பட்டினத்தடிகளின் பாடல்கள் – 8ம் பகுதி
தஞ்சை வெ. கோபாலன்
ஏதப்பட்டாய் இனி மேற்படும் பாட்டை இது என்றறிந்து
போதப் பட்டாயில்லை நல்லோரிடம் சென்று புல்லறிவால்
வாதைப் பட்டாய், மடமானார் கலவி மயக்கத்திலே
பேதைப் பட்டாய் நெஞ்சமே! உனைப் போல் இல்லை பித்தருமே. 1.
என் நெஞ்சே! கேடு கெட்ட என் மனமே! பெரியோர்களைத் துணை கொண்டு நல்வழிப் படவில்லை; உன்னுடைய பேதமையால் நல்லவர்களிடம் சென்றடைந்தும் தவறுகளைச் செய்து வேதனைப் பட்டாய்; மான்போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்களின் கலவி மயக்கத்தில் வீழ்ந்து கிடந்தாய்; உன்னைப் போல வேறு பித்தர் எவரும் உண்டோ?
பேய்போல் திரிந்து பிணம் போல் கிடந்து இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன் மங்கையரைத்
தாய்போல் கருதித் தமர் போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லிச்
சேய்போல் இருப்பர் கண்டீர் உண்மை ஞானம் தெளிந்தவரே. 2.
மெய்ஞானம் கைவரப் பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? பேய் போல அங்குமிங்குமாய் அலைந்து திரிவர்; உயிரற்ற உடல்போல கிடைத்த இடத்தில் படுத்துப் புரண்டு கொண்டும்; பிக்ஷை பாத்திரத்தில் எவர் உணவு இட்டாலும் அதனை வாங்கி நாயைப் போல உண்டு கொண்டும்; நரியைப் போல ஒளிந்து மறைந்து ஓடி ஒளிந்து கொண்டும்; பெண்களைக் கண்டால் தாய் என்ற உணர்வோடு வணங்கிப் போற்றிக் கொண்டும்; ஊரார் அனைவரையும் சுற்றத்தார் போலக் கருதிக் கொண்டு அன்போடு பழகியும்; சின்னக் குழந்தையைப் போல கல்மிஷம் இல்லாமல் தெளிந்த அறிவோடு இருப்பர்.
விடக்கே, பருந்தின் விருந்தே, கமண்டல வீணின் இட்ட
முடக்கே, புழு வந்து உறைவிடமே, நலமுற்றும் இலாச்
சடக்கே, கருவி தளர்ந்து விட்டால் பெற்ற தாயும் தொடாத்
தொடக்கே, உனைச் சுமந்தேன் நின்னின் ஏது சுகம் எனக்கே. 3.
அட மாமிசப் பிண்டமே! (விடக்கு = மாமிசம்); பருந்துகளுக்கு இனிய விருந்தே! கையில் கமண்டலம் சுமக்கும் பிரம்மன் படைத்த கோணலே (முடக்கு = கோணலான); புழுக்களுக்கு உணவாகி, அவை வந்து குடியேறும் மாமிசப் பிண்டமே; நன்மை எதையும் செய்யாத உடலே (சடக்கு = உடல்); உடலின் அங்கங்கள் செயல் இழந்தால் அன்னை கூடத் தொடத் தயங்கும் மிருகமே (தொடக்கு = மிருகம்); உன்னை இது வரை சுமந்துகொண்டிருக்கின்றேனே, உன்னால் என்ன சுகத்தைக் கண்டேன்? சொல்.
(தன் உடலைத் தானே விமரிசித்து அதற்காக வருந்துவதாக அமைந்த பாடல்)
அழுதால் பயன் என்ன, நொந்தால் பயன் என்ன ஆவதில்லை
தொழுதால் பயன் என்ன, நின்னை ஒருவர் சுட உரைத்த
பழுதால் பயன் என்ன, நன்மையும் தீமையும் பங்கயத்தோன்
எழுதாப்படி வருமோ? சலியாது இரு என் ஏழை நெஞ்சே! 4.
என் அருமை ஏழை நெஞ்சமே! உன் அறியாமையால் நீயாகவே தேடிக்கொண்ட துன்பங்களை எண்ணி அழுது வருந்துவதால் என்ன பயன்; அதற்காக மனம் நொந்து போவதாலும் என்ன பயன்; அந்த நிலையில் போய் தொழுவதாலும் என்ன பயன்; உன் மனம் வருந்தும்படி தவறுகளை எடுத்துக் காட்டிப் பேசுவதாலும் என்ன பயன்; இவற்றால் எல்லாம் ஆவது எதுவும் இல்லை. இவைகள் எல்லாம் முன்பே பிரம்மன் உன்னைப் படைக்கும்போது உனக்கென்று எழுதிவைக்கவில்லை யென்றால் இவற்றால் எல்லாம் எந்தப் பயனும் இல என்பதை உணர்ந்து மனம் வருந்தாமல் இரு.
ஊரீர்! உமக்கோர் உபதேசம் கேளும்! உடம்பு அடங்கப்
போரீர் சமணைக் கழுவேற்று நீற்றைப் புறந்திண்ணையிற்
சாரீர், அனதலைச் சுற்றத்தை நீங்கிச் சகம் நகைக்க
வேரீர், உமக்கவர் தாமே தருவர் இணையடியே. 5.
ஊராரே கேளுங்கள்! உங்களுக்கெல்லாம் நான் செய்யும் உபதேசம் இதைக் கேளும்; முன்பு சமணர்களைக் கழு மரத்திலேற்றிய சைவர்கள் அணியும் திருநீற்றினை உடலெங்கும் பூசிக்கொண்டு வீட்டின் முன்புறத் திண்ணையிற் படுத்து உறங்குங்கள்; கூட்டம் கூடி உறவென்று சொல்லியும், சுற்றம் என்று சொல்லியும் திரியும் கூட்டத்தை விட்டு நீங்கி உலகம் சிரித்தாலும் இரந்துண்டு வாழ்வாயாக! அப்படிச் செய்வாயானால் எம்பெருமான் உம்மை ஆட்கொண்டு தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வார்.
நீற்றைப் புனைந்தென்ன, நீராடப் போயென்ன நீ மனமே
மாற்றிப் பிறக்க வகை அறிந்தாயில்லை மாமறை நூல்
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்
ஆற்றிற் கிடந்தும் துறை அறியாமல் அலைகின்றதே. 6.
உடலெங்கும் திருநீற்றைப் பூசியென்ன; புனிதத் தலங்களுக்குச் சென்று நதிகளில் நீராடியதால் என்ன; ஏ மனமே! இப்படி அஞ்ஞானியாக அன்றி மெய்ஞானியாக மாறிப் பிறக்க வழி அறிந்திருக்க வில்லை; சதுர் வேதங்களைப் படித்து உணர்ந்து கொள்ளவோ, ஏழுகோடி மந்திரங்களின் பெருமையை உணரவோ உன்னால் முடியவில்லையே, என்ன பயன். ஆற்றிலேயே மிதந்து கொண்டிருந்தாலும் தோணி தான் ஒதுங்க வேண்டிய துறை அறியாமல் தத்தளிக்கின்றதே! என்ன செய்ய.
செல்வரைப் பின் சென்று உபசாரம் பேசித் தினந்தினமும்
பல்லினைக் காட்டிப் பரதவியாமற் பரானந்தத்தின்
எல்லையில் புக்கு நல் ஏகாந்தமாய் எனக் காமிடத்தே
அல்லல் அற்று என்றிருப்பேன் ஆலநீழல் அரும் பொருளே. 7.
ஆல விருட்சத்தின் கீழமர்ந்த குரு தட்சிணாமூர்த்திப் பெருமானே! செல்வந்தர்களைத் தேடிச் சென்று அவர்கள் மனம் மகிழும்படி பேசி மகிழ்வித்து, பல்லெல்லாம் தெரியக் காட்டிக் கெஞ்சிக் கூத்தாடி வாணாளை வீணாளாக ஆக்காமல் பரமானந்த வாழ்வின் எல்லை கண்டு ஏகாந்தமாய் அமர்ந்து அல்லல் நீங்க ஆனந்த வாழ்வை என்று பெற்று வாழ்வேன் சொல்.
ஓங்காரமாய் நின்ற வத்துவிலே ஒரு வித்து வந்து
பாங்காய் முளைத்த பயன் அறிந்தால் பதினாலு உலகும்
நீங்காமல் நீங்கி நிறையா நிறைந்து நிறையுருவாய்
ஆங்காரமானவர்க்கு எட்டாக்கனி வந்து அமர்ந்திடுமே. 8.
ஓங்காரமாய் விளங்கும் பிரணவப் பொருளதனுள் வந்து விழுந்த வித்தொன்று முளைத்து செடியாகி மரமாகி செழித்தோங்குவதன் நோக்கம் என்னவென்ற உண்மையை அறிந்து கொண்டால், ஈரேழு பதினான்கு உலகத்திலும் நீக்கமற நிறைந்து பரிபூரணமாக விளங்குகின்ற நிறைந்த ஆனந்தம் எதுவோ, மனதில் மமதை எனும் அகங்காரம் கொண்டவர்க்கு எட்டாத கனி எதுவோ அந்தப் பரம்பொருள் எனும் கனி வந்து நம் மனதில் அமர்ந்து கொண்டு அருள் பாலிக்கும்.
விதியார் படைப்பும் அரியார் அளிப்பும் வியன் கயிலைப்
பதியார் துடைப்பும் நம்பால் அணுகாது பரானந்தமே
கதியாகக் கொண்டு மற்றெல்லாம் துயிலிற் கனவென நீ
மதியாதிரு மனமே இதுகாண் நன் மருந்து உனக்கே. 9.
முத்தொழில் புரியும் தெய்வங்களில் பிரம்மனின் படைப்பினால் உண்டாகும் இன்ப துன்பங்களும், காத்திடும் கடவுளாம் ஹரியின் கொடைகளும், கயிலையங்கிரி வாழ் பரமேஸ்வரனின் அழிக்கும் தொழிலும் அவற்றால் உருவாகும் விளைவுகளும் நம்மை என்றும் அண்டவே அண்டாது மனமே, பரம்பொருளை மனதில் தியானித்துக் கொண்டு அவனே எல்லாம் என்று இருந்தால், உலகில் மற்றெல்லாமுமே உறக்கத்தில் காணும் கனவு போல நீ அவற்றைப் பற்றி கவலை கொள்ளாதிரு மனமே, இதுதான் உனக்கு நல்ல மருந்து.
(மகாகவி பாரதியும் “உலகெலாம் ஓர் பெருங்கனவு, அஃதுளே உண்டு, உறங்கி, இடர் செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும்; இதனிடை சில தினங்கள் உயிர்க்கமுதாகியே செப்புதற்கரிதாக மயக்குமால்; திலக வாணுதலார் தரும் மையலாம் தெய்விக கனவன்னது வாழ்கவே” எனும் வரிகளை நினைவு கொள்ளலாம்.)
நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாக்ஷர மதியாமல் வரும்
பேய்க்குண்டு நீறு, திகப்புண்டு நின்ற பிறவிப் பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன்னருள் நோக்கங்கள் நோக்குதற்கே. 10.
குப்பை மேடுகளில் நாய்களுக்கு உணவாக மனிதர் வீசியெறிந்த எச்சில் இலைகள் இருக்கின்றன; மனிதருக்கோ வீடுதோறும் சென்று கேட்டுப் பெறும் பிக்ஷை உணவு கிடைக்கும்; நம்மைக் கொண்டு போக வருகின்ற நமனை வெல்ல நம் வாய் உச்சரிக்க பஞ்சாக்ஷர மந்திரமும் உண்டு; நாம் அந்த சிவபெருமான் அடிமை என்று உணராது நம்மை பீடிக்க வரும் பேய்களை விரட்ட நெற்றியில் பூசும் திருநீறு உண்டு; பிறவிப் பிணி நீங்கப் பெம்மான் அருட்பார்வை நமக்கு எப்போதும் உண்டு என்பதை தெளிந்திரு.
(இன்னும் வரும்)
பட்டினத்தாரை இன்றைய தலைமுறையினருக்கு தெரியவில்லை.முந்தய தலைமுறையினர் மறந்து வருகின்றனர்.தஞ்சை வெ.கோபாலன் ஐயா அவர்களின் உரையுடன் கூடிய பட்டினத்தாரின் பாடல்களை தொடர்ந்து படித்து வருகிறேன்.மிகவும் அருமையான பதிவு.தொடரட்டும் அவரின் பணி