இந்திய அமெரிக்கர்களின் இன்னும் சில முறையற்ற செயல்கள்

நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்காவில் இங்கொன்றும் அங்கொன்றுமாக தவறுகள் நிகழ்ந்தாலும் நீதிமன்றங்கள் ஒழுங்காகச் செயல்படுகின்றன. நீதிபதிகள் நாணயமாக நடந்துகொள்கிறார்கள். சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படுகின்றன. அமெரிக்காவிலும் 150 வருஷங்களுக்கு முன்னால் நிறைய ஊழல் இருந்தது. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அவையெல்லாம் மறைந்துவிட்டன. இப்போது பொதுமக்களில் பலர் நாணயமாக நடந்துகொள்கிறார்கள். சட்டம், ஒழுங்கை மதிக்கிறார்கள். சட்டத்தை மீறிச் செயல்படத் துணிவதில்லை. சட்டத்தை மீறுபவர்களுக்குத் தண்டனை கண்டிப்பாகக் கிடைக்கும், காவலர்களுக்கோ அதிகாரிகளுக்கோ லஞ்சம் கொடுத்துத் தப்பித்துக்கொள்ளலாம் என்ற வாய்ப்பும் இல்லை என்பதும் காரணங்களாக இருக்கலாம். ஆயினும் அறமற்ற செயலைச் செய்யும் மனப்பாங்கு இப்போது அமெரிக்கர்களிடம் இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு வரும் இந்தியர்களுக்கு அறமற்ற செயலைச் செய்யக் கூடாது என்ற மனப்பாங்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது.

பல வருடங்களுக்கு முன்னால் தொலைபேசிக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருந்த காலம். அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் உறவினர்களைக் கூப்பிட வேண்டுமென்றால் ஒரு நிமிடத்திற்கு மூன்று டாலர் கட்டணம். அதிலும் மாணவர்களாக வந்தவர்களுக்குப் பண நெருக்கடி அதிகம். இந்தியாவிலிருந்து பெற்றோரோ மற்ற உறவினர்களோ கூப்பிட்டாலும் அதற்கும் நிறையச் செலவாகும். அதனால் அதுவும் கட்டுப்படியாகாது. தாங்கள் நலமாக இருக்கிறோம் என்பதைப் பெற்றோர்களுக்குத் தெரிவிப்பதற்கு ஒரே வழி (கடிதங்கள் எழுதுவதைத் தவிர) அமெரிக்காவிலிருந்து பெற்றோர்களைக் கூப்பிடுவதுதான். தொலைபேசியில் பேச ஆரம்பித்து 59 நொடிகளுக்குள் ஏதாவது கோளாறு ஏற்பட்டு தொலைத்தொடர்பைத் துண்டிக்க நேர்ந்தால் தொலைபேசிக் கம்பெனிக்குப் பணம் எதுவும் கட்டத் தேவையில்லை. இதைப் பயன்படுத்திப் பல மாணவர்கள் 58 நொடிகள் பேசிவிட்டு ஏதோ கோளாறு என்று கம்பெனியிடம் சொல்லிவிட்டுத் தொலைபேசியை வைத்துவிடுவார்கள். இப்போது இதெல்லாம் தேவையில்லாமல் போய்விட்டது. ஒரு மாதத்திற்கு $35 கட்டிவிட்டால் இந்தியாவில் உள்ளவர்களோடு மட்டுமல்ல, உலகின் 60 நாடுகளில் இருப்பவர்களோடு காலவரையின்றிப் பேசலாம்.

அமெரிக்காவில் கார்ப்பரேட்டுகள் எத்தனை தகிடுதத்தங்கள் புரிந்தாலும் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகள் கொடுப்பார்கள். அவற்றில் ஒன்று வாங்கிய சாமான்களை பொருட்களைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் திருப்பிக் கொடுக்கலாம் என்பது. பொருள் வாங்கியதற்குரிய ரசீதை வைத்திருந்தால் முழுப் பணமும் திரும்பக் கிடைத்துவிடும். (உணவுப் பொருட்களுக்கும் இந்தச் சலுகை உண்டு; ஆனால் ஒரு சில நாட்களில் திருப்பிக் கொடுக்க வேண்டும்.) ஒரு முறை ஒரு பெண் டிபார்ட்மெண்ட் கடையில் பனிச்சறுக்கு விளையாடும்போது போட்டுக்கொள்ளும் உடையை வாங்கிக்கொண்டு ஸ்விட்ஸர்லாந்திற்குப் போய் அங்கு அதை உபயோகித்துவிட்டு நான்கு மாதங்கள் கழித்துக் கடைக்கு வந்து தான் அதைப் போட்டுக்கொண்டு விளையாடியபோது அதில் இருந்த நிறைய மினுக்குத் துகள்கள் உதிர்ந்துவிட்டதாகவும் தனக்கு அது மிகவும் சங்கடத்தைக் கொடுத்ததாகவும் கூறித் திருப்பிக் கொடுக்க முயன்றார். கடையின் அந்தப் பொருள் விற்கும் பகுதியின் மேனேஜர் மறுப்பு எதுவும் சொல்லாமல் திருப்பி வாங்கிக்கொண்டார். இப்படி வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் கம்பெனிகள் அவர்கள் தலையில் வேறு விதமாக மிளகாய் அரைப்பது வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது. இது ஒரு அதீத உதாரணம் என்றாலும் அமெரிக்காவில் வாங்கிய பொருளைத் திருப்பிக் கொடுப்பது என்பது சாதாரணமாக நடைபெறும் விஷயம். குறிப்பாக கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் பரிசு பெற்றவர்கள் பரிசு தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் அதைக் கடையில் கொடுத்துவிட்டு தங்களுக்குப் பிடித்த ஒன்றை வாங்கிக்கொள்ளலாம். தாங்கள் வாங்கும் பொருள் பரிசின் விலையை விடக் கூடுதலாக இருந்தால் அதற்குரிய பாக்கிப் பணத்தைக் கொடுத்து வாங்கலாம். விலை குறைவாக இருந்தால் அந்தப் பணத்தைக் கடை, கார்டாக கொடுத்துவிடும். அப்போதைக்கு எதுவுமே பிடிக்கவில்லையென்றாலும் பரிசுப் பொருளுக்குரிய பணத்தை கடை கொடுக்கும் கிரெடிட் கார்டாக வாங்கிக்கொண்டு எப்போதாவது அதை உபயோகித்துக்கொள்ளலாம். அதற்குக் காலவரையறை இல்லை. பரிசாகக் கொடுப்பதற்காக அல்லாமல் தங்களுக்காக வாங்கினாலும் அதைத் திருப்பிக் கொடுக்கலாம். ஆனால் அமெரிக்கர்கள் பொருள்கள் வாங்கும்போது திருப்பிக் கொடுப்பதற்காகவென்றே வாங்குவதில்லை. பிடிக்காவிட்டால் திருப்பிக் கொடுக்கிறார்கள் அவ்வளவே. ஆனால் இந்தியர்கள் கணினி, கேமரா போன்ற சில சாமான்களை வாங்கி உபயோகித்துவிட்டு தவணைக்குள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். இது பிடிக்காமல் திருப்பிக்கொடுக்கும் ரகத்தில் வருவதில்லை. உபயோகிப்பதற்காகவென்றே வாங்கிவிட்டு, உபயோகித்துவிட்டுத் திருப்பிக் கொடுப்பது. இது அறநெறியற்ற செயல் அல்லவா?

இப்போது அமெரிக்காவில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள். அதிலும் கணினிக் கம்பெனிகளுக்காகச் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கி அவர்களுக்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டுத் திரும்பிப் போகும் கணினி வல்லுநர்கள் நிறையப் பேர். இப்படித் தற்காலிகமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களுக்கு அமெரிக்க உணவு அவ்வளவு பழகியிருக்காது. இங்கேயே நிறைய வருடங்கள் தங்கிவிட்ட இந்தியர்களும் அமெரிக்க, மற்றும் மற்ற நாட்டு உணவு வகைகளைச் சாப்பிடப் பழகிக்கொண்டாலும் இந்திய உணவுகளையும் இன்னும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு வகைகள் இந்தியாவிலிருந்தும் காய்கறிகள் அமெரிக்காவின் மற்றப் பகுதிகளிலிருந்தும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும் வருகின்றன. அமெரிக்க இந்தியர்களின் இந்த உணவுத் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு இந்த உணவுகளை அமெரிக்காவில் வினியோகம் செய்யும் கம்பெனிகள் – இவை இந்தியர்களால் நடத்தப்படுபவை – சில சாமான்களில் அதை விட விலை குறைவான சாமான்களைக் கலந்துவிடுகிறார்கள். உதாரணமாக கடலைப் பருப்பில் பட்டாணிப் பருப்பைக் கலந்துவிடுகிறார்கள். பார்க்க அவை இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். உற்றுப் பார்த்தால்தான் அவற்றுக்குரிய வித்தியாசம் தெரியும். ஓடிக்கொண்டே இருக்கும் அமெரிக்கர்களுக்கு இடையே வாழும் இந்தியர்களுக்கும் இதெற்கெல்லாம் நேரம் இருப்பதில்லை. அதே மாதிரி கடலை மாவில் பட்டாணிப் பருப்பு மாவைக் கலந்துவிடுகிறார்கள். அமெரிக்காவிற்குள் வரும் எல்லா உணவுப் பொருள்களின் தரத்தையும் பரிசீலித்து அனுப்ப அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் துறை (Food and Drug Administration) இயங்கி வருகிறது. அரிசியில் மணலைக் கலந்தாலோ அல்லது புழுக்கள் இருந்தாலோ இந்தத் துறை அதைக் கண்டுபிடித்துத் தடைசெய்துவிடும். ஆனால் கடலைப் பருப்பில் பட்டாணிப் பருப்பைக் கலந்தால் இவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது.

இந்தியாவிலிருந்து முருங்கைக் காய்களைப் பனிக்கட்டியில் உறையவைத்துக் (freeze) கொண்டுவருகிறார்கள். ஒரு முறை நான் முருங்கைக்காய்களை வாங்கியபோது அவை மிகவும் முற்றிப் போயிருந்தன. இன்னொரு முறை வாங்கியபோது மிகவும் பிஞ்சாக இருந்தன. இரண்டு முறையும் உபயோகத்திற்கு லாயக்கற்றவையாக இருந்தன. மொத்தத்தில் ஒன்றிரண்டு அப்படி இருந்தால் பரவாயில்லை. அதில் இருந்த எல்லாமே முற்றலாகவோ அல்லது மிகவும் பிஞ்சாகவோ பார்த்துப் பார்த்துத் தேர்தெடுத்தவை போல் இருந்தன. இது ஒரு வகை ஏமாற்று. உறையவைத்துப் பாக்கெட்டுகளில் வருவதால் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து வாங்க முடியாது. அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு முற்றல் எது, பிஞ்சு எது என்பதெல்லாம் மறந்திருக்கலாம். மேலும் இந்தியாவிற்கு அடிக்கடி போகாதவர்கள் பலருக்கு இதுவாவது கிடைக்கிறதே என்ற மனப்பான்மைதான் இருக்கிறது. மேலும் இதையெல்லாம் கண்டுகொள்ள இவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. நான் ஒரு முறை அந்தக் கம்பெனி ஆட்களிடம் முறையிட்டேன். எங்கள் கம்பெனியில் உள்ள தர மதிப்பீடு செய்யும் குழுவிடம் கூறியிருகிறேன். இனி நன்றாக இருக்கும் என்றார்கள். அத்தோடு சரி. எந்த வித மாற்றமும் இல்லை. தரம் குறைந்த சாமான்களை வாங்காமல் இருப்பதே இவர்களுக்குப் பாடம் கற்பிக்கச் சிறந்த வழி. அதைச் செய்ய யாரும் தயாராக இல்லாத வரை இவர்களும் இப்படித் தரம் குறைந்த சாமான்களைத்தான் அமெரிக்காவில் விற்பார்கள்.

அமெரிக்காவில் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்துகொள்வதற்கு முன் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்வதற்காக சேர்ந்து பழகுவார்கள். இதற்கு ‘dating’ என்று பெயர். முதல் தடவை பார்த்த பெண்ணையோ ஆணையோ பிடித்துப் போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கொஞ்ச நாட்கள் பழகிவிட்டுப் பிடிக்கவில்லையென்றால் இன்னொரு துணையைத் தேடலாம். ஆனால் பழகுவதற்காக மட்டும் அமெரிக்கர்கள் ‘dating’ பண்ணுவதில்லை. இப்போது ‘dating’ பண்ணிக்கொண்டிருக்கும்போதே கணவன், மனைவி போல் நிறைய ஜோடிகள் குடும்பம் நடத்துகிறார்கள். ஆனாலும் அமெரிக்கர்கள் எப்படியும் இந்த உறவை விட்டுப் போகப் போகிறோம் என்று ‘dating’ பண்ணுவதில்லை. இதிலும் சில இந்தியப் பையன்கள் முறையற்ற செயலில் இறங்குகிறார்கள். அமெரிக்கப் பெண்களுடன் கொஞ்ச நாட்கள் ஜாலியாக இருந்துவிட்டுப் பின் இந்தியாவிற்குப் போய் பெற்றோர் பார்த்து முடித்துவைக்கும் பெண்ணை மணந்து கொண்டுவிடுகிறார்கள். அமெரிக்கப் பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இது ஒன்றும் பெரிய இழப்பல்ல. பெண்மை, கற்பு என்பதற்கெல்லாம் அமெரிக்க அகராதியில் அர்த்தங்களே வேறு. ஆனாலும் எப்படியும் பெற்றோர் பார்த்த பெண்ணைத்தான் மணமுடிக்கப் போகிறார்கள் என்று உறுதியாக இருக்கும்போது ஏன் இப்படிப்பட்ட செயல்களில் இறங்க வேண்டும்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.