Blog
-
பிரம்மனிடம் கேட்ட வரம் !
பரிதியின் அம்புகள் புகுந்திட அஞ்சும்திக்குத்
தெரியாத காட்டில், என்
ஆத்மாவின்
பிரதி
பிம்பத்தைத்
தேடி அலைந்தேன்!
தொப்பென
தோள் மேல்
குதித்தமர்ந்தது
ஒரு குயில்!
காவியக் குயில்!
தாவிப் பிடித்து என்
இதயக் கூண்டில் அடைத்தேன்!
அப்பாவிப் பறவை
ஆத்மாவின் இரட்டை யென
எப்படி அறிவது ?
சட்டெனக்
கூண்டைத் திறந்தேன்!
குயில்
பாடிக் கொண்டே
பறந்து போனது!
கூடு விட்டுக் கூடு பாயும் குயில் !
பல நாள் கழித்து எதிர்பாராது
பிரதி
பிம்பத்தின் இருப்பிடம் மறவாது
பூட்டிக் கிடந்த என்
வீட்டுக்குள்ளே
மீண்டும்
குடியேறியது !
நீ யார்,
நான் யாரென்று
ஆத்மாக்கள் இரண்டும்
இதயத்தின்
பக்கங்களை எல்லாம் புரட்டிப்
புரிந்து கொள்ளவே
இப்பிறப்பின்
ஆயுள் காலம் அத்த மித்து
தேய்பிறை யானது!
கண்ணாடிப் பேழைக்குள் நீ
காவியம்
படைப்பதை நானும்
வேலிக்குள் இருந்து தான்
வேடிக்கை பார்க்கிறேன்!
அந்து போகாத
இனத் தோரணங்கள் தொங்கும்
பந்தலின் கீழ்
வாசிக்கும்
நாதஸ்வரக் குழலின் நாக்குகள்
அறுபட்டுப் போகின்றன!
இணைந்து பாடும்
ஆத்மாக்கள்
அடுத்த பிறப்பிலாவது
ஜோடிப் புறாக்களாய்
கூடிக் குலாவ
இறைவன் கை எழுதிச் செல்லுமா ?
அந்தரங்க சுத்த
ஆசைகள் யாவும்
விந்தையாய் முடியும்
என்றொர்
வேத நெறி மெய்யாகுமா ?
அடுத்த ஜென்மம்
தப்பினால்
இன்னும்
எத்தனை ஜென்மங்கள் ?
நரைத்து
உதிரப் போகும் இப்பிறப்பு
எப்போது
அத்தமிக்கும் தோழீ!
பிரளயத்தில்
புரட்சி வெள்ளம் துடைத்தாலும்
புத்துயிர் பெற்று,
விழுதுகள் விடும் ஆலமரங்கள்
குலம், கோத்திரம்,
சாத்திரங்கள்!
அவற்றின்
யானைக் கால்கள்
ஆத்மாவின் கோலங்களை
அழிப்பதற்கு முன்
பிரம்மா!
ஒரு வரம் தா!
அவள் ஆத்மா
என் குலத்தில் உதிக்கட்டும்!
அன்றி
என் ஆத்மா
அவள் குலத்தில் போய்
அவதரிக்கட்டும்!
பிரம்மா!
இரண்டும் தர வேண்டாம்!
ஏதாவது
ஒரு பிறவியில்
ஒரு வரம் தா!
-
அன்புள்ள மணிமொழிக்கு
ஜெயராமன்
அன்புள்ள மணிமொழிக்கு,
சிறப்புப் பட்டிமன்ற விவாதமேடையில் உனது மழைச்சாரல் போன்ற பேச்சினைக் கேட்கும் சந்தர்ப்பம் அளித்தமைக்கு உனக்கு என் நன்றி. பள்ளிநாட்களில் விவாதங்களிலும், பிற போட்டிகளிலும் நான் உன்பேச்சில் பார்த்த அதே வேகம் கண்டேன். உனது அந்நாள் தமிழ் ஆசிரியர் எனும் முறையில் பெருமிதமடைகிறேன். “சாதனைக்குத் தேவை கூடுதல் உரிமை அதிகாரம் வழங்கலே” என்ற உனக்களிப்பட்ட தலைப்புக்கேற்ப உன்வாதம் அமைந்திருந்தது. கொடுக்கப்பட்ட கடமையை செவ்வனே ஆற்றினாய். இருப்பினும் உனது ஆசிரியர் எனும் முறையில், சில கருத்துக்களை இங்கு தந்துள்ளேன். பயனளிக்கும் என நம்புகிறேன்.
கூடுதல் அதிகாரம் ! கூடுதல் உரிமை !!சமத்துவம் கோரலில், சமாதானத்தையும் சகோரதத்துவத்தையும் தியாகம் செய்துவருகிறோம் ! அதிகாரம், உரிமை ஆகிய இரண்டும், நீரும், உணவும், காற்றும் போல் தவிர்க்கமுடியாத தேவைகள் என்பது ஓரளவு உண்மையே. ஆனால், தனிமனிதனின், சமூகத்தின் முடக்கநிலைக்கு அவையிரண்டுமே காரணமென்பது அளவுக்கு மீறிய கற்பனை!! எவ்வூனங்களுமின்றிப் பிறந்தோருள் பலர் தம் கால்களில் நிற்க இயலாது முடங்கியிருக்கையில், முடக்கும் ஊனங்களுடன் பிறந்தோருள் பலர் முன்னிலை வகிப்பதைப் பார்க்கிறோம்! எவ்வித கைதூக்கிவிடலுமின்றி! அவர்களுக்குரிய நியாயமான உரிமைகள் நிராகரிக்கப்பட்டும்கூட!! இது எப்படி சாத்தியமாகிறது? எவை சாத்தியமாக்குகின்றன??அவர்களின் தன்னம்பிக்கை, மனதிடம், சகிப்புத்தன்மை, சாதிக்கும் உறுதி, அயரா உழைப்பு இவையன்றி வேறேது காரணங்களாக இருக்கமுடியும்?
காலங்காலமாய் அதிகாரம், பதவி, உரிமை, வசதிகள் ஆகியன தேவைக்கும் அதிகமான அளவில் பெற்றவர்கள் நற்சாதனையாளர்களாய் இருந்திருந்தால், நம்நாடு, சமுதாயம், உலகம் விண்ணையும் முட்டியிருக்கும்! இல்லையே!! சரி , அவர்கள் தம்மளவிலாவது நல்லமனிதர்கள் எனும் நிலைஎட்டினார்களா? இல்லையே! அவர்கள் சுவீகரித்திருந்த அதிகாரமும், உரிமைகளும் அவர்களை மனிதன் எனும் இனப்பெயருக்கே அருகதையற்றவர்களாக ஆக்கிவிட்டனவே!
கடமைகளை மதிப்பவர் உரிமைகளைப்பற்றி கவலைப்படுவதில்லை! கடமை இயற்றலுக்கு, அதிகாரமும் உரிமைகளும் தடைகளாய் இருந்ததில்லை. “நாடு ..சமூகம் உனக்கு என்ன அளித்தது என வினவாதே ; நீ முதலில் அவற்றிற்கு என்ன நன்மை செய்தாய் என வினவிக்கொள் ” எளிய நிலை இருந்து உன்னதநிலைக்கு உயர்ந்த ஒரு சாதனையாளரின் கூற்று!! அளவுக்கு மீறிய அதிகாரமும், உரிமைகளும், ஆதிக்கம் செலுத்தலிலும், அழிவை விதைப்பதிலுமே பலநிலைகளில் பலரால் நிகழ்ந்துள்ளதென்பதை வரலாறு காட்டும். ” ஒருவரைக் கெடுப்பதற்கு எளிதான வழி அவருக்கு உயர் அதிகாரம், உரிமைகள் வழங்குவதே” என்பது சத்திய வாக்கு!!
அடுத்து, வெளியிலிருந்து பெறப்படும் அதிகாரம், உரிமை என்பன கால, இட வரம்புகளுக்குட்பட்டன என்பதை நாம் அறிதல் அவசியம்; பெறப்பட்டு பின் எடுத்துக்கொள்ளப்படுவன; நிரந்தரமற்றது! மேலும், இல்லாத ஒன்று இருப்பதுபோல் தோன்றுவது ! ஆம் ! பூரண உரிமை, அதிகாரம் எவருக்கு உள்ளது? முதல் குடிமகன் ஜனாதிபதிக்கு உள்ளதா? உண்மையில், உயருயர் அதிகாரப் பதவிகள் தனிமனிதனின் இயல்பான தினசரி வாழ்க்கைக்கே..கடைப்பிடிக்க என்னும் நல்ல சித்தாந்தங்களுக்கே உலை வைத்துவிடுகின்றன. அவன் வாழ்க்கை அவனிடமே இருப்பதில்லை! உரத்தை அள்ளி அள்ளிப்போடுவதால் விளைச்சல் அமோகமாகாது!! பாரதியார் மனதில் உறுதியையும், நெஞ்சில் நேர்மையையும், நினைவில் நல்லனவற்றையும் பராசக்தியிடம் வேண்டினார்! அவையே மனிதன் உயர உண்மையான பலம் தருபவை!! ஆய்ந்தறியாது அதிகாரம் வழங்கல் பெறுவோரைக் கொலைசெய்தலுக்குச் சமம்! “குருவி தலையில் பனங்காய் ஏற்றுதல் ” போன்றது! பாரம்சுமக்க இயலாது குருவி மடியும். அனைவருக்கும் சம உரிமை, அதிகாரம் என்பது நடைமுறையில் கனவுநிலை!!
அடுத்தவரின் உணர்ச்சிகளைத் தூண்டி, அதிக உரிமைகளுக்காக குரல் எழுப்பச் சொல்லி, அவர்களின் அனுதாபியெனக் கூறிக்கொண்டு, தனக்கு கேடயங்களாக தனது வாழ்வின் ஆதாரங்களாக அவர்களை மாற்றி, போலிப் போராட்டங்களை நிகழ்த்தி, தான் ஜீவிக்கும் பலர் உள்ளனர். அமைதியாய் மனநிறைவுடன் வாழும் மனித சமூகத்தில் குழப்பங்களை விதைத்து, அவர்களது வாழ்வில் சூறாவளிகளுக்கு காரணமாகும் போலி சமூகநலவாதிகள் ஏராளம்!
உயர்கல்வி, உயர் பதவி, அதிகாரம், வசதிகள் இவை மட்டுமே ஒருவரின் ஆற்றலும் தன்னம்பிக்கையும் வளர்ப்பன என்றால், மேற்படி வரம்பினுள் இருப்பவருள் ஏன் தற்கொலைகளும், மனச்சிதைவுகளும், போதைக்கு அடிமையாவதும் நிகழ்கின்றன? தங்களைத்தாங்களே நிலைப்படுத்திக்கொள்ள முடியாதவர்களால், எங்கனம் சமூகத்தை உயர்த்தமுடியும்??
“தனக்கு அதிகாரம் இல்லை… உரிமையில்லை… ஒதுக்கப்பட்டுள்ளோம்” எனும் எண்ணமே, மனோவியாதி; மனத்தடை; சில வேளைகளில் கடமைகளினின்றும் கழன்றுபோகும் தன்மை; சோம்பேறித்தனம்; சுய மதிப்பின்மை; விமர்சனங்களுக்கு அச்சம் ஏதேனும் ஒன்றால் இருக்கலாம்.
மற்றுமோர் கண்ணோட்டம்!
வாழ்வோட்டத்தின் சில நியதிகளைக் காக்க, உயிரினங்களால் மாற்ற இயலாத, மாற்றப்படக்கூடாத, இயற்கையால் திணிக்கப்பட்ட கடமைகள், வலிமைகள், இயலாமைகள், சுதந்திரங்கள் உள்ளன; அவற்றுள் சில பாலினம் சார் பாகுபாடுகளும்கூட! இவைகளை எதிர்த்து போராடுவது, குரல் எழுப்புதல், ஒப்ப மறுத்தல், சமத்துவம் கோரல் அறிவுடமை அன்று ; நன்மைபயப்பதுமன்று. விபரீதங்களையே விளைவிக்கும். வல்லமை கொண்டுமட்டுமே எல்லா சாதனைகளையும் புரிந்துவிடமுடியாது. கடப்பாரையால் முடியாதன சிறு ஊசியால் முடியும்! அவரவர் தத்தம் தனிச்சிறப்பினை உணர்தல் வேண்டும்; அதில் நம்பிக்கை வைக்கவேண்டும்; சிகரம் எட்ட வழிகள் வழிகள் ஆயிரம்; இருப்பதைக் கொண்டு பயணத்தைத் தொடங்கவேண்டும்; இல்லாததை எதிர்பார்த்து காத்திருத்தல்.. அதை நினைந்து ஏங்கித் தேங்கிப்போதல்.. இரண்டும் சாதிக்க விரும்புவோர் செய்யார்!
இன்னுமோர் கேள்வி ! அதிகத்திற்கு ஆசைப்படும்முன் இருப்பதை முழுதும் பயன்படுத்தினோமா? நலன் தரும் வழியில் பயன்படுத்தினோமா?? நடுநிலையில் யோசித்தால் இல்லையென்ற பதிலே மனமுரைக்கும். “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்பர். இருப்பதைக்கொண்டு மன உறுதியுடன் சாதிப்பதே உண்மையான சாதனை! அதுதான் வல்லமை!! பாறைகளை மரவேர்கள் பிளந்துவிடுகின்றன! நெம்புகோல்கள் கொண்டு அசையா பாரங்கள் அகற்றப்படுகின்றன! சாதனைக்கு மன வைராக்கியமும், அர்ப்பணிப்புமே தேவை.
“அறவழி நிற்போருக்கு ஆண்டவன் துணையுண்டு ” என்பர். எண்ணங்கள் நல்லதாயின் எம்முயற்சியிலும் வெற்றியே!
சத்யமேவ ஜயதே!! சத்யம் காத்தலே சாதனைக்கு தாரக மந்திரம்!!
நல்லாசிகளுடன்
உனது அந்நாள் தமிழ் ஆசிரியர். -
புதுக்கோட்டை
தஞ்சை வெ.கோபாலன்
தமிழகத்தில் இருந்த சமஸ்தானங்களில் முக்கியமான சமஸ்தானங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் இருந்த இங்கு எல்லா வளங்களும் நிரம்பியிருந்தன. சேஷையா சாஸ்திரி எனும் திவான் வடிவமைத்த நகர் அமைப்பும், நீர் நிலைகளும் மிக மேலானவைகளாகப் போற்றப்பட்டவை. நகரின் நடுவில் அரண்மனை, சுற்றிலும் ராஜவீதிகள், ஒவ்வொரு ராஜவீதிக்குப் பின்னர் வரிசையாக மற்ற வீதிகள், ஆங்காங்கே குளங்கள், ஒரு குளம் நிரம்பியதும் நீர் அடுத்த குளம் செல்வதும், பின்னர் ஒவ்வொன்றும் நிரம்பியபின் புதுக்குளம் நிரம்புவதும், அக்குள நீர் குடி நீராகப் பயன்படுவதும் இவ்வூரின் அழகு.
இந்த அருமையான புதுக்கோட்டையைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோமே! புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது. இங்கே மிகப் பழமையான கல்வெட்டுக்களும், சமணர்களின் குகைப் படுக்கைகளும், கிராமதேவதைகளுக்கான புகழ்பெற்ற ஆலயங்களும், தமிழர் பண்டிகைகளாகச் சித்திரை முதல் நாளும் கொண்டாடப் பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது. புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குட்பட்ட திருமெய்யம் எனும் ஊர் வரலாற்றுப் பெருமை உடைய ஊர். பாண்டியர்கள் ஆண்ட காலத்தில் இவ்வூர் ஒல்லையூர் என புகழுடன் விளங்கியதாகத் தெரிகிறது. பல புலவர்கள் இங்கு இருந்திருக்கிறார்கள். இப்பகுதியில் உள்ள கருக்காக்குறிச்சி எனுமிடத்தில் கிடைத்த 500 ரோமானிய பொற்காசுகள் இந்த நாடு ரோமானியர்களுடன் வைத்திருந்த வியாபாரத் தொடர்பு பற்றி தெரியவருகிறது. மீமிசல், தொண்டி துறைமுகங்கள் வியாபார முகத்துவாரங்களாகப் பயன்பட்டிருக்கின்றன. இந்த மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை, திருக்கோகர்ணம், சித்தன்னவாசல் ஆகிய பகுதிகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள். இங்கு ஓடும் வெள்ளாறு சோழ நாட்டின் தென் எல்லையாகவும், பாண்டிய நாட்டின் வட எல்லையாகவும் விளங்கியிருக்கிறது. வரலாற்றில் போரில் ஈடுபட்டிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் அகப்பட்ட நாடாக இந்த புதுக்கோட்டை பகுதி விளங்கியிருக்கிறது.
தமிழக மன்னர் பரம்பரையினரான முத்தரையர்களும், கொடும்பாளூர் வேளிர்களும் தலை சிறந்தவர்கள். அவர்கள் ஆண்ட பகுதியும் இதுதான். இங்குள்ள சித்தன்னவாசலில் பல்லவ மன்னர்கள் கால கல்வெட்டுகளும், குடுமியான்மலையில் கோச்சடையன் ரணதீரன் என்கிற சடையன் மாறன் காலத்திய கல்வெட்டுகளையும் காணலாம். பல்லவன் ராஜசிம்ஹன் காலத்தில் கொடும்பாளூரில் பல போர்கள் நடந்திருக்கின்றன. திருக்கோகர்ணம், நீர்ப்பழனி ஆகிய இடங்களிலும் பல வரலாற்றுக் கல்வெட்டுகள் இருக்கின்றன. சமண மதம் இந்தப் பகுதிகளில் 11ஆம் நூற்றாண்டு வரை கொடிகட்டிப் பறந்திருக்கிறது. பல சமண தீர்த்தங்கரர் ஆலயங்களும், கல்வெட்டுகளும் காணப் படுகின்றன. பெளத்த மதத்தின் தாக்கமும் இங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் கோட்டைப்பட்டணத்தில் காணலாம். கடைச்சோழர்கள் எனப்பட்ட விஜயாலயன் சந்ததியினரின் ஆட்சி காலத்தில் இந்தப் பகுதிகள் அவர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ஆனால் இந்த சோழ வம்சத்தின் கடைசி மன்னரான ராஜாதிராஜனின் காலத்தில் சோழர்கள் ஆட்சி மங்கத் தொடங்கியது. சோழர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்களின் கை ஓங்கியிருந்தது. அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனாக இருந்த மாலிக்காபூர் என்பவன் தென்னகத்துக்குப் படையெடுத்து வந்தானல்லவா? அப்போது இந்தப் பகுதிகளை அவன் கபளீகரம் செய்து மதுரையில் சுல்தான் ஆட்சியைக் கொண்டு வந்தான். ராங்கியம், பனையூர் ஆகியவிடங்களில் இதற்கான குறிப்புகள் இருக்கின்றன.
டில்லி அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூரின் படையெடுப்புக்குப் பின் சிறிது காலம் சுமார் 75 ஆண்டுகள் தென்னகம் முஸ்லீம் ஆட்சியில் இருந்த போது புதுக்கோட்டை பகுதிகளும் தப்பவில்லை. ராஜ்யம் சின்னஞ்சிறு பகுதிகளாகச் சிதறுண்டு போயிற்று. அதன் பின்னர் விஜய நகர சாம்ராஜ்யம் தோன்றியதும் மதுரை முதலான தென்னகப் பகுதிகள் நாயக்கர் வம்சத்தாரின் ஆட்சிக்குள் வந்தது. ஹம்பி விஜய நகரத்தில் தோன்றிய சாம்ராஜ்யம் இங்கெல்லாம் ஆட்சி புரிந்ததற்கான சின்னங்கள் இப்போதும் இப்பகுதிகளில் காணப்படுகின்றன. இதே புதுக்கோட்டை பகுதிகள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் வம்ச ஆட்சியின் கீழ் சிறிது காலம் வந்தது. 17ஆம் நூற்றாண்டில் தொண்டைமான்கள் ஆட்சி புதுக்கோட்டையில் தொடங்கியது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் அரசர்கள் மதுரை நாயக்க மன்னர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்து வந்தார்கள். தொடர்ந்து இவர்கள் ஆட்சி நடந்த காலத்தில் தஞ்சையில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து மராத்தியர் ஆட்சி வந்தது. பின்னர் 1885இல் கடைசி மராத்திய மன்னன் இரண்டாம் சிவாஜிக்குப் பிறகு டல்ஹவுசியின் நாடு அபகரிக்கும் திட்டத்தின்படி தஞ்சை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நேரடியாக வந்து சேர்ந்தது. ஆனால் புதுக்கோட்டை சுதந்திரத்துக்குப் பின் டில்லி சென்று மன்னர் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலிடம் சென்று இந்த ராஜ்யத்தை இந்திய குடியரசோடு இணைக்க ஒப்புதல் அளித்துவிட்டு வந்தார்.
புதுக்கோட்டை தொண்டைமான்களின் பூர்வீகம் வடக்கே தொண்டைமண்டலத்தில் இருந்த திருப்பதி பகுதியாகும். விஜய நகர சாம்ராஜ்யத்தின் படைகளுடன் தெற்கே படையெடுத்து வந்த இந்த வீரர்கள் புதுக்கோட்டைப் பகுதியில் இருந்த கறம்பக்குடி எனும் பகுதியிலும் அம்புக்கோயில் எனும் பகுதியிலும் குடியேறினார்கள். பின்னர் அந்தப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.
இப்படியொரு மாற்றங்கள் தென் தமிழகத்தில் ஏற்பட்ட காலத்தில் இவர்கள் புதுக்கோட்டை பகுதியின் ஆட்சிக் கட்டிலில் ஏறினார்கள். தெலுங்கில் காணப்படும் “தொண்டைமான் வம்சாவளி” எனும் கவிதைத் தொகுதியில் இவர்கள் இந்திர வம்சத்தார் என்று குறிப்பிடுவதோடு, இவர்களில் முதல் மன்னன் பச்சை தொண்டைமான் என்றும் தெரிகிறது.
ஆவடிராய தொண்டைமான் என்பவர் அடுத்ததாகப் பதவிக்கு வந்திருக்கிறார். அப்போது விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட வெங்கடராயர் (1630 முதல் 1642 வரை) காலத்தில் அவருடைய உதவியுடன் இந்தத் தொண்டைமான் தனது ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறார். விஜய நகர சாம்ராஜ்யம் ஒரு பலம் பொருந்திய இந்து சாம்ராஜ்யமாக உருவெடுத்த காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானமும் தொண்டைமான்கள் தலைமையில் ஒரு பலம் பொருந்திய இந்து சாம்ராஜ்யமாக உருவாகியது. விஜய நகர ராயர்களுடனான தொடர்பால் தொண்டைமான் மன்னர்களும் தங்கள் பெயரோடு ராய எனும் சொல்லை ஏற்றுக் கொண்டனர்.
ரகுனாத ராய தொண்டைமான் எனும் புதுக்கோட்டை மன்னன் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களுடனும், திருச்சியை ஆண்ட ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் என்பவருடனும் நட்பு பூண்டிருந்தார். திருச்சி ராஜ்யத்தின் காவலராகவும் இந்தத் தொண்டைமான் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அப்போது இராம நாதபுரத்தை ஆண்ட மறவர் மன்னர் விஜய ரகு நாத கிழவன் சேதுபதி (1673 முதல் 1710) இவர்களுக்கு நெருக்கமாக ஆனார். இவரைக் கிழவன் சேதுபதி என்றே அழைப்பர். வரலாற்றில் புகழ்மிக்க இடத்தைப் பிடித்துவிட்டவர் இந்தக் கிழவன் சேதுபதி. இவருக்கு அனேகம் மனைவியர். அப்படி இவருக்கு வாய்த்த ஒரு இளம் மனைவி காதலி நாச்சியார் என்பவர். இவர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரின் சகோதரி ஆவார்.
கிழவன் சேதுபதி தொண்டைமானின் சகோதரி காதலி நாச்சியாரைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, வெள்ளாற்றுக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதிகளை தொண்டைமான் வசம் கொடுத்தார் கிழவன் சேதுபதி. அந்தப் பகுதியைத் தான் விரிவுபடுத்தப்பட்ட புதுக்கோட்டை ராஜ்யமாக ஏற்றுக்கொண்டு தொண்டைமான் ஆட்சி நடைபெற்றது. சேதுபதிகளின் வரலாறும் தொண்டைமான் ஆட்சியும் எனும் வரலாற்று ஏடுகள் இந்தத் தகவல்களையெல்லாம் கொடுக்கின்றன. வெள்ளாறு வரலாற்றில் பதிய காரணமாக இருந்தது தொண்டமானின் ஆட்சிக்கு எல்லைக்கோடாக இந்த ஆறு அமைந்த காரணத்தால்தான் என்பதையும் அறிய முடிகிறது. சோழ நாட்டின் எல்லை குறித்த ஒரு தமிழ்ப் பாடலும் இந்த ஆற்றை சோழ மண்டலத்தின் தெற்கெல்லையாகக் குறிப்பிடுவதை நினைவு படுத்திக் கொள்ளலாம். ரகுநாதராய தொண்டைமான் இப்படித் தன்னுடைய ராஜ்யத்தை விஸ்தரித்த காலமான 1686 முதல் அவர் ஆட்சி முடிந்த 1730 வரையில் மிக மகோன்னதமான நிலையில் இந்த ராஜ்யம் இருந்திருக்கிறது.
தொண்டைமான் ஆட்சிக்குப் புகழ் சேர்த்து ராஜ்யத்தை விரிவு படுத்திய ரகுநாத ராய தொண்டைமானின் காலத்தில் அவருடைய சகோதரர் நமன தொண்டைமான் புதுக்கோட்டையை அடுத்த குளத்தூர் எனும் பகுதிக்குத் தலைவர் ஆனார். இவருக்கு திருச்சிராப்பள்ளியை ஆண்ட நாயக்க மன்னரான ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரின் ஆசி கிடைத்தது. இவர் காலத்திலிருந்து குளத்தூர் தனி ராஜ்யமாக விளங்கி இங்கு ஆட்சி புரிந்தவர் குளத்தூர் தொண்டைமான் எனவும் அழைக்கப்பட்டார். இந்த நிலை 1750 வரை நீடித்தது. ஏனென்றால் 1750இல் இந்த குளத்தூர் பகுதி புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. ரகு நாத ராய தொண்டைமான் தன்னுடைய புதுக்கோட்டையுடன் குளத்தூர் மட்டுமல்லாமல் ஆலங்குடி, திருமெய்யம் ஆகிய பகுதிகளையும் இணைத்து ஒரு பேரரசாகப் பெருமையோடு ஆட்சியைத் துவக்கினார். இந்த ஒருங்கிணைந்த பகுதிதான் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் எனப் புகழுடன் விளங்கியது.
தொண்டைமான் வம்சத்தில் இரண்டாவது மன்னராக விளங்கிய (1730 முதல் 1769) விஜய ரகுனாத ராய தொண்டைமான் காலம் மிகவும் சிறந்த காலகட்டமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டையை இவர் ஆண்ட காலத்தில் வடக்கே டில்லி முகலாயர்களின் ஆட்சி இந்திய நாடு முழுவதும் விஸ்தரித்திருந்தது. தெற்கே ஆண்டுவந்த நாயக்கர் மன்னர்களான செஞ்சி, தஞ்சாவூர், மதுரை, திருச்சி ஆகிய அரசர்கள் முகலாய சாம்ராஜ்யத்துக்கு ஆற்காட்டு நவாப், நிஜாம் ஆகியோர் மூலமாக கப்பம் கட்டும் சிற்றரசர்களாக ஆகினர். இவர்கள் தவிர தெற்கே இருந்த சின்னஞ்சிறு பாளையக்காரர்களும் ஆற்காட்டு நவாப் மூலம் முகலாய மன்னர்களுக்குக் கப்பம் கட்டுபவர்களாக ஆகினர். டில்லி முகலாயர்கள் நிஜாமைத் தங்களது தென்னிந்திய பிரதி நிதியாகவும், அந்த நிஜாம் ஆற்காட்டு நவாபைத் தன் பிரதி நிதியாகவும் நியமித்தனர். ஆற்காட்டாரின் ஆளுமையில் அடங்கிய பிரதேசம் தமிழ் நாட்டின் பகுதிகள்; இவை கர்னாடகப் பிரதேசம் என வழங்கப் பட்டது. அரசியலில் இப்படியொரு மாற்றம் ஏற்பட்டு இந்தியாவின் கடைக்கோடிப் பிரதேசத்தில் இருந்த பாளையக்காரர்கள் முதல் பெரிய சமஸ்தானாதிபதிகள் வரை அனைவரும் டில்லி பாதுஷாவுக்குக் கப்பம் கட்டும் நிலை ஏற்பட்டதும்; ஆற்காட்டு நவாப் இவர்களது எஜமானர்கள் போலத் தங்களை நியமித்துக் கொண்டு நாட்டாமை செய்ததும் ஒரு புதிய சூழ் நிலையை இங்கு ஏற்படுத்தியது. இதன் விளைவாக தென்னக பாளையக்காரர்கள் ஆற்காட்டாருக்கு கப்பம் செலுத்த மறுத்தனர். அதன் விளைவாக ஆங்காங்கே பூசல்கள் ஏற்பட்டன. ஆற்காட்டு நவாபின் படைகள் நிஜாமினால் வலுப்படுத்தப் பட்டது. டில்லி சுல்தான் ஆதரவும், நிஜாமின் பக்க பலமும் சேர்ந்து ஆற்காட்டு நவாபின் கைகளை ஓங்கச் செய்தன. இவரும் தனது படைகளைக் கொண்டு தங்களுக்கு அடங்க மறுக்கும் சிற்றரசர்கள், பாளையக்காரர்கள் மீது போர் தொடுக்க படையெடுப்பதுமென நாட்டின் சூழ் நிலை மாறத் தொடங்கியது. இந்த சூழ் நிலையில் பற்றி எரிந்த இலங்கைக்கு நடுவில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த அசோகவனம் மட்டும் எரிதழலின் கரங்கள் தீண்டப்படாமல் பசுமையாக இருந்தது போல புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும் எந்தவித சேதத்துக்கும் ஆட்படாமல் தப்பி இருந்தது.
இப்படி ஊரை அடக்கி உலையிலிடும் தண்டல்காரனாக மாறியிருந்த ஆற்காட்டு நவாப் ஆட்சிக்கு ஒரு சவால்; வெளியில் இருந்து அல்ல. உள்ளுக்குள்ளேயே பங்காளிச் சண்டை ஏற்பட்டுவிட்டது. அதுதான் நாடறிந்த வரலாறு ஆயிற்றே! முகமது அலிக்கும் சந்தா சாகேபுக்கும் ஏற்பட்ட பூசல்தான் அது. இருவரில் யார் அரசுக்கு உரியவர் என்பதுதான் போட்டி. இதில் அன்னிய தலையீடு தங்கள் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக, ஆங்கிலேயர் முகமது அலியையும், ஃபிரெஞ்சுக்காரர்கள் சந்தா சாஹேபையும் ஆதரிக்கத் தொடங்கினர். தத்தமது படைகளையும் இவர்களுக்குக் கொடுத்துத் தாங்களும் போரில் நேரிடையாக ஈடுபட்டனர். எங்கோ ஐரோப்பாவிலிருந்து வியாபாரம் செய்து பொருட்களை விற்க வந்தவர்கள் இங்கு நடக்கும் ஆட்சிக்காக புருஷர்கள் நடத்தும் போட்டியில் ஆளுக்கொரு கட்சியில் சேர்ந்து கொண்டு காய் உருட்டலானார்கள். ஓராண்டல்ல, ஈறாண்டல்ல, பல ஆண்டுகள் தென்னகத்து மண் இவர்களுடைய போரினால், உயிர் சேதமும், உடமைகள் சேதமும், விவசாய நாசமும் ஏற்படக் காரணமாயின. இப்படி நாடு முழுவதும் போரும் அமைதியுமான மாற்றங்களில் தவித்துக் கொண்டிருந்த காலத்தில் புதுக்கோட்டை மன்னர்கள் மட்டும் பிரிட்டிஷ் பக்கத்தில் உறுதியாக நிலைகொண்டிருந்தனர்; தஞ்சை மராட்டிய மன்னர்களோ இங்கும் அங்குமாக ஊசலாடிக் கொண்டிருந்தனர். தமிழர் பூமியில் ஐரோப்பிய ஆதிக்க யுத்தம் இப்படி குழுப்பிக் கொண்டிருந்த நேரத்தில் ஃப்ரென்சு அடக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆதிக்கம் தலையெடுத்தது. இரு ஐரோப்பிய ஆதிக்கச் சக்திகளுக்கிடையே நடந்த போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை சமஸ்தானம் நடந்து கொண்டதற்குப் பரிசாக இனி புதுக்கோட்டை சமஸ்தானம் ஆற்காட்டு நவாபுக்கும் பின்னர் ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டாம் என முடிவாகியது.
புதுக்கோட்டை மன்னர்கள் ஆங்கிலேயர்களைத் தீவிரமாக ஆதரிக்க மற்றொரு முக்கியமான காரணமும் இருந்தது. அப்போது புதுக்கோட்டைக்கு சவாலாக விளங்கிய மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலியின் அச்சுறுத்தல் இவர்களுக்கு இருந்துவந்ததும் ஒரு காரணம். விஜயரகு நாத தொண்டைமான் (1789 முதல் 1807) ஆற்காட்டு நவாபுக்கும் பிரிட்டிஷாருக்கும் ஆதரவாக விளங்கக் காரணமாக இருந்ததும் இந்த மைசூரின் அச்சுறுத்தல்தான். ஆற்காட்டாரின் நன்றி விசுவாசம் அவர்கள் புதுக்கோட்டை மன்னருக்கு “ராஜா பஹதூர்” எனும் விருதினை வழங்கிக் கெளரவித்ததிலிருந்து தெரிந்து கொள்ளலாமே! அப்போது காற்று ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக வீசிக் கொண்டிருந்தது. எதிர்க் குரல் கிளப்பிய பல பாளையக்காரர்கள் வீழ்த்தப் பட்டனர். எங்கும் ஆதரவுக் கரம் நீட்டப்பட்ட நிலையில் ஆங்கிலேயர்கள் எதிர்ப்போர் யாருமின்றி தாந்தோன்றிகளாகத் திகழ்ந்தனர். 1800ஆம் ஆண்டு வாக்கில் தென்னகம் முழுவதும் ஆங்கிலேயர்களின் ஏகோபித்த ஆட்சி நிலவத் தொடங்கிவிட்டது. தஞ்சாவூரில் துளஜேந்திர ராஜாவுக்குப் பின் சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்த போதே ஆட்சிப் பொறுப்பை பிரிட்டிஷ் ஏற்றுக் கொண்டு அவரை பொம்மை ராஜாவாகத்தான் அங்கீகரித்திருந்தார்கள். ஆனால் 1855இல் தஞ்சை ராஜ்யமும் இரண்டாம் சிவாஜிக்கு வாரிசு இல்லை என்று காரணம் காட்டி முழுமையாக எடுத்துக் கொள்ளப் பட்டுவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த இராம நாதபுரம் மறவர் பூமியில் ஆண்டுவந்த சேதுபதிகள் வெறும் ஜமீன் தார்களாக ஆக்கப் பட்டார்கள். ஆனால் இத்தனை புயல் அடித்தபோதும் புதுக்கோட்டையில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அது ஒரு தனி ராஜ்யமாக இயங்க அனுமதிக்கப் பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குட்பட்டதாகக்கூட கருதப் படவில்லை. தனி சமஸ்தான அந்தஸ்து புதுக்கோட்டைக்கு மட்டும் கிடைத்தது.
இந்த விஜயரகு நாத தொண்டைமான் காலத்தில்தான் தெற்கே பல பாளையக்காரர்களுடன் வெள்ளையர்களுக்கு மோதல் ஏற்பட்டது; குறிப்பாக பாஞ்சாலங்குறிஞ்சி கட்டபொம்மு நாயக்கர் மீது தொகுக்கப்பட்ட தாக்குதல். எங்கிருந்தோ வந்த அன்னியர்கள் இந்த மண்ணின் மைந்தன் கப்பம் கட்டவில்லை என்பதற்காக அந்தச் சின்னஞ்சிறு பாளையக்காரர் மீது கோட்டையை முற்றுகையிட்டுப் போரிட்டனர். அந்த வீரம் செறிந்த பாளையக்காரர் அங்கிருந்து தப்பி தலைமறைவானார். மீண்டும் அவர் தொண்டைமானின் ஆளுகைக்குட்பட்ட கானகப் பாதை வழியாகச் சிவகங்கை செல்ல முயன்றார். ஆங்கில ஆதிக்கத்தினர் விடுத்த வேண்டுகோளின்படி கட்டபொம்மு நாயக்கர் திருமெய்யம் அருகே தொண்டைமான் படை வீரர்களால் பிடிக்கப்பட்டு மதுரையில் இருந்த ஆங்கில கம்பெனியார் வசம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் விசாரணை என்ற பெயரால் ஒரு நாடகம் நடத்தப்பட்டு அந்த வீரன் கயத்தாறு எனுமிடத்தில் தூக்கிலிடப்பட்டார். அந்த மாவீரனின் மரணம் இந்திய சுதந்திர ஆர்வம் கொண்டவர்களால் பின்னர் போற்றிப் பாராட்டப்பட்டது. அவனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்வோம்.
கட்டபொம்மு நாயக்கரைக் கைது செய்து பிரிட்டிஷார் வசம் ஒப்படைத்த நிகழ்ச்சியானது தொண்டைமானுக்கு வரலாற்றில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. இந்த செயலை தேசபக்தியற்ற செயலாகவும், துரோகமாகவும் சித்தரிக்கத் தொடங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு இன்னொரு பக்கமும் உண்டு. பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பி ஓடிவந்த கட்டபொம்மு நாயக்கர் சிவகங்கை மருதுவிடம் செல்லத்தான் வந்தார்; செல்லும் வழியில் தொண்டைமானின் பிரதேசத்தின் காட்டு வழிப் பாதையைப் பயன்படுத்தினார். ஆனால் அவர் தொண்டைமானிடம் அடைக்கலம் என்று வந்து சேரவில்லை. நம்பி வந்தவனைப் பிடித்துக் கொடுத்தால்தான் அது நம்பிக்கைத் துரோகம்; ஆனால் தன்னிடம் அடைக்கலம் என்று வராத நிலையில் தன் ராஜ்யத்தின் எல்லையில் தங்களது நண்பர்களான பிரிட்டிஷாருக்கு எதிரானவர் வந்தபோது அவரைப் பிடித்துக் கொடுப்பது ராஜத் துரோகமோ, காட்டிக் கொடுத்தலோ அல்ல என்றும் ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. அவரவர்களுடைய நிலைக்குத் தகுந்ததுபோலத்தான் இந்த நிகழ்ச்சியை எடைபோடவேண்டுமே தவிர இன்றைய தேசிய எழுச்சியையும், பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வையே எடைக்கல்லாகக் கொண்டும் பார்க்கும்போது இது ஒரு துரோகமாகப் பட்டாலும், அன்றைய நிலையில் பிரிட்டிஷாருக்கும் புதுக்கோட்டை மன்னர்களுக்கும் இருந்த உறவில், முன்னவர்களுக்கு எதிர்களானவர்களைப் பிடித்துக் கொடுத்தால் துரோகமல்ல என்பதும் அன்றைய சூழலில் புதுக்கோட்டையின் பார்வையில் பார்ப்பவர்களுக்குத் தெரிவதில் வியப்பு ஒன்றும் இல்லை.
அடுத்த மன்னர் ராஜா விஜயரகுனாத ராய தொண்டைமான் (1807 முதல் 1825) பதவிக்கு வந்தபோது பதினெட்டு வயது பூர்த்தியாகததால் பிரிட்டிஷ் அரசாங்கம் அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதற்கென்று மேஜர் பிளாக் பர்ன் என்பவரை நியமித்தனர். இவர் ஏற்கனவே தஞ்சாவூரில் ‘ரெசிடெண்ட்’ எனும் பதவியில் இருந்த காரணத்தால் அங்கு அமலாகியிருந்த நிர்வாக வழிமுறைகளை இங்கும் கொண்டு வந்து நடத்தினார். அதுமட்டுமல்லாமல் தஞ்சாவூர் மன்னர்களின் மொழியான மராத்தி மொழியை புதுக்கோட்டையிலும் கொண்டு வந்து நிர்வாக மொழியாக சுமார் 75 ஆண்டுகள் வரை இருக்க வழி செய்துவிட்டார். தஞ்சையில் கையாண்ட அதே நில அளவை முறைகள், நிலவரி விதிப்பு போன்றவைகளையும் அவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அமல் செய்தார். தொண்டைமான் மன்னர்கள் நகரத்தின் மத்தியில் சாந்தாரம்மன் ஆலயத்தையொட்டி அமைந்திருந்த அரண்மனையில் வாழ்ந்திருந்தார்கள். அது பழமையானதால் புதிதாக அரண்மனையொன்றை கட்டினார். நிர்வாகத் திறமை, நகரமைப்பில் அழகு இவைகளையெல்லாம் கொண்டு புதுக்கோட்டை மிக எழில் கொஞ்சும் நகரமாக விளங்கத் தொடங்கியது. நாங்கு ராஜ வீதிகள், அவற்றுக்குப் பின்னால் வரிசையில் பல அடுக்கு அடுக்கானத் தெருக்கள். இவற்றை இணைக்கும் குறுக்குச் சாலைகள், ஆங்காங்கே நீர் நிலைகள், குடி நீர்த்தேக்கங்கள் என்று நகரம் புதுப்பொலிவுடன் திகழ்ந்தது. ஐயன்குளம், பல்லவன் குளம், ராஜா குளம் என்றெல்லாம் பெயர்களில் ஊர் முழுவதும் ஏராளமான நீர் நிலைகள் பசுமையூட்டப் பயன்பட்டன.
இவருக்குப் பின்னர் வந்த ரகுநாத தொண்டைமானுக்கு (1825 முதல் 1839) ஆங்கில ஆதிக்க அதிகாரிகளை அழைப்பது போன்று “ஹிஸ் எக்செலன்சி” என்று விருதினை ஆங்கில அரசு கொடுத்து கெளரவித்தது. 1830இல் இவர் காவிரி நதியிலிருந்து புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குக் குடி நீர் கொண்டு வர ஏற்பாடுகளைத் தொடங்கினார். அதற்காக ஒரு புதிய வாய்க்கால் வெட்டவும் ஏற்பாடுகளைச் செய்தார்; ஆனால் அது அப்போது நிதி நெருக்கடி காரணமாக நிறைவேறவில்லை. இவருக்குப் பின் இராமச்சந்திர தொண்டைமான் பதவிக்கு வந்தார். அவரது காலம் (1839 முதல் 1886).
இந்த இராமச்சந்திர தொண்டைமானுடைய ஆட்சி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கவில்லை என்பது தெரிகிறது. சரியான ஆட்சிமுறை, நிதி நிர்வாகம் போன்ற நல்ல ஆட்சிக்குரிய அம்சங்கள் குறைந்து காணப்பட்டன. திவான் சேஷையா சாஸ்திரி என்பவர் 1878இல் பதவியேற்றுக் கொண்டார். அவருடைய வருகைக்குப் பிறகு பற்பல முன்னேற்ற நடவடிக்கைகள் நடைபெறலாயின. இவருடைய காலத்தில்தான் புதுக்கோட்டை நகரம் புது வடிவம் பெற்றது. நேர் நேரான சாலைகள், குளங்கள், அந்தக் குளங்களுக்கு நீர் வரும் வசதியான பாதைகள், துளி நீர்கூட வீணாகாமல் சேமிக்கும் அருமையான அமைப்புகள் என்று புதுக்கோட்டை புதுவடிவம் பெற்றது. இன்றை நகரமைப்புத் திட்டங்களை அன்றே மிக அருமைகாகத் திறமையாகக் கொணர்ந்தவர் சேஷையா சாஸ்திரி. அரசாங்க அலுவலகங்களுக்காக ஒரு புதிய செந்நிற செங்கல் நிற கட்டடம் இவர் காலத்தில் எழுப்பப்பட்டது. நாட்டில் மழையின்று வறுமை தாண்டவமாடிய சமயத்தில் விவசாயிகளுக்கு வேலை கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் விதமாக புதுக்குளம் எனும் குடி நீர் குளத்தை உருவாக்கியவர் சேஷையா சாஸ்திரி. ராமச்சந்திர தொண்டைமான் பற்பல பழமை வாய்ந்த ஆலயங்களைப் புதுப்பித்து குடமுழுக்கு செய்வித்தார். நிர்வாகத் திறமையின்மை வெளிப்பட்ட ஆரம்ப நிலை மாறி, இவரது ஆட்சியின் கடைசிக் காலத்தில் மிகவும் பயனுள்ள பல திட்டங்களை நிர்மாணித்த பெருமையோடு முடிவடைந்தது. இவற்றுக்கெல்லாம் சேஷையா சாஸ்திரியின் அனுபவமும், திறமையும் கைகொடுத்தது என்பது மிகையல்ல.
இவரையடுத்து மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் (1886 முதல் 1928) பதவிக்கு வந்தார். இவர் வந்த காலம் இந்திய அரசியலில் பெரும் மாற்றங்க்களைக் கண்ட காலம். விக்டோரியா மகாராணியார் கம்பெனி ஆட்சியை நீக்கிவிட்டு இங்கிலாந்து மன்னரின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியாவைக் கொண்டு வந்திருந்த காலம். மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பதவி ஏற்றபோது அவருக்கு வயது 11. ஆட்சி நிர்வாகத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மேற்பார்வையோடு ஒரு நிர்வாகக் குழு கவனித்து வந்தது.
இவர் ஐரோப்பிய யாத்திரை சென்று அயல் நாடுகளை விரிவாகக் கண்டு ஆராய்ந்து வந்தவர். இவர் ஒரு ஆஸ்திரேலிய பெண்ணான மேரி எஸ்மி சோரெட் ஃபிங்க் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவ்வளவு நீளமான பெயரை சுருக்கி மோலி என்று அழைத்தார்கள். இந்தத் திருமணம் 1915இல் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அந்த மகன் பெயர் என்ன தெரியுமா சிட்னி மார்த்தாண்டன். நம் மன்னருக்கும் ஒரு அயல் நாட்டு மாதுவுக்கும் பிறந்த இந்த சிட்னி மார்த்தாண்டன் பதவிக்கு வருவதற்கு பலத்த எதிர்ப்பு மக்களிடமிருந்து ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கமும் இவருடைய இந்தத் திருமணத்தை அங்கீகரிக்க மறுத்தது. ஆகையால் ராஜா பதவியைத் துறந்து பிரான்சில் குடியேறிவிட்டார். பிரிட்டிஷ் இளவரசர் ஒருவர் தன் காதலிக்காகப் பதவியைத் துறந்தார் அல்லவா? அதைப்போல நமது புதுக்கோட்டை இளவரசரும் பதவியைத் துறந்து பிரான்சில் குடியேறி அங்கு 1928இல் இறந்து போனார். அவர் இங்கிலாந்தில் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர்.
புதுக்கோட்டை மன்னர் பரம்பரையின் கடைசி ராஜாவாக, அந்த வரிசையில் ஒன்பதாவதாக ராஜா ராஜகோபால தொண்டைமான் (1928 முதல் 1948) பதவிக்கு வந்தார். இவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு அரசபதவி கிடைத்த பொது இவரது வயது 6. இவர் பதவியேற்ற பின் ஆட்சி நிர்வாகத்தை ஒரு நிர்வாகக் குழு கவனித்து வந்தது. அந்தக் குழுவில் இருந்த அலெக்சாண்டர் டோடென்ஹாம் என்பவர் குறிப்பிடத் தகுந்தவர். புதிய அரண்மனையின் கட்டுமான அழகு 1930இல் இவரால் எழிலூட்டப்பட்டது. கிரானைட்டால் கட்டப்பட்ட இந்த அழகு மாளிகையில்தான் இப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது.
1947 – இந்தியா பிரிட்டிஷாரின் அடிமைத் தளையிலிருந்து சுதந்திரம் பெற்ற ஆண்டு. புதிய இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் அனைத்து சமஸ்தானாதிபதிகளுக்கும் தெரிவித்துக் கொண்டது, அவர்கள் சமஸ்தானம் இந்திய அரசாங்கத்தோடு இணைந்துவிட வேண்டுமென்பது. அதன்படி முதன் முதலாக ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்கள் டில்லி சென்று வல்லபாய் படேலிடம் 4-3-1948 அன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய அரசாங்கத்தோடு இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை சமஸ்தானம் இணைக்கப்பட்டது. வரலாற்று புகழ்மிக்க இந்த இணைப்பு, எந்தவித கசப்போ, அச்சுறுத்தலோ இன்றி, மனப்பூர்வமாக நடந்தது. மகாராஜா ராஜகோபால தொண்டைமானின் இந்த தேசபக்தி மற்ற சுதேச சமஸ்தானங்களுக்கும் இருந்திருக்குமானால் பல கசப்பான நிகழ்வுகள் இந்திய வரலாற்றில் நடந்திருக்காது. இதனால்தான் புதுக்கோட்டை ராஜவம்சத்தாருக்கு இன்றுவரை மக்கள் தலை வணங்கவும், உளமாற நேசிக்கவும், அவர்களைப் போற்றி வாழ்த்தவும் காரணமாக அமைந்தது, ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்களின் பெருந்தன்மை என்றால் மிகையல்ல.வாழ்க இராஜகோபால தொண்டைமான் புகழ்!
புதுக்கோட்டை பகுதிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது அல்லவா? இது 1974 ஜனவரி 14ஆம் தேதியன்று பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகத் தோற்றுவிக்கப்பட்டது. இதில் முன்னாள் புதுக்கோட்டை சமஸ்தானப் பகுதிகளோடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்தும் சில பகுதிகள் இணைக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாகியது. தற்போது புதுக்கோட்டை, அறந்தாங்கி என இரு ரெவின்யூ பிரிவுகள் உள்ளடக்கிய பத்து தாலுகாக்கள் குளத்தூர், இலுப்பூர், ஆலங்குடி, புதுக்கோட்டை, கந்தர்வகொட்டை, திருமெய்யம், அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, பொன்னமராவதி ஆகிய பதிகள் உள்ளடக்கியதாக இருக்கிறது. 765 ரெவின்யூ கிராமங்கள் உள்ளன. 4664 சதுர கி.கீ. பரப்பளவு உள்ளது. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஜனத்தொகை. பருவ மழையை நம்பியுள்ள வானம் பார்த்த பூமியாகத்தான் இப்போதும் இப்பகுதிகள் இருக்கின்றன.
இவை தவிர பழைய நடிகர் பி.யு.சின்னப்பாவும், இடைக்கால காதல் மன்னன் ஜெமினி கணேசனும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற இசை மேதைகளும் இங்கு இருந்திருக்கின்றனர். புதுக்கோட்டை அசல் தமிழ் மண்ணின் ஒரு உதாரணப் பகுதி.
-
சிறுகை அளாவிய கூழ் – 13
இவள் பாரதி
விளம்பரங்களைக்
கண்கொட்டாமல்
பார்க்கும் குழந்தை
தொடர் ஆரம்பித்ததும்
தலை திருப்பிக் கொள்கிறது..
அதுவரை குழந்தையைப்
பார்த்துக் கொண்டிருந்த பாட்டி
கண்ணிமைக்காது
பார்க்கத் துவங்குகிறார்
தொலைக்காட்சித் தொடரை…
—————
அடிக்கடி தத்தி நடப்பதில்
ஆர்வம் கொள்ளும்
அம்மாகுட்டி
அவ்வப்போது இருட்டறைக்குள் சென்று
கொஞ்சம் புன்னகை தூவி வந்துவிடுகிறாள்
ஒளிர்கிறது அந்த வீடு
நள்ளிரவு கடந்தபின்னும்
-
வார்த்தைச் சித்தர்!…
கவிஞர் காவிரிமைந்தன்
வார்த்தைச் சித்தர் – ஞான பாரதி
வலம்புரி ஜான் அவர்கள் வழங்கிய
சிறப்பு வானொலி நிகழ்ச்சிப்பதிவின் எழுத்தாக்கம்
நிகழ்ச்சி தயாரிப்பு – திரு.என்.சி. ஞானப்பிரகாசம்
அமைப்பில் உதவி – திரு.ஜெ.சுரேஷ்குமார்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் எழுத்தாக்கம் –
கவிஞர் காவிரிமைந்தன்
(நாள் – 13.10.2001) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.00 மணிவரை
(தொடக்கம்)
நூறாண்டு காலம் வாழ்க.. நோய் நொடியில்லாமல் வாழ்கஊராண்ட மன்னர் புகழ்போல.. உலகாண்ட புலவர்தமிழ்போல …
பாடல் ஒலிக்கிறது..
வார்த்தைச் சித்தர் வானொலி நிலையத்தின் பதிவு அறையில் நுழைகிறார்.
என்.சி.ஞானப்பிரகாசம் : வணக்கம் நேயர்களே..
வாழ்க்கையில் சிலர் சித்து வேலை செய்வார்கள். ஆனால் வார்த்தையில் சித்துவேலை செய்பவர்தான் இன்றைய சிறப்பு விருந்தினர்! பாரெங்கும் பாரதியின் பெருமைகளை பயமின்றி சொல்லிவரும் படைப்பாளி இவர்! இன்றைய சினிமா நேரத்தின் விருந்தாளி! சிறப்பு விருந்தினரான வலம்புரி ஜான் அவர்களை வருக வருகவென வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
என்.சி.ஞானப்பிரகாசம் – வணக்கம் சார்! செளக்கியமா இருக்கீங்களா?
வலம்புரியார் – நல்லா இருக்கேன்.
என்.சி.ஞானப்பிரகாசம் – பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே உங்களுக்குத் தமிழ்மீது ஆர்வம் அதிகமா?
வலம்புரியார் – படிக்கின்றபோதே தமிழின்மீது இயல்பான ஒரு நாட்டம் ஏற்பட்டது. மே தினத்தில் முதன்முறையாக மேடையில் பேசினேன். மேதினியில் மக்களுக்கு மேன்மை தரும் தினம் மே தினம் என்பதே என்னுடைய முதல் வரி! பேசுவதற்காக படிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தை இயற்கை எனக்குள் வரவழைத்ததால் அதற்கப்பாலே படிக்காமல் இருக்க இயலவில்லை. பேசுவதற்காகப் படித்தேன். அதற்கப்பாலே படிப்பதில் அமிழ்ந்து தொடர்ந்து தொய்வில்லாமல் இவையெல்லாம் படிக்கிறபோது தமிழினுடைய மேன்மை, மொழியினுடைய சிறப்பு நெஞ்சுக்குள்ளே குடிகொண்டன.
என்.சி.ஞானப்பிரகாசம் – நீங்கள் விரும்பியிருக்கின்ற திரைப்பாடல் – இன்று போய் நாளை வாராய் என..
வலம்புரியார் – காரணம் வந்து, அது இசைச் சித்தருடைய பாடல் என்பதற்காக மாத்திரமல்ல.. பிறிதோர் இப்போது அப்படிப் பாட முயற்சித்தாலும் அவர் மாதிரிப் பாடலாமே தவிர அது போல பாட இயலுமா என்பது கேள்வி. அது மாத்திரமில்லாமல், இந்த மண்ணில் எப்போதும் மக்கள் போற்றி வணங்குகிற, வாசிக்கப்படுகிற இராமயணத்திலே ஒரு சிறந்த கட்டத்தை மையமாக எடுத்துச் சொல்கிறது. இராவணன் என்றால் அவன் வந்து ஒரு அவல வீரன்! ஏதோ ஒரு மோசமானவன் என்றெல்லாம் சித்தரித்துக் காட்டுகின்ற நிலைமை மாறி அவனுக்குள்ளும் ஒரு உள்ளமிருக்கிறது! அந்த உள்ளம் கள்ளமில்லாமல் இருந்தது என்பதற்கு கனிந்த அடையாளம் இப்பாடல் இருப்பதால் இப்பாடலை நான் எப்போதும் விரும்புவேன்..
பாடல் – இன்று போய் நாளை வாராய்.. என
எனை ஒரு மனிதனும் புகலுவதோ..
என்.சி.ஞானப்பிரகாசம் – நீங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது.. சுவராஜ்ஜியா என்றொரு பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருந்தது. அதில் ஒரு அரசியல் கட்டுரை.. அந்தக் கட்டுரையில் தவறு ஒன்று உள்ளது என்று நீங்கள் சுட்டிக் காட்டி எழுதியிருந்தீர்கள். அந்த அரசியல் வித்தகர் – அரசியல் ஞானி – உங்களுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தார்! அதைப் பற்றிப் பேசலாமே!
வலம்புரியார் – அது என்னுடைய புதுமுகவகுப்பில் நான் இருந்தபோது அந்த பாளையங்கோட்டையில் வருகிற ஒரே பத்திரிக்கை சுவராஜ்ஜியாதான். வேறு ஆங்கிலப் பத்திரிக்கைகள் வராது. பிளிட்ஸ் மற்றும் சுவராஜ்ஜியா வரும். சுவராஜ்ஜியா வாங்கிக் கொண்டு ஒரு நாள் வாசித்தேன். வாசிக்கிற போது குடும்பக் கட்டுப்பாட்டிற்கு எதிராக சக்கரவர்த்தி ராஜாஜி ஆச்சாரியார் அவர்களுடைய கட்டுரை வந்திருந்தது. அது அவருடைய கருத்து.. ஆனால், அப்படி அந்தக் கட்டுரை வெளிவந்த அதே பக்கத்தில் ‘நிரோத்’ பற்றிய விளம்பரம் வந்திருந்தது. ஆகவே இவருடைய பத்திரிக்கை .. அந்தப் பத்திரிக்கையில் இப்படிப்பட்ட விளம்பரம் வரலாமா என்று தைத்தது. ஆகவே உடனே நான் அவருக்கு எழுதினேன். என் வயதைப் பார்க்காமல், நான் இந்த நாடு அறிந்தவனா அறியாதவனா என்பதையெல்லாம் கருதாமல் நான் சுட்டிக் காட்டிய கருத்து உண்மையா இல்லையா என்பதை மாத்திரமே பார்த்து அவர் உடனே எனக்குப் பாராட்டுத் தெரிவித்தார்கள். அந்தக் கடிதத்தைக்கூட என்னுடைய புத்தகம் ஒன்றில் அப்படியே பதிப்பித்திருக்கிறேன். இரண்டாம் அலைவரிசை என்கிற புத்தகத்தில் அது காணக் கிடைக்கிறது.
என்.சி.ஞானப்பிரகாசம் – அவர் என்ன எழுதியிருந்தார் என்பதை நேயர்களுக்குச் சொல்லலாமே..
வலம்புரியார் – வேறொன்றுமில்லை.. அவர் எழுதியதெல்லாம் இந்த மாதிரி.. நீங்கள் சுட்டிக்காட்டியது சரி.. ஆனால் சுயராஜ்ஜியா என்னுடைய பத்திரிக்கையல்ல! அதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சுட்டிக் காட்டியது சரி என்றால் நான் இதை வந்து பதிப்பாளருக்கு உடனே தெரிவிப்பேன்.. ஆசிர்வாதங்கள்.. (அவருடைய தமிழில்..) என்று எழுதியிருந்தார்.
என்.சி.ஞானப்பிரகாசம் – அடுத்து நீங்கள் விரும்பிய பாடல்..
வலம்புரியார் – அது ‘உன்னழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசைவரும்!’ என்று சொல்கிற போது அது ஒரு உச்சமான கற்பனை! ஒரு பெண்ணைப் பார்த்து பெண் மயங்குகிறாள் என்றால் அது உண்மையாகவே அதிலே வஞ்சமிருக்க வேண்டிய இடத்திலே நெஞ்சமிருக்கிறது! அந்த அழகு அப்படிப்பட்டது என்று சொல்வதற்கு உவமிக்கிற இடம் சிறப்பாக இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் இன்றைக்கு இசை என்பது ஒரு கூத்தடிப்பு போல ஆகிப்போன காலததில் மென்மையான ஒரு தென்றலைப்போல் ஒரு மகரந்த வரிகளை வீசுவதைப் போல ஒரு மத்தளம் மெலிதாய் அதிர்வதைப் போல – வருகிற அந்த இசை எனக்குள் சின்ன வயதில் ஏற்படுத்தியிருக்கிறது. நமது ரத்த அணுக்களில் சின்ன வயதில் கேட்ட ஒரு பாடல் இடம்பிடித்துக் கொள்கிறது. அது எத்தனை வயதானாலும் அப்பாடல் நம்மோடே பயணிக்கிறது. அப்படித்தான் இப்பாடல் இன்னமும் என் கூடவே வந்து கொண்டிருக்கிறது.
உன்னழகைக் கன்னியர்கள்… (உத்தமப் புத்திரன் திரைப்படத்தில்)
என்.சி.ஞானப்பிரகாசம் – அபரீதமான புகழ் தேவையெனில் சிலர் அரசியலை விரும்புகிறார்கள்.. சிலர் சினிமாவை விரும்புகிறார்கள். சிலர் ஆன்மீகத்தை விரும்புகிறார்கள். வார்த்தைச் சித்தருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது எது?
வலம்புரியார் – புகழ் பெறுவதற்காக நான் இவைகளைத் தேடவில்லை. காரணம் புகழைத் தேடுபவர்களுக்கு புகழ் ஒருபோதும் வராது தேடாமல் இருந்தால் வரும். அப்ப.. தேடாமலிருந்தால்தான் வரும் என்பதற்காகவா என்றால் அதுவுமில்லை! இயல்பாக நமக்கு வாழ்க்கையில் எழுத்து பேச்சு இவைகளெல்லாம் எளிதாக அமைந்தன. ஆன்மீகத்திலே ஒரு நாட்டமிருக்கிறது. ஆன்மீக நாட்டம் என்பது பிறவிதோறும் தேடுகிற தேடலால் வருவது. இந்தப்பிறவியிலே தொடங்கி ஒருவர் வந்து சமயச் சின்னங்களை அணிந்துகொண்டு தன்னை வந்து ஒரு ஆன்மீக ஞானியாக ஆக்கிக்கொள்ள இயலாது. பிறவிதோறும் தேடுகிற தேடல். அந்தப் பிறவிதோறும் தேடுகிற தேடலுக்கு இந்தப் பிறவியில் பதில் கிடைத்திருக்கிறதா என்றால் கிடைத்திருக்கிறது. அந்த கிடைப்பு என்பது அரிதானது. அது கொடுத்து வைத்திருக்க வேண்டும். எடுத்துச் சொன்னாலும் அதை எடுத்துக் கொள்பவர்கள் ஒன்றிரண்டு பேர்தானிருப்பார்கள். புத்தனிடம் வந்து ஆனந்தன் கேட்டான்.. புத்தா.. நீ ஞானம் பெற்றவன். ஞானம் பெறுவது எப்படி என்று எனக்குச் சொல்லித்தருவாயா என்று கேட்டான். அதற்கு கெளதம புத்தர் – நான் சொல்லித்தர இயலாது.. ஆனால் நீ கற்றுக் கொள்ளலாம் என்றார். சொல்லித் தராததை நான் எப்படிக் கற்றுக் கொள்வது என்று அவர் 20 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டேயிருந்தார். ஞானம் என்பது ஒரு வாய்ப்பாடல்ல.. வெளிப்படுத்துவதற்கு! புத்தனுக்கு எவனும் சொல்லவில்லை. புத்தன் தானே கண்டெடுத்தான். கண்டெடுப்பதே ஞானம். பிறர் உணர்த்துவதல்ல.. நாமே கண்டுபிடிப்பது! ஆக அந்த மாதிரி முயற்சியில் இறங்கி ஓரளவு நான் வெற்றி பெற்றிருக்கிறேன். ஆக எதிலுமில்லாத மனநிறைவு ஆன்மீகத்திலிருக்கிறது. அதிலொன்றும் மறுப்பதற்கில்லை. இன்னுமும் சொல்லப்போனால், அதில் சுயநலம் கலந்திருக்கிறது. காரணம் அது பேரின்பம் என்பதை அறிந்தவன்தான் அறிவான்.
என்.சி.ஞானப்பிரகாசம் – அடுத்து.. கர்ணன் படத்திலிருந்து ஒரு பாடல்.. என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்..
வலம்புரியார் – இது இந்த வரலாற்றுப் படங்கள் பொதுவாக எனக்குப் பிடிக்கும். ஆங்கிலத்திலுமே கூட வரலாற்றுப்படம் வந்தால் அதை சென்று நான் பார்ப்பேன். திரையரங்குகளுக்கே பல ஆண்டுகளாக போகாமலிருக்கிற நான் தப்பித்தவறி எங்கேயாவது வரலாற்றுப்படம் ஆங்கிலம் என்றால் அதை சென்று பார்ப்பது வழக்கம். வரலாறு என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டுவது! நேற்றைக்கு வந்து நடந்த ஒரு சம்பவத்திற்கு என்ன விடையோ அதுதான் இன்றைய சம்பவத்திற்கும்! விடை ஒன்றுதான்! காலங்களால் அது மாறலாம்! தேசங்களால் அது மாறலாம்! ஆனால் வாழ்க்கை அளிக்கிற விடை ஒன்றுதான்! ஆக அந்த அடித்தளத்தில் வரலாற்று மாணவன் நான். வரலாறு வழி காட்டுகிற காரணத்தால் இது ஒரு வகையான வரலாறு. கர்ணனுடைய வரலாறு! அவனுடைய சிறப்பியல்புகளைச் சொல்வது. அவனுடைய சிறந்த அந்த நோக்கங்கள்.. வாழ்க்கை நெறிகளைச் சொல்வது. அதை மிகச் சரியாக அவர்கள் சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். அந்தப் பாடலிலே ஒரே இசையில் இல்லாமல் பல இசைகளைக் கலந்து அது நம்மை வந்து நோகடிக்காமல், நொந்துதலில் ஆழ்த்தாமல், அப்படியே நுங்கு நுரையாக பொங்கிவரும் பாடல் என்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்
என்.சி.ஞானப்பிரகாசம் – .இலக்கியம் சமுதாய மாற்றத்தை உருவாக்குமா?
வலம்புரியார் – சமூக மாற்றத்தை உருவாக்குகிற ஒன்றுக்குப் பெயர்தான் இலக்கியம். ஒரு காலத்தில் இலக்கியம் கற்பனையாக இருந்தது. குற்றாலக் குறவஞ்சியில்.. திரிகூட ராசப்பக் கவிராயர் பாடுகின்றபோது..
மந்துசிந்துகனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கவனசித்தர் வந்துவந்து காயசைத்து விளப்பர்
செழுங்குரங்கு தேமாவில் பழங்களைப் பந்தடிக்கும்
தேன்மலர்செண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்
என்று பாடினார்.. ஆக.. வெடிக்கும் நடிக்கும் துடிக்கும் என்றெழுதுவதும்.. இவர் பாடுகிற பாட்டிலே குற்றாலமே குளிர்ந்து கீழே இறங்கிவருகிற அழகைப் பார்க்கிறோம் என்று பேசுவதும் சமுதாயத்திற்கு உதவுமா? கற்பனையிலே மிதக்கிறவனுக்கு அது கருவியாகுமே தவிர, சமுதாய மாற்றத்திற்கு உதவாது. ஆனால், உலகம் முழுவதிலும் ஹோஷோவிலிருந்து, மாசேதுங்கிலிருந்து அது மாதிரி வரலாற்றை உருவாக்குகிற மனிதர்கள் கவிதைகளால் சமுதாயம் மாற வேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள். ஆக.. சமுதாயத்தை மாற்றுகின்ற கருவிதான் இலக்கியம். வாழ்க்கையிலிருந்து வருவது இல்கியம். வாழ்க்கைக்கு வழிகாட்டுவது இலக்கியம்.
என்.சி.ஞானப்பிரகாசம் – ஒண்ணுமே புரியலே இப்படி ஒரு பாடல்..
வலம்புரியார் – உலகத்திலே எனக்கு ஒரு வேறு பாடு உண்டு. மற்றவர்களுக்கும் எனக்கும் ஒரு வேறுபாடு என்று நான் கருதுகிறேன் என்றால்.. எனக்கொன்றும் தெரியாது என்பது தெரியும். பலருக்கு ஒன்றும் தெரியாது என்பது தெரியாது. தெரியாது என்பதை தெரிந்து கொள்வது ஞானத்தினுடைய துவக்கம். ஆக எனக்கு ஒன்றும் தெரியாதது மாத்திரமல்ல.. என்னதான் முயற்சித்தாலும் இறுதிவரை தெரிந்து கொள்ள இயலாது என்பதுகூட எனக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், தெரிந்து கொள்ள முடியாத ஒன்றுக்காக ஏன் முயற்சிக்கிறீர்கள் என்றால்.. முடிவிலே இன்பம் இல்லை.. தேடலிலேதான் இன்பம்.. வானத்தைப் பாருங்கள்.. நீலவண்ணமாக.. அந்த வானமிருக்கிறதே.. அதை எங்காவது தொட இயலுமா? காரணம் வானம் என்று ஒன்று இல்லவே இல்லை. தோற்றம்தான்.. ஆக, தேடலில் உள்ள சுகம் அடைவதில் இல்லை. ஆக இது குழப்பமல்ல.. இது வளர்ச்சி!
வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுகிற பாட்டு இது.. ஆகவே எனக்குப் பிடிக்கும்!
ஒண்ணுமே புரியலே உலகத்திலே
என்.சி.ஞானப்பிரகாசம் – ஒரு பக்கம் கவிதை.. மறு பக்கம் ஆன்மீகம்.. இன்னொரு பக்கம் – பட்டிமன்றம்; பிறிதொரு பக்கம் தொலைக்காட்சி.. கிடைக்கின்ற 24 மணி நேரத்தை எப்படி பெருக்குகிறீர்கள்? வகுக்கிறீர்கள்? எப்படி கூட்டுகிறீர்கள்?
வலம்புரியார் – நான் அதை ஒரு எந்திரத்தைப் போல செய்வதில்லை. ஒரு நாளில் இதிலிருந்து அதைச் செய்ய.. அதிலிருந்து இதைச் செய்ய என்றால் மனிதன் எந்திரமயமாகிப் போகிறான். எந்திர வாழ்க்கையில் ஒருவனுக்கு ஆதாயம் உண்டா என்றால் இல்லை.. இன்பம் உண்டா என்றால் இல்லை.. அப்படி வகுத்துக் கொள்ளாமல் காலையில் எழுந்ததும் கடன்களை முடித்துவிட்டு.. பத்திரிக்கைகள் பார்ப்பது, அதற்கப்பாலே செய்திகளைக் கேட்பது, அதற்கப்பாலே பார்த்தால் புத்தகத்திற்குள் நுழைந்துவிடுவது.. இந்தப் புத்தகத்தில் நுழைகிற ஒன்றுக்கு மாத்திரம் .. எப்போது நுழைய வேண்டும் .. எப்போது திரும்ப வேண்டும் என்றெல்லாம் தெரியாது. இரவிலே வெகுநேரம்வரை விழித்திருப்பேன். உதாரணத்திற்கு இரவு 12 மணிக்கு படுக்கப்போனால் 3 மணிக்கு நான் எழும்பிவிடுவேன். 3 மணிக்கு ஏன் எழும்புகிறேன் நான் என்று வெகுநாட்களாக சிந்தித்தேன். அந்த 3 மணியை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இயற்கை என்னைத் தட்டி எழுப்பியது. திருவள்ளுவர் நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் என்று பேசுகிறார். ஆகவே 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று எவர் சொன்னாலும் அவர்கள் சமுதாயத்தினுடைய முதல் தரமான எதிரிகள் என்று நான் கருதுகிறேன். 3 மணிக்கு விழித்து 2 மணி நேரம் படித்துவிட்ட அதற்கப்பாலே பார்த்தால் 1 மணி நேரம் தூங்கினால் எனக்குப் போதும். மதியத்தில் தூங்குவதற்கு முயற்சி பண்ணுவேன் உடல் நலம் கருதி. ஆனால் பல வேளைகளில் தூங்க இயலாது. தூங்காமல் தூங்கி சோம்புறு காலம் என்று வள்ளலார் பேசினாரே அப்படி நமக்கு வாய்த்ததோ என்று மகிழ்வேன். ஆக இந்த நேரத்தில் இதைச் செய்வது என்றல்ல.. ஆக வருகிற படி செய்வேன். கூட்டங்களுக்குப் போவோம். இறுதியாகப் பேசவிடுவார்கள். அப்ப ஏறத்தாழ ஒரு 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும். 5 மணி நேரத்தில் நம்முடைய நேரம் மாத்திரமல்ல.. 5 பெருக்கல் 1000 என்று பார்த்தால் 5000 மணி நேரத்தை செலவிடுகிறோம் என்பதை தமிழர்கள் ஒரு போதும் உணர மாட்டார்கள். ஆகவே அந்த இடங்களில் கேட்கத்தகுந்த பேச்சாக இருந்தால் கேட்பேன். கேட்கத்தகுந்த பேச்சாக இல்லாவிட்டால் நான் வந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருப்பேன் அல்லது ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருப்பேன்.. எப்படியாவது அந்த நேரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உணர்வு எப்போதும் இருக்கும்.
என்.சி.ஞானப்பிரகாசம் – யாருக்கும் வெட்கமில்லை – இப்படி ஒரு பாட்டு!
வலம்புரியார் – கவியரசர் கண்ணதாசன் முதன் முதலாக என் கன்னத்தில் பொட்டு வைத்தவர். சின்ன வயதிலே நான் இந்த ஊருக்கு வந்தபோது முதன் முதலாக என் கவிதையை அவருடைய கடிதம் இதழிலே பதித்து நான் எழுதுவதுகூட வரும் என்கிற நம்பிக்கையை எனக்குள்ளே விதைத்தவர். அதற்கப்பாலே என்னுடைய புத்தகங்கள் – தாகங்கள், அம்மா அழைப்பு, வரலாற்றில் கலைஞர் போன்ற புத்தகங்களுக்கெல்லாம் அணிந்துரை தந்தார். என் வயதில் சத்தியமாகச் சொல்லப்போனால் வேறு ஒருவரை அவ்வளவு பாராட்டியதில்லை; புகழ்ந்ததில்லை.. அந்த அளவுக்கு உச்சிமேல் வைத்து மெச்சிப்புகழ்ந்ததால் அவருடைய நினைவுகளோடு நான் எப்போதும் சஞ்சரிக்கிறேன். இதிலே பிடித்த வரி இந்த உலகம் எப்படியிருக்கிறது என்று இவ்வளவு எளிமையாய் எப்படிச் சொல்ல இயலும்? பைபிள் மாதிரி எளிமையானது! என்ன சொல்கிறார்.. மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்! நீ சொன்னால் காவியம்! காவியத்தைத்தான் சொல்லணும்னு அவசியமில்லை.. நீ சொல்லிட்ட இல்ல.. நீ சொன்னா காவியம் என்று சொல்கிறார் என்றால் அவர் வந்து அடிக்கிற அடி சமுதாயத்தின் பீடைகளுக்கெல்லாம் சேர்த்து அடிக்கிற அடி.. ஒரு மென்மையான மனிதன்.. ஒரு தென்றலைப் போல் வந்து ஆலமரத்தை வேரோடு சாய்க்கிற ஆற்றலுடைய மனிதன்.. ஆகவே அந்த கவிஞனுக்கு எப்போதும் நான் தலை வணங்குவேன். இந்தப் பாடல் எனக்குப் பொதுவாகப் பிடிக்கும்..
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்
சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உங்கள்
மார்பினைக் காட்டுதடா
என்.சி.ஞானப்பிரகாசம் – வளர்ந்துவரும் வானம்பாடிகளுக்கு வலம்புரியார் ஒரு சரணாலயம் – சரிதானே?வலம்புரியார் – நான் நிரம்ப இளைஞர்களை தோள்கொண்ட மட்டும் தூக்கியிருக்கிறேன். என்னுடைய கருத்து – நான் தூக்கியிருக்காவிட்டால் மற்றவர்கள் தூக்குவார்கள். காரணம் அவனுக்கு ஒரு கை கருவியே தவிர நாமே அவனை வளர்ப்பதில்லை! அவர் எந்த சரணாலயத்திலேயாவது புகுந்து எப்படியாவது தப்பித்துக் கொண்டு வருவான். நிரம்ப இளைஞர்கள் என்னிடம் கேட்பார்கள் – நாங்கள் நிரம்ப எழுதுகிறோம். எழுதியதெல்லாம் திரும்ப வந்துவிடுகிறதே என்று சோர்ந்துவிடுவார்கள். நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம் ஒரு பொருள் வந்து புறப்பட்ட இடத்திற்கு திரும்பிவரும் என்பது பூகோள விதி. அப்படி நீங்கள் எழுதியது உங்களுக்கே திருப்பப்படுகிறதென்றால் பூகோள விதியை நீங்கள் நிறைவேற்றுவதற்கு காரணமாய் இருந்தீர்கள் என்று கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, வேறு அல்ல என்று சொல்வேன். மீண்டும் மீண்டும் எழுத வேண்டும். காரணம் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் பத்திரிக்கையில் போடுகிறேன் என்று சொல்லி எதிர்பார்க்க வைத்து குப்பைக்கூடையில் போட்டவர்களெல்லாம் ஒரீரண்டு வருட காலத்தில் என்னிடத்தில் அணிந்துரை தேடி வந்தார்கள். ஆக.. எந்த இளைஞனையும் அலட்சியப்படுத்தக்கூடாது. அவனுக்குள்ளே இருக்கிற ஆற்றலை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதில் ஒரு சமுதாயப் பணி இருக்கிறது. ஆகவேதான் எனக்கு அதில் விருப்பம் அதிகம்!
என்.சி.ஞானப்பிரகாசம் – அடுத்து உங்களுக்குப் பிடித்த பாடல்! அபூர்வ ராகங்கள் – அதிசய ராகம்!
வலம்புரியார் – அதிசய ராகம் எப்போதும் பிடித்ததற்கு என்ன காரணம் என்றால் இந்த அபூர்வ ராகங்கள் வெளிவந்த போது 100வது நாள் விழா நடந்தது. இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் கற்பகம்பாள் திருமண மண்டபத்தில் அந்த ஆண்டில் நடைபெற்ற கூட்டத்தில் மூவரை அழைத்திருந்தார். அப்போது தமிழகத்தில் முதன் முறையாக முதலமைச்சராகியிருந்த கலைஞர், ஏ.எல்.சீனிவாசன், நான் – மூன்று பேரும் மேடையிலிருந்தோம். கமலஹாசன் இருந்தார். ரஜினிகாந்த்துக்கு அதுதான் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட இடம். அப்போது நான் பேசுகிறபோது ஸ்ரீவித்யா இருந்தார். அப்போது நான் சொன்னேன்.. இவர் ஒரு சந்தனக் கட்டை.. ஒரு சிறந்த கலைஞனிடம் சிக்கியிருப்பதால் இதிலிருந்து ஒரு கலைச்சிற்பம் உருவாகும் என்று சொன்னேன். என்னை அறியாமல் சொன்னது. அவர் இன்றைக்கும் அதை நினைத்து மகிழ்ச்சியடைகிறார். அதிலே பேசிக்கொண்டிருந்தபோது கவியரசர் வந்தார்கள். மேடைக்கு வரவில்லை. கொஞ்சம் உடல்நலம் குறைவாக இருந்தது. மேடைக்கு எதிரே வந்தமர்ந்தார்கள். அவரைச் சொல்ல வேண்டும் என்பதற்காக.. இந்த ஒரு புறம்பார்த்தால் மிதிலையின் மைதிலி.. மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி – என்று சொன்னாரே தவிர எந்தப்புறம் என்று சொல்லாமல் அதை நமது சிந்தனையுடைய அந்தப்புரத்திற்கே விட்டார் என்று சொன்னேன்.
என்.சி.ஞானப்பிரகாசம் – நமது இன்றைய இளைஞர்கள் எதன்மீது பற்று வைத்திருக்கிறார்கள்? அவர்கள் பார்க்கும் பார்வையும் பயணம் செய்யும் பாதையும் சரிதானா?
வலம்புரியார் – எல்லா இளைஞர்களும் தவறு செய்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. சிறந்த இளைஞர்கள் எப்போதும் இருக்கிறார்கள். இவர்களை எப்படிக் கண்க்கிடுவது என்றால்.. பிரெஞ்சுப் புரட்சி நடந்தது. அது உலகத்தினுடைய வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றிருக்கிறதே தவிர, பாஸ்டில் சிறையை வீழ்த்தியவர்கள் 23 பேர்தான். ஆக வால்டே ரூசோவின் சிந்தனையை உள்வாங்கிக் கொண்டவர்களே 23 பேர்கள்தான். பிரெஞ்சுப் புரட்சி என்று பேசுகிறோம். ஏசு பெருமானுடைய சீடர்களே 12 பேர்தான். இவர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். ஏனென்றால் இவர்கள்தான் செயல்படுகிற சிறுபான்மை. மற்றவர்கள் எல்லாம் செயல்படாத பெரும்பான்மை. இது செயல்படுகிற சிறுபான்மை குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த சமுதாயத்தில் செயல்படுகிற சிறுபான்மை என்று நான் அழைக்கிற இளைஞர்கள் எப்போதும் குறைந்துவிடுவதில்லை. எங்கோ இருப்பார்கள். பொதுவாக இருக்கிற இளைஞர்கள் வந்து அவர்கள் கால்கள் போன போக்கிலே போகிறார்கள். அவர்களுக்கு எதிலே பற்று இருக்கிறது? முதலிலே அவர்கள்மீது அவர்களுக்கு பற்று இருக்க வேண்டும்! அது அவர்களுடைய நம்பிக்கையை உருவாக்கும். மொழி, சமுதாயம், தன்னைப் பெற்றவர்கள், ஆசிரியர்கள் என்று அப்படி தங்களை வளர்த்துக் கொள்ளவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு. இன்னமும் சொல்லப்போனால், என்னுடைய ஒரே குற்றச்சாட்டு – எல்லா இளைஞர்களுமல்ல.. அனேக இளைஞர்கள் என்ன கருதுகிறார்கள் என்றால் கனிகளைப் பெற வேண்டுமென்று கருதுகிறார்களே தவிர அதற்கான வியர்வை நதியைச் சிந்த வேண்டுமென்று கருதுவதில்லை. காரணம் சுற்றிலும் பார்க்கிறார்கள் – சும்மா இருப்பவர்கள் எல்லாம் உலகத்திலே வளர்ந்து பெரிதாகிவிடுகிற சூழலைப் பார்க்கும்போது நாமேன் உடலை வளைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் இளைஞர்களுக்கு சொல்வதெல்லாம் நீ வாழ்க்கையில் வெற்றிபெறாவிட்டால்கூட பாதகமில்லை.. உழைப்பை மட்டும் விட்டுவிடாதே! அதாவது உலகத்தில் நாம் சொல்வதை சொல்லிக் கொண்டிருப்போம்! செய்வதை செய்துகொண்டிருப்போம்! இருட்டு விலகட்டும்! விலகாமல் போகட்டும்! வெளிச்சம் ஏற்றுவதை மாத்திரம் நம் விரல்கள் விட்டுவிடக் கூடாது!
என்.சி.ஞானப்பிரகாசம் – பாதை தெரியுது பார் என்கிற படத்திலிருந்து ஒரு பாடல்.. தென்னங்கீற்று …
வலம்புரியார் – தென்னங்கீற்று கூந்தலிலே.. அந்தப் பாடல் ஒரு இயற்கையை வர்ணிக்கிறபோது எவ்வளவு அருமையான காட்சியை மனதுக்குள்ளே உருவாக்குகிறது என்று நான் எண்ணி எண்ணிப் பார்த்து வியந்திருக்கிறேன். அந்த சிட்டுக்குருவி என்று சொல்கிறபோது.. பாரதி பேசிய சிட்டுக்குருவியை நினைப்பேன். சிட்டுக்குருவியினுடைய வாழ்க்கையை நான் பக்கம் பக்கமாக படித்திருக்கிறேன். நாம் நினைப்பது போல் அதன் வாழ்க்கை நேற்று தோன்றி இன்று முடிவதல்ல.. மனிதன் பிறக்காத காலத்தில் மண்ணிலிருந்த பறவைகளில் சிட்டுக்குருவிகள் ஒன்று. அவை மணலிலே விளையாடுவது மணலிலே குளிப்பது இவைகளையெல்லாம் பார்க்கிறபோது இளம்வயதிலே எனக்குள்ளே உண்டான அந்த வியப்பான பிரமிடுகள் இன்னமும் கலைந்து போகவில்லை. எனவே இந்தப் பாடல் என் நினைவுப் புத்தகத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!
என்.சி.ஞானப்பிரகாசம் – தாய் பத்திரிக்கையைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது .. அதைப்பற்றிச் சொல்லுங்களேன்..
வலம்புரியார் – தாய் பத்திரிக்கையின் ஆசிரியராக பன்னிரண்டரை ஆண்டுகள் இருந்தேன். தொடக்கத்திலிருந்து நான்தான் ஆசிரியராக இருந்தேன். ஒரு வேலையைச் செய்கிறபோது அதிலே முழுக்க தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக எனக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் நான் இழக்க வேண்டி வந்தது. ஆனாலும் அந்தப் பத்திரிக்கையைச் சிறப்பாகக் கொண்டுவரவேண்டுமென்று உழைத்து: இறைவனின் பேரருளாலும் நம்முடைய உழைப்பாலே 23000 பிரதிகளிலே தொடங்கி 220000 பிரதிகள் வரை விற்கிற ஒரு மாயத்தை அந்நாளில் அது செய்தது. நிரம்ப இளைஞர்களுக்கு அது வாய்ப்பு தந்தது. சில இளைஞர்கள் வருவார்கள். பார்க்க வேண்டும் என்பார்கள். எழுதிக்கொண்டிருக்கிறார்.. பிறகு வாருங்கள் என்றால் கோபித்துக் கொண்டு செல்வார்கள். அவ்வாறு கோபித்துக் கொள்ளும் இளைஞர்களை நான் உடனே கூப்பிடுவேன். ஏனென்றால் அந்தக் கோபம்தான் தமிழ்நாட்டில் இல்லாத ஒன்று. கோபம் என்றால் சாதாரண கோபமல்ல.. சமுதாயத்தை மாற்றுகிற கண்ணிய சீற்றம்.. அப்படித்தான் ஒருத்தர் ஒரு நாள் வந்தார். வந்தவனுடைய பெயர் அருமையான பெயர்.. ஒரு கவிஞர் அவர். கனகதாசன் என்பது அவர் பெயர். வருகிறபோதே அந்தக் கவிஞர் என்னிடத்தில் சொன்னார்.. காத்திருக்கும் வரை நான் காற்று.. புறப்பட்டுவிட்டால் புயல்.. இது உம்முடைய வரி இல்லையே என்றேன். என் வரி இல்ல சார்.. என்றான். அவ்வளவுதான் தமிழ்ல வசனம் பேசியது. நான் கேட்டேன் ஊர் எது என்று.. அவர் சொன்னார்..
மூக்குள்ள பேருக்கெல்லாம் முந்திரிப்பூ வாசம்வரும்
பாக்கு வண்டி மிகுந்திருக்கும்.. பலாக்கள் தொங்கும்.
பண்ருட்டி எந்தன் ஊரே..
ஊரைத்தானே கேட்டேன்.. உற்பத்தியாயிற்று பாட்டு.. பேரைக் கேட்டிருந்தால் ஒரு பிரளயமே பிறந்திருக்கும் என்றார். என்னான்னு கேட்டா.. அவருக்கு திக்குவாயாம்.. வசனமாக பேசச்சொன்னால் வாய் திக்குகிறது. அவர் தீந்தமிழிலே கவிதையாகச் சொல்லச்சொன்னால் திக்குகிற வாயைக்கூட அது திருத்துகிறது என்று போதித்த அவர் எனக்கு ஒரு ஆசிரியர்.
அவரைப்பற்றி ஆசிரியத்தொகுதியில் எழுதினேன். அவரது பெற்றோர்கள் மகிழ்ந்தார்கள். இன்றைக்கு அவர் வருவாய்த் துறையில் ஒரு அதிகாரியாக பணிபுரிகிறார். அவர் ஒழிந்த நேரங்களில் கவிதை பண்ணி தமிழ் அன்னைக்குச் சூடி வருகிறார்.
என்.சி.ஞானப்பிரகாசம் – பெர்னாட்ஷா என்றொரு நாடக மேதை மற்றவர்களுக்குத் தந்த முன்னுரைகளை வைத்து ஒரு புத்தகம் வந்திருக்கிறது. அதுபோல் நீங்கள் மற்றவர்களுக்குத் தந்த அணிந்துரைகளை வைத்து ஒரு நூல் வந்திருக்கிறது.. அதைப்பற்றிப் பேசலாமே..
வலம்புரியார் – அது வந்து எதிரொலி விஸ்வநாதன் என்கிற ஒரு நண்பர் அந்த நூலைச் செய்திருக்கிறார். அதில் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார். அது சிறந்த புத்தகமாய் நான் கருதுவதில்லை. காரணம் அவர் என்னுடைய சிறந்த நண்பர். ஏனென்றால் அதில் என்னுடைய குறைகள் அலசப்படவில்லை. என்னுடைய நிறைகளை மாத்திரமே சேர்த்து கோர்த்து மற்றவர்கள் எனக்கு மொழிந்தப் பாராட்டுக்களையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக்கியிருக்கிறார். பெரும்பாலும் நான் அதைப் பார்ப்பதுமில்லை. படிப்பதுமில்லை. பல பேர் கேட்பார்கள்.. ஏன் அவைகளை எல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை என்று.. என்னுடைய ஒரே பதில்.. பறவைகளின் பணி பறப்பதுதானே தவிர, சிறகுகளை சேர்ப்பது அல்ல.. பறவை அதன் போக்கிலே போக வேண்டும். சிறகுகளைச் சேர்ப்பது கீழே உள்ளவர்களின் வேலையே தவிர பறவைக்கு அந்த வேலை இல்லை.. அதுபோல் நான் ஒரு பறவை.
என்.சி.ஞானப்பிரகாசம் – இரத்தத்திலகத்திலிருந்து ஒரு பாடல். ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..
வலம்புரியார் – அதுவும் கவியரசர் கண்ணதாசனுடைய அருமையான பாடல். இதில் உமர்கயாமுடைய தத்துவமிருக்கிறது. பல பேர் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதைப் போல உமர்கயாம் ஒரு குடிகாரர் அல்ல.. அவர் மது என்று சொல்வது, ஆன்மீக வெள்ளத்தைச் சொல்கிறார். அரபி மொழி அறிந்தவர்கள், பார்சி மொழி அறிந்தவர்கள் எவராவது இப்படிப் பேசினால் அவர்களை அடித்தே விடுவார்கள்.. ஏனென்றால் அப்படிப்பட்ட மகத்தான மனிதரை தவறான கண்ணோட்டத்திலே பார்த்து நாட்டிலே பழக்கி விட்டார்கள். அதிலும் ஒரு கவிஞனின் ஆளுமை தெரிகிறது..
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
அப்படிச் சொல்கிற போது ஓரு கவிஞன் தலைநிமிர்ந்து நிற்கிறான். மனிதன் வேறு கவிஞன் வேறு.. கவிஞர்கள் மனிதர்களாக இல்லாவிட்டால் அவர்கள் கவிஞர்களே அல்ல.. ஆனால் இங்கே.. ஒரு மனிதனாக இருந்து கவிஞராக இருக்கிற.. கவிதையாக இருக்கிற .. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்திட்ட மாபெரும் மனிதனுடைய சுயப் பிரகடனம். ஆகவே நமக்குத் தொழில் கவிதை.. நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி பேசியவண்ணமே.. தன்னைத்தானே அறிமுகப்படுத்துகிற அந்தத் துணிச்சல்மிக்க வரிகள் எனக்கு எப்போதும் பிடிக்கும்.
என்.சி.ஞானப்பிரகாசம் – பாரதி காண விரும்பிய புதுமைப் பெண்கள் நாங்கள் பார்த்திருக்கிறோம். பாரதி கண்ட புரட்சிப் பெண்கள் யார்? யார்?
வலம்புரியார் – புரட்சிப் பெண்கள் என்றால் முற்போக்கானவர்கள் என்பது மாத்திரமல்ல.. சமுதாய அக்கறை படைத்தவர்கள். அப்படிப் பார்க்கிறபோது.. இந்திய மண்ணில்.. அன்னை தெரசா வந்து ஒரு புதுமைப்பெண். புதுமைப் பெண் என்றால் வயதைப் பார்ப்பார்கள். பெண்தானே.. வயதைப் பற்றியதல்ல.. கல்கத்தாவில் காலிகன் என்கிற இடத்தில் ஏழை பாழைகளுக்காக ஒரு ஆசிரமம் கட்டி வந்தார். அதற்காக கையேந்தி வந்தார். ஒரு பணக்காரர் பார்த்துக் கொண்டேயிருந்து காறி உமிழ்ந்தார். அந்த எச்சிலைத் தன் கரங்களிலே வாங்கிக் கொண்டு.. இந்த எச்சில் எனக்குப் போதும். என் ஏழைகளுக்கு என்ன தரப் போகிறீர்கள் என்று கேட்டார். ஆக.. அவளைவிட புரட்சிப் பெண்ணை இந்த மண்ணில் நான் சந்தித்ததில்லை. புரட்சிப் பெண்கள் என்று சொல்கிறபோது பாரதி கண்ட புதுமைப் பெண் என்றெல்லாம் பேசுவார்கள். எனக்குப் பார்க்கிறபோது அந்த அம்மா ஒருத்திதான். அதுபோல சீனநாட்டிலே ஹேன்சுயின் என்றொரு எழுத்தாளர். அந்த எழுத்தாளர் புரட்சிப் பெண்.. ஏனென்றால் நான் அவர்களை அறிவேன். அவர்கள்தான மாசேதுங்கின் வரலாற்றை எழுதியவர்கள்.. Morning Dilige காலை வெள்ளம் என்று பெயர். வாழ்க்கை முழுவதுமே ஒரு நோபில் பரிசு பெறுகின்ற அளவிற்கு அவர்கள் தன்னை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி உலக அளவில் எனக்கு சிலரை நன்றாக எனக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. மற்றவர்கள் அப்படி இப்படி இருக்கிறார்கள். ஆக ஒரு புரட்சிப் பெண் என்று சொன்னால் அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணத்துக்கு உட்பட்டவர்களாக இந்த இரண்டு பேரையும் நான் எப்போதும் கருதுவேன்.
என்.சி.ஞானப்பிரகாசம் – அடுத்து நாடோடி மன்னன் படத்தில் ஒரு பாடல்.. காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்..
வலம்புரியார் – இது வந்து பட்டுக்கோட்டை ஒரு பாட்டுக் கோட்டை.. இந்தப் பட்டுக்கோட்டை ஒரு பலாப்பழச் சொற்களுக்குள்ளே பருவைரக் கருத்துக்களை வைத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் பொதுவுடைமை அறிக்கையில் காரல் மார்க்ஸ் அவர்களும் ஃபெடரிக் கேங்கில்ஸ் அவர்களும் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்.. நீங்கள் இழுக்க வேண்டியது சங்கிலிகளைத் தவிர வேறொன்றுமில்லை என்று சொன்னார்கள். இந்த அரிய கருத்தை திரைப்பாடலிலே கொண்டு வர இயலுமா என்றால் .. கொண்டு வர இயலும் என்று காட்டி.. காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் .. என்று பாடி வைத்தார் பட்டுக்கோட்டையார். அவருடைய பாடல்கள் அதிகமில்லை என்றாலும் கூட ஒரு ஆயிரம் பாடல்கள் எழுதித்தான் நிற்கவேண்டும் என்பதல்ல என்பதற்கு பட்டுக்கோட்டை ஒரு சிறந்த உதாரணம். ஆக ஒரு இலட்சியத்தை ஒரு கவிஞன் சாதாரண மக்களுக்கு ஊட்டுவதிலே எவ்வளவு நாட்டம் காட்டுகிறான் எனபதற்கு அடையாளமாய் இருப்பதால் இது எனக்குப் பிடிக்கும்.
சும்மாக் கிடந்த நிலத்தைக் கொத்தி..
சோம்பலில்லாம ஏர்நடத்தி..
கம்மாக் கரையை உசத்திக் கட்டி
நெல்லு விளைஞ்சிருக்கு ..
என்.சி.ஞானப்பிரகாசம் – அக்கறைச் சீமையிலே நடந்த ஒரு சம்பவத்திற்கு அக்கறையாக இங்கிருந்து ஒரு கடிதம் எழுதினீர்கள்.. நினைவிருக்கிறதா?
வலம்புரியார் – நினைவிருக்கிறது. BERTROM Russels உடைய இல்லத்தை இடிக்கப் போகிறார்கள் என்று ஆங்கில நாளேட்டிலே செய்தி வந்தது. வந்து House of Commonsல ஒரு தீர்மானம் வந்தது. பத்திரிக்கையிலே அது வந்தபோது.. இங்கே இருந்து ஒரு கடிதம் எழுதி நான் அந்த நாட்டின் அரசியாருக்கு அனுப்பி வைத்தேன். BERTROM Russels உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல.. பரந்த இந்த உலகமெல்லாமே அவருக்குச் சொந்தம் என்று கடிதம் எழுதினேன். தூதுவர் வந்து ஆனால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாக என்று சொன்னார். நான் எழுதியதற்காக அல்ல.. உலகம் முழுவதுமிருந்து அப்படி எழுதியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால் சின்ன வயதில் BERTROM Russels Best என்கிற புத்தகம் எனக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகத்தைப் படித்தபோதுதான் முதன் முதலாக உலகத்தில் இப்படிப்பட்ட எண்ணங்களும் இருக்கின்றன என்கிற அந்த சிந்தனையே வந்தது. அவரை எனக்கு வெகுவாகப் பிடிக்கும்.
என்.சி.ஞானப்பிரகாசம் – அரசு கொடுத்தது கலைமாமணி பட்டம். வார்த்தைச் சித்தர்.. ஞான பாரதி எப்போது கிடைத்தது?
வலம்புரியார் – வார்த்தைச் சித்தர் என்கிற பட்டத்தை வழங்கியவர் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள். ஞான பாரதி என்கிற பட்டத்தை வழங்கியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.
காலங்காலமாக வார்த்தைச் சித்தர் என்றால் வார்த்தைச் சித்தர். வானாவுக்கு வானா.. வருகிறதல்லவா.. வேறொன்றும் நாம் அருள் பெற்றுக்கொண்டு வரவில்லை. அன்பொழுக மக்கள் அப்படி அழைக்கிறார்கள். இராதகிருஷ்ணன் அறிஞர்.. அவரை தத்துவஞானி என்று சொல்கிறார்கள். தத்துவ ஞானி என்கிறீர்களே.. என்ன தத்துவம் சொன்னார் என்று எவரையேனும் கேட்டுப்பாருங்கள்.. ஏதாவது ஒன்றைச் சொன்னால் நான் அவர்களுக்குத் தலை வணங்குவேன். மற்றவர்களுடைய தத்துவங்களை எடுத்துச் சொன்னாலே நம் நாட்டில் அவர்களை தத்துவஞானி என்று சொல்கிறார்கள். அந்த வார்த்தைகளில் கொஞ்சம் வசிய மையைப் பூசினால் வார்த்தைச் சித்தர் என்று சொல்வார்கள்.
ஞான பாரதி என்கிற பெயர் எனக்குப் பிடித்ததற்கு காரணம் என்னவென்றால் அது பாரதியோடு ஒட்டிவருகிறது. பாரதியினுடைய ஒரு நிழலாக அவருடைய கால் தடத்தில் ஒருபிடி மண்ணாக இருப்பதுகூட எனக்குப் பெருமை என்று நினைக்கிறவன். ஆகவேதான் அந்தப் பட்டங்களை மற்றவர்கள் போடும்போது நான் தடுப்பதில்லை..
என்.சி.ஞானப்பிரகாசம் – வானொலி நிலையத்திற்கு வந்து சிறப்பான நல்ல பல தகவல்களைச் சொன்னீர்கள்.
வலம்புரியார் – நன்றி வணக்கம்!!
என்றும் அன்புடன்,
காவிரிமைந்தன்
(மு.இரவிச்சந்திரன்)
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
சென்னை 600 075
தற்போது – அபுதாபி..
00971 50 2519693 -
அன்பு மணிமொழிக்கு!…
ஞா.கலையரசி
அன்பு மணிமொழிக்கு ஆதிரையின் மடல்!
அன்பு நண்பி மணிமொழிக்கு ஆதிரை எழுதியது. இங்கு எல்லோரும் நலமே. அங்கு உன் நலத்தையும் உன் குடும்பத்தார் நலத்தையும் அறிய அவா.
கவினுக்கு இன்றோடு ஐந்து வயது பூர்த்தியாகிறது. பெரியவளுக்கும் சின்னவளுக்கும் ஏற்படும் சண்டை இன்னும் நின்றபாடில்லை. இருவரின் சண்டையைத் தீர்ப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது.
இருவருக்கும் தாய்மொழி வழிக் கல்வி தான் கொடுக்க வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தேன். ஆனால் நம் மக்களிடையே ஆங்கில மோகம் அளவுக்கதிகமாக இருப்பதால், நல்ல பள்ளிகள் என்ற பெயர் வாங்கிய அனைத்திலும், ஆங்கில வழிக்கல்வியே போதிக்கப்படுகிறது.
அந்தப்பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு மக்கள் தவமாய்த் தவமிருக்கிறார்கள். காலையில் பத்துமணிக்குத் திறக்கப்படும் பள்ளியில் குழந்தையைச் சேர்க்க விண்ணப்பம் வாங்க, இரவு முழுதும் சாலையில் கியூ வரிசையில் நிற்கிறார்கள்!
ஊரோடு ஒத்துவாழவேண்டும் என்ற பொன்மொழியைக் காரணம் காட்டி குழந்தைகளை ஒரு பெயர் பெற்ற கான்வெண்டில் சேர்த்து விட்டார் என் கணவர். என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. இரண்டாவது மொழியாக பிரெஞ்சோ, ஹிந்தியோ எடுக்கக்கூடாது, தமிழ் தான் எடுக்க வேண்டும் என்பதில் மட்டும் நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன்.
பிள்ளைகளுக்குத் தான் ஏற்கெனவே தமிழ் தெரியுமே? தமிழுக்குப் பதிலா ஹிந்தி, சம்ஸ்கிருதம் எதையாவது கத்துக்கலாமே, மதிப்பெண்ணும் கூடுதலாகக் கிடைக்கும் என்கிறாள் என் பக்கத்து வீட்டு மாமி. மதிப்பெண் ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்துக் குழந்தைகளின் சிந்தனைத் திறனைத் தீர்மானிக்கும் நம் மக்களின் அறியாமை எப்போது மாறும் மணி?
குழந்தைக்குத் தமிழ் பேசத்தெரிந்தால் போதாதா? தமிழை எழுதப் படிக்கத் தெரிந்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? என்பது இவரது கேள்வி.
பொருள் புரியாமல் கவின் பாடும் ஆங்கில நர்சரி பாடல்களைக் கேட்டுப் புளகாங்கிதமடைகின்றனர் என் வீட்டார். வானம் பார்த்த பூமியில் வாழும் நம் குழந்தைகள், மழையே மழையே வா வா என்று வரவேற்றுப் பாடாமல், “ரெயின் ரெயின் கோ அவே” என்று உற்சாகமாகப் பாடும்போது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை மணி!
சின்னவள் தூக்கத்தில் ரொம்பக் கெட்டி. காலையில் அவளை எழுப்பிக் கிளப்புவது பெரும் பாடாக இருக்கிறது. குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் கொஞ்ச நேரம் போய் விளையாடி விட்டு வாருங்கள் என்று சொல்கிறேன். சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்?நம் சின்னவயதில் தெருவில் இருட்டுகிற மட்டும் விளையாடிய அனுபவங்கள் எவ்வளவு பசுமையாக நினைவிலிருக்கின்றன?
‘மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா,’ என்றானே பாரதி! ஆனால் வெளியே சென்ற கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் இருவரும் ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பி விடுகின்றனர். தெருவில் விளையாடுவதற்கு யாருமே இல்லையாம். பள்ளி விட்டு வந்தவுடன் குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பி விடுகின்றனர். அல்லது வீட்டுப் பாடம் செய்து பிள்ளைகள் களைப்படைந்து, அப்படியே தூங்கி விடுகின்றனர்.
விரல்கள் ஒடிந்து போகும் அளவுக்கா குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பார்கள் மணி? ஒரு நாள் கவினுக்குக் கொடுத்த வீட்டுப் பாடத்தைக் கண்டு மலைத்துப் போய், குழந்தை எழுதுவது போல இடது கையால் நானே கிறுக்கி எழுதியனுப்பினேன். ஆனால் அவளது வகுப்பு ஆசிரியை அதைக் கண்டுபிடித்து, “நாளையிலிருந்து உன் அம்மாவைப் பள்ளிக்கு வரச்சொல் என்றாளாம்!” எப்படிக் கண்டுபிடித்தாள்? என எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம்!
கவின் எழுதியதையும், நான் எழுதியதையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அவள் ஓர் எழுத்தைச் சின்னதாகவும், இன்னொன்றை மண்டை மண்டையாகவும் எழுதியிருக்கிறாள். ஆனால் நான் என்னதான் கிறுக்கி எழுதியிருந்தாலும், எல்லா எழுத்துக்களும் ஒரே அளவாக யூனிபார்மாக இருந்ததை வைத்து அவள் கண்டுபிடித்திருக்க வேண்டும். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்களே, அது போல திருட்டுத் தனம் செய்தாலும் மாட்டிக்கொள்ளாமல் செய்ய சாமர்த்தியம் வேண்டும் மணி!
பெரியவள் கயல் ஒருநாள் பள்ளி டயரியை மறந்து போய் விட்டாள் மணி!
அதற்காக ஒரு நாள் முழுதும் அவளை வகுப்பிற்கு வெளியே முட்டி போட்டுக்கொண்டே, ‘இனிமேல் டயரியை மறக்காமல் எடுத்துவருவேன்,’ என்று இருநூறு முறை இம்பொசிஷன் எழுதச் சொல்லியிருக்கிறாள் அவள் வகுப்பு ஆசிரியை. மாலை வந்து கயல் அழுது கொண்டே முட்டியைக் காட்டவும், என் கோபம் எல்லையைக் கடந்து விட்டது மணி! இத்தனைக்கும் இவள் தான் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவி!
குழந்தையுடன் போய் அந்த ஆசிரியையைப் பார்த்து என் ஆத்திரம் தீருமட்டும் திட்டிவிட்டு வந்து விட்டேன் மணி! நீயெல்லாம் கல்யாணமாகி ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால் உனக்குக் குழந்தையின் அருமை தெரிந்திருக்கும் என்று திட்டியபோது அவள் முகமே சுருங்கிவிட்டது. என் வீட்டாரோ ஏன் இப்படித் திட்டினாய், கண்டிப்பாக குழந்தைக்கு டி.சி. கொடுத்து விடுவார்கள் என்று என்னைப் பயமுறுத்தினர்.
குழந்தைக்கு அநீதி இழைக்கப்பட்டால் கூடப் பெற்றோர் இது போல் பயந்து கொண்டு கேள்வி கேட்காததால், இவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. டி.சி. கொடுத்தால் கொடுக்கட்டும்; இப்படிப்பட்ட பள்ளி என் குழந்தைக்குத் தேவையில்லை என்று கூறினேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
பள்ளிகள் குழந்தைகளைக் குழந்தைகளாக நடத்தாமல் சிறைக்கைதிகள் போல் நடத்தும் கொடுமை இனியாவது மாற வேண்டும்! சிறுகதை மன்னர் புதுமைப்பித்தனின் ‘மோட்சம்,’ கதையைப் படித்திருக்கிறாயா மணி?
அக்காலத்தில் ஆசிரியர் மாணவரை நடத்தும் போக்கு, கொஞ்சங்கூட மாறாமல் இன்னும் அப்படியே தான் இருக்கின்றது!
தெருவில் கிடந்த ஒரு நாய்க்குட்டிக்கு ஒரு நாள் பரிதாபப்பட்டுப் பால் ஊற்றப்போய், இப்போது அது எனது மூன்றாவது குழந்தையாகி விட்டது! குழந்தைகள் அதற்கு ஜிம்மி என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதன் பெயரை யாரோ கேட்ட போது ‘பி.ஜிம்மி,’ என்று இன்ஷியலோடு கவின் சொன்னதைக் கேட்டு, நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். அவளுடையது போலவே ஜிம்மிக்கும் ‘பி’ இன்ஷியலாம்!
நீ மாற்றலாகிச் சென்ற பின்னரும், நம் நட்பு தொடர இந்தக் கடிதம் மட்டுமே உதவுகிறது. இது மட்டும் இல்லையென்றால் நம் தொடர்பு எப்போதோ அறுபட்டுப் போயிருக்கும். என் எண்ணங்களை, அனுபவங்களை, உன்னிடம் பகிர்ந்து கொள்வதில் உள்ள இன்பமே அலாதி தான் மணி!
மற்றவை உன் கடிதம் கண்டு பதில்,
இப்படிக்கு உன் அன்பு நண்பி,
ஆதிரை
-
அன்புள்ள மணிமொழிக்கு!…
மு.கோபி சரபோஜி
அன்புள்ள மணிமொழிக்கு அப்பா எழுதுவது.
இங்கு நான், அம்மா, தம்பி மற்றும் வீட்டில் உள்ள அவைவரும் நலம். அங்கு உன் நலத்துடன் உன் தோழிகள், ஆசிரியர்களின் நலன்களையும் அறிய ஆவல். நிற்க:
கடந்தவாரம் நீ விடுப்பில் வந்த போது உன்னுடன் இருக்க முடியாமல் போய்விட்டது செல்லம். கம்பெனி விசயமாக அவசரமாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது. நீ ரொம்ப கோபமும், வருத்தமும் பட்டதாய் அம்மா சொன்னாள். அப்பா வேலை தான் உனக்கு தெரியுமே? அடுத்த மாதத்திலிருந்து நீ எங்களோடு தானே இருக்கப்போகிறாய். இரண்டு நாட்களுக்கு முன் உன் தோழி கோபிகாவின் அப்பா வந்திருந்தார். கோபிகாவின் திருமண பத்திரிக்கையை கொண்டு வந்திருந்தார். அதை பார்த்ததும் உனக்கும் வயது இருபத்தி நான்காகிறது என்று சொல்லி அம்மாவும் உன் கல்யாண பேச்சை ஆரம்பித்து விட்டாள். என்னோடு கம்பெனியில் வேலை பார்க்கும் பிரகாஷ் மாமா ஒரு வரன் சொல்லி உள்ளார். நமக்கும் தெரிந்தவர்கள் தானாம். கீழக்கரையில் தான் அவர்கள் குடும்பம் இருக்கிறதாம். பையன் புரபொசராக இருக்கிறாராம். பையனின் அப்பா வணிகவரி துறை அலுவலராக இருக்கிறார். அம்மா ஹவுஸ் ஒய்ப். உடன் பிறந்த அண்ணன்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒரே ஒரு தங்கச்சி. பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருக்கிறதாம். எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்களாம். உன்னை பிரவின் கல்யாணத்தில் வைத்து அவர்கள் பார்த்திருக்கிறார்களாம். படித்துக் கொண்டிருப்பதாய் சொன்னதால் படிப்பு முடியவும் கேட்கலாம் என நினைத்திருந்தார்களாம். இந்த வருடம் உனக்கு படிப்பு முடிந்து விடும் என்பதால் பிரகாஷ் மாமா மூலம் கேட்கச் சொல்லி இருக்கிறார்கள். உனக்கு ஏற்ற பையனாக இருப்பான் என பிரகாஷ் மாமாவும் சொல்கிறார். நம் வீட்டில் யாரும் இன்னும் பையனை பார்க்கவில்லை. பையனின் அப்பா மட்டும் ஒருநாள் கம்பெனியில் வந்து என்னை பார்த்தார். உன்னிடமும், வீட்டிலும் கேட்டு சொல்வதாய் சொல்லி உள்ளேன். உன் சின்ன சித்தி சரண்யா நேற்று வீட்டிற்கு வந்திருந்தார்கள். வரன் வந்திருக்கும் விசயத்தை சொன்னதும் நீயும் கூட்டுக்குடும்பமா நிறைய பேர் இருக்கிற வீட்டிற்கு தான் மருமகளா போவேன்னு அவர்களிடம் முன்பு சொன்னதாய் சொன்னார்கள். உன் விருப்பம் என்ன? நானும் இதுவரை உன்னிடம் கல்யாணம் பற்றி பேசவில்லை. அவசரமில்லாமல் படிப்பு முடிந்ததும் உன் விருப்பத்திற்கேற்ப செய்யலாம் என நினைத்திருந்தேன். ஆனால் வரன் இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டது. நீ அடுத்த வாரம் வந்த பின் உன்னிடம் பேசிய பின்பே முடிவு செய்யலாம் என நானும், அம்மாவும் நினைத்துள்ளோம்.
இந்த முறையும் நீயும், உன் தம்பியும் பேசிக்கொள்ளவில்லை என்று அம்மா வருத்தப்பட்டாள். அவன் தான் அப்படி செய்கிறான் என்றால் நீயும் அப்படி அவனோடு மல்லுக்கு நிற்கலாமா? நீங்கள் இருவரும் என்ன சிறு பிள்ளைகளா? அவ பிடிவாதம் தான் எனக்கு பயமாக இருக்கு. எல்லாத்துக்கும் நீங்க கொடுக்குற இடம் தான் காரணம் என அம்மா சொல்லிக் கொண்டே இருக்கிறாள். நேற்று சர்மிளா சித்தி வீட்டிற்கு வந்திருந்த போது இதை அம்மா சொன்னதும் தம்பியை திட்டினார்களாம். அதனால் உடைத்த உன் கேமாராவுக்கு பதில் புதிதாக வாங்கி தருவதற்காக தம்பி தாத்தாவிடம் பணம் வாங்கி வைத்திருக்கிறானாம். என்னிடம் அவன் சொல்லவில்லை. உன் அப்பத்தா தான் சொன்னார்கள்.
தவிர,சென்னையிலிருந்து வரும் போது உனக்காக எஸ்.இராமகிருஷ்ணன் தொகுத்த சிறந்த நூறு சிறுகதைகளின் தொகுப்பை வாங்கி வந்தேன். எனக்கும், உனக்குமாக கொஞ்சம் கவிதை, கதை புத்தகங்கள் வாங்கி வந்தேன். படிக்காம அப்பாவும், மகளுமா புத்தகத்தை வாங்கி, வாங்கி அடுக்கி வையுங்க. புக் ஃபேர்ல நான்காயிரம் ரூபாய்க்கு வாங்கிட்டு வந்த புத்தகமெல்லாம் இன்னும் தூங்குது. அதுக்குள்ள ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் எதுக்குன்னு அம்மா சண்டை போட்டாள். அப்பா புக்கு பைத்தியம். அம்மா புடவை பைத்தியம். அப்படின்னு சொல்லி தம்பி தான் சமாதானம் செய்து வைத்தான்.
தம்பிக்கு இண்டர்வியூ ரிசல்ட் வந்து விட்டது. வேலைக்கு தேர்வாகி விட்டான். நாளை மறுநாள் பெங்களூருக்கு போகிறான். அங்கு அவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை பிரபு சித்தப்பா செய்து கொடுப்பதாய் சொல்லி உள்ளார்கள். அடுத்தவாரம் வேலையில் சேர வேண்டுமாம். பெங்களூர் போகும் வழியில் உன்னை பார்த்து விட்டு போவதாகவும், சஸ்பென்ஸாக இருக்கட்டும் அதனால என்னிடம் கூட சொல்ல வேண்டாம் என அம்மாவிடம் சொல்லி இருக்கிறான். அநேகமாக உனக்கு புது கேமரா வாங்கி வருவான் என நினைக்கிறேன். வந்தால் அவனை வாழ்த்தி அனுப்பி வை. நீயும் ஏதாவது கிஃப்ட் வாங்கி அவனுக்கு கொடுத்து விடு.
வைரஸ் காய்ச்சலில் இருந்த உன் தோழி காவியா எப்படி இருக்கிறாள்? கேட்டேன் என்று சொல். முடிந்தால் நீ வரும் போது அவளையும் வீட்டிற்கு அழைத்து வா. உன் அம்மாவும் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். கடந்தவாரம் நீ சொன்ன கவிதையை “விதையின் குணம்” என்ற தலைப்பில் எழுதி “வல்லமை” இணைய இதழுக்கு அனுப்பி வைத்துளேன். இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் போது கவிதை பிரசுரமாகி இருக்கும் என நினைக்கிறேன்.
உடம்பை கவனமாக பார்த்துக் கொள். உன் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உள்ளேன். வரும் போது கல்லூரி, விடுதி கட்டணங்களை கட்டி ரசீது வாங்கி கொள். விடுதியை காலி செய்து விட்டு வரும் போது எல்லாவற்றையும் எடுதுக் கொண்டாயா? என சரி பார்த்து விட்டு கிளம்பு. உன் ஆசிரியர்களிடம், நண்பர்களிடமும் சொல்லி விட்டு வா. அங்கிருந்து கிளம்பும் போது போன் செய். இம்முறை தம்பி பெங்களூர் போய்விடுவான். அதனால் நானோ, அம்மாவோ தான் உன்னை பிக் அப் பண்ண வருவோம். உன் தோழிகளிடம் சொல்லி ஒவ்வொரு முறையும் அழைத்து பேசுவது சங்கடமாய் இருப்பதால் மூன்று நாட்களாக பேசவில்லை என அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். உன் செல் போன் சரியாக வேலை செய்யா விட்டால் குறைந்த விலையில் ஒரு செல் போன் வாங்கி கொள். உனக்கு பிறந்த நாள் பரிசாக தர கார்த்தி சித்தப்பா ஸ்மார்ட்போன் வாங்கி வைத்திருக்கிறாராம். அடுத்த மாதம் மலேசியாவிலிருந்து வரும் தன் நண்பர் மூலம் கொடுத்தனுப்புவதாய் சொல்லி இருக்கிறார்கள்.
தேர்வை கவனமாக எழுதவும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உன் வரவுக்காக காத்திருக்கிறோம்.
அன்புள்ள அப்பா
மு.கோபி சரபோஜி
-
மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே!
ரஞ்சனி நாராயணன்
மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே!
உன் நெடுநாளைய ஆசையை இன்று நிறைவேற்றியிருக்கிறேன். நீ சொல்வாயே, இந்த ஈமெயில் கொசு மெயில் எல்லாம் எனக்கு வேண்டாம். கொஞ்ச நேரம் எனக்காக செலவழித்து காகிதமும் பேனாவும் எடுத்து சற்று மெனக்கெட்டு நாலுவரி எழுது. எனக்குத் தோன்றும் போதெல்லாம் படித்துப் பார்ப்பேன் என்பாயே, அந்த உன் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்.
இப்போதெல்லாம் பழைய நினைவுகளே அதிகம் வருகின்றன, அம்மா. உன் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்குப் போவேனே, அந்த நினைவுகள். இன்னும் இன்னும் அந்த காலத்திய நினைவுகள் பசுமையாக மனதில் வாசம் வீசிக் கொண்டிருக்கின்றன, அம்மா.
‘எனக்கு ஏன் மணிவண்ணன் என்று பெயர் வைத்தாய், என் பள்ளித்தோழன் என்னை வணி மண்ணன் என்று கேலி செய்கிறான்’ என்று ஒருமுறை உன்னிடம் வந்து அழுதேன், நினைவிருக்கிறதா, அம்மா? நீ என்ன சொன்னாய் தெரியுமா? ‘அட! உன் தோழனுக்கு தெரியுமா? இரண்டு வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மாற்றிப் போட்டுப் பேசுவது தான் உன் பெயரை அவன் என்ன அழகாக மாற்றி இருக்கிறான் பார்’ என்று இன்னும் பல ஸ்பூனரிச வார்த்தைகளைச் சொன்னாய். ‘என்.எஸ். கிருஷ்ணன் இந்த உத்தியை ‘சந்திரலேகா’ படத்தில் பயன்படுத்துவார். ‘தரையிலே உக்காரு’ என்பதை உரையிலே தக்காரு என்பார்’ என்றாய்.
நான் கொஞ்சம் சமாதானம் ஆனவுடன், ‘இத பாரு மணி, நம் குடும்பமே ‘மணி’ குடும்பம். மணிமணியான குடும்பம்! உன் அப்பா பெயர் மணிமாறன், என் பெயர் மணிமொழி, உன் பெயர் மணிவண்ணன். உன் அக்கா மணிமேகலை. வேறு யாருக்காவது இப்படி கிடைக்குமா? இன்னொரு விஷயம் ஒப்பிலியப்பனை ஆழ்வார் ‘பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன்’ என்கிறார். திருமங்கையாழ்வாரும் ‘முத்தினை, மணியை, மணி மாணிக்க வித்தினை’ திருவிண்ணகர் போய் சேவித்துவிட்டு வாருங்கள்’ என்கிறார். உனக்குத் தெரிந்த திருப்பாவையில் மாலே! மணிவண்ணா! என்று கண்ணனை அழைக்கிறாள் ஆண்டாள். உன் பெயர் அத்தனை அழகான பெயர்’ என்று சொல்லிவிட்டு, ‘உன் மனைவியின் பெயரும் இதேபோல மணி என்று வரவேண்டும்’ என்றாய். நான் சின்னவன் அப்போது. ‘போம்மா’ என்று சிணுங்கிக்கொண்டு எழுந்து போய்விட்டேன். ஆனால் நீ இதைப் பற்றி எத்தனை தீவிரமாக இருந்திருக்கிறாய் என்று பிறகு தெரிந்தது. எனது மனைவி பெயர் ரமா என்றிருந்ததை நீ ரமாமணி என்று மாற்றினாய், எங்கள் திருமணத்திற்குப் பிறகு.
எப்படியம்மா நீ ஸ்பூனரிசம் பற்றியும் பேசுகிறாய், திவ்யபிரபந்தம் பற்றியும் பேசுகிறாய் என்று வியந்து நின்றேன் மனதிற்குள். இப்போதும் அந்த வியப்பு மாறவில்லை அம்மா!
எனக்கு உன்னையும் அப்பாவையும் நன்றாக நினைவிருக்கிறது. நீ கொஞ்சம் கருப்புதான் ஆனாலும் ரொம்பவும் அழகு. அப்பா நல்ல நிறம். சட்டென்று பார்த்தால் நீதான் உயரம் போலத் தோன்றும். உன் ஆளுமை அப்படி. உன் பெயர் போலவே நீ சொல்லும் மொழிகளும் மணிதான். பேசும்போதே உன் குரலின் மென்மை மற்றவர்களை வசீகரிக்கும். வார்த்தைகளையும் அப்படித்தான் தேர்ந்தெடுத்துப் பேசுவாய். கோவம் என்பதே வராது உனக்கு. மென்மையான குரலில் நீ பாடும் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறதம்மா. கடிதம் எழுதுவதும் நான் உன்னிடமிருந்து கற்றதுதான். குட்டிகுட்டியாக உன் எழுத்துக்கள் ஒரு சீராக மணிமணியாக இருக்கும். உன் அப்பா நீ இப்படித்தான் இருப்பாய் என்று அகக்கண்களால் உணர்ந்து இப்படி ஒரு பெயர் வைத்தாரோ? உன் கடிதங்களைப் படிக்கும்போது உன் வார்த்தைகள் அருவமாக நின்று மனதை வருடிக் கொடுக்கும்.
உன்னையும் அப்பாவையும் பலமுறை இங்கு வந்து என்னுடன் இருக்கும்படி சொன்னேன். ஏனோ இருவருக்கும் இங்கு வர விருப்பம் இல்லை. அக்காவிற்கும், எனக்கும் திருமணம் ஆகி இருவரும் வேறு வேறு ஊர்களில் இருந்தோம். நீங்கள் இருவரும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு திவ்ய தேசம் போய் அங்கு தங்கி எல்லா உற்சவங்களும் சேவித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லி கிளம்பிவிட்டீர்கள். எனக்கு மிகவும் வருத்தம். ஒருமுறை நீங்கள் இருவரும் திருக்கண்ணபுரத்தில் இருந்தபோது நான் மனைவி குழந்தைகளுடன் அங்கு வந்திருந்தேன். இரவு முநியதரையன் பொங்கல் வாங்கி வரச்சொல்லி எங்களுக்குக் கொடுத்தாய். இரவு நாமிருவரும் மெல்லியதாக அலையடித்துக் கொண்டிருந்த மிகப்பெரிய குளக்கரையில் உட்கார்ந்திருந்தபோது சொன்னாய்: ‘ஸ்ரீரங்கத்தில் பிறக்க வேண்டும்; திருக்கண்ணபுரத்தில் பரமபதிக்கவேண்டும். எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா? ஸ்ரீரங்கத்தில் பிறந்துவிட்டேன்.
‘சரணமாகும் தனதாளடைந்தார்கெல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்’எனக்கு இந்த பாக்கியத்தைக் கொடுப்பாரா?’ என்றாய். என்னுடன் வர மறுத்துவிட்டாய்.
நீ இங்கு வரவேண்டும் அம்மா. வந்து என் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்லவேண்டும். சௌரிபெருமாள் பக்தனுக்காக கூந்தல் வளர்த்தது, தவிட்டுப் பானை தாடாளன், ஸ்ரீரங்கம் பெருமாளின் ஈரவாடை வண்ணான் சேவை – ஆ! மறந்துவிட்டேனே, திருவரங்கனின் உலா பற்றி நிச்சயம் சொல்லவேண்டும். இதைப்போல சரித்திர நிகழ்வுகளை நம் அடுத்த தலைமுறைக்கு நாம்தானே சொல்லவேண்டும் என்று நீதானே அடிக்கடி சொல்லுவாய்?
குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி இருப்பது எத்தனை பெரிய பாக்கியம்? இன்னும் ஒரு விஷயம், அம்மா. சீர்காழியில் இருக்கும் நம் பூர்விக வீட்டை விற்றுவிட வேண்டாம். நாங்கள் சின்ன வயதில் கோடைவிடுமுறை என்றால் ஸ்ரீரங்கத்தில் இருந்த பாட்டி வீட்டிற்குத் தான் போவோம். மறக்கமுடியாத நாட்கள்! கொளுத்தும் வெயில் எங்களை ஒன்றுமே செய்யாது. காலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு (அப்போதெல்லாம் காப்பி தான் எங்களின் ஆரோக்கியபானம்) கொள்ளிடத்திற்குப் போவோம். நாங்களாகவே நீச்சல் கற்றுக் கொண்டோம். வேடிக்கை என்ன தெரியுமா, அம்மா? என் பிள்ளைகளுக்கு பயிற்சியாளர் வந்து நீச்சல் சொல்லிக் கொடுப்பார். சிறுவயதில் ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கேற்ப ஆடிபெருக்கன்று ரயில் பாலத்தின் மேலிருந்து கொள்ளிடத்தில் குதித்து நீந்திக் கரை சேர்ந்ததை அவர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்படுவேன். என் குழந்தைகளுக்கும் பாட்டி வீடு என்கிற சொர்க்கத்தைக் காட்ட விரும்புகிறேன்.
என் ஞாபகசக்தி உனக்கு வியப்பாக இருக்கிறது, இல்லையா? ஆனால் ‘வர வர இப்போது நடப்பதெல்லாம் உங்களுக்கு நினைவே இருப்பதில்லை’ என்று ரமாமணி சொல்கிறாள் அடிக்கடி. டாக்டர் வருகிறார். ஏதேதோ மருந்துகள் கொடுக்கிறார். இதோ இப்போதும் என் காலடியில் ஒரு சின்னப் பையன் உட்கார்ந்திருக்கிறான். என்னை தாத்தா, தாத்தா என்கிறான். யார் என்றே தெரியவில்லை.
உன்னுடன் செலவழித்த நாட்கள் மட்டுமே நினைவில் இருக்கின்றன. உனக்கு தினமும் பல பல கடிதங்கள் எழுதுகிறேன்.
மணிமொழியாகிற என் அம்மா…..என் அம்மா…..
-
அன்புள்ள தோழி மணிமொழி!…
சித்திரை சிங்கர்
அன்புள்ள தோழி மணிமொழி
வாழ்த்துக்கள்
உனது திருமண வாழக்கை எப்படி உள்ளது. உனது திருமணத்தை இயந்திர நகரமான சென்னையில் வைக்காமல் உங்க ஊரில் வைத்தது மிகவும் நல்லதே. உனது திருமணத்துக்கு வந்த இரண்டு நாட்களும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இருந்தபோதும், அந்த இரண்டு நாட்களில் உங்க ஊரில் பரபரப்பு இல்லாமல் சில நேரங்களில் அசுமந்தமாக இருந்தது…! திருமண வீடு என்பதால் உங்க உறவினர்களின் நடவடிக்கைகள் நெஞ்சை கவர்ந்தது. அங்கு அனைவரும் மாமா… சித்தப்பா…. மாப்பிளே… இது எங்க மாமா பைய்யன்… இவங்க எங்க….. வோட பேரன் என்றதுடன் என்னையும் விட்டுவிடாமல் இவங்க மணிமொழியுடன் கல்லூரியில் படித்த அன்பு தோழி… இப்போ … சென்னையில் இருக்காங்க படிக்கும் பொது மணி மணிமொழிக்கு ரெம்ப உதவிகள் செய்திருக்காங்க…என்ற அறிமுகங்கள்…. இது மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் உங்க வீட்டுக்காரரையும் ஏன் கூட்டிட்டு வரல … மாப்பிளையையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே… என்ற அன்பான எனது தவறுகளை சுட்டிக்காட்டும் அளவலாவுகளும் இனிமையாகவே இருந்தது. .. இங்குள்ளது மாதிரி வேகமாக செயல்பட அங்கு முடியவில்லை. ஒரு நிதானமான செயல்பாடுகளே…. இருந்தாலும் அதுவம் ஒருவிதமான இனிமையையே தந்தது . இருப்பினும் உனது திருமணம் கோவிலில் அம்மன் சந்நிதானத்தில் வைத்து திருமணம் நடைபெற்றதை காரணம் காட்டி மற்றைய சம்பிரதாயங்கள் சடங்குகள் இல்லை என்பது கொஞ்சம் மனதுக்கு நெருடலாகவே இருந்தது. அம்மன் சந்நிதானத்தில் திருமணம் என்றாலும் மண்டபம் பிரமாண்டமாக இரண்டு நாட்களுக்கு எடுத்த விதத்தில் சாஸ்திர சடங்குகளை முறைபடுத்தி இருக்கலாம். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு விஷயங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ள வசதியாக இருந்த்திருக்கும். விருந்து உபசரிப்புக்கள என்னதான் இருந்தாலும் தெற்க்கு மாவட்டத்தில் உள்ளவர்களை மிஞ்ச முடியாது என்பதை இந்த திருமணம் எனக்கு உணர்த்தியது. சரியாக சாப்பாட்டு நேரங்களில் கைபேசியில் அழைத்து சாப்பிடும் இடத்துக்கு வரவழைத்த அன்பு மொழிகள் மறக்க முடியுமா…?
சென்னையில் கோவிலில் திருமணம் என்றால் உணவுக்காக டோக்கன் கொடுத்து அனுப்பும் முறையை பார்க்கும் போதுனையின் பரபரப்பில் எவ்வளவு வாழ்க்கையில் இனிமைகளை இழந்து இருக்கிறோம் என்பதை உணர்கையில்… சுயநல அரசியல்வாதிகளின் மீது மிகுந்த கோபம் வருகிறது…. அரசியல்வாதிகள் தங்களின் சுயநலம் கருதி புதிய வேலை வாய்ப்புக்களை பெரு நகரங்களை சுற்றி மட்டும் விருத்தி செய்தி விட்டு கிராமங்களை ஒதுக்கியதன் விளைவுதான் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் வேலைக்காக நகரத்தை நாடி வருவதால் இது போன்ற சொந்தங்களின் சுகமான பழக்க வழக்கங்களை… இனிமையான அன்பு மொழிகளை இழந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திர வாழ்க்கையில் உழன்று கொண்டு இருக்கிறோம். மாற்றங்கள் தேவை. நமது பிள்ளைகளும் உறவினர்களின் முக்கியத்துவத்தை இழந்து வளருகிறார்கள். மனதுக்கு வருத்தமாகவே உள்ளது
நகர் புறங்களை சுற்றி மட்டுமே உருவாகும் புதிய வேலை வாய்ப்புக்கள் கிராமப்புரங்களையும் சென்றடைய வேண்டும். அதுக்கு அரசியல்வாதிகள் தங்களின் பணியிடங்களை நகரத்தில் வைத்து இயக்காமல் எங்கு வெற்றி பெற்றாரோ அந்த பகுதியில் தங்கி அவரது அமைச்சகம் இயங்க வேண்டும். விஞ்ஞான வளர்ச்சியினால் அங்கிருந்தபடி அணைத்து அமைச்சர்களுடனும் முதல்வருடனும் அல்லது பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் வீடியோ கான்ப்ரசிங் மூலம் தொடர்பு கொள்ளலாம்..மிகவும் முக்கியமானது அவசியமெனில் நேரில் சென்று மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். இது போன்ற மாற்றங்களை கொண்டுவரும் அரசியல் கட்சிகளை நாம் ஊக்குவிக்கலாம்.நம்ம என்னதான் திட்டமிட்டாலும் அரசியல்வாதிகளின் மனம் மாறினால்தான் இது போன்ற நமது எண்ணங்கள் பயன்பாட்டுக்கு வரும். சரி.. சரி…பெட்டை கோழி கூவி விடியவா போகிறது… எதோ எனது மன ஆதங்கம் என் உயிர்தோழியான் உன்னிடந்தானே சொல்ல முடியும். ஆதங்கத்தை கொட்டிவிட்டேன். நடப்பது நடக்கட்டும்.
உனது அன்பு கணவர் எப்படி இருக்கிறார். வழக்கம் போல நீ வளவலன்னு பேசி கொண்டிருகாதே உனது பேச்சை குறைத்து அவரை பேச விடு. அப்போதுதான் உன்மீது அவருக்கு அக்கறையும் அன்பும் அதிகமாகும் என்ற ஆலோசனையை மீண்டும் உனக்கு நினைவூட்டி அடுத்த கடிதத்தில் தொடர்கிறேன்.
என்றும் உன் அன்புத்தோழி
கீதா பாலசுப்ரமணியன். -
பிரார்த்தனை துளிகள் ..!
பிறந்து வாழுகின்ற உயிர்களின் எதிர் பார்ப்புகள்
இறந்து போகின்ற உள்ளங்களின் வேதனைகள்
வேடிக்கைப் பார்க்கின்ற இரக்கமில்லா ஜீவங்கள் ..!உயிரற்ற சடலத்தை சுமப்பதற்கு
நான்கு தோள்கள் கரம் கொடுக்க
மறுமை வாழ்வை நிலையுருத்தி நிற்கும் மரணம் ..பிறப்பும் இறப்பும் இணைந்துவாழும் வாழ்க்கை .
நிலையற்ற நினைவுகளைஉறிஞ்சியெடுக்கின்ற மனசு
எல்லாம் மறைகின்றன இரவு பகல் மாற்றங்களில்இஸ்மாயில் நபியின் தாகத்தை தீர்க்க ,
ஊற்றெடுத்த சம்ஷம் நீரினை குடிக்க
போட்டி போடுகின்ற நல்லடியார்கள் மத்தியில்வாழ, எல்லையற்ற சோதனைகள் தொடர
பல நல்ல இதயங்கள் நொந்து மறைந்தனர்
அப்பாவி உள்ளங்கள் மானம் காத்து..எத்தியோப்பிய மண்ணில்
எலும்புக் கூடுகளாய் வாழும் உறவுகளுக்கு
இதயம் பிழிந்தோடும் பிரார்த்தனைத் துளிகள் ..!படத்துக்கு நன்றி
http://nashuarescuemission.org/prayer-warriors/
-
பாடாத பாட்டெலாம் பாட வந்தாய்..
பாடாத பாட்டெலாம் பாட வந்தாய்..- வீரத்திரும
கன் – கண்ணதாசன் – ஏ.சி.திருலோ கச்சந்தர் -ஆனந்தன் -ஈ.வி.சரோ ஜா – பி.பி.சீனி வாஸ் – விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடாத பாட்டெலாம் பாட வந்தாய்..
பருவத் தாமரை உருவம் கொண்டு பக்கம் வந்தாளோ பெண்ணென்று!
மனதின் ஆசையலைகளையே வடித்துத் தந்தாயோ பாடலென்று!
காட்சிமையப்பில் புதுமையாக ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் வீரத்திருமகன் பாடலிது! கதையின் நாயகன் நாயகியை மனதில் நினைத்துப் பாடுகிறாள் இடையில் மயங்கிய இன்னொருத்தி இதற்கு.. நடனமாடுகிறாள். ஒருவரையொருவர் காணாமலே பாடல் முழுவதும் நடந்திருக்க..
கவிதைச் சுகத்தை உள்வாங்கி.. இசையின் கலவை மிளிர்ந்திருக்க.. பி.பி.சீனிவாஸ் குரலில் தவழ்ந்துவரும் காதல் பாடல் இதுவன்றோ?
திரு. ஆனந்தன் திரையில் தோன்ற ஆரணங்காய் ஈ.வி.சரோஜா நடனமிட பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் என்கிற பல்லவி இரவருக்கும் பொருந்த.. வழக்கமான அர்த்தப் புஷ்பங்களை நிறைத்து வைத்திருக்கிறார் கண்ணதாசன்.
அண்மையில் பத்மஸ்ரீ பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய வானம்பாடி நிகழ்ச்சியில் (கலைஞர் தொலைக்காட்சியில்) கவிதைப் பாற்கடலில் அமுதம் எடுத்துத்தர நிரந்தர நாயகனாய் எங்கள் கவிஞர் பிறைசூடன் வழங்கிய புதிய பரிணாமத்திற்கு மற்றுமொரு முறை இதயம் நிறைந்த நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அது என்ன தெரியுமா?
மிச்சமா.. மீதமா.. இன்னும் வேண்டுமா என்று ஒரு வரி..
மிச்சம் என்றால் என்ன? மீதம் என்றால் என்ன?
உதாரணத்திற்கு.. இனிப்புப் பண்டம் ஒன்றைத் தேவையான அளவு எடுத்துக்கொண்டு மீதம் உள்ளதை அதனை சேமித்து வைத்தல்..
மற்றொரு வகையில்.. கணவன் தான் உண்ணும் இலையில் மிச்சம்வைத்து மனைவியை எடுத்துக்கொள் என்கிறான். அதை சேமித்து வைக்க முடியாது. அவள்தான் அப்போதே சாப்பிட வேண்டும்.
காதலைப் பற்றி எழுதும் போது.. கண்ணதாசன் தருகின்ற வார்த்தைப் பதங்களில்.. மிச்சமா.. மீதமா.. உன்னை மிச்சமாய் வைக்கவா..மீதமாய் தீர்க்கவா என்று கேட்கிற நயம் கவிஞரின் கற்பனையில் தோன்றிய மின்னலா? கவிதையில் அழகைச் சுமந்துவரும் தென்றலா?
ஒரு பாடலில் இடம்பெற்ற இரண்டு வார்த்தைகளுக்கு இத்தனைப் பொருள் என்றால் கண்ணதாசனே.. உன் கவிதைக் கடலில் முத்துக்களோ காலங்கள் பல கடந்தும் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பேன்!பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்..
காணாத கண்களை காணவந்தாள்..
பேசாத மொழியெலாம் பேசவந்தாள்
பெண்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்..(2)மேலாடைத் தென்றலில் ஆகாகா…
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்..
கண்ணோடு பேசவா சொல் சொல்சொல்.. (பாடாத பாட்டெலாம்)அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா?
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?
மிச்சமா மீதமா இந்த நாடகம்..
மென்மையே பெண்மையே வா வா வா (பாடாத பாட்டெலாம்)நிலவிலே நிலவிலே சேதி வந்ததா?
உறவிலே உறவிலே ஆசை வந்ததா?
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா?
அருகிலே அருகிலே வந்து சேரம்மா.. [பாடாத பாட்டெலாம்]
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
பருவத் தாமரை உருவம் கொண்டு பக்கம் வந்தாளோ பெண்ணென்று!
மனதின் ஆசையலைகளையே வடித்துத் தந்தாயோ பாடலென்று!
காட்சிமையப்பில் புதுமையாக ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் வீரத்திருமகன் பாடலிது! கதையின் நாயகன் நாயகியை மனதில் நினைத்துப் பாடுகிறாள் இடையில் மயங்கிய இன்னொருத்தி இதற்கு.. நடனமாடுகிறாள். ஒருவரையொருவர் காணாமலே பாடல் முழுவதும் நடந்திருக்க..கவிதைச் சுகத்தை உள்வாங்கி.. இசையின் கலவை மிளிர்ந்திருக்க.. பி.பி.சீனிவாஸ் குரலில் தவழ்ந்துவரும் காதல் பாடல் இதுவன்றோ?
திரு. ஆனந்தன் திரையில் தோன்ற ஆரணங்காய் ஈ.வி.சரோஜா நடனமிட பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் என்கிற பல்லவி இரவருக்கும் பொருந்த.. வழக்கமான அர்த்தப் புஷ்பங்களை நிறைத்து வைத்திருக்கிறார் கண்ணதாசன்.
அண்மையில் பத்மஹீ பாலசுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய வானம்பாடி நிகழ்ச்சியில் (கலைஞர் தொலைக்காட்சியில்) கவிதைப் பாற்கடலில் அமுதம் எடுத்துத்தர நிரந்தர நாயகனாய் எங்கள் கவிஞர் பிறைசூடன் வழங்கிய புதிய பரிணாமத்திற்கு மற்றுமொரு முறை இதயம் நிறைந்த நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அது என்ன தெரியுமா?
மிச்சமா.. மீதமா.. இன்னும் வேண்டுமா என்று ஒரு வரி..
மிச்சம் என்றால் என்ன? மீதம் என்றால் என்ன?உதாரணத்திற்கு.. இனிப்புப் பண்டம் ஒன்றைத் தேவையான அளவு எடுத்துக்கொண்டு மீதம் உள்ளதை அதனை சேமித்து வைத்தல்..
மற்றொரு வகையில்.. கணவன் தான் உண்ணும் இலையில் மிச்சம்வைத்து மனைவியை எடுத்துக்கொள் என்கிறான். அதை சேமித்து வைக்க முடியாது. அவள்தான் அப்போதே சாப்பிட வேண்டும்.காதலைப் பற்றி எழுதும் போது.. கண்ணதாசன் தருகின்ற வார்த்தைப் பதங்களில்.. மிச்சமா.. மீதமா.. உன்னை மிச்சமாய் வைக்கவா..மீதமாய் தீர்க்கவா என்று கேட்கிற நயம் கவிஞரின் கற்பனையில் தோன்றிய மின்னலா? கவிதையில் அழகைச் சுமந்துவரும் தென்றலா?
ஒரு பாடலில் இடம்பெற்ற இரண்டு வார்த்தைகளுக்கு இத்தனைப் பொருள் என்றால் கண்ணதாசனே.. உன் கவிதைக் கடலில் முத்துக்களோ காலங்கள் பல கடந்தும் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பேன்!
பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்..
காணாத கண்களை காணவந்தாள்..
பேசாத மொழியெலாம் பேசவந்தாள்
பெண்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்..(2)மேலாடைத் தென்றலில் ஆகாகா…
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்..
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்..
கண்ணோடு பேசவா சொல் சொல்சொல்.. (பாடாத பாட்டெலாம்)அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா?
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?
மிச்சமா மீதமா இந்த நாடகம்..
மென்மையே பெண்மையே வா வா வா (பாடாத பாட்டெலாம்)நிலவிலே நிலவிலே சேதி வந்ததா?
உறவிலே உறவிலே ஆசை வந்ததா?
மறைவிலே மறைவிலே ஆடலாகுமா?
அருகிலே அருகிலே வந்து சேரம்மா.. [பாடாத பாட்டெலாம்]
பாடாத பாட்டெல்லாம் -Padatha pattellam -
ரசிகை மணிமொழிக்கு ஒரு மடல்..
கலாரசிகை மணிமொழிக்கு,
வணக்கம். தங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றேன். உண்மையிலேயே பேருவகை அளித்த மடல்.
உங்கள் கடித்தத்தைப் படித்து முடித்தவுடன், சுஜாதா அவர்கள் ஒரு சிறுகதையில் லாட்டரியில் பரிசு கிடைப்பதற்கான சாத்தியம் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது –
“ஒரு குரங்கு டைப் அடிக்கற இயந்திரத்துக்கு முன்னால் உட்கார்ந்துவிட்டு, தக்கா புக்கான்னு அடிச்சு, அடிச்ச விஷயம் அகஸ்மாத்தா கம்பராமாயணத்தில் ஒரு பாட்டா அமையதறதுக்கு எவ்வளவு சான்ஸ் இருக்கோ, அவ்வளவு சான்ஸ் தான் இந்த லாட்டரியில..” என்று எழுதியிருப்பார்.
என்னைப் பொறுத்தவரையில், என் போன்ற ஓவியர்களுக்கு இதுபோன்ற கடிதங்கள் வருவதென்பதும், லாட்டரியில் பரிசு விழுவதென்பதும் ஒன்று தான்! என்னை ‘தக்கா புக்காவென தட்டச்சும் குரங்கு’ என்று கூறவில்லை. உங்களைப் போன்ற கலாரசி(கர்)கைகள் எல்லாம் பேரதிசயம் என்றே கூற வருகிறேன்!
எவ்வளவு அழகாக என் ஓவியங்களை உள்வாங்கியிருக்கிறீர்கள்?
உங்கள் கடிதத்தைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறேன். உண்மையில் இந்தக் கடிதமே ஒரு அழகிய ஓவியம்! என் படைப்புகளைப் பற்றி நீங்கள் பாராட்டி எழுதியதற்காகச் சொல்லவில்லை. உண்மையில், நீங்கள் தான் அந்த ஓவியங்களை வரைந்து முடித்துள்ளீர்கள்.
உங்கள் கேள்விக்கு வருவோம். “அது என்ன ‘து..தூ.. (TuToo)’ என்று ஒரு புனைபெயர்? குறில் நெடிலென கவித்துவமாயும் இருக்கிறது; ஒன்றும் புரியாததாயும் இருக்கிறது?”
கவிதைக்கான அனைத்து லட்சணங்களும் என் புனைபெயரிலேயே வந்து விட்டது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். 🙂
கவிஞனுக்கும், ஓவியனுக்கும் அடிப்படையில் வேறுபாடு எதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. கவிஞன் ஒரு ஓவியத்தை மனக்கண்ணால் தரிசித்துவிட்டு கவிபடைக்கிறான். ஓவியன், கவிதையைக் மனதிலேயே எழுதிமுடித்துவிட்டுப் பின் ஓவியம் வரைகிறான். ஒரு கவிஞனுக்குள் நிச்சயம் ஒரு ஓவியனும், ஒரு ஓவியனுக்குள் நிச்சயம் ஒரு கவிஞனும் இருந்தே ஆகவேண்டும் என்பது என் அபிப்பிராயம்.
சரி, என் புனைபெயருக்கு வருவோம். இதற்கான பதிலை நிச்சயம் ஒரு வரியில் என்னால் கூற முடியாது. அது ஒரு பெரிய கதை! சிறிது நேரம் இந்த ஓவியனுக்குள் இருக்கும் கதாசிரியனையும் பொறுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன், மணிமொழி.
அன்றைய தினத்து நினைவுகளின் வண்ணங்கள் இன்னும் என் மனதில் திட்டுத் திட்டாக ஒட்டிக் கொண்டு இருக்கின்றன.
அன்றைக்கு அலுவலகத்தில் “அட போங்க! என்ன வாழ்க்கையோ?” என்று ஒரு நான்கு நண்பர்களிடமாவது சொல்லிப் புலம்பி இருப்பேன். காலை வீட்டிலிருந்து கிளம்பும் போது, வீட்டாருடன் பெரிய வாக்குவாதம். என் அண்ணன், அண்ணி, தாய்மாமா, பற்றாக்குறைக்கு என் மாமனார் வேறு. என்னைக் கிட்டத்தட்ட ஒரு விசாரணைக் கைதியைப்போல் நிறுத்திக் கேள்விகளைக் கேட்டுவிட்டு, பின்னர் அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.
அதற்கு முந்தைய வாரம் மும்பையில் நடந்த சர்வதேச ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க வந்திருந்த என் ஆதர்ச ஓவியர் ராம் எங்கள் வீட்டில்தான் தங்கினார். நான் அலுவலகத்துக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்து விட்டு கண்காட்சியில் அவரோடு இருந்தேன்.
அதுவே என் வீட்டாருக்கு அப்போது இமாலயப் பிரச்சினை.
“இயந்திரவியல் முடித்துவிட்டு பஜாஜ் நிறுவனத்தில் வாகன வடிவமைப்பாளராகப் பணியாற்றும் எனக்கெதற்கு இந்த ஓவியக் குப்பைகள் எல்லாம்?” என்பது அவர்கள் வாதம்.
மும்பை காண்டிவிலியில் நாங்கள் வசித்துவந்த வீடு என் தந்தை கட்டியது. மிகப் பெரிய இரண்டடுக்கு வீடு. கீழ் வீட்டில் என் அண்ணனும், மேலே நானும் குடியிருந்தோம். அவருடைய குழந்தைகள் எப்போதும் என் வீட்டில்தான் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.
நான் சிறுசிறு வீட்டுப் பராமரிப்பு வேலைகளைக்கூட செய்வதில்லை என்பது என் அண்ணனின் குற்றச்சாட்டு. மளிகைக் கடைக்குச் செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது போன்ற வேலைகளைச் செய்வதில்லை என்பது என் மனைவியின் குற்றச்சாட்டு. தங்கள் வீட்டில் நடக்கும் முக்கியமான குடும்ப நிகழ்வுகளில்கூட நான் பங்கேற்பதில்லை என்பது சென்னையிலிருந்து வந்திருக்கும் என் மாமனாரின் குற்றச்சாட்டு. என் அண்ணனின் குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்தவிடாமல், ஓவியம் வரையச் சொல்லி கட்டாயப்படுத்துகிறேன் என்று என் அண்ணன் மூலமாக பழி சுமத்திய என் அண்ணி.
இவையனைத்திற்கும் மூலகாரணமே ஓவியக்கலையில் எனக்கு இருந்த நாட்டம் தான். என் ஓவியப்படைப்புக்களைப் பார்த்தாலே அவர்களுக்கு ஏனோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
நிலைமை இப்படி இருக்க, ஒரு ஓவியர் வந்து வீட்டில் ஒரு வாரம் தங்கினால் சும்மா இருப்பார்களா? யோசித்துப் பாருங்கள்.
அதிலும் அவருக்காக நான் விடுப்பு வேறு எடுத்துக்கொண்ட விஷயம் என் மாமனாரை ரொம்பவுமே பாதித்துவிட்டதுபோல் தெரிந்தது.
“வீட்டக் கொஞ்சம் பாருங்க மாப்ள. ஏதோ பெயின்டிங் முடிக்கணும்னு சொல்லி, என் மொத பொண்ணு சீமந்தத்துக்குக் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டீங்க. இன்னைக்கி எவனோ ஒருத்தனுக்காக அலைஞ்சிட்டு இருக்கீங்க! இது என்ன நியாயம்?” என்றார் என் மாமனார்.
“பெரியவங்க கஷ்டம் இவங்களுக்கு புரியாது ராமநாதன். சிவா, எவ்வளோப்பா செலவு பண்ண அந்த பெயிண்ட் அடிக்கற தாடிகாரப் பயலுக்கு?” – இது என் தாய்மாமா கிருஷ்ணமூர்த்தி.
“பெயிண்ட் அடிக்கிறவரா? கலைத்தாய் இவர் மேல கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம்” என்று நினைத்துக்கொண்டு அமைதியாக நின்றேன்.
என்னைச்சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில் அமைதியைக் கடைப்பிடிப்பது என் வழக்கம். ஏனென்றால் அந்த சமயங்களில் நாம் பேசுவதால் எந்த உபயோகமும் இல்லை. அது பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். மேலும், நாம் செய்து கொண்டிருப்பது என்னவென்றே தெரியாமல் நம்மை விமர்சனம் செய்துகொண்டிருப்பவர்களிடம் பிரதிவாதம் செய்வது என்பது, குருடனுக்கு பச்சை நிறம் எப்படி இருக்கும் என்று விளக்குவது போன்றது.
“”உங்கப்பா கஷ்டப்பட்டு சேத்ததெல்லாம் அழிச்சிடாதப்பா. அவ்ளோதான் சொல்லமுடியும். நல்ல வேலைல வேற இருக்க. அதுல ஒழுங்கா ஷைனாகற வழிய பாரு சிவா.”
ஏதோ வேலைக்குப் போகாமல் குடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடப்பவனிடம் பேசுவது போன்று தொடர்ந்து விடாமல் அறிவுரைகளை பொழிந்துகொண்டிருந்தார் என் மாமா.
ராமை அந்தேரிக்கு அழைத்துச் சென்றதிலும், அவருடன் உணவு அருந்தியதிலும் என் சொத்தே அழிந்துவிட்டது போன்ற பிரமையை உருவாக்கிய அவர் பேச்சு எனக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இருந்தாலும் என் வாதங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை – மேலே கூறிய அதே காரணங்களுக்காக.
இவர்களாவது பரவாயில்லை. என்னைக் காதலித்து மணந்துகொண்ட என் மனைவிக்கு என்ன ஆயிற்று? அவளால் கூட என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
திருமணத்திற்கு முன்பே, என் கனவுகளைப் பற்றி எவ்வளவு விஷயங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டேன். அத்தனைக்கும் துணையாய் இருப்பேன் என்று கூறிய அவள் இன்று,
“அவர் வேணும்னா அவர் உண்டு அவர் பெயிண்டிங் உண்டுன்னு ஜாலியா இருக்கட்டும். நான் சென்னைக்கு போயி வேலை பார்க்கப்போறேன்” என்று நாகூசாமல் சொன்னாள்.
அதற்குக் காரணம் அவளுடைய பொசசிவ்னெஸ் என்றே நினைக்கிறேன். என்னுடைய ஓவியக்கலையைக் கிட்டத்தட்ட அவள் சக்களத்தியாகவே பார்க்கிறாள். அதிலும் ஏதாவது ஒரு பெண்ணின் படம் வரைந்தால் போதும் – முடிந்தது கதை! எல்லாவற்றுக்கும் மேலாக, அவளுடைய அக்காவின் சீமந்தத்திற்கு நான் போகாதது, நான் இழைத்த தவறுகளிலேயே ‘ உலக மகா தவறு!’.
அன்றுதான் முதன்முதலாக என் பெற்றோர்கள் இல்லாத வெற்றிடத்தை முழுவதுமாக உணர்ந்தேன். சிறுவயதில் இருந்தே எனக்கு ஓவியம் என்றால் அவ்வளவு நாட்டம். நான் ஆறுவயதில் மூன்று கோடுகளைப் போட்டதற்கே கைதட்டி ரசித்து, என்னை ஊக்கப்படுத்துவதற்காகவே, வண்ண வண்ண பென்சில்களையும், ஸ்கெட்சுகளையும், தூரிகைகளையும், வெள்ளைத் தாள்களையும் வாங்கி வந்து குவித்தவர்கள் அவர்கள்.
அத்தனை அவிவேகிகளும் சேர்ந்து என்னைக் கேள்வி கேட்பதைப் பார்த்துக்கொண்டு அவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? இல்லை, அவர்களுக்கெல்லாம் என் தந்தை முன்பு பேசத்தான் துணிவு இருந்திருக்குமா?
ஓவியர் ராம் போன்றவர்கள் வீட்டிற்கு வருவது எவ்வளவு பெரிய பாக்கியம். இதுபோன்ற வாய்ப்புக்கள் என்னைப்போன்ற வளரும் கலைஞர்கள் அனைவருக்கும் கிடைக்குமா? என் ஓவியங்களை எல்லாம் பார்த்து எவ்வளவு ரசித்தார், பாராட்டினார். அந்த மகா கலைஞன் இந்த அற்பனின் ஓவியம் ஒன்றை ‘மாஸ்டர் பீஸ்’ என்று கூறியதோடு மட்டுமில்லாமல், அந்த சர்வதேசக் கண்காட்சியில் என் ஓவியங்கள் சிலவற்றையும் வைத்து அழகு பார்த்தாரே! அந்தப் பெருந்தன்மையைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கும்? எத்தனை பெரிய கலைஞர்களை அங்கே எனக்கு அறிமுகப்படுத்தினார்!
அதற்கு முன்புவரை எத்தனை பத்திரிக்கைகளுக்கு எனது ஓவியங்களை அனுப்பி இருப்பேன்? அவற்றிற்கெல்லாம் பதில் கடிதம் கூடக் கிடைத்ததில்லை. ஆனால், ராம் என்னுடைய ஓவியங்களை அவரே அவருக்குத் தெரிந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு அனுப்பினாரே! அவரோடு நானிருந்தது எனக்கல்லவா பயன்பட்டது. அவர் நினைத்திருந்தால் ஒரு விடுதியில் தங்கியிருக்கலாம். ஆனால், ஒரு ரசிகன் மீதிருந்த அதீத அன்பினாலல்லவா அவர் என்னோடு வந்து தங்கினார்.
ஒரு கலைஞனுக்குத் தான் எத்தனை பிரச்சினைகள் பாருங்கள் மணிமொழி – வீட்டிலும், சமுதாயத்திலும்? சமுதாயத்தில் தொடர்ந்து அவன் படைப்பின் மேலெழும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டி இருக்கிறது. அதுவாவது பரவாயில்லை என்பேன். வீட்டில், முதலில் ஒரு படைப்பை உருவாக்குவதற்கே போராட வேண்டியிருக்கிறது.
இப்படி ஏதேதோ எண்ணவோட்டங்களில் அன்றைக்கு தொலைந்து போயிருந்த என்னை உலுக்கியது என் உடன் பணிபுரிந்த நண்பர் சேகரின் கணீரென்ற குரல்.
“என்னங்க ஷிவா, ப்ரூட் ஜூஸ் குடிக்கபோறேனு சொல்லிட்டு வந்து கேன்டீன்ல இவ்ளோ நேரம் உக்காந்து என்ன கனவு கண்டுட்டு இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே என் முன்னால் வந்து அமர்ந்தார்.
“அதான் காலைலயே சொன்னேனேங்க.”
“அட விடுங்க ஷிவா. இதெல்லாம் ஒரு பிரச்சினையா? உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கொடுக்கட்டுமா? நீங்க மொதல்ல எங்கூட MBA பார்ட் டைம் கோர்ஸ் ஜாய்ன் பண்ணுங்க.”
“என்ன ஷேகர் சொல்றீங்க? இதுக்கு எங்க வீட்ல இருக்கறவங்களே பரவாயில்லை போல இருக்கே?”
“நோ.. நோ. நான் இன்னும் முடிக்கல. MBA கிளாஸ் போறேன்னு சொல்லிட்டு ஈவினிங்லயும், வீகென்டுலயும் ஒரு சின்ன ரூம் ரென்டுக்கு எடுத்து அங்க பெயிண்ட் பண்ணுங்க.”
“இது ரியலிஸ்டிகாவே படலையே ஷேகர். வேற ஏதாவது ஐடியா கொடுங்க.”
“ஷிவா, அவனவன் எதுக்கெல்லாமோ சின்ன வீடு வெச்சிருக்கான். நீங்க உங்க ட்ரீம்ஸ்காக ஒரு ஸ்மால் ரூம் ரென்ட் எடுக்கறது தப்பா? இன்னைக்கி எத்தனையோ ஆர்டிஸ்ட் புனைபெயர்ல வரையறாங்க, எழுதறாங்க. நீங்க பாட்டுக்கு சைலன்டா உங்க வேலைய பாருங்க ஷிவா”
சிந்தனையில் ஆழ்ந்த என்னிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார் ஷேகர், “நம்ம மக்கள் எப்பவுமே ஜெயிச்சவன் கொடுக்கற பேட்டிய ஆ..னு வாயத் தொறந்து டிவி-ல பாத்து கைதட்டுவாங்க. நம்ம வீட்லயே ஜெயிக்கறதுக்குப் பாடுபடறவன கண்டுக்க மாட்டாங்க. ஆனா கிண்டல் மட்டும் நல்லா பண்ணுவாங்க.”
“அப்போ ஏன் ராம் மாதிரி ஆளுங்கள கண்டுக்க மாட்டேங்கறாங்க.”
“தட்ஸ் பிகாஸ் தே டோன்ட் நோ அபோவ்ட் திஸ் ஆர்ட். இதுல வேற நீங்க மாடர்ன் ஆர்ட் ஆசாமி. அவங்களுக்கு என்ன புரியும்? எதையோ கிறுக்கி டைம் வேஸ்ட் பண்றான்னு நெனெக்கிறாங்க. இதுவே நீங்க ஒரு கீபோர்டிஸ்டா இருந்து A.R.ரஹ்மான் உங்க வீட்டுக்கு வந்தா இப்படி பிகேவ் பண்ணுவாங்களா யோசிச்சு பாருங்க? அவ்வளோ ஏன்? இந்த ராம் மட்டும் ஒரு டிவி சீரியல்ல நடிசிருந்தார்னா இப்போ நெலமையே வேற மாதிரி இருந்திருக்கும்.” என்று சேகர் பேசிய விஷயங்கள் எனக்கு நியாயமாகப்பட்டது.
அதிலும் புனைபெயரில் வரைவது என்பது சிறந்த யோசனையாகப்பட்டது. மாலை வீட்டிற்குச் செல்லும் வழியில் பல புனைபெயர்கள் தோன்றின. எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை.
இப்படிச் சிந்தனையில் ஊறியபடியே வீட்டிற்குள் நுழைந்த போது, எங்கள் வீட்டு ரோஜா செடிகளுக்கு மத்தியில் நான் கண்ட காட்சி என்னை உலுக்கியது.
ராம் என்னிடம் மாஸ்டர் பீஸ் என்று பாராட்டிய என்னுடைய ஓவியம் கீழே கேட்பாரற்று விழுந்து கிடந்தது. சற்றுநேரத்திற்கு முன்பு என் மனைவியோ அல்லது அண்ணியோ, உலரவைப்பதற்காகக் கம்பியில் தொங்கவிடப்பட்ட துணியிலிருந்து விழுந்த தண்ணீர்த் துளிகள், சொட்டுச் சொட்டாய் என் ஓவியத்தை அழித்துக்கொண்டிருந்தன.
ஓடிச்சென்று அதை எடுக்க குனிந்தபோதுதான் கவனித்தேன். என் ஓவியம் அப்படியொன்றும் உருக்குலைந்து போய்விடவில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்தத் துளிகள் ஒவ்வொன்றும் தூரிகைகளாய் மாறி என் ஓவியத்தை மேலும் அழகுபடுத்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தபோது, “துளிகளே தூரிகைகளாய்…” என்கிற கவித்துவமான தலைப்போடு சேர்த்து, அந்தத்துளிகள் வரைந்த ஓவியத்தைப் பற்றிக் கவிதை வரிகளும் கொட்டின.
அப்போது பிறந்தது து..தூ.. (TuToo) என்கிற என் புனைபெயர் மட்டும் அல்ல; எனக்குள் இருந்த கவிஞனும்தான்.
நாம் நிச்சயம் சந்திக்கவேண்டும், மணிமொழி. ஓவியங்களால் சூழப்பட்ட இந்தச் சிறு வீடு உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறது.
என்றென்றும் அன்புடன்,
து..தூ.. (என்கிற) சிவா.
-
பொன் மாறனின் திருமுகம்!
அன்புள்ள மணிமொழிக்கு….
நந்திதா
பார் புகழும் பாண்டிய நாட்டின் அரசி மணிமொழி தேவியாரின் பொற்பாதங்களைத் தொழுது,தங்கள் திருவளர் செல்வன் பொன்மாறன் எழுதியதை என் மெய்காப்பாளன் மார்த்தாண்டத்திடம் கொடுத்து தங்களிடம் சேர்ப்பிக்குமாறு கட்டளை இட்டுள்ளேன்.
திருமுகத்தின் மேல் பொறிக்கப்பட்ட”மீன் இலச்சினையையும், என் கணையாழியின் சின்னத்தையும் கண்டு தங்கள் திரு குமாரன் நலமுடன் இருக்கிறான் என்பதை அறிந்து, தங்கள் திருமுகம் ஆதவனைக் கண்ட தாமரை மலர் போல் மடல் விரிவதை என் மனக் கண்ணால் காண முடிகிறது.
தங்களின் உத்தரவு பெற்று நானும் மார்த்தாண்டனும் மாறு வேடத்தில் நள்ளிரவில் நகர் வலம் வர புறப்பட்டோம். நாட்டு மக்களின் நலனையும், பிற நாட்டு ஒற்றர்கள் ஊடுவுறுவதை அறியவும் வேட்கை கொள்வது நல்ல அரசனின் அழகு அன்றோ. அவ்விதம் செல்ல நம் நாட்டு மக்கள் நலமுடனும், மகிழ்வுடனும் இருப்பதை அறிந்தோம் நாங்கள் இருவரும். எல்லாம் அந்த ஆலவாயான் அருளே.
நகரத்தைச் சுற்றிவிட்டு திரும்பும் வேளை அந் நள்ளிரவில் ஓரு கரிய உருவம் பதுங்கி ஓட நாங்கள் ஐயத்துடன் உருவத்தின் பின் செல்ல செல்ல நாங்கள் ஊர் எல்லையைத் தாண்டி விட்டதை சிறிது நேரம் சென்ற பின்னர்தான் உணர்ந்தோம். இந்த உருவம் பல வினாக்களை எழுப்பவே அரண்மனை திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டோம். பாண்டிய வம்சத்தில் வந்த நான் எப்படி என் கடமையிலிருந்து தவறுவது?
முன்னால் சென்ற உருவம், நகர எல்லையைக் கடந்து, வயல்களையும் கடந்து சென்றது. முடிவில் நாங்கள் வெகுதூரம் வந்து விட்டதை உண்ர்ந்தோம். அப் பாதை மிக கடினமாகி சிறு கற்களும், பாறைகளும் எங்கள் காலைப் பதம் பார்த்தன. கரிய உருவம் மேலே ஏறுவது தெரிய இடுப்பில் சொறுகிய வாளைத் தொட்ட வண்ணம் அதே பாதையில் முன்னேறினோம். நாங்கள் செல்லும் பாதை தற்பொழுது மலைப் பாதை என அந்த இருட்டில் உணர்ந்தோம். உருவத்திற்கு இப் பாதை பழக்கம் போலும். அதனால் ஏறி எங்கோ இருட்டில் மறைந்து விட்டது. இனி எங்கே செல்வது என்னும் வேளையில் தோளில் ஏதோ உராயவே, வாளை உருவி வெட்ட, அது ஆலபம் விழுது என உண்ர்ந்தோம். ஏதோ மிருகத்தின் உறுமல் கேட்க, சிந்தனை செய்யாது ஆல விழுதைப் பற்றிக் கொண்டு மேலே ஏறி பத்திரமாக ஒரு கிளையில் இளைப்பாறினோம். மார்த்தாண்டன் கூறினான், “இளவரசே தாங்கள் கொஞ்சம் இளைப்பாருங்கள். நான் காவல் புரிகிறேன். இந்த இருட்டில் எங்கு செல்வது? என்றான். அவனது யோசனை சரி எனப் படவே நான் இளைப்பாறினேன். நான்கு புறத்திலும் மலைக் கன்னியை கரிய போர்வை மூட அவளோ நன்றாக உற்ங்கிக் கொண்டு இருந்தாள். அவள் உறங்க வண்டுகள் பண் இசைத்துக் கொண்டிருக்க, மின் மினிப் பூச்சிகள் நடன மாடிக் கொண்டிருந்தன. நேரம் மெதுவாக நகர்ந்து இருளின் கரிய போர்வையை ஆதவன் தன் பொன் கிரணங்களால் நீக்க மலைக் கன்னி தன் இமைகளைத் திறந்தாள். ஆதவனின் கிரணங்கள் நெடுந்துயர்ந்த மரத்தின் இலைகளின் ஊடே வந்து மரகதப் பட்டில் வட்ட வட்ட சரிகை வேலை செய்து நெய்த கம்பளம் போல் காட்சி அளித்தது. மலைக் கன்னி தன் அழகைக் பூரணமாக காட்டவில்லை. அவ்வளவு அடர்ந்த காடு.
எனினும், விடியலுக்காகக் காத்திருந்த புள்ளினங்களின் ஓசை மனதிற்கு இனிமையை சேர்த்தது. அங்கு குயில், கிளிகள், மரங்க்கொத்தி,வலியான், ஆனைச் சாத்தான், பல வர்ணத்தில் வண்டுகள், தேனீக்கள், இவைகளின் பாட்டுக்குத் தாளம் போடுவது போல், அருகில் ஓடும் ஓடையின் சல சலப்பு. இவைகளைக் கண்டு மெய் மறந்து விட்டோம். அப்பொழுது தான் தெரிந்தது அது குறிஞ்சி நிலம் என.குறிஞ்சியின் மாண்பினை அப்படியே வண்ணக் கலவையில் தீட்டியத்து போல் இருந்தது அக் காட்சி. அதுவும் நம் பாண்டிய நாட்டின் மிக அருகிலேயே உள்ளதை நாம் அறியவில்லை என தெரிந்ததும் வருத்தமாக இருந்தது. நம் பார்வை இங்கு படவே இல்லையா அல்லது இங்குள்ள மக்கள் நம் நாட்டு மக்களுடன் கலக்கவில்லையா?
ஒருவேளை நாம் யவன தேசத்தாருடன் வாணிபம் செய்து, குதிரை இறக்குமதி செய்வதிலும், இங்கிருந்து முத்து, பவளம், பட்டு, சங்கு, பருத்தி,மிளகு இவைகளை ஏற்றுமதி செய்வதிலும், தமிழ் சங்கம் அமைத்து, தமிழ் வளர்ப்பதிலும் மட்டும் கவனம் செலுத்தி இருந்தோமா. அல்லது எதிரிகளின் தாக்குதலை எதிர் கொள்ள படையைப் பலப் ப்டுத்துவதில் இருந்து விட்டோமா தெரியவில்லை. இந்தப் ப்ராந்தியம் நம் எல்லைக்கு அருகில் இருக்க இம் மக்களைப் புறக்கணித்து விட்டோமா. அதனால் இங்கு உள்ளவர் நம் ஊருக்குள் வந்து இருந்தாரோ. பல எண்ணங்கள் தோன்றியது. எப்படியும் ஊர் திரும்பாமல், இப் பிரதேசத்தை அறிவது என முடிவெடுத்தேன். அதற்கு கால தாமதம் ஆகி தாங்கள் கவலை கொள்வீர்கள் என எண்ணி மார்த்தாண்டனை திருமுக த்தோடு அனுப்பி உள்ளேன்.
மேலும் மடலைத் தொடர்கிறேன்… நாங்கள் மெதுவாக மரத்திலிருந்து இறங்கி பாறைகளைக் கடந்து மேலே சென்றோம்.வழியில் ஓடிய ஓடையில் முகம், உடலைச் சுத்தம் செய்து மேலே செல்ல பல குரல்கள் விசித்திர மொழியில் பேசும் ஓசைக் கேட்டது. வழியில் பல வித தாவரங்கள், மூலிகைச் செடிகள், கொடிகள், சந்தனம், அகில், மீங்கில், கடம்பு,, கருங்காலி, பலா, திமிசு, வேங்கை, தேக்கு,மருதம், கனமில்லா பலகை செய்ய உதவும் மரங்கள் வானை முட்டும் உயரத்தில் வளர்ந்து இக் காட்டுக்கு அழகு சேர்க்கிறது தாயே. அட்துடன், மரங்களில் தாவிச் செல்லும் கவிகள், கீழே கரடிகள், மான், யானை, காட்டு எருமை, உடும்பு காட்டு ஆடுகள் மேய்து கொண்டிருந்தன.
ஆர்வத்தால் மேலே சென்றோம். அங்கு பல குடிசைகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் சிறுமிகள் காணப் பட்டனர். அவ்வேளையில் ஒருவன் எங்களைக் கண்டு, ஈட்டி போல் ஒன்றை ஏந்தி ஓடிவந்தான். நானும் மார்த்தாண்டனும் எங்களிடம் ஆயுதம் ஏதும் இல்லை என இரு கரங்களைத் தூக்கி நின்றோம். அக் கணம், அக் குடிகளின் தலைவன் போலும் வெளியில் வந்து ஈட்டிக் காரனை நிறுத்தினான். பிறகுதான் தெரிந்தது அது ஈட்டி இல்லை, ஈட்டி போன்ற ஆயுதத்தை மூங்கிலில் செய்த்துள்ளனர் என. அத் தலைவனை அங்கு கூடியிருந்த அனைவரும் வணங்கினர். எங்களை அருகில் அழைக்க நாங்களும் சென்று வணங்கி நின்றோம். அன்னையே, அவர்கள் பேசும் மொழி நம்முடைய தமிழ் போன்று இல்லை. நாங்கள் தலைவனை வணங்க நாங்கள் அமர ஒரு இருக்கையைப் போட்டு அமரச் சொல்ல நாங்களும் அமர்ந்தோம். தலைவன் தன் கைகளைத் தட்ட ஒரு பெண் ஒரு மரத்தட்டில், பால், தினை, தேன்,கிழங்கு, உப்பு கொண்டு வைக்க எங்களுக்கு சைகைக் காட்டினான் தலைவன். உப்பு வேண்டுமா அல்லது தேன் வேண்டுமா. முதலில் புரியாமல், யோசித்து செயல் பட்டேன். பாலில் தேன் சேர்ப்பது வழ்க்கம், உப்பு சேர்ப்பதில்லையே.. என பாலில் தேன் சேர்த்தேன். தலைவன் முகத்திலும், மற்றவர் முகத்திலும் புன்னகையைக் கண்டேன். அவனை வணங்கிவிட்டு, பாலை அவனுக்கு கொடுக்க அவனும் பாலை எடுத்துக் கொண்டான். தன் இரு கைகளை கூப்பி ஆகாயத்தையும், மலையைச் சுற்றியும் வணங்கினான். அப் பொழுது உணர்ந்தே. நம்மைப் போல் தெய்வங்களை சிலா வடிவத்தில் ஆராதிப்பதில்லை என. மனித சக்தியை விட இயற்கைக்கு சக்தி அதிகம். எனவே இயற்கையை வணங்குகிறார்கள். அவன் தேனுடன் உப்பு வைத்தது பற்றி யோசிக்க, எனக்கு ஒன்று புரிந்தது. அம் மக்களை நண்பர்களாக எண்ணுவர்கள் பாலும் தேனும் கலந்து சாப்பிட வேண்டும், இல்லை எதிரியாக நினைத்தால் உப்பைக் கலப்பார்கள் என்று.
நம் தமிழர்பண்பாடு எல்லாரையும் அரவணைப்பது, அன்பு செலுத்துவது அன்றோ. நான் கொடுத்த பாலைக் குடித்து விட்டு, என்னை ஆரத் தழுவிக் கொண்டான். அன்று அங்கு என்னை தங்கச் சொல்லவே, நானும் சம்மத்தித்தேன். உங்களுக்கு இச் செய்தியை கொடுக்காவிடில் நீங்கள் துயரம் அடைவீர்கள் என மடலை அனுப்பி உள்ளேன். நான் நாளை காலை வரும் வேளை தாங்கள் பாலும் தேனுமே தந்து இத் தலைவனை வரவேற்பீர்களாக.
இங்கு உள்ள மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள். நம்மைப் போல் ஆடைகள் உடுத்துவதில்லை. நல்ல ப்லசாலிகள். இங்குள்ள மூலிகைகளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். நாகப் பாம்பின் விஷத்தை முறிக்கும் மூலிகை இங்கு உள்ளது. நாங்கள் பால் அருந்தும் போது ஒரு கீரீயும் பாம்பும் சண்டை போட்டு, பாம்ப் இறந்து விட்டது. கீரீயின் உடலை பல முறை பாம்பு தீண்டி இருக்க அது அருகில் இருந்த ஒரு செடியில் புரண்டு புரண்டு எழுந்து மறு கணம் ஓடி விட்டது. இதைதவிர இவர்களின் வீடுகளில் பல வண்ண ஓவியங்களைக் கண்டு அந்த வர்ணத்திலேதான் இம் மடலை எழுதியுள்ளேன்.
இம் மக்களை நாம் அன்புடன் அரவணைத்து நல் வாழ்வை அமத்துக் கொடுத்தா நம் நாட்டு எல்லையும் விரியும். இவர்களும் எல்லையைக் காப்பாற்றுவார்கள். யுத்தம் புரிந்து பல ஆயிரம் மக்களைப் பலியாக்கி அந்த சவங்களின் மேல் சாம்ராஜ்ஜியம் எழுப்புவதை நான் விரும்பவில்லை அன்பு செலுத்தி, ஏழை எளியவர்களுக்கு, கல்வி, கலாச்சாரம் புகட்டுவோம்..
அகநானூறூ தொகுப்பித்த உக்கிர பெருவழுதி குறிஞ்சி விருதம் பாடுவதில் வல்லவர். அவர் வழி வந்தவன் நான். புறநானூறூம் பெருமையாக கூறும் வரிகள் முன்னூர்த்தே தன் புறம்பு நன்னாடு என்று…. இதை பறை சாற்றும் வழியில் நாம் இக் குறிஞ்சி வாழ் மக்களை நம் பாண்டிய நாட்டுடன் இணைப்போம்
நாளை இம் மலை நாட்டுத் தலைவனுடன் வருகை புரிகிறேன்.
இங்கனம்
தங்கள் பொற்பாதங்களைத் தொழும் பொன் மாறன்
(அனுப்புனர்….நந்திதா)
-
அன்புள்ள தோழி மணிமொழி
அமீர்
தோழி மணிமொழி….
உனக்கு அன்போடு
நான் எழுதிய கடிதங்கள் போலில்லாமல்
இது
மன ஆற்றாமையில்
எழுதுகிறேன் கவிதையோடுஊர் கூடி தேரிழுப்பது எங்கும் நடக்கும்
கூடிய ஊரை
தேர் இழுத்தது
என் ஊரில் மட்டுமே நடக்கும்
அதை செய்தது ஒரு வெள்ளாவிக்கூட்டம்
இது
இ.பி.கோ அஞ்சும்
மாபியா கூட்டம்குட்டையை குழப்பி
கொள்ளை அடிக்கும் வித்தையை
விரல் நுனியில் வைத்திருக்கும்
சத்தத்தை எழுப்பி
சட்டத்தை அடக்கி
நம் தலைமேல் நிற்கும்இப்படி
ஊருக்கு ஒன்பது கூட்டம்
பேருக்கு வெள்ளையும் சொள்ளையும்
அதற்கு பெயர் கட்ட பஞ்சாயத்து
இந்த அரக்க விதை
யார் போட்டு முளைத்தது?ஆண்டவனை விலக்கி
ஆள்பவனை உச்சரித்து
ஒரு
அராஜகம் ராஜாங்கம் செய்ய தீர்ப்பு தரும்
இந்த திருவாளர் நாட்டாமை கூட்டம்
இது
கரம்பைக்காட்டின்
கள்ள நரியே தோற்றுப்போகும் தந்திரக்கூட்டம்உயிர் இல்லா ஒன்றுக்காக
உயிர் எடுக்கும்
உயிர் உள்ள ஒன்றை
மயிர் என்றே மதிக்கும்சீறும் சிங்கத்திற்கு
சோப்பு போடும்
சிலுப்பும் பிடறியில்
சீப்பு போட்டு பூவும் சூட்டும்சாக்கடையை நிற்கவைத்து
பூக்கடை என்றே சொல்லும்
மறுப்பவரின் மூக்குடைத்து
பணக்கத்தை கறக்கும்படமெடுக்கும் பாம்புக்கு
சலாம் போடும்
நல்ல புடம் போட்ட மனிதருக்கு
சமாதி கட்டும்நம் முயலாமையை விரட்ட
நமக்கே
முயல் ஆமை கதை சொல்லும்
இக் கூட்டத்திடம் சிக்கும்
எந்த தளபதியின் தலையும் தலை பாதியாகும்.மந்திரியும் தந்திரியாகி
காவலரும் கள்ளராகும்
பாவிப்பய ராஜ்ஜியத்தில்
கைக்கூலி வாங்கிக்கொண்டு
துலாக்கோல் பூஜ்ஜியமாக்கும்
இந்த
தத்தாரி கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லைதேளடைந்த வீட்டுக்குள்
என்னை பூட்டும்
இந்த சாவியில்லா பூட்டுக்களை திறக்க
அஃ றினை உயிரினை
தேடாமல்
துணிச்சலெனும் எறிகணை கொண்டு உடைத்திடவா
மிரட்சியும் மிரண்டலையும்
தூக்கியெறிந்து
முறுக்கிய தெம்போடு மிரட்டலை மிதித்திடவாஅனிச்ச மலராயில்லாமல்
அக்னி உடுத்திடவா
வருத்தம் கொண்டு உடையாமல்
விரட்டும் வேடனாகிவிடவா
கண்ணீரை கொட்டாமல்
கொதிக்கும் வெந்நீராய் மாறிடவா
உருகும் மெழுகாயில்லாமல்
உருக்கும் தீயாய் மாறிடவாசொல் மணிமொழி
சொல்.
-அமீர்-



