சாகித்ய அகாடமி விருது பெற்ற முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி. ஐயா மறைவு!

0

1475795_446580005472118_1833270357_n

நேற்று (25.3.2014 ) இரவு 10.30 மணியளவில் முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெற்ற உயர்திரு. தி.க.சிவசங்கரன் ஐயா அவர்கள் தம்முடைய 89ம் அகவையில், இம் மண்ணைவிட்டு மறைந்தார் என்ற ஆழ்ந்த இரங்கல் செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 1925ம் ஆண்டில் திருநெல்வேலி நகரில் பிறந்த ஐயா திரு. தி. க. சிவசங்கரன் அவர்கள் சிறந்ததொரு மார்க்சிய திறனாய்வாளர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். திரு. ப.ஜீவானந்தம் அவர்களால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றவர். இந்திய பொதுவுடமைக் கட்சி இலக்கிய இதழான தாமரையில் 1960 முதல் 1964 வரை ஆசிரியராகப் பணியாற்றியவர். 1964ல் சோவியத்து கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றவர். தற்போது திருநெல்வேலியில் வசிப்பவர். சிறந்த சிறுகதை எழுத்தாளரான திரு வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம் அவர்கள் தி.க.சிவசங்கரன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. . இவரது மதிப்புரைகளும் கட்டுரைகளும் , திகசி கட்டுரைகள் என இரு பகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுதிகளுக்கு 2000 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தாமரை இதழில் பணியாற்றிய போது பல இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து ஊக்குவித்தவர். இளம் எழுத்தாளர்களுக்கு தபால் அட்டைகளில் கடிதங்கள் எழுதி அவர்களை ஊக்குவிப்பதும், இதழ்களில் வாசகர் கடிதங்கள் எழுதுவதும் அவரது முக்கியமான இலக்கியச் செயல்பாடுகளாக இருந்தன. தி.க.சி ஐயா அவர்களுக்கு நம் வல்லமையின் சார்பில் ஆழ்ந்த அஞ்சலிகளைச் சமர்ப்பிப்போம். அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஐயாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

சென்ற 2012ம் ஆண்டு தி.க.சி. ஐயா அவர்கள் நம் வல்லமை இதழுக்காக அளித்த நேர்காணல் இதோ இங்கே

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *