சைவ சமயம் அறிவியல் மையம் – பகுதி 8

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ

சைவத்தைப் பற்றி எழுதி வருவதில் சிலருக்கு வருத்தம் ; வைணவத்தை விட்டுவிட்டீர்களே என்று. அவர்கள் மன நிறைவுக்காக வைணவத்தின் பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமே! இதோ வைணவக் காவியமான கம்பராமாயணம் : வை.மு.கோ பதிப்பு. மாரீசன் வதைப் படலம் (சில பதிப்புகளில் இப்பாடல் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் இடம் பெறுகிறது). இராமனால் நிராகரிக்கப்பட்டு இலக்குவனால் உறுப்பு நலங்கள் அழிந்த சூர்ப்பணகை, தன் அண்ணன் இராவணனிடம் வந்து முறையிடுகிறாள். ; சீதையைப் பற்றிக் கூறி அவன் காமத்தைத் தூண்டுகிறாள். “கடவுளர்கள் தத்தம் மனைவியரைத் தத்தம் உடல்களிலேயே இடம் தந்து வைத்திருக்கின்றனர் ; நீ சீதையைப் பெற்றால் எங்கே வைத்து வாழ்வாய் ?” என்ற கேள்வியைத் தூக்கிப் போடுகிறாள்.இங்கே முழு முதல் கடவுளான சிவ பெருமானைத்தான் கம்பர் முதலில் குறிப்பிடுகிறார். இருப்பினும் கம்பநாட்டாழ்வார் வைணவக் கொழுந்து அல்லவா! அதனால் பிற கடவுளர் மனைவியர் பெயர்களைக் கூடச் சொல்லாமல், தன் சமயக் கடவுளின் மனைவியை மட்டும் “பங்கயத்து இருந்த பொன்” என வருணிக்கிறார். இதோ அப்பாடல் :

“பாகத்தில் ஒருவன் வைத்தான்; பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான்; அந்தணன் நாவில் வைத்தான்;
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை-
மாகத் தோள் வீர!-பெற்றால், எங்ஙனம் வைத்து வாழ்தி?”.

இப்பாடலில் நாம் கவனிக்க வேண்டியது யார் யார் தத்தம் மனைவியருக்கு எங்கே இடம் கொடுத்தார்கள் என்பதைத்தான். அந்தணன் ஆகிய பிரமன் கலைமகளைத் தன் நாவிலே வைத்துக்கொண்டானாம். எல்லாக் கணவர்களையும் போல அவனுக்கும் வாய் திறந்து பேச்சும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. திருமாலோ நல்ல கணவனாகத் திருமகளைத் தம் மார்பில் (இதயத்தில்) ஏந்திக்கொண்டார். பாவம் பரமசிவம் மட்டும் தம் உடலில் பாதியைப் பாகம் செய்துகொடுக்க வேண்டியதாயிற்றாம்!

இதற்குப் புராணத்தில் கதை ஒன்று உண்டு.பிருங்கி முனிவர் தீவிரச் சிவ பக்தர். கையிலாயம் சென்ற போது சிவபெருமானும் பார்வதி தேவியும் அருகருகே நெருக்கமாக அமர்ந்து இருந்தனராம்.தேவியை வணங்க விரும்பாத முனிவர் சிந்தித்தார். வழி ஒன்று புலப்பட்டது. வண்டு உரு எடுத்தார். Photoshop -இல் செய்வது போல அம்மையை மட்டும் தனியே கத்தரித்து விட்டு அப்பனைச் சுற்றி வந்து வணங்கினாராம். அதனால் தேவி கோபம் கொண்டு முனிவரைச் சபித்துவிட்டாராம். இனி என்றுமே இறைவனை விட்டுப் பிரியக் கூடாது ; அதற்கு என்ன செய்யலாம் எனத் திருக்கேதாரம் என்னும் திருத்தலத்தில் இருந்த கௌதம முனிவரைக் கேட்க அவர் கேதாரகௌரி விரதத்தை உபதேசித்தாராம். அதன் படிச் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து விரதம் இருந்தார் தேவி. மனம் மகிழ்ந்த பரமசிவன் தேவி வேண்டியபடியே தம் உடலின் இடப் பாகத்தில் இடம் தந்தாராம். அதனால் ‘அர்த்தநாரீஸ்வரன்’ என்னும் பெயரையும் பெற்றார்.ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல சிவனும் சக்தியும் ஒன்றே என்பதை நிலைநாட்டுகிறது இக்கதை என்பர்.

கணவனும் மனைவியும் இப்படித்தான் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் ஆணும் பெண்ணும் சமம் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது. மணவிலக்கு அதிகரித்து வரும் இக்காலத்தில் இக்கதை மிகவும் தேவைப் படுகிறது. ‘அர்த்தநாரீஸ்வரன்’ என்பதை மாதுடையபாகன், பாகம் பிரியார், மாதொரு கூறர்…என்றெல்லாம் மொழிபெயர்த்து நம்மவர் பாடி உள்ளனர். கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் ஈசனது இடப்பாகத்தைப் பெற்றார். அப்படி ஈசன் மலைமீது ஜோதியாக எழுந்தருளி, அர்த்தநாரீசுவரராகக் காட்சி தந்த தலம் ” திருவண்ணாமலை ” என்கிறது அருணாசலப் புராணம். தென்னகத்திலேயே திருச்செங்கோட்டில்தான் அர்த்தநாரீசுவரருக்கென்று தனிக் கோவில் உள்ளது.இறைவனின் இடப்பக்கத்தில்தான் இறைவிக்கு இடம் ; ஆனால், திருவதிகை வீராட்டானத்தில் உமையம்மை ஈசன் உடலில் வலப் பக்கம் இருக்கக் காணலாம். இவை தனிச் செய்திகள்.

இத் திருகோலத்தைச் சைவப் பெரியார்கள் பலரும் பாடிப் பரவி இருக்கின்றனர் :

“வெந்த வெண்நீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல
பந்தணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி”
என்று திருஞானசம்பந்தர் திருச்செங்கோட்டுத் தேவாரத்தில் பாடினார்.

மணிவாசகப் பெருமானும்,
“தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்து ஊதாய் கோத்தும்பி”
என்று திருவாசகத்தில் பாடியுள்ளார்.

அதிவீரராம பாண்டியர், கரிவலநல்லூர் அந்தாதியில்
“உரகா பரணத் திருமார்பும் உமைஒப் பனையாள் இடப்புறமும்,
சிரமா லிகையும் புரிசடையும் செய்ய வாயும் கறைமிடறும்
வரதா பயமும் மழுமானும் வயங்கு கரமும் மலரடியும்
கருவா புரியான் வெளிப்படுத்திக் காட்சி கொடுத்து நின்றானே” எனக் கண்ணுள் ஓவியம் தீட்டிக் காட்டுகிறார்.

இத் திருவடிவை வட மொழியில், ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்பர். அர்த (ardha) என்றால் பாதி என்பது பொருள் ; நாரீ = பெண் ; ஈஸ்வரர் என்றால் இறைவனாகிய சிவன்.அதாவது பாதி பெண்ணாக விளங்கும் இறைவன் என்பது முழுப் பொருள். அப்படியானால் இடப்பக்கம் பெண்மைத் தன்மையுடனும் வலப்பக்கம் ஆண் பண்புகளுடனும் இருப்பதாகப் பொருள் வரும். அதாவது ஆண் 50 % பெண் 50 % என்று ஆகும் ஆனால் இதனை விடச் சிறந்த பொருள் தரும் தொடர் ஒன்றை நம் முன்னோர் தந்திருக்கிறார்கள். அச்சொல் : ‘அம்மையப்பர்’.

இச்சொல் பல பொருள்களை உள்ளடக்கியதாக விளங்குகிறது. அம்மையின் பண்புகளும் அப்பனின் இயல்புகளும் கலந்து அமைந்துள்ளன ; பெண் பண்புகள் அதிகமாக அமையும் போது பெண்ணாகவும் ஆண் தன்மைகள் மிகுதியாக ஆகும் போது ஆணாகவும் விளங்குதல் ; பெண்ணாக இருந்தாலும் ஆண் தன்மைகள் மறைவதில்லை, ஆணாக இருப்பினும் பெண் தன்மைகளும் மறையாமல் இருக்கும்… இவற்றை எல்லாம் பொதிந்து வைத்துள்ள சொல்தான் ‘அம்மையப்பர்’..

அதனால்தான் நாயன்மார்களும் சிவனடியார்களும் அச்சொல்லைப் பெய்து இறைவனை வழிபட்டார்கள் ; பாடல்களைப் பாடி மகிழ்ந்தார்கள் :காண்க –

அம்மையப்ப ரேஉலகுக் கம்மையப்பர் என்றறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் – அம்மையப்பர்
எல்லா உலகிற்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர். எனத்

திருக்களிற்றுப்படியார் திருக்கடவு உய்யவந்த தேவ நாயனார் நான்கு முறை அம்மையப்பரை அழைக்கிறார்.

மாணிக்கவாசகரோ,
“அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே …
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே” (திருவாசகம் : பிடித்த பத்து – முத்திக்கலப்புரைத்தல்)
என்று பாடி, தப்பிக்க முடியாதபடி இறைவனைத் தாம் பிடித்துவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்.

வள்ளலாரோ,
” அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.”
என்று அழுது அவனருள் வேண்டுகிறார்.

அம்மையும் அப்பனுமாக இறைவன் இருக்கிறான் என்ற ஈடு இணையற்ற இத்தத்துவத்தை உலகுக்குச் சொன்னது சைவம். (அந்த இறைவனுக்குப் பிள்ளைகள் ஆகிற) நாமும் கருக்கொண்ட நாள் முதல் மண்ணுக்கு எருவாகும் நாள் வரை அம்மையப்பனாகத் தான் இருக்கிறோம். இதனை, இக்கால அறிவியல் தெள்ளத் தெளிவாக ஐயத்துக்கு இடமின்றி எடுத்துரைக்கிறது

அம்மையப்பனாகத் தான் கரு உருவாகிறது. ஒன்பதாம் வாரம் வரை ஆண் பெண் வேறுபாடு இல்லாமலே கரு வளர்கிறது. காண்க :

Until the ninth week of fetus development, the embryonic reproductive apparatus is the same one for the two sexes. (http://www.baby2see.com/gender/external_genitals.html)

ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் இருப்பதற்குக் காரணம் ஆண்மை / பெண்மைச் சுரப்பு நீர்மங்கள் ( male/female harmones). ஆண்மைச் சுரப்பு நீர்மங்கள் ‘androgens’ எனப்படும். பெண்மைச் சுரப்பு நீர்மங்களுக்கு ‘estrogens’. என்று பெயர். ‘அம்மையப்பர்’ தத்துவம் உடலில் மட்டும் அல்ல இந்தச் சுரப்பு நீர்மங்களிலும் உண்டு. ஆம் இவை இரண்டுமே ஆண் உடலிலும் உள்ளன ; பெண் உடம்பிலும் உண்டு – வெவ்வேறு அளவுகளில், விகிதங்களில்.( Men and women produce both of these classifications of hormones that cause behaviors classified as male or female …but they produce them in varying amounts. – http://www.wisegeek.org/what-are-male-hormones.htm).

முதல் ஒன்பது வாரங்கள் வரை அம்மையுமாக இல்லாமல் அப்பனுமாக இல்லாமல் இருந்த கரு (க்குழந்தை – ‘fetus’) உடலில் இந்தச் சுரப்பு நீர்மங்கள் சுரக்கத் தொடங்குகின்றன. எது அதிகமாகச் சுரக்கிறதோ அதுவாக அக்கரு உருப்பெறுகிறது. ஆண்மைக்குரிய சுரப்பு அதிகமாக இருந்தால் ஆண்மைக்கு உரிய கூறுகள் வளரத் தொடங்குகின்றன. பெண்மைக்குரிய பண்புகள் / உறுப்புகள் தளரத்தொடங்கும் ; பெண்மைக்குரிய சுரப்பு அதிகமாக இருந்தால் கரு பெண் குழந்தையாகும். ஆண்மைக்குரிய பண்புகள் / உறுப்புகள் குறையத் தொடங்கும். இப்படி வளர்வதை ‘progressive traits’ என்றும் தளர்வதை ‘regressive traits’ எனவும் ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.

‘ஆண் மிகில் ஆணாகும் ; பெண் மிகில் பெண்ணாகும்’ என்று திருமூலர் சொன்னது இங்கும், இதற்கும் பொருந்தும்.முதலில் வேறுபாடு இல்லாமலே உருவான பிறப்பு உறுப்புகள் இப்போது ஆணாகவோ பெண்ணாகவோ வடிவம் பெறுகின்றன.

development of sex

கரு(க் குழந்தையின் ) பிறப்பு உறுப்பில் மொக்கையாக இருந்த பகுதி

– ஆண் கருவில் லிங்கமாக வளர்கிறது. . இது வளர்ச்சி. ”progressive trait’ ;

– பெண் கருவில் இது சுருங்கி யோனி வாயிலில் இருக்கும் பருப்பாகும் (clitoris). இதனைத் தளர்ச்சி எனலாம் (regressive trait).

கரு(க் குழந்தையின் ) உள் இருக்கும் ‘gonad’ என்பது ஆணில் விதைகளாகவும் (testes) பெண்ணில் சூலகங்களாகவும் வளர்கின்றன. (படங்களைக் காண்க) ஆணில் prostate ஆக வளரும் பகுதி பெண்ணில் கருப்பையாக மாறுகிறது.

indifferent stage

‘ அம்மையப்பர்’ என்னும் சொல்லில் இன்னொரு கருத்தும் அடங்கி உள்ளது. ஆண் உடம்பில் ஆணின் கூறுகள் ஓங்கி இருந்தாலும் பெண்ணின் கூறுகள் முழுவதுமாக மறைந்து விடுவது இல்லை. காட்டாக மார்பகத்தைக் கூறலாம். பெண்ணுடலில் எடுப்பாகப் புடைத்து எழும் முலைப் பகுதி ஆணின் உடம்பில் அமுங்கிப் போகிறதே ஒழிய மறைந்துவிடுவது இல்லை. ஆகவே ஒவ்வொருவர் உடலும் ‘அம்மையப்பர்’ தத்துவத்தில் உருவாக்கப்பட்டு அம்மையப்பராகவே வளர்ந்து வாழ்ந்து மறைகிறது. இந்த உண்மையைச் சைவ சமயமே உணர்த்துகிறது. உண்மையில் பார்க்கப் போனால் 100 % ஆணும் இல்லை ; 100 % பெண்ணும் இல்லை. இருகூறுகளும் கலந்ததுதான் இந்த உடல். சைவ சமயம் உணர்த்தும் இத்தத்துவத்தை இக்கால அறிவியல் உறுதி செய்கிறது. வட மொழிப் பெயரைவிடத் தமிழ் மொழிச் சொற்றொடர் ‘அம்மையப்பர்’ எவ்வளவு பொருள் பொதிந்ததாக அறிவியல் உண்மைகளுடன் கூடி ஒளிருவதை எண்ணி எண்ணி வியக்கத்தான் வேண்டும்.

இக்கால அறிவியல் சொல்லாத / சொல்ல முடியாத / அறிந்துகொள்ளாத / அறிந்துகொள்ள முடியாத இன்னொரு கருத்தைத திருமூலர் முதலான சித்தர்களும் மாணிக்கவாசகர் உள்ளிட்ட ஞானிகளும் வலியுறுத்திச் சொல்லி இருக்கின்றனர். அதுதான் மூல முதல் காரணனாம் “இறைவன்” என்னும் கருத்து. உடல் எப்படி உருவாகிறது என்பதை விளக்கும் அறிவியல் அந்த உடலை இயக்கும் உயிர் பற்றி எதுவும் கூறுவது இல்லை. ஆனால் உடலுக்கு உயிரைத் தருபவன் இறைவன் என எல்லாச் சமயங்களும் உரைக் கின்றன. சைவச் சமயமும் இதனை வலியுறுத்துகிறது.

“அருளல்ல தில்லை அரனவன் அன்றி
அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே” என்கிறார் திருமூலர்.

“உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசன் …”
“ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே”
என உறுதியாகச் சொல்லிக் கருப்பப் பையில் கருத்தரிக்கும் நேரத்தில்
” பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்” என அழுத்தம் திருத்தமாக உரைக்கிறார் திருமூலர்.

இப்படிப் பிண்டம் என்னும் உடல் பற்றித்: திருமூலர் கூறும் கருத்துகள் ஏராளம். அவற்றுள் சிலவற்றை மட்டுமே இங்குக் கண்டோம். பிண்டம் பற்றி அகத்தியர் முதலான சித்தர்களும் ஞானிகளும் நிறைய கூறி இருக்கின்றனர். மக்கள் நோய் நொடி இல்லாமல் நூறாண்டுகளுக்கும் மேலாக வாழ்வது எப்படி என்றெல்லாம் விளக்கி இருக்கிறார்கள். அவற்றைப் புரிந்துகொள்ளும் பொறுமையோ அறிவோ ஆற்றலோ நமக்கு இப்போது இல்லாமல் போய்விட்டது. நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால் அது –

“மெய்யாயிருந்தது நாட்செல நாட்செல வெட்டவெறும்
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே !”.(பெரிய ஞானக் கோவை).

பிண்டத்தை முடித்துவிட்டோம் ; இனி அண்டத்தைப் பார்ப்போமே…

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.