மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா

உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. அந்த மொழிகளில் எங்கள் தமிழ் மொழியும் ஒன்றாகும். ஏனைய மொழிகளுக்கெல்லாம் இல்லாத ஒரு பெருமையை எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. எல்லா மொழிகழுமே இலக்கியத்தைக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த இலக்கியத்தால் அந்த மொழிகளும் பெருமையினையும் பெற்றிருக்கின்றது. அப்படிப் பெருமையி னைப் பெற்றாலும், தமிழ் பெறும் பெரு மைக்கு ஈடாக முடியாது என்பதுதான் கவனத்துக்குரியதாகும். ஏனைய மொழிகளைவிட தமிழ் மொழி அப்படி என் னதான் முக்கியத்துவத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்று அறிந் தி டும் ஆவல் ஏற்படுகிறதல்லவா? அதுதான் “பக்தி இலக்கியம்” ஆகும். பக்தி க்கு என்று இலக்கியங்கண்ட உலகின் ஒரே மொழி எங்கள் தமிழ்மொழி மட்டுமேயாகும்.

இலக்கியம் என்றால் ஒரு இலக்கை நோக்கி அழைத்துச் செல்லுவது என்று தான் அறிஞர்கள் சொல்லுவார்கள். இலக்கியம் என்னும் பொழுது அதில் பக்தி யினைப் புகுத்த வேண்டும் என்னும் சிந்தனை புதியதோர் சிந்தனை என்றுதான் கொள்ளல் வேண்டும். அதனைத் தமிழ் சமூகத்தார் செய்திருக்கிறா ர்கள் என்பதிலிருந்து அவர்களின் மனப்போக்குப் புலப்பட்டு நிற்கிறதல்லவா. சுவைத்துப் படிக்கும் இலக்கியத்திலும் பக்தியானது இருக்க வேண்டும் என்னும் கருவா னது மிகவும் உன்னதமான ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டியதேயாகும். எப்ப டியும் வாழலாம் என்று வாழும் வாழ்க்கையைவிட இப்படித்தான் வாழ வேண் டும் என்று வாழுதல்தான் சிறந்த வாழ்வாகும். அப்படி வாழும் வாழ்வினைத் தான் “வையத் துள் வாழ்வாங்கு வாழுதல்” என்கின்றோம். அப்படி வாழ்வதற்கு உரிய வழியினைக் காட்டிடக் கைகொ டுத்து நிற்கும் நிலையில் முகிழ்த்ததுதான் பக்தி இலக்கியம் என்னும் புதுக்கரு என்று கூட எடுத்துக் கொள் ளலாம் அல்லவா!

பக்தியினால் பக்குவம் வருகிறது. பக்தியினால் பண்பு வளர்கிறது. பக்தியினால் அன்பு துளிர்க்கிறது. பக்தியினால் உயர்வு தாழ்வு அகல்கிறது. பக்தியினால் தர்மம் செழிக்கிறது. அறம் மலர்கிறது. பக்தி யினால் விருந்தோம்பல் சிறக்கிறது. பக்தியினால் ஒழுக்கம் உயர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நல் லதோர் சமூகமே உருவாகிறது என்பதுதான் கருத்திருத்த வேண்டிய கருத்தெனலாம். இவை எல்லாவற்றையும் மனமிருத்தி பக்தி இலக்கியப் பாதையிலே ஒருவர் ஆசையுடன் பயணிக்கிறார். அந்தப்பயண த்தை அவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் யாவருக்கும் பயன்படும் வண்ணம் ஆக்கியும் விட்டிருக்கிறார் என்பது இங்கு நோக்கத்தக்கதாகும். அப்படி பயணிணித்த அவர் பக்தியினால் ஒரு பரிசினையும் எமக்கெல்லாம் வழங்கியும் நிற்கிறார். அந்தப் பரிசு என்ன என்று அறிந்திடும் ஆவல் எழுகிறதல்லவாஅந்தப்பரிசுதான் “பெரிய புராணம்”. பக்தியின் பரிசாக எமக்கெல்லாம் பயனுற வழங்கியர் தான் “சேக்கிழார் பெருமான்”.. இவரின் பரிசின் பெருமை காரணமாக  “பக்திச்சுவை நனி  சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” என்று தமிழுலகமே இவரை வியந்து போற்றி நின்றது.

நாயன்மார்களும் பக்தியினைப் பாடினார்கள். ஆழ்வார்களும் பக்தியினைப் பாடினார்கள். அவர்களின் பக்தியின் அனுபவம் வேறாக இருந்தது. அந்த அனுப வங்கள் அத்தனையும் அவர்களுக்கு வாய்த்த அனுபவங்களின் வெளிப்பாடாக வேதான் இருந்திருக்கிறது. ஆனால் சேக்கிழார் காட்டும் பக்தி அனுபவமும் அதற்காக எடுத்துக் கொண்ட முறையும் முற்றிலும் வேறு பட்டதாகவே காணப்படுகிறது. ஆண்ட வனின் அருளினை அடியார்கள் தங்களின் திருப்பாடல்கள் வாயிலாக எமக்கெல்லாம் காட்டி நின்றார்கள். அந்த அடியார்களையும் அவர்களின் பக்தியின் நிலையினையும்பக்குவத்தையும் யாவருக்கும் காட்டும் புதிய உத்தியினையே வெளிப்படுத்தும் நிலையில் சேக்கிழாரின் செயலமைந்தது என்பதுதான் இங்கு முக்கிய திருப்பமாய் அமைகிறது எனலாம்.

சேக்கிழார் காட்டும் அடியார்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதமானவர்கள். அவர்களின் சிந் தனைசெயல்கள் அனைத்துமே மாறுபாடானவை. அது மட்டுமட்டுமல்ல வேறு பாடானவையாயும் அமைந்திருந்தன. ஆனால் அவர்கள் அனைவரையும் பக்தி என்னும் ஒரு குடைக்கீழ் வந்து நிற்கச் செய்கிறார் சேக்கிழார் என்பதுதான் மிகவும் சிறப்பாகும். அப்படி அவரின் குடைக்குள் வந்து நிற்கும் வித்தி யாசமான ஒரு அடியார்தான் , “தன்னையே மறந்து கண்ணையே கொடுத்த கண்ணப்பர்.”

பெரியபுராணத்தில் பல அடியார்களின் பக்தியின் நிலையினைப் பார்க்கலாம். ஆனால் கண்ணப்பரின் நிலையினை இக்காலச் சமூகத்தார் ஏற்றுக் கொள்ளுவார்களா என்னும் கோணத்தில், சேக்கிழாரின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து, சேக்கிழாரின் சிந்தனை எப்படி அமைகிறது என்பதைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் அல்லவா !

சரியை, கிரிகை, யோகம், ஞானம், என்னும் படிமுறைகளில் அடியார்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பக்தி செய்யும் பாங்கும் இருந்திருக்கிறது என்பதுதான் பொதுமையான கருத்து நிலையாகும். இந்த படி முறைக்குள்தான் ஏதாவது ஒன்றில்த்தான் எங்களின் பக்தியின் பாதையும் அமைந்து இருக்கிறது. இந்தப் படிமுறைகள் பற்றிக் கற்றுணர்ந்தவர்களே பெரும்பாலும் அறிந்தவர்களாக இருப்பார்கள். சாதாரணமானவர்களோ தங்களுக்குப் பொருந்தும் வண்ணம் பக்தியினை வெளிப்படுத்தி நிற்பார்கள். பக்தியெனும் பொழுது அங்கே அறிவு முக்கியமாக அமையாது உணர்வுதான் மேலோங்கி முக்கியமாகி முன் வந்து நிற்கிறது என்பதுதான் யதார்த்தமாகும். இவ்வாறு உணர்வு எழும் நிலையி லும் எழுகின்றவர்களின் தன்மைக்கு ஏற்பவே அது அமையும் என்பதுதான் முக்கியமாகும். ஒருவர் உணர்வு மேலீட்டால் செய்வது போன்று இன்னொருவரும் செய்வார் என்று எதிர்பார்த்திடவே கூடாது. இந்த நோக்கில்த்தான் சேக்கிழார் கண்ணப்பரை நோக்குகிறார். எங்களுக்கும் காட்டுகிறார்.

வெல் படைத் தறுகண் வெஞ்சொல்
வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று
ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்

கண்ணப்பர் பிறந்த சூழலை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து சேக்கிழார் காட்டுவது மிகவும் முக்கியமான கருத்தெனலாம். “கொல்எறி குத்து ” என்னும் ஓசைதான் அங்கே முன்னிற்கும் ஓசையாகக் காட்டப்படுகி றது.

மைச்செறிந் தனைய மேனி
வன்தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும்
அடைவிலார் உடைவன் தோலார்
பொச்சையி னறவும் ஊணின்
புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற் பகழி வேடர்

கண்ணப்பரின் வேடர் கூட்டம் கரிய மேனியைக் கொண்டவர்அச்சம் என்பது அவர்களிடம் இல்லை. அதேவேளை அருளுங்கூட அவர்களிடம் இல்லை. அவர்கள் தொழிலே கொடுந்தொழிலாகவே இருப்பதாய் சேக்கிழார் படம் பிடிப்பதுபோல் ஆரம்பத்திலே காட்டி நிற்கிறார். அதுமட்டுமல்ல கண்ணப்பரின் தகப்பன் குற்றமே குணமாகக் கொண்டிருக்கிறானாம். காரணம் அவனின் இந்தப்பிறவியில் அவனுக்கு வாய்த்த சூழலேயாகும். அதனால் அவன் கொலை செய்யவும் அஞ்சா நிலையினை உடையவனாகவே காணப்படுகிறான். அப்படி இருக்க அவனுக்கு எப்படி கண்ணப்பராகப் போகின்றவர் பிள்ளையாகப் பிறக்க முடிந்தது என்னும் ஐயம் எழுத்தானே செய்யும்அதற்கும் பொருத்தமாய் சேக்கிழார் பதிலினைப் பகர்ந்து நிற்கிறார்.

பெற்றியால் தவமும் செய்தான்
ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான்
கொடுமையே தலைநின் றுன்னான்

முற்பிறப்பில் செய்த தவப்பயனால்த்தான் கண்ணப்பர் அவனுக்குப் பிள்ளையாக வாய்க்கும் நல்வாய்ப்புக் கிடைத்திருக்கிறதாம் என்பதையே “பெற்றியால் தவமும் செய்தான்” என்று சேக்கிழார் தகுந்த பதிலாகக் காட்டுகின்றார். ஆனால் இப்பிறப்பில் கண்ணப்பரின் தந்தையின்  இயல்பு வேடர்க்குரியதாகவே ஆகிவிட்டது என்பதையும் சேக்கிழார் காட்டி நிற்கத் தவறவே இல்லை என்பதைத்தான் இப்பாடலின் அடுத்த வரிகள் காட்டி நிற்கின்றன.

வேடர் குலத் தலைவனுக்கு எல்லாவளமும் இருந்தும் பிள்ளைச் செல்வம் இல்லா நிலையில் தங்களின் குலதெய்வமான முருகக்கடவுளை வேண்டி நிற்கிறான். அவனின் முன்வினைப் பயனாக ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. வேடர் குலமே ஆனந்தப் பரவசப்பட்டு நிற்கிறது. பிறந்த குழந்தையை தந்தை ஆசையுடன் தூக்குகிறான். அந்தக் குழந்தை மற்றைய குழந்தைகள் போலல்லாமல் கனமாக அதாவது திண்மையாக இருந்தத படியால் “திண்ணன்” என்று பெயர் சூட்டி மகிழ்கிறான். வேடர் குலமே திண்ணன்திண்ணன் என்று வானைத் தொட கோஷமிட்டு நிற்கிறது. திண்ணன் என்னும் பெயரும் கூட பின்னால் வரப்போகின்ற நிகழ்வுக்கு கட்டியங் கூறுவதாக அமைகிறதோ என்பதும் சிந்திக்க வேண்டியதேயாகும். தன்னையே இழக்கும் திடம் அதாவது திண்ணம் அவனின் கருவிலேயே கருக்கொண்டு விட்டிருக்கிறது என்பதைத்தான் தந்தையின் வாயிலிருந்து அந்தக் குழந்தைக்குப் பெயராக வாய்ததோ என்றும் எடுத்துக் கொள்ளும் நிலையும் இருக்கிறதல்லவா?

திண்ணன் வளர்கிறான். வளர்ந்த திண்ணன் வேடர்குல வழக்கப்படி காட்டுக்குக் கன்னி வேட்டையாடச் செல்கிறான். அவனுடன் வேடர்கள் பலர் செல்கிறார்கள் வேட்டை நாய்களும் செல்லுகின்றன. திண்ணனின் அணுகு தொண்டராக நாணன் என்பவனும் காடன் என்பவனும் கூடவே செல்கிறார்கள். வேட்டையின் பொழுது முரட்டுப் பன்றி ஒன்றினால் திண்ணனும் கூட் டமும் களைத்தே போகும் நிலை உண்டாகிறது. களைத்தாலும் திண்ணனின் தீரத்தால் அந்த மூர்க்கமான பன்றி குத்திக் கொல்லப்படுகிறது.களைத்த திண்ணன் நீரருந்தும் இடத்தை நாட நிற்கும் நிலையில் அவனுடன் வந்த நாணன் பக்கத்தில் பொன்முகலி ஆறு இருக்கிறது என்னும் செய்தியைச் சொல்லி அவனை அழைத்துச் செல்லுகிறான். ஆற்றில் நீருண்டு களைப்பாறும் திண்ணனுக்கு அங்கிருக்கும் மலைபற்றிச் சொல்லுகிறான். திண்ணனும் மலையிலேறி மலைவளத்தைப் பார்த்திட விரைகிறான். அங்கு குடுமித்தேவரைக் காணுகிறான். அதன் பின் அவன் எப்படியெல்லாம் நடந்து கொள்ளுகிறான் என்னும் கதைகளை நாமனைவருமே நன்கு அறிந்து வைத்திருக்கிறோம்.

திண்ணன் என்னும் வேடன், ஒரு காடன், எப்படி இவ்வாறு ஆகினான் என்பதுதான் அனைவரின் மனத்திலும் இன்றுவரை எழுந்து கொண்டே இருக்கும் கேள்வி எனலாம். கொத்து, வெட்டு, கொல்லு, என்னும் சூழலைக் கொண்ட இடத்தில் பிறந்தவன். அன்பு என்றால் என்னவென்றே விளங்காதவன், சமயம் தெரியாதவன், தத்துவம் என்றால் என்னவென உணராதவன், எப்படித் தன்னையே மறந்தான். தன் கண்ணையே பிடுங்கினான்! புரியாத புதிராக இருக்கிறதல்லவா? அன்பு என்பது சாதாரணமானது அல்ல! இதனால்த்தான் “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்றார் வள்ளுவப் பேராசான் என்று எண்ணத் தோன்றுகிறது. மாறா அன்பு ஒருவரிடம், ஒரு இடத்தில் ஏற்பட்டுவிடுமானால் அந்த நிலையில் செய்யப்படும் அனைத்துமே வியப்புக்குரியதாக,  நினைத்துமே பார்க்க முடியாததாகவேதான் அமைந்துவிடும். அந்த வியப்பினையே திண்ணன் தன் கண்ணைப் பிடுங்கி அப்பிய நிலையும் எனலாம். தவமிருந்து பெற்ற பிள்ளையை தாய் பிடிக்க தந்தை வாளால் வெட்டுகிறார். நடக்குமா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? எப்படி நடந்தது? தன்னை மறத்தலும். தன்னையே இழத் தலும்தான் இதன் அடிப்படை எனலாம்.

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

தன்னை மறக்கும் நிலை பற்றி இத்திருப்பாடலின் கருத்தாகவேதான் திண்ணனின் செயலும் அமைந்திருக்கிறது.

நல்வினையும், தீவினையும், ஆன்மாவைப் பற்றியபடியேதானிருக்கும். நல்வினை இறை நாட்டத்துக்கு அழைத்துச் செல்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். அவ்வேளை தீவினை தடுத்திட முன்வந்து நிற்கும். நல் வினையானது முந்திக்கொள்ளும் பொழுது தீவினை செயலற்றுப் போய் விடுகிறது. ஆண்டவனை ஆன்மா அடையும் பொழுது நல்வினையினையையும் விட்டு விட வேண்டும். இருவினைகளும் அறும் பொழுது இறை நிழல் ஆன்மாவுக்கு வாய்க்கிறது என்பதுதான் தத்துவ நிலையாகும். திண்ணன் என்னும் ஆன்மாவைச் சுற்றி நாணன் என்னும் நல்வினையும், காடன் என்னும் தீவினையும் நிற்கிறது. பன்றியைக் கொன்று காடனிடம் ஒப்படைத்த பின்னர் திண்ணன் என்னும் ஆன்மாவுக்கு நாணன் என்னும் நல்வினைதான் மலையைக் காட்டுகிறது. குடுமித் தேவர் இருக்கிறார் என்பதையும் சொல்லுகிறது. திண்ணன் என்னும் ஆன்மாவை நாணன் என்னும் நல்வினை கூட்டிச் செல்லுகிறது ஆனால் ஒரு கட்டத்தில் நல் வினையாகிய நாணணனையே ஆன்மாவாகிய திண்ணன் ஒதுக்கியே விடுவதையே காண்கிறோம். நல்வினையும், தீவினையும், ஒதுக்கப்பட்ட நிலையில்த் தான் இறைவனை ஆன்மாவால் நெருங்க முடிகிறது. இறைவனின் அருளுக்கும் பாத்திரமாகவும் முடிகிறது. இவ்வாறு தான் கண்ணை அப்பிய கண்ணப்பரை நாம் பார்க்க வேண்டும்.

கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்

கண்ணப்பரின் நிலைக்கு மிகவும் பொருத்தமாக இத்திருப்பாடல் இருக்கிற தல்லவா! திண்ணன் என்னும் பெயருடன் இருந்த வேடன், கண்டதும் தன்னை இழந்து, தன் கண்ணையே இழக்கிறான் எனும் பொழுது அவனிடத்து ஏதாவது எதிர்பாப்ர்பு இருந்திருக்கிறதா என்றால், அங்கு எதுவுமே இல்லை என்றுதான் விடை சொல்ல வேண்டும். “வீடும் வேண்டா விறல்” என்பதுதான் கண்ணை அப்பிய நிலையில் திண்ணனிடம் காணப்பட்டிருக்கிறது என்பதுதான் பொருத்தமாய் அமைகிறது. குடுமித் தேவரின் கண்ணிலிருந்து இரத்தம் வடிவதற்கு உரிய மருந்து தன்னுடைய கண்ணைப் பிடுங்கி வைப்பதுதான் என்று எண்ணினானே அன்றி, பிடுங்கி வைத்தால் தனக்கு அதனால் பெருவரமோ, அல்லது உரமோ கிடைக்கும் என்று அவன் கருதவே யில்லை. இதனால்த்தான் இறைவனாலே ஆட்கொள்ளப்பட்டு ஆறாம் நாளே முத்தியின்பத்தைப் பெறும் நிலை க்கு ஆளாகியும் விடுகிறான்.

கண்ணை அப்பிய வேடன் திண்ணன் “கண்ணப்ப நாயனார்” என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டு அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராய் குருபூசை செய்து வணங்கும் நிலைக்கு வந்தமை என்பது எதனைக் காட்டுகிறது என்றால் அப்பளுக்கில்லா, ஆசையில்லா அன்பின் உச்சநிலையினையே காட்டுகிறது என்பதுதான் உண் மையாகும். இதனால்த்தான் அன்பு என்று வரும்பொழுது அங்கே கைகாட்டப்படும் நிலை கண்ணப்பருக்கு மட்டுமே உரித்தாகி நிற்கிறது.கண்ணப்பரை அன்புக்காகக் கைகாட்டுபவர்யார் தெரியுமா அவர்தான் “மெய்தானரும் பும் வண்ணம்” திருவாசகம் தந்த மணிவாசகப்பெருமான்.

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ

கண்ணப்பரை மணிவாசகர் காட்டினார். எம்பெருமானே கண்ணப்பரின் அன்பின் உயர்வினைக் காட்டு வதாக சேக்கிழார் தரும் இச்செய்திதான் மிகவும் உச்சமான உயர்வுடை செய்தியாகும். இது ஒன்றே கண்ணப்பரைக் காட்டுவதற்குப் போதுமானதாக இருக்கும் அல்லவா!

அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கம் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும்
அவனுடைய நிலையிவ்வா றறிநீயென் றருள்செய்வார்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *