கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 43
-மேகலா இராமமூர்த்தி
சுந்தர காண்டத்தின் இறுதிப் பகுதியாக அமைந்திருப்பது ’திருவடி தொழுத படலம்.’ இந்தப் பெயரை நோக்கும்போது இலங்கையிலிருந்து புறப்பட்ட அனுமன், கிட்கிந்தை சேர்ந்து இராமனின் திருவடிகளைத் தொழுததைப் பற்றிப் பேசும் படலமிது என்றுதான் எண்ணுவோம். அது சரிதானா? என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு அனுமன் இலங்கையைக் கடந்துசென்று தன் நண்பர்களைப் பழைய இடத்தில் சந்தித்தபோது நிகழ்ந்தவை குறித்து அறிந்துகொள்வோம்.
இலங்கையை எரியூட்டியபின்பு சீதையை மீண்டும் சந்தித்து அவள் பத்திரமாக இருக்கின்றாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட அனுமன், இலங்கையின் அருகிலிருந்த ’அரிஷ்டம்’ என்ற குன்றிலேறி வான்வழியே விரைந்துசென்று மகேந்திர மலையில் தனக்காகக் காத்திருந்த தோழர்களைச் சந்தித்தான்.
அனுமன் கடல்தாவி இலங்கை சென்றதை மிக விரிவாய்ப் பாடிய கவிச்சக்கரவர்த்தி, அவன் மீண்டும் தன் பழைய இடத்திற்குத் திரும்பிவந்த நிகழ்வை வளர்த்தாமல் இரண்டே பாடல்களில் சொல்லி முடித்துவிடுகின்றார்.
எவற்றை விரிவாய்ச் சொல்லவேண்டும்; எவற்றைச் சுருங்கச் சொல்லவேண்டும் எனும் கதையமைப்புத் திறனில் அவருக்கிருக்கும் புலமையை இது புலப்படுத்துகின்றது.
இலங்கை சென்ற அனுமனின் நிலையென்னவோ எனும் கலக்கத்தோடும் அச்சத்தோடும் மகேந்திர மலையில் காத்திருந்த வானரர்கள், அவன் வரவைக் கண்டதும் கூட்டிலிருந்த பறவைக் குஞ்சுகள் வெளியில் சென்ற தம் தாயின் வரவைக் கண்டதுபோல் உவகையுற்றனர்.
…பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவைப் பார்ப்புத்
தாய் வரக்கண்டதன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா. (கம்ப: திருவடி தொழுத படலம் – 6009)
அங்கதன், சாம்பவான் முதலியோரையும் ஏனைய வானரர்களையும் அவரவர்க்கு ஏற்றவகையில் வணங்கிய அனுமன், சீதை அவர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிக்கச் சொன்னதைத் தெரிவித்தான்.
வானரர்கள் அனைவரும் இலங்கையில் நிகழ்ந்தவற்றை உரைக்கச் சொல்லி அனுமனிடம் கேட்கவே, அங்கே தான் சந்தித்த சீதாப் பிராட்டியின் கற்பொழுக்கத்தின் சிறப்பையும், அவள் இராமனிடம் அடையாளமாய்க் காட்டச்சொல்லிக் கொடுத்த சூடாமணியைப் பற்றியும் குறிப்பிட்ட அனுமன், தான் அங்கு அரக்கர்களோடு போர்புரிந்து பெற்ற வென்றிகள் குறித்தோ, இலங்கையை எரியூட்டிய தன் திறன் குறித்தோ ஏதும் சொல்லாது விடுத்தான் தற்புகழ்ச்சிக்கு நாணி!
ஆண்தகை தேவி உள்ளத்து அருந்தவம் அமையச் சொல்லி
பூண்டபேர் அடையாளம் கைக்கொண்டதும் புகன்று போரில்
நீண்டவாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்புச் சிந்தி
மீண்டதும் விளம்பான் தான்தன் வென்றியை உரைப்ப வெள்கி. (கம்ப: திருவடி தொழுத படலம் – 6015)
தற்புகழ்ச்சியில் திளைப்பது அற்பர்கள் குணம்; நற்குணமும் நல்லறிவும் பெற்ற சான்றோர் அதனை விரும்புவதில்லை என்பதற்கு அனுமனின் அடக்கம் சான்றாய் அமைகின்றது.
அனுமன் தன்னுடைய பெருமையைத் தானுரைக்க விழையாவிடினும் அவன் உடலில் காணப்பட்ட புண்களும், இலங்கை நகரிலிருந்து எழுந்த புகையும் அங்கு நிகழ்ந்தவற்றை வானரர்களுக்குத் தெளிவாய் உணர்த்திவிட்டன.
இலங்கை நிகழ்வுகளை இராமனிடம் விரைவில் உரைக்கவேண்டும் எனும் எண்ணத்தோடு வானரர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு கிட்கிந்தை வந்தனர். அங்குள்ள மதுவனம் எனும் சோலையை அடைந்தவர்கள், அலுப்புத்தீர தேனுண்டு களித்தனர்; களிப்பு மிகுதியில் அச்சோலைக்குச் சேதம் விளைவிக்கவும் தொடங்கினர். அதனையறிந்த அவ்வனத்தின் காவலன் ததிமுகன் என்பவன் தன் சேவகர்களோடு அங்குவந்து அங்கதன் உள்ளிட்ட வானரர்களோடு சண்டையிட்டான். அங்கதனும் அவனுடைய சேனையும் ததிமுகனையும் அவனுடைய சேவகர்களையும் கடுமையாய்த் தாக்கி விரட்டிவிட்டு அங்கேயே இளைப்பாறிக் கொண்டிருந்தது.
வானரர்கள் சோலையில் இளைப்பாறிக் கொண்டிருக்கட்டும். நாம் இராம இலக்குவரின் தற்போதைய நிலையென்ன என்பதை அறிந்துவருவோம் புறப்படுங்கள்!
சீதையின் பிரிவால் வாடிக்கொண்டிருந்த இராமனைக் கதிர் மைந்தனாகிய சுக்கிரீவன் நம்பிக்கை மொழிகள் சொல்லித் தேற்றிக்கொண்டிருக்கின்றான். அம்மொழிகளால் இராமனும் சிறிது மனம்தேறியவனாய்க் காணப்பட்டான். வடக்கு கிழக்கு மேற்கு திசைகளில் சீதையைத் தேடிச்சென்ற வானரர்கள் சீதையைக் காணாது திரும்பிவிட்டமை வருத்தத்தைத் தந்தாலும், தென்திசை சென்ற திறலுடை அனுமனிடமிருந்து நல்ல செய்தி வரும் என்ற எதிர்பார்ப்பே அவன் உயிரைப் பிடித்து வைத்திருந்தது.
எனினும், குறித்த கெடு தாண்டியும் தென்திசைச் சென்றோர் திரும்பாமை இராமனுக்குக் கவலையையும் அளிக்கவே, அவர்களுக்கு என்னவாயிருக்கக் கூடும் என்பது குறித்த தன் ஐயங்களைச் சுக்கிரீவனிடம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தான். அப்போது குருதிவழியும் முகத்தோடு அங்கு வந்த ததிமுகன், அங்கதனும் அவனுடைய சேனையும் மதுவனத்தில் நுழைந்து அட்டகாசம் செய்ததையும் தட்டிக்கேட்கச் சென்ற தன்னையும் தன் சேவகர்களையும் தாக்கியதையும் சுக்கிரீவனிடம் வருத்தத்தோடு தெரிவித்தான்.
அதுகேட்ட சுக்கிரீவன், ”தென்திசைச் சென்றவர்கள் சீதையைக் கண்டு திரும்பியிருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சித் திளைப்பில்தான் மதுவனத்தில் அவர்கள் இவைபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும்” எனும் தன் ஊகத்தை இராமனிடம் வெளிப்படுத்திவிட்டுத் ததிமுகனை நோக்கி, ”மகிழ்ச்சியில் அவர்கள் செய்த இச்செயல்களைப் பெரிதுபடுத்த வேண்டா; அத்தோடு, வாலி சேயான அங்கதனின் அரசல்லவா இது? எனவே, அவனைத் தண்டித்தல் முறையாகா! அவனிடம் நீ சரணடைதலே சரியானது!” என்றுகூறித் ததிமுகனைத் திருப்பியனுப்பினான்.
திரும்பிவந்த ததிமுகன் அங்கதனைத் தொழுது வணங்கவே, அவர்களுக்குள் பிணக்கம் தீர்ந்து, இணக்கம் பிறந்தது. இனியும் தாமதித்தல் சரியில்லை என்றுணர்ந்த வானரர்கள் அனுமனை இராமனிருக்கும் இடத்திற்கு முதலில் அனுப்பினர்.
கீழ்த்திசைச் சூரியன் தெற்கிலிருந்து வருவதுபோன்ற ஒளியோடு தென் திசையிலிருந்து இராமனை நோக்கி வந்தான் வன்திறல் அனுமன். வந்தவன், இராமனைத் தொழுதானா என்றால் இல்லை! ”தாமரை மலரினின்று நீங்கிய தையலான சீதாப் பிராட்டியை அவளிருக்கும் தென்திசை நோக்கிய தலையையும் கைகளையும் உடையவனாய்த் திரும்பி, நிலத்தில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கி அவளை வாழ்த்தினான்” என்கிறார் காப்பியக் கவிஞர் கம்பர்.
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்தன்
மொய்கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇநெடிது இறைஞ்சி வாழ்த்தினான். (கம்ப: திருவடி தொழுத படலம் – 6028)
சீதை, கற்புத் திண்மையுடன் இலங்கையில் இருக்கிறாள் என்பதை உணர்த்தவே அறிவிற் சிறந்த அனுமன், இராமனைக் கண்டவுடன் அவனைத் தொழாது சீதையிருந்த திக்கில் வீழ்ந்து வணங்கினான் என்பதே அவன் செய்கை உணர்த்தும் உட்பொருள்.
எனவே, ’திருவடி தொழுத படலம்’ எனும் தலைப்பு அனுமன் சீதையின் திருவடியைத் தொழுதமையையே குறிக்கின்றது என்று நாம் பொருள்கொள்ளவே கம்பரின் இப்பாடல் இடமளிக்கின்றது.
அனுமனின் செய்கையால், ”அனுமன் சீதையைக் கண்டிருக்கின்றான்; அவள் கற்புத்திறனும் சிறப்பாகவே இருக்கின்றது” என்பதை உய்த்துணர்ந்து உவகைகொண்டான் இராமன்.
வந்தவுடன் வளவளவென்று பேசாமல் குறிப்பிலேயே தான் கொண்டுவந்திருக்கும் நற்செய்தியை உணர்த்தியது அனுமனின் மதிநுட்பம்; அந்தக் குறிப்பை உடனே உணர்ந்துகொண்டது இராமனின் நுண்ணறிவு.
இராமனின் மனம் கொந்தளிப்பு நீங்கி அமைதிகொண்ட நிலையில், அவனிடம் இலங்கையில் நிகழ்ந்தவற்றை உரைக்கத் தொடங்குகின்றான் அனுமன்.
”தேவர்களுக்குத் தலைவனே! கற்பினுக்கு ஓர் அணிகலனாய்த் திகழ்கின்ற பிராட்டியைத் திரைகடல்சூழ் இலங்கை நகரில் என் கண்களால் கண்டேன்; இனி, பிராட்டியின் நிலைகுறித்த ஐயத்தையும் இதுவரை நீ கொண்டிருந்த துயரத்தையும் துறப்பாய்!” என்றான் அனுமன்.
கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்நகர்
அண்டர் நாயகஇனி துறத்தி ஐயமும்
பண்டுள துயரும் என்று அனுமன் பன்னுவான். (கம்ப: திருவடி தொழுத படலம்: 6031)
இப்பாடலில் பயின்று வந்துள்ள ’கண்டனென்’ என்ற சொல் ’த்ருஷ்டா ஸீதா’ என்ற வான்மீகத்தின் தொடரைத் தழுவியது. எனினும், அதனை அடுத்துள்ள ’கற்பினுக்கு அணியை’ என்ற கம்பரின் சொல்லாடல், ‘ஸீதா’ எனும் மூலநூலின் சொல்லைவிட ஆழ்ந்த நுணுக்கமான பொருளை உணர்த்துவதாய் அமைந்துள்ளது.
”ஐய! தவம் என்பது செய்த தவத்தின் வடிவமாய்த் திகழும் தையலான சீதை, கடலிடையுள்ள இலங்கை எனும் பெரிய நகரின் ஒருபுறத்தில் விண்ணை அளாவி நிற்பதும் காலை மாலை எனும் வேறுபாடின்றி ஒரேவிதமாய் விளங்குகின்ற பொன்மயமான கற்பகத் தருவை உடையதுமான ஒரு பூஞ்சோலையினுள்ளே உன் தம்பி இலக்குவன் புற்களைக் கொண்டு வேய்ந்து அமைத்த தூய்மையான அதே பன்னசாலையில் தங்கியிருந்தாள்” என்றுரைத்தான் அஞ்சனையின் அரும்புதல்வன்.
வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய்
காலையும் மாலைதானும் இல்லதுஓர் கனகக் கற்பச்
சோலை அங்குஅதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள்ஐய தவம் செய்த தவம்ஆம் தையல். (கம்ப: திருவடி தொழுத படலம் – 6037)
வான்மீகத்தில் இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிச் செல்வதாய்க் கதை அமைந்திருக்கும். ஆனால், கம்பநாடர் தம் காப்பியத்தில் அவ்வாறு அமைக்காது, பன்னசாலையுடனேயே இராவணன் சீதையைத் தூக்கிச் செல்வதாய்த் தமிழ்மரபுக்கு ஏற்றவகையில் காப்பியத்தை மாற்றியமைத்திருந்தமையை முன்னரே கண்டோம். அந்தப் பன்னசாலையிலேயே சீதையை இராவணன், அசோகவனத்தில், சிறை வைத்திருந்தான் எனும் வகையில் காப்பியத்தைத் தொடரும் கம்பர், அச்செய்தியை அனுமனின் சொற்கள் வாயிலாக இராமனுக்கு மட்டுமல்லாது காப்பியத்தைக் கற்கின்ற ஏனையோர்க்கும் ஈண்டு அறியத் தருகின்றார்.
தொடர்ந்து பேசிய அனுமன், ”கற்பிற் சிறந்த பெண்ணொருத்தி தன் கண்களில் உயரிய காதலைத் திரட்டி வைத்துக்கொண்டு, உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற செல்வத்தைப் பெற்ற நீயே உலகில் ஆடவர் பெறவேண்டிய செல்வத்தை முழுதாய்ப் பெற்றவன் ஆனாய்!” என்று இராமனைப் பாராட்டுகின்றான்.
மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த
சேண்பிறந்து அமைந்த காதல் கண்களின் தெவிட்டி தீராக்
காண்பிறந் தமையால் நீயே கண்அகன் ஞாலம் தன்னுள்
ஆண்பிறந்து அமைந்த செல்வம் உண்டனை யாதி அன்றே. (கம்ப: திருவடி தொழுத படலம் – 6043)
மணமான ஆடவனொருவன் தன் மனையாட்டியின் காதலை முழுமையாய்ப் பெறுவதே அவன் பெறும் பேறுகளில் பெரிய பேறு எனும் அரிய கருத்தை மாணியான அனுமன் வாயினால் இங்குச் சொல்லவைத்த கம்பரின் சிந்தனை நம்மைச் சிலிர்க்கவைக்கின்றது.
”நான் தங்களின் கணையாழியை அடையாளமாய்ச் சீதையிடம் கொடுத்தபோது அதுகண்டு நெகிழ்ந்தவள், அதனை மார்புறத் தழுவிக்கொண்டாள்” என்ற அனுமன், “இன்னும் ஒரு மாதம்வரை நான் பிழைத்திருப்பேன்; அதன்பின்னரும் என்னை மீட்க இராமன் திருவுளம் இரங்கவில்லையாயின் உயிர்துறப்பேன்” என்று சீதை சொல்லச் சொன்னதையும் மறவாது இராமனிடம் செப்பினான்.
இவ்வாறு இருபத்தொரு பாடல்களில் தான் இலங்கையில் சீதையைத் தேடிக் கண்டடைந்தமை, சிறையிருந்த சீதையின் கற்புத்திறம், அவளுரைத்த செய்திகள் ஆகியவற்றை இராமன் மனங்கொள்ளும் வகையில் விளங்கவுரைத்த சொல்லின் செல்வனான அனுமன், பின்பு தன் ஆடையில் முடிந்து வைத்திருந்த ஒளி உமிழும் சூடாமணியை எடுத்து, சீதை தந்த அடையாளமாய், இராமனிடம் காட்டினான்.
அந்தச் சூடாமணியைத் தன் அங்கையில் வாங்கியபோது மணநிகழ்வின்போது நங்கை சீதையின் கையைப் பற்றிய உணர்ச்சியை அடைந்தான் இராமன். அவன் உரோமங்கள் சிலிர்த்தன; கண்கள் நீரைப் பொழிந்தன; மார்பும் தோள்களும் பூரித்தன.
அப்போது அங்கதன் முதலிய இதர வானரர்களும் இராமனிடம் வந்துசேர்ந்தனர்.
”சீதையை மீட்கும் பணிக்கு எழுக!” என்று தன் படைகளுக்கு ஆணையிட்டான் சுக்கிரீவன். வெள்ளத்தனைய மிகுபடை கிட்கிந்தையிலிருந்து புறப்பட்டது. அனுமனின் வேண்டுகோளின்படி அவன் தோளில் இராமனும், அங்கதன் விருப்பப்படி அவன் தோளில் இலக்குவனும் ஏறிக்கொள்ள, வானர சேனை அணிவகுத்துத் தென்திசை நோக்கிப் பயணித்துக் கடலைச் சென்றடைந்தது.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.