படக்கவிதைப் போட்டி 180-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
திருமிகு. வெனிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார் திருமதி சாந்தி மாரியப்பன். நன்றி நவில்கின்றேன் இவ்விருவருக்கும்!
உறவுகளுக்காக உணவைத் தலைமேல் சுமந்துசெல்லும் அன்னையே! உம்மைப் போன்றோரின் தன்னலமிலா அன்பினால் அல்லவோ நில்லாது சுழல்கின்றது இவ்வையம்!
உண்டிகொடுத்து மாந்தர்க்கு உயிர்கொடுக்கும் உயர்பணியைச் செய்யும் மாதரசியைப் போற்றுவோம்!
இப்படத்துக்கு ஏற்றவகையில் பாப்புனையக் கவிஞர்களை அழைக்கிறேன்!
*****
பாருளோர் பசிப்பிணி தீரப் படியளக்கும் செயல்வீரனான தன் சாமி பசியென்று வாடாதிருக்கச் சோறுகொண்டு போகும் பெண்ணரசியைப் போற்றுகின்றார் திரு. எஸ். கிரிதரன்.
தள்ளாத வயதினிலும்
தளராது வாஞ்சையுடன்
செந்நெல் கழனிதனில்
சேற்றுழவு தான்செய்யும் – நாட்டின்
பஞ்சம் பசி போக்கி
பார் போற்ற வாழவைக்கும்
செயல் வீரன் என்சாமி
விவசாயி
என் படியளக்கும் சாமி
பசி என்று சோராமல் -அவர்
பாத்திருந்து பசியாற்ற
போகின்றேன், என் பசி மறந்து.
*****
”இவர்போன்ற கிராமத்துக் கண்ணம்மாக்கள் இருக்கும்வரை நம் கலாசாரமும் அழியாது காலூன்றி நிற்கும்” என்ற நம்பிக்கையைத் தன் கவிதையில் விதைக்கின்றார் திருமதி. இராதா.
மாற்றங்கள் தேவையே நமக்கது
முன்னேற்றமாக அமையும் போது
கடந்தவிட்ட கற்காலம் இனி இல்லை
நெஞ்சம் அஞ்சும் நெகிழியின் காலம்
அத்தனை மாற்றத்தையும் ஏற்றும்
தொலையவில்லை நம் தொன்மங்கள்
எத்தனையோ ‘லஞ்ச் பாக்ஸ்’ வந்தாலும்
தூக்குச் சட்டியை அழிக்க இயலாது
வேண்டியதில்லை விவாதங்கள்
வேண்டியதில்லை பட்டி மன்றம்.-
கலாசாரம் காலூன்றி நிற்பது நிச்சியம்
காணாமல் போகாது நம் கிராமமும்
கண்ணம்மாக்கள் இருக்கும் வரை
*****
”தள்ளாத வயதிலும் உனக்காகச் சோறேந்திவரும் என்னைத் தள்ளாதே முதியோர் இல்லத்தில்!” என மனங்குமுறும் முதுமகளைக் காண்கிறோம் திரு. இளவல் ஹரிஹரனின் கவிதையில்.
என்ன செய்ய
இந்த வயதிலும்
உயிர் கொடுப்பவளாய்
உண்டி கொடுப்பவள் நானே
தள்ளாத வயதில்
தாயான என்னை மறந்தும்
சேர்த்துவிடாதே
முதியோர் இல்லத்தில்
நசுங்கிப் போனாலும்
பாத்திரம் பத்திரமாய்த்தான்
இருக்கிறது……ஆனால்
இந்த மனிதர்கள்
முதுமைஅடைந்தால் மட்டும்
தாயையும் தந்தையையும்
தம் இல்லத்தில் இடமின்றி
தள்ளலாமோ முதியோர் இல்லத்தில்
தாங்காதடா மகனே…..
இந்த வெயிலிலும்
தலைச்சுமையோடு
தட்டேந்தி உனக்காக
இந்த வெயிலில் வருகிறேன் நானே.
*****
”பாங்கான கிராம வாழ்வைவிட்டுப் பகட்டான பட்டண வாழ்வைத் தேடிப் போனதால் வாழ்வில் குழப்பம் வந்தது; நிம்மதி போனது” என்று எதார்த்தம் பேசுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
குழப்பமே…
கழனியில் உழுதிடும் கணவனுக்கே
கஞ்சி கொண்டு செல்கின்றாள்,
அழகிய கிராம வாழ்வினிலே
அங்க மான அழகிதுவே,
பழகிய பண்புள வாழ்வைவிட்டு
பட்டணம் தேடிப் போனதாலே
குழப்பம் மட்டும் நிலவிடுதே
காணீர் குடும்ப வாழ்வினிலே…!
*****
பசி தீர்க்கும் உணவோடு ஒய்யாரமாய் வரும் பெண்மணியைப் பார்த்து, ”வாய்க்காலில் தண்ணி இருக்க வாட்டர்கேனு நமக்கெதுக்கு?” என்று கேள்வியெழுப்புகின்றார் திரு. ராமச்சந்திரன்.
ஊருக்கே படியளக்கும் உழவனுக்கு
பசி தீர்க்க ஒய்யாரமா வந்தவளே
நீ நடக்கும் நடையக் கண்டு என்
மனசு தவிக்குதடி திருவிழா கரகத்துக்கு
தினந்தோறும் ஒத்திகையா மேல்நாட்டு
மோகமுந்தான் உன்மேல வந்து
ஒட்டிகிச்சா வாய்க்காலில் தண்ணி
இருக்க வாட்டர்கேனு நமக்கெதுக்கு
கரிசக்காட்டு பூமியெல்லாம் களையெடுக்க
ஏங்குதடி கஞ்சியத்தான் சீக்கிரமா
கரைச்சுத் தாடி களஞ்சியமே…
*****
”உழைப்பே உயர்வென வாழும் உன்னத அன்னையிவள்! அளவிலா அன்பை உறவுகளுக்கு அள்ளி வழங்கும் அருட்தெய்வமிவள்! இவள் அடிதொழுது பணிவீர்!” என்று அன்னையின் உயர்வை நன்மொழிகளில் நவின்றிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
உழைக்கும் தெய்வம்..!
சொந்தமாய் உழைக்கும் அம்மா
……….சுகமெனத் தன்னில் கண்டாள்..!
பந்தமும் வேண்டும் என்றால்
……….பற்றுடன் உறவு கொள்வாள்..!
எந்தவொ ருசுகமும் இல்லா
……….எளிமையாய் வாழ்வு கொண்டு..!
வந்ததை எதிர்கொள் என்றே
……….வழிசொலும் வல்ல வள்தான்..!
உழைப்புதான் உயர்வு என்ற
……….உன்னதக் கொள்கை கொண்டு..!
பிழைப்பையே பெரிதாய் வைத்து
……….பிரியமுடன் கொடுப்பாள் அன்பை..!
பிழையிலா வாழ்வு கொண்டு
……….பிறர்க்குத விசெய்து வாழ்வாள்..!
மழைத்துளி போலே சிந்தும்
……….மனதிலே அவள்நல் எண்ணம்..!
அன்னையும் தெய்வம் என்றே
……….அனைவரும் உணர வேண்டும்..!
தன்னையே அளித்துக் காத்து
……….தன்பிள்ளை வளரக் காண்பாள்..!
என்றும் மாற்று இல்லை
……….எப்பவும் அவளே அன்னை..!
அன்னையின் பாதம் தொட்டு
……….அடிதொழ எண்ணம் கொள்வீர்..!
*****
உணவுகொண்டு செல்லும் மாதரசியைப் போற்றிக் கனிவான மொழிகளால் கவிதை சமைத்திருக்கும் வித்தகக் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…
மண் தாங்கும் உடம்போடு
மனம் தாங்கும் உயிரோடு
மானம் காத்த மண்ணுக்கும்
உள்ளம் கவா்ந்த மனிதனுக்கும்
அன்பெனும் உயிா் கலந்து
பண்பெனும் பாசம் கலந்து
தலைமேல் பக்குவமாய்ச்
செய்துவைத்த உணவு
பாிமாற ஆளுண்டு
பசியாற மனமுண்டு
உழைத்து வாழ மண்ணுண்டு
உலகம் அமையும்
உழுதுண்டு!
தன் உள்ளம் கவர் மனிதனுக்கு அன்பெனும் உயிர்கலந்து பண்பெனும் பாசங்கலந்து உணவு பரிமாறச் செல்லும் பெண்ணரசியை நயமாய்க் காட்சிப்படுத்தி, ”உழைத்து வாழ மண்ணுண்டு, உலகம் அமையும் உழுதுண்டு!” எனும் நற்சிந்தனையால் உழைப்பையும் உழவையும் வந்தனை செய்திருக்கும் முனைவர் ம. இராமச்சந்திரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
என்னைச் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்தற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கவிதைகளுக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் அருமை.