Blog

  • கல்யாண வைபோகமே | நிர்மலா ராகவன்

    கல்யாண வைபோகமே | நிர்மலா ராகவன்

    காதலர் தினம், இளைஞர்களுக்கு மட்டுமா? வயது கூடினாலும் காதல் குறைவதில்லை, மறைவதில்லை, மாறுவதில்லை. இதோ இந்தப் பதிவில், தன்னைப் பெண் பார்த்த அனுபவங்கள், ஒரே வாரத்தில் நடந்த திடீர்க் கல்யாணம், 55 ஆண்டுக்கால திருமண வாழ்க்கை எனப் பலவற்றையும் சுவையாக விவரிக்கிறார் நிர்மலா ராகவன். பார்த்து மகிழுங்கள். காதலர் தின நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் (21 -22)

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் (21 -22)

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    மூளை வானை விட அகண்டது – 21

    மூளை வானை விட அகண்டது
    அருகே வைத்து  விட்டால் அவை
    ஒன்றை ஒன்று  விழுங்கி விடும்.
    அண்டையில்  நீ சும்மா நின்றாலும்

    மூளை கடலை விட ஆழமானது.
    வானுக்கும் ஆழிக்கும் இடையே
    மானிட மூளையை வைத்தால்
    ஒன்றை ஒன்று உறிஞ்சி விடும்

    வாளி நீரைப் பஞ்சு போல்.
    மனித மூளை கடவுள் அளவு
    எடைக்கு எடை  பளு பார்த்தால்
    சொல்லுக்கும் உச்சரிப்புக்கும்
    உள்ள வேறுபா டாய் இருக்கும்.

    The Brain – is wider than the sky
    For-put them side by side-
    The one the other will contain
    With ease-and You-beside-

    The Brain is deeper than the sea-
    For-hold them-Blue to Blue-
    The one the other will absorb-
    As Sponges-Buckets-do-

    The Brain is just the weight of God-
    For-Heft them-Pound for Pound-
    And they will differ-if they do-
    As Syllable from Sound-

    ******************

    ஆகா நிலா, வெள்ளி -22

    அதோ நிலா, அந்த வெள்ளி
    அதிக தூரம் அவற்றி்டை, ஆனால்.
    நீ  போல் தொலைவில்
    வேறு எதுவும் இல்லை.
    வான்வெளித் தொலைவோ
    அன்றி முழங்கை அளவோ
    என்னை நிறுத்துமா !

    Ah, Moon—and Star!
    You are very far—
    But were no one
    Farther than you—
    Do you think I’d stop
    For a Firmament—
    Or a Cubit—or so?

    குயிலின் மென் சிறகை
    கடனாய் வாங்கி
    கெமாய்ஸ் பூட்ஸ் அணிந்து
    உன்னோடு இருப்பேன்,
    இன்றிரவு.

    I could borrow a Bonnet
    Of the Lark—
    And a Chamois’ Silver Boot—
    And a stirrup of an Antelope—
    And be with you—Tonight!

    நிலாவும் வெள்ளியும்
    தூரத்தில் இருந்தாலும்
    உனக்கு வெகு தூரத்தில்
    உள்ளது ஒன்று, அது .
    வானிலும் பெரியது
    எனக்கும் தூரம், ஆதலால்
    நானும் ஏக இயலாது.

    But, Moon, and Star,
    Though you’re very far—
    There is one—farther than you—
    He—is more than a firmament—from Me—
    So I can never go!

    Share
  • குறளின் கதிர்களாய்…(389)

    குறளின் கதிர்களாய்…(389)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(389)

    தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும்
    நீங்கா நிலனாள் பவற்கு.

    – திருக்குறள் – 383 (இறைமாட்சி)

    புதுக் கவிதையில்

    கடமை செய்யும் காலத்தில்
    சோர்ந்து தூங்காமை
    கல்வியறிவு
    செயலில் துணிச்சல்,
    இவை மூன்றும்
    நீங்காமல்
    நிலைபெற்றிருக்க வேண்டும்
    நாடாளும் மன்னவர்க்கே…!

    குறும்பாவில்

    விழிப்புடன் சோராருத்தல் கல்வியறிவு
    துணிச்சல், இம்மூன்றும் நிறைந்திருக்கவேண்டும்
    நாட்டை யாளும் தலைவனுக்கே…!

    மரபுக் கவிதையில்

    கடமை செய்கையில் சோராமை
    கல்வி கற்றே பெறுமறிவு,
    தடங்கல் வரவிலும் அனைத்தையுமே
    தாண்டி வெல்ல நற்றுணிச்சல்,
    நடப்பு நெறியதாம் இவைமூன்றும்
    நல்ல பலனே தருவதாலே,
    நடக்கும் ஆட்சியில் நலம்பெறவே
    நாட்டை யாள்வோர் தகுதியிதே…!

    லிமரைக்கூ

    சோர்ந்திடாமை கல்வி யுடனே
    செயலில் துணிச்சல் கொண்டே நல்லாட்சி
    நல்குதல் ஆள்வோர் கடனே…!

    கிராமிய பாணியில்

    நெறஞ்சிருக்கணும் நெறஞ்சிருக்கணும்
    நாடாளும் ராசாவுக்கு நெறஞ்சிருக்கணும்,
    நல்லகொணம் நெறஞ்சிருக்கணும்..

    சோம்பலுல்லாம படிப்பறிவு
    செய்கையில துணிச்சல்
    இந்த மூணும்
    கட்டாயம் நெறஞ்சிருக்கணும்
    அரசாளும் ராசாவுக்கே..

    தெரிஞ்சிக்கோ,
    நெறஞ்சிருக்கணும் நெறஞ்சிருக்கணும்
    நாடாளும் ராசாவுக்கு நெறஞ்சிருக்கணும்,
    நல்லகொணம் நெறஞ்சிருக்கணும்…!

    Share
  • ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்

    ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்

    2022 மார்ச் 21 அன்று ராகுவும் கேதுவும் இடம் பெயர உள்ளன. அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு, இவை புதிய இடத்தில் இருந்து ஆட்சி செலுத்தும். இந்த ராகு கேது பெயர்ச்சி, உங்களுக்கு எப்படி இருக்கும்? மூத்த ஜோதிடர் வேதா கோபாலனின் துல்லியமான கணிப்புகள் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கண்ணையே கொடுத்த கண்ணப்பர்!

    கண்ணையே கொடுத்த கண்ணப்பர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. அந்த மொழிகளில் எங்கள் தமிழ் மொழியும் ஒன்றாகும். ஏனைய மொழிகளுக்கெல்லாம் இல்லாத ஒரு பெருமையை எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. எல்லா மொழிகழுமே இலக்கியத்தைக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த இலக்கியத்தால் அந்த மொழிகளும் பெருமையினையும் பெற்றிருக்கின்றது. அப்படிப் பெருமையி னைப் பெற்றாலும், தமிழ் பெறும் பெரு மைக்கு ஈடாக முடியாது என்பதுதான் கவனத்துக்குரியதாகும். ஏனைய மொழிகளைவிட தமிழ் மொழி அப்படி என் னதான் முக்கியத்துவத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்று அறிந் தி டும் ஆவல் ஏற்படுகிறதல்லவா? அதுதான் “பக்தி இலக்கியம்” ஆகும். பக்தி க்கு என்று இலக்கியங்கண்ட உலகின் ஒரே மொழி எங்கள் தமிழ்மொழி மட்டுமேயாகும்.

    இலக்கியம் என்றால் ஒரு இலக்கை நோக்கி அழைத்துச் செல்லுவது என்று தான் அறிஞர்கள் சொல்லுவார்கள். இலக்கியம் என்னும் பொழுது அதில் பக்தி யினைப் புகுத்த வேண்டும் என்னும் சிந்தனை புதியதோர் சிந்தனை என்றுதான் கொள்ளல் வேண்டும். அதனைத் தமிழ் சமூகத்தார் செய்திருக்கிறா ர்கள் என்பதிலிருந்து அவர்களின் மனப்போக்குப் புலப்பட்டு நிற்கிறதல்லவா. சுவைத்துப் படிக்கும் இலக்கியத்திலும் பக்தியானது இருக்க வேண்டும் என்னும் கருவா னது மிகவும் உன்னதமான ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டியதேயாகும். எப்ப டியும் வாழலாம் என்று வாழும் வாழ்க்கையைவிட இப்படித்தான் வாழ வேண் டும் என்று வாழுதல்தான் சிறந்த வாழ்வாகும். அப்படி வாழும் வாழ்வினைத் தான் “வையத் துள் வாழ்வாங்கு வாழுதல்” என்கின்றோம். அப்படி வாழ்வதற்கு உரிய வழியினைக் காட்டிடக் கைகொ டுத்து நிற்கும் நிலையில் முகிழ்த்ததுதான் பக்தி இலக்கியம் என்னும் புதுக்கரு என்று கூட எடுத்துக் கொள் ளலாம் அல்லவா!

    பக்தியினால் பக்குவம் வருகிறது. பக்தியினால் பண்பு வளர்கிறது. பக்தியினால் அன்பு துளிர்க்கிறது. பக்தியினால் உயர்வு தாழ்வு அகல்கிறது. பக்தியினால் தர்மம் செழிக்கிறது. அறம் மலர்கிறது. பக்தி யினால் விருந்தோம்பல் சிறக்கிறது. பக்தியினால் ஒழுக்கம் உயர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நல் லதோர் சமூகமே உருவாகிறது என்பதுதான் கருத்திருத்த வேண்டிய கருத்தெனலாம். இவை எல்லாவற்றையும் மனமிருத்தி பக்தி இலக்கியப் பாதையிலே ஒருவர் ஆசையுடன் பயணிக்கிறார். அந்தப்பயண த்தை அவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் யாவருக்கும் பயன்படும் வண்ணம் ஆக்கியும் விட்டிருக்கிறார் என்பது இங்கு நோக்கத்தக்கதாகும். அப்படி பயணிணித்த அவர் பக்தியினால் ஒரு பரிசினையும் எமக்கெல்லாம் வழங்கியும் நிற்கிறார். அந்தப் பரிசு என்ன என்று அறிந்திடும் ஆவல் எழுகிறதல்லவாஅந்தப்பரிசுதான் “பெரிய புராணம்”. பக்தியின் பரிசாக எமக்கெல்லாம் பயனுற வழங்கியர் தான் “சேக்கிழார் பெருமான்”.. இவரின் பரிசின் பெருமை காரணமாக  “பக்திச்சுவை நனி  சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” என்று தமிழுலகமே இவரை வியந்து போற்றி நின்றது.

    நாயன்மார்களும் பக்தியினைப் பாடினார்கள். ஆழ்வார்களும் பக்தியினைப் பாடினார்கள். அவர்களின் பக்தியின் அனுபவம் வேறாக இருந்தது. அந்த அனுப வங்கள் அத்தனையும் அவர்களுக்கு வாய்த்த அனுபவங்களின் வெளிப்பாடாக வேதான் இருந்திருக்கிறது. ஆனால் சேக்கிழார் காட்டும் பக்தி அனுபவமும் அதற்காக எடுத்துக் கொண்ட முறையும் முற்றிலும் வேறு பட்டதாகவே காணப்படுகிறது. ஆண்ட வனின் அருளினை அடியார்கள் தங்களின் திருப்பாடல்கள் வாயிலாக எமக்கெல்லாம் காட்டி நின்றார்கள். அந்த அடியார்களையும் அவர்களின் பக்தியின் நிலையினையும்பக்குவத்தையும் யாவருக்கும் காட்டும் புதிய உத்தியினையே வெளிப்படுத்தும் நிலையில் சேக்கிழாரின் செயலமைந்தது என்பதுதான் இங்கு முக்கிய திருப்பமாய் அமைகிறது எனலாம்.

    சேக்கிழார் காட்டும் அடியார்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதமானவர்கள். அவர்களின் சிந் தனைசெயல்கள் அனைத்துமே மாறுபாடானவை. அது மட்டுமட்டுமல்ல வேறு பாடானவையாயும் அமைந்திருந்தன. ஆனால் அவர்கள் அனைவரையும் பக்தி என்னும் ஒரு குடைக்கீழ் வந்து நிற்கச் செய்கிறார் சேக்கிழார் என்பதுதான் மிகவும் சிறப்பாகும். அப்படி அவரின் குடைக்குள் வந்து நிற்கும் வித்தி யாசமான ஒரு அடியார்தான் , “தன்னையே மறந்து கண்ணையே கொடுத்த கண்ணப்பர்.”

    பெரியபுராணத்தில் பல அடியார்களின் பக்தியின் நிலையினைப் பார்க்கலாம். ஆனால் கண்ணப்பரின் நிலையினை இக்காலச் சமூகத்தார் ஏற்றுக் கொள்ளுவார்களா என்னும் கோணத்தில், சேக்கிழாரின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து, சேக்கிழாரின் சிந்தனை எப்படி அமைகிறது என்பதைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் அல்லவா !

    சரியை, கிரிகை, யோகம், ஞானம், என்னும் படிமுறைகளில் அடியார்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பக்தி செய்யும் பாங்கும் இருந்திருக்கிறது என்பதுதான் பொதுமையான கருத்து நிலையாகும். இந்த படி முறைக்குள்தான் ஏதாவது ஒன்றில்த்தான் எங்களின் பக்தியின் பாதையும் அமைந்து இருக்கிறது. இந்தப் படிமுறைகள் பற்றிக் கற்றுணர்ந்தவர்களே பெரும்பாலும் அறிந்தவர்களாக இருப்பார்கள். சாதாரணமானவர்களோ தங்களுக்குப் பொருந்தும் வண்ணம் பக்தியினை வெளிப்படுத்தி நிற்பார்கள். பக்தியெனும் பொழுது அங்கே அறிவு முக்கியமாக அமையாது உணர்வுதான் மேலோங்கி முக்கியமாகி முன் வந்து நிற்கிறது என்பதுதான் யதார்த்தமாகும். இவ்வாறு உணர்வு எழும் நிலையி லும் எழுகின்றவர்களின் தன்மைக்கு ஏற்பவே அது அமையும் என்பதுதான் முக்கியமாகும். ஒருவர் உணர்வு மேலீட்டால் செய்வது போன்று இன்னொருவரும் செய்வார் என்று எதிர்பார்த்திடவே கூடாது. இந்த நோக்கில்த்தான் சேக்கிழார் கண்ணப்பரை நோக்குகிறார். எங்களுக்கும் காட்டுகிறார்.

    வெல் படைத் தறுகண் வெஞ்சொல்
    வேட்டுவர் கூட்டம் தோறும்
    கொல் எறி குத்து என்று
    ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்

    கண்ணப்பர் பிறந்த சூழலை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து சேக்கிழார் காட்டுவது மிகவும் முக்கியமான கருத்தெனலாம். “கொல்எறி குத்து ” என்னும் ஓசைதான் அங்கே முன்னிற்கும் ஓசையாகக் காட்டப்படுகி றது.

    மைச்செறிந் தனைய மேனி
    வன்தொழில் மறவர் தம்பால்
    அச்சமும் அருளும் என்றும்
    அடைவிலார் உடைவன் தோலார்
    பொச்சையி னறவும் ஊணின்
    புழுக்கலும் உணவு கொள்ளும்
    நச்சழற் பகழி வேடர்

    கண்ணப்பரின் வேடர் கூட்டம் கரிய மேனியைக் கொண்டவர்அச்சம் என்பது அவர்களிடம் இல்லை. அதேவேளை அருளுங்கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் தொழிலே கொடுந்தொழிலாகவே இருப்பதாய் சேக்கிழார் படம் பிடிப்பதுபோல் ஆரம்பத்திலே காட்டி நிற்கிறார். அதுமட்டுமல்ல கண்ணப்பரின் தகப்பன் குற்றமே குணமாகக் கொண்டிருக்கிறானாம். காரணம் அவனின் இந்தப்பிறவியில் அவனுக்கு வாய்த்த சூழலேயாகும். அதனால் அவன் கொலை செய்யவும் அஞ்சா நிலையினை உடையவனாகவே காணப்படுகிறான். அப்படி இருக்க அவனுக்கு எப்படி கண்ணப்பராகப் போகின்றவர் பிள்ளையாகப் பிறக்க முடிந்தது என்னும் ஐயம் எழுத்தானே செய்யும்அதற்கும் பொருத்தமாய் சேக்கிழார் பதிலினைப் பகர்ந்து நிற்கிறார்.

    பெற்றியால் தவமும் செய்தான்
    ஆயினும் பிறப்பின் சார்பால்
    குற்றமே குணமா வாழ்வான்
    கொடுமையே தலைநின் றுன்னான்

    முற்பிறப்பில் செய்த தவப்பயனால்த்தான் கண்ணப்பர் அவனுக்குப் பிள்ளையாக வாய்க்கும் நல்வாய்ப்புக் கிடைத்திருக்கிறதாம் என்பதையே “பெற்றியால் தவமும் செய்தான்” என்று சேக்கிழார் தகுந்த பதிலாகக் காட்டுகின்றார். ஆனால் இப்பிறப்பில் கண்ணப்பரின் தந்தையின்  இயல்பு வேடர்க்குரியதாகவே ஆகிவிட்டது என்பதையும் சேக்கிழார் காட்டி நிற்கத் தவறவே இல்லை என்பதைத்தான் இப்பாடலின் அடுத்த வரிகள் காட்டி நிற்கின்றன.

    வேடர் குலத் தலைவனுக்கு எல்லாவளமும் இருந்தும் பிள்ளைச் செல்வம் இல்லா நிலையில் தங்களின் குலதெய்வமான முருகக்கடவுளை வேண்டி நிற்கிறான். அவனின் முன்வினைப் பயனாக ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. வேடர் குலமே ஆனந்தப் பரவசப்பட்டு நிற்கிறது. பிறந்த குழந்தையை தந்தை ஆசையுடன் தூக்குகிறான். அந்தக் குழந்தை மற்றைய குழந்தைகள் போலல்லாமல் கனமாக அதாவது திண்மையாக இருந்தத படியால் “திண்ணன்” என்று பெயர் சூட்டி மகிழ்கிறான். வேடர் குலமே திண்ணன்திண்ணன் என்று வானைத் தொட கோஷமிட்டு நிற்கிறது. திண்ணன் என்னும் பெயரும் கூட பின்னால் வரப்போகின்ற நிகழ்வுக்கு கட்டியங் கூறுவதாக அமைகிறதோ என்பதும் சிந்திக்க வேண்டியதேயாகும். தன்னையே இழக்கும் திடம் அதாவது திண்ணம் அவனின் கருவிலேயே கருக்கொண்டு விட்டிருக்கிறது என்பதைத்தான் தந்தையின் வாயிலிருந்து அந்தக் குழந்தைக்குப் பெயராக வாய்ததோ என்றும் எடுத்துக் கொள்ளும் நிலையும் இருக்கிறதல்லவா?

    திண்ணன் வளர்கிறான். வளர்ந்த திண்ணன் வேடர்குல வழக்கப்படி காட்டுக்குக் கன்னி வேட்டையாடச் செல்கிறான். அவனுடன் வேடர்கள் பலர் செல்கிறார்கள் வேட்டை நாய்களும் செல்லுகின்றன. திண்ணனின் அணுகு தொண்டராக நாணன் என்பவனும் காடன் என்பவனும் கூடவே செல்கிறார்கள். வேட்டையின் பொழுது முரட்டுப் பன்றி ஒன்றினால் திண்ணனும் கூட் டமும் களைத்தே போகும் நிலை உண்டாகிறது. களைத்தாலும் திண்ணனின் தீரத்தால் அந்த மூர்க்கமான பன்றி குத்திக் கொல்லப்படுகிறது.களைத்த திண்ணன் நீரருந்தும் இடத்தை நாட நிற்கும் நிலையில் அவனுடன் வந்த நாணன் பக்கத்தில் பொன்முகலி ஆறு இருக்கிறது என்னும் செய்தியைச் சொல்லி அவனை அழைத்துச் செல்லுகிறான். ஆற்றில் நீருண்டு களைப்பாறும் திண்ணனுக்கு அங்கிருக்கும் மலைபற்றிச் சொல்லுகிறான். திண்ணனும் மலையிலேறி மலைவளத்தைப் பார்த்திட விரைகிறான். அங்கு குடுமித்தேவரைக் காணுகிறான். அதன் பின் அவன் எப்படியெல்லாம் நடந்து கொள்ளுகிறான் என்னும் கதைகளை நாமனைவருமே நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.

    திண்ணன் என்னும் வேடன், ஒரு காடன், எப்படி இவ்வாறு ஆகினான் என்பதுதான் அனைவரின் மனத்திலும் இன்றுவரை எழுந்து கொண்டே இருக்கும் கேள்வி எனலாம். கொத்து, வெட்டு, கொல்லு, என்னும் சூழலைக் கொண்ட இடத்தில் பிறந்தவன். அன்பு என்றால் என்னவென்றே விளங்காதவன், சமயம் தெரியாதவன், தத்துவம் என்றால் என்னவென உணராதவன், எப்படித் தன்னையே மறந்தான். தன் கண்ணையே பிடுங்கினான்! புரியாத புதிராக இருக்கிறதல்லவா? அன்பு என்பது சாதாரணமானது அல்ல! இதனால்த்தான் “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்றார் வள்ளுவப் பேராசான் என்று எண்ணத் தோன்றுகிறது. மாறா அன்பு ஒருவரிடம், ஒரு இடத்தில் ஏற்பட்டுவிடுமானால் அந்த நிலையில் செய்யப்படும் அனைத்துமே வியப்புக்குரியதாக,  நினைத்துமே பார்க்க முடியாததாகவேதான் அமைந்துவிடும். அந்த வியப்பினையே திண்ணன் தன் கண்ணைப் பிடுங்கி அப்பிய நிலையும் எனலாம். தவமிருந்து பெற்ற பிள்ளையை தாய் பிடிக்க தந்தை வாளால் வெட்டுகிறார். நடக்குமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? எப்படி நடந்தது? தன்னை மறத்தலும். தன்னையே இழத் தலும்தான் இதன் அடிப்படை எனலாம்.

    முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
    பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
    அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
    தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

    தன்னை மறக்கும் நிலை பற்றி இத்திருப்பாடலின் கருத்தாகவேதான் திண்ணனின் செயலும் அமைந்திருக்கிறது.

    நல்வினையும், தீவினையும், ஆன்மாவைப் பற்றியபடியேதானிருக்கும். நல்வினை இறை நாட்டத்துக்கு அழைத்துச் செல்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். அவ்வேளை தீவினை தடுத்திட முன்வந்து நிற்கும். நல் வினையானது முந்திக்கொள்ளும் பொழுது தீவினை செயலற்றுப் போய் விடுகிறது. ஆண்டவனை ஆன்மா அடையும் பொழுது நல்வினையினையையும் விட்டு விட வேண்டும். இருவினைகளும் அறும் பொழுது இறை நிழல் ஆன்மாவுக்கு வாய்க்கிறது என்பதுதான் தத்துவ நிலையாகும். திண்ணன் என்னும் ஆன்மாவைச் சுற்றி நாணன் என்னும் நல்வினையும், காடன் என்னும் தீவினையும் நிற்கிறது. பன்றியைக் கொன்று காடனிடம் ஒப்படைத்த பின்னர் திண்ணன் என்னும் ஆன்மாவுக்கு நாணன் என்னும் நல்வினைதான் மலையைக் காட்டுகிறது. குடுமித் தேவர் இருக்கிறார் என்பதையும் சொல்லுகிறது. திண்ணன் என்னும் ஆன்மாவை நாணன் என்னும் நல்வினை கூட்டிச் செல்லுகிறது ஆனால் ஒரு கட்டத்தில் நல் வினையாகிய நாணணனையே ஆன்மாவாகிய திண்ணன் ஒதுக்கியே விடுவதையே காண்கிறோம். நல்வினையும், தீவினையும், ஒதுக்கப்பட்ட நிலையில்த் தான் இறைவனை ஆன்மாவால் நெருங்க முடிகிறது. இறைவனின் அருளுக்கும் பாத்திரமாகவும் முடிகிறது. இவ்வாறு தான் கண்ணை அப்பிய கண்ணப்பரை நாம் பார்க்க வேண்டும்.

    கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
    ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
    கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
    வீடும் வேண்டா விறலின் விளங்கினார்

    கண்ணப்பரின் நிலைக்கு மிகவும் பொருத்தமாக இத்திருப்பாடல் இருக்கிற தல்லவா! திண்ணன் என்னும் பெயருடன் இருந்த வேடன், கண்டதும் தன்னை இழந்து, தன் கண்ணையே இழக்கிறான் எனும் பொழுது அவனிடத்து ஏதாவது எதிர்பாப்ர்பு இருந்திருக்கிறதா என்றால், அங்கு எதுவுமே இல்லை என்றுதான் விடை சொல்ல வேண்டும். “வீடும் வேண்டா விறல்” என்பதுதான் கண்ணை அப்பிய நிலையில் திண்ணனிடம் காணப்பட்டிருக்கிறது என்பதுதான் பொருத்தமாய் அமைகிறது. குடுமித் தேவரின் கண்ணிலிருந்து இரத்தம் வடிவதற்கு உரிய மருந்து தன்னுடைய கண்ணைப் பிடுங்கி வைப்பதுதான் என்று எண்ணினானே அன்றி, பிடுங்கி வைத்தால் தனக்கு அதனால் பெருவரமோ, அல்லது உரமோ கிடைக்கும் என்று அவன் கருதவே யில்லை. இதனால்த்தான் இறைவனாலே ஆட்கொள்ளப்பட்டு ஆறாம் நாளே முத்தியின்பத்தைப் பெறும் நிலை க்கு ஆளாகியும் விடுகிறான்.

    கண்ணை அப்பிய வேடன் திண்ணன் “கண்ணப்ப நாயனார்” என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டு அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராய் குருபூசை செய்து வணங்கும் நிலைக்கு வந்தமை என்பது எதனைக் காட்டுகிறது என்றால் அப்பளுக்கில்லா, ஆசையில்லா அன்பின் உச்சநிலையினையே காட்டுகிறது என்பதுதான் உண் மையாகும். இதனால்த்தான் அன்பு என்று வரும்பொழுது அங்கே கைகாட்டப்படும் நிலை கண்ணப்பருக்கு மட்டுமே உரித்தாகி நிற்கிறது.கண்ணப்பரை அன்புக்காகக் கைகாட்டுபவர்யார் தெரியுமா அவர்தான் “மெய்தானரும் பும் வண்ணம்” திருவாசகம் தந்த மணிவாசகப்பெருமான்.

    கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
    என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட் கொண்டருளி
    வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
    சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ

    கண்ணப்பரை மணிவாசகர் காட்டினார். எம்பெருமானே கண்ணப்பரின் அன்பின் உயர்வினைக் காட்டு வதாக சேக்கிழார் தரும் இச்செய்திதான் மிகவும் உச்சமான உயர்வுடை செய்தியாகும். இது ஒன்றே கண்ணப்பரைக் காட்டுவதற்குப் போதுமானதாக இருக்கும் அல்லவா!

    அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கம் அன்பென்றும்
    அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
    அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும்
    அவனுடைய நிலையிவ்வா றறிநீயென் றருள்செய்வார்

    Share
  • திருமலை நாயக்கர் மஹால் | 4K

    திருமலை நாயக்கர் மஹால் | 4K

    ஓவியர் ஸ்யாம் அண்மையில் மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்குச் சென்றபோது எடுத்த படங்கள், 4K தரத்தில். பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி – 18

    சௌந்தர்ய லஹரி – 18

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினெட்டாவது ஸ்லோகம். இந்தப் பாடலை ஸ்ரீ வசியகரம் என்பர். இந்தப் பாடலைச் சொல்பவர்களுக்கு மூவுலகப் பெண்களும் வசியம் ஆவார்கள் என்பது மேலோட்டமான பொருள். அப்படியானால், இதன் உட்பொருள் என்ன? எளிய தமிழில் மதுமிதா விளக்குவதைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஏறு மயில் ஏறி | அருணகிரிநாதர்

    ஏறு மயில் ஏறி | அருணகிரிநாதர்

    வீறுகவி அருணகிரிநாதர் பாடிய ‘ஏறு மயில் ஏறி’, இதோ கிருஷ்ணகுமார் குரலில். கேட்டு மகிழுங்கள். தை கிருத்திகையைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாயில்லாச் சேய்கள்

    தாயில்லாச் சேய்கள்

    சி. ஜெயபாரதன், கனடா

    மண்ணை நம்பி
    மரம் இருக்குது செல்லப் பாப்பா.
    மழையை நம்பி
    மண் இருக்குது நல்ல பாப்பா.
    காற்றை நம்பி
    மழை பொழியுது கண்ணு பாப்பா.
    மரத்தை நம்பி
    குருவி வசிக்குது கருத்த பாப்பா.
    பயிரை நம்பி
    பறவை தேடுது உறவு பாப்பா.
    உயிரை நம்பி
    உடல் உள்ளது கண்ணு பாப்பா.
    உடலை நம்பி
    உயிர் இருக்குது சின்ன பாப்பா.
    தாயை நம்பி தொட்டிலில்
    சேய் தூங்குது செல்லப் பாப்பா.
    சேயை நம்பி
    தாயும் பால் கொடுப்பாள்
    தங்கப் பாப்பா.
    பெத்த தாய் ஏன்
    பெண் சிசுவை அழிப்பதெனக்
    கேளு பாப்பா ?
    குப்பைத் தொட்டியை
    எட்டிப் பார்த்தால்
    “இங்கா, இங்கா” மழலை கேட்குது
    தங்கப் பாப்பா.
    முதியோரைக் கண்காணிப்பு
    இல்லத்திலே
    தள்ளுவது ஏனென்றும்
    கேளு பாப்பா?
    ஊருலகில் வாழ்வதற்கு
    யாரை நம்பி யார் இருக்கார்
    கூறு பாப்பா ?

    Share
  • வழிகாட்டும் தெய்வம் கண்டேன்

    வழிகாட்டும் தெய்வம் கண்டேன்

    தை கிருத்திகையில் முருகனை வணங்கினால், மும்மடங்கு பலன் கிட்டும் என்பர். வழிகாட்டும் தெய்வம் கண்டேன் என்ற அழகிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். இந்தத் தை கிருத்திகையில், குமரனை வணங்கி அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 43

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 43

    -மேகலா இராமமூர்த்தி

    சுந்தர காண்டத்தின் இறுதிப் பகுதியாக அமைந்திருப்பது ’திருவடி தொழுத படலம்.’ இந்தப் பெயரை நோக்கும்போது இலங்கையிலிருந்து புறப்பட்ட அனுமன், கிட்கிந்தை சேர்ந்து இராமனின் திருவடிகளைத் தொழுததைப் பற்றிப் பேசும் படலமிது என்றுதான் எண்ணுவோம். அது சரிதானா? என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு அனுமன் இலங்கையைக் கடந்துசென்று தன் நண்பர்களைப் பழைய இடத்தில் சந்தித்தபோது நிகழ்ந்தவை குறித்து அறிந்துகொள்வோம்.

    இலங்கையை எரியூட்டியபின்பு சீதையை மீண்டும் சந்தித்து அவள் பத்திரமாக இருக்கின்றாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட அனுமன், இலங்கையின் அருகிலிருந்த ’அரிஷ்டம்’ என்ற குன்றிலேறி வான்வழியே விரைந்துசென்று மகேந்திர மலையில் தனக்காகக் காத்திருந்த தோழர்களைச் சந்தித்தான்.

    அனுமன் கடல்தாவி இலங்கை சென்றதை மிக விரிவாய்ப் பாடிய கவிச்சக்கரவர்த்தி, அவன் மீண்டும் தன் பழைய இடத்திற்குத் திரும்பிவந்த நிகழ்வை வளர்த்தாமல் இரண்டே பாடல்களில் சொல்லி முடித்துவிடுகின்றார்.

    எவற்றை விரிவாய்ச் சொல்லவேண்டும்; எவற்றைச் சுருங்கச் சொல்லவேண்டும் எனும் கதையமைப்புத் திறனில் அவருக்கிருக்கும் புலமையை இது புலப்படுத்துகின்றது.

    இலங்கை சென்ற அனுமனின் நிலையென்னவோ எனும் கலக்கத்தோடும் அச்சத்தோடும் மகேந்திர மலையில் காத்திருந்த வானரர்கள், அவன் வரவைக் கண்டதும் கூட்டிலிருந்த பறவைக் குஞ்சுகள் வெளியில் சென்ற தம் தாயின் வரவைக் கண்டதுபோல் உவகையுற்றனர்.

    …பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவைப் பார்ப்புத்
    தாய் வரக்கண்டதன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா.
    (கம்ப: திருவடி தொழுத படலம் – 6009)

    அங்கதன், சாம்பவான் முதலியோரையும் ஏனைய வானரர்களையும் அவரவர்க்கு ஏற்றவகையில் வணங்கிய அனுமன், சீதை அவர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிக்கச் சொன்னதைத் தெரிவித்தான்.

    வானரர்கள் அனைவரும் இலங்கையில் நிகழ்ந்தவற்றை உரைக்கச் சொல்லி அனுமனிடம் கேட்கவே, அங்கே தான் சந்தித்த சீதாப் பிராட்டியின் கற்பொழுக்கத்தின் சிறப்பையும், அவள் இராமனிடம் அடையாளமாய்க் காட்டச்சொல்லிக் கொடுத்த சூடாமணியைப் பற்றியும் குறிப்பிட்ட அனுமன், தான் அங்கு அரக்கர்களோடு போர்புரிந்து பெற்ற வென்றிகள் குறித்தோ, இலங்கையை எரியூட்டிய தன் திறன் குறித்தோ ஏதும் சொல்லாது விடுத்தான் தற்புகழ்ச்சிக்கு நாணி!

    ஆண்தகை தேவி உள்ளத்து அருந்தவம் அமையச் சொல்லி
    பூண்டபேர் அடையாளம் கைக்கொண்டதும் புகன்று போரில்
    நீண்டவாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்புச் சிந்தி
    மீண்டதும் விளம்பான் தான்தன் வென்றியை உரைப்ப வெள்கி.
    (கம்ப: திருவடி தொழுத படலம் – 6015)

    தற்புகழ்ச்சியில் திளைப்பது அற்பர்கள் குணம்; நற்குணமும் நல்லறிவும் பெற்ற சான்றோர் அதனை விரும்புவதில்லை என்பதற்கு அனுமனின் அடக்கம் சான்றாய் அமைகின்றது.

    அனுமன் தன்னுடைய பெருமையைத் தானுரைக்க விழையாவிடினும் அவன் உடலில் காணப்பட்ட புண்களும், இலங்கை நகரிலிருந்து எழுந்த புகையும் அங்கு நிகழ்ந்தவற்றை வானரர்களுக்குத் தெளிவாய் உணர்த்திவிட்டன.

    இலங்கை நிகழ்வுகளை இராமனிடம் விரைவில் உரைக்கவேண்டும் எனும் எண்ணத்தோடு வானரர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு கிட்கிந்தை வந்தனர். அங்குள்ள மதுவனம் எனும் சோலையை அடைந்தவர்கள், அலுப்புத்தீர தேனுண்டு களித்தனர்; களிப்பு மிகுதியில் அச்சோலைக்குச் சேதம் விளைவிக்கவும் தொடங்கினர். அதனையறிந்த அவ்வனத்தின் காவலன் ததிமுகன் என்பவன் தன் சேவகர்களோடு அங்குவந்து அங்கதன் உள்ளிட்ட வானரர்களோடு சண்டையிட்டான். அங்கதனும் அவனுடைய சேனையும் ததிமுகனையும் அவனுடைய சேவகர்களையும் கடுமையாய்த் தாக்கி விரட்டிவிட்டு அங்கேயே இளைப்பாறிக் கொண்டிருந்தது.

    வானரர்கள் சோலையில் இளைப்பாறிக் கொண்டிருக்கட்டும். நாம் இராம இலக்குவரின் தற்போதைய நிலையென்ன என்பதை அறிந்துவருவோம் புறப்படுங்கள்!

    சீதையின் பிரிவால் வாடிக்கொண்டிருந்த இராமனைக் கதிர் மைந்தனாகிய சுக்கிரீவன் நம்பிக்கை மொழிகள் சொல்லித் தேற்றிக்கொண்டிருக்கின்றான். அம்மொழிகளால் இராமனும் சிறிது மனம்தேறியவனாய்க் காணப்பட்டான். வடக்கு கிழக்கு மேற்கு திசைகளில் சீதையைத் தேடிச்சென்ற வானரர்கள் சீதையைக் காணாது திரும்பிவிட்டமை வருத்தத்தைத் தந்தாலும், தென்திசை சென்ற திறலுடை அனுமனிடமிருந்து நல்ல செய்தி வரும் என்ற எதிர்பார்ப்பே அவன் உயிரைப் பிடித்து வைத்திருந்தது.

    எனினும், குறித்த கெடு தாண்டியும் தென்திசைச் சென்றோர் திரும்பாமை இராமனுக்குக் கவலையையும் அளிக்கவே, அவர்களுக்கு என்னவாயிருக்கக் கூடும் என்பது குறித்த தன் ஐயங்களைச் சுக்கிரீவனிடம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தான். அப்போது குருதிவழியும் முகத்தோடு அங்கு வந்த ததிமுகன், அங்கதனும் அவனுடைய சேனையும் மதுவனத்தில் நுழைந்து அட்டகாசம் செய்ததையும் தட்டிக்கேட்கச் சென்ற தன்னையும் தன் சேவகர்களையும் தாக்கியதையும் சுக்கிரீவனிடம் வருத்தத்தோடு தெரிவித்தான்.

    அதுகேட்ட சுக்கிரீவன், ”தென்திசைச் சென்றவர்கள் சீதையைக் கண்டு திரும்பியிருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சித் திளைப்பில்தான் மதுவனத்தில் அவர்கள் இவைபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும்” எனும் தன் ஊகத்தை இராமனிடம் வெளிப்படுத்திவிட்டுத் ததிமுகனை நோக்கி, ”மகிழ்ச்சியில் அவர்கள் செய்த இச்செயல்களைப் பெரிதுபடுத்த வேண்டா; அத்தோடு, வாலி சேயான அங்கதனின் அரசல்லவா இது? எனவே, அவனைத் தண்டித்தல் முறையாகா! அவனிடம் நீ சரணடைதலே சரியானது!” என்றுகூறித் ததிமுகனைத் திருப்பியனுப்பினான்.

    திரும்பிவந்த ததிமுகன் அங்கதனைத் தொழுது வணங்கவே, அவர்களுக்குள் பிணக்கம் தீர்ந்து, இணக்கம் பிறந்தது. இனியும் தாமதித்தல் சரியில்லை என்றுணர்ந்த வானரர்கள் அனுமனை இராமனிருக்கும் இடத்திற்கு முதலில் அனுப்பினர்.

    கீழ்த்திசைச் சூரியன் தெற்கிலிருந்து வருவதுபோன்ற ஒளியோடு தென் திசையிலிருந்து இராமனை நோக்கி வந்தான் வன்திறல் அனுமன். வந்தவன், இராமனைத் தொழுதானா என்றால் இல்லை! ”தாமரை மலரினின்று நீங்கிய தையலான சீதாப் பிராட்டியை அவளிருக்கும் தென்திசை நோக்கிய தலையையும் கைகளையும் உடையவனாய்த் திரும்பி, நிலத்தில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கி அவளை வாழ்த்தினான்” என்கிறார் காப்பியக் கவிஞர் கம்பர்.

    எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்தன்
    மொய்கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
    தையலை நோக்கிய தலையன் கையினன்
    வையகம் தழீஇநெடிது இறைஞ்சி வாழ்த்தினான்.
    (கம்ப: திருவடி தொழுத படலம் – 6028)

    சீதை, கற்புத் திண்மையுடன் இலங்கையில் இருக்கிறாள் என்பதை உணர்த்தவே அறிவிற் சிறந்த அனுமன், இராமனைக் கண்டவுடன் அவனைத் தொழாது சீதையிருந்த திக்கில் வீழ்ந்து வணங்கினான் என்பதே அவன் செய்கை உணர்த்தும் உட்பொருள்.

    எனவே, ’திருவடி தொழுத படலம்’ எனும் தலைப்பு அனுமன் சீதையின் திருவடியைத் தொழுதமையையே குறிக்கின்றது என்று நாம் பொருள்கொள்ளவே கம்பரின் இப்பாடல் இடமளிக்கின்றது.

    அனுமனின் செய்கையால், ”அனுமன் சீதையைக் கண்டிருக்கின்றான்; அவள் கற்புத்திறனும் சிறப்பாகவே இருக்கின்றது” என்பதை உய்த்துணர்ந்து உவகைகொண்டான் இராமன்.

    வந்தவுடன் வளவளவென்று பேசாமல் குறிப்பிலேயே தான் கொண்டுவந்திருக்கும் நற்செய்தியை உணர்த்தியது அனுமனின் மதிநுட்பம்; அந்தக் குறிப்பை உடனே உணர்ந்துகொண்டது இராமனின் நுண்ணறிவு.

    இராமனின் மனம் கொந்தளிப்பு நீங்கி அமைதிகொண்ட நிலையில், அவனிடம் இலங்கையில் நிகழ்ந்தவற்றை உரைக்கத் தொடங்குகின்றான் அனுமன்.

    ”தேவர்களுக்குத் தலைவனே! கற்பினுக்கு ஓர் அணிகலனாய்த் திகழ்கின்ற பிராட்டியைத் திரைகடல்சூழ் இலங்கை நகரில் என் கண்களால் கண்டேன்; இனி, பிராட்டியின் நிலைகுறித்த ஐயத்தையும் இதுவரை நீ கொண்டிருந்த துயரத்தையும் துறப்பாய்!” என்றான் அனுமன்.

    கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
    தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்நகர்
    அண்டர் நாயகஇனி துறத்தி ஐயமும்
    பண்டுள துயரும் என்று அனுமன் பன்னுவான்.
    (கம்ப: திருவடி தொழுத படலம்: 6031)

    இப்பாடலில் பயின்று வந்துள்ள ’கண்டனென்’ என்ற சொல் ’த்ருஷ்டா ஸீதா’ என்ற வான்மீகத்தின் தொடரைத் தழுவியது. எனினும், அதனை அடுத்துள்ள ’கற்பினுக்கு அணியை’ என்ற கம்பரின் சொல்லாடல், ‘ஸீதா’ எனும் மூலநூலின் சொல்லைவிட ஆழ்ந்த நுணுக்கமான பொருளை உணர்த்துவதாய் அமைந்துள்ளது.

    ”ஐய! தவம் என்பது செய்த தவத்தின் வடிவமாய்த் திகழும் தையலான சீதை, கடலிடையுள்ள இலங்கை எனும் பெரிய நகரின் ஒருபுறத்தில் விண்ணை அளாவி நிற்பதும் காலை மாலை எனும் வேறுபாடின்றி ஒரேவிதமாய் விளங்குகின்ற பொன்மயமான கற்பகத் தருவை உடையதுமான ஒரு பூஞ்சோலையினுள்ளே உன் தம்பி இலக்குவன் புற்களைக் கொண்டு வேய்ந்து அமைத்த தூய்மையான அதே பன்னசாலையில் தங்கியிருந்தாள்” என்றுரைத்தான் அஞ்சனையின் அரும்புதல்வன்.

    வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய்
    காலையும் மாலைதானும் இல்லதுஓர் கனகக் கற்பச்
    சோலை அங்குஅதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
    சாலையில் இருந்தாள்ஐய தவம் செய்த தவம்ஆம் தையல்.
    (கம்ப: திருவடி தொழுத படலம் – 6037)  

    வான்மீகத்தில் இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிச் செல்வதாய்க் கதை அமைந்திருக்கும். ஆனால், கம்பநாடர் தம் காப்பியத்தில் அவ்வாறு அமைக்காது, பன்னசாலையுடனேயே இராவணன் சீதையைத் தூக்கிச் செல்வதாய்த் தமிழ்மரபுக்கு ஏற்றவகையில் காப்பியத்தை மாற்றியமைத்திருந்தமையை முன்னரே கண்டோம். அந்தப் பன்னசாலையிலேயே சீதையை இராவணன், அசோகவனத்தில், சிறை வைத்திருந்தான் எனும் வகையில் காப்பியத்தைத் தொடரும் கம்பர், அச்செய்தியை அனுமனின் சொற்கள் வாயிலாக இராமனுக்கு மட்டுமல்லாது காப்பியத்தைக் கற்கின்ற ஏனையோர்க்கும் ஈண்டு அறியத் தருகின்றார்.

    தொடர்ந்து பேசிய அனுமன், ”கற்பிற் சிறந்த பெண்ணொருத்தி தன் கண்களில் உயரிய காதலைத் திரட்டி வைத்துக்கொண்டு, உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற செல்வத்தைப் பெற்ற நீயே உலகில் ஆடவர் பெறவேண்டிய செல்வத்தை முழுதாய்ப் பெற்றவன் ஆனாய்!” என்று இராமனைப் பாராட்டுகின்றான்.

    மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த
    சேண்பிறந்து அமைந்த காதல் கண்களின் தெவிட்டி தீராக்
    காண்பிறந் தமையால் நீயே கண்அகன் ஞாலம் தன்னுள்
    ஆண்பிறந்து அமைந்த செல்வம் உண்டனை யாதி அன்றே.
    (கம்ப: திருவடி தொழுத படலம் – 6043)

    மணமான ஆடவனொருவன் தன் மனையாட்டியின் காதலை முழுமையாய்ப் பெறுவதே அவன் பெறும் பேறுகளில் பெரிய பேறு எனும் அரிய கருத்தை மாணியான அனுமன் வாயினால் இங்குச் சொல்லவைத்த கம்பரின் சிந்தனை நம்மைச் சிலிர்க்கவைக்கின்றது.

    ”நான் தங்களின் கணையாழியை அடையாளமாய்ச் சீதையிடம் கொடுத்தபோது அதுகண்டு நெகிழ்ந்தவள், அதனை மார்புறத் தழுவிக்கொண்டாள்” என்ற அனுமன், “இன்னும் ஒரு மாதம்வரை நான் பிழைத்திருப்பேன்; அதன்பின்னரும் என்னை மீட்க இராமன் திருவுளம் இரங்கவில்லையாயின் உயிர்துறப்பேன்” என்று சீதை சொல்லச் சொன்னதையும் மறவாது இராமனிடம் செப்பினான். 

    இவ்வாறு இருபத்தொரு பாடல்களில் தான் இலங்கையில் சீதையைத் தேடிக் கண்டடைந்தமை, சிறையிருந்த சீதையின் கற்புத்திறம், அவளுரைத்த செய்திகள் ஆகியவற்றை இராமன் மனங்கொள்ளும் வகையில் விளங்கவுரைத்த சொல்லின் செல்வனான அனுமன், பின்பு தன் ஆடையில் முடிந்து வைத்திருந்த ஒளி உமிழும் சூடாமணியை எடுத்து, சீதை தந்த அடையாளமாய், இராமனிடம் காட்டினான்.

    அந்தச் சூடாமணியைத் தன் அங்கையில் வாங்கியபோது மணநிகழ்வின்போது நங்கை சீதையின் கையைப் பற்றிய உணர்ச்சியை அடைந்தான் இராமன். அவன் உரோமங்கள் சிலிர்த்தன; கண்கள் நீரைப் பொழிந்தன; மார்பும் தோள்களும் பூரித்தன.

    அப்போது அங்கதன் முதலிய இதர வானரர்களும் இராமனிடம் வந்துசேர்ந்தனர்.

    ”சீதையை மீட்கும் பணிக்கு எழுக!” என்று தன் படைகளுக்கு ஆணையிட்டான் சுக்கிரீவன். வெள்ளத்தனைய மிகுபடை கிட்கிந்தையிலிருந்து புறப்பட்டது. அனுமனின் வேண்டுகோளின்படி அவன் தோளில் இராமனும், அங்கதன் விருப்பப்படி அவன் தோளில் இலக்குவனும் ஏறிக்கொள்ள, வானர சேனை அணிவகுத்துத் தென்திசை நோக்கிப் பயணித்துக் கடலைச் சென்றடைந்தது.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • சௌந்தர்ய லஹரி – 17

    சௌந்தர்ய லஹரி – 17

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினேழாவது ஸ்லோகம். வாக்குத்தேவிகள் சூழ்ந்திருக்க, அம்பாள் எப்படிக் கொலுவிருக்கிறாள் என்பதை இந்தப் பாடல் விவரிக்கிறது. இந்த நிலையில் உன்னை யார் தியானிக்கிறார்களோ, அவர்கள் அரும்பெரும் காவியங்களை இயற்றும் வல்லமையைப் பெறுகிறார்கள். சொல்லின் செல்வியான அன்னையின் பெருமையை மதுமிதாவின் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பீட்சா ஏன் பிடிச்சிருக்கு? தோசை ஏன் பிடிக்கவில்லை?

    வீட்டு உணவு சலிப்பதற்கும் அயல் உணவு பிடிப்பதற்கும் காரணம் என்ன? சுதா மாதவன் கேள்விக்கு நிர்மலா ராகவன் பதில் அளிக்கிறார். இந்தச் சுவையான கலந்துரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • சௌந்தர்ய லஹரி – 16

    சௌந்தர்ய லஹரி – 16

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் பதினாறாவது ஸ்லோகம், உதய சூரியனை ஒத்த நிறமுடைய அன்னையை வணங்குவதால் கிடைக்கும் பலன்களை இந்தப் பாடல் விவரிக்கிறது. அட்சர சொரூபமான அம்பாளை உபாசனை செய்து வந்தால், கேட்போரையெல்லாம் வசீகரித்துவிடக்கூடிய அபாரமான சொல்வன்மையைப் பெற்றுவிடலாம். இதற்கு நல்ல உதாரணம், காளிதாசர் என்கிறார் மதுமிதா. அவரது இனிய குரலில் எளிய தமிழில் அன்னையைத் தியானிப்போம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ​வாசகர் கடிதம்​:​ இப்படியும் ஒரு கொடுமை

    ​வாசகர் கடிதம்​:​ இப்படியும் ஒரு கொடுமை

    அன்புள்ள ஆசிரியருக்கு,

    வணக்கம்

    விழிப்புணர்வைத் தூண்டிட வேண்டிய தொலைக்காட்சி நாடகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்களை இழிவுபடுத்தி,  தங்களது நாடகங்களின் ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டு  வருவது வேதனையான விஷயம்.

    தமிழகத்தின் பெருமை, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கொள்கையும் குடும்ப வாழ்க்கையும். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒவ்வொருவரின் பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் காரணத்தால், கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை குறைந்துகொண்டே வருகிறது. இது ஒருபுறம் என்றாலும் இந்தத் தொலைக்காட்சிகள் தாங்கள்  ஒளிபரப்பும் நாடகங்கள் மூலம், கொஞ்சமாக இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் கூட்டுக் குடும்பங்களுக்கும் வேட்டு வைத்துக்கொண்டு உள்ளார்கள்.

    எந்த ஒரு நாடகத்தைப் பார்த்தாலும் இரண்டு பொண்டாட்டிகள் அல்லது மணமான ஹீரோவின்  மீது மையல் கொள்ளும்  பெண்கள் எனப் பெண்களை இழிவுபடுத்தியே தொடர்களை இயக்கிக்கொண்டு உள்ளார்கள். இப்படி ஒவ்வொரு கட்டமாகப் பெண்களை இழிவுபடுத்தி இப்போது சமீபத்தில் ஒரு நாடகத்தில் “பள்ளிக்குப் பிள்ளைகளைக் கொண்டு இறக்கிவிட்டு வரும் பெண்ணை வழிமறித்து, செல்பி எடுத்துக் கொடுமை செய்கிறார்கள். அதை அங்கு வரும் வேறு பெண்கள் குத்திக்காட்டிக் கொடுமை செய்யும் புது விதக் கொடுமையைப் பெண்களுக்கு அறிமுகப்படுத்தி  உள்ளார்கள். இந்தக் காட்சியை முன்னிறுத்தி மற்ற நாடக இயக்குநர்களுக்கும் இந்த கான்செப்ட் விரிவுபடுத்தி எடுக்க, கற்பனைக்  குதிரையைத் தட்டிவிட்டு இருப்பார்கள்.

    இதுபோன்ற கொடுமையான காட்சிகளை அடிக்கடி காண்கிறோம். அவர்கள் எடுக்கும் நாடகங்களின் ரேட்டிங் உயர்கிறது என்ற ஒரே காரணத்துக்காக, பெண்களை இழிவு செய்யும் இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். இவற்றைக் கண்டு எந்தப் பெண் விடுதலை இயக்கமும் குரல் கொடுக்க முன்வருவது இல்லை. இதுதான் கொடுமையான விசயம்.

    தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நாடகங்களைத் தணிக்கை செய்ய, சென்சார் போர்டு முன்வர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கான அரசாணை வெளியிட வேண்டும். மாதர் சங்கங்கள் இதுபோன்ற நாடகங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிலையங்கள் முன்பு போராட்டங்கள் நடத்த முன்வரவேண்டும். இதற்கு வல்லமை மின்னிதழ் தகுந்த ஆலோசனைகளை மாதர் சங்கங்களுக்கும் அரசுக்கும் வழங்க வேண்டும் என்பது எனது ஆசை.

    நன்றி

    அன்புடன்
    சித்திரை சிங்கர்
    அம்பத்தூர்

    Share