முருகன் ஆலயங்களும் முருகன் அடியார்களும்

-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா- மெல்பேண், அவுஸ்திரேலியா

” கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே” ,” கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்” என்று முருகன் அடியார்கள் தினமும் எண்ணி எண்ணியே முருகனை மனதார வழிபட்டு வருகிறார்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று அடியார்கள் கொண்டாடிப்போற்றுகின்றார்கள்.” வேலை வணங்குவதே வேலை என்பதுதான் முருகன் அடியார்களின்மனக்கிடக்கையாக இருக்கிறது எனலாம். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக முருகனே விளங்குகிறார் என்று முருகன் அடியார்கள் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ” வைதாரையும் வாழவைப்பான் முருகன் ” என்பது அவர்களது உறுதியான எண்ணமாகவும் இருக்கிறது.

இந்தியாவில் பல இடங்களிலும் முருகனுக்கு அடியார்கள் ஆலயங்களை அமைத்திருக்கிறார்கள். வடக்கிலும் தெற்கிலும் பல ஆலயங்கள் முருகனுக்கு என்றே இருக்கின்றன. அறுபடைவீடு என்னும் வகையில் – திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மிகவும் சிறப்பான ஆலயங்களாக யாவராலும் போற்றப்பட்டு வருகின்றன. இவற்றைவிடச் சென்னையில் பல இடங்களில் முருகன் கோவில்கள்அடியார்களினால் அமைக்கப்பட்டும் இருக்கிறது. சென்னையிலும் அறுபடை வீடும், வடபழனி முருகன் கோவிலும் பிரசித்தமாக இருக்கின்றன.

வேலூர்பகுதியில் இரத்தினகிரியில் தனிப்பட்ட ஒரு அடியவரின்
தளராத முயற்சியினால் குன்றினிலே இரத்தினகிரி முருகன் ஆலயம் கம்பீரமாக அருளாட்சியினை வழங்கிக் கொண்டிருக்கிறது. முருகனது அடியார்கள் மொழியினைக் கடந்து நாடுகளைக் கடந்து உலகெங்கும் பரந்து காணப்படுகிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென்னாபிரிக்கா, அமெரிக்கா, கனடா,பிரான்ஸ், ஜேர்மனி, சுவிச்சர்லாந்து, லண்டன், அவுஸ்திரேலியா, ஆகிய நாடுகளிலும், ஈழத்திருநாட்டினிலும், காணப்படுகிறார்கள். மொழி வேறுபட்டாலும் கலாசாரம் வேறுபட்டாலும், கொள்கைகள் வேறுபட்டாலும், அரசியலால் வேறுபட்டாலும்,அவர்கள் யாவரும் முருகனது அடியார்கள் என்ற வகையில் ஒத்த மனத்தினராய் முருகன்மீது அபார பக்தி உடையவர்களாகவே காணப்படுகிறார்கள் என்பதுதான் முக்கியமாகும்.

முருக ஆலயங்கள் முருக அடியார்கள் பற்றிச் சிந்திக்கும்பொழுது முருகனைப் பற்றியும் முருகனது சமயவரலாறு பற்றியும் அறிவதும் அவசியமாகும். முருகனது நிலைபற்றி உரைப்பது கெளமாரமாகும். இந்துசமயத்துள் இது அடங்கினாலும் இது முருகன் பற்றியே சொல்லுகிறது என்பதே முக்கியமாகும். கெளமாரம் என்பது ஒரு சமயமாகும். இச்சமயத்துக்கு உரிய தெய்வமாக முருகனே விளங்குகின்றார். முருகனைக் குமாரன் என்றும் அழைப்பர். குமாரன் என்றால் அஞ்ஞானத்தை ஒழிப்பவர் என்பது கருத்தாகும். குமாரன் அறுவகைச் சமயங்களையும் இணைத்தே நிற்கிறார். அவரின் திருமுகங்கள் ஆறாகும். அவரே முழுமுதற் பொருள் என்கிறது கெளமாரம்.

” அறுசமய சாத்திரப்பொருளே” என்று அருணகிரிசுவாமிகள் திருப்புகழில் காட்டுவது நோக்கத்தக்கது.

” அருவமும் உருவுமாகி அநாதியாய் பலவா யொன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிளம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகமுய்ய “ என்று முருகனது தோற்றம் காட்டப்படுகிறது கந்தபுராணத்தில். உலகைப் படைக்கும் பிரமாவாய், உலகைக் காக்கும் விஷ்ணுவாய், உலகினை அழிக்கும் உருத்திரனாய், கோலமாய், காலமாய், குணமாய், ஞாலமாய்,அனாதியாய் அமைந்த சோதிப்பிழம்புதான் முருகன் என்பது அவரது அடியார்களின் அசையாத நம்பிக்கை எனலாம்.

முருகனைப் பற்றி வடமொழிநூல்களும் சொல்லுகின்றன. தமிழ் மொழி நூல்களும் சொல்லுகின்றன. வேதங்களிலுல் சுப்ரமண்யோம் என்று வருகிறது.வேதகாலத்தில் முனிவர்கள் தங்களின் யாகங்களை நிறைவு செய்யும்வேளை சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம்என்று மூன்றுமுறை கூறியதாக ‘தைத்திரீயாரண்யகம்’ சுட்டுகிறது.

காளிதாசரின் குமாரசம்பவம் முருகனைப் பற்றிக் கூறும் காவியமாகும். இது வடமொழியிலே அமைந்திருக்கிறது. பாணினியும் முருகனைக் காங்கேயன், குகன், சண்முகன், விசாகன், கார்த்திகேயன் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.

சிவ ஆகமங்களான காமிகம், காரணம், சுப்பிரபேதம் யாவும் முருகனது வரலாறு பற்றிக் குறிப்புகளைக் கூறி நிற்கின்றன.

குமாரதந்திரம் என்பது முருகப்பெருமானது வரலாற்றையும் முருகனது விழாக்கள், பூஜைகள், விரதம், பிரதிஷ்டை செய்யும் விதம் இவற்றையெல்லாம் விரிவாய் எடுத்து விளக்கி நிற்கிறது எனலாம்.

இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் இவையும் முருகனைப் பற்றிச் சொல்லிநிற்கின்றன. தமிழ் இலக்கியக்கியங்களும் முருகனைப் பற்றி சொல்லுகின்றன என்பதும் முக்கியமாகும். தொல்காப்பியத்தில் சொல்லப்படுவது மிகவும் முக்கியம் எனக் கருதலாம்,”சேயோன் மேய மைவரை உலகம்” இவ்வாறு தொல்காப்பியம் செப்புகிறது.

புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை மூலமாகவும் முருகனைப் பற்றிய செய்திகளை அறிய முடிவதனால் முருக வணக்கமும் முருகனது அடியார்களும் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறார்கள் என்பதை அறிகிறோம் அல்லவா!

திருமுருகாற்றுப்படை என்பது முருகன் அடியார்களை முருகன் அருள்பெற ஆற்றுப்படுத்தும் நூலாகவே அமைகிறது. முருகனது அறுபடை வீடுகள் அதாவது முருகன் அருளாட்சி புரிய எழுந்தருளியிருக்கும் இடங்களின் பெருமைகளைப் விவரிப்பதாகவும் இருக்கிறது. அப்படிஎன்றால் இதனைப் பாடிய நக்கீரர் என்னும் அடியார்  அப்பொழுதே முருகன் ஆலயங்கள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டாரோ என்றேதான் எண்ணத் தோன்றுகிறதல்லவா?

ஆதிக்க நல்லூர் என்னும் இடத்தில் நடந்த தொல்பொருள் ஆய்வின்படி கி.மு ஆயிரத்து இருநூறு ஆண்டளவில் முருகவழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. பல்லவ மன்னர் காலமும், சோழப்பெருமன்னர் காலமும் முருக வழிபாட்டைப் பொறுத்தவரைத் தமிழ்நட்டிலே  இருண்டகாலமாய்த்தான் கொள்ளமுடிகிறது. பக்திப்பாடல்கள் பல பெருக்கெடுத்த பல்லவர்காலத்திலே முருகனுக்குச் சிவன் தந்தை என்னும் குறிப்பு மிகச் சில தேவாரங்களில்மட்டுமே காணப்படுகிறது.

திருச்செந்தூர் கல்வெட்டு மூலமாகவேதான் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் வரகுணபாண்டியன் திருச்செந்தூர் முருகன் பூஜைக்குப் பெருந்தொகை பணம் உதவினான் என அறியமுடிகிறது. முருகவழிபாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டதென்றால் அதனை கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டென்றே எடுத்துக் கொள்ளலாம்.

பதினான்காம் நூற்றாண்டின் இறுதி அல்லது பதினைந்தாம் நூற்றாண்டின்தொடக்கமே அருணகிரிநாதர் காலமாகும். மூவேந்தர்களும் தமிழ்நாட்டைஆண்டவேளை முருகவழிபாடு ஓங்கவில்லை. அவர்களின் பின்னர்தான் ஓங்கியது ஏன் என்பதை வரலாற்று சமய ஆய்வாளர்கள்தான் ஆராய்தல் வேண்டும்!

அருணகிரியாரால் முருகவழிபாடு செழித்தோங்கியது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. ஏனைய கடவுளர்களையும் அவர் போற்றிப் பாடிய பொழுதும் – முருகன்மீது அவரது தனிவிருப்பம் பல்லாயிரம் திருப்புகழாக எமக்குக் கிடைத்திருக்கிறது. முருகன்மீது பல பிரபந்தங்களையும் பாடி அளித்துள்ளார். கந்தரலங்காராம், கந்தரனுபூதி அருணகிரியாரின் தத்துவமுத்துக்களாய் திகழ்கின்றன. ஈழத்து முருகன் தலங்களையும் அருணகிரியார் பாடியுள்ளார். முருகனது அடியவராயிருந்து முருகவழிபாடி சிறக்கபெருந்தொண்டாற்றினார் அருணகிரியார் என்பது முருகனது அடியவர்க்கெல்லாம் சிறந்ததொரு முன்மாதிரி எனலாம்.

முருகனது மிகச்சிறந்த அடியார் அகத்தியராவார். தமிழ் மூதாட்டி ஒளவை முருகனால் ஆட்கொள்ளப்பட்ட அடியவராகிறார். ஆதிசங்கரர் தனக்கேற்பட்ட காசநோய் தீர முருகனைத் துதித்து சுப்ரமண்யப் புஜங்கம் பாடினார். வள்ளலாருக்கு அவரின் வீட்டுக் கண்ணாடியில் தோன்றி முருகன் ஆட்கொண்டார். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதரின் வாயில் கற்கண்டைப் போட்டு ” ஸ்ரீநாதாதி குருகுஹே ” என்னும் கீர்த்தனையைப் பாடவைத்தார். ஊமையாய் பிறந்த குமரகுருபரருக்கு திருச்செந்தூர் முருகன் உலகமே புகழும்வண்ணம் கவிபாடவைத்தார்.

சிதம்பர சுவாமிகள் பனைமரத்தில் முருகனை சுயம்புவாகப் பிரதிஷ்டைசெய்து அருள் பெற்றார். வள்ளிமலைச் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாம்பன் சுவாமிகள், பன்றிமலைச் சுவாமிகள், இவர்களெல்லாம் முருகனது காதலால் கட்டுண்ட அடியவர்களாவர். முருகன் பற்றிய சகலவற்றையும் உணர்த்திடும் கந்தபுராணம் தந்தவர் கச்சியப்பர். அவருக்கு அடியெடுத்துக் கொடுத்து அருள் புரிந்தார் முருகன். அதனால் அற்புதமாய் தெய்வீகமாய் ஒளிர்ந்தது கந்தபுராணம்.

வீடுதோறும் முருகன் அடியவர்களால் ஓதிநிற்கும் பேறுபெற்ற கந்த சஷ்டி கவசத்தை முருகன் அடியவர் பாலதேவராயன் எமக்களித்துச் சென்றுள்ளார். எமக்கு முன்னால் இருந்து தனது பாட்டாலும் பேச்சாலும் எழுத்தாலும் முருகன் பெருமையினை உலகம் முழுவது கொண்டுசேர்த்த முருகன் அடியவர்தான் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள். ஊர்கள்தோறும் ,நாடுகள் தோறும் சென்று முருகன்புகழைக் கதாப் பிரசங்கம் மூலம் எடுத்துச் சொல்லி அதில் கிடைத்த பொருளையெல்லாம் வயலூரில் முருகனுக்காகப் பேராலயம் அமைத்து பெரும்பேறு பெற்றார்.

இந்தியாவில் முருகன் அடியார்கள் ஆலயங்களுடன் எப்படித் தம்மை பிணைத்துக் கொண்டார்களோ அதேபோல் ஈழத்திலும் அடியார்கள் முருகனுடனும் அவரது ஆலயத்துடனும் தங்களை இணைத்துக் கொண்டனர். ஈழத்திலே பல பிரசித்தியும் அருளும் கொண்ட முருகன் ஆலயங்கள் இருக்கின்றன. பாடல்பெற்ற முருகனது ஆலயமாக கதிர்காமம் திருகோணமலை ஆகியன விளங்குகின்றன.

ஈழத்தில் தமிழ் அடியார்களும் சிங்களபெளத்த அடியார்களும் முருகனின்பக்தர்களாக விளங்குகிறார்கள். அவர்கள் முருகனை ” கதரகம தெய்யோ “என்று அழைக்கின்றனர். அவர்களது. கதிர்காமம் ஈழத்தில் முருகனின்பொக்கிஷமாய் இருக்கிறது என்பது முருகன் அடியார்களுக்கே பெருமைஎனலாம். தமிழர்கள் செறிந்துவாழும் வட மாகாணம், கிழக்கு மாகாணம் பகுதிகளில் நிறைந்த முருகன் அடியார்கள் இருக்கிறார்கள். இவர்களின் ஆதரவினால் பல முருகன் ஆலயங்கள் அங்கு எழுந்துநின்று அருளாட்சியினை வழங்கி நிற்கின்றன எனலாம். யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ இளவரசியின் வரலாற்றுடன் தொடர்புபட்ட மிகவும் புராதன ஆலயமாக விளங்குகிறது. யாழ்நகர் மத்தியிலே விளங்கும் நல்லூர் கந்தசுவாமிகோவில் உலகம் அறிந்த முருகனது கோவிலாக இருக்கிறது. அருள் உள்ளம் கொண்ட மாப்பாண முதலியார் என்னும் முருகன் அடியவரால் அமைக்கப்பட்ட இந்த ஆலயம் பலரது வாழ்வுக்கும் வெளிச்சமாய் இர்க்கிறது என்பதை யாவரும் ஏற்றுக் கோள்ளுவார்கள்.

கதிகாமம் போன்று பூஜைகள் நடைபெறும் ஆலயமாக இருப்பது செல்வச்சன்னதி முருகன் ஆலயமாகும். கிழக்கு மாகாணத்தில் வெருகலில் முருகன் ஆலயம் தொடங்கி திருக்கோவில் முருகனது ஆலயம்வரை அடியவர்களின் உந்தலினால் உருவாக்கப்பட்டனவே என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் முருகன் அடியார்களின் சிந்தனையினால் முருகனது ஆலயங்கள் அருளாட்சி புரிந்து வருகின்றன. மலேசிய மண் என்றதும் யாவருக்கும் முன்னே வந்து நிற்பது பத்துமலை முருகன் ஆலயமே ஆகும். மலேசியாவையே அடையாளப்படுத்தும் வகையில் இம்முருகன் ஆலயம் விளங்குகிறது என்பது உலகில்இருக்கும் முருகன் அடியவர்களுக்கெல்லாம் பெருமை என்றே சொல்லலாம். இம்முருகன் ஆலயம் இங்குள்ள அடியவரின் இருதயமாகவேதான் இருக்கிறது என்பது வெள்ளிடைமலையாகும். இங்குள்ள முருகன்அடியார்கள் தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையினையும் பத்துமலை முருகன் பார்த்துக்கொள்ளுவான் என்றே எண்ணி வாழ்கிறார்கள் எனலாம். சிங்கபூரிலும் முருகன் அடியார்கள் முருகன் ஆலயத்துடன் தம்மை இணைத்து பக்திசிரத்தையுடன் தமது நடவிடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் எனலாம்.

நான் தற்பொழுது வாழுகின்ற அவுஸ்திரேலியாவிலே முருகன் வணக்கமும் முருகன் ஆலயங்களும் செறிந்து காணப்படுகின்றன. விக்டோரியா மாநிலத்தில் சண்சைன் என்னுமிடத்திலும்,றொக்பேங் என்னும் இடத்திலும் முருகனுக்கு ஆலயம் அமைந்திருக்கிறது. சிட்னியில் மிகவும் பெரிய முருகன் ஆலயம் இருக்கிறது. பேர்த்தில் ஒரு முருகன் ஆலயம் இருக்கிறது..அவுஸ்திரேலிய தலைநகரான கன்பராவில் அறுபடைகுருகன் ஆல்யம் அமைந்திருக்கிறது. இங்கு அமைக்கப்பட்ட முருகன் ஆலயங்கள் யாவும் புலம்பெயர்ந்து வந்த அடியவர்களின் ஆதரவினால் அமைக்கப்பட்டன.

முருகன் என்றாலே கலியுகத் தெய்வம் என்னும் எண்ணமே அனைத்து அடியவர்கள் மனத்திலும் ஊன்றியிருக்கிறது எனலாம். கூப்பிட்ட குரலுக்குஓடிவரும் தெய்வமாகவே முருகனை அடியவர்கள் கருதுகிறார்கள். ஆலயம் அமைக்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தவுடன் முருகனுக்கே ஆலயம் அமைப்போம் என்பதே அனைத்து அடியார்களின் மனக்கருத்தாய் வெளிவருகிறது. பொதுவாக நோக்கும்பொழுது உலகெங்கணும் முருகன் ஆலயங்கள் இன்று ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் வகையிலேதான் அமையப்பெற்றிருக்கின்றன. யாவருடைய மனத்திலும் ” முருகா ” என்னும் நாமம் வல்லமைபொருந்திய மந்திரமாக உறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

முருகன் ஆலயங்களை அடியார்கள் அமைக்குப்பொழுது முருகனது கையிலுள்ள வேலினையும் வழிபடுமுகமாகவும் ஆலயங்களை அமைத்திருக்கிறார்கள். அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞ்ஞான ஒளியை முருகனது வேல் நல்குவதாக அடியார் நம்புவதால் வேலினுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களில் வேல் வழிபாடும் முக்கியமாகிறது. ஈழத்தில் கதிர்காமம் செல்வச்சன்னிதி ஆலயங்களில் வேல்தான் அடியவர்களால் வணங்கிப்போற்றப்படுகிறது. கணனி யுகத்தில் கந்தப்பெருமான் துணையே எமக்குப் பெருந்துணையாகும். முருகனை அல்லும் பகலும் அனைவரதமும் துதிக்கும் அடியவர்களும் அவர்களின் அன்பினால் விளைந்த ஆலயங்களும் அகிலத்துக்கும் ஆன்மீக நெறியினை உணர்த்துவதற்கு உறுதுணையாகவே இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

” விழிக்குத்துணை நின்திரு மென்மலர்ப்பாதங்கள் மெய்மை குன்றாமொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே “

”  மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் “

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க