குறளின் கதிர்களாய்…(389)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(389)
தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.
– திருக்குறள் – 383 (இறைமாட்சி)
புதுக் கவிதையில்…
கடமை செய்யும் காலத்தில்
சோர்ந்து தூங்காமை
கல்வியறிவு
செயலில் துணிச்சல்,
இவை மூன்றும்
நீங்காமல்
நிலைபெற்றிருக்க வேண்டும்
நாடாளும் மன்னவர்க்கே…!
குறும்பாவில்…
விழிப்புடன் சோராருத்தல் கல்வியறிவு
துணிச்சல், இம்மூன்றும் நிறைந்திருக்கவேண்டும்
நாட்டை யாளும் தலைவனுக்கே…!
மரபுக் கவிதையில்…
கடமை செய்கையில் சோராமை
கல்வி கற்றே பெறுமறிவு,
தடங்கல் வரவிலும் அனைத்தையுமே
தாண்டி வெல்ல நற்றுணிச்சல்,
நடப்பு நெறியதாம் இவைமூன்றும்
நல்ல பலனே தருவதாலே,
நடக்கும் ஆட்சியில் நலம்பெறவே
நாட்டை யாள்வோர் தகுதியிதே…!
லிமரைக்கூ…
சோர்ந்திடாமை கல்வி யுடனே
செயலில் துணிச்சல் கொண்டே நல்லாட்சி
நல்குதல் ஆள்வோர் கடனே…!
கிராமிய பாணியில்…
நெறஞ்சிருக்கணும் நெறஞ்சிருக்கணும்
நாடாளும் ராசாவுக்கு நெறஞ்சிருக்கணும்,
நல்லகொணம் நெறஞ்சிருக்கணும்..
சோம்பலுல்லாம படிப்பறிவு
செய்கையில துணிச்சல்
இந்த மூணும்
கட்டாயம் நெறஞ்சிருக்கணும்
அரசாளும் ராசாவுக்கே..
தெரிஞ்சிக்கோ,
நெறஞ்சிருக்கணும் நெறஞ்சிருக்கணும்
நாடாளும் ராசாவுக்கு நெறஞ்சிருக்கணும்,
நல்லகொணம் நெறஞ்சிருக்கணும்…!