Blog

  • இந்திய அமெரிக்கர்களின் இன்னும் சில முறையற்ற செயல்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக தவறுகள் நிகழ்ந்தாலும் நீதிமன்றங்கள் ஒழுங்காகச் செயல்படுகின்றன. நீதிபதிகள் நாணயமாக நடந்துகொள்கிறார்கள். சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படுகின்றன. அமெரிக்காவிலும் 150 வருஷங்களுக்கு முன்னால் நிறைய ஊழல் இருந்தது. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அவையெல்லாம் மறைந்துவிட்டன. இப்போது பொதுமக்களில் பலர் நாணயமாக நடந்துகொள்கிறார்கள். சட்டம், ஒழுங்கை மதிக்கிறார்கள். சட்டத்தை மீறிச் செயல்படத் துணிவதில்லை. சட்டத்தை மீறுபவர்களுக்குத் தண்டனை கண்டிப்பாகக் கிடைக்கும், காவலர்களுக்கோ அதிகாரிகளுக்கோ லஞ்சம் கொடுத்துத் தப்பித்துக்கொள்ளலாம் என்ற வாய்ப்பும் இல்லை என்பதும் காரணங்களாக இருக்கலாம். ஆயினும் அறமற்ற செயலைச் செய்யும் மனப்பாங்கு இப்போது அமெரிக்கர்களிடம் இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு வரும் இந்தியர்களுக்கு அறமற்ற செயலைச் செய்யக் கூடாது என்ற மனப்பாங்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது.

    பல வருடங்களுக்கு முன்னால் தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருந்த காலம். அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் உறவினர்களைக் கூப்பிட வேண்டுமென்றால் ஒரு நிமிடத்திற்கு மூன்று டாலர் கட்டணம். அதிலும் மாணவர்களாக வந்தவர்களுக்குப் பண நெருக்கடி அதிகம். இந்தியாவிலிருந்து பெற்றோரோ மற்ற உறவினர்களோ கூப்பிட்டாலும் அதற்கும் நிறையச் செலவாகும். அதனால் அதுவும் கட்டுப்படியாகாது. தாங்கள் நலமாக இருக்கிறோம் என்பதைப் பெற்றோர்களுக்குத் தெரிவிப்பதற்கு ஒரே வழி (கடிதங்கள் எழுதுவதைத் தவிர) அமெரிக்காவிலிருந்து பெற்றோர்களைக் கூப்பிடுவதுதான். தொலைபேசியில் பேச ஆரம்பித்து 59 நொடிகளுக்குள் ஏதாவது கோளாறு ஏற்பட்டு தொலைத்தொடர்பைத் துண்டிக்க நேர்ந்தால் தொலைபேசிக் கம்பெனிக்குப் பணம் எதுவும் கட்டத் தேவையில்லை. இதைப் பயன்படுத்திப் பல மாணவர்கள் 58 நொடிகள் பேசிவிட்டு ஏதோ கோளாறு என்று கம்பெனியிடம் சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிடுவார்கள். இப்போது இதெல்லாம் தேவையில்லாமல் போய்விட்டது. ஒரு மாதத்திற்கு $35 கட்டிவிட்டால் இந்தியாவில் உள்ளவர்களோடு மட்டுமல்ல, உலகின் 60 நாடுகளில் இருப்பவர்களோடு காலவரையின்றிப் பேசலாம்.

    அமெரிக்காவில் கார்ப்பரேட்டுகள் எத்தனை தகிடுதத்தங்கள் புரிந்தாலும் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள் கொடுப்பார்கள். அவற்றில் ஒன்று வாங்கிய சாமான்களை பொருட்களைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் திருப்பிக் கொடுக்கலாம் என்பது. பொருள் வாங்கியதற்குரிய ரசீதை வைத்திருந்தால் முழுப் பணமும் திரும்பக் கிடைத்துவிடும். (உணவுப் பொருட்களுக்கும் இந்தச் சலுகை உண்டு; ஆனால் ஒரு சில நாட்களில் திருப்பிக் கொடுக்க வேண்டும்.) ஒரு முறை ஒரு பெண் டிபார்ட்மெண்ட் கடையில் பனிச்சறுக்கு விளையாடும்போது போட்டுக்கொள்ளும் உடையை வாங்கிக்கொண்டு ஸ்விட்ஸர்லாந்திற்குப் போய் அங்கு அதை உபயோகித்துவிட்டு நான்கு மாதங்கள் கழித்துக் கடைக்கு வந்து தான் அதைப் போட்டுக்கொண்டு விளையாடியபோது அதில் இருந்த நிறைய மினுக்குத் துகள்கள் உதிர்ந்துவிட்டதாகவும் தனக்கு அது மிகவும் சங்கடத்தைக் கொடுத்ததாகவும் கூறித் திருப்பிக் கொடுக்க முயன்றார். கடையின் அந்தப் பொருள் விற்கும் பகுதியின் மேனேஜர் மறுப்பு எதுவும் சொல்லாமல் திருப்பி வாங்கிக்கொண்டார். இப்படி வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் கம்பெனிகள் அவர்கள் தலையில் வேறு விதமாக மிளகாய் அரைப்பது வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது. இது ஒரு அதீத உதாரணம் என்றாலும் அமெரிக்காவில் வாங்கிய பொருளைத் திருப்பிக் கொடுப்பது என்பது சாதாரணமாக நடைபெறும் விஷயம். குறிப்பாக கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் பரிசு பெற்றவர்கள் பரிசு தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அதைக் கடையில் கொடுத்துவிட்டு தங்களுக்குப் பிடித்த ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். தாங்கள் வாங்கும் பொருள் பரிசின் விலையை விடக் கூடுதலாக இருந்தால் அதற்குரிய பாக்கிப் பணத்தைக் கொடுத்து வாங்கலாம். விலை குறைவாக இருந்தால் அந்தப் பணத்தைக் கடை, கார்டாக கொடுத்துவிடும். அப்போதைக்கு எதுவுமே பிடிக்கவில்லையென்றாலும் பரிசுப் பொருளுக்குரிய பணத்தை கடை கொடுக்கும் கிரெடிட் கார்டாக வாங்கிக்கொண்டு எப்போதாவது அதை உபயோகித்துக்கொள்ளலாம். அதற்குக் காலவரையறை இல்லை. பரிசாகக் கொடுப்பதற்காக அல்லாமல் தங்களுக்காக வாங்கினாலும் அதைத் திருப்பிக் கொடுக்கலாம். ஆனால் அமெரிக்கர்கள் பொருள்கள் வாங்கும்போது திருப்பிக் கொடுப்பதற்காகவென்றே வாங்குவதில்லை. பிடிக்காவிட்டால் திருப்பிக் கொடுக்கிறார்கள் அவ்வளவே. ஆனால் இந்தியர்கள் கணினி, கேமரா போன்ற சில சாமான்களை வாங்கி உபயோகித்துவிட்டு தவணைக்குள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். இது பிடிக்காமல் திருப்பிக்கொடுக்கும் ரகத்தில் வருவதில்லை. உபயோகிப்பதற்காகவென்றே வாங்கிவிட்டு, உபயோகித்துவிட்டுத் திருப்பிக் கொடுப்பது. இது அறநெறியற்ற செயல் அல்லவா?

    இப்போது அமெரிக்காவில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். அதிலும் கணினிக் கம்பெனிகளுக்காகச் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கி அவர்களுக்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டுத் திரும்பிப் போகும் கணினி வல்லுநர்கள் நிறையப் பேர். இப்படித் தற்காலிகமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களுக்கு அமெரிக்க உணவு அவ்வளவு பழகியிருக்காது. இங்கேயே நிறைய வருடங்கள் தங்கிவிட்ட இந்தியர்களும் அமெரிக்க, மற்றும் மற்ற நாட்டு உணவு வகைகளைச் சாப்பிடப் பழகிக்கொண்டாலும் இந்திய உணவுகளையும் இன்னும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு வகைகள் இந்தியாவிலிருந்தும் காய்கறிகள் அமெரிக்காவின் மற்றப் பகுதிகளிலிருந்தும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும் வருகின்றன. அமெரிக்க இந்தியர்களின் இந்த உணவுத் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு இந்த உணவுகளை அமெரிக்காவில் வினியோகம் செய்யும் கம்பெனிகள் – இவை இந்தியர்களால் நடத்தப்படுபவை – சில சாமான்களில் அதை விட விலை குறைவான சாமான்களைக் கலந்துவிடுகிறார்கள். உதாரணமாக கடலைப் பருப்பில் பட்டாணிப் பருப்பைக் கலந்துவிடுகிறார்கள். பார்க்க அவை இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். உற்றுப் பார்த்தால்தான் அவற்றுக்குரிய வித்தியாசம் தெரியும். ஓடிக்கொண்டே இருக்கும் அமெரிக்கர்களுக்கு இடையே வாழும் இந்தியர்களுக்கும் இதெற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. அதே மாதிரி கடலை மாவில் பட்டாணிப் பருப்பு மாவைக் கலந்துவிடுகிறார்கள். அமெரிக்காவிற்குள் வரும் எல்லா உணவுப் பொருள்களின் தரத்தையும் பரிசீலித்து அனுப்ப அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறை (Food and Drug Administration) இயங்கி வருகிறது. அரிசியில் மணலைக் கலந்தாலோ அல்லது புழுக்கள் இருந்தாலோ இந்தத் துறை அதைக் கண்டுபிடித்துத் தடைசெய்துவிடும். ஆனால் கடலைப் பருப்பில் பட்டாணிப் பருப்பைக் கலந்தால் இவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது.

    இந்தியாவிலிருந்து முருங்கைக் காய்களைப் பனிக்கட்டியில் உறையவைத்துக் (freeze) கொண்டுவருகிறார்கள். ஒரு முறை நான் முருங்கைக்காய்களை வாங்கியபோது அவை மிகவும் முற்றிப் போயிருந்தன. இன்னொரு முறை வாங்கியபோது மிகவும் பிஞ்சாக இருந்தன. இரண்டு முறையும் உபயோகத்திற்கு லாயக்கற்றவையாக இருந்தன. மொத்தத்தில் ஒன்றிரண்டு அப்படி இருந்தால் பரவாயில்லை. அதில் இருந்த எல்லாமே முற்றலாகவோ அல்லது மிகவும் பிஞ்சாகவோ பார்த்துப் பார்த்துத் தேர்தெடுத்தவை போல் இருந்தன. இது ஒரு வகை ஏமாற்று. உறையவைத்துப் பாக்கெட்டுகளில் வருவதால் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து வாங்க முடியாது. அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு முற்றல் எது, பிஞ்சு எது என்பதெல்லாம் மறந்திருக்கலாம். மேலும் இந்தியாவிற்கு அடிக்கடி போகாதவர்கள் பலருக்கு இதுவாவது கிடைக்கிறதே என்ற மனப்பான்மைதான் இருக்கிறது. மேலும் இதையெல்லாம் கண்டுகொள்ள இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. நான் ஒரு முறை அந்தக் கம்பெனி ஆட்களிடம் முறையிட்டேன். எங்கள் கம்பெனியில் உள்ள தர மதிப்பீடு செய்யும் குழுவிடம் கூறியிருகிறேன். இனி நன்றாக இருக்கும் என்றார்கள். அத்தோடு சரி. எந்த வித மாற்றமும் இல்லை. தரம் குறைந்த சாமான்களை வாங்காமல் இருப்பதே இவர்களுக்குப் பாடம் கற்பிக்கச் சிறந்த வழி. அதைச் செய்ய யாரும் தயாராக இல்லாத வரை இவர்களும் இப்படித் தரம் குறைந்த சாமான்களைத்தான் அமெரிக்காவில் விற்பார்கள்.

    அமெரிக்காவில் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்துகொள்வதற்கு முன் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்வதற்காக சேர்ந்து பழகுவார்கள். இதற்கு ‘dating’ என்று பெயர். முதல் தடவை பார்த்த பெண்ணையோ ஆணையோ பிடித்துப் போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கொஞ்ச நாட்கள் பழகிவிட்டுப் பிடிக்கவில்லையென்றால் இன்னொரு துணையைத் தேடலாம். ஆனால் பழகுவதற்காக மட்டும் அமெரிக்கர்கள் ‘dating’ பண்ணுவதில்லை. இப்போது ‘dating’ பண்ணிக்கொண்டிருக்கும்போதே கணவன், மனைவி போல் நிறைய ஜோடிகள் குடும்பம் நடத்துகிறார்கள். ஆனாலும் அமெரிக்கர்கள் எப்படியும் இந்த உறவை விட்டுப் போகப் போகிறோம் என்று ‘dating’ பண்ணுவதில்லை. இதிலும் சில இந்தியப் பையன்கள் முறையற்ற செயலில் இறங்குகிறார்கள். அமெரிக்கப் பெண்களுடன் கொஞ்ச நாட்கள் ஜாலியாக இருந்துவிட்டுப் பின் இந்தியாவிற்குப் போய் பெற்றோர் பார்த்து முடித்துவைக்கும் பெண்ணை மணந்து கொண்டுவிடுகிறார்கள். அமெரிக்கப் பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இது ஒன்றும் பெரிய இழப்பல்ல. பெண்மை, கற்பு என்பதற்கெல்லாம் அமெரிக்க அகராதியில் அர்த்தங்களே வேறு. ஆனாலும் எப்படியும் பெற்றோர் பார்த்த பெண்ணைத்தான் மணமுடிக்கப் போகிறார்கள் என்று உறுதியாக இருக்கும்போது ஏன் இப்படிப்பட்ட செயல்களில் இறங்க வேண்டும்?

    Share
  • சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 8

    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ

    சைவத்தைப் பற்றி எழுதி வருவதில் சிலருக்கு வருத்தம் ; வைணவத்தை விட்டுவிட்டீர்களே என்று. அவர்கள் மன நிறைவுக்காக வைணவத்தின் பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமே! இதோ வைணவக் காவியமான கம்பராமாயணம் : வை.மு.கோ பதிப்பு. மாரீசன் வதைப் படலம் (சில பதிப்புகளில் இப்பாடல் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் இடம் பெறுகிறது). இராமனால் நிராகரிக்கப்பட்டு இலக்குவனால் உறுப்பு நலங்கள் அழிந்த சூர்ப்பணகை, தன் அண்ணன் இராவணனிடம் வந்து முறையிடுகிறாள். ; சீதையைப் பற்றிக் கூறி அவன் காமத்தைத் தூண்டுகிறாள். “கடவுளர்கள் தத்தம் மனைவியரைத் தத்தம் உடல்களிலேயே இடம் தந்து வைத்திருக்கின்றனர் ; நீ சீதையைப் பெற்றால் எங்கே வைத்து வாழ்வாய் ?” என்ற கேள்வியைத் தூக்கிப் போடுகிறாள்.இங்கே முழு முதல் கடவுளான சிவ பெருமானைத்தான் கம்பர் முதலில் குறிப்பிடுகிறார். இருப்பினும் கம்பநாட்டாழ்வார் வைணவக் கொழுந்து அல்லவா! அதனால் பிற கடவுளர் மனைவியர் பெயர்களைக் கூடச் சொல்லாமல், தன் சமயக் கடவுளின் மனைவியை மட்டும் “பங்கயத்து இருந்த பொன்” என வருணிக்கிறார். இதோ அப்பாடல் :

    “பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத்து இருந்த பொன்னை
    ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்;
    மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை-
    மாகத் தோள் வீர!-பெற்றால், எங்ஙனம் வைத்து வாழ்தி?”.

    இப்பாடலில் நாம் கவனிக்க வேண்டியது யார் யார் தத்தம் மனைவியருக்கு எங்கே இடம் கொடுத்தார்கள் என்பதைத்தான். அந்தணன் ஆகிய பிரமன் கலைமகளைத் தன் நாவிலே வைத்துக்கொண்டானாம். எல்லாக் கணவர்களையும் போல அவனுக்கும் வாய் திறந்து பேச்சும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. திருமாலோ நல்ல கணவனாகத் திருமகளைத் தம் மார்பில் (இதயத்தில்) ஏந்திக்கொண்டார். பாவம் பரமசிவம் மட்டும் தம் உடலில் பாதியைப் பாகம் செய்துகொடுக்க வேண்டியதாயிற்றாம்!

    இதற்குப் புராணத்தில் கதை ஒன்று உண்டு.பிருங்கி முனிவர் தீவிரச் சிவ பக்தர். கையிலாயம் சென்ற போது சிவபெருமானும் பார்வதி தேவியும் அருகருகே நெருக்கமாக அமர்ந்து இருந்தனராம்.தேவியை வணங்க விரும்பாத முனிவர் சிந்தித்தார். வழி ஒன்று புலப்பட்டது. வண்டு உரு எடுத்தார். Photoshop -இல் செய்வது போல அம்மையை மட்டும் தனியே கத்தரித்து விட்டு அப்பனைச் சுற்றி வந்து வணங்கினாராம். அதனால் தேவி கோபம் கொண்டு முனிவரைச் சபித்துவிட்டாராம். இனி என்றுமே இறைவனை விட்டுப் பிரியக் கூடாது ; அதற்கு என்ன செய்யலாம் எனத் திருக்கேதாரம் என்னும் திருத்தலத்தில் இருந்த கௌதம முனிவரைக் கேட்க அவர் கேதாரகௌரி விரதத்தை உபதேசித்தாராம். அதன் படிச் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து விரதம் இருந்தார் தேவி. மனம் மகிழ்ந்த பரமசிவன் தேவி வேண்டியபடியே தம் உடலின் இடப் பாகத்தில் இடம் தந்தாராம். அதனால் ‘அர்த்தநாரீஸ்வரன்’ என்னும் பெயரையும் பெற்றார்.ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல சிவனும் சக்தியும் ஒன்றே என்பதை நிலைநாட்டுகிறது இக்கதை என்பர்.

    கணவனும் மனைவியும் இப்படித்தான் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் ஆணும் பெண்ணும் சமம் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது. மணவிலக்கு அதிகரித்து வரும் இக்காலத்தில் இக்கதை மிகவும் தேவைப் படுகிறது. ‘அர்த்தநாரீஸ்வரன்’ என்பதை மாதுடையபாகன், பாகம் பிரியார், மாதொரு கூறர்…என்றெல்லாம் மொழிபெயர்த்து நம்மவர் பாடி உள்ளனர். கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் ஈசனது இடப்பாகத்தைப் பெற்றார். அப்படி ஈசன் மலைமீது ஜோதியாக எழுந்தருளி, அர்த்தநாரீசுவரராகக் காட்சி தந்த தலம் ” திருவண்ணாமலை ” என்கிறது அருணாசலப் புராணம். தென்னகத்திலேயே திருச்செங்கோட்டில்தான் அர்த்தநாரீசுவரருக்கென்று தனிக் கோவில் உள்ளது.இறைவனின் இடப்பக்கத்தில்தான் இறைவிக்கு இடம் ; ஆனால், திருவதிகை வீராட்டானத்தில் உமையம்மை ஈசன் உடலில் வலப் பக்கம் இருக்கக் காணலாம். இவை தனிச் செய்திகள்.

    இத் திருகோலத்தைச் சைவப் பெரியார்கள் பலரும் பாடிப் பரவி இருக்கின்றனர் :

    “வெந்த வெண்நீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
    பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி”
    என்று திருஞானசம்பந்தர் திருச்செங்கோட்டுத் தேவாரத்தில் பாடினார்.

    மணிவாசகப் பெருமானும்,
    “தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
    பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
    சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
    கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பி”
    என்று திருவாசகத்தில் பாடியுள்ளார்.

    அதிவீரராம பாண்டியர், கரிவலநல்லூர் அந்தாதியில்
    “உரகா பரணத் திருமார்பும் உமைஒப் பனையாள் இடப்புறமும்,
    சிரமா லிகையும் புரிசடையும் செய்ய வாயும் கறைமிடறும்
    வரதா பயமும் மழுமானும் வயங்கு கரமும் மலரடியும்
    கருவா புரியான் வெளிப்படுத்திக் காட்சி கொடுத்து நின்றானே” எனக் கண்ணுள் ஓவியம் தீட்டிக் காட்டுகிறார்.

    இத் திருவடிவை வட மொழியில், ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்பர். அர்த (ardha) என்றால் பாதி என்பது பொருள் ; நாரீ = பெண் ; ஈஸ்வரர் என்றால் இறைவனாகிய சிவன்.அதாவது பாதி பெண்ணாக விளங்கும் இறைவன் என்பது முழுப் பொருள். அப்படியானால் இடப்பக்கம் பெண்மைத் தன்மையுடனும் வலப்பக்கம் ஆண் பண்புகளுடனும் இருப்பதாகப் பொருள் வரும். அதாவது ஆண் 50 % பெண் 50 % என்று ஆகும் ஆனால் இதனை விடச் சிறந்த பொருள் தரும் தொடர் ஒன்றை நம் முன்னோர் தந்திருக்கிறார்கள். அச்சொல் : ‘அம்மையப்பர்’.

    இச்சொல் பல பொருள்களை உள்ளடக்கியதாக விளங்குகிறது. அம்மையின் பண்புகளும் அப்பனின் இயல்புகளும் கலந்து அமைந்துள்ளன ; பெண் பண்புகள் அதிகமாக அமையும் போது பெண்ணாகவும் ஆண் தன்மைகள் மிகுதியாக ஆகும் போது ஆணாகவும் விளங்குதல் ; பெண்ணாக இருந்தாலும் ஆண் தன்மைகள் மறைவதில்லை, ஆணாக இருப்பினும் பெண் தன்மைகளும் மறையாமல் இருக்கும்… இவற்றை எல்லாம் பொதிந்து வைத்துள்ள சொல்தான் ‘அம்மையப்பர்’..

    அதனால்தான் நாயன்மார்களும் சிவனடியார்களும் அச்சொல்லைப் பெய்து இறைவனை வழிபட்டார்கள் ; பாடல்களைப் பாடி மகிழ்ந்தார்கள் :காண்க –

    அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிக
    அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் – அம்மையப்பர்
    எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
    அல்லார்போல் நிற்பர் அவர். எனத்

    திருக்களிற்றுப்படியார் திருக்கடவு உய்யவந்த தேவ நாயனார் நான்கு முறை அம்மையப்பரை அழைக்கிறார்.

    மாணிக்கவாசகரோ,
    “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே …
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே” (திருவாசகம் : பிடித்த பத்து – முத்திக்கலப்புரைத்தல்)
    என்று பாடி, தப்பிக்க முடியாதபடி இறைவனைத் தாம் பிடித்துவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்.

    வள்ளலாரோ,
    ” அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
    அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.”
    என்று அழுது அவனருள் வேண்டுகிறார்.

    அம்மையும் அப்பனுமாக இறைவன் இருக்கிறான் என்ற ஈடு இணையற்ற இத்தத்துவத்தை உலகுக்குச் சொன்னது சைவம். (அந்த இறைவனுக்குப் பிள்ளைகள் ஆகிற) நாமும் கருக்கொண்ட நாள் முதல் மண்ணுக்கு எருவாகும் நாள் வரை அம்மையப்பனாகத் தான் இருக்கிறோம். இதனை, இக்கால அறிவியல் தெள்ளத் தெளிவாக ஐயத்துக்கு இடமின்றி எடுத்துரைக்கிறது

    அம்மையப்பனாகத் தான் கரு உருவாகிறது. ஒன்பதாம் வாரம் வரை ஆண் பெண் வேறுபாடு இல்லாமலே கரு வளர்கிறது. காண்க :

    Until the ninth week of fetus development, the embryonic reproductive apparatus is the same one for the two sexes. (http://www.baby2see.com/gender/external_genitals.html)

    ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் இருப்பதற்குக் காரணம் ஆண்மை / பெண்மைச் சுரப்பு நீர்மங்கள் ( male/female harmones). ஆண்மைச் சுரப்பு நீர்மங்கள் ‘androgens’ எனப்படும். பெண்மைச் சுரப்பு நீர்மங்களுக்கு ‘estrogens’. என்று பெயர். ‘அம்மையப்பர்’ தத்துவம் உடலில் மட்டும் அல்ல இந்தச் சுரப்பு நீர்மங்களிலும் உண்டு. ஆம் இவை இரண்டுமே ஆண் உடலிலும் உள்ளன ; பெண் உடம்பிலும் உண்டு – வெவ்வேறு அளவுகளில், விகிதங்களில்.( Men and women produce both of these classifications of hormones that cause behaviors classified as male or female …but they produce them in varying amounts. – http://www.wisegeek.org/what-are-male-hormones.htm).

    முதல் ஒன்பது வாரங்கள் வரை அம்மையுமாக இல்லாமல் அப்பனுமாக இல்லாமல் இருந்த கரு (க்குழந்தை – ‘fetus’) உடலில் இந்தச் சுரப்பு நீர்மங்கள் சுரக்கத் தொடங்குகின்றன. எது அதிகமாகச் சுரக்கிறதோ அதுவாக அக்கரு உருப்பெறுகிறது. ஆண்மைக்குரிய சுரப்பு அதிகமாக இருந்தால் ஆண்மைக்கு உரிய கூறுகள் வளரத் தொடங்குகின்றன. பெண்மைக்குரிய பண்புகள் / உறுப்புகள் தளரத்தொடங்கும் ; பெண்மைக்குரிய சுரப்பு அதிகமாக இருந்தால் கரு பெண் குழந்தையாகும். ஆண்மைக்குரிய பண்புகள் / உறுப்புகள் குறையத் தொடங்கும். இப்படி வளர்வதை ‘progressive traits’ என்றும் தளர்வதை ‘regressive traits’ எனவும் ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.

    ‘ஆண் மிகில் ஆணாகும் ; பெண் மிகில் பெண்ணாகும்’ என்று திருமூலர் சொன்னது இங்கும், இதற்கும் பொருந்தும்.முதலில் வேறுபாடு இல்லாமலே உருவான பிறப்பு உறுப்புகள் இப்போது ஆணாகவோ பெண்ணாகவோ வடிவம் பெறுகின்றன.

    development of sex

    கரு(க் குழந்தையின் ) பிறப்பு உறுப்பில் மொக்கையாக இருந்த பகுதி

    – ஆண் கருவில் லிங்கமாக வளர்கிறது. . இது வளர்ச்சி. ”progressive trait’ ;

    – பெண் கருவில் இது சுருங்கி யோனி வாயிலில் இருக்கும் பருப்பாகும் (clitoris). இதனைத் தளர்ச்சி எனலாம் (regressive trait).

    கரு(க் குழந்தையின் ) உள் இருக்கும் ‘gonad’ என்பது ஆணில் விதைகளாகவும் (testes) பெண்ணில் சூலகங்களாகவும் வளர்கின்றன. (படங்களைக் காண்க) ஆணில் prostate ஆக வளரும் பகுதி பெண்ணில் கருப்பையாக மாறுகிறது.

    indifferent stage

    ‘ அம்மையப்பர்’ என்னும் சொல்லில் இன்னொரு கருத்தும் அடங்கி உள்ளது. ஆண் உடம்பில் ஆணின் கூறுகள் ஓங்கி இருந்தாலும் பெண்ணின் கூறுகள் முழுவதுமாக மறைந்து விடுவது இல்லை. காட்டாக மார்பகத்தைக் கூறலாம். பெண்ணுடலில் எடுப்பாகப் புடைத்து எழும் முலைப் பகுதி ஆணின் உடம்பில் அமுங்கிப் போகிறதே ஒழிய மறைந்துவிடுவது இல்லை. ஆகவே ஒவ்வொருவர் உடலும் ‘அம்மையப்பர்’ தத்துவத்தில் உருவாக்கப்பட்டு அம்மையப்பராகவே வளர்ந்து வாழ்ந்து மறைகிறது. இந்த உண்மையைச் சைவ சமயமே உணர்த்துகிறது. உண்மையில் பார்க்கப் போனால் 100 % ஆணும் இல்லை ; 100 % பெண்ணும் இல்லை. இருகூறுகளும் கலந்ததுதான் இந்த உடல். சைவ சமயம் உணர்த்தும் இத்தத்துவத்தை இக்கால அறிவியல் உறுதி செய்கிறது. வட மொழிப் பெயரைவிடத் தமிழ் மொழிச் சொற்றொடர் ‘அம்மையப்பர்’ எவ்வளவு பொருள் பொதிந்ததாக அறிவியல் உண்மைகளுடன் கூடி ஒளிருவதை எண்ணி எண்ணி வியக்கத்தான் வேண்டும்.

    இக்கால அறிவியல் சொல்லாத / சொல்ல முடியாத / அறிந்துகொள்ளாத / அறிந்துகொள்ள முடியாத இன்னொரு கருத்தைத திருமூலர் முதலான சித்தர்களும் மாணிக்கவாசகர் உள்ளிட்ட ஞானிகளும் வலியுறுத்திச் சொல்லி இருக்கின்றனர். அதுதான் மூல முதல் காரணனாம் “இறைவன்” என்னும் கருத்து. உடல் எப்படி உருவாகிறது என்பதை விளக்கும் அறிவியல் அந்த உடலை இயக்கும் உயிர் பற்றி எதுவும் கூறுவது இல்லை. ஆனால் உடலுக்கு உயிரைத் தருபவன் இறைவன் என எல்லாச் சமயங்களும் உரைக் கின்றன. சைவச் சமயமும் இதனை வலியுறுத்துகிறது.

    “அருளல்ல தில்லை அரனவன் அன்றி
    அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்
    தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
    வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே” என்கிறார் திருமூலர்.

    “உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
    மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
    திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
    கடைவைத்த ஈசன் …”
    “ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
    தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே”
    என உறுதியாகச் சொல்லிக் கருப்பப் பையில் கருத்தரிக்கும் நேரத்தில்
    ” பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்” என அழுத்தம் திருத்தமாக உரைக்கிறார் திருமூலர்.

    இப்படிப் பிண்டம் என்னும் உடல் பற்றித்: திருமூலர் கூறும் கருத்துகள் ஏராளம். அவற்றுள் சிலவற்றை மட்டுமே இங்குக் கண்டோம். பிண்டம் பற்றி அகத்தியர் முதலான சித்தர்களும் ஞானிகளும் நிறைய கூறி இருக்கின்றனர். மக்கள் நோய் நொடி இல்லாமல் நூறாண்டுகளுக்கும் மேலாக வாழ்வது எப்படி என்றெல்லாம் விளக்கி இருக்கிறார்கள். அவற்றைப் புரிந்துகொள்ளும் பொறுமையோ அறிவோ ஆற்றலோ நமக்கு இப்போது இல்லாமல் போய்விட்டது. நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால் அது –

    “மெய்யாயிருந்தது நாட்செல நாட்செல வெட்டவெறும்
    பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே !”.(பெரிய ஞானக் கோவை).

    பிண்டத்தை முடித்துவிட்டோம் ; இனி அண்டத்தைப் பார்ப்போமே…

    தொடரும்

    Share
  • இது நிகழாதிருந்திருக்கலாம்

    பவள சங்கரி

    என் பார்வையில் தமிழ்ச் செல்வியின் கவிதைகள்

     நூல் பெயர்: இது நிகழாதிருந்திருக்கலாம்

    ஆசிரியர் : ஜி. தமிழ்ச் செல்வி

    பக்கங்கள் : 88

    விலை : ரூ. 80

    வெளியீடு : தாரிணி பதிப்பகம்

    4 ஏ – ரம்யா பிளாட்ஸ்

    32 – 79 காந்தி நகர் 4வது மெயின் ரோடு

    அடையார்

    சென்னை – 600020

    Idhu Nigazhaadhu irundhirukkalam -1

    “ஆடிவரும்தென்றலெனில் ஆக்கும்துயர் கொஞ்சமல்ல

    அத்தனையும் நீக்கியுளம் அன்புகொள்ளாதோ

    கூடிவரும் பூவின்மணம் கொல்லுதய்யா உன்நினைவில்

    கொண்டதுவோர் துன்பந்தனைக் கிள்ள வாராயோ

    கோடியெனத் தன்னருகில் கொள்ளியெழிற் தாரகைகள்

    கொட்டிகிடந்தென்ன மதி கூடிவிடாதே

    ஓடிஒரு சோடியினை உள்ளமதிற் காணும்வரை

    ஒவ்வொருநாள் தேய்ந்துமது ஒய்ந்துவிடாதே ”

    கவிஞர் வாலியின் உள்ளம் உருக்கும் உன்னத காதல் கவிதை வரிகள்! கண்டதும் காதல், காணாமலே காதல், கண்டும் காணாத காதல், காத்திருப்பில் சுகம் காணும் சோகமான காதல், தோல்வியிலும் துவளாமல் துள்ளி எழும் காதல், பார்த்திருக்க பறந்து செல்லும் கைக்கெட்டா காதல் என்று காதலில் பலவகைகள் அல்லது காதலின் பல முகங்கள் கவிஞர்களின் கற்பனை ஊற்றுக்கு ஒரு வரம்.

    படைப்புகள் ஒரு படைப்பாளியுடன் வாழ்ந்து, பயணித்து, உள்ளுக்குள் ஊடுறுவி, எதைஎதையோத் தேடி, எதையோ காணாததைக் கண்டுபிடித்து,  பிடித்ததை  பூப்போல மென்மையாக அள்ளி அணைத்து சேதாரம் இல்லாமல், தேன்மையிட்டு, வண்ணக் கலவையும், வட்டெழுத்தும் கொண்டு தலைவாழையிலையிட்டுப் பரிமாறிய விருந்தாயின், சுகமாகச் சுவைக்கத் தடையேது?  வார்த்தைகள் கடைவாயில் சிக்கும் கடினமான கற்கண்டாயிராமல், எளிமையாக நுண்மாண் நுழைபுலத்தினுள் புகுந்த கடியாய் இருந்தால் கசக்குமா என்ன?  கண்டதும் பற்றிக் கொள்ளும் மெல்லிய சொற்கள் சுவைகூட்டுவதும் இயல்புதானே! இப்படித்தான் கவிஞர் தமிழ்ச் செல்வியின் ‘இது நிகழாதிருந்திருக்கலாம்’ நம் தூக்கத்தைத்  தொலைத்துவிடுகிறது! துக்கத்தையும் கூடத்தான்…

    என் காதல் உயிர்

    மலர்ந்தே இருக்க

    பதிவிடுகிறேன்

    என் எழுத்து கல்வெட்டுகளை

    என்று தன் நிலைத்த கனவை, கலையாத கனவுகள் என்று தலைப்பிட்டு ஆரம்பிக்கிறார்.

    ‘காதல்’ என்பதே அந்த முதற் பார்வையில் கருவாகி,  முத்தாகி, உள்ளேயே உருண்டு, திரண்டு ஒளிவடிவாய் பிரகாசிப்பதுதானே.  ‘விழிகள் தழுவிய சிலிர்ப்பின்’ முடிவில்

     உன் கவனத்தை

    என் பக்கம் ஈர்க்கவே

    என் கால் கொலுசுகள்

    சப்திக்கிறது.

    அன்புக் காதலின் சின்னமாக கொலுவிருக்கும் இந்தக் கொலுசின் ஓசையால் ஈர்க்கப்படாத காதலன் இந்தப் புவியில் ஏது? அதற்கு இக்கவிஞர் மட்டும் விதிவிலக்கா என்ன?

    தென்றலினும் மென்மையாக

    உன் தீண்டல்

    எங்கோ பார்த்தபடி

    உரசிச் சென்றாய் என்னை!

    முதல் தீண்டலின் சுகானுபவத்தை மூடி மறைக்க வல்லார் யார்?  பார்த்தும் பார்க்காதது போன்றும், தொட்டும் தொடாமலும் உரசும் கள்ளத்தனம் காதலின் இயல்பு  அல்லவா!

    விடியலும் விலகலும்

    ஒருசேர நிகழ

    நீ விலகாமல்

    கலைந்தது உறக்கத்தில்

    முத்த கனவு

    முதல் முத்தம் – கவிஞரின் பெருமூச்சு நம்மையும் சூடேற்றிச் செல்கிறது. காதல் என்றாலே இந்த மெல்லிய சோகம் தானே சுகத்தின் உச்சம்!

    உன் கரங்களின் பிடி

    தந்த இறுக்கத்தில் தான்

    உன் ஆழ்ந்த காதலை

    பரிமாறினாய்

    முதல் அணைப்பின் சுகம் முத்தாய்ப்பாய் நிலைத்திருக்கும் மாயம், கவிஞரின் வார்த்தையில் காவியமாய் ஆகிறது.

    நீ என்னருகில் இருப்பதே

    உலகின் மகிழ்வு எல்லையாகிறது

    விலகாதே எப்பொழுதும்

    ஊடலும், கூடலும் காதலுக்குப் பாடமானாலும், அதட்டலும், அதிகாரமும்கூட இனிமையாகத்தான் இருக்கிறது கவிஞரே!

    உன் மடி என் மஞ்சமாக

    கற்பனையில் திளைக்கிறது

    காதல் மனம்

    காதல் என்ற ஒன்று உள்ளத்தில் புகுந்து விட்டாலே அது பொத்தி வைக்கும் வகையறியாது என்றாலும்,

    காதலின் உச்சம்

    நம் மன நிர்வாணம் சமர்ப்பித்தல்

    என்றே சரசமாடுகிறது

    நொடிப் பொழுதும்

    இன்பத்தின் உச்சம் என்பது வெறுமைதானோ? சும்மாயிருப்பதே சுகம் என்கிறார்கள் சித்தர்கள். இதுவும் அந்த ‘சும்மா’வும் ஒன்றுதானோ? தன்னை மறந்த நிலை என்கிறார்களே அதுவாக இருக்குமோ இது? ஆம் வாசகரை பலவாக சிந்திக்க வைக்கிறதே.. இதுதானே இந்த கவிதையின் வெற்றி!

     

    பாதுகாப்பின் உச்சமென

    மிச்சம் இல்லாமல்

    உறுதி சொல்கிறது

    பிணைந்த கரங்கள்

    உயிரோட்டமுள்ள அழகான சொல்லாடல்.

    மௌனகூட்டிற்குள்

    எனக்காக மட்டுமே

    உனக்காக எழுதப்படும்

    மடல் வடிவிது.

    ஒவ்வொரு எழுத்தும்

    அரும்புகளில் மலர்களாக

    குவிந்து விரிவதில்

    எனக்கான உயிர்ப்பின்

    நெகிழ்ச்சி விரிந்து போகிறது.

    விரிந்து போகும் நெகிழ்ச்சியின் உயிர்ப்பு கவிஞரின் ஒவ்வொரு வார்த்தையிலும் மலர்ந்து மணம் பரப்புகிறது.

    உனை காணும் அந்த

    கணம் ஒன்றில்

    என் தேடுதல் முடிந்து

    என் வாழ்வும்

    முற்று பெறும்.

    காத்திருப்பின் சுகமான ரணங்களை சுவையாக விளக்கும் கவிமொழிகள்.

    நாணத்தில் தலைகவிழ

    உன் முகம் மறைந்த நொடியில்

    என்னைப் பற்றியதான

    திட்டல் தொடர்கிறது

    எனக்குள்ளே.

    யதார்த்தத்தின் சுகமான சுமைகளின் நீட்சி.

    நினைத்த மாத்திரத்தில்

    உன் பிம்பத்தை

    வடித்து  விடுகிறது மனம்

     

    இந்த மனிதர்களுக்குத்

    தெரியவில்லை

    காதல் இல்லை

    என்றால் சுரப்பியும்

    நீர்த்துப் போகும் என்று.

    கவிஞரின் கற்பனைக் குதிரை வெகு லாவகமாக வானில் சிறகடித்துப் பறக்கும் அற்புதக் காட்சி!

    எண்ணங்களற்ற மனவெளியில்

    இறக்கைகள் நீட்டி

    பறப்பதான அனுபவம் தான்

    நம் தனிமைத் தகர்ப்பு.

    தனிமையின் தகர்ப்பு இனிமையின் வார்ப்பான வார்த்தை முத்துக்கள்!

    சுமையென்று பாராமல்

    சுமப்பதில் தான்

    ஆழந்த அன்பு

    ஆட்சி செங்கோல்

    ஆகிறது.

    பசுமை மலர்களின்

    ஒவ்வாத  அணிவகுப்பும்

    இசைவான இணைவிற்காக

    இலகுவாக இமைக்கிறது

    உயிர்களின் லீலைகள்.

    கற்பனை வளமிக்க அழகான சொற்குவியல்கள்.

    மௌனங்களும் பேசுகிறது

    மந்திரமாக உள்ளுணர்வை

    வழியாக்கி

    வாசகரையும் தொத்திக்கொள்ளும் கவிஞரின் அனுபவ மொழிகள்.

    தன் பொம்மையை

    பத்திரப்படுத்தும்

    குழந்தையைப் போல

    என்னை பாதுகாப்பதிலேயே

    உன் வாழ்வின் கணங்கள்

    கடந்து போகிறது.

    பெண்மையின் பரிதவிப்பை, எதிர்பார்ப்பை அழகாக எதிரொலிக்கச் செய்யும் சொல்லாடல்கள்.

    விழித்து நிற்கும்

    கவனத்தின் உயிர்ப்பில்

    காதல் மட்டும்

    காதலாக மட்டும்

    வாழ்தல் மட்டும் வாழ்வின்

    அர்த்தம்

    காதல் மட்டுமே வாழ்க்கை, வாழ்க்கையெல்லாம் காதல்மயம் என்று வாழ்வின் அர்த்தமே காதலில்தான் உள்ளது என்பதை  இதைவிட அழுத்தமாகக் கூற இயலாது.

    உணர்வின் உச்சம்

    அழுகையின் மிச்சம்

    கசப்பில் காழ்ப்பும்

    இனிப்பிி்ற்குள் உவர்ப்புமாக

    உருவகக் கூட்டமைப்பில்

    நடிகையாகிறது  மனம்

    பிரிவுத் துயரின் உச்சம், அக்கக்கூவின் சோக கீதங்கள்!

    உன் தோளில் சாய்ந்துறங்கிய போதும்

    காய்ச்சலில் சுருண்டழுத போதும்

    உன் மடியில் துவண்டு கிடந்தபோதும்

    தாயின் ஸ்பரிசத்தை உன்னிடம்

    உணர்ந்தேன்

     உண்மையான காதலின் உச்சம்,  தாய்மைப் பாசத்தைப் பறைசாற்றும்  இன்பம்தான் அல்லவா? அதனை அழகாக வெளிப்படுத்தியிருக்கும் சொற்கள்.

    உன்னோடு கழித்த நொடி ஏதும்

    உருக்குலையவில்லை  நினைவடுக்குகளில்

    பசுமை  கோர்த்து சிரிக்கிறது

    உயிர்தன்மையின் சிநேகிதத்தில்

    கலையாத கனவுகள்,  முதல் பார்வை,  முதல் தீண்டல், முதல் முத்தம், முதல் அணைப்பு,  விலகாதே  எப்போதும்.. நொடிப் பொழுதும், இணைந்திறுக , பற்றுதல், காதல் கருத்தரிப்பு, உன் நினைவுகள், புறக்கணிப்பு, தனிமைத் தகர்ப்பு, நமக்கான ஊடல், கொந்தளிப்பு,   என  தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆயிரம் கதை சொல்கிறது. மொத்தத்தில் தமிழ்ச் செல்வியின் கவிதைகள் நாற்பதும் நம்மை காதல் உலகிற்குள் இலவசமாய் இட்டுச் செல்கிறது!

    Share
  • குறளின் கதிர்களாய்… (13)

     

    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

    கற்றனைத் தூறு மறிவு.

    -திருக்குறள்- 396 (கல்வி)

     

    புதுக் கவிதையில்…

     

    தோண்டத் தோண்டத்தான்

    ஊறும்

    வேண்டுமட்டும் தண்ணீர்,

    மணற்கேணியில்..

     

    மனிதன் கதையும் இதுதான்-

    கற்றிடக் கற்றிடத்தான்

    கூடிடும் அறிவு…!

     

    குறும்பாவில்…

     

    ஊறிடும் கேணிநீர் தோண்டத்தோண்ட..

    பெருகிடும் அறிவுமே,

    படிக்கப் படிக்க…!

     

    மரபுக் கவிதையில்…

     

    தண்ணீர் தொடர்ந்து வந்திடவே

    தாழ்வாய் உள்ள கேணியதில்

    மண்ணைத் தோண்டி எடுத்திட்டால்

    மேலும் மேலும் ஊறிடுமே,

    கண்ணாய்ப் போற்றும் கல்வியிலும்

    கற்றிடு கற்றிடு மேன்மேலும்,

    திண்ணமாய் ஓங்கி வளர்ந்திடுமே

    தீராச் செல்வம் அறிவதுவே…!

     

    லிமரைக்கூ…

     

    வெட்டவெட்ட ஊறிடும்மணற் கேணி,

    அறிவதில் உயர்ந்திடவே

    தொடர்ந்துகற்கும் கல்விதான் ஏணி…!

     

    கிராமியப் பாணியில்…

     

    தோண்டுதோண்டு நல்லாத்தோண்டு

    தோப்புக்குள்ள கேணியத்தான்..

     

    தோண்டத்தோண்ட மண்ணுவரும்

    தொளபோட்டுத் தண்ணிவரும்,

    சேத்துமண்ண எடுத்துவுட்டா

    ஊத்துத்தண்ணி ஓடிவரும்,

    தோண்டுதோண்டு நல்லாத்தோண்டு..

     

    படிப்புக்கதயொம் இப்புடித்தான்,

    படிக்கவேணொம் படிக்கவேணொம்

    படிப்படியா படிக்கவேணொம்

    பலகலயொம் படிக்கவேணொம்

    படிக்கப்படிக்க அறிவுவளரொம்

    பலகதயொம் தெரிஞ்சிபோவொம்..

     

    அதுக்கு,

    படிக்கவேணொம் படிக்கவேணொம்

    படிப்படியா படிக்கவேணொம்…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • கோல்கேட்டும் மறக்கப்பட்ட இதர ஊழல்களும்

    பவள சங்கரி

    தலையங்கம்

    ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டுக்காக தற்போது சிபிஐயால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலக்கரித் துறையின் முன்னாள் செயலர் பி.சி. பரேக் ஆகியோரினால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நிலக்கரித்துறை செயலாளரோ தனக்கு எந்த அளவிற்கு இதில் பொறுப்பு உள்ளதோ அதே அளவிற்கு பிரதமருக்கும் பொறுப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார். பிர்லா அவர்களோ நான் நிதியமைச்சரை சந்தித்துவிட்டேன், எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறுகிறார். எப்பவும் போல நமது பிரதமர் மௌனமாக இருந்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்.

    அரசுத் துறை நிறுவனங்கள் மட்டுமே பங்குகொள்ளத் தகுதி பெற்றவையான, ஒடிஸா மாநிலத்தின் தலபிரா நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில், தனியார் நிறுவனமான ஹிண்டாலும் ஒதுக்கீட்டு விண்ணப்பம் பெற்று சேர்க்கப்படுகிறது. அன்றைய செயலர் பி.சி. பரேக், நெய்வேலி நிலக்கரி கழகம் மற்றும் ஹிண்டால் நிறுவனம் என இரண்டும் சேர்ந்து அந்த நிலக்கரிச் சுரங்க வயலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் , பிரதமருக்குத் தெரிந்தே அரசின் கருத்துருவை தயாரித்ததாக பரேக் கூறுகிறார். இப்படி ஒரு மாற்றம் செய்ய வேண்டுமானல் அதனை அரசாணையில் குறிப்பிட வேண்டாமா?
    மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன், அரசிதழில் வெளியிட்டு அதற்குப் பிறகு விண்ணப்பங்கள் பெற்றுத்தான் ஒதுக்கீடு செய்தார்களா என்பதற்கான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

    மற்ற தொழிலதிபர்கள் பிர்லாவின் பக்கம் இருந்து கொண்டு இப்படியிருந்தால் நாங்கள் எப்படி முதலீடு செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இதுபோல் அம்பானியால் இயற்கை எரிவாய்வு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி சில நாட்கள் தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் பரபரப்பாக பேசின. இன்று அதனுடைய நிலை பற்றி ஒரு செய்தியும் தெளிவாக இல்லை. அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு கிணறுகளிலிருந்து சிலவற்றை மட்டும் தயாரித்துவிட்டு மற்றவைகளிலிருந்து எரிவாயு எடுப்பதில்லை. இதனால் உற்பத்தி இழப்பால் பல லட்சம் கோடி நட்டம் ஏற்படுகிறது. இதைத்தவிர அவர் உற்பத்தி செய்வதற்காக வழங்கக்கூடிய விலையும் மிக அதிகமாக உள்ளது. பெட்ரோலியத் துறை இதற்கான எந்த விதமான சரியான விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

    சில நாட்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிய நிலை என்ன என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. உறுதியான நேர்மையான தலைமை இல்லாததே இதற்கெல்லாம் காரணம். இனிமேலும் நேர்மையான ஆட்சியாக இல்லாவிட்டால் இது போன்று பல லட்சம் கோடிகள் போய், கோடி, கோடிகள் நட்டம் ஏற்பட்டு அரசு திவாலாகிவிடும் அபாயம் ஏற்படும். திறமையற்ற நிர்வாகமும் ஏமாறும் மக்களும் இருக்கும் வரை இந்த இந்திய ஜனநாயகம் பிழைக்கும். பிர்லாக்களும், அம்பானிகளும் வாழ்வார்கள். ஆனால் மக்கள் மட்டும் ஏழைகளாகவே இருப்பார்கள்.

    ஜெய்ஹிந்த்!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    ‘பாரதநாடு பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்’ என்று பாரதி எழுதியது எதற்காக என்று நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

    பாரதநாட்டை சுமார் இருநூறு வருடம் சுல்தான்கள், இருநூறு வருடம் மொகலாயர்கள், பின்னர் வந்த ஐரோப்பியர், பிரிட்டிஷ்காரர்கள் முன்னூறு வருடங்கள் ஆண்டனர். ஔரங்கசீப் காலத்தில் முக்கால்வாசி பாரதம் மொகலாயர் கைக்குப் போனது என்றால் இங்கிலீஷ்காரர்கள் கையில் அகண்டபாரதம் முழுவதுமே சென்றுவிட்டது. ஆட்சியாளர் அனைவருமே பாரத பண்பாட்டை முற்றிலும் நிராகரித்தவர் (ஒரு அக்பர் தவிர) என்று கூடச் சொல்லலாம். இத்தனை பரதேசத்தவர் ஆண்டாலும் உள்ளூற நிரவிக்கிடந்த பாரதத்தின் ஆன்மீக நம்பிக்கையையோ பண்பாட்டு விதானங்களையோ இவர்களால் மாற்றமுடியவில்லைதான்.

    பாரத ஆன்மீகப் பண்பாடு, கலாசாரங்கள் இவையாவும் தர்மத்தின் அடிப்படையில் ஏற்பட்டவை. ஆரம்பத்திலிருந்தே அதர்மத்தைக் கண்டு அஞ்சுபவர்களாக நம் முன்னோர்களை சித்தரித்திருந்தார்கள். அதர்மம் துளிர்த்து வன்முறையாட்டம் ஆடும்போதெல்லாம் தெய்வம் தோன்றி அந்த அதர்மத்தை அழித்தது என்பதை பரிபூர்ணமாக நம்புபவர்கள். அப்படி அதர்மத்தை அழிக்கும் தெய்வங்களுக்கு நன்றி பாராட்டி விழா எடுத்து மகிழ்பவர்கள். வேலனுக்கும் துர்க்கைக்கும் திருமாலுக்கும் கண்ணனுக்கும் ராமனுக்கும் என்றில்லாமல் தம் ஊர்மக்கள் நன்மைக்காக உயிர்த்தியாகம் செய்து தெய்வமாகிவிட்டவர்களுக்கும் அவர்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் விழா கொண்டாடி வருபவர்கள். இதை நம் பாரதம் முழுமைக்கும் வெவ்வேறு விதமாக காணலாம்.

    ஆனாலும் அங்கே குறிக்கோள் ஒன்றே.. ‘தர்மம் வெல்லவேண்டும் – அதர்மம் அழியவேண்டும், ஊர் செழிக்கவேண்டும், நல்லதோர் சமுதாயம் உருவாகவேண்டும்.. இதுதான் குறிக்கோள். இந்த குறிக்கோள் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் விதமாக அமையவேண்டும் என்பதற்காக அதற்கான புராணக் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. அக்கருத்துகள் பொதுவாக மெய்ஞ்ஞானமாகவே இருந்தாலும் அது விஞ்ஞானத்தோடு பொருந்தும் வகையிலும் இருந்தது. இந்த புராணக்கருத்துகள் நாளடைவில் பாமரருக்கு எளிதாகப் புரியவைக்கும்படியாக புராணக்கதைகளாக மாறின. இக் கதைகளை மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து எல்லோரும் சேர்ந்து பண்டிகையாகக் கொண்டாடினர். அப்படிப்பட்ட ஒரு பண்டிகையைப் பற்றிய பதிவு ஒன்றினைப் பற்றியதுதான் இந்த வார வல்லமையாளர் எழுதியது.

    http://aalosanai.blogspot.in/search?updated-min=2013-01-01T00:00:00%2B05:30&updated-max=2014-01-01T00:00:00%2B05:30&max-results=40

    சரதபௌர்ணிமை என அழைக்கப்படும் ஐப்பசி மாத முழுநிலவு நாளன்று கொண்டாடப்படும் கஜகிரி லக்ஷ்மி பூஜையைப் பற்றிய பதிவாகும். இந்த பூஜைக்கான ஆதி காரணங்கள், விஞ்ஞானத்துடன் சம்பந்தப்பட்டதாக எப்படி அமைகிறது, பாரதத்தின் எந்தந்தப் பகுதியில் கொண்டாடப்படுகிறது, விரதம், அதன் பலன்கள் போன்றவைகளை விவரமாகக் கொடுத்துள்ளார் பதிவர் திருமதி பார்வதி ராமச்சந்திரன்.

    நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் உருவான இவை போன்ற விரதகால பூஜைகள் பண்டைய காலத்திலிருந்தே மக்கள் அனுசரித்து வந்திருக்கின்றனர் என்பதனை விவரமாக தெரிவித்திருக்கிறார்.

    புராணக் கதை எதுவானால் என்ன, அதனால் தீங்கு நெருங்காத அளவுக்கும் மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவும், அவர்களின் மன வளமும், செல்வ வளமும் பெருகும் விதமாகவும் அமைந்தால் சமுதாயம் வளரும் இல்லையா.. வளரும் சமுதாயம் நல்ல சமுதாயமாகவும் தர்மம் குன்றாத சமுதாயமாகவும் இருந்துவிட்டால் உலகில் ஏது பிரச்னை.. இப்படியெல்லாம் நம் மனதில் கேள்வி எழும்பும் அளவுக்கு சிந்தனைகள் உருவாக்கிய திருமதி பார்வதி ராமச்சந்திரனை இந்த வார வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு நம் பிரத்தியேக வாழ்த்துகள்.

    கடைசி பாரா: கவியரசைப் பற்றிய சக்திதாசன் கவிதை

    பூஜ்ஜியத்துக்குள் ஒரு ராஜ்ஜியத்​தை

    பூட்டி ​வைத்த பரம் ​பொருளின்

    தத்துவத்​தை எளி​மையாக்கி எமக்க​தை

    தீந்தமிழ்ப் பாடலாக்கிய கவி​வேந்த​னே!

    Share
  • அன்பெனும் சிறைக்குள்……..!

    பவள சங்கரி

     

    AN695G“அன்சார், எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. இது சரிவருமா. நம்மால் தனியாக சமாளிக்க முடியுமா? இனிமேல் நம் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரும். நாம் நிறைய நம் சுகங்களை விட்டுக்கொடுக்க வேண்டிவரும்.  இரவு முழுமையான தூக்கம்கூட கேள்விக்குறியாகிவிடும்”

    “அது மட்டுமா டார்லிங்.. நமக்கு இடையில் இன்னொரு ஜீவன் வரும். பல தியாகங்கள்கூட செய்ய வேண்டிவரும், ஆனால் சமாளிக்கலாம் டோனி, ஒன்னும் பிரச்சனை இல்லைடா”

    “இது என்ன சாதாரண விசயமா அன்சார்.  எவ்ளோ பெரிய விசயத்தை இவ்ளோ சாதாரணமா சொல்ற, ஏதோ டெக்னிகல் பிராஜக்ட் செய்வது போல. அப்டீல்லாம் கணக்கு போட்டு ஒரு தியரிக்குள்ள செய்யுற பிராஜக்ட் இல்லப்பா இது ”?

    “ஏய், என்னம்மா இது ஊருல உலகத்துல யாரும் செய்யாத ஒன்னை என்னமோ நாம அதிசயமா செய்யிற மாதிரி சொல்றயே..”

    “அட போப்பா, அவங்களுக்கெல்லாம் துணைக்கு அம்மா, அப்பா, மாமியார், நாத்தனார் எல்லாம் இருக்காங்க. நாம அப்படியா சொல்லு. நாமதான் ஏதோ உலக மகா தப்பு பண்ணிட்ட மாதிரி ஒதுக்கப்பட்டிருக்கோமே” கண்களில் கண்ணீர் வழிய தொண்டை கம்ம சொன்னாள்.

    “ஹேய்.. ஸ்வீட்டி பை.. என்னது இது. இன்னைக்குப் புதுசா கண்ணிலே தண்ணியெல்லாம்” மார்பினுள் முகம் புதைத்து மெல்லிய விசும்பலுடன் இறுக்கி அணைத்த அவளுடைய கரங்கள் கதைகள் பல சொல்ல, முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களை உற்று நோக்கியவன் கண்களில் மென்மையாக முத்தமிட்டு, மேலும் அவள் கண்ணீரோ, வாய் வார்த்தையோ தொடராமல் கட்டுப்படுத்தினான்.

    அருகில் பால் மணம் மாறாத குழந்தையைப்போல கபடமற்ற முகத்துடன், தன் கைக்குள் அவள் கையை அடக்க முயற்சித்துக்கொண்டே உறங்கும் தன் அன்பு மனைவியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த குழந்தைக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது, தன்னுடைய வம்சம் கிளைவிடப் போகிறது என்ற எண்ணம் குதூகலமாக இருந்தாலும், தான் ஒருவனால் இந்த மாபெரும் காரியத்தை சாதிக்க முடியுமா. குழந்தையை நல்லபடியாக அவள் பெற்று எடுக்கும் வரை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும், அதைவிட குழந்தையை பராமரிப்பது இன்னும் சிரமம். முதலில் குழந்தையை தூக்குவதற்குப் பழக வேண்டும். டாக்டர் எல்லாம் கற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை இருந்தாலும், இருவருக்கும் இத்தனை சொந்த பந்தங்கள் இருந்தும் இது போன்று அனாதையைப் போன்றதொரு வாழ்க்கை அவசியமா என்று சலிப்பாக இருந்தது. ஒரு வேளை தன் அம்மா இருந்திருந்தால் தன்னை புரிந்துகொண்டு இப்படி தவிக்க விட்டிருக்கமாட்டார்களோ என்ற எண்ணம் வந்தபோது கண்ணோடு சேர்ந்து உள்ளமும் கலங்கத்தான் செய்தது. அப்படி என்னதான் தவறு செய்துவிட்டோம் தாங்கள் என்று இன்றுவரை புரியவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தபோது பலமுறை நான் டோனி வீட்டிற்கும், டோனி எங்கள் வீட்டிற்கும் வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் இருவர் வீட்டிலும் அன்பாக நடத்தியவர்கள், எங்களுக்குள் காதல் என்ற அந்த ஒன்று புகுந்தவுடன் நாங்கள் ஏதோ கொலை மாபாதகம் செய்துவிட்டது போல எங்களை வெறுப்புடன் பார்த்தது முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், போகப்போக அவர்களை எப்படியும் சமாதானம் செய்துவிடலாம் என்று இறுதி வரை நாங்கள் நடத்திய போராட்டம் தோல்வியில்தான் முடிந்தது. தூக்கம் பின்னோக்கிய நினைவுகளை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

    சண்டையும், வாக்குவாதமும், போட்டியும், பொறாமையும் என சாதாரணமாக இருந்த நட்புதான் அது. எந்த புள்ளியில் இந்த காதல் மலர்ந்தது என்று புரிந்து கொள்வது எளிதாக இல்லை. இந்த காதல் என்பது ஒரு மலரைப்போல எவரும் அறியாத வண்ணம் , அற்புதமான அந்த ஒரு நொடிப்பொழுதில் எப்படியோ மலர்ந்துவிடுகிறது. மலர்ந்த மறு வினாடியே சுற்றம், சூழல் என்ற எதையுமே சட்டை செய்யாமல் மணம் பரப்பவும் ஆரம்பித்துவிடுகிறது. ஒரே கல்லூரியில் ஒன்றாகப் படித்து, ஒன்றாக கேம்பஸ் இண்டர்வ்யூவில் முதல் சுற்றிலேயே தேர்வு செய்யப்பட்டு, இருவரும் ஒரே கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்ததும், ஒரே பிராஜக்டில் இருந்ததால் முழுவதும் தொடர்பிலேயே இருக்க வேண்டிய நிலை.  அமெரிக்காவிற்கு ஆன்சைட் வாய்ப்பு இருவருக்கும் கிடைத்ததும் எல்லாமே எந்த முயற்சியும் இல்லாமல் தானாகவே நடந்ததுதான். அமெரிக்காவில் சென்று அன்சார் தன் நண்பர்களுடன் தங்கவும், டோனி தன் உறவினர் ஒருவர் வீட்டில் கொஞ்ச நாட்கள் தங்குவதாகத் திட்டம். கணவன், மனைவி என அவர்கள் இருவர் மட்டுமே வாழ்வதாலும், அது  3 படுக்கையறை வசதி உள்ள அவர்களுடைய சொந்த வீடு என்பதாலும் டோனி அங்கு பேயிங் கெஸ்டாக தங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.  நாட்கள் மாதங்களாக உருண்டோடிக் கொண்டிருந்தன.

    நீரோட்டம் போல வாழ்க்கை ஒரே சீராக ஓடிக்கொண்டிருந்தால் எந்த மாற்றமும் வருவதில்லை. ஏதோ சிறு சலனம் ஏற்பட்டாலும்  ஒரு மாற்றம் நிகழத்தான் செய்கிறது. அது பயணத்தின் பாதையை வழிமாற்றவும் கூடும். டோனி தங்கியிருந்த வீட்டின் உறவினர் தம்பதி திடீரென்று இந்தியா செல்ல வேண்டிய அவசர நிலை. டோனிக்கு தனியாக இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும் ஒரு சமயம் தனிமையின் பாரம் அவளை நிலைகுலையச் செய்ததென்னவோ உண்மைதான்.. லேசாக சளி பிடித்திருந்தது ஆரம்பத்தில். ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த மாத்திரையை சாப்பிட்டும் சரியாகவில்லை. வீட்டில் தனியாக இருக்கவும் பிடிக்கவில்லை. அப்படியே ஆபீசும் சென்று வந்துகொண்டிருந்தாள். அன்சாரும் உதவி செய்வதாகச் சொல்லியும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு தானே சமாளிக்க செய்த முயற்சியும் பலிக்கவில்லை.

    இரண்டு நாட்களாகக் காய்ச்சல் அதிகமாகி அலுவலகம் செல்ல முடியவில்லை. கார் டிரைவிங் சுத்தமாக செய்ய முடியவில்லை. சாப்பிடவும் பிடிக்காமல் சுருண்டு கிடந்தாள். அன்சார் போன் செய்து பார்த்துவிட்டு பதில் இல்லாதலால் சந்தேகப்பட்டு அன்று நேரே அலுவலகத்திலிருந்து அவளைப் பார்க்க வந்தான். காய்ச்சலில் அனத்திக் கொண்டிருந்தவளைப் பார்க்க பாவமாக இருந்தது. மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும் வழியெல்லாம், ‘சாரி, அன்சார். உனக்கு தொந்திரவு கொடுத்துவிட்டேன். ரொம்ப முடியலைப்பா.. அதான்’ என்று புலம்பிக்கொண்டே வந்தாள்.  அவளைச் சமாதானப்படுத்தி ஒரு வழியாக வீட்டில் கொண்டு வந்துவிட்டாலும் ஃபுளூ காய்ச்சல் என்பதால் அடுத்தடுத்த நாட்களில் அன்சாரின் உதவி அவளுக்கு மிகவும் தேவைப்பட்டதை உணர்ந்து அவனும் சில நாட்கள் அவளுடனேயே தங்கி அவளை கவனித்துக்கொள்ள வேண்டி வந்தது. மனதளவில் இருவரும் நெருங்கி, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள இது பயன்பட்டது. இந்த நெருக்கம் பாதியில் முடிவதற்காக ஏற்பட்டது அல்ல என்பதையும் வெகு விரைவில் புரிந்து கொள்ள வேண்டிய சூழலும் ஏற்பட்டுவிட்டது. மெல்ல மெல்ல உடல் தேறிவந்த நிலையில் அன்சார் தன் இருப்பிடம் நோக்கிச் செல்ல வேண்டிய நேரம்தான் அவளுக்கு வேதனைக்குரிய நேரமானது. ஒரு நாள்கூட இனி பிரிந்து இருக்க முடியாது என்ற தேவை இருவருக்கும் புரிந்தது. கொஞ்சமும் யோசிக்காமல் இருவரும் உடனடியாக வீட்டில் சொல்லப்போக அங்குதான் பிரச்சனை வெடித்தது. உடனடியாக டோனியின் தாய் கிளம்பி நேராக அமெரிக்கா வந்து சேர்ந்தார். பிறகென்ன மகளை சமாதானப்படுத்தி சொந்தத்தில் வேறு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்ய அவளைச் சம்மதிக்க வைக்க தலைகீழ் நின்று பார்த்தும் அவளுடைய பிடிவாதம் தளர்வதாக இல்லை. வேறு வழியில்லாமல் ஒன்றும் பேசாமல்  இனிமேல் தங்கள் மூஞ்சியிலேயே முழிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்று வருடம் 2 ஆகியும் இன்றுவரை எந்த தொடர்பும் இல்லை. டோனியே போன் செய்தாலும் யாரும் பேசத் தயாராக இல்லை…  ஆனால் அன்சார் ஒரு படி மேலே சென்று அவர்கள் வீட்டில் இந்த திருமணத்தை மறுத்தாலும் தனக்கு கவலையில்லை என்றும் தான் டோனியுடன் சேர்ந்து வாழப்போவதாகவும் சொல்லிவிட்டான். தாயில்லாத மகனை அதற்கு மேல் கண்டிக்க முடியாமல் அவன் தந்தையும் அமைதியாகிவிட்டார். எந்த பிரச்சனையும் இல்லாமல், யாரைப்பற்றியும் கவலையும் படாமல் சந்தோசமாக திருமணம் செய்துகொண்டார்கள்.

    பழைய நினைவுகளில் மூழ்கி வெகுநேரம் தூங்காததால் எழுந்திருக்க கொஞ்சம் சோம்பல்தான்.. அட, டோனியும் இன்னும் எழுதிருக்கவில்லையே. ஆபீசிற்கு கிளம்ப நேரமாகிவிட்டதே என்று மெல்ல டோனியை தட்டி எழுப்பினான்.  முனகிக்கொண்டே எழுந்தவள் முகத்தில் களைப்பு ரேகை இருந்தது. அன்சார் ஒன்றும் பேசாமல் சூடாக ஒரு கப் டீ போட்டு எடுத்துவந்தான். தன் அக்கா இப்படி ஒரு நிலையில் இருந்தபோது மசக்கை எப்படி இருக்கும் என்று ஓரளவிற்கு தெரிந்துதான் வைத்திருந்தான். டோனி இரண்டு வாய் டீ குடித்திருப்பாள் அதற்குள் திடீரென்று குடல் புரட்டி அவளையறியாமல் உமட்டிக்கொண்டு வந்தது. அன்சார் சற்றும் தயங்காமல் அப்படியே இரு கைகளையும் நீட்டிப் பிடித்து துளியும் அருவெறுப்பில்லாமல் அருகிலிருந்த வாஷ்பேசினில் போட்டு, கையலம்பிக்கொண்டு, அவளருகில் வந்து பக்கவாட்டில் அணைத்து மெல்ல வாஷ்பேசினருகில் கூட்டிச் சென்று வாய் கொப்பளிக்கச் செய்து முகம் அலம்பி ஒரு குழந்தையைப்போல தன் மார்பில் அவள் தலையை சாய்த்துக்கொண்டு படுக்கையறைக்கு கூட்டிச் சென்று படுக்க வைத்தான். டோனியின் கண்களில் மாலை மாலையாக கண்ணீர். பதறிப்போனவன், ‘என்னடா.. என்ன ஆச்சும்மா..  ஆர் யூ ஓகே.. டியர்?  ஹாஸ்பிடல் எமெர்ஜென்ஸிக்குப் போகலாமா’ என்றான்.

    அவன் பார்வையில் தெரிந்த பரிவும், பாசமும் அவளை மேலும் அலைக்கழித்தது. என்ன மனுசன் இவன்.. சே.. அம்மாவைப் போல இப்படி ஒரு அன்பை ஒருவனால் காட்ட முடியுமா. உள்ளமெல்லாம் பூரித்துப்போக அப்படியே அவனைக் கட்டிக்கொண்டாள். தாயைப்பிரிந்து இருக்கும் துன்பம் துளியும் அண்டாமல் இவனைத் தவிர யாரால் காக்க முடியும். அவளுடைய அணைப்பின் இறுக்கத்தில் தனக்கும் ஓரளவிற்குப் புரிய, அதே அன்புடன் தலையை தடவிக்கொடுத்து, மெல்ல விடுவித்து படுக்கையில் கிடத்தினான். நேரம் ஓடிக்கொண்டிருப்பதை அவள் துளியும் சட்டை செய்யவில்லை. அவன் கைகளையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு நகரவிடாமல் கட்டிப்போட்டாள்.

    “ஏய் என்னடா இது.. ஆபீசிற்கு நேரமாகலையா.. போய் கிளம்பணும். நீ வேணுமானா இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோ. போன் செய்து சொல்லிடலாம். உனக்கு ஏதாவது கொஞ்சம், ரசம் சாதமாவது செய்து வச்சுட்டுப் போறேன். சரியா…”

    “ம்ம்ம்.. நோ.. வேண்டாம்ப்பா. இன்னைக்கு நீயும் ஆபீஸ் போக வேண்டாம். ப்ளீஸ்.. என்கூடவே இரேன் இன்னைக்கு…” செல்லக் கொஞ்சல்.

    “இல்ல டார்லிங். எனக்கு ஆபீஸ் போகணும் இன்னைக்கு. கிளையண்ட் மீட்டிங்கெல்லாம் இருக்கு. நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் சீக்கிரம் வரப்பார்க்கிறேன்”

    முடியாது என்று ஒரேயடியாக அடம் பிடித்தாள் என்பதற்காக ஆபீசில் போன் செய்து வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதற்கு அனுமதி வாங்கினான். இந்த கணினி யுகத்தில் இது ஒரு பெரிய வரம். எங்கு உட்கார்ந்துகொண்டும் வேலையை கவனிக்க முடிகிறது. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

    அன்று ஞாயிற்றுக்கிழமை. நண்பன் வீட்டில் பாட்லக் பார்ட்டி. வீட்டில் ஏதும் செய்ய முடியாததால் கடையில் சென்று நிறைய நொறுக்குத் தீனிகள் வாங்கிக்கொண்டு சென்று மணிக்கணக்காக நண்பர்களுடன் அரட்டையும், கும்மாளமுமாக பொழுது இனிமையாக கழிந்து கொண்டிருந்தது. முதல் நாள்தான் டோனி, ஆறாவது மாதம் என்பதால்  செக்கப்பிற்குச் சென்று ஸ்கேன் பார்த்ததில் பெண் குழந்தை என்று தெரிந்தபோது அன்சாருக்கு ஏகப்பட்ட குஷி. நல்ல வேளை இந்தியாவாக இருந்தால் என்ன குழந்தை என்று கேட்டால் பிய்த்துவிடுவார்கள். அமெரிக்கா என்பதால் தயக்கமில்லாமல் குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள முடிந்தது என்ற நிம்மதி. தாயை இழந்து சென்ற 7, 8 ஆண்டுகளாக அனாதையைப் போல மனநிலையில் இருந்தவனுக்கு பெண் குழந்தை என்று சொன்னவுடன் தம் அம்மாவே வந்து பிறக்கப்போவதாக நம்பிக்கை வந்தது. குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் நண்பன் ரகுவிற்கு வர அவன் ஆரம்பித்த அந்த நொடிதான் எதற்கோ பாதை அமைத்துவிட்டது.

    பெயரைப் பற்றி கேட்டவுடன் சற்றும் தயங்காமல் அன்சார், வஸீமா என்று தன் தாயின் பெயரை சொன்னது டோனிக்கு மகிழ்ச்சியில்லை என்பது அவள் முகம் போன போக்கில் தெரிந்தது. வீட்டிற்கு வந்தும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள். அன்சாருக்கோ ஆச்சரியமாக இருந்தது, இறந்து போன தன் தாயின் பெயரை வைப்பதில் இவளுக்கு என்ன பிரச்சனை என்று கோபமாகவும் வந்தது. ஆனாலும் அதற்குப் பிறகு பல முறை விவாதம் முற்றி சண்டையில்தான் முடிந்தது. இத்தனை நாட்கள் இல்லாத ஈகோ ஏனோ திடீரென்று தலைதூக்கி வீட்டில் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருந்தது. டோனிக்கு தன் பாட்டியின் பெயரை வைக்க வேண்டும் என்பதைவிட அன்சாரின் அம்மாவின் பெயரை வைப்பதில் சுத்தமாக விருப்பமில்லை. அன்சார் தங்களுக்கிடையே மதம் என்றுமே ஒரு பிரச்சனையாக வரக்கூடாது என்பதற்காகவே தங்கள் திருமணத்தைக்கூட எந்த மதம் சார்ந்தும் நடத்தக் கூடாது என்று உறுதியாக இருந்தான். இரண்டு வீட்டிலும் சம்மதம் கிடைக்காத நிலையில் நண்பர்கள் முன்னிலையில், நயாகரா நீர்விழ்ச்சியின் முன் இயற்கை அன்னையை சாட்சியாக வைத்துக்கொண்டு மோதிரம் மாற்றி தங்கள் திருமணத்தை நடத்தியதைக்கூட மறந்துவிட்டாள் இன்று. இந்த நேரத்தில் தேவையில்லாமல் இதைப்பற்றி பேசி அவளை டென்சன் ஆக்க வேண்டாம் என்று அன்சாரும் கூடியவரை விவாதத்தை தவிர்த்து வந்தான். டோனிக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தால் போதும் என்றுதான் இருந்தது அவனுக்கு. டோனி முன்பு தங்கியிருந்த அவளுடைய உறவினரும் இந்தியாவிற்குச் சென்றவர் குடும்பத்தில் பெரியவர்கள் உடல்நிலை மோசமாக இருந்ததால், அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் பெரும்பாலும் அங்கேயே தங்கிவிட்டார். இந்த நேரத்தில் எந்த உதவியும் இல்லாமல் நிறை மாத கர்பிணியாக அவள்படும் துன்பத்தைச் சகிக்க முடியாமல் பல நாட்கள் வீட்டிலிருந்தே வேலை பார்த்தான். டோனியும் அடிக்கடி லீவ் போட்டுக் கொண்டுதானிருந்தாள். பிரசவ விடுமுறை கிடைக்க இன்னும் 15 நாட்கள் இருந்த நிலையில் வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு தாயுமானவனாக இருக்கும் கணவனைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் தன்னால் கொஞ்சமும் உதவ முடியாமல் போனதுதான் உண்மை. இன்னும் குழந்தை பிறந்தவுடன் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கவலையாகத்தான் இருந்தது. அன்சாரும் அவளுடைய தாய்க்கு பேசி வரவழைக்கச் சொல்லி எத்தனையோ முறை சொல்லியும் அவளுடைய ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. தன்னைப் பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லாத பெற்றோரைப் பற்றி தான் மட்டும் ஏன் நினைக்க வேண்டும் என்ற ஈகோ.. எப்படியோ சமாளிக்கலாம் என்று வீம்பாக இருந்தாள்.  9 மாதங்கள் ஓடிவிட்டது. டாக்டர் கொடுத்த டியூ டேட் வருவதற்கு இன்னும் 15 நாட்களே இருக்கிறது. ஏனோ அது 15 மாதம் போல இழுத்துக்கொண்டிருந்தது.

    அன்று வெள்ளிக்கிழமை. விடியலிலேயே முழிப்பு வந்துவிட்டது. அன்சார்  சீக்கிரம் எழுந்து குளித்து எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான். ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. முதல்நாள் கூட ஒன்றும் சொல்லாமல் இப்படி திடீரென்று எங்கே கிளம்புகிறான் என்று புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தாள். அப்போதுதான் அவள் வந்து தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், சீனாவிலிருந்து ஒரு முக்கியமான க்ளையண்ட் வருவதால் தானே நேரில் சென்று விமான நிலையத்திலிருந்து கூட்டிவர வேண்டும் என்றான். அவளுக்கு ஏனோ திக்கென்றிருந்தது. ஏர்போர்ட் சென்று திரும்ப குறைந்தது 4 மணி நேரமாவது ஆகுமே.. ஏனோ உடம்பும் ஒரு மாதிரி இருப்பதால் தனியாக இருக்க அச்சமாகவும் இருந்தது. அவசரமாகக் கிளம்புபவனை எப்படி நிறுத்துவது என்றும் புரியவில்லை. அன்சாரும் அவள் மன ஓட்டத்தை கொஞ்சமும் சட்டை செய்யாமல் கிளம்பிக் கொண்டிருந்தான். வழக்கம்போல ஈகோ முந்திக் கொள்ள அவனிடம் ஏதும் பேசவில்லை அவள். தன் நிலையைப் பார்த்து அவனே வெளியே போகாமல் கூடவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவனோ அதைக் கண்டுகொள்வதாகவே இல்லை. தன்னையறியாமல் மனதில் ஏதோ ஒரு ஏக்கம் குடிகொண்டு மன நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.  இனம்புரியாத ஒரு அச்சம் தொடர்ந்துகொண்டே இருந்தது. பிரசவம் பற்றி அனைத்தும் வீடியோவில் பார்த்தும், மருத்துவர் மூலம் அறிந்தும் இருந்தாலும் அந்த நினைவு ஒரு படபடப்பை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. ஆதரவாய் அள்ளி அணைக்க அன்னைகூட அருகில் இல்லையே என்ற ஏக்கம்தான் அது என்று புரிந்தாலும் இனிமேல் என்ன செய்ய முடியும் என்று நினைத்த போது அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அன்சார் கிளம்பியவுடன் அமைதியாக போய் கொஞ்சம் பால் சூடு செய்து வெதுவெதுப்பாக குடித்துவிட்டு அமைதியாக படுத்துக்கொண்டாள். அரை மணி நேரம் ஆகியிருக்கும். ஏதோ ஒரு இயலாமை தெரிந்தது. அடி வயிற்றில் மெல்ல சுருட்டிப்பிடித்தது. வலி மெல்ல பின்புறமெல்லாம் பரவுவது போல இருந்தது. இன்னும் மருத்துவர் சொன்னதற்கு 15 நாட்கள் இருக்கிறதே.. பிரசவ வலிதான் ஆரம்பித்துவிட்டதோ தெரியவில்லையே. கடவுளே, கர்த்தரே, அன்சார்கூட அருகில் இல்லையே என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்துகொண்டே மெல்ல படுக்கையை விட்டு எழுந்தாள். வலி சற்று குறைந்ததுபோல இருந்தது. மெதுவாக நடந்து பார்க்கலாம் என்று மெல்ல அடி மேல் அடி எடுத்து வைத்தாள். ஒவ்வொரு அடிக்கும் சுள்ளென்றது. திடீரென்று அடி வயிறு இறுகியது போன்று கல்லாட்டம் ஆனது. குழந்தை எந்த அசைவும் இல்லை என்ற கவலை வேறு வந்தது. கொஞ்ச நாட்களாக குழந்தையின் அசைவு நன்றாகவே தெரிந்து கொண்டிருந்தது. இன்று என்னமோ அசைவே இல்லாதது இன்னும் அச்சமாக இருந்தது. குழந்தைக்கு ஏதும் பிரச்சனையாக இருக்குமோ என்று.  அன்சாருக்கு போன் செய்யலாமா என்று நினைத்தவள் ஏர்போர்ட்டில் இருப்பவனை தொந்திரவு செய்யவும் பிடிக்கவில்லை. என்ன சூழ்நிலையோ என்னமோ என்று யோசனையாக இருந்தது. அப்படியே மெதுவாகச் சென்று மீண்டும் படுத்துக்கொண்டாள். ஆனால் 10 நிமிடத்திற்கு மேல் படுக்கமுடியவில்லை. மீண்டும் பின்புறம் ஒரு குடைச்சலாக வலி ஆரம்பித்தது. லேசாக வியர்க்க ஆரம்பித்தது. போய் தண்ணீர் எடுத்து கொஞ்சம் குடித்தாள். உமட்டிக்கொண்டு வந்தது. வலி பரவுவது நன்கு உணர முடிந்தது. ஏற்கனவே மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல தயாராக வைத்திருந்த பையை எடுத்து வந்து அதில் புதிதாக வாங்கி வந்த மெட்டர்னிட்டி கவுனை உள்ளே வைத்தாள். அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. மெடிகல் கிட் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டாள். வழியில் ஏதும் பிரச்சனை என்றால் தேவையென்று கத்தரிக்கோல் தொப்புள்கொடி கட்டுவதற்கான க்ளிப் போன்ற அனைத்தும் தயாராக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். அன்சார் சென்று 3 மணி நேரம் ஆகிவிட்டது. போன் செய்யலாமா என்று நினைத்தாள். அதற்குள் பாத்ரூம் போக நினைத்தவள், கண்கள் சுற்றி மயக்கம் வருவது போல இருந்தது. வலி வேகமாக பரவ ஆரம்பித்துவிட்டது. ஹை ரப்சர் ஆகிவிட்டது கசகசப்பிலிருந்து புரிந்தது. பனிக்குடம் உடைந்து விட்டது புரிந்தது. இனிமேல் பொறுத்திருப்பது சரியல்ல என்று புரிந்தது. அன்சாருக்கும் போன் செய்தும் அவன் எடுக்கவில்லை. டிரைவிங்கில் இருப்பானோ என்று நினைத்தவள், நண்பர்கள் யாருக்காவது போன் செய்யலாம் என்றால் வீட்டில் இருப்பவர்கள் யாரும் இல்லையே  என்று மீண்டும் அன்சாருக்கு போன் செய்துவிட்டு இனி காத்திருப்பது சரியல்ல என்று தானே மருத்துவமனை கிளம்ப முடிவெடுத்தாள். தன் கார் சாவி இருக்கும் இடம் கூட தோன்றவில்லை. பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்…. அன்சாரின் கார் வந்து நிற்கவும் நிம்மதியில் அன்சார் என்று கத்திவிட்டாள். அடுத்த நொடி அன்சார் அதிர்ச்சியுடன் அவள் நிலையைப் பார்த்து இறங்கி ஓடிவந்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டான். எதிரில் நிற்பது யார்… தன் கண்களையே நம்ப முடியாமல் தேய்த்துக்கொண்டு பார்த்தாள்.. ஒன்றும் புரியவில்லை. டோனி என்று வந்து கட்டிக்கொண்ட அம்மாவின் ஸ்பரிசம் சுயநினைவிற்கு கொண்டுவந்தது… தாய்மையின் சுகம் என்ன என்பது பிரசவ காலத்தில்தான் ஒரு பெண்ணிற்கு முழுமையாக உணர முடியும் என்பதெல்லாம் கவிமொழியல்ல.. எல்லாம் சத்தியம் என்பது புரிந்தது. மருத்துவமனையில் குழந்தையின் பிறப்பு சான்றிதழுக்காக குழந்தையின் பெயர் கேட்டபோது அன்சார் மௌனமாக நிற்க டோனி கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் வஸீமா என்று முழுமனதுடன் சொன்னபோது அன்சாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்திருக்கும் என்பது தெரிந்ததுதானே!

    படத்திற்கு நன்றி:

    http://www.inmagine.com/alamy/an695g-photo

    Share
  • வார ராசி பலன் 21.10.13-27.10.13

    மேஷம்:மறைமுகப்போட்டிகளால், பொறுப்பான பணியில் இருப்பவர்கள், தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால், நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள். இந்த வாரம் தூக்கமின்மை, சோர்வு ஆகியவை பொது வாழ்வில் இருப்பவர்கள் செய்யும் பணிகளின் வேகத்தைக் குறைக்கலாம். பெண்கள் அக்கம் பக்கத் தாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது அவசியம். கலைஞர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். மாணவர்கள் கேளிக்கைக்கக நேரம் செலவழிப்பதை குறைப்பது நல்லது.
    ரிஷபம்: அலுவலக வட்டத்தில், உபத்திரவம் செய்பவர்களின் எண்ணிக்கை கூடாமல் இருக்க, அனைவரிடமும் பக்குவமாகப் பழகுவது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பழைய விரோதம் மீண்டும் தலைகாட்டும் வாய்ப்பிருப்பதால் எதிலும் கவனமாக இருப்பது அவசியம். இந்த வாரம் மாணவர்களுக்கு அடிக்கடி பராமரிப்பு செலவு வைக்கும் வாகனங்களை மாற்றி புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு வந்து சேரும். பணியில் இருப்பவர்கள் திடீரென்று வரும் இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ள தயாராய் இருப்பதன் மூலம் தங்கள் திறமையை உயர்த்திக் கொள்ளலாம்.
    மிதுனம்: இந்த வாரம் உங்கள் செல்வாக்கு மூலம் லாபம் அடைந்தவர்களேதக்க நேரத்தில் உதவி செய்ய யோசிப்பார்கள். பெண்களிடம் நெருக்கம் காட்டி வந்த உறவுகள் மெல்ல விலகும் . கலைஞர்கள் அவசரமாக பணியில் ஈடுபட்டாலும், விரும்பிய பலன் கிடைக்க, நண்பர்கள் உறுதுணையாய் இருப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் மதிப்பு, மரியாதை தெரியாதவர்களிடம் பழக நேரிடும். எனவே எந்த சூழலிலும் சொந்த விஷயங்களைப் பிறரிடம் பரிமாறிக் கொள்வதைத் தவிர்க்கவும். கர்ப்பிணிப் பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம். எனவே தேக நலனை நல்ல முறையில் பராமரித்து வரவும்.
    கடகம்: இல்லத்தில் எழும் பிரச்னைகளைத் தீர்க்க, பெண்கள் நிதானத்தைக் கடைபிடித்து வந்தால்,உறவுகள் சீராக இருக்கும். பணியில் இருப்பவர்கள் தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருந்தால், மன அமைதி கெடாமல் வேலைகளில் ஈடுபடலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் முன் பணியின் தன்மை அறிந்து செயல்பட்டால், பொறுப்புக்களை நிறைவேற்றுவதோடு நல்ல பெயரையும் தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த வாரம் கடின முயற்சி மற்றும் அலைக்கழிப்புக்குப்பின் கலைஞர்களின் உண்மையான உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
    சிம்மம்: இந்த வாரம் வியாபாரிகள் கடனைத் தீர்ப்பதற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற முழு முயற்சியில் இறங்கி வேலை செய்து கடனை அடைத்து, லாபத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். மாணவர்கள் மேற்கொள்ளும் பயணம் ஆதாயத்தை ஏற்படுத்துவதாக அமையும். பெண்கள் மனதில் குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் வேலை செய்வதன் மூலம் குடும்பப் பொறுப்புக்களை சரிவர செய்து நல்ல பெயரைப் பெறலாம். கலைஞர்கள் தங்கள் கடன் பற்றிய நிலவரத்தை முழுமையாக தெரிந்து கொண்டு செயல்பட்டால்,பொருளாதாரச் சரிவுகளை ஓரளவு சரிக்கட்டமுடியும்.
    கன்னி: இந்த வாரம் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு சரக்குகளை வாங்குதல் நலம். மாணவர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, கல்வியில் கவனமாக இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை இடைய இயலும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் சுமூகமாக நடந்து கொண்டால், குற்றங்குறை என்பது தேய்பிறையாக கரைந்துவிடும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவி வந்தாலும், உறவினர் வருகையால், சிறு சலசலப்பு தோன்றி மறையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் நிர்வாக விவகாரங்களில், தகுந்த ஆலோசனையின் பேரில் செயல்படவும்.

    துலாம்: கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள், கணக்குகளை ஒழுங்காகப் பராமரித்து வந்தால்,வேண்டிய சலுகைகளைப் பெறலாம். பெண்கள் கைப் பணத்தைப் பார்த்துச் செலவழியுங்கள். கடன் வாங்க வேண்டியிராது. இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்கள், நல்ல வேலையில் அமர்வார்கள். படிப்பில் மட்டுமின்றி, விளையாட்டுகள், போட்டிகள் ஆகியவற்றிலும் மாணவர்கள் வெற்றி வாகை சூடும் வாய்ப்புக்கள் பல வந்து சேரும். இந்த வாரம் கலைஞர்களின் கலகலப்புக்கு இடையே சிறிது சலசலப்பும் அவ்வப்போது தலைகாட்டும். எனவே சக கலைஞர்களின் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
    விருச்சிகம்: பெண்களுக்கு உறவினரோடு உரையாடி மகிழும் வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கும். பெற்றோர் காட்டும் அன்பும், அரவணைப்பும் பிள்ளைகளை உற்சாகப் படுத்தும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் மதிப்பு கூடும்.இயந்திரம், இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் உள்ளவர்கள் கவனத்துடன் செயலாற்றுவதோடு, தகுந்த பாதுகாப்பு விதிகளையும் கடை பிடிப்பது நல்லது..வியாபாரிகள் புதிய துறையில் இறங்கும் முன்பு, ஏற்ற இறக்கங்களை அறிந்து கொண்டால் அதற்குத் தக்கவாறு செயலாற்ற முடியும்.
    தனுசு: நேரம் தப்பித் தூங்கவேண்டிய சந்தர்ப்பங்களுக்கு இடமளிக்காத வகையில்,மாணவர்கள் திட்டமிட்டு பணிகளை முடிப்பது புத்திசாலித் தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கிற்கேற்ப இதமான ஆலோசனை வழங்குங்கள். உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். பணியில் இருப்பவர்கள் தங்கள் துறை தொடர்பான விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்வதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டை எளிதில் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தேவையில்லாமல் காரசாரமான விவாதங்களிலும், விமர்சனங்களிலும் தலையிடாதீர்கள். அமைதியான முறையில் வேலைகள் செல்லும்.
    மகரம்: குடும்ப விவகாரங்களில் பெண்கள் சிறிய விஷயங்களுக்காக சர்ச்சையில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் சிக்கலான நேரங்களில் அனுசரித்து நடந்து கொண்டால், பிரச்னைகள் பெரிதாகாமல் பிசுபிசுத்துவிடும்.கலஞர்கள் வீண் வதந்திக்கு முக்கியத்துவம் அளிக்காமலிருந்தால், நிம்மதி நிலவும். வியாபார நிமித்தம் வெளியூர் செல்கையில், உணவு மற்றும் குடிநீரில் கவனமாய் இருந்தால், தேக உபாதை கள் தலைகாட்டாது. பணியில் இருப்பவர்கள் தாங்கள் புழங்கும் விலையுயர்ந்த பொருட் களின் பரமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். பங்குதாரரிடையே நிலவிய மனஸ் தாபம் நீங்கும்.
    கும்பம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்கள். வியாபாரிகள் அதிக லாபத்தினை எதிர்பார்த்து, குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த காரியத்தினையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செய்து விடுங்கள். கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம். பெண்கள் வீண் செலவுகளைத் தவிர்த்தால், பொருளாதார இழப்புகள் அவ்வளவாய் இராது. மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தினால், மதிப்பெண்களோடு, உங்களது மதிப்பும் உயரும்.
    மீனம்:மாணவர்கள் கடினமான பாடங்களை குறித்த நேரத்திற்குள் முடிப்பதற்காக, பிறர் தயவை நாட வேண்டியிருக்கும். எனவே சிறிய சண்டைச் சச்சரவுகளை பெரிது படுத்தாமலிருப்பது நல்லது. இந்த வாரம் பெண்களுக்கு வரவும், செலவும் போட்டி போட்டுக் கொண்டு வரும். உள்ளன்போடு பழகுபவர்களின் ஆதரவு பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு தனித்தெம்பைத் தரும். வியாபாரிகள் செலவுகளில் சிக்கனத்தைக் கடைபிடியுங்கள். கிடைக்கும் லாபத்தின் அளவு குறையாமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் திட்டமிட்ட காரியங்கள் திட்டப்படி நடப்பதில் சிறு சுணக்கம் ஏற்படலாம்.

    Share
  • தெரியும் பார்…

    செண்பக ஜெகதீசன்

     

    பிடிக்கவில்லை என்றாலும்

    இதழ்களில்

    புன்னகையை ஒட்டிக்கொள்..

     

    வேண்டாம் என்றாலும்

    வாயில் கொஞ்சம்

    வழிவிடு இனிய சொல்லுக்கு..

     

    தேவையில்லை என்றாலும்

    தெரிந்தோ தெரியாமலோ

    பிறர்க்குக்

    கொஞ்சம் உதவிப் பழகு..

     

    பலனேயில்லை யெனிலும்

    பலர்க்கு

    நலனே செய்துபார்..

     

    தேவையே இல்லையெனிலும்

    தெரியும் பார்

    உன்னைச் சுற்றி ஒளிவட்டம்…!

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – ஊட்ஸி அருங்காட்சியகம் 11

    11. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – ஊட்ஸி அருங்காட்சியகம் – 3, போல்ஸானோ, இத்தாலி.

    சுபாஷிணி ட்ரெம்மல்

    அண்மையில் வெளிவந்த பி.பி.சி செய்தி ஒன்று குறைந்தது 19 பேர் ஊட்ஸியின் பரம்பரையில் வந்தவர்கள் என்று இத்தாலியின் திரோல் பகுதியில் உள்ளவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/news/world-europe-24477038 தற்கால DNA சோதனைகளின் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் இவ்வகையில் ஆய்வு செய்து ஒரு நபரின் பரம்பரையை இனங்காணும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. இந்த ஆய்வுகளினால் 5300 ஆண்டு பழமையான ஊட்ஸிக்கும் தற்சமயம் உறவினர்கள் இருப்பது நமக்குத் தெரிய வருவதும் ஒரு சுவாரசியமான விஷயம் தானே. இண்டஹ் ஆய்வுகள் மேலும் தொடர்வதால் இன்னும் பலர் கூட அடையாளம் காணப்படலாம்.

    ஊட்ஸியை ஆராயும் ஒரு ஆய்வாளர்.
    நன்றி:http://www.voanews.com

    o1

    ஊட்ஸி எப்படி இறந்திருப்பார்?

    ஆய்வாளர்களின் கணக்குப்படி இவர் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் இவரை யாரோ தாக்கியிருக்கின்றனர். தாக்குதலால் உண்டான காயம் உடலில் தோல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் எய்திய அம்பினால் தான் இவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. அந்த அம்பு முதுகுப் பகுதியின் வழியாகச் சென்று இருதயத்தைத் தாக்கி அம்பில் இருந்த விஷமும் உடலின் ரத்தத்தில் கலந்து இந்த இறப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே மருத்துவக் கண்டுபிடிப்பு.

    ஊட்ஸியின் உடலில் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகள் அவர் உடலுடன் கண்டெடுக்கப்பட்ட சாதனங்கள், எச்சங்கள் அனைத்தும் அவரது வாழ்க்கை நிலையை விளக்குவதற்கு ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவுவனவாக அமைந்திருக்கின்றன. ஊட்ஸி தனது கையில் வைத்திருந்த கோடாறியும் அம்புகளும் ஏனைய சாதனங்களும் அவர் ஒரு வீரராக இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றன. அவர் கொண்டிருந்த ஆடை அமைப்பு, ஆயுதங்கள், உடலில் இருந்த தானிய வகைகள் இவையனைத்தும் இவர் ஒரு ஷமான் – shaman (குறி சொல்பவர் ) ஆக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன. இக்கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவது இவர் உடலில் இருக்கும் சில குறிகள்.

    ஊட்ஸியின் உடலில் பச்சை குத்தப்பட்டதற்கான அறிகுறிகளை இவரது உடலை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். கால் பகுதியில் புள்ளிகள் பல குத்தப்பட்டிருப்பதையும் இவை ஏதும் நோயினால் ஏற்பட்டதல்ல என்பது பச்சைக் குத்தப்பட்ட குறிகள் என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இத்தாலியின் இப்பகுதியில் வாழ்ந்த பண்டைய மக்களின் நாகரிகத்தில் பச்சைக் குத்திக் கொள்ளுதல் என்பது குறி சொல்பவர்கள் பழக்கத்தில் இருந்து வரும் ஒரு ஐதீகமாக கருதப்படுகிறது. பச்சை குத்துதல் என்பது இந்த ஐரோப்பிய மனிதர் சார்ந்திருந்த சமூகத்திலும் இன்றைக்கு 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டே இருந்து வந்தது என்பதை அறியும் போது இதே போன்ற பச்சைக் குத்திக் கொள்ளுதல் நம் இந்திய பண்பாட்டிலும் வழக்கில் இருந்து வருவதும் இவ்விதமான பண்பாட்டு ஒற்றுமைகளும் ஆச்சரியம் கொடுக்கின்றன.

    ஊட்ஸியின் உடல் மிகப் பாதுகாப்பாக இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஊட்ஸி மம்மி இருக்கும் பகுதிக்கு பின் பகுதியில் பனிப்பகுதி போல அதிகமான குளிர் தரும் வகையில் குளிர்சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. ஊட்ஸி ஒரு கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். ஆகவே நேராகப் பார்க்க முடியாது. ஒரு கண்ணாடி வழியாகத்தான் காண முடியும். மம்மியின் உடல் எந்த வகையான பாக்டீரியாவினாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் இந்த பாதுகாப்பு அமைந்துள்ளது.

    ஊட்ஸி வைக்கப்பட்டிருக்கும் இக்கட்டிடத்தின் முதல் மாடிப்பகுதியின் மாடல் இது. (மே 2013)

    o2

    ஊட்ஸியின் உடலை புதைப்பதா எரிப்பதா அல்லது இப்படி காட்சிக்கு வைப்பதா என்ற கேள்விகளும் ஆரம்ப நிலையில் எழாமல் இல்லை. ஆனால் இவர் உடல் ஆய்வுலகத்திற்கு அளித்த பல்வேறு தகவல்கள் இவர் உடலின் அமைப்பு, பனியிலே உறைந்து மட்டுமே மம்மியாக்கப்பட்ட ஒரு உடல் என்ற வகையில் மிகத்தனித்துவம் வாய்ந்த மம்மியாக ஊட்ஸி ஆய்வுலகத்தின் கண்களுக்குத் தென்படுவதால் பொதுமக்களும் ஊட்ஸியை காண வேண்டும்; அதற்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்று முடிவாகி இப்போது நிரந்தரமாக இங்கே ஊட்ஸி காட்சிக்கு இருக்கின்றார்.

    இப்போது இப்படி இருக்கும் ஊட்ஸி..

    o3

     

    o4இப்படித்தான் இருந்திருப்பார் என அண்மைய கண்டுபிடிப்புக்களை வைத்து மாடல் செய்திருக்கின்றனர்.

    ஊட்ஸி அருங்காட்சியகத்திற்கு நானும் என் கணவரும் சென்ற போது வசந்த கால தொடக்கம். ஆனால் குளிர் 15 டிகிரி, மழைத்தூரலும் வேறு சேர்ந்து கொண்டது. அருங்காட்சியகத்தினுள்ளே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிப்பதால் நாங்கள் ஏறக்குறைய 1 மணி நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றுக் கொண்டு உள்ளே சென்று பார்த்தோம். அந்தக் குளிரில் குடை பிடித்துக் கொண்டு மழையில் நின்று கொண்டிருந்த அசௌகரியங்களெல்லாம் ஊட்ஸியை நேரில் பார்த்து அவர் பற்றிய ஆய்வு விஷயங்களை அறிந்து கொண்ட போது மறைந்து விட்டன.

    ஊட்ஸியைப் பற்றி விரிவான விவரங்கள் தரும் நூல் Otzi: The Iceman. இந்த நூல் அருங்காட்சியகத்திலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த நூலை இத்தாலி, டோய்ச், ஆங்கிலம் ப்ரென்ச் ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்து அருங்காட்சியகத்தின் மேல் மாடியில் ஒரு வாசிக்கும் பகுதி அமைத்து அங்கு வைத்திருக்கின்றனர். படங்களுடன் கூடிய அனைத்து வயதினரும் வாசித்து மகிழக் கூடிய நூல் இது. ஊட்ஸியைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் அறிந்து கொள்ள விரும்புவோர் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ பக்கமான http://www.iceman.it/ சென்று மேலும் பல படங்களும் விவரங்களும் வாசித்துப் பயனடையலாம்.

    இத்தாலியின் திரோல் மாகாணத்திற்குப் பயணம் செல்பவர்கள் மறக்காமல் சென்று பார்த்து வர வேண்டிய ஒரு அருங்காட்சியகம் இது என்பதில் சந்தேகமில்லை!

    தொடரும்

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள் – 7ம் பகுதி

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
    உன் செயலே என்று உணரப்பெற்றேன், இந்த ஊனெடுத்த
    பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை, பிறப்பதற்கு
    முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே. 1.

    இங்கு நடைபெறும் எந்தச் செயலும், நான் எனும் இந்த உயிராலோ அல்லது அவ்வுயிரைத் தாங்கும் உடலாலோ நடைபெறவில்லை, நடப்பது அனைத்தும் இறைவா உன் செயலால் என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன், இந்த ஊனுடம்பைப் பெற்று இந்த பூமியில் நான் பிறந்த பின்னர் செய்த தீச்செயல்கள் எவையும் இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நான் முந்தைய பிறப்புகளில் செய்த தீவினையால் அன்றோ எனக்கு இப்படித் துன்பங்கள் நேரிடுகின்றன.

    (இந்த இடத்தில் பட்டினத்தார் இப்பிறவியில் தீங்கு எதையும் தான் செய்யவில்லை என்றும், முற்பிறவியில் செய்த தீவினையால் இப்படி நேர்ந்தது என்று எதைக்குறித்துப் பாடினார் என்பதை விளக்க வேண்டும் அல்லவா? பட்டினத்தார் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சியை நாம் இப்போது பார்க்க வேண்டும்.

    பட்டினத்தார் திருவாரூரிலிருந்து கிளம்பி கொங்கு நாட்டை அடைந்து மெளன விரதம் பூண்டு ஊர் ஊராய் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு நாள் இரவில் ஒரு முரடனுடைய வீட்டின் முன்பு நின்று, தான் மெளன விரதம் பூண்டு பேசாமல் இருப்பதால் தன்னிரு கைதட்டி பசிக்குச் சோறு கேட்டார். அந்த முரடனுக்கு என்ன ஆத்திரமோ இவரை யாரென்று அறியாமல் கைதட்டியா சோறு கேட்கிறாய் என்று அவரை தடிகொண்டு நையப் புடைத்து விட்டான். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுவாமிகள் இனிமேல் என்னைத் தேடிக் கொண்டு வந்து யாராவது உணவு அளித்தால் அன்றி உணவு உட்கொள்ளுவதில்லை என்று முடிவு செய்து துளுவ நாட்டுக்குச் சென்று அங்கு உஞ்சேனை மாகாளம் சென்று ஒரு விநாயகர் ஆலயத்தில் உட்கார்ந்து கொண்டார்.

    அப்படி அவர் அங்கு உட்கார்ந்திருந்த காலத்தில் ஒரு நாள் இரவு, சில திருடர்கள் அவ்வூர் அரசன் பத்திரகிரியின் அரண்மனையில் திருடிக் கொண்டு வரும் வழியில் சுவாமிகள் உட்கார்ந்திருந்த கோயில் விநாயகருக்கு அணிவிக்கவேண்டுமென்று எண்ணி ஒரு விலை உயர்ந்த பதக்கத்தை இருளில் விநாயகர் என்று நினைத்து சுவாமிகளின் கழுத்தில் போட்டுவிட்டுப் போய்விட்டனர். மறு நாள் அரண்மனையில் திருட்டுப் போய்விட்டது என்று காவலர்கள் தேடிக்கொண்டு வரும்போது பிள்ளையார் கோயிலில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்த சாமியாரின் கழுத்தில் ஒரு பதக்கத்தைப் பார்த்துவிட்டு, இவரைப் பிடித்துப் பெரிதும் துன்புறுத்தினார்கள். மன்னர் முன் விசாரணை நடந்தது. சுவாமியை கழுமரத்தில் ஏற்றிவிடுமாறு மன்னன் கட்டளையிட்டான். இவரை கழுமரத்தருகில் கொண்டு சென்று கழுவிலேற்ற முயற்சி செய்கையில் அவர் இந்தப் பாடலைப் பாடி இறைவனை வழிபட்டார். அந்தக் கழுமரம் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயிற்று. மன்னன் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் என்பது கதை)

    திருவேடமாகித் தெருவிற் பயின்றெனைத் தேடிவந்து
    பரிவாகப் பிச்சை பகருமென்றானைப் பதம் பணிந்தேன்
    கருவாகும் ஓதக் கடற்கரை மேவக் கருதுமென்னை
    உருவாக்கிக் கொள்ளவல்லோ இங்ஙனே சிவனுற்றதுவே. 2.

    தாருக வனத்தில் சிவபெருமான் பிக்ஷாடனராக மண்டையோடு ஏந்தி தாருக வனத்து முனி பத்தினிகளிடம் பிக்ஷை கேட்டுப் போனது போல நானும் ஆண்டி வேடமிட்டு தெருத் தெருவாய் பிக்ஷை வேண்டி கேட்டுப் பெற்று உண்ணும் நேரம், பரிவோடு என்னை அணுகி பசிக்கிறது அன்னம் கொடு என்று என்னுடைய பிக்ஷை அன்னத்தைப் பங்கிட்டுக் கொள்ள திருவேடமிட்டு வந்த அந்த சிவபெருமானின் தாள் பணிகின்றேன். அப்படி உலகத்துக்கே பிக்ஷை அளிக்கும் சிவன் என்னிடம் வந்து பிக்ஷை கேட்டுப் பெற்ற என்னை தடுத்தாட்கொண்டு இனி பிறவி இல்லாத நிலை அளிக்கவல்லவோ, சம்சார சாகரத்தில் வீழ்ந்து கிடக்கவிருந்த என்னை அவன் தடுத்தாட்கொண்டிருக்கிறான்.

    விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன்
    கிட்டேன் அவர் உரை கேட்டும் இரேன் மெய் கெடாத நிலை
    தொட்டேன் சுகதுக்கம் அற்றுவிட்டேன் தொல்லை நான்மறைக்கும்
    எட்டேன் எனும் பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே. 3.

    சதுர்மறை எனும் நான்கு வேதங்களுக்கும் எட்டாத பரம்பொருளான ஈசன் என்னைத் தேடி வந்து இங்கு அடைக்கலம் தந்த பிறகு இவ்வுலக பந்த பாசங்களையெல்லாம் விரும்பாமல் அறவே விட்டுவிட்டேன். வீண் வம்பு பேசும் வீணர்களுடனான உறவை நீங்கிவிட்டேன். அப்படிப்பட்டவர்கள் பேசும் பேச்சுக்களையும் காது கொடுத்துக் கேளேன். இப்பிறவிக்கு நன்மை பயக்கும் நிலைமையை அடைந்து விட்டேன். சுகம் துக்கம் எதுவும் என்னை பாதிக்காத நிலையை அடைந்து விட்டேன்.

    அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவ(ஸ்)த்தை ஐந்தும்
    விட்டேறிப்போன வெளிதனிலே வியப்பொன்று கண்டேன்
    வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந்திருக்க
    எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி யிருக்கின்றதே. 4.

    எட்டு அங்கம், அதாவது #அஷ்டாங்க யோகம், *ஆறுவகையான ஆதார நிலைகளையும், @ஐந்து வகையான அவஸ்தை எனும் அனுபவத்தினையும் கடந்து மேலே மேலே உணர்வால் சென்று அந்தப் பரவெளியெனும் சொர்க்கத்தை அடைந்த போது வியப்பான காட்சி கண்டேன். அப்படி வியந்து நின்ற அந்தக் கணத்தில் சந்திர மண்டலத்தினின்றும் பொழியும் அமிழ்த பானத்தை உண்டு களித்தேன். எளிதில் கிடைத்தற்கரிய பேரின்பத்தில் என் நினைவிழந்து மூழ்கிக் கிடக்கின்றேனே.

    # அஷ்டாங்க யோகம்: எட்டு அங்கங்களாவன யம, நியம முதலான எட்டு யோகங்கள். அவை
    யம, நியம, ஆசன, பிராணாயாம, பிரத்யாகார, தாரண, த்யான, சமாதி ஆகிய யோகங்களாம்.
    *6 ஆதாரங்கள்: மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விஸுத்தி, ஆக்ஞை.
    @ 5 அவ(ஸ்)தைகள்: ஜாக்கிரம், ஸொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்.

    (யோகம் பயில்வோர் தெரிந்து கொண்டு விளக்கம் பேற வேண்டிய மார்க்கங்கள் மேற்சொன்ன எட்டு அங்க, ஆறு ஆதார, ஐந்து அவஸ்தைகளைக் கடந்து மேலே செல்லுகையில் ஆங்கே பரவேளி தோன்றும். அப்பரவேலி நடுவே வட்டவடிவான ஜோதி, அதனின்றும் தோன்றும் அமிழ்தம் என்றெல்லாம் சொல்லப்படும் அமரத்தன்மை பற்றி சுவாமி குறிப்பிடுகிறார்.)

    எரிஎனக்கென்னும், புழுவோ எனக்கெனும், இந்த மண்ணுஞ்
    சரிஎனக்கென்னும், பருந்தோ எனக்கெனுந், தான் புசிக்க
    நரி எனக்கென்னும், புல்நாய் எனக்கு என்னும், இந்நாறு உடலைப்
    பிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறெனக்கே. 5.

    நம் உயிர் குடியேறி வாசம் செய்யும் இந்த பூத உடலை எப்படியெல்லாம் வளர்த்துப் பாதுகாத்தேன். சோப்பு என்ன, பவுடர் என்ன, வாசனைக்கு செண்ட் என்ன இதன் மேலே விதவிதமாய் உடைகள் என்ன, சிறு சிராய்ப்பு ஏற்பட்டால்கூட அதைப் பார்த்துப் பார்த்து மாய்ந்து போனது என்ன, அப்படிப்பட்ட உடலை விட்டு என் உயிர் நீங்கிய பின் பிணமென பெயரிட்டு, அதிக நேரம் வைத்திருந்தால் நாற்றமெடுக்கும் என்று கொண்டு போய் கொளுத்திட அனைவரும் அவசரப்படும் இந்த உடலைப் பார்த்து அக்னி பலே எனக்கு உணவாகப் போகிறது என்று எண்ணுமாம்; இதை மண்ணில் புதைக்கட்டும் இது எனக்கு உணவாகும் என்று புழு எண்ணுமாம்; மண்ணோ இதோ இந்த உடல் எனக்குத்தான் எனுமாம்; உயரப் பறக்கும் பருந்து சரிதான் இது எனக்குத்தான் எனுமாம்; நரியானது நான் உலாவும் சுதந்திரப் பிரதேசத்துக்குத்தானே இதைக் கொண்டு வரவேண்டும், அப்போது இது எனக்குத்தான் என்று எண்ணுமாம்; கேவலாமான பிறவியான நாய் இருக்கிறதே அதுகூட இது எனக்குத்தான் வேறு யாருக்கு? என்று கேட்குமாம். இப்படி இத்தனை பேர்கள் இந்த நாற்ற உடலுக்குக் காத்துக் கிடப்பது தெரியாமல் நான் இத்தனை காலமும் இதை எப்படியெல்லாம் பேணிப் பாதுகாத்தேன்.

    அண்ணல்தன்வீதி அரசிருப்பாகும் அணிபடையோர்
    நண்ணொரு நாலு ஒன்பதாமவர் ஏவலும் நண்ணுமிவ்வூர்
    துண்என்பசிக்கு மடைப்பள்ளியான சுகமும் எல்லாம்
    எண்ணிலி காலம் அவமே விடுத்தனம் எண்ண அரிதே. 6.

    நம் உடலானது ஒரு சிற்றூர் என்று எண்ணிக் கொள்ளுங்கள். இந்த சிற்றூரை ஆளும் அரசன் நம்முடைய ஆன்மாவாகும். அந்த அரசன் உட்காரும் சிம்மாசனம் நம்முடைய இதயம். வாழ்வுக்கு உரிய *ஆறு ஆதாரங்கள் வீதிகள், அவைகளில் உலாவி வந்து, வாழ்வியல் தத்துவங்கள் **முப்பத்தியாறையும் படைகளாக எண்ணிக் கொண்டு, அந்த அரசன் பசியாற்றிக் கொள்ள மடைப்பள்ளியாக இவ்வுடலின் வயிற்றைப் பயன்படுத்திக் கொண்டு சுகமடைந்து வாழ்கிறான். இப்படிப்பட்ட வாழ்க்கையை எண்ணிப் பார்ப்பதும் சிறப்பானதே.

    (நம் உடலில் ஆறு ஆதாரங்கள் உள. இவற்றைத் சைவ சித்தாந்தத்தில் தாமரை மலராக உருவகம் செய்வர். சக்கரம் எனவும் உரைப்பர். இது நான்கு இதழ் தாமரை வடிவம் உடையது. இதன் வடிவம் நாற்கோணத்தில் முக்கோணம். இதிலிருந்து மற்ற சக்கரங்கள் இயங்குவதால் இதனை மூலாதாரம் என்றார்கள். இங்குதான் குண்டலினி சக்தி இருக்கிறது.இந்த ஆறு ஆதாரங்கள் எவை என்பதை 4ஆவது பாடலில் விளக்கியிருக்கிறோம். (திருமந்திரம் 1704ஆம் பாடல்)

    The Saiva Siddhanta analyses the universe into 36 Tattvas (principles). The 36 Tattvas arise from Maya, the material cause of the world. Suddha Maya is Maya in its primal state. From it arise the five pure principles called Siva Tattva, Sakthi Tattva, Sadasiva Tattva, Iswara Tattva and Suddhavidya Tattva. Siva functions through these five pure principles.

    என் பெற்ற தாயரும் என்னைப் பிணமென்று இகழ்ந்து விட்டார்
    பொன் பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பி விட்டார்
    கொன் பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
    உன் பற்று ஒழிய ஒரு பற்றுமில்லை உடையவனே. 7.

    இவ்வுடலை விட்டு உயிர் போயின பின்பு, இதைப் பெற்ற அன்னையும் இதை ‘பிணம்’ என்று சொல்லி விட்டாள்; பொன்னும் பொருளுமாக என்னிடம் பெற்றுக் கொண்ட மனைவி உட்பட பெண்டிரெல்லாம் இதைக் கொண்டு போங்கள் என்று உரைத்து விட்டார்; பெற்ற பிள்ளைகளோ இடுகாட்டில் நீர் நிறைந்த மண் குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு இவ்வுடலை மூன்று முறை சுற்றி வந்து அக்குடத்தை பின்புறமாக வீசி குடத்தை உடைத்துவிட்டுப் போய்விட்டார், இப்படிப்பட்ட நிலையில் இறைவா உன்னைத் தவிர எனக்கு இனி பற்றுக்கோடு யார்?

    கறையற்ற பல்லும் கரித்துணி ஆடையும் கள்ளமின்றி
    பொறையுற்ற நெஞ்சமும் பொல்லாத ஊணும் புறந்திண்ணையும்
    தரையிற் கிடப்பும், இரந்து உண்ணும் ஓடும் சகமறியக்
    குறைவற்ற செல்வம் என்றே கோல மாமறை கூப்பிடுமே. 8.

    மனித வாழ்க்கையில் எது குறைவற்ற செல்வம் தெரியுமா? வெற்றிலை, புகையிலை, சிகரெட், பீடி, பீடா போன்றவற்றைப் போட்டுப் போட்டுக் கறை படிந்த பற்கள் இல்லாமல் பளிச்சென்று விளங்கும் வெள்ளைப் பற்களும், மடிப்பு கலையாத பட்டு பீதாம்பர வஸ்திரங்கள் அன்றி அழுக்குப் படிந்திருந்தாலும் உடலை மறைக்கவோர் ஆடை; வஞ்சமில்லாததும், பொறுமையுள்ளதுமான நல்ல மனம்; தெய்வம் தந்த பூமியே படுக்கையாகவும்; பிச்சை வாங்கி உண்ண ஒரு திருவோடும் ஆக இவைகளே நிரந்தர செல்வம் என்று நம் வேதங்களும் சொல்லுகின்றன.

    எட்டுத் திசையும், பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய்
    முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம்
    கட்டிச் சுருட்டித் தங்கட் கக்கத்தில் வைப்பர் கருத்தில் வையார்
    பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே. 9.

    இந்த அண்ட பெருவெளியின் எட்டுத் திசைகளிலும், பதினாறு கோணங்களிலும் எங்கும் நீக்கமற நிலவி பரவியிருக்கும் ஜோதி ஸ்வரூபனான பரப்பிரம்மத்தை, அற்புத ஜோதியை உணர்ந்து கொள்ளாத மூடர்கள் அவை பற்றிய சுவடிகளை மட்டும் துணியில் கட்டிக் கயிற்றால் கட்டித் தங்கள் கக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பார்களே தவிர அந்த உண்மையைப் புரிந்து கொண்டு மனதில் கொள்ளாதவர்கள். இவர்கள் பட்டப் பகலை இரவு என்று கூறிடும் பாதகர்கள் ஆவார்கள்.

    (இதன் பொருள் இவ்வண்ட பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கின்ற சர்வ பரிபூரண சச்சிதானந்த பரிபூரணத்தை விளக்குகின்ற சாஸ்திர நூல்களை, புராண, இதிகாசங்களை படித்துப் புரிந்து மனதில் கொள்ளாமல் அந்த சுவடிகளை மட்டும் நூலினால் கட்டித் தங்கள் கக்கத்தில் வைத்துக் கொள்வதால், படித்துப் புரிந்து உணர்ந்து கொண்டதாய் ஆகிவிடுமா? என்பதுதான் கேள்வி. இந்தக் கருத்தை வலியுறுத்தும் ஒரு பாடல் இதோ:

    ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
    நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
    வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மானிடர்
    கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.

    தாயுமானவ சுவாமிகளும் “சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே” என்று இறைவன் குடிகொள்ளும் இடம் மனமே என்பதை விளக்குவதையும் இங்கு சிந்திக்கலாம்.)

    உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து ஐந்துண்டு உரைப்படியே
    செருக்கித் தரிக்கத் திருநீறுமுண்டு தெருக்குப்பையில்
    தரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு எந்தச் சாதியிலும்
    இரக்கத் துணிந்து கொண்டேன் குறையேதும் எனக்கில்லையே. 10.

    என் நாவு எப்போதும் உரைக்க திரு ஐந்தெழுத்து இருக்கிறது; இறைவனை எண்ணி பெருமைப்பட்டு நெற்றியில் தரிக்கத் திருநீறும் இருக்கிறது; மற்றவர்கள் வீசியெறிந்த கரித்துணி குப்பைமேட்டில் இருக்கிறது நான் எடுத்து உடுத்துக் கொள்ள; பசியெடுத்தால் யார் எவர் எந்த சாதி என்பதைப் பொருட்படுத்தாமல் பிக்ஷை கொள்ளவும் மனம் துணிந்து விட்டேன், பின்னர் எனக்கு என்ன குறை?

    (இன்னும் உண்டு)

    Share
  • சீதாயணம் படக்காட்சி ~ [3]

    சி. ஜெயபாரதன், கனடா

    (முதல் காட்சி)

     

    அன்புள்ள நண்பர்களே,

    “சீதாயணம்” என்னும் எனது நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரையும் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாப நிகழ்ச்சி இது.

    அன்புடன்,
    ஜெயபாரதன், கனடா

    +++++++++++++

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

    Scene -4

    Scene -5

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 94 (21.10.13)

     

    மலர் சபா

     

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    புகார்நகரின் வாயிலைக் கடத்தல்

    அதன் பின்
    மலையிலிருந்து புறப்பட்டுப்
    பாய்ந்து வரும் பேராறு போல
    உலகோர் வந்து போவதற்கு ஏற்ப
    மிகவும் அகலமாக அமைக்கப்பட்டிருந்த
    புகார் நகர வாயிலைக்
    கடந்து சென்றனர்
    கோவலனும் கண்ணகியும்.

    இலவந்திகைப் பள்ளியின் எயிலின் பின்புறத்தே போதல்

    உருவம் இல்லாத காமன் எனும்
    குறுநில மன்னன்
    சோழமன்னனுக்குத் திறையாக
    இளவேனிலையும் தென்றலையும்
    வழங்கியது போலவே
    பலவகை மலர்களை அடுக்கிய
    நல்லதொரு மரநிழலை உடைய
    இலவந்திகை எனும்
    எழில்மிகு சோலையின்
    மதிற்புறத்தைக் கடந்தனர்.

    “காவிரியின் கடைமுகம் கழிந்து, வடகரையின் வழியாக மேற்கு நோக்கி வழிக்கொள்ளல்”

    தாழ்ந்து படர்ந்த சோலை
    இருமருங்கிலும் சூழ்ந்து நிற்கும்
    காவிரிப் பெருங்கரையில்
    புனலாடச் செல்வதற்கென்று
    அமைக்கப் பட்டிருந்த பெருவழியில் சென்று
    நீராடும் துறையைக் கடந்து,
    வளம் சார்ந்த காவிரியின்
    வடகரையில் அமைந்திருந்த
    சோலையின்வழியே
    காலைப்பொழுதில் நீராடிச்செல்பவர்
    மறைந்து மறைந்து போவதைப்போல்
    கடந்து சென்றனர்.
    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 26 – 35

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பால்வீதி மையப் பூதக் கருந்துளை நோக்கிப் பேரசுர அகில வாயு முகில் விரைகிறது.

    Supermassive Blackhole

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    காலவெளிக் கருங்கடலில்
    கோலமிடும்
    ஒளிமந்தைத் தீவுகள் !
    காலாக்ஸி மந்தையில்
    சுருள் சுருளாய் சுற்றுபவை
    கால்களா ? வால்களா ? கைகளா ?
    ஆதி அந்தம் அறிய முடியா
    அகில வலைக் கடலில்
    ஆக்டபஸ் போல் நீந்துபவை
    காலாக்ஸி ஆழிகள் !
    மையத்தில் ஒளிக்கதிர் வீசும்
    பூதக் கருந் துளைகள்
    பிரபஞ்சக் கலைச் சிற்பியின்
    கருமைக் களஞ்சியம் !
    அகிலக் கருங்கடலில்
    அசுரத் தீவுகளாய்  ஊர்ந்திடும்
    பூதத் திமிங்கலங்கள் !
    தூங்கியும் தூங்காத உடும்புகள் !
    விண்மீன் விழுங்கிகள் !
    காலாக்ஸிகள் பின்னலாம் !
    விண்மீன்கள் பிறக்கலாம் !
    ஒளியை உறிஞ்சிக்
    கருமைப் பிண்டமாய் மாற்றும்
    மந்திரவாதி
    மர்மக் கருந்துளை !

    ++++++++++++++++++

    Fig 1 Big Bang & Galaxy Formation

    2012 இறுதி மாதங்களில் ஸ்லோன் புள்ளியியல் விண்வெளித் தேர்வில் [Sloan Digital Sky Survey III] கண்டு பிடித்து, நூற்றுக் கணக்கான விண்மீன்கள் நமது பால்வீதி காலக்ஸியின் மையத்தை நீண்ட சுழிச் சுற்று வீதிகளில் வலம் வருகின்றன என்று வெளியிட்டுள்ளது.   இந்தச் சுற்று வீதிகளில் அறியும் விளக்கம் :  இந்த விண்மீன்கள் யாவும் பால்வீதித் தட்டின் [Milky Way Bar] ஒரு பகுதி என்பதே !   இந்த ஒளிமந்தை தட்டுகள் காலக்ஸி வடிவமைப்பைத் தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருப்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.

    டேவிட் நிதேவர் [மிச்சிகன் பல்கலைக் கழகம்] [Sloan Digital Sky Survey III (SDSS III]

    பால்வீதித் தட்டின்  [Milky Way Bar]  இருப்பைப் பல்வேறு தனித்துவக் கோடுகளிலிருந்து நாங்கள் கண்டறிவோம். ஆயினும் எந்த விண்மீன்கள் தட்டின் பகுதியில் உள்ளன என்பதும், அவை என்ன வேகத்தில் சுற்று கின்றன என்பதும் எங்களுக்குத் தெரியாது.   தட்டுகள் உருவான முறை அவற்றின் பண்பாடுகளை எடுத்துக் கூறும்.    காலக்ஸி மையக் கருந்துளையைச் சுற்றும் விண்மீன்கள், காலக்ஸியின்  மற்ற விண்மீன் களை விட எந்த விதத்தில் சார்புள்ளவை, அல்லது வேறுபட்டவை  என்பதை அறிய முடியும்.

    கெயில் ஸஸோவாஸ்கி  [National Science Foundation, Ohio State University]

     

    Gas Flow towards Milky Way Centre

     

    ஈசா விஞ்ஞானிகளின் விண்ணோக்கி மூலம் பார்த்துக் கூறிய ஓர் உன்னத முதற் கண்டுபிடிப்பு

    தென்  அமெரிக்காவின் சில்லியில் உள்ள மிகப்பெரும் விண்ணோக்கியில் ஈசா வானியல் விஞ்ஞானிகள் கூர்ந்து நோக்கி ஓர் உன்னதக் கண்டு பிடிப்பை முதன்முதல் அறிவித்தனர்.   அந்த அரிய புதிய கண்டு பிடிப்பு என்ன ?   பூமியைப் போல் பன்மடங்கு நிறையுள்ள ஒரு பூத வாயு முகில் நமது பால்வீதி ஒளிமந்தையின் மையக் கருந்துளை நோக்கி நகர்ந்து, விரைவாக்கம் [Acceleration] மிகுவதைக் கண்டு பிடித்தனர்,   இதுதான் முதல் முறை விண்ணோக்கி மூலம் விஞ்ஞானிகள் அந்த அற்புதப் பூத நிறைக் கருந்துளை ஈர்ப்பைத் தெளிவாகக் கண்டுள்ளார்.    அதற்கோர் விளக்கம் :   அந்த வாயு முகில் பிண்டம்  அண்டையில் இருக்கும் பெருநிறை விண்மீன்களிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும்.   அந்த விண்மீன்கள் உள்ளே உட்புயல்கள் எழுந்து அவற்றின் நிறை அதிவேகத்தில் இழந்து குறைவாகி வருகிறது.   அம்மாதிரி விண்மீன்கள் முறிவு, முன்பு அறியப் பட்ட ஒரு மையக் கருந்துளையைச் சுற்றும் இரட்டை விண்மீன்கள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து சிதைந்தவையே.   அவ்விதம் வெளி யேறிய வாயு முகிலே நமது பால்வீதி மையக் கருந்துளை நோக்கி விரைந்து செல்கிறது என்று கண்டுள்ளார்.

    Fig 1C How Galaxy Works

    கடந்த 20 ஆண்டுத் திட்டத்தில் ஈசாவின் விண்ணோக்கிகளைப் பயன்படுத்தி, காலக்ஸி மையத்தை நோக்கி நகரும் விண்மீன்களைத் தொடர்ந்து கண்ணோக்கி, ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் விண்வெளித் தாரகைப் பௌதிக விஞ்ஞானி ரைஹார்டு கென்ஸல் [Reinhard Genzel of Maxs Plank Institute of Extraterrestrial Physics] ஒரு தனிப்பட்ட புது வடிவண்டம், மையக் கருந்துளையை நோக்கி நெருங்குவதைக் கண்டிருக்கிறார்.   கடந்த 7 ஆண்டுகள் கவனித்ததில் அதன் வேகம் வளர்ந்து, மணிக்கு 8 மில்லியன் கி.மீ. ஆக இரட்டித்துள்ளது.   தற்போது [2013]  அது மையக் கருந்துளையின் “விளைவுத் தொடுவான்,”  [Event Horizon]  தடத்திலிருந்து சுமார் 39 ஒளி மணி [Light -Hours] தூரத்தில் நகர்கிறது.   இந்த தூரம் வானியல் நோக்குப்படி மையக் கருந்துளைக்கு மிக நெருக்கமான அரங்கம்.  அந்த வடிவண்டம் மற்ற அண்டை விண்மீன்களை விட குளிர்ந்த உஷ்ணத்தில் [280 டிகிரி செல்சியஸ்] இருப்பது.   பெரும்பாலும் ஹைடிரஜன், ஹீலிய வாயுக்கள் கொண்டவை.  பூமியைப் போல் 3 மடங்கு நிறை யுடையது.   மையக் கருந்துளையின் திணிவு அடர்ந்த அரங்கத்தில் அயனியான வாயு முகில் [Ionized Gas Cloud] விண்மீன்களின் தீவிர புறவூதா கதிர்வீச்சில்  ஒளிமயமாய்த் தோன்றுகிறது.

    கருந்துளையைச் சுற்றியுள்ள சூடான வாயுவை விட விரைந்து போகும் வாயு முகிலின் தற்போதைய திணிவு [Density] மிக அதிகமாய் உள்ளது.   ஆனால் வாயு முகில் தீவிரப் பசியோடு உள்ள மையக் கருந்துளையை வெகு அருகில் நெருங்கும் போது,  பெருகிச் செல்லும் புற அழுத்தம் முகிலை அழுத்திச் சுருக்குகிறது.    அதே சமயம், நமது சூரியனை விட 4 மில்லியன் மடங்கு ஈர்ப்பு  ஆற்றல் கொண்ட மையக் கருந்துளையின் இழுப்பு, சுற்று வீதியில் உள்ள  முகிலை நீளச் செய்து தன்னை நோக்கி உறிஞ்சி விரைவாக்கம் செய்கிறது.

    Stars Orbiting Milkyway

    “சமீபத்திய ஹப்பிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் வானியல் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் பிரபஞ்சச் சவாலாகி விட்டன !  காரணம் அது ஒவ்வொரு காலாக்ஸியின் மையத்திலும் பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பதைக் காட்டி விட்டது !”

    ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science Editor)

    “கருந்துளைகள் மெய்யாகக் கருமை நிறம் கொண்டவை அல்ல !  அவை ஒளித்துகள் மினுக்கும் வெப்பக் கதிர்களை (Quantum Glow of Thermal Radiation) வீசுபவை.

    ஸ்டீஃபென் ஹாக்கிங் (1970)

    பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன ! அதை வேறு விதமாகக் கூறினால், காலாக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது ! அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது ! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் !

    The Largest black hole

    வானியல் மேதை எட்வின் ஹப்பிள்

    பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள் அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் !  அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன !  எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன் எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான் கருந்துளை.  அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure & Density of a Black Hole are Infinite) !

    விண்வெளி விடைக் கைநூல் (Ths Handy Space Answer Book)

    இந்த பௌதீக உலகத்திலே மர்மத்தைத் தாண்டிச் சென்று குறிப்பிடாத ஒரு மர்மம் இல்லை ! அனைத்து அறிவு வீதிகளும், நியதிகளின் தனி வழிகளும், சிந்தனை யூகிப்புகளும் முடிவிலே, மனித மகத்துவம் தொட முடியாத ஒரு பிரதமக் கொந்தளிப்பை (Primal Chaos) நோக்கிச் செல்கின்றன.”

    லிங்கன் பார்னெட் (பிரபஞ்சம் & டாக்டர் ஐன்ஸ்டைன்)

    பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்வுச் சுற்று ஆயுள் முடிந்த பின் பெருநிறை விண்மீன்கள் (Massive Stars) ஒருவேளை சிதைந்து, ஒற்றைப் பூதநிறை வடிவுக் (Super Massive Object) கருந்துளைகள் நிலை பெறத் தோன்றியிருக்கலாம்.

    ஆன்ரியா கீஸ், வானியல் பௌதிகப் பேராசிரியை (Andrea Ghez, UCLA)

     

    Fig 1A Smith Gas Cloud

    பால்வீதி மையத்தை நோக்கிப் பயணம்

    நூறாயிரம் ஒளியாண்டு அகலமான நமது பால்வீதி காலாக்ஸி போல் மில்லியன் கணக்கான காலாக்ஸி ஒளிமந்தைகள் பிரபஞ்ச விண்வெளிக் கடலில் நகர்ந்து கொண்டு வருகின்றன.  மனத்தாலும் படத்தாலும் கற்பனை செய்ய முடியாத அந்த ஒளிமயத் தாம்பாளத்தில் கோடான கோடி விண்மீன்கள் காலாக்ஸி மையத்தைச் சுற்றி வருகின்றன.  பேரசுர ஈர்ப்பாற்றல் கொண்ட அத்தனை கோடி விண்மீன்கள் காலாக்ஸியின் பின்னல் வலையிலிருந்து தப்பி ஓடிவிடாதபடி அதன் மையத்தில் மாயமான புதிரான ஓர் ராட்சத விசையின் கவர்ச்சி இருக்க வேண்டும் என்று பல்லாண்டுகளாக வானியல் விஞ்ஞானிகள் ஊகித்து வந்தார்கள்.  2005 ஆம் ஆண்டில் அந்த மர்மான மைய ஈர்ப்புவிசை என்ன வென்று விஞ்ஞானிகள் தெளிவாகக் கண்டறிந்தனர்.  அது ஒரு பூதக் கருந்துளை என்பது உறுதியாக அறியப்பட்டது.  நமது பால்வீதி ஒளிமந்தை பூமியிலிருந்து 26,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  அதன் அகலம் சுமார் : 100,000 ஒளியாண்டு.  அதில் உள்ள விண்மீன்கள் எண்ணிக்கை சுமார்: 100 பில்லியன் ! நமது பரிதி அவற்றில் ஒன்று !

    Milkyway -1

    1999 ஆம் ஆண்டில் முதன்முதல் துல்லியமாக பரிதி பால்வீதி காலாக்ஸியில் ஒருமுறைச் சுற்றும் காலாக்ஸி ஆண்டு காலத்தை (A Galactic Year = 226 Million Years) 226 மில்லியன் ஆண்டுகள் என்று விண்வெளியில் அளந்து கண்டிருக்கிறார்.  இதே இடத்தில் முன்பு பரிதி மண்டலம் இருந்த போதுதான் உலகத்தில் ஏராளமான பல்வேறு டைனோஸார்ஸ் பூமியில் உலவி வந்தன !  இதுவரைப் பரிதி மண்டலம் சுமார் 20 அல்லது 25 சுற்றுக்கள் பால்வீதி மையத்தைச் சுற்றி விட்டது என்று ஊக்கிக்கப் படுகிறது !

    இப்போது ரேடியோ தொலைநோக்கியைப் (Radio Telescope) பயன்படுத்தி வானியல் விஞ்ஞானிகள் ஹப்பிள் தொலைநோக்கி கணக்கிடுவதைப் போல் 500 மடங்கு துல்லியமாக அண்டவெளி வடிவுகளை, அவற்றின் இடை வெளித் தொலைவுகளை (Celestical Bodies & Distances) அளந்து விடுகிறார். பால்வீதி ஒளிமந்தையில் பரிதி மண்டலக் கோள்கள் சுற்றியதை அவ்விதம் கணித்ததில், அவற்றின் சுற்று வேகம் (Orbital Speed) விநாடிக்கு 135 மைல் என்று அறிந்திருக்கிறார். அதாவது பால்வீதியைப் பரிதி மண்டலம் ஒருமுறைச் சுற்ற சுமார் 226 மில்லியன் ஆண்டுகள் எடுக்கின்றன.

    Milky Way Galaxi -1

     

    பால்வீதி காலாக்ஸியின் விபரங்கள்

    நமது பால்வீதி ஒளிமந்தை ஒரு சுருள் காலாக்ஸி (A Spiral Galaxy).  அதன் வளைவுக் கரங்கள் “எரியும் கிருஷ்ணச் சக்கிரம்” போல் சுருளாய் மையத்தி லிருந்து தொடங்குகின்றன. ஒரு கரத்தில் உள்ள பரிதி மண்டலம் பால்வீதி மையத்திலிருந்து 26,000 ஒளியாண்டு தூரத்தில் சுற்றி வருகிறது.  பால்வீதி மையத்தைப் பரிதி மணிக்கு 486,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது.  பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு வடிவும் (Object) பிரபஞ்சம் சீரான விரைவாக்க வீதத்தில் (Constant Accelerating Rate) விரிந்து வருவதால். ஒன்றை விட்டு ஒன்று நகர்ந்து கொண்டே வருகிறது.

    பரிதி மண்டல அளப்பின் போது விஞ்ஞானிகள் பால்வீதி மையத்தின் அருகே இருக்கும் “சாகிட்டேரியஸ் A” (Sagittarius A) என்னும் ஓர் விண்மீனைக் குறிவைத்தார்.  இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் [1988] அந்த விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டது.  பத்து நாட்கள் தொடர்ந்து தொலைநோக்கி மூலம் அந்த விண்மீனின் நகர்ச்சியை மற்ற விண்மீன்கள் நகர்ச்சிக்கு ஒப்பாக அளந்தார்கள்.  அவர் குறிவைத்த “சாகிட்டேரியஸ் A” விண்மீனின் ஒப்பியல் நகர்ச்சித் தூரம் மிக மிகச் சிறியது.

    fig-1d-our-milky-way-galaxy-details

    அதாவது பரிதி போல் மையத்தைச் சுற்றும் வேகம் (விநாடிக்கு 135 மைல்) இல்லாமல் “சாகிட்டேரியஸ் A” மையத்தை மிக மிகக் குன்றிய வேகத்தில் சுற்றுவதால் மையத்தில் பேரசுரத் திணிவுள்ள கருந்துளை ஒன்றிருப் பதற்குச் சான்று அளித்துள்ளது.  அந்த மையக் கருந்துளையின் அசுர நிறை நமது பரிதியின் நிறையைப் போல் 2.6 மில்லியன் மடங்கு என்று கணிக்கப் பட்டுள்ளது !

    நமது பரிதியானது பால்வீதி மையத்தை நோக்கியோ அல்லது விலகியோ காலாக்ஸித் தளமட்டத்திற்கு (Galactic Plane) மேலோ அல்லது கீழோ நகர்ந்து வருவதாக அறியப் பட்டுள்ளது.  அவ்விதம் பரிதி மேலும், கீழும் ஏறி இறங்கும் ஒரு சுற்றியக்கத்துக்கு 64 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன !  மேலும் பால்வீதி ஒளிமந்தை “விர்கோ குழுக் கொத்து” (Virgo Cluster) ஈர்ப்பாற்றலால் கவரப் படுகிறது என்பதும் அறியப்பட்டிருக்கிறது.பொதுவாக நமது பால்வீதி ஒளிமந்தையின் காந்தக் களம் நமது பரிதி மண்டலத்தைக் காலாக்ஸியிலிருந்து அடிக்கும் புயலிலிருந்து பாதுகாக்கிறது.

    fig-1e-the-milky-way-system

    பால்வீதி ஒளிமந்தை மையத்தின் நடுக்கரு

    பால்வீதி காலாக்ஸியின் நடுக்கருத் தோற்றம் விண்மீன்கள் பிறப்பிக்கும் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு அலைவரிசைகளில் (Invisible Wavelengths) இருக்கும் ஓர் அரங்கமாக அறியப்பட்டுள்ளது.  சிவப்பு நிறம் ரேடியோ அலை எழுச்சியைக் காட்டும்.  பச்சை நிறமுட்சிவப்பு நடுநிலைக் கதிர்வீச்சைக் காட்டுகிறது.  நீல நிறம் எக்ஸ்-ரே வீச்சைக் காட்டுகிறது. (படத்தைப் பாருங்கள்)

    “பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்வுச் சுற்று ஆயுள் முடிந்த பின் பெருநிறை விண்மீன்கள் (Massive Stars) ஒருவேளை சிதைந்து, ஒற்றைப் பூதநிறை வடிவுக் (Super Massive Object) கருந்துளைகள் நிலை பெறத் தோன்றியிருக்கலாம்.” என்று காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிகப் பேராசிரியை ஆன்ரியா கீஸ் கூறுகிறார்.  கீஸின் ஆராய்ச்சிக் குறிக்கோள்கள் யாவும் விண்மீன்கள், அவற்றைச் சுற்றும் கோள்கள் ஆகியவற்றின் மூலத் தோற்றத்தை நோக்கியே சென்றன.  அத்துடன் அவரது ஆராய்ச்சிகள் காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பிண்டத்தின் பரிமாற்றம், இயற்கைப் பண்பாடு (Distribution & Nature of Matter at the Center of Galaxy) பற்றியும் இருந்தன.  புது நோக்கு முறையைப் பயன்படுத்தி தூசிமிக்க பால்வீதி மையத்தைத் துருவி ஆராய்ந்து, பற்பல விண்மீன்கள் விரைவாகச் சுற்றி வரும் ஒரு கருந்துளை வீற்றிருப்பதைக் கண்டார்.  அது ஓர் சாதாரண கருந்துளை இல்லை.  நமது பரிதியப் போல் பல கோடி மடங்கு பேராற்றல் கொண்ட பூதக் கருந்துளை அது !

    fig-2-our-huge-milky-way-galaxy

    பால்வீதி மையத்தில் உள்ள கருந்துளை நமதி பரிதியைப் போல் 3 மில்லியன் மடங்கு பெருநிறை கொண்டது !  அது சாகிட்டேரியஸ் விண்மீன் கொத்துக்களில் (Constellation of Sagittarius) உள்ளது.  நமது பால்வீதி காலாக்ஸி மைய்த்தில் இருக்கும் கருந்துளை “சாக்கிட்டேரியஸ் A” என்று அழைக்கப் படுகிறது.

    1995 ஆம் ஆண்டிலிருந்து கீஸ் ஹவாயியில் உள்ள மௌனா கியா மலை மீதிருக்கும் 10 மீடர் தொலைநோக்கியில் பால்வீதி மையத்தின் அருகில் காணப்படும் சுமார் 200 விண்மீன்களின் நகர்ச்சியை ஆராய்ந்து வந்தார்.  காலாக்ஸி மையத்தின் அருகில் 20 விண்மீன்கள் கருந்துளையை மணிக்கு 3 மில்லியன் மைல் படுவேகத்தில் சுற்றுவதைக் கண்டார்.  அந்த வேகம் சாதாரண விண்மீன் வேகத்தை விட 10 மடங்கு வேகமாகும்.  கீஸின் கண்டு பிடிப்பு பிரபஞ்சத்தின் கோடான கோடிப் பெரும்பான்மையான காலாக்ஸி களின் மையத்தில் பூதப் பெருநிறைக் கருந்துளை ஒன்று உள்ளது என்பதற்கு உதவுகிறது.   அத்துடன் கருந்துளை களின் நிறையும் அவற்றின் இயற்கைப் பண்பாடும் அதன் பெருவ டிவத்தைச் சார்ந்தவை என்பதும் அருகில் உள்ள காலாஸிகளை உண்டாக்கியவை என்பதும் புலனாயிற்று.

    Our Milky Way Galaxy

    fig-3-a-galactic-core

    பிரபஞ்சக் கருந்துளைகள் ஆக்கவும் செய்யும் ! அழிக்கவும் செய்யும் !  அவை அருகில் அகப்படும் விண்மீன்களையும், வாயு முகில்களையும் உறிஞ்சி விழுங்கி விடும் !  அப்போது அந்த நிகழ்ச்சியில் அசுரச்சக்தி தூள்கள் உள்ள உந்து ஒளிக்கதிர்களை (Jets of Super High Energy Particles & Radiation) கருந்துளைகள் வீசும் !  அந்த ஒளிக்கதிர் உந்து வீச்சுகள் பல மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் விண்வெளியில் நீள்பவை !  அவையே பிண்டமும் சக்தியும் அளித்துக் காலாக்ஸி ஒளிமந்தைகளை தோற்றுவிக்கும் விதைகள் என்றும் அறியப் படுகின்றது.

    காலாக்ஸிகள் பிரபஞ்ச வரலாற்றின் அறிகுறிச் சின்னங்கள் !

    பிரபஞ்சத்தில் கோடான கோடி விண்மீன்கள் சுற்றும் மந்தை மந்தை யான காலாக்ஸிகள் அகிலத்தின் அடிப்படை அரங்கம் (Basic Unit of Cosmology) !  அவற்றில் இருப்பவை பெரும்பாலும் : எண்ணற்ற விண்மீன்கள், வாயுக்கள், தூசி துணுக்குகள், பேரளவில் கரும்பிண்டம் (Dark Matter) ! பூகோளத் தளத்திலிருந்து பிரபஞ்ச விளிம்புவரை தொடும் காலாக்ஸிகள் மட்டும்தான் பிரபஞ்சத்தின் ஆதிகால மூல வரலாறுகளை விளக்கும் பூர்வாங்க “மைல்கற்கள்” அல்லது “அறிகுறிச் சின்னங்கள்” (Signposts) !  காலாக்ஸி ஒன்றில் பில்லியன் கணக்கில் விண்மீன்களும் மற்றும் சில வாயுக்களும், கருமைப் பிண்டங்களும் (Dark Matter) ஈர்ப்பாற்றலால் பின்னிக் கொண்டிருக்கின்றன !  விலக்கித் தள்ளும் “கருமைச் சக்தியால்” (Repulsive Dark Energy) மந்தை காலாக்ஸிகள் நில்லாமல் பிரபஞ்ச விளிம்பை விரித்துக் கொண்டு விரைவாய்ச் செல்கின்றன.  வாயுக்கள் நிரம்பச் செழித்து இன்னும் புதிய விண்மீன்கள் உருவாகும் நமது பால்வீதி காலாக்ஸி சுருள் வடிவைக் (Spiral Shaped Milkyway) கொண்டது.  நீள்வட்ட காலாக்ஸியில் (Elliptical Galaxy) வாயுக்கள் கிடையா.  மற்றும் பால்வீதிக்கு அருகில் “ஆப்பம்” போன்ற தட்டு லென்ஸ் காலாக்ஸியும் (Lenticular Galaxy), வடிவீன காலாக்ஸியும் (Irregular Galaxy), ஸாகிட்டாரியஸ் குள்ள காலாக்ஸியும் (Sagittarius Dwarf Galaxy) பல்வேறு வடிவத்தில் உள்ளன.

    fig-5-spectacular-view-in-the-universe

    பிரபஞ்ச காலக்ஸிகள் எப்படித் தோன்றின ?

    அகிலவியல் தத்துவங்களின் (Cosmology) விளக்கங்கள் வானியல் தொலைநோக்குகளின் தேடல் மூலமாக விரைவாக விருத்தியாகும் போது, பிள்ளைப் பிராந்தியத்தில் பிரபஞ்சத்தின் (Infant Universe) பிண்டமானது எவ்வித யந்திரவியல் நியதியில் ஒன்றாய்ச் சேர்ந்தன என்பதை விஞ்ஞானிகள் இப்போது கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.  நமக்கு எழும் கேள்வி இதுதான் : எவை முதன்முதலில் தோன்றியன ? காலாக்ஸிகளா ? விண்மீன்களா ? அல்லது கருந்துளைகளா ?  பிள்ளைப் பிரபஞ்சம் ஆதியில் பல்லாயிரக் கணக்கான டிகிரி உஷ்ணமுள்ள வாயுக்களும், கருமைப் பிண்டமும் (Dark Matter) சீராகக் கலந்திருந்த கடலாக இருந்துள்ளது.  கண்ணுக்குப் புலப்படாத, மர்மான, பிரதானமான பெரும்பிண்டம் இருந்ததற்குக் காலாக்ஸிகளின் மீது உண்டான பூத ஈர்ப்பியல் பாதிப்பே மறைமுக நிரூபணங்களாய் எடுத்துக் கொள்ளப் பட்டன.  ஆயினும் காலாக்ஸிகள், விண்மீன்கள், கருந்துளைகள் எப்படி ஒருங்கே சேர்ந்திருந்தன என்பதுதான் விஞ்ஞானிகளைச் சிந்திக்க வைக்கும் பிரபஞ்சத்தின் புதிர்களாகவும், மர்மமாகவும் இருக்கின்றன !

    fig-7-quasar-brightest-object

    பிரபஞ்சத்தின் நுண்ணலைப் பின்புலத்து விளைவுகளின் (Microwave Background Effects) மூலம் ஆராய்ந்ததில், பிரபஞ்சம் குளிர்ந்திருந்த போது, பிண்டம் ஒன்றாய்த் திரண்டு, பெரு வெடிப்புக்குப் பிறகு 380,000 ஆண்டுகள் கழிந்து “பளிங்குபோல்” (Transparent) இருந்தது என்று கருதுகிறார்கள் !  பெரு வெடிப்புக்குப் பின் 1 பில்லியன் ஆண்டுகள் கடந்து, பிரபஞ்சத்தின் கட்டமைப்புகளான விண்மீன்களும், காலாக்ஸிகளும் உருவாயின என்று கருதப்படுகிறது.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Common are Black Holes ? & How Did the Milky Way Galaxy Form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. Daily Galaxy – Cataclysmic Orbit – Our Solar System’s Journey Through the Milky Way Posted By : Luke McKinney [Sep 26, 2008]
    21 Daily Galaxy -GAIA Space Probe – Mapping the Family Tree of the Milky Way Posted By : Casey Kazan (July 2, 2007]
    22 Daily Galaxy – Hubble’s Secret – Orbiting the Milky Way Posted By : Casey Kazan [Dec 22, 2008]
    23 Daily Galaxy – 18 Billion Suns – Biggest Black Hole in the Universe Discovered Posted By Rebecca Sato [Dec 30, 2008]
    24. Daily Galaxy – Journey to the Center of the Milky Way Postd By : Casey Kazan (Jan 12, 2009)

    25.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/10/stars-orbiting-milky-ways-core-act-as-a-giant-mixer-for-the-galaxy.html  [October 15, 2013]

    26.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/10/violent-supermassive-black-hole-engine-observed-generating-huge-spiral-structure-at-galaxy-center.html   [October 16, 2013]

    27.  http://www.dailygalaxy.com/my_weblog/2013/10/image-of-the-day-colossal-cosmic-cloud-accelerating-towards-milky-ways-supermassive-black-hole.html [October 16, 2013]

    28.  www.dailygalaxy.com/my_weblog/2013/10/violent-supermassive-black-hole-engine-observed-generating-huge-spiral-structure-at-galaxy-center.html  [October 16, 2013]

    29.  http://www.spacedaily.com/reports/Gravitational_waves_help_understand_black_hole_weight_gain_999.html [October 18, 2013]

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) (October 19, 2013)

    Share
  • புரிந்துணர்வு ஒப்பந்தம்!

    மதுரையைச் சேர்ந்த லாப நோக்கற்ற சமூக முனைப்பு நிறுவனமான நேடிவ்லீட் பௌண்டேஷன் (Nativelead Foundation – N L F ), எஸ்.ஏ.பி லேப்ஸ் இந்தியா ( SAP Labs India) என்ற ஜெர்மனியைத் தலைமை இடமாகக் கொண்ட பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

    இது எஸ்.ஏ.பி லேப்ஸ்-இன் `நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணர்வு’ (Corporate Social Responsibility) திட்டத்தின் ஓர் அங்கமாகும். இந்த உடன்படிக்கையின் படி நேடிவ்லீட்( NLF) ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் 20 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் மத்தியில் தொழில் முனைப்பு பற்றிய பலவகையான பயிற்சிகளை மேற்கொள்ளும். இதன் நோக்கம் இந்திய கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகளை உலக சந்தைக்குக் கொண்டு வருவதாகும். புது யுக தொழில் முனைப்புகளை ஊக்குவிப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

    நேடிவ்லீட் நிறுவனம், பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் கல்வி முடித்த இளைஞர்கள் மத்தியில் புதிய தொழில்களில் முனைவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஊக்குவித்து அதற்கான பயிற்சிகள் மற்றும் தொடர்புளை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

    அதன் மூன்று ஆண்டு திட்டத்தின்படி இப்பிராந்தியத்தில் 100 கல்லூரிகளில் பயிலும் ஒரு லட்சம் மாணவர்கள் மத்தியில் தொழில் தொடங்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி 50 உலக தரம்வாய்ந்த இந்திய கண்டுபிடுப்புகள் மற்றும் தயாரிப்புகளை உலக சந்தைக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளும்.

    நிகழ்ச்சியில் பேசிய NLF நிறுவனத்தின் இயக்குனர் R சிவராஜா கூறியதாவது, இன்னும் சில வருடங்களில் இந்தியாவின் இளைஞர்களின் எண்ணிக்கை மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது மிக அதிகமாக இருக்கும் என கணக்கிடப் பட்டுள்ளது. இது நாட்டுக்கு ஒரு பெரிய சக்தியாக இருந்தாலும் இந்த இளைய சமுதாயத்திற்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றார்.
    .

    அதை எதிர் கொள்வதற்கான ஒரே வழி இப்போதிருக்கும் இளைஞர்கள் மத்தியில் தொழில் முனைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைத் தொழில் தேடுபவர்கள் என்ற நிலையில் இருந்து வேலை கொடுப்பவர்கள் என்ற நிலைக்குக் கொண்டு வருவதாகும் என்றார்.

    நேடிவ்லீட் நிறுவனத்தின் இத் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் எஸ்.ஏ .பி (SAP) நிறுவனம் தனது அதிநுட்ப கண்டுபிடிப்பான எஸ் .ஏ.பி ஹானா (SAP Hana technology) தொழில் நுட்பம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதைப் பயன்படுத்தி மாணவர்கள் பல சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடுப்புகளை மேற்கொள்ள வழிவகுக்கிறது.

    இதன்படி எஸ்.ஏ .பி (SAP ) நிறுவனத்தின் பணியாளர்கள் நேடிவ்லீட் ஒப்ந்தம் செய்திருக்கும் கல்லூரி மாணவர்களுடன் மூன்று கட்டமாக தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அவையாவது கற்பித்தல், புதிய உத்திகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் உதவுதல் மற்றும் அத்தகைய தேர்ந்த உத்திகளின் அடிப்படையில் புதிய தொழில்களைத் தொடங்க உதவுதல் ஆகியனவாகும்.

    நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.பி யின் துணை தலைவர் மாத்யு தாமஸ் கூறும் போது எஸ்.ஏ.பி ஆனது மாணவர்களைத் தொழில்முனைவோர் ஆக்குவதை அதன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் முக்கிய அங்கமாக கொண்டுள்ளது என்றும் அதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதலையும் கொடுக்க தயாராக உள்ளது என்றும் கூறினார்.

    எஸ்.ஏ.பி இன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய தொழில்களைத் தொடங்க தேவையான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் வசதியை இந்த சமூகப் பொறுப்புணர்வு திட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதே அதன் நோக்கம் ஆகும் என்றார்.

    நேடிவ்லீட் உடன் ஆன ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் நாட்டில் மாணவர்கள் தொழில்முனைவோராக தேவையான ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் கொடுத்து அவர்களுக்கும் நாட்டுக்கும் வளமான எதிர் காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என நம்புகிறோம் என்றார் .

    நிகழ்ச்சியில் எஸ்.ஏ.பி நிறுவனத்தின் ஆசிய தலைவர் – (சமூக பொறுப்புணர்வு), திருமதி.சின், குஞ்சன் பட்டேல் மற்றும் நேடிவ்லீட் நிறுவனத்தைச் சார்ந்த அஸ்வின் தேசாய், நாகராஜா பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.

    Share