Blog

  • தம்மையே இழந்திடுவார் !

    எம்.ஜெயராமசர்மாimages

    போதை தலைக்கேறி
    புத்தி  தடுமாறி
    பாதைதனை மறந்து
    பரிதவிக்கும் வேளையிலே

    காதும் அடைத்துவிடும்
    கண்களுமே கட்டிவிடும்
    பேதலித்த மனத்தோடு
    பெருமரமாய் வீழ்ந்திடுவர்

    வேர்த்து விறுவிறுக்க
    வெயிலெல்லாம் திரிந்தலைந்து
    பார்த்து உழைத்தபணம்
    பாதியிலிலே போய்விடுமே

    சோற்றுக்குக் காத்திருப்போர்
    சுகமின்றி படுத்திருப்போர்
    வீட்டிலே காத்திருக்க
    வீதியிலே குடித்துநிற்பார்

    நடுவீதி நாயகராய்
    நாளுமே நிற்பார்கள்
    தெருநாய்கள் கண்டுவிடின்
    தீராத கோபம்கோள்ளும்

    வெறிதலையில் ஏறிவிடின்
    நெறியெல்லாம் கெட்டுவிடும்
    தறிகெட்டுப் போயிடுவார்
    தம்மையே இழந்திடுவார்

    குடிபோதை வந்துவிடின்
    குணமெல்லாம் கெட்டுவிடும்
    மனைகூட அவனுக்கு
    மாறாகத் தெரிந்துவிடும்

    வாய்மையும் ஓடிவிடும்
    வல்லமையும் ஒழிந்துவிடும்
    பெய்கொண்ட மனமங்கே
    பேருருவம் கொண்டுவிடும்

    சிவமாக இருந்தவனோ
    சவமாகப் போயிடுவான்
    உவமானம் சொல்வதென்றால்
    உயிரற்ற பிணம்தானே

    மதியிழந்து கதியிழந்து
    மானமும் இழந்துநிற்கும்
    குடிபோதை நம்வாழ்வில்
    கெடுதியே தந்துவிடும்

    நாகரிகம் என்றெண்ணி
    நன்றாக குடித்திடுவார்
    நாட்டிலே உள்ளவரை
    நாகரிகம் என்னாகும்

    ஆதலால் குடிவிடுவோம்
    அனைவர்க்கும் வாழ்வுவரும்
    பேதலிக்கும் மனக்குரங்கை
    பிய்த்தெறிவோம் வாருங்கள் !

    http://fineartamerica.com/art/all/wine+bottle/canvas+prints

    Share
  • அன்புள்ள மணி மொழிக்கு

    டி.விப்ரநாராயணன்

    24-3-2014

    அன்புள்ள சகோதரி மணி மொழிக்கு

    நலம் உன் நலத்தை அறிய ஆவலாயுள்ளேன், சென்ற  கடிதத்தில் நலம் பற்றிக் குறிப்பிடாமல் கடிதத்தைத் தொடங்கிவிட்டாய். எப்படியிருக்கிறார்கள் சரவணனும் அருணாவும். பேரன் இளங்கோ நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறானா? உன் கணவர் மஸ்கட்டிலிருந்து வந்து விட்டாரா? இங்கு செந்தில் கனடா போயிருக்கிறான். அதனால் குழந்தையுடன் லக்ஷ்மி அவள் தாய் வீட்டிற்குச் சென்று இருக்கிறாள். அம்மாவிற்கு இரத்த அழுத்தம் அதிகமாகத்தான் இருக்கிறது. அப்பா நலமாக இருக்கிறார்.

    சென்ற கடிதத்தில் தாய்மையைப் பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தாய். நன்றாக இருந்தது. நானும் நம் நாடு “அன்றும் இன்றும்” என்ற தலைப்பில்  ஒரு கவிதை எழுதினேன். என் நண்பர் பாலாவிடம் காண்பித்தேன். நன்றாக இருக்கிறது என்று சொன்னார். கீழே அந்தக் கவிதையை தந்திருக்கிறேன். படித்துப் பார். உன் கருத்தைத் தெரிவி. உன் வீட்டு வேலைகளின் நடுவில் கவிதை, கட்டுரை என்று எழுதுகிறாய். உன்னைப் பாராட்டத்தான் வேண்டும். அம்மாவும் அப்பாவும் உன்னைப் பார்க்க அடுத்தமாதம் வரலாம் என்று நினைக்கிறார்கள். உன் கருத்தைத் தெரிவி.

    இப்படிக்கு

    உன் பிரியமுள்ள அண்ணன்

    தமிழ்ச் செல்வன்

    நம்நாடு அன்றும் இன்றும்

    பாரத நாடு பழம்பெரும் நாடு

    பாரினிலே அது சிறந்த நாடு

    ஏரெடுத்து வாழும் மக்கள்

    பேரெடுத்த  அருமை நாடு,

    வேதங்கள் தோன்றிய நாடு – மன

    வேதனைகள் நிறைந்த நாடு – பல

    சோதனைகள் கண்ட நாடு – பல

    சாதனைகள் படைத்த நாடு.

    ஆலைகள் அமைந்த நாடு — கல்விச்

    சாலைகள் உள்ள  நாடு – அழகுச்

    சோலைகள் மல்கிய  நாடு – மனச்

    சோலைகள்  இல்லா நாடு.

    மக்கள் அதிகம் உள்ள நாடு

    ஏக்கங்கள் நிறைந்த நாடு

    ஊக்கங்கள்  குறைந்த நாடு – அதனால்

    தாக்கங்கள் விளைந்த நாடு

    சிற்பத்திற்குச் சிறந்த நாடு

    வெற்பால் சூழ்ந்த நாடு

    கற்பிற்கோர்  சிறந்த நாடு— ஆனால் பலர்

    கற்பைச் சூறையாடிய நாடு.

    மதங்கள் பல கண்ட நாடு

    மதச் சண்டைகளும் காணும் நாடு

    சாதிகள்  ஆயிரம் உள்ள நாடு

    சாதிச் சண்டையும் மலிந்த நாடு

    புனிதர்கள் தோன்றிய நாடு – பல

    முனிவர்கள் வாழ்ந்த நாடு

    மனிதத் தன்மை குறைந்த நாடு—அதனால்

    புனிதத்  தன்மையும் குறைந்த நாடு

    புண்ணியத் தலங்கள் உள்ள நாடு —  ஆனால்

    புண்ணியம் இல்லாத நாடு

    பெண்ணியம் குலைந்த நாடு—மனத்

    திண்ணியம் இல்லாத நாடு

    விழாக்கள் கொண்டாடும் நாடு – அதன்

    விளைவையும் சந்திக்கும் நாடு

    விளைநிலங்கள் அதிகம் உள்ள நாடு – அவற்றை

    விளையாத நிலமாக மாற்றிய நாடு.

    ஆன்றோர்கள் பிறந்த நாடு

    சான்றோர்கள் வாழ்ந்த நாடு – நாட்டை

    வென்றோர்கள்  இருந்த நாடு—ஆனால்  மனத்தை

    வென்றோர்கள் இல்லாத நாடு.

    நாட்டுப் பற்றை வளர்த்த நாடு

    வீட்டுப் பற்றை ஒழித்த நாடு—இன்றோ

    நாட்டுப் பற்று குறைந்த நாடு – தன்

    வீட்டுப் பற்றை வளர்க்கும் நாடு

    ஏற்றங்கள் நிறைந்த நாடு

    குற்றங்கள் மலிந்த நாடு – கட்சிச்

    சீற்றங்கள் காணும் நாடு—ஆனால் பல

    மாற்றங்கள் கொணர்ந்த  நாடு

    உண்மைக்குப் பெயர் பெற்ற நாடு

    உண்மையைப் பெயர்த்தெடுத்த நாடு

    வண்மைக்குச் சிறந்த  நாடு — ஆனால்

    வன்மைக்கும் உள்ளாகும் நாடு

    ஆட்சிகள் பல கண்ட நாடு

    கட்சிகளும் பல கண்ட நாடு– மாட்சிமிக்க

    ஆட்சி யில்லாத நாடு – மனச்

    சாட்சி யில்லா நாடு

    உழவர்கள் நிறைந்த நாடு

    ஊழல்கள்  மலிந்த நாடு

    உழைப்பாளிகளை மதிக்காத நாடு

    உழைப்பையும் மதிக்காத நாடு

    Share
  • வாழ்க்கை நலம் – 53

    குன்றக்குடி அடிகள்

    53. சிறப்பு செய்தொழிலாலல்ல!

    இன்று “மானுடம்” உலகமகா உலகளாவிய நிலையில் வளர்ந்து வந்திருக்கிறது; வளர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் வளரும். இன்று மனிதம், குடும்பம். சமூகம், சமுதாயம் ஆகிய பரிணாம வளர்ச்சியின் எல்லைகலைக் கடந்து மானுடம் “ஓருலகம்” என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

    ஆதிகாலத்தில் மனிதக் கூட்டம்தான் இருந்தது; இந்த மனிதக் கூட்டம்தான் காலப்போக்கில் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்களாக வளர்ந்தது. ஏன்? சார்ந்து வாழும் பண்புகள் வளர்ந்தன. ஒருவருக்கொருவர் தேவைப்பட்டவர்களாக, ஒருவரையின்றி மற்றொருவர் இல்லை என்கிற அளவுக்கு வாழ்நிலை அமைந்தது. இந்த நிலையில்தான் சமூக அமைப்பு வடிவம் பெறுகிறது.

    மக்களிடையில் ஏற்பட்ட பல்வேறு வகைத் தொடர்புகளால் சமூக அமைப்பு தோன்றுகிறது. சமூகம் இயற்கையாகப் பரிணாம வளர்ச்சியில் தோன்றுவது. தனி மனிதர்களே சமூகத்தைத் தோற்றுவிக்க முடியாது. ஆனால் சமூக அமைப்பினால் உரிமைகளையும் பாதுகாப்பையும் பெறுபவர்கள் சமூகத்தை ஆதரித்துப் பாதுகாக்கின்றார்கள்.

    இங்கனம் இருந்த சமூக அமைப்பில் வகுப்பு, சாதி, குடும்பம் ஆகியன எதுவும் தொடக்கத்தில் இல்லை. காலப்போக்கில் விவசாயத் தொழில் தோன்றிய நிலையில் சமூகம் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவு நிலச் சொந்தக்காரர்கள், மற்றொரு பிரிவு நிலத்தில் விவசாயம் செய்யும் தொழிலாளிகள். இதனால் பண்ணையாட்கள் – அடிமை முறை தோன்றியது.
    இந்தக் காலக் கட்டத்தில்தான் ஒருவர் அல்லது சிலர் பிறிதொருவருக்காகக் கூலி அடிப்படையில் வாழ்தல் என்னும் நடைமுறைத் தோன்றியது. இந்த நடைமுறை தோன்றி, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வேளாண்மை அடிப்படையிலான பல தொழில்கள் தோன்றின. அதே போழ்து வாழ்நிலையினால் ஏற்பட்ட மாற்றங்கள் வளர்ச்சியின் காரணமாகவும் பல தொழில்கள் தோன்றின.

    தொழில்கள் தோற்றத்தின் அடிப்படையில் வகுப்புக்கள் தோன்றின. வகுப்புக்கள் தோன்றிய நிலையில் வகுப்புக்களுக்கிடையில், செய்யும் தொழில் அடிப்படையில் தகுதி, அந்தஸ்து, பெருமை முதலியன தோன்றின.

    இங்ஙனம் தொழில்கள், வகுப்புக்கள் அடிப்படையில் பெருமை சிறுமைகள் தோன்றிய நிலையை, திருக்குறள் அறுதியிட்டு எடுத்துக்காட்டுகிறது. எடுத்துக்காட்டுவதுடன் மட்டுமல்ல, மாந்தருள் பெருமை கோரிப் பெறும் உரிமையையும் மறுக்கிறது.

    மாந்தர் எவரும் பிறப்பில் தொழில் செய்பவராகவோ, பெருமைக்குரியவராகவோ பிறப்பதில்லை. பிறப்பிலேயே உயர்வுடையவர்கள் என்பது புகழ்ச்சியேயாம். அறிவியல் சார்ந்த உண்மையல்ல. பிறப்பில் அனைவரும் ஒன்றும் அறியா குழந்தைகளே என்பதை அக்பர் சோதனையின் மூலம் நிரூபணம் செயத வரலாற்றை ஓர்க. அதனால் தானே ததீசி முனிவரின் பத்தினி மும்மூர்த்திகளையும் குழந்தைகள் ஆக்கினார் போலும்.

    பிறப்பில் அனைவரும் சமம். மொழி இல்லை. மதம் இல்லை. உடைமை இல்லை, தொழில் இல்லை. பெருமை இல்லை. சிறுமை இல்லை. வளர்ச்சியின் காரணமாகச் சில பெறலாம். ஆயினும் மானிடத்தின் அடிநிலைக் கொள்கையான சமம், சமத்துவம் ஆகியனவற்றை இழந்து விடக் கூடாது.

    சமூகத்தின் இயக்கத்துக்குப் பல தொழில்கள் தேவை. தொழில்கள் சில உயர்வான அறிவு சார்ந்த உழைப்பாக இருக்கலாம். பல உடல் சார்ந்த உழைப்பாகவும் இருக்கலாம். ஆயினும், தொழிலின்கண் உள்ள வேறுபாடுகள் தொழிலை செய்பவர்களிடம் வந்துவிடக்கூடாது. வந்தால் சமூக மோதல்கள் ஏற்படக்கூடும் என்ற சமூகவியல் அறிவியலை

    “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” (திருக்குறள் – 972) என்ற திருக்குறள் வாயிலாகத் திருவள்ளுவர் உணர்த்துகின்றார்.

    பிறப்பின் அடிப்படையில் தொழில் இல்லை. தொழிலால் ஏற்படும் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை; பெருமையும் இல்லை; சிறுமையும் இல்லை. பிறப்பின் அடிப்படையில் உள்ள சமம், சமத்துவம் சமூகத்தின் அடிநிலைக் கொள்கையாக விளங்க வேண்டும். வாய்ப்புக்கள் காரணமாக அமையும் தொழிலின் காரணமாக எந்த ஒரு சிறப்பு உரிமையையும் தகுதியையும் சமூகத்தில் பெறக்கூடாது; அடையக்கூடாது. கோயில் சிலையைப் பூசிப்பவனும் சந்தி பெருக்குபவனும் செய்யும் தொழிலால் வேறுபடலாம். அதனால் கோயிற்பூசை செய்வோர் உயர் நிலையினராகவும், சந்தி பெருக்குவோர் இழி நிலையினராகவும் சமூகத்தில் ஆகக்கூடாது.

    சமூகத்தில் எந்த இரு பிரிவினரும் ஒத்த சமூகத் தகுதி உறவுகள் பெறுவதே சமூக நீதி அப்படி இருந்தால்தான் சமூகத்திற்கு தேவையான பல்வேறு தொழில்களையும் சிய முன் வருவர். அதனால் செய்யும் தொழில் காரணமாகச் சிறப்புரிமைகள் கோரி பெறுவதை – அடைவதை “சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்று மறுக்கிறது திருக்குறள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிக்கல்கள் வராத சமூக அமைப்புக்கு, திருக்குறள் வழி காட்டியுள்ளது.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    டி.விப்ரநாராயணன்

    24-03-2014

    அன்புள்ள மகள் மணிமொழிக்கு

    நீ எப்படி இருக்கிறாய்? பேரன் அருண் நன்றாக படிக்கிறானா? மாப்பிள்ளைக்கு ப்ரொமோஷன் கிடைக்கப் போகிறது என்று சென்ற கடிதத்தில் எழுதியிருந்தாய். கிடைத்துவிட்டதா? மாமனார் மாமியார் எப்படியிருக்கிறார்கள்?

    எதிர் வீட்டுப் பெண் தனக்குப்பார்த்த மாப்பிள்ளையை நிச்சயதார்த்தம் நடந்த பத்து நாட்களுக்குப்பின்  மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டாளாம் என்று எழுதியிருந்தாய்..  மற்றொரு பெண் மாமனார் மாமியார் இல்லாத வீட்டில்தான் தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்கிறாள் என்றும் குறிப்பிட்டிருந்தாய். மேலும் மிகவும் கவலைப் பட்டு எழுதியிருந்தாய்.. நீ சொல்வது உண்மைதான். இப்பொழுது பையனுக்கோ பெண்ணுக்கோ திருமணம் நடக்கும் வரைக்கும் பயமாக இருக்கிறது என்று பெற்றொர்கள் சொல்கிறார்கள். திருமணம் ஆனபின்பும் கவலைதான். முன்காலத்தில் மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை என்று கேள்விப்பட்டோம். இன்றோ மருமகள் கொடுமை என்று கேள்விப்படுகிறோம்.

    ஒரு நண்பர் ஒரு செய்தி சொன்னார்.நிச்சயமான பின்பு. பெண்ணும் பிள்ளையும் வெளியில் சென்றிருக்கிறார்கள். அப்பொழுது அவள் இளநீர் கேட்டிருக்கிறாள். அவனும் இளநீர் விற்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறான் இளநீர் விற்பவரிடம் இளநீர் ஒன்றின் விலை என்ன என்று கேட்டிருக்கிறான். அவன் 25 ரூபாய் என்றிருக்கிறான். உடனே அந்தப் பையன் 20 ரூபாய் வைத்துக் கொள் என்று பேரம் பேசியிருக்கிறான். உடனே அந்தப் பெண் பேரம் பேசும் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து நடந்ததைக் கூறிவிட்டு திருமணத்தை நிறுத்தி விட்டாளாம் அந்தப் பெண். மற்றொரு செய்தி. ஒரு பையன் பெண்ணைப் பார்த்துவிட்டு பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டு திருமணம் ஆனபின்பு பெண்ணின் பெற்றொர்கள் தங்கள் பெண்ணைப் பார்க்க வரக் கூடாது என்றானாம். இவ்வாறு பல கதைகள் என் செவியில் விழுந்தன.

    நீ ஏன் இவ்வாறு நடக்கிறது ? இதற்குக் காரணம் என்ன என்று கேட்டிருந்தாய்?

    குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றொர்கள் தவறு செய்து விடுகிறார்கள். அவர்களின் எதிர்காலம் பற்றி ஒரு அச்சத்தை தோற்றுவித்தே குழந்தைகளை வளர்க்கிறார்கள். வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுக்க வில்லை. சுதந்திரம் என்ற சொல்லின் பொருளைத் தவறாகத் தெரிந்துகொண்டு தங்கள் வாழ்வை அழித்துக் கொள்கின்றனர். .உன்னைத் திருமணம் செய்து கொடுத்தபோது இப்படியெல்லாம யோசித்தோமா.. மாப்பிள்ளயின் சம்பளம் ரூபாய் 200000 தான். அவர்கள் பெற்றொர்கள் உன்னுடன் தான் இருக்கிறார்கள்.. உனக்கு என்ன கஷ்டம் வந்து விட்டது. இப்பொழுது மாப்பிள்ளை நல்ல சம்பளம் வாஙுகுகிறார்.. வரவுக்கு ஏற்ற செலவு செய்து வாழ்க்கையை நன்றாகவும் சந்தோஷமாகவும் நடத்துகிறீர்கள்.

    வாழ்க்கையைக் கண்டு அச்சப்படக் கூடாது, 2020 பற்றி 2014-ல் சிந்தித்து வாழ்க்கையைத் தொலைப்பவர்கள் அனேகர். இக்காலப் பையன்களும் பெண்களும் – குறிப்பாக கணிணித் துறையில் பணிபுரிபவர்கள்—அதிக எதிர்பார்ப்பிலும் கற்பனையிலும் கருத்தைச் செலுத்தி நிகழ்காலத்தை இழந்து விடுகிறார்கள்.  பெண் பார்க்கும்போது  ஒரு பெண்  பையனிடம்,” தனக்குப் பிறக்கும் குழந்தை இண்டர் நேஷனல் பள்ளியில் படிக்கணும். அதற்கு நீங்கள் இப்பொழுது ஒப்புதல் தரவேண்டும் “ என்றாளாம்.இதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது..நம் வாழ்க்கை இவ்வுலகில் நிரந்தரமல்ல. மரணம் எப்பொழுது. நிகழும் என்பது நமக்குத் தெரியாது.இலக்கு இருக்கவேண்டும். ஆசைகள் இருக்க வேண்டியதுதான் . ஆனால் ஆசையையும் தேவையயும் அதிகரித்துக் கொண்டே சென்றால் அழிவைத் தேடித்தான் செல்ல வேண்டியிருக்கும்.

    நான் உனக்கு power of now என்ற நூலைப் பற்றிக் கூறியிருக்கிறேன், நம் கையில்  இருப்பது இந்தக் கணம். நடந்ததைப் பற்றி சிந்திiப்பதோ வருங்காலத்தைப் பற்றி எண்ணிக் கற்பனை காண்பதோ வீணான செயல் என்று அந்த நூல் கூறுகிறது.

    நாம் யாரும் இவ்வுலகில் தனித்து வாழ முடியாது. பிறரைச் சார்ந்து வாழத்தான் வேண்டும்.. எல்லொரும் சேர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். மேலை நாட்டின் தாக்கத்தால் உறவுகள் வேண்டாம் என்று பலர் எண்ணுகிறார்கள்…அது தவறு.  நான் என் நண்பர் வீட்டிற்குப் போயிருந்தேன். அங்கே அவர்களது பேரன் பேத்திகளைப் பார்த்தேன். அவர்கள் அமெரிக்காவில்  படிக்கிறார்கள்.. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு பெரியவர் வந்தார். அவரை அந்தக் குழந்தைகளுக்கு “இவர் உங்கள் தாத்தா: என்று அறிமுகப் படுத்தினார்கள். அதற்கு அந்தக் குழந்தைகள் ”so whaat”  என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டனர். அதனால் மேலை நாட்டு மோகம் பணத்திற்கு மரியாதை தருகிறது. மனித நேயத்திற்கு மதிப்புத் தருவது இல்லை.

    இந்தக் காலத்து இளம் சிட்டுகள் ஒரு குழப்பத்திலும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலும் சிந்தனைகளை ஓடவிட்டுக் கொண்டிருப்பதால் அவர்கள் சிந்தனையில் தெளிவு இல்லை. ஆகவே பெற்றொர்கள் தான் அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும்.

    சரி. நீ ஒருகதை எழுதப் போகிறேன் என்று எழுதியிருந்தாயே. எழுதத் தொடங்கி விட்டாயா? வினோபா எழுதிய கீதைப் பேருரைகளைப் படித்து முடித்து விட்டாயா? எப்பொழுதும் நிறைவான மனதுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

    குழந்தைகளுக்கு என் அன்பைச் சொல்.

    இப்படிக்கு

    உன்பிரியமுள்ள அப்பா

    Share
  • தமிழுக்கும் அமுதென்று பேர்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    தமிழுக்கு அமுதென்று பேர் – பாரதிதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி.. பி.சுசீலா – கே.ஆர்.விஜயா

    நம் தாய்மொழி தமிழின் அழகை, இனிமையை,பெருமையை இதைவிட வேறெந்தக் கவிதையிலும்ஒருசேர உயர்த்திச் சொன்னவரில்லை என்னும் பெருமையைத் தட்டிச் செல்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

    குறிப்பாக பஞ்சவர்ணக்கிளி திரைப்படத்தில்பயன்படுத்தப்பட்ட பாரதிதாசன் கவிதையிது! கதையின்நாயகி வாயிலாகக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் -தமிழை நேசிக்கின்ற நெஞ்சம் தனக்கு எவ்வளவு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

    பாடும் குயிலாய் தமிழ்த்திரையிசையில் பவனிவரும் பி.சுசீலா அமுதையே பொழிந்து தந்திருக்கிறார். அழகிய குழந்தைக்கு மேலும் அழகு சேர்க்க ஆபரணங்கள் அணிவிக்கும் அன்னையைப் போல் தாயுமானவர்கள் இருவர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி..

    பொங்கும் கடலென பூரித்து எழுகின்ற சங்கத்தமிழ் முரசமன்றோ.. பாவேந்தர்! தங்குதடையில்லா தமிழினை.. தமிழ் உணர்வினை.. தமிழ் மரபினை.. வருகின்ற தலைமுறைகளுக்கு உரமேற்றி வைத்த கவிதையிது!

    சொற்கள் எல்லாம் அவரிடம் ஏவல்செய்ய அணிவகுத்துநிற்க.. தமிழே கடலாகி.. அவர்தந்த முத்துக்கள்தான்அவர்தம் படைப்புகள் என்பதில் வியப்பென்ன?

    தமிழை நேசிப்பதும், சுவாசிப்பதும், வாசிப்பதும்இவர்தம் வழியென்றாக..அதன் புகழை எடுத்தியம்பச்சொன்னால்.. தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்என்றும்..அறிவுக்குத் தேன் என்றும்.. கவிதைக்கு வயிரத்தின்வாள் என்றும்.. உயிருக்கு நிகர் என்கிறார்..

    பாவேந்தரைப்போல் ஒரு கவிஞரை தமிழ் உலகம் காணாதிருந்தால் எழுச்சியும், இன உணர்வும், மொழிப்பற்றும் இன்றைக்கு உள்ள அளவு இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி! புரட்சிக்கவிஞன் என்றால் புதுவைதந்த பாரதிதாசன் என்பதற்கு இப்பாடலே முரசறையும்!

    தமிழுக்கு அமுதென்று பேர் பாடல் வரிகள்

    தமிழுக்கு அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்.
    தமிழுக்கு நிலவென்று பேர்
    இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நிர்
    தமிழுக்கு மணமென்று பேர்
    இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த உர்
    தமிழுக்கு மதுவென்று பேர்
    இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம்பயிருக்கு வேர்
    பயிருக்கு வேர் .

    தமிழ் எங்கள் இளமைக்கு பால்
    ஆஆஆஆஆஆஆஆஆ
    தமிழ் எங்கள் இளமைக்கு பால்
    இன்பத்தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்
    புலவர்க்கு வேல்
    தமிழ் எங்கள் உயர்வுக்கு வாண்
    இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்
    சுடர் தந்த தேன்

    தமிழ் எங்கள் அறிவுக்கு தோல்
    இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாழ்
    வயிரத்தின் வாழ்
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    Share
  • பரம்பொருள் பாமாலை-6

    தண்டுவட மாகிநீ எனைநிற்க வைத்தாய்,

    உண்டஉண வாகவே உதிரத்தில் சேர்ந்தாய்,

    வண்டுதொட வாடிடும் அணிச்சத்தைப் போலவே,

    கண்டுமுனைக் காணாமல் நான்வாடி னேனே!                                                              33

     

    பத்துவடி வெடுத்து நின்ற மாலுக்கும்,

    பத்துசிர மெடுத்த இலங்கைக் கோனுக்கும்,

    சித்துவடி வாகிமுழு முக்தியடைந் தோருக்கும்,

    பித்துவடி வானமுது பரமனே துணை!                                                               34

     

    கரிமுகனும் கந்தனும் இருபுறமும் இருக்க,

    திரிபுறம் எரித்தவன் உடலோடு இணைந்து,

    பரிமளம் மணக்கும் பார்வதியும் இருக்க,

    விரிமனம் கொண்டிந்த காட்சியைக் காண்போம்!                                                           35

     

    வினோதத் தாண்டவனே, வெண்ணிலவைப் பூண்டவனே,

    விவாதப் பொருளாக என்மனதில் நீண்டவனே,

    விகாரமனம் நீக்கும் வேலவனின் ஆண்டவனே,

    விதானமாகி நின்று காக்கும் கூத்தனே!                                                                            36

     

    இரவும் பகலும் நீங்கா துலகில்,

    அரவம் பூண்டு ஆடும் நாதனின்,

    பரவும் கருணைப் பேரொளி தன்னில்,

    குரவர் போல அனைவரும் நனைவோம்!                                                                      37

     

    பச்சை யப்பனாய், பசுப தீசனாய்,

    அம்மை யப்பனாய், தில்லை நாதனாய்,

    புற்றிடங் கொண்ட புனித ஈசனாய்,

    பக்தனைக் காக்க அத்தன் வருகிறான்!                                       38

     

    கோபியரோ டாடியவன், பாண்டவர்கள் நாடியவன்,

    ஆநிரைகள் அசைந்தாட அழகுகுழல் ஊதியவன்,

    தீபமெனும் சீதையினைத் துயரமுடன் தேடியவன்,

    பாடியதும் நாடியதும் பெருமைமிகு ஈசனையே!                                                            39

     

    அரசமர இலைகள் அசைந்தாடும் இன்னிசையில்,

    அருவிநீர் சலசலத்து அசைந்தோடும் தண்ணிசையில்,

    அடர்கறுங் குயிலிசைக்கும் அழகான பண்ணிசையில்,

    அமர்ந்திசைத் திடுவான் அம்மை யப்பன்!                                                                          40

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – ​2​6

     

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -2​6​

    ​நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

     

    unnamed (1)

    unnamed (2)

    தகவல் :
    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

     

    Share
  • சாவிற்கு முன்

    செந்தில்குமார் old-images

    சாவிற்கு முன் தெரியும் முகக்களையை தரிசித்திருக்கீற்களா?
    அப்போது தெரியும்  வாழ்வின் மகத்துவம்.
    சாகும் முகத்தின் புன்சிரிப்பை பார்த்திருக்கிறீர்களா?
    அப்போது தெரியும் அன்பின் ஆழம்.
    சாகும் நொடியில் அந்த முகத்தில் தெரியும் புரிதலை கவனித்திருக்கிறீர்களா?
    அப்போது தெரியும் அறிவின் பிதற்றல்.
    சாவை உணர்ந்துகொண்ட சந்தோஷத்தை  அனுபவித்திருக்கீற்களா?
    அப்போது புரியலாம்…..வாழ்க்கை.

    சாவை புரிந்து கொண்டதுபோல் தாத்தா முகம் இருந்தாலும்
    “இன்னும் கொஞ்சம் வாழ்விருக்காதா?” என்று
    தொக்கி நிற்கும் கேள்வி
    என்னை   புலப்படுத்தியதற்கு
    நன்றி.

    http://www.photographersdirect.com/buyers/stockphoto.asp?imageid=1131251

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

     

    நந்திதா

     

    இங்கு மணிமொழி என்பவர் ஒரு பெண் காவல் அதிகாரி. திருவிழாக்காலம். தீவிர வாதிகளால் கடத்தப் பட்ட ஒருவர் காவல் அதிகாரிக்கு கடிதம் அனுப்புகிறார். இதோ அக் கடிதம்.
    ஊர்திரை வேலை உலாவும் உயிர்மயிலைக்
    கூர் த்ரு வேல் வ்ல்லார் கொற்றங்க் கொள் சேரிதனில்
    கார் த்ரு சோலை கபாலீச் சரம் அமர்ந்தான்
    ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்
    ( தேவாரம்)

    இது பிணை கைதி பாடியவை

    கொற்றைவார் சடையோனை பணியாது போனேனோ
    பற்றற்றவன் பாதம்தனை போற்றாது போனேனோ
    கற்ற திரு வாசகமும் தேன் மொழி தேவாரம் பாடாது
    உற்றவரை விட்டு ஓடியவனை காத்தருள் மணிமொழி அம்மையே

    ஈரண்டு திங்கள் சுமந்தவளுமில்லை எங்கு உளேனென
    இரைந்து உரைப்பினும் ஏரெடுத்து பார்பாரில்லை
    ஈரட்டு நாளாய் ஏங்கியும் எமையறிவாரில்லை இனி
    இறப்பதோ இருப்பதோ உன்னையன்றி யாரரிவார் மணியம்மையே

    ஊரார் அறியாத ஒரிடத்தில் ஊமத்தைப் புதருமுண்டு
    பாழ் நரகக் குழியில் அமிழுமுன்னே அம்பிகையே வாராயோ
    உயிர் உகுக்கும்முன் காப்பியமும் கோப்பியமும் நான் படைப்பேன்
    உலகம்மையே மணிமொழியம்மையே காத்தருள்வாயே

    Share
  • திருமால் திருப்புகழ் (38)

    கிரேசி மோகன்

     Tamil-Daily-News-Paper_10669672490

    தனதனன தான தான தனதனன தான தான
    தனதனன தான தான -தனதான…..

    ——————————————————————————————————————

    “மலையருணை மேவும் ஞான ரமணமுனி கூறும் நானை images (7)
    ஒழிமனவி சார வேகம் -வரவேணும்
    ஒருநினைவி லாத மோன நிலையினில்சு கானு பாவ
    பரபிரும மாக நானும் -அருள்வாயே

    புலனசைவின் மோக தாப ஜலம்வரள காயும் பூமி
    நிலையடைய சாது வாகி -இகவாழ்வில்
    வருவதனை ஏசி டாது பெறுவதனில் கூசி டாது
    வெறுமைதனில் ஏக மாகி -மருளாது

    சலனமதி லாது கோரம் அழகுஅபி மான பேதம்
    அதுயிதுயெ னாது யாவும் -எனதாக
    சமரசசு பாவ மோடு வடஅருணை கோயில் கோபு
    ரஅமணிஅம் மாளின் வாழ்வை -உறவேணும்

    மலைபசிய மாக நீள மரகதவி ரோத மேனி
    அலைகடலில் சேடன் மீது -சொகுசாக
    வனசமகள் பாதம் நீவ வளரும்விழி யோக சீய
    மயிலைநகர் கேச வாதி -பெருமாளே”
    ————————————————————————————————————

     

    படங்களுக்கு நன்றி:

    http://narasimhar.blogspot.in/2009/08/blog-post_13.html

    Share
  • அன்பின் முகவரி

     

     

    எஸ் வி வி 

    unnamed (1)

    அன்பின் முகவரி உறைந்துவிட்டது
    நெல்லை 21 E சுடலை மாடன் தெருவில்

    அந்தத் தொலைபேசி முனையில்
    ஹலோ …என்ற வெள்ளந்திக் குரல்
    ஒலிக்காது இனி
    அழைப்பவர் அடையாளம் பிடிபட்ட மாத்திரத்தில்
    வெடித்துப் புறப்படும் அந்தக்
    குதூகல தோழமைச் சிரிப்பின் பரவசம்
    வாய்க்காது ஒருபோதும் இனி

    நிபந்தனையற்ற வாஞ்சையை
    திணறத் திணறப்
    பொழியும் அருவி தென்படுமோ இனி…

    சுமக்க மாட்டாது அஞ்சல்காரர்
    ஏந்திவரும் கடிதங்கள், புத்தகங்கள்,
    பருவ இதழ்கள் ஏங்கக் கூடும்
    எதிர்பார்த்து வந்த
    ஈரமான இதயத்தைக் காணாது.

    தந்தி சேவை நிறுத்தப்பட்ட ஆபத்து
    வந்து சேரக் கூடும்
    (அவர் அதிகம் எழுதிக் கொண்டிருந்த)
    அஞ்சல் அட்டைகளுக்கும் !
    அடுத்தவரைப் பாராது
    வேகமாகக் கடந்துபோகும்
    அவசர சமகால வெளியில்
    பகிர்ந்து கொள்ளவும் பாராட்டி மகிழவுமான
    ஊக்கமொழியாளரது மறைவு
    உளவியல் துறைக்குமான இழப்பு

    வயது சமாதானம் செய்துவிட
    முடியாத மரணங்களுக்கான
    துயரம் அளவிட முடியாதது

    ஆனாலும்

    செல்விருந்தோம்பி
    வருவிருந்து பார்த்திருக்கும்
    இலக்கியப் பெருந்தேடல் மிக்க
    அவரது கண் பார்வையின் நீட்சி
    காலத்தின் அடுத்தடுத்த பதிப்புகளில்
    உணரப்படவே செய்யும்
    வர்க்க சமரசமற்ற
    கருத்தோட்டத்தை அடைகாக்கும்
    சமத்துவ உலகுக்கான
    வேட்கையை வளர்த்தெடுக்கும்
    மனிதகுல விடுதலைக்கான
    கீதத்தை இசைத்துக் கொண்டுதான் இருக்கும்.

    ************
    நன்றி: தீக்கதிர் (மார்ச் 27, 2014)

    Share
  • திருமால் திருப்புகழ் (37)

     

    கிரேசி மோகன்

    தனன தான தானான தனன தான தானான
    தனன தான தானான -தனதான….

    ——————————————————————–

    காஞ்சி வரதராஜ பெருமாள்….
    —————————————

    pg19

    அதல சேட னாராட ,அலையு லாவு பாலாட,Vardar
    அமுத சோத ரீயாட, -அயனாரும்
    கமலா நாபி மீதாட, விரைய நீல வானோடி
    கருட வாக னாராட, -அதனாலே,

    எதிலும் ராம னேகாண விழிகள் மூடி வாளாக
    அமரும் வாயு சேயோனும் -செவிசாயும்
    இவர்கள் ஆடும் பேரோசை விழசு பாவ வாலாட
    சிறிய பாத னாராட, -கரநாலில்,

    கதையும் வாளும் கூராழி ஒலியும் ஓசை போராழி
    சிலையும் ஆட, மீனாமை -மறையேனம்
    வளரு வாம னார்சீயம் பரசு ராம ஸ்ரீராம
    உழவு ராம கோபால -அவதார

    கதைகள் ஆட, காமாட்சி பெரிய வாளின் ஊரான
    அசலம் ஆனை மீதேறி -வளர்வோனே,
    பெரிய தேவி தாயோடு வருக நீல மாலோல,
    வரத ராஜ தேவாதி -பெருமாளே

    ————————————————————————-

     

    படங்களுக்கு நன்றி :

    http://narasimhar.blogspot.in/2013_06_01_archive.html

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (3)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு ஸ்ரீனிவாசன் அவர்களே,

    உங்கள் மருமகன் மெய்யப்பன் செய்த தவறுகளனைத்தும் தாங்கள் அறியாமலே நடந்துள்ளது. இதனால் பல கோடி பணம் கைமாறியதும் தலைவராகிய தங்களுக்கேத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதன் செயல்பாடுகளும் உங்களுக்குத் தெரியவில்லையென்றால் நீங்கள் எப்படி பி.சி.சி.ஐ. இன் தலைவராகவும், இந்தியா சிமெண்ட்ஸ் குழுமத்தின் தலைவராகவும் இருந்து மிகச் சிறந்த நிர்வாகத்தை உங்களால் எப்படித்தர முடியும்? ஆனால் உச்சநீதி மன்றத்திற்கு இவையனைத்தும் மிகத் தெளிவாகப் புரிந்து உங்களை உடனடியாகப் பதவி விலகும்படிக் கூறியுள்ளார்கள். நீங்கள் பதவி விலகி அந்தப் பொறுப்பிற்குரிய கௌரவத்தையும், அந்த விளையாட்டிற்குரிய பெருந்தன்மையையும் காக்கப் போகிறீர்களா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • அன்பு மகள் மணிமொழிக்கு

    தமிழ் செல்வி

    அன்பு மகள் மணிமொழிக்கு,

    ஆசையுடன் எழுதும் அன்பு மடல் யாதெனில் இங்கு அனைவரும் (பாட்டி, அப்பா, தம்பி மற்றும் தங்கை) நலம் .

    அதுபோல் அங்கு உன் நலமும் உன் தோழியர்களின் நலமும் அறிய ஆவல்.

    உன் கடிதம் கிடைத்தது. அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். சமீபத்தில் நீ எழுதிய கடிதத்தில் நடந்த முதல் இடைத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று வகுப்பில் முதல் மாணவியாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தாய். இது எதைப் போல் இருக்கின்றது தெரியுமா?

    ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்

    என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இக்கடிதத்தை பார்க்கும் வரையிலும் நாங்கள் அனைவரும் உன்னைப் பற்றிய கவலையிலேயே ஆழ்ந்திருந்தோம்; ஏனெனில் தமிழ் வழிக் கல்வி படித்த நீ, எப்படி ஆங்கில வழிக் கல்வியில் படித்து தேர்ச்சியடையப் போகின்றாயோ என்ற கவலை வேறு. இனிமேல் உன் படிப்பைப் பற்றியக் கவலை எங்களுக்கு இல்லை. நீ எடுத்திருக்கும் மதிப்பெண்களிலிருந்து உன்னுடைய கடின உழைப்பும் விடாமுயற்சியும் வெளிப்படுகின்றது. வாழ்த்துகள். உன் பாடம் சம்பந்தமாக எழும் சந்தேகங்களை அவ்வப்போது உன் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள். மேலும் உனக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்.

    ஆசிரியரைப் பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் கூழாங்கல்லை அவர்கள் கையில் கொடுத்தால், அதைக்கூட சிற்பமாக மாற்றும் திறன் கொண்டவர். அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்; உனக்கு அவர்கள் இரண்டாவது பெற்றோர்களாவர். அறியாமை என்னும் இருளை அகற்றுபவர் ஆசி;ரியரே. ஒரு மனிதனுக்குக் கல்வியையும் ஒழுக்கத்தையும் ஒருசேர போதிப்பது ஆசிரியர் ஒருவர்தான. ஒரு மாணவனுக்கு நல் ஆசிரியர் கிடைப்பது என்பது பூர்வஜென்ம பந்தம் என்பேன். அவர்கள் மனம் வருந்தும்படி எந்தச் செயலையும் செய்யாதே.

    அன்றைய காலத்தில் மாணாக்கர்களின் செயல்கள் அனைத்தும் ஆசிரியர் செயல்திறனைப் பொறுத்தே அமைந்திருந்தது. நீ குருகுல கல்வியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா!. அயோத்தியை ஆண்ட தசரத மன்னன்கூட தனது மகன்களான இராம இலக்குமணர்களை குருகுலக் கல்வி கற்க அனுப்பவில்லையா!. இன்னும் ஒரு படி மேலே சொல்லப் போனால் கல்வி அறிவு (வில்வித்தையும் கூட கல்விதான்) பெறுவதற்காக ஏகலைவன் தனது கட்டை விரலை இழந்த கதையைக் கேட்டிருப்பாய்.

    இதெல்லாம் நான் எதற்கு உன்னிடம் எடுத்துக் கூறுகின்றேன் என்றால் எக்காலத்தும் ஒருவன் பெறக்கூடிய நிலையான செல்வமானது கல்வி ஒன்றே. இக்கல்வியினால்தான் ஒரு மனிதன் அறம், பொருள், இன்பம், வீடு பேறு, ஞானம் என்ற அனைத்தையும் பெறுகின்றான்.

    கணிணி ஆதிக்கம் நிறைந்த இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மாணவரும் ஆசிரியரும் எதிர் எதிர் துருவத்தில் இருப்பதாகவே எண்ணுகின்றேன். அதற்கு என்ன காரணம் என எண்ணுங்கால் ஆசிரியர் செய்யும் வேலையைக் கணிணி செய்யும் என்று மாணவர்கள் தவறுலாக கணிப்பதால்தான. கணினி ஒரு கருவிதான். நம் இயக்கத்திற்கு அது இயங்கும். ஆசிரியரின் அறிவுரையை ஏற்று நடக்கும் மாணவன் அகில உலகமும் போற்றும் படி வாழ்வாங்கு வாழ்வான். அவர் தன் மாணவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் அவனைச்சார்ந்த சமுதாயத்திற்கும் ஆக்கம் தரும் செயல்களை மட்டுமே கற்றுத் தருபவர்;.

    ஒரு மனிதனுக்கு கல்வி என்பது இரு கண்கள் போன்றது. அந்நியர் ஆட்சியால் புண்பட்டுக் கிடந்த இந்தப் புண்ணிய பூமியானது செம்மையானதும் செழுமையானதும் கல்வியாளர்களால்தான்.

    அன்றைய காலக்கட்டத்தில் கணவனை இழக்கும் பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் வழக்கத்தில் இருந்தது. அதாவது கணவன் இறந்த பின் அவனுடைய உடலுக்கு தீ வைத்து எரிக்கும் பொழுது மனைவியும் அச்சிதையில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும். அப்பெண் மறுக்குங்கால் அவளை அவளுடைய உறவினர்களே கொழுந்துவிட்டு எரியும் தீயில் தள்ளிவிடுவராம். என்ன கொடுமையடா இது!. இவ்வுடன்கட்டை ஏறும் பழக்கம் பெண்களுக்கு எதிராக பின்னப்பட்ட “சதி” என்றும் இது ஒரு அநீதி என்றும் இச்சதியை சமுதாயத்தில் இருந்து வேரோடு களைபிடுங்கப்பட்டதும் இராஜாராம்மோகன்ராய் போன்ற கல்வியாளர்களால்தான்.

    நம் நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்தபோது “பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேண்டும”; என்று அடிமைச் சங்கிலியை கழற்ற முன்வந்தவர்கள்தான் நம் தமிழ்க்கவி, புரட்சிக்கவி, தேசியக்கவி என்று அழைக்கப்படும் பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனாரும் ஆவார்கள். சமுதாயக் கொடுமையான சாதிக் கொடுமையையும் படிப்படியாக முடிவுக்கு கொண்டுவரப் போவது இக்கல்வியால்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள.

    நம் நாடு, நம் மக்கள் என்ற ஒற்றுமை உணர்வை நமக்குள் கொண்டு வந்து “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தாரக மந்திரத்தை உலக நாடுகளுக்குப் பறைசாற்றி நம் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதும் இக்கல்வியே.

    ஆண் ஒருவன் கல்வி அறிவு பெற்றால் அது அவனுக்கும் அவன் குடும்பத்திற்கு மட்டும்தான் உதவியாக இருக்கும். பெண் கல்வியானது தலைமுறை தலைமுறையாக பயன்பட்டு உலகை நல்வழிப்படுத்த உதவும் என்பதை அன்றே பாவேந்தர் பாரதிதாசனார் தன்னுடைய “குடும்ப விளக்கு” என்னும் பாடலில்

    பெண்களுக்கு கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே
    பெண்களுக்கு கல்வி வேண்டும் மக்களைப் பேணுதற்கே
    கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் – அந் நிலத்தில்
    புல்விளைந்திடலாம் – நல்ல புதல்வர்கள் விளைவதில்லை

    எனப் பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பறை சாற்றியுள்ளார். பெண் கல்வியினால்தான் வரதட்சணை, பெண் சிசுக் கொலை, பெண்ணடிமை போன்ற சமுதாயக் குற்றங்கள் குறைந்துள்ளன. ஆகவே நீ நன்றாகப் படித்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்யவேண்டும் என்பது அனைவருடைய விருப்பமாகும்.

    வகுப்பில் முதல் மாணவியாகத் திகழும் நீ உன் கல்லூரியிலும் கல்லூரிகளுக்கிடையே நடக்கும் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாகரிகம் வளர்ந்திருக்கும் இன்றைய காலத்தில் பாடத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்று நீ படிக்கும் கல்லூரிக்கும் நம் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துத் தரவேண்டும்.

    நீ விடுதியில் தங்கி படிப்பதால் உனக்கு ஒரு சில அறிவுரைகளை வழங்கவேண்டியது ஒரு தாயின் தலையாய கடமையாகும். ஏனெனில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து அக்கிராமத்திலேயே உன் பள்ளிப் பருவத்தை முடித்த நீ, நகரத்தில் அதுவும் விடுதியில் தங்கி எவ்வாறு படிக்கப் போகின்றாயோ என்ற கவலை என்னுள் கடல் அலைபோல் மாறி மாறி வந்துகொண்டிருந்தது.

    உலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் ஏராளம். நாள்தோறும் செய்தித்தாள்களும் வானொலியும் தவறாமல் கொண்டுவரும் செய்தி என்னவெனில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு.

    பெண் கல்வி, பெண் சுதந்திரம் என்று பட்டிமன்றங்களில் நாம் பேசினாலும் மகளிர் தினம், அன்னையர் தினம் என்று கொண்டாடினாலும் அவை எல்லாம் ஏட்டளவில் மட்டும் தான் உள்ளது என்பதற்கு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியான தன்னியற்பெயரைத் தொலைத்த கன்னிகளான நிர்பயா, சூரியநெல்லிகள் நிகழ்ச்சியை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்.

    நமது தேசத் தந்தை காந்தியடிகள் சொன்னது போல் என்று நகை அணிந்த பெண் ஒருத்தி, தனியாக வீதி வழியே சுதந்திரமாக போகத் துணிகிறாளோ அன்றுதான் நம் நாடு சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம். அவசியம் இருந்தால் மட்டும் வெளியில் செல். விடுதியை விட்டு வெளியில் செல்லும் போதெல்லாம் சக மாணவியரிடம் எங்கு செல்கிறோம் என்பதை சொல்லிச் செல். உன்னுடன் உன் அலைபேசியையும் எடுத்துச் செல்.

    நம்நாட்டுக் கலாச்சாரம், நாகரிகம் என்ற பெயரில் மேலைநாட்டுக் கலாச்சாரத்தால் அநாகரிமாக மாறிக்கொண்டிருக்கின்றன. நிறைய மாணவிகள் சினிமாவையும் சின்னத்திரையையும் பார்த்துச் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றார்கள். சினிமா வேறு! வாழ்க்கை வேறு! கலைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையைச் சினிமாவாலும் சின்னத்திரையாலும் வாழ்ந்து கொணடிருக்கின்றார்கள். வாழ்க்கை சிதறும் பொழுது அது சினிமாவாக மாற்றப்படும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்.

    இதை எதற்குச் சொல்கின்றேன் என்றால் நம் எண்ணங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் அது நல்ல செயல் வடிவம் பெறும். ஆம். நாம் யார் என்பதை நாம் உடுத்தும் ஆடையே ஒருவர்க்கு எடுத்துச் சொல்லும்.

    அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் மானத்தைப் பாதுகாக்க தான் உடுத்தும் ஆடைக்காக கூட நிறையப் போராட வேண்டியிருந்தது. ஏனெனில் சில சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களே ஆடைகளை உடுத்தமுடியும். சில சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்டிருந்ததை கவனத்திள் கொள். அத்தடையை நீக்குவதற்காக அவர்கள் தங்கள் இன்னுயிரையும் இம்மண்ணின் மங்கைக்காக உயிர் நீத்தனர் என்பதை ஆசிரியர் பிரபஞ்சன் அவர்கள் தான் எழுதிய நூலில் விளக்கியிருக்கிறார்.

    நன்றாக நினைவில் வைத்துக்கொள் ! ஆடை என்பது மானத்தை மறைப்பதற்காகத்தானே தவிர உடம்பை வெளிக்காட்டுவதற்காக அல்ல. நீ உடுத்தும் ஆடையானது அடுத்தவர் கண்ணை உறுத்தும்படி, கவர்ச்சியாக இருக்கக்கூடாது. ஆகவே வெளியில் செல்லும் பொழுது நீ அணிந்து கொள்ளப் போகும் ஆடையில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். முடிந்தால் இதனை மற்ற மாணவிகளிடமும் கண்டிப்பாக கடைபிடிக்கச் சொல். மற்றவர்களை மாற்றுவதற்கு முன் நாம் முதலில் பின்பற்றுவது நல்லது. முடிந்தால் எளிமையாக இருக்கக் கற்றுக்கொள்.

    எளிமையாக இருக்கின்றேன் என்று கஞ்சத்தனமாக இருந்து விடாதே. உனக்கு பிடித்த சத்துள்ள உணவுப் பொருள்களை உண்டு மகிழ். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். ஆரோக்கியமான வாழ்வு வாழ நாம் சத்துள்ள உணவு வகைகளை உண்பது நல்லது. சமீபத்தில் நடத்திய ஆய்வறிக்கையின் முடிவானது அதிர்ச்சி தரும் தகவல்களை எம் போன்ற அன்னையருக்கு அள்ளித் தந்திருப்பது என்னவெனில் பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் குருதியில் உள்ள இரத்த நிறமியின் அளவு மிகவும் குறைவாகக் காணப்படுகின்றனவாம். இது எதனால் என்ற விடை எழும்பொழுது அந்தப் பதிலானது சற்று வேடிக்கையாகத்தான் இருக்கிறது. பல பெண்களின் நடிகை சிம்ரன் போல் ஒல்லியாக இருக்கவேண்டும் என்ற தவறான அணுகுமுறையால் சரியாக சாப்பிடுவதில்லையாம். அதேபோல் பீட்சா, பர்கர், பெப்சி, கோக் போன்ற தேவையற்ற திண்பண்டங்களைக் கலாச்சார அவசியம் என்று நினைத்து தன் வாழ்க்கையை அவசரமாக முடித்துக்கொள்வதால்தான்.

    விடுதியில் பால், பழம், கீரை போன்ற சத்தான உணவு வகைகளை தருவதாக எழுதியிருந்தாய். இச்செய்தி எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவைகளை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்; வருங்கால சந்ததிகள் நலமுடனும் வளமுடனும் வாழ இன்றைய பெண்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். “மங்கையராய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திடவேண்டும்” என்ற வரிகளானது பெண்மையின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் பெண்கள் இவ்வுலகிற்கு ஆற்ற வேண்டிய கடமையையும் சுட்டிக் காட்டுவதாகவே உள்ளது.

    இக்கடிதத்தைப் படித்து நீ பயன் அடைவாய் என்று நம்புகின்றேன. உன் வருங்காலம் சிறப்படைய வாழ்த்தும் உன் அன்பு அம்மா.

    Share
  • சாகித்ய அகாடமி விருது பெற்ற முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி. ஐயா மறைவு!

    1475795_446580005472118_1833270357_n

    நேற்று (25.3.2014 ) இரவு 10.30 மணியளவில் முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெற்ற உயர்திரு. தி.க.சிவசங்கரன் ஐயா அவர்கள் தம்முடைய 89ம் அகவையில், இம் மண்ணைவிட்டு மறைந்தார் என்ற ஆழ்ந்த இரங்கல் செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 1925ம் ஆண்டில் திருநெல்வேலி நகரில் பிறந்த ஐயா திரு. தி. க. சிவசங்கரன் அவர்கள் சிறந்ததொரு மார்க்சிய திறனாய்வாளர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். திரு. ப.ஜீவானந்தம் அவர்களால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றவர். இந்திய பொதுவுடமைக் கட்சி இலக்கிய இதழான தாமரையில் 1960 முதல் 1964 வரை ஆசிரியராகப் பணியாற்றியவர். 1964ல் சோவியத்து கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றவர். தற்போது திருநெல்வேலியில் வசிப்பவர். சிறந்த சிறுகதை எழுத்தாளரான திரு வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம் அவர்கள் தி.க.சிவசங்கரன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. . இவரது மதிப்புரைகளும் கட்டுரைகளும் , திகசி கட்டுரைகள் என இரு பகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுதிகளுக்கு 2000 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தாமரை இதழில் பணியாற்றிய போது பல இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து ஊக்குவித்தவர். இளம் எழுத்தாளர்களுக்கு தபால் அட்டைகளில் கடிதங்கள் எழுதி அவர்களை ஊக்குவிப்பதும், இதழ்களில் வாசகர் கடிதங்கள் எழுதுவதும் அவரது முக்கியமான இலக்கியச் செயல்பாடுகளாக இருந்தன. தி.க.சி ஐயா அவர்களுக்கு நம் வல்லமையின் சார்பில் ஆழ்ந்த அஞ்சலிகளைச் சமர்ப்பிப்போம். அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஐயாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    சென்ற 2012ம் ஆண்டு தி.க.சி. ஐயா அவர்கள் நம் வல்லமை இதழுக்காக அளித்த நேர்காணல் இதோ இங்கே

    Share