் நகருக’’….(20)
‘’அளவுக்கு அதிகமாக ஆப்பிளை சாப்பிட்டதால்
ஆதாம் ஏவாளுக்கு வந்த அஜீர்ணமே காதல்’’….(21)
’’ஞானப் பசி வந்தால் பற்றும் பறந்து போம்’’….(22)
‘’பகைச்சுவை இல்லாத எதுவுமே நகைச்சுவைதான்’’….(23)
‘’பயம்தான் சாவு….செத்தால் கொள்ளி….
பயந்தால் கொள்ளிதான் பயந்தாங்கொள்ளியாச்சோ!’’….(24)
————————————————————————————————————————-
ஆசை உருவாகும் அச்சம் நமைச்சாய்க்கும்
பாசம் தொடந்து பரிகசிக்கும் – வாசமெனுங்
குன்றுவந்து முன்னே குழைந்தாலும் என்னெஞ்சே
என்றும் நிலையாய் இரு!
பொன்னாடை மாறும் புகழ்மாலை தாம்மாறும்
சொன்மாலை மாறும் சுகம்மாறும் – என்றைக்கும்
ஒன்று நிலையாம் ஒழுக்கமாம் நன்னெஞ்சே
என்றும் நிலையாய் இரு!
கூட்டம் தொடர்ந்திருக்கும் கூப்பிட்டால் தான்தெரியும்
ஈட்டம் எவரால் எனும்செய்தி – வாட்டத்தில்
குன்றும் மனமிகவும் குற்றமடா நன்னெஞ்சே
என்றும் நிலையாய் இரு!
காலைச் சிவப்பொளிபோல் காட்சி அழகெல்லாம்
காலம் கனிந்தால் கரைந்துவிடும் – காலமே
நன்றும் நலிவும் நமக்கியற்றும் நன்னெஞ்சே
என்றும் நிலையாய் இரு!
வேதாந்த தத்துவம் வேகப் புரட்சிகள்
சேதார மில்லாச் செழுங்காதல் – தோதாக
நின்றாலும் சென்றாலும் நீமட்டும் நன்னெஞ்சே
என்றும் நிலையாய் இரு!
-விவேக்பாரதி
29.09.2018
#ம.இல.நடராசன்
“பரபரப்பற்ற சாந்தமான
ஞாயிறின் அதிகாலையில்
எழுந்து,
திங்களோடு வெள்ளி
இருக்கும் நீல வானின்
மையை எடுத்து
அந்நாளுக்கான என்
கவிதையை எழுத
கவிதையைத் தேடினேன்.
எங்கெங்கோ தேடியும் என்
கவிதை அகப்படவில்லை.
என் கவிதை குட்டைப் பாவாடை
அணிந்திருந்ததால்
ஆடையின் கவர்ச்சியால்
இழுக்கப்பட்டு,
மாறி மாறி பதினெட்டு
பேரால் வன்புணர்ச்சி
செய்யப்பட்டு,
உயிரோடு எரிக்கப்பட்டதாக
நாளிதழில் பின்பு படித்தேன்.
என்ன! என் கவிதைக்கு
அப்போது ஐந்து வயது இருக்கும்.
மீண்டும் மறுபிறவியிலும்
என் கவிதை பெண்ணாக
பிறந்து,
பேதை, பெதும்பை, மங்கை
கடந்து,
மடந்தையில் மடம் செல்லும்போது
குருக்கள் மற்றும் சீடர்களால்
Sexual harassment
செய்யப்பட்டது.
பின்னர் அதிலிருந்து மீண்டு
ஆண்டுகள் கழித்து
என் கவிதை பூப்பெய்ததும்,
காதலன் படுக்கைக்கு அழைக்க
அதை என் கவிதை
மறுக்க,
அவன் ஆசிட் வீசிவிட்டான்.
நல்லவேளை அது நீர்த்துப் போன
அமிலமாக இருக்கப் பெருத்த சேதமின்றி
என் கவிதையின் முகம்
தப்பித்தது பிடிக்காமல், கோபத்தில்
என் கவிதையின் முகத்தை
நீலப்படங்களாக்கி அவன்
Morphing செய்து இணையத்தில்
உலவவிட்டு விட்டான்.
திருமணமான பின் என் கவிதை
கணவனது இச்சைகளின் இம்சை
தாங்காது,
தொடைகளில் அவன் கொடுத்த
Cigarette bud தழும்புகளோடு,
அவனை வாழா வெட்டியாக்கி
தனிமை அடைந்தது.
தனிமையிலே வாழ்ந்து
எப்படியோ மத்திமவயதைக்
கடந்து,
என் கவிதை கிழவியான
பின், மீண்டும்
புணர்ச்சி பசியெடுத்த
49வது மிருகத்தால்,
50வது முறையாகக்
கற்பழிக்கப்பட்டு,
தன் அடுத்தப் பிறவியிலாவது
பாதுகாப்பான நாட்டில் பெண்ணாக
பிறக்க வேண்டுமென்ற
எண்ணத்துடன் உயிர்விட்டது.”
18-09-2018
15.15 மணி
…………………………………………………………………
இதோ இந்த ‘என் கவிதையை’
நான் எழுதிய வேளையில் கூட,
என் இன்னொரு கவிதையை
யாரேனும் எங்கேனும்
வன்புணர்ச்சி
செய்துக்கொண்டு இருக்கலாம்.
கவிஞா் பூராம்
(முனைவா் ம.இராமச்சந்திரன்)
1.பிழை.
மழழை பேசும்
வாா்த்தைகள் அனைத்தும்
கவிதை
2. பணமுதலை.
உழைத்து உழைத்து
அனாதையானது நடுத்தரவா்க்கம்
உழைத்து உழைத்து
வறுமையானது ஏழைவா்க்கம்
3. குறட்டை.
நோக்கிக் கொண்டே
இருக்கத் தூண்டும் முகம்
பேசிக் கொண்டே
இருக்கத் தூண்டும் குரல்
இரவெல்லாம் கண்விழித்த
அசதியில் அவன்
-கே. சுரேஷ் குருபாய்
தமிழகத்தின் ஈரோடு வேங்கட ராமசாமி என்ற பகுத்தறிவாதியை, பிரெஞ்ச் தத்துவ அறிஞர் லக்காகானுடன் இணைத்து ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளேன். இதற்கான, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியை ஓர் தளமாகக் கொண்டுள்ளேன்.
*ஆய்வுக் கட்டுரையை படிப்பதற்கு முன் கீழே கொடுக்கப்பட்ட கேள்வி பதில்களை படிக்கவும். இதன் மூலம், ஆய்வுக்கான ஆதாரக் கூறுகளை புரிந்துகொள்ள முடியும்.
1)ஈ.வே.ரா. அவர்களின் “வெங்காயம்” கருத்தாக்கம் இந்த ஆய்வில் ஏன், எதற்காக முக்கியம்?
ஈ.வே.ரா. அவர்களின் “வெங்காயம்” கருத்தாக்கம் இந்த ஆய்வில் முக்கியமானது என கருதுகிறேன். ஏனெனில், பேச்சு வழக்கில் இருக்கும் தமிழ்ச் சமூகம் எதனைப் பேச வேண்டும் என்பதை விட, எதையாவது பேச வேண்டும் என்பதே பிரதானமாக உள்ளது. பேச்சு இல்லை என்றால், தனது சுயத்தை இழந்ததாக கருதும் நிலைக்கு ஆளாகும். இதற்கு தமிழக பழமொழிகள், சொல்லாடல்கள் முன்னுதாரணமாக உள்ளது. அதனால், தமிழ்ச் சமூகத்தில் பேச்சு பிரதானமாக உள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்கள் சம காலத்தில் பேசுகின்றதே தவிர, எதனை முன்னிறுத்த அனைத்து தொலைக்காட்சிகளும் பேசுகின்றது என்பது புதிராகவே உள்ளது. இந்த நிலையில், வெங்காயம் கருத்தாக்கம் இங்கு பயன்படும். அதாவது, வெங்காயம் உரிக்க, உரிக்க ஒன்றும் இருக்காது என்ற தனித்துவத்தை அடிப்படையாக கொண்டு ஈ.வே.ரா பேசினார். அதன் அடிப்படையில், நெடுந்தொடர்கள் எதனைப் பேசுகின்றது என ஆராய்ந்தால், நெடுந்தொடர்கள் பேசியவற்றையே, பேசுகின்றன, தொடர்ந்து பேசுகின்றன. மக்கள் இதனையே தொடர்ந்து பார்க்கின்றனர். ஆனால், பார்த்தவற்றையே பார்க்கின்றனர் என்பது புலப்படும். இதன் மூலம், நெடுந்தொடரில் தேடி, தேடி பார்த்தாலும் பேச்சைத் தவிர தனித்துவம் ஒன்றும் இருக்காது என்பது வெங்காயம் உரிக்க, உரிக்க வெங்காயத்தை தவிர ஒன்றும் இருக்காது என அறியலாம். இதற்காகவே, இந்த கருத்தாக்கம் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
2) ஈ.வே.ரா. “வெங்காயம்” கருத்தாக்கம் அவரது பேச்சில் / எழுத்தில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொல். அப்படி இருக்க, கருத்தாக்க/கோட்பாடு அளவில் எவ்வாறு அணுக முடியும் ?
பிரெஞ்ச் தத்துவ அறிஞர் துளுஸ் உருளைகிழங்கு (Rhizome) கோட்பாட்டை ஆரம்பம், முடிவு இல்லாத, ஒரு குறிப்பிட்ட வடிவம் இல்லாத நிலையை வரையறுத்து கூறியுள்ளார். அதுபோல, தமிழகப் பகுத்தறிவாளர் ஈரோடு ராமசாமி வெங்காயம் (Onion) என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், உரிக்க, உரிக்க ஒன்றும் இல்லை, தேடி, தேடி பார்த்தாலும் ஒன்றும் இல்லை என்ற வரையறையைப் பல மேடைப் பேச்சுக்களில், அன்றாட பேச்சு வழிகளில் பெரும்பாலும் முன்னிறுத்தியவர். இதன் காரணமாக, ஈரோடு, ராமசாமியின் சொல், எழுத்து வடிவிலான கருத்தாக்கத்தையும் ஆய்வு கருத்தாக்கமாக அணுக முடியும். உதாரணமாக, சங்ககால புலவர் கணியன் பூங்குன்றன், புறநானூறு 192வது பாடலில் “தீதும் நன்றும் பிறர்தர வாரா ” என்றார். அதாவது, “நமக்குக் கிட்டும் நன்மையும், தீமையும் நம்மில் இருந்தே தொடங்குகிறது” என்பது. இதேபோல், பிரெஞ்ச் உளவியல் பகுப்பாய்வாளர் லக்கான் “மற்றமையே நம்மை கட்டமைக்கிறது ” என்கிறார். அதாவது, நமது பேச்சைக் கேட்கும் இடம் எதுவோ, அதுதான் நம்மை அங்கீகரிக்கும் இடம். எனவே, மற்றமையானது பேசுபவனுக்கு வெளியே மொழியின் இடமாக இருக்கிறது, அதேசமயம் பேசுபவனுக்கு அகத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார். இதன் மூலம், இருவரும் ஒரே விசயத்திற்கு வேறு, வேறு சிந்தாந்தங்களை கொண்டிருந்தாலும், இரண்டும் ஒரு தனி கருத்தாக்கத்தை உண்டு செய்கிறது. சங்ககாலத்தில் புலவர் என்ற பெயரும், சமகாலத்தில் ஆய்வாளர் என்ற பெயரும் குறிக்கிறதே தவிர இருவரும் கருத்தாக்கத்தையே முன்னிறுத்துகின்றனர். அதனால், பகுத்தறிவாளர் ஈரோடு, ராமசாமியின் பேச்சில், எழுத்தில் பயன்படுத்தும் சொல்லும், அவரது மனதில் வெங்காயம் என்பதற்கான பெயரும் அதன் கருத்துருவில் ஓர் கருதாக்கத்தையே கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலே, வெங்காயம் என்பதை கருத்தாக்கமாகவே இங்கு அணுகியுள்ளேன்.
3) “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் வணிகத் தன்மையில், யதார்த்த உலகின் எச்சங்களை, அந்த மாந்தர்களின் வார்த்தைகளிலும், செயல்களிலும் பார்ப்பது எந்த அளவில் சரியாக இருக்கும்?
பிக்பாஸ் நிகழ்ச்சி வணிகத் தன்மை அடிப்படையில் உண்டாக்கப்படுகிறது என்பது உண்மை. அதே அளவில், ரியாலிட்டி நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி நடைபெறுவதால், யதார்த்த உலகில் மக்கள் பேசும் பேச்சுகளே அங்கேயும் பேசுகின்றனர். யதார்த்த உலகில் இருவேறு சமூக மக்கள் ஒருவர் பேசுவதை, அவர்கள் வாழ்வியல் சார்ந்து, எவ்வாறு புரிந்துகொள்ளப்படவில்லையோ, ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் புரிந்து கொள்ளப்படுகிறதோ, அதனைப் போன்றே, இந்நிகழ்ச்சியிலும் இருவேறு சமூக மக்கள் மற்றவர்களுடனான பேச்சுகளை அவர்களின் வாழ்வியல் சார்ந்து புரிந்து கொள்ளவில்லை. ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்களைக் கொள்கின்றனர். இதன் அடிப்படையிலேயே, விஜய் தொலைக்காட்சியின் “பிக் பாஸ்” ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பதாலே, அதனை ஆய்வுத் தளமாக கொண்டேன். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில போட்டிகள் வைக்கப்படும், அதில் அவர்கள் அவர்களாகவே அதனை அணுக வேண்டும். அதன் அடிப்படையிலேயே இவர்களை யதார்த்த உலகின் மனிதர்களாகக் கொண்டேன்.
குறிச்சொல் : ஈ.வே.ரா, லக்கான், வெங்காயம், பிக்பாஸ், சொல்
*இப்போது ஆய்வுக் கட்டுரையை படிக்கலாம்…
ஈ.வே.ரா. “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் பிக்பாஸ்
தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுவரும் உண்மை ஒத்த நிகழ்ச்சிகளில் (ரியாலிட்டி ஷோ) தற்போது பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், பன்வகைப்பட்ட மக்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, நடிகர்கள் பொன்னம்பலம், சென்ராயன், பாலாஜி, டேனியல் ஆகியோரும், நடிகைகள் ஜனனி, மும்தாஜ், ஐஸ்வர்யா, யாசிகா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். பல்வகைபட்ட பண்பாட்டு வாழ்வியல் சூழல் சார் மக்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளதால், ஒருவரின் அன்றாட செயல்பாடுகள் மற்றவருக்கு புதுமாதிரியாகவும், ஒப்புக்கொள்ள ஏற்றதாக அமையாமலும் இருக்கும் சூழல் இருந்து வருகிறது. ( முதல் இரண்டு மாதம் உரையாடல்கள் இக்கட்டுரையின் மாதிரிகளாகக் கொள்ளப்பட்டுள்ளது). இதனை அடிப்படையாக கொண்டே, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டது.
மனிதன் பிறந்தது முதல் தனது தேவையை நிறைவேற்ற அழத்தொடங்கினான், அதனைத் தொடர்ந்து, கோரிக்கையை நிறைவேற்ற பேசத் தொடங்கினான், கோரிக்கை நிறைவேறாமல் மங்கிய நிலையில் ஆசை உருவாகும் (உளவியல் பகுப்பாய்வாளர், லக்கான்). அதனால், மனிதன் தேவையை, கோரிக்கையை, ஆசையை நிறைவேற்ற பேச்சுடன், செயல்படத் தொடங்கினான். அதன் வரையறைபடி, ஒருவர் மற்றொருவருடன் தங்களின் எண்ண ஓட்டங்களை, உணர்ச்சிகளை, உணர்வுகளை வெளிப்படுத்தப் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஓர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் உள்ளனர் எனில், அவர்கள் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே மாதிரியான பேச்சின், ஒரே மாதிரியான ஒலி எழுப்பும் விதம் கொண்டு, அனைவரது வாழ்வியல் ஒரே மாதிரியாக இருந்தால், அவர்கள் பேசும் பேச்சின் ஒலியும், அதன் அர்த்தமும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஒரே இடத்தில், பன்வகைப்பட்ட மக்கள் இருக்கும் இடத்தில், ஒருவர் மற்றவர்களிடம் தங்களின் தேவை, கோரிக்கை, ஆசை நிறைவேற்றப் பேச்சு வழக்காற்றில் சிக்கல்கள் எழும்.
“குறிப்பானுக்கும், குறியீடுக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் உண்டு. ஆனால், குறிப்பானின் மொழிக்கும் (ஒலிக்கும்), அதற்கான பொருளுக்கும் (அர்த்தத்திற்கும்) சம்பந்தம் இல்லை” என்ற ஆய்வாளர் சசூர் (தொடர்பியல் அறிஞர்) கருத்தாக்கத்தின்படி, ஒருவர் பேசும் பேச்சு அவர் நினைக்கும் அர்த்தத்தையே, அந்தப் பேச்சை கேட்கும் நபரும் புரிந்து கொள்வார் எனச் சொல்ல முடியாது. பேச்சைக் கேட்பவர் வேறு அர்த்தத்தைக் கூடப் புரிந்துகொள்ளலாம் என்கிறார். ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் கற்பிக்கப்படலாம் என்கிறார். இதன் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சியில், சென்ராயன், டேனியல் பேசும் பேச்சு மும்தாஜ், ஐஸ்வர்யா போன்றவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனுடன், சென்ராயன் பேசும்போது, உரத்த குரலில் பேசுவதை மும்தாஜ், ஐஸ்வர்யா குற்றமாக கருதி, இதனை சென்ராயன் மாற்றிக் கொள்ள வேண்டும், இது, சரியான பழக்கம் இல்லை என்கிறார்கள். ஆனால், நான் இயல்பாகத்தான் பேசுகிறேன். எனது பேச்சே அப்படித்தான் என சென்ராயன் பதில் அளிக்கிறார். இதன் மூலம், ஒருவர் பேசும் பேச்சின் அர்த்தம், அதன் ஒலியின் மாறுபாடு போன்றவை வித்தியாசப்பட்டு இருந்தாலும், அவர்கள், தமது மனதில் ஒன்று நினைத்து, அதனையே சொல்லி இருக்கலாம், ஆனால், அதனைக் கேட்பவர்கள் புரிந்து கொண்டது வேறு விதமாக இருக்கும். இதற்குக் காரணம், குறிப்பான் கொண்டிருக்கும் பேச்சின் மொழிக்கும் (ஒலி), குறியீடு கொண்டிருக்கும் பொருளுக்கும் (அர்த்தத்திற்கும்) பல்வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது என்பதை சரூரின் கருத்தாக்கம் உணர்த்துகிறது.
இதில், சென்ராயன் தனது பேச்சை மாற்ற வேண்டும் என மும்தாஜ், ஐஸ்வர்யா சொல்வது ஆய்வாளர் லக்கான் பார்வையின்படி ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில், “ஒருவரின் மொழியும் (ஒலி, பேச்சு), அவர்களின் வார்த்தையில் இருக்கும் பொருளின் அர்த்தமும் அவர்களின் வரலாறு, வாழ்க்கை முறை, சமூகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் ஏற்க வேண்டும் (லக்கான்)” என்கிறார். அதனால், தமது வரலாறு, வாழ்க்கை முறை, சமூகம் ஆகியவற்றை கொண்டு மற்றவர்களது இயல்புகளை அளவீடு செய்ய முடியாது என்கிறார். இதன் அடிப்படையில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரும், தாய்மொழி தமிழ் அற்றவருமான மும்தாஜ், பெங்காலி மொழியை அடிப்படையாகவும், வடநாட்டை வாழ்விடமாக கொண்ட ஐஸ்வர்யா ஆகியோர், சென்ராயன் போன்ற பிற மொழி (தமிழ்) பேசுபவர்களின் இயல்புகளை அளவீடு செய்வதே முடியாது என்பதுடன், அதனை மாற்ற வேண்டும் என்று கூறியதும் தவறு என்பது லக்கான் கருத்தாக்கத்தின்படி அறியப்படுகிறது.
மனிதனில், தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றைக் கொண்டே பேச்சு இருக்கிறது என்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அதன் போட்டியாளர்களின் பேச்சு தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றை சுற்றி, சுற்றி வருகிறதே தவிர, இதில் புதியதாக கண்டறிவதற்கு ஏதும் இருக்காது என்பது அறிய முடிகிறது. இது, ஈ.வே.ரா என்ற பகுத்தறிவாதி அடிக்கடி சொல்லும் “வெங்காயம்” என்ற வார்த்தைக் கோட்பாடு இதற்கு ஒத்துப்போகிறது. அதாவது, “வெங்காயம் உரிக்க, உரிக்க ஒன்றும் இருக்காது” அதுபோலவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் உணவுக்கான தேவைக்குப் பிரச்சனை நிகழும்போது, தனது தேவை நிறைவேறாத நிலையில் கோரிக்கையாக மாறும். அப்போது கோரிக்கை நிறைவேறாத நிலையில் பிரச்சனையாக மாறும். பின்னர், கோரிக்கை நிறைவேறாமல் மங்கிப் போன நிலையில் ஆசையாக மாறும். ஆசை தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் பிரச்சனை எழும். இதற்கான உந்துதலுக்கு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளப் பேச்சு ஊடகமாக மொழி இருக்கும். அதில், ஒரு வார்த்தை மற்றவருக்கு ஒரே அர்த்தத்தை கொடுக்க இயலாத காரணத்தால், சசூரின் கருத்தாக்கம்படி, பிரச்சனை நிகழும். இவர்களின் உரையாடல் இதனையே சுற்றி, சுற்றி வரும். வேறு புதிய பரிணாமம் உருவாகாத நிலையில் தொடர்பு முறைகள் வெங்காயம் போன்று இருக்கும்.
ஓர் இடத்தில் பன்வகைப்பட்ட மக்கள் இருக்கும் நிலையில், அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்வதே இயல்பாக இருக்க முடியும். ஒருவர் தங்களது வாழ்வியலை படிமமாக கொண்டு, அதனை வெளிப்படுத்தும் குறிப்பானாக இருந்து குறியீடு மூலம் உணர்த்தப்படும் அர்த்தம், வேறு வாழ்வியலின் படிமம் அடங்கிய குறிப்பானுக்கு அர்த்தம் புரியாது. அதேபோல், வேறு ஓர் இயல்பான வாழ்வியலுடன் கொண்ட படிமம் கொண்டு, அதனை வெளிப்படுத்தும் குறிப்பானாக இருந்து, குறியீடு மூலம் உணர்த்தப்படுவது ஒரே மாதிரியான அர்த்தம் என்றும் உருவாகாது. ஒரு குறியீட்டுக்குப் பல அர்த்தம் உண்டு (குறியீட்டியல் அறிஞர், தெரிதா) என்ற கருத்தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு, மற்றவர்களை பார்க்க வேண்டும்.
இந்தியா பல்வேறு பண்பாடு கொண்ட ஒரு நாடு இதனை ஒரே நாடு என்ற வார்த்தையில் எப்போதும் அடக்க இயலாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி, ஓர் உணவு, ஒரு பண்பாடு, ஒரு வாழ்வியல் உள்ளது. இதனை ஒரு மாநிலத்துடன், மற்ற மாநிலத்தை எந்த வகையிலும் ஒப்பீடு செய்ய இயலாது. அந்தந்த மாநிலத்தின் பழக்க வழக்கத்தை அந்த, அந்த மாநிலத்தின் கண்ணோட்டத்தில் மட்டுமே காண வேண்டும். நமது படிமத்துடன் மற்ற மாநிலத்தை படிமத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், ஈ.வே.ராமசாமியின் வெங்காயம் கோட்பாடுபடி, பார்வையின் முடிவில் ஒரு சரியான நிலைக்கு வர முடியாமல் போகலாம். அதனால் தொடர்ந்து பிரச்சனை எழுந்தே தீரும். இதனை வேறு வழியில் ஆராய்ந்தால், தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதன், நிறைவாக “வெங்காயம்” என்ற கோட்பாட்டின் காலம், நேரம் கடந்த ஒரு செயலாக மட்டும் இருக்குமே தவிர, ஒரு விசயமும் புலப்படாமல் இருக்கும்.
அதுபோல, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இருக்கும் தமிழ் மொழி வழக்கு வித்தியாசப்பட்டு இருக்கும். இதனை அந்தந்த வட்டாரத்திற்கு ஏற்ப, அந்த வார்த்தையை உச்சரிக்கும் மனிதர்களின் வாழ்வியல் சார்ந்து அதனைப் பொருள்கொள்ள வேண்டும். மாறாக, தமது படிமத்தின் அடிப்படையில் குறியீடாகக் கொண்டு, அர்த்தம் கொள்வதாயின் பிரச்சனைகள் உருவாகும். அதாவது சரியான புரிதல் உண்டாகாது. உதாரணத்திற்கு, (எதுக்கு, ஏனுங், ஏன்லே, ஏய்ன், என்னயா, ஏன்பா). இதில், ஒரு சில வார்த்தைகள் ஒருவருக்கு இயல்பாகவும், மற்றவருக்கு இயல்பு மாறியும் இருக்கலாம். இதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ந்து உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது என்பது, ஈவேராவின் வெங்காயத்தை மீண்டும் ஞாபகப்படுத்தும்.
சென்னையைப் பொறுத்தவரையில், வட சென்னை வட்டாரச் சொல் பழக்கம் அப்பகுதி மக்களுக்கு இயல்பாக இருக்கும். ஆனால், தென் சென்னை வட்டாரச் சொல் பழக்கம் வேறுமாதிரியாக இருக்கும். இதனால், ஒருவரின் சொல்லிற்கான அர்த்தம் வேறாக புரிந்துகொள்ளப்படும். இது, சசூரின் கருத்தாக்கத்தை வெளிப்படுத்தும், ஆனால், லக்கானின் கருத்தாக்கத்தை புரிந்துக் கொண்டால், ஒருவரை ஒருவர் பழிப்பது வெகுவாகக் குறையும் எனலாம். நிறைவாக, படிமத்தால் ஆன, குறிப்பான்கள் நாம். வாழ்வியல் சார் குறியீடு மாறி இருப்பதற்கு ஒருவரை ஒருவர் மாற்ற நினைப்பதே தவறு என்பதை உணர்ந்து, அவர்களது வாழ்வியலை அடிப்படையாக கொண்டு, பேச்சின், அர்த்தங்களை உணர முயன்று அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு.
இதன்படியே, விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களின் படிமத்தால் ஏற்பட்ட மாறுபாடுகளால், ஒருவரது பேச்சை மற்றவர் புரிந்துக் கொள்ள இயலாமல், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றை வெளிப்படுத்தும் தொடர்பியல் குறியீடுகள், வாழ்வியல் படிமக் குறியீடுகளின் வேறுபாடுகளால், ஒரே மாதிரியான அர்த்தத்தை அறிய முடியாமல் போவதே, மனங்களின் ஒருமித்த அர்த்தங்கள் உருவாகாமல் இருப்பதற்கு அடிப்படையாக உள்ளது. ஆகவே, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும், ஒரு பிரச்சனையுடன் நகர்ந்து வருவதற்கான காரணத்தின் அடிப்படையாக உள்ளது. இது, 100 வாரங்கள் அல்ல, 1000 வாரங்கள் கடந்தாலும் ஒருமித்த புரிதல் எட்டப்படாமலே இருக்கும். இறுதியில், ஈ.வே.ராவின் வெங்காயம் கோட்பாட்டின், சாரம்சம் மட்டுமே தெரியவரும். இதற்கு, சசூர், லக்கான், தெரிதா போன்ற ஆய்வாளர்களின் கருத்தாக்கங்கள் உறுதுணையாக இருக்கும்.
*****
ஆய்வு நூல்:
சுரேஷ் எம்.ஜி. பின் நவீன சிந்தனையாளர் வரிசை 3 : லக்கான், 2007.
*****
கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வு மாணவர்
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை
சென்னைப் பல்கலைக்கழகம்
எண் : 9003091162
மின் அஞ்சல் : sureshguruboy@gmail.com
-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா- மெல்பேண், அவுஸ்திரேலியா
” கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே” ,” கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்” என்று முருகன் அடியார்கள் தினமும் எண்ணி எண்ணியே முருகனை மனதார வழிபட்டு வருகிறார்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று அடியார்கள் கொண்டாடிப்போற்றுகின்றார்கள்.” வேலை வணங்குவதே வேலை என்பதுதான் முருகன் அடியார்களின்மனக்கிடக்கையாக இருக்கிறது எனலாம். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக முருகனே விளங்குகிறார் என்று முருகன் அடியார்கள் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ” வைதாரையும் வாழவைப்பான் முருகன் ” என்பது அவர்களது உறுதியான எண்ணமாகவும் இருக்கிறது.
இந்தியாவில் பல இடங்களிலும் முருகனுக்கு அடியார்கள் ஆலயங்களை அமைத்திருக்கிறார்கள். வடக்கிலும் தெற்கிலும் பல ஆலயங்கள் முருகனுக்கு என்றே இருக்கின்றன. அறுபடைவீடு என்னும் வகையில் – திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மிகவும் சிறப்பான ஆலயங்களாக யாவராலும் போற்றப்பட்டு வருகின்றன. இவற்றைவிடச் சென்னையில் பல இடங்களில் முருகன் கோவில்கள்அடியார்களினால் அமைக்கப்பட்டும் இருக்கிறது. சென்னையிலும் அறுபடை வீடும், வடபழனி முருகன் கோவிலும் பிரசித்தமாக இருக்கின்றன.
வேலூர்பகுதியில் இரத்தினகிரியில் தனிப்பட்ட ஒரு அடியவரின்
தளராத முயற்சியினால் குன்றினிலே இரத்தினகிரி முருகன் ஆலயம் கம்பீரமாக அருளாட்சியினை வழங்கிக் கொண்டிருக்கிறது. முருகனது அடியார்கள் மொழியினைக் கடந்து நாடுகளைக் கடந்து உலகெங்கும் பரந்து காணப்படுகிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென்னாபிரிக்கா, அமெரிக்கா, கனடா,பிரான்ஸ், ஜேர்மனி, சுவிச்சர்லாந்து, லண்டன், அவுஸ்திரேலியா, ஆகிய நாடுகளிலும், ஈழத்திருநாட்டினிலும், காணப்படுகிறார்கள். மொழி வேறுபட்டாலும் கலாசாரம் வேறுபட்டாலும், கொள்கைகள் வேறுபட்டாலும், அரசியலால் வேறுபட்டாலும்,அவர்கள் யாவரும் முருகனது அடியார்கள் என்ற வகையில் ஒத்த மனத்தினராய் முருகன்மீது அபார பக்தி உடையவர்களாகவே காணப்படுகிறார்கள் என்பதுதான் முக்கியமாகும்.
முருக ஆலயங்கள் முருக அடியார்கள் பற்றிச் சிந்திக்கும்பொழுது முருகனைப் பற்றியும் முருகனது சமயவரலாறு பற்றியும் அறிவதும் அவசியமாகும். முருகனது நிலைபற்றி உரைப்பது கெளமாரமாகும். இந்துசமயத்துள் இது அடங்கினாலும் இது முருகன் பற்றியே சொல்லுகிறது என்பதே முக்கியமாகும். கெளமாரம் என்பது ஒரு சமயமாகும். இச்சமயத்துக்கு உரிய தெய்வமாக முருகனே விளங்குகின்றார். முருகனைக் குமாரன் என்றும் அழைப்பர். குமாரன் என்றால் அஞ்ஞானத்தை ஒழிப்பவர் என்பது கருத்தாகும். குமாரன் அறுவகைச் சமயங்களையும் இணைத்தே நிற்கிறார். அவரின் திருமுகங்கள் ஆறாகும். அவரே முழுமுதற் பொருள் என்கிறது கெளமாரம்.
” அறுசமய சாத்திரப்பொருளே” என்று அருணகிரிசுவாமிகள் திருப்புகழில் காட்டுவது நோக்கத்தக்கது.
” அருவமும் உருவுமாகி அநாதியாய் பலவா யொன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிளம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகமுய்ய “ என்று முருகனது தோற்றம் காட்டப்படுகிறது கந்தபுராணத்தில். உலகைப் படைக்கும் பிரமாவாய், உலகைக் காக்கும் விஷ்ணுவாய், உலகினை அழிக்கும் உருத்திரனாய், கோலமாய், காலமாய், குணமாய், ஞாலமாய்,அனாதியாய் அமைந்த சோதிப்பிழம்புதான் முருகன் என்பது அவரது அடியார்களின் அசையாத நம்பிக்கை எனலாம்.
முருகனைப் பற்றி வடமொழிநூல்களும் சொல்லுகின்றன. தமிழ் மொழி நூல்களும் சொல்லுகின்றன. வேதங்களிலுல் சுப்ரமண்யோம் என்று வருகிறது.வேதகாலத்தில் முனிவர்கள் தங்களின் யாகங்களை நிறைவு செய்யும்வேளை சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம்என்று மூன்றுமுறை கூறியதாக ‘தைத்திரீயாரண்யகம்’ சுட்டுகிறது.
காளிதாசரின் குமாரசம்பவம் முருகனைப் பற்றிக் கூறும் காவியமாகும். இது வடமொழியிலே அமைந்திருக்கிறது. பாணினியும் முருகனைக் காங்கேயன், குகன், சண்முகன், விசாகன், கார்த்திகேயன் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.
சிவ ஆகமங்களான காமிகம், காரணம், சுப்பிரபேதம் யாவும் முருகனது வரலாறு பற்றிக் குறிப்புகளைக் கூறி நிற்கின்றன.
குமாரதந்திரம் என்பது முருகப்பெருமானது வரலாற்றையும் முருகனது விழாக்கள், பூஜைகள், விரதம், பிரதிஷ்டை செய்யும் விதம் இவற்றையெல்லாம் விரிவாய் எடுத்து விளக்கி நிற்கிறது எனலாம்.
இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் இவையும் முருகனைப் பற்றிச் சொல்லிநிற்கின்றன. தமிழ் இலக்கியக்கியங்களும் முருகனைப் பற்றி சொல்லுகின்றன என்பதும் முக்கியமாகும். தொல்காப்பியத்தில் சொல்லப்படுவது மிகவும் முக்கியம் எனக் கருதலாம்,”சேயோன் மேய மைவரை உலகம்” இவ்வாறு தொல்காப்பியம் செப்புகிறது.
புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை மூலமாகவும் முருகனைப் பற்றிய செய்திகளை அறிய முடிவதனால் முருக வணக்கமும் முருகனது அடியார்களும் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறார்கள் என்பதை அறிகிறோம் அல்லவா!
திருமுருகாற்றுப்படை என்பது முருகன் அடியார்களை முருகன் அருள்பெற ஆற்றுப்படுத்தும் நூலாகவே அமைகிறது. முருகனது அறுபடை வீடுகள் அதாவது முருகன் அருளாட்சி புரிய எழுந்தருளியிருக்கும் இடங்களின் பெருமைகளைப் விவரிப்பதாகவும் இருக்கிறது. அப்படிஎன்றால் இதனைப் பாடிய நக்கீரர் என்னும் அடியார் அப்பொழுதே முருகன் ஆலயங்கள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டாரோ என்றேதான் எண்ணத் தோன்றுகிறதல்லவா?
ஆதிக்க நல்லூர் என்னும் இடத்தில் நடந்த தொல்பொருள் ஆய்வின்படி கி.மு ஆயிரத்து இருநூறு ஆண்டளவில் முருகவழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. பல்லவ மன்னர் காலமும், சோழப்பெருமன்னர் காலமும் முருக வழிபாட்டைப் பொறுத்தவரைத் தமிழ்நட்டிலே இருண்டகாலமாய்த்தான் கொள்ளமுடிகிறது. பக்திப்பாடல்கள் பல பெருக்கெடுத்த பல்லவர்காலத்திலே முருகனுக்குச் சிவன் தந்தை என்னும் குறிப்பு மிகச் சில தேவாரங்களில்மட்டுமே காணப்படுகிறது.
திருச்செந்தூர் கல்வெட்டு மூலமாகவேதான் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் வரகுணபாண்டியன் திருச்செந்தூர் முருகன் பூஜைக்குப் பெருந்தொகை பணம் உதவினான் என அறியமுடிகிறது. முருகவழிபாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டதென்றால் அதனை கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டென்றே எடுத்துக் கொள்ளலாம்.
பதினான்காம் நூற்றாண்டின் இறுதி அல்லது பதினைந்தாம் நூற்றாண்டின்தொடக்கமே அருணகிரிநாதர் காலமாகும். மூவேந்தர்களும் தமிழ்நாட்டைஆண்டவேளை முருகவழிபாடு ஓங்கவில்லை. அவர்களின் பின்னர்தான் ஓங்கியது ஏன் என்பதை வரலாற்று சமய ஆய்வாளர்கள்தான் ஆராய்தல் வேண்டும்!
அருணகிரியாரால் முருகவழிபாடு செழித்தோங்கியது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. ஏனைய கடவுளர்களையும் அவர் போற்றிப் பாடிய பொழுதும் – முருகன்மீது அவரது தனிவிருப்பம் பல்லாயிரம் திருப்புகழாக எமக்குக் கிடைத்திருக்கிறது. முருகன்மீது பல பிரபந்தங்களையும் பாடி அளித்துள்ளார். கந்தரலங்காராம், கந்தரனுபூதி அருணகிரியாரின் தத்துவமுத்துக்களாய் திகழ்கின்றன. ஈழத்து முருகன் தலங்களையும் அருணகிரியார் பாடியுள்ளார். முருகனது அடியவராயிருந்து முருகவழிபாடி சிறக்கபெருந்தொண்டாற்றினார் அருணகிரியார் என்பது முருகனது அடியவர்க்கெல்லாம் சிறந்ததொரு முன்மாதிரி எனலாம்.
முருகனது மிகச்சிறந்த அடியார் அகத்தியராவார். தமிழ் மூதாட்டி ஒளவை முருகனால் ஆட்கொள்ளப்பட்ட அடியவராகிறார். ஆதிசங்கரர் தனக்கேற்பட்ட காசநோய் தீர முருகனைத் துதித்து சுப்ரமண்யப் புஜங்கம் பாடினார். வள்ளலாருக்கு அவரின் வீட்டுக் கண்ணாடியில் தோன்றி முருகன் ஆட்கொண்டார். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதரின் வாயில் கற்கண்டைப் போட்டு ” ஸ்ரீநாதாதி குருகுஹே ” என்னும் கீர்த்தனையைப் பாடவைத்தார். ஊமையாய் பிறந்த குமரகுருபரருக்கு திருச்செந்தூர் முருகன் உலகமே புகழும்வண்ணம் கவிபாடவைத்தார்.
சிதம்பர சுவாமிகள் பனைமரத்தில் முருகனை சுயம்புவாகப் பிரதிஷ்டைசெய்து அருள் பெற்றார். வள்ளிமலைச் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாம்பன் சுவாமிகள், பன்றிமலைச் சுவாமிகள், இவர்களெல்லாம் முருகனது காதலால் கட்டுண்ட அடியவர்களாவர். முருகன் பற்றிய சகலவற்றையும் உணர்த்திடும் கந்தபுராணம் தந்தவர் கச்சியப்பர். அவருக்கு அடியெடுத்துக் கொடுத்து அருள் புரிந்தார் முருகன். அதனால் அற்புதமாய் தெய்வீகமாய் ஒளிர்ந்தது கந்தபுராணம்.
வீடுதோறும் முருகன் அடியவர்களால் ஓதிநிற்கும் பேறுபெற்ற கந்த சஷ்டி கவசத்தை முருகன் அடியவர் பாலதேவராயன் எமக்களித்துச் சென்றுள்ளார். எமக்கு முன்னால் இருந்து தனது பாட்டாலும் பேச்சாலும் எழுத்தாலும் முருகன் பெருமையினை உலகம் முழுவது கொண்டுசேர்த்த முருகன் அடியவர்தான் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள். ஊர்கள்தோறும் ,நாடுகள் தோறும் சென்று முருகன்புகழைக் கதாப் பிரசங்கம் மூலம் எடுத்துச் சொல்லி அதில் கிடைத்த பொருளையெல்லாம் வயலூரில் முருகனுக்காகப் பேராலயம் அமைத்து பெரும்பேறு பெற்றார்.
இந்தியாவில் முருகன் அடியார்கள் ஆலயங்களுடன் எப்படித் தம்மை பிணைத்துக் கொண்டார்களோ அதேபோல் ஈழத்திலும் அடியார்கள் முருகனுடனும் அவரது ஆலயத்துடனும் தங்களை இணைத்துக் கொண்டனர். ஈழத்திலே பல பிரசித்தியும் அருளும் கொண்ட முருகன் ஆலயங்கள் இருக்கின்றன. பாடல்பெற்ற முருகனது ஆலயமாக கதிர்காமம் திருகோணமலை ஆகியன விளங்குகின்றன.
ஈழத்தில் தமிழ் அடியார்களும் சிங்களபெளத்த அடியார்களும் முருகனின்பக்தர்களாக விளங்குகிறார்கள். அவர்கள் முருகனை ” கதரகம தெய்யோ “என்று அழைக்கின்றனர். அவர்களது. கதிர்காமம் ஈழத்தில் முருகனின்பொக்கிஷமாய் இருக்கிறது என்பது முருகன் அடியார்களுக்கே பெருமைஎனலாம். தமிழர்கள் செறிந்துவாழும் வட மாகாணம், கிழக்கு மாகாணம் பகுதிகளில் நிறைந்த முருகன் அடியார்கள் இருக்கிறார்கள். இவர்களின் ஆதரவினால் பல முருகன் ஆலயங்கள் அங்கு எழுந்துநின்று அருளாட்சியினை வழங்கி நிற்கின்றன எனலாம். யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ இளவரசியின் வரலாற்றுடன் தொடர்புபட்ட மிகவும் புராதன ஆலயமாக விளங்குகிறது. யாழ்நகர் மத்தியிலே விளங்கும் நல்லூர் கந்தசுவாமிகோவில் உலகம் அறிந்த முருகனது கோவிலாக இருக்கிறது. அருள் உள்ளம் கொண்ட மாப்பாண முதலியார் என்னும் முருகன் அடியவரால் அமைக்கப்பட்ட இந்த ஆலயம் பலரது வாழ்வுக்கும் வெளிச்சமாய் இர்க்கிறது என்பதை யாவரும் ஏற்றுக் கோள்ளுவார்கள்.
கதிகாமம் போன்று பூஜைகள் நடைபெறும் ஆலயமாக இருப்பது செல்வச்சன்னதி முருகன் ஆலயமாகும். கிழக்கு மாகாணத்தில் வெருகலில் முருகன் ஆலயம் தொடங்கி திருக்கோவில் முருகனது ஆலயம்வரை அடியவர்களின் உந்தலினால் உருவாக்கப்பட்டனவே என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.
ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் முருகன் அடியார்களின் சிந்தனையினால் முருகனது ஆலயங்கள் அருளாட்சி புரிந்து வருகின்றன. மலேசிய மண் என்றதும் யாவருக்கும் முன்னே வந்து நிற்பது பத்துமலை முருகன் ஆலயமே ஆகும். மலேசியாவையே அடையாளப்படுத்தும் வகையில் இம்முருகன் ஆலயம் விளங்குகிறது என்பது உலகில்இருக்கும் முருகன் அடியவர்களுக்கெல்லாம் பெருமை என்றே சொல்லலாம். இம்முருகன் ஆலயம் இங்குள்ள அடியவரின் இருதயமாகவேதான் இருக்கிறது என்பது வெள்ளிடைமலையாகும். இங்குள்ள முருகன்அடியார்கள் தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையினையும் பத்துமலை முருகன் பார்த்துக்கொள்ளுவான் என்றே எண்ணி வாழ்கிறார்கள் எனலாம். சிங்கபூரிலும் முருகன் அடியார்கள் முருகன் ஆலயத்துடன் தம்மை இணைத்து பக்திசிரத்தையுடன் தமது நடவிடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் எனலாம்.
நான் தற்பொழுது வாழுகின்ற அவுஸ்திரேலியாவிலே முருகன் வணக்கமும் முருகன் ஆலயங்களும் செறிந்து காணப்படுகின்றன. விக்டோரியா மாநிலத்தில் சண்சைன் என்னுமிடத்திலும்,றொக்பேங் என்னும் இடத்திலும் முருகனுக்கு ஆலயம் அமைந்திருக்கிறது. சிட்னியில் மிகவும் பெரிய முருகன் ஆலயம் இருக்கிறது. பேர்த்தில் ஒரு முருகன் ஆலயம் இருக்கிறது..அவுஸ்திரேலிய தலைநகரான கன்பராவில் அறுபடைகுருகன் ஆல்யம் அமைந்திருக்கிறது. இங்கு அமைக்கப்பட்ட முருகன் ஆலயங்கள் யாவும் புலம்பெயர்ந்து வந்த அடியவர்களின் ஆதரவினால் அமைக்கப்பட்டன.
முருகன் என்றாலே கலியுகத் தெய்வம் என்னும் எண்ணமே அனைத்து அடியவர்கள் மனத்திலும் ஊன்றியிருக்கிறது எனலாம். கூப்பிட்ட குரலுக்குஓடிவரும் தெய்வமாகவே முருகனை அடியவர்கள் கருதுகிறார்கள். ஆலயம் அமைக்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தவுடன் முருகனுக்கே ஆலயம் அமைப்போம் என்பதே அனைத்து அடியார்களின் மனக்கருத்தாய் வெளிவருகிறது. பொதுவாக நோக்கும்பொழுது உலகெங்கணும் முருகன் ஆலயங்கள் இன்று ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் வகையிலேதான் அமையப்பெற்றிருக்கின்றன. யாவருடைய மனத்திலும் ” முருகா ” என்னும் நாமம் வல்லமைபொருந்திய மந்திரமாக உறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.
முருகன் ஆலயங்களை அடியார்கள் அமைக்குப்பொழுது முருகனது கையிலுள்ள வேலினையும் வழிபடுமுகமாகவும் ஆலயங்களை அமைத்திருக்கிறார்கள். அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞ்ஞான ஒளியை முருகனது வேல் நல்குவதாக அடியார் நம்புவதால் வேலினுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களில் வேல் வழிபாடும் முக்கியமாகிறது. ஈழத்தில் கதிர்காமம் செல்வச்சன்னிதி ஆலயங்களில் வேல்தான் அடியவர்களால் வணங்கிப்போற்றப்படுகிறது. கணனி யுகத்தில் கந்தப்பெருமான் துணையே எமக்குப் பெருந்துணையாகும். முருகனை அல்லும் பகலும் அனைவரதமும் துதிக்கும் அடியவர்களும் அவர்களின் அன்பினால் விளைந்த ஆலயங்களும் அகிலத்துக்கும் ஆன்மீக நெறியினை உணர்த்துவதற்கு உறுதுணையாகவே இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
” விழிக்குத்துணை நின்திரு மென்மலர்ப்பாதங்கள் மெய்மை குன்றாமொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே “
” மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் “
-மேகலா இராமமூர்த்தி
திருமிகு. வெனிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார் திருமதி சாந்தி மாரியப்பன். நன்றி நவில்கின்றேன் இவ்விருவருக்கும்!
உறவுகளுக்காக உணவைத் தலைமேல் சுமந்துசெல்லும் அன்னையே! உம்மைப் போன்றோரின் தன்னலமிலா அன்பினால் அல்லவோ நில்லாது சுழல்கின்றது இவ்வையம்!
உண்டிகொடுத்து மாந்தர்க்கு உயிர்கொடுக்கும் உயர்பணியைச் செய்யும் மாதரசியைப் போற்றுவோம்!
இப்படத்துக்கு ஏற்றவகையில் பாப்புனையக் கவிஞர்களை அழைக்கிறேன்!
*****
பாருளோர் பசிப்பிணி தீரப் படியளக்கும் செயல்வீரனான தன் சாமி பசியென்று வாடாதிருக்கச் சோறுகொண்டு போகும் பெண்ணரசியைப் போற்றுகின்றார் திரு. எஸ். கிரிதரன்.
தள்ளாத வயதினிலும்
தளராது வாஞ்சையுடன்
செந்நெல் கழனிதனில்
சேற்றுழவு தான்செய்யும் – நாட்டின்
பஞ்சம் பசி போக்கி
பார் போற்ற வாழவைக்கும்
செயல் வீரன் என்சாமி
விவசாயி
என் படியளக்கும் சாமி
பசி என்று சோராமல் -அவர்
பாத்திருந்து பசியாற்ற
போகின்றேன், என் பசி மறந்து.
*****
”இவர்போன்ற கிராமத்துக் கண்ணம்மாக்கள் இருக்கும்வரை நம் கலாசாரமும் அழியாது காலூன்றி நிற்கும்” என்ற நம்பிக்கையைத் தன் கவிதையில் விதைக்கின்றார் திருமதி. இராதா.
மாற்றங்கள் தேவையே நமக்கது
முன்னேற்றமாக அமையும் போது
கடந்தவிட்ட கற்காலம் இனி இல்லை
நெஞ்சம் அஞ்சும் நெகிழியின் காலம்
அத்தனை மாற்றத்தையும் ஏற்றும்
தொலையவில்லை நம் தொன்மங்கள்
எத்தனையோ ‘லஞ்ச் பாக்ஸ்’ வந்தாலும்
தூக்குச் சட்டியை அழிக்க இயலாது
வேண்டியதில்லை விவாதங்கள்
வேண்டியதில்லை பட்டி மன்றம்.-
கலாசாரம் காலூன்றி நிற்பது நிச்சியம்
காணாமல் போகாது நம் கிராமமும்
கண்ணம்மாக்கள் இருக்கும் வரை
*****
”தள்ளாத வயதிலும் உனக்காகச் சோறேந்திவரும் என்னைத் தள்ளாதே முதியோர் இல்லத்தில்!” என மனங்குமுறும் முதுமகளைக் காண்கிறோம் திரு. இளவல் ஹரிஹரனின் கவிதையில்.
என்ன செய்ய
இந்த வயதிலும்
உயிர் கொடுப்பவளாய்
உண்டி கொடுப்பவள் நானே
தள்ளாத வயதில்
தாயான என்னை மறந்தும்
சேர்த்துவிடாதே
முதியோர் இல்லத்தில்
நசுங்கிப் போனாலும்
பாத்திரம் பத்திரமாய்த்தான்
இருக்கிறது……ஆனால்
இந்த மனிதர்கள்
முதுமைஅடைந்தால் மட்டும்
தாயையும் தந்தையையும்
தம் இல்லத்தில் இடமின்றி
தள்ளலாமோ முதியோர் இல்லத்தில்
தாங்காதடா மகனே…..
இந்த வெயிலிலும்
தலைச்சுமையோடு
தட்டேந்தி உனக்காக
இந்த வெயிலில் வருகிறேன் நானே.
*****
”பாங்கான கிராம வாழ்வைவிட்டுப் பகட்டான பட்டண வாழ்வைத் தேடிப் போனதால் வாழ்வில் குழப்பம் வந்தது; நிம்மதி போனது” என்று எதார்த்தம் பேசுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
குழப்பமே…
கழனியில் உழுதிடும் கணவனுக்கே
கஞ்சி கொண்டு செல்கின்றாள்,
அழகிய கிராம வாழ்வினிலே
அங்க மான அழகிதுவே,
பழகிய பண்புள வாழ்வைவிட்டு
பட்டணம் தேடிப் போனதாலே
குழப்பம் மட்டும் நிலவிடுதே
காணீர் குடும்ப வாழ்வினிலே…!
*****
பசி தீர்க்கும் உணவோடு ஒய்யாரமாய் வரும் பெண்மணியைப் பார்த்து, ”வாய்க்காலில் தண்ணி இருக்க வாட்டர்கேனு நமக்கெதுக்கு?” என்று கேள்வியெழுப்புகின்றார் திரு. ராமச்சந்திரன்.
ஊருக்கே படியளக்கும் உழவனுக்கு
பசி தீர்க்க ஒய்யாரமா வந்தவளே
நீ நடக்கும் நடையக் கண்டு என்
மனசு தவிக்குதடி திருவிழா கரகத்துக்கு
தினந்தோறும் ஒத்திகையா மேல்நாட்டு
மோகமுந்தான் உன்மேல வந்து
ஒட்டிகிச்சா வாய்க்காலில் தண்ணி
இருக்க வாட்டர்கேனு நமக்கெதுக்கு
கரிசக்காட்டு பூமியெல்லாம் களையெடுக்க
ஏங்குதடி கஞ்சியத்தான் சீக்கிரமா
கரைச்சுத் தாடி களஞ்சியமே…
*****
”உழைப்பே உயர்வென வாழும் உன்னத அன்னையிவள்! அளவிலா அன்பை உறவுகளுக்கு அள்ளி வழங்கும் அருட்தெய்வமிவள்! இவள் அடிதொழுது பணிவீர்!” என்று அன்னையின் உயர்வை நன்மொழிகளில் நவின்றிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
உழைக்கும் தெய்வம்..!
சொந்தமாய் உழைக்கும் அம்மா
……….சுகமெனத் தன்னில் கண்டாள்..!
பந்தமும் வேண்டும் என்றால்
……….பற்றுடன் உறவு கொள்வாள்..!
எந்தவொ ருசுகமும் இல்லா
……….எளிமையாய் வாழ்வு கொண்டு..!
வந்ததை எதிர்கொள் என்றே
……….வழிசொலும் வல்ல வள்தான்..!
உழைப்புதான் உயர்வு என்ற
……….உன்னதக் கொள்கை கொண்டு..!
பிழைப்பையே பெரிதாய் வைத்து
……….பிரியமுடன் கொடுப்பாள் அன்பை..!
பிழையிலா வாழ்வு கொண்டு
……….பிறர்க்குத விசெய்து வாழ்வாள்..!
மழைத்துளி போலே சிந்தும்
……….மனதிலே அவள்நல் எண்ணம்..!
அன்னையும் தெய்வம் என்றே
……….அனைவரும் உணர வேண்டும்..!
தன்னையே அளித்துக் காத்து
……….தன்பிள்ளை வளரக் காண்பாள்..!
என்றும் மாற்று இல்லை
……….எப்பவும் அவளே அன்னை..!
அன்னையின் பாதம் தொட்டு
……….அடிதொழ எண்ணம் கொள்வீர்..!
*****
உணவுகொண்டு செல்லும் மாதரசியைப் போற்றிக் கனிவான மொழிகளால் கவிதை சமைத்திருக்கும் வித்தகக் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…
மண் தாங்கும் உடம்போடு
மனம் தாங்கும் உயிரோடு
மானம் காத்த மண்ணுக்கும்
உள்ளம் கவா்ந்த மனிதனுக்கும்
அன்பெனும் உயிா் கலந்து
பண்பெனும் பாசம் கலந்து
தலைமேல் பக்குவமாய்ச்
செய்துவைத்த உணவு
பாிமாற ஆளுண்டு
பசியாற மனமுண்டு
உழைத்து வாழ மண்ணுண்டு
உலகம் அமையும்
உழுதுண்டு!
தன் உள்ளம் கவர் மனிதனுக்கு அன்பெனும் உயிர்கலந்து பண்பெனும் பாசங்கலந்து உணவு பரிமாறச் செல்லும் பெண்ணரசியை நயமாய்க் காட்சிப்படுத்தி, ”உழைத்து வாழ மண்ணுண்டு, உலகம் அமையும் உழுதுண்டு!” எனும் நற்சிந்தனையால் உழைப்பையும் உழவையும் வந்தனை செய்திருக்கும் முனைவர் ம. இராமச்சந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

அளித்திடுவார் உச்சியை, ‘ஆ’போல் உனக்கும்
களித்திரு கண்ணன் கலப்பில் -பளிச்சென
நாக(ம்)(குண்டலினி) ஏறா மல்நாம்உச்சி, நாம சஹஸ்ரத்தால்(சஹஸ்ரஹார சக்ரம்-விஷ்ணு சஹஸ்ர நாமம்-சக்ரம் சுதர்ஸனம்)
வேகமாய் நித்ரை விழிப்பு….!
அந்தரங்க சுத்தியுடன் அந்த(அ)ணங்கு(கோமாதா பெண்தானே) ‘ஆ’போல,
அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க -வந்திறங்கி
வைகுண்டம் வாவென்று கைகொடுத்து உச்சிமுகர்
பைகொண்ட நாகமுற்ற பொற்பு(அழகு)….!