தமிழ் செல்வி

அன்பு மகள் மணிமொழிக்கு,

ஆசையுடன் எழுதும் அன்பு மடல் யாதெனில் இங்கு அனைவரும் (பாட்டி, அப்பா, தம்பி மற்றும் தங்கை) நலம் .

அதுபோல் அங்கு உன் நலமும் உன் தோழியர்களின் நலமும் அறிய ஆவல்.

உன் கடிதம் கிடைத்தது. அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். சமீபத்தில் நீ எழுதிய கடிதத்தில் நடந்த முதல் இடைத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று வகுப்பில் முதல் மாணவியாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தாய். இது எதைப் போல் இருக்கின்றது தெரியுமா?

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இக்கடிதத்தை பார்க்கும் வரையிலும் நாங்கள் அனைவரும் உன்னைப் பற்றிய கவலையிலேயே ஆழ்ந்திருந்தோம்; ஏனெனில் தமிழ் வழிக் கல்வி படித்த நீ, எப்படி ஆங்கில வழிக் கல்வியில் படித்து தேர்ச்சியடையப் போகின்றாயோ என்ற கவலை வேறு. இனிமேல் உன் படிப்பைப் பற்றியக் கவலை எங்களுக்கு இல்லை. நீ எடுத்திருக்கும் மதிப்பெண்களிலிருந்து உன்னுடைய கடின உழைப்பும் விடாமுயற்சியும் வெளிப்படுகின்றது. வாழ்த்துகள். உன் பாடம் சம்பந்தமாக எழும் சந்தேகங்களை அவ்வப்போது உன் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள். மேலும் உனக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்.

ஆசிரியரைப் பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் கூழாங்கல்லை அவர்கள் கையில் கொடுத்தால், அதைக்கூட சிற்பமாக மாற்றும் திறன் கொண்டவர். அவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்; உனக்கு அவர்கள் இரண்டாவது பெற்றோர்களாவர். அறியாமை என்னும் இருளை அகற்றுபவர் ஆசி;ரியரே. ஒரு மனிதனுக்குக் கல்வியையும் ஒழுக்கத்தையும் ஒருசேர போதிப்பது ஆசிரியர் ஒருவர்தான. ஒரு மாணவனுக்கு நல் ஆசிரியர் கிடைப்பது என்பது பூர்வஜென்ம பந்தம் என்பேன். அவர்கள் மனம் வருந்தும்படி எந்தச் செயலையும் செய்யாதே.

அன்றைய காலத்தில் மாணாக்கர்களின் செயல்கள் அனைத்தும் ஆசிரியர் செயல்திறனைப் பொறுத்தே அமைந்திருந்தது. நீ குருகுல கல்வியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா!. அயோத்தியை ஆண்ட தசரத மன்னன்கூட தனது மகன்களான இராம இலக்குமணர்களை குருகுலக் கல்வி கற்க அனுப்பவில்லையா!. இன்னும் ஒரு படி மேலே சொல்லப் போனால் கல்வி அறிவு (வில்வித்தையும் கூட கல்விதான்) பெறுவதற்காக ஏகலைவன் தனது கட்டை விரலை இழந்த கதையைக் கேட்டிருப்பாய்.

இதெல்லாம் நான் எதற்கு உன்னிடம் எடுத்துக் கூறுகின்றேன் என்றால் எக்காலத்தும் ஒருவன் பெறக்கூடிய நிலையான செல்வமானது கல்வி ஒன்றே. இக்கல்வியினால்தான் ஒரு மனிதன் அறம், பொருள், இன்பம், வீடு பேறு, ஞானம் என்ற அனைத்தையும் பெறுகின்றான்.

கணிணி ஆதிக்கம் நிறைந்த இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மாணவரும் ஆசிரியரும் எதிர் எதிர் துருவத்தில் இருப்பதாகவே எண்ணுகின்றேன். அதற்கு என்ன காரணம் என எண்ணுங்கால் ஆசிரியர் செய்யும் வேலையைக் கணிணி செய்யும் என்று மாணவர்கள் தவறுலாக கணிப்பதால்தான. கணினி ஒரு கருவிதான். நம் இயக்கத்திற்கு அது இயங்கும். ஆசிரியரின் அறிவுரையை ஏற்று நடக்கும் மாணவன் அகில உலகமும் போற்றும் படி வாழ்வாங்கு வாழ்வான். அவர் தன் மாணவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் அவனைச்சார்ந்த சமுதாயத்திற்கும் ஆக்கம் தரும் செயல்களை மட்டுமே கற்றுத் தருபவர்;.

ஒரு மனிதனுக்கு கல்வி என்பது இரு கண்கள் போன்றது. அந்நியர் ஆட்சியால் புண்பட்டுக் கிடந்த இந்தப் புண்ணிய பூமியானது செம்மையானதும் செழுமையானதும் கல்வியாளர்களால்தான்.

அன்றைய காலக்கட்டத்தில் கணவனை இழக்கும் பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் வழக்கத்தில் இருந்தது. அதாவது கணவன் இறந்த பின் அவனுடைய உடலுக்கு தீ வைத்து எரிக்கும் பொழுது மனைவியும் அச்சிதையில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும். அப்பெண் மறுக்குங்கால் அவளை அவளுடைய உறவினர்களே கொழுந்துவிட்டு எரியும் தீயில் தள்ளிவிடுவராம். என்ன கொடுமையடா இது!. இவ்வுடன்கட்டை ஏறும் பழக்கம் பெண்களுக்கு எதிராக பின்னப்பட்ட “சதி” என்றும் இது ஒரு அநீதி என்றும் இச்சதியை சமுதாயத்தில் இருந்து வேரோடு களைபிடுங்கப்பட்டதும் இராஜாராம்மோகன்ராய் போன்ற கல்வியாளர்களால்தான்.

நம் நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்தபோது “பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேண்டும”; என்று அடிமைச் சங்கிலியை கழற்ற முன்வந்தவர்கள்தான் நம் தமிழ்க்கவி, புரட்சிக்கவி, தேசியக்கவி என்று அழைக்கப்படும் பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனாரும் ஆவார்கள். சமுதாயக் கொடுமையான சாதிக் கொடுமையையும் படிப்படியாக முடிவுக்கு கொண்டுவரப் போவது இக்கல்வியால்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள.

நம் நாடு, நம் மக்கள் என்ற ஒற்றுமை உணர்வை நமக்குள் கொண்டு வந்து “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தாரக மந்திரத்தை உலக நாடுகளுக்குப் பறைசாற்றி நம் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதும் இக்கல்வியே.

ஆண் ஒருவன் கல்வி அறிவு பெற்றால் அது அவனுக்கும் அவன் குடும்பத்திற்கு மட்டும்தான் உதவியாக இருக்கும். பெண் கல்வியானது தலைமுறை தலைமுறையாக பயன்பட்டு உலகை நல்வழிப்படுத்த உதவும் என்பதை அன்றே பாவேந்தர் பாரதிதாசனார் தன்னுடைய “குடும்ப விளக்கு” என்னும் பாடலில்

பெண்களுக்கு கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே
பெண்களுக்கு கல்வி வேண்டும் மக்களைப் பேணுதற்கே
கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் – அந் நிலத்தில்
புல்விளைந்திடலாம் – நல்ல புதல்வர்கள் விளைவதில்லை

எனப் பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பறை சாற்றியுள்ளார். பெண் கல்வியினால்தான் வரதட்சணை, பெண் சிசுக் கொலை, பெண்ணடிமை போன்ற சமுதாயக் குற்றங்கள் குறைந்துள்ளன. ஆகவே நீ நன்றாகப் படித்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்யவேண்டும் என்பது அனைவருடைய விருப்பமாகும்.

வகுப்பில் முதல் மாணவியாகத் திகழும் நீ உன் கல்லூரியிலும் கல்லூரிகளுக்கிடையே நடக்கும் போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாகரிகம் வளர்ந்திருக்கும் இன்றைய காலத்தில் பாடத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்று நீ படிக்கும் கல்லூரிக்கும் நம் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்துத் தரவேண்டும்.

நீ விடுதியில் தங்கி படிப்பதால் உனக்கு ஒரு சில அறிவுரைகளை வழங்கவேண்டியது ஒரு தாயின் தலையாய கடமையாகும். ஏனெனில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து அக்கிராமத்திலேயே உன் பள்ளிப் பருவத்தை முடித்த நீ, நகரத்தில் அதுவும் விடுதியில் தங்கி எவ்வாறு படிக்கப் போகின்றாயோ என்ற கவலை என்னுள் கடல் அலைபோல் மாறி மாறி வந்துகொண்டிருந்தது.

உலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் ஏராளம். நாள்தோறும் செய்தித்தாள்களும் வானொலியும் தவறாமல் கொண்டுவரும் செய்தி என்னவெனில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு.

பெண் கல்வி, பெண் சுதந்திரம் என்று பட்டிமன்றங்களில் நாம் பேசினாலும் மகளிர் தினம், அன்னையர் தினம் என்று கொண்டாடினாலும் அவை எல்லாம் ஏட்டளவில் மட்டும் தான் உள்ளது என்பதற்கு சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியான தன்னியற்பெயரைத் தொலைத்த கன்னிகளான நிர்பயா, சூரியநெல்லிகள் நிகழ்ச்சியை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்.

நமது தேசத் தந்தை காந்தியடிகள் சொன்னது போல் என்று நகை அணிந்த பெண் ஒருத்தி, தனியாக வீதி வழியே சுதந்திரமாக போகத் துணிகிறாளோ அன்றுதான் நம் நாடு சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம். அவசியம் இருந்தால் மட்டும் வெளியில் செல். விடுதியை விட்டு வெளியில் செல்லும் போதெல்லாம் சக மாணவியரிடம் எங்கு செல்கிறோம் என்பதை சொல்லிச் செல். உன்னுடன் உன் அலைபேசியையும் எடுத்துச் செல்.

நம்நாட்டுக் கலாச்சாரம், நாகரிகம் என்ற பெயரில் மேலைநாட்டுக் கலாச்சாரத்தால் அநாகரிமாக மாறிக்கொண்டிருக்கின்றன. நிறைய மாணவிகள் சினிமாவையும் சின்னத்திரையையும் பார்த்துச் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கின்றார்கள். சினிமா வேறு! வாழ்க்கை வேறு! கலைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையைச் சினிமாவாலும் சின்னத்திரையாலும் வாழ்ந்து கொணடிருக்கின்றார்கள். வாழ்க்கை சிதறும் பொழுது அது சினிமாவாக மாற்றப்படும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்.

இதை எதற்குச் சொல்கின்றேன் என்றால் நம் எண்ணங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் அது நல்ல செயல் வடிவம் பெறும். ஆம். நாம் யார் என்பதை நாம் உடுத்தும் ஆடையே ஒருவர்க்கு எடுத்துச் சொல்லும்.

அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் மானத்தைப் பாதுகாக்க தான் உடுத்தும் ஆடைக்காக கூட நிறையப் போராட வேண்டியிருந்தது. ஏனெனில் சில சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களே ஆடைகளை உடுத்தமுடியும். சில சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்டிருந்ததை கவனத்திள் கொள். அத்தடையை நீக்குவதற்காக அவர்கள் தங்கள் இன்னுயிரையும் இம்மண்ணின் மங்கைக்காக உயிர் நீத்தனர் என்பதை ஆசிரியர் பிரபஞ்சன் அவர்கள் தான் எழுதிய நூலில் விளக்கியிருக்கிறார்.

நன்றாக நினைவில் வைத்துக்கொள் ! ஆடை என்பது மானத்தை மறைப்பதற்காகத்தானே தவிர உடம்பை வெளிக்காட்டுவதற்காக அல்ல. நீ உடுத்தும் ஆடையானது அடுத்தவர் கண்ணை உறுத்தும்படி, கவர்ச்சியாக இருக்கக்கூடாது. ஆகவே வெளியில் செல்லும் பொழுது நீ அணிந்து கொள்ளப் போகும் ஆடையில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். முடிந்தால் இதனை மற்ற மாணவிகளிடமும் கண்டிப்பாக கடைபிடிக்கச் சொல். மற்றவர்களை மாற்றுவதற்கு முன் நாம் முதலில் பின்பற்றுவது நல்லது. முடிந்தால் எளிமையாக இருக்கக் கற்றுக்கொள்.

எளிமையாக இருக்கின்றேன் என்று கஞ்சத்தனமாக இருந்து விடாதே. உனக்கு பிடித்த சத்துள்ள உணவுப் பொருள்களை உண்டு மகிழ். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும். ஆரோக்கியமான வாழ்வு வாழ நாம் சத்துள்ள உணவு வகைகளை உண்பது நல்லது. சமீபத்தில் நடத்திய ஆய்வறிக்கையின் முடிவானது அதிர்ச்சி தரும் தகவல்களை எம் போன்ற அன்னையருக்கு அள்ளித் தந்திருப்பது என்னவெனில் பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் குருதியில் உள்ள இரத்த நிறமியின் அளவு மிகவும் குறைவாகக் காணப்படுகின்றனவாம். இது எதனால் என்ற விடை எழும்பொழுது அந்தப் பதிலானது சற்று வேடிக்கையாகத்தான் இருக்கிறது. பல பெண்களின் நடிகை சிம்ரன் போல் ஒல்லியாக இருக்கவேண்டும் என்ற தவறான அணுகுமுறையால் சரியாக சாப்பிடுவதில்லையாம். அதேபோல் பீட்சா, பர்கர், பெப்சி, கோக் போன்ற தேவையற்ற திண்பண்டங்களைக் கலாச்சார அவசியம் என்று நினைத்து தன் வாழ்க்கையை அவசரமாக முடித்துக்கொள்வதால்தான்.

விடுதியில் பால், பழம், கீரை போன்ற சத்தான உணவு வகைகளை தருவதாக எழுதியிருந்தாய். இச்செய்தி எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவைகளை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்; வருங்கால சந்ததிகள் நலமுடனும் வளமுடனும் வாழ இன்றைய பெண்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். “மங்கையராய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திடவேண்டும்” என்ற வரிகளானது பெண்மையின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதோடு மட்டுமல்லாமல் பெண்கள் இவ்வுலகிற்கு ஆற்ற வேண்டிய கடமையையும் சுட்டிக் காட்டுவதாகவே உள்ளது.

இக்கடிதத்தைப் படித்து நீ பயன் அடைவாய் என்று நம்புகின்றேன. உன் வருங்காலம் சிறப்படைய வாழ்த்தும் உன் அன்பு அம்மா.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க