மனிதப் பயிர்களுக்கு மழையைப் போன்றவர்!

1

 

பவள சங்கரி

தி.க.சிவசங்கரன்  – சிறப்பு நேர்காணல்

‘நான் ஒரு சாதாரண களப்பணியாளன்’ என்று தம்முடைய சாகித்திய அகாதமி பரிசு பெறும் விழாவில் நிறைகுடமாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட தி.க.சி. என்று இலக்கிய வட்டாரத்தில் அழைக்கப்பெறும் திரு. தி.க. சிவசங்கரன் அவர்கள் கவிஞர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிக்கை ஆசிரியர், சிறந்த விமர்சகர் என பன்முகங்கள் கொண்ட ஒரு வல்லமையளார். தனக்குச் சரி எனப்படுவதை அழுத்தமாக எடுத்துச் சொல்கிற தன்மையுடையவர் என்று மூத்த எழுத்தாளர் திரு வல்லிக்கண்ணனால்  பாராட்டப் பெற்றவர், திறனாய்வுத் தென்றல் தி.க.சி அவர்களின் முழு பரிமாணங்களையும், எஸ்.இராஜகுமாரன் இயக்கிய ‘21இ சுடலைமாடன் கோயில் தெரு, திருநெல்வேலி டவுன்’, என்ற ஆவணப்படம் வாயிலாக,  கண்டு உணர முடிகிறது. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் ‘Literrary Activist’ அதாவது ‘தமது உற்பத்தி அளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்’ என்று பொருள்படும்படி பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

8/8/2012 புதன்கிழமையன்று, ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள்ள வந்திருந்த திரு தி.க.சி. அவர்களுடன் நம் வல்லமை இதழுக்காக நேர்காணல் எடுக்க சந்தித்த போது அவருடைய உற்சாகமும், உபசரிப்பும், சுறுசுறுப்பும், 88 வயதை சுத்தமாக மறைத்து விட்டது ஆச்சரியம். மிக எளிமையான தோற்றமும், சக மனிதர்களின் மீது அவர் காட்டும் நெருங்கிய நட்புறவும், அவர்பால் நம்மை எளிதாக ஈர்க்கச் செய்கிறது. ஒவ்வொரு பேச்சிலும், செயலிலும் பரந்த சமூகச் சிந்தனையும், நல்ல மனிதாபிமான நோக்கமும் வெளிப்படையாகத் தெரிகிறது. நல்ல படைப்புகளை வழங்குவதோடு, மனிதர்களையும் நாடிப்ப்ழகும் இவருடைய தன்மையினால், சாதாரண மனிதர்களிடையேயும் இவருடைய எழுத்து சென்றடைவதோடு, அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலையும் வெளிக்கொணரும் வல்லமை பெற்றுவிடுகிறது. மார்க்சிய தத்துவ நோக்குடன் படைப்புகளை விமர்சிக்கும் ஒரு விமர்சக வித்தகர் இவர். பிரபல எழுத்தாளர் வண்ணதாசன் இவருடைய மகனார்.

கேள்வி: தங்களுடைய பதினேழாவது வயதில் ஆரம்பித்த இலக்கியப் பணிகள் பற்றி..?

தி.க.சி. : (மகிழ்ச்சி பொங்க குழந்தையாய் மலர்கிறார்) ஆமாம். என்னுடைய முதல் சிறுகதை பேராசிரியர் நாரண துரைக்கண்ணன் ஆசிரியராக இருந்த, ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிவந்தது. திருவள்ளுவரும், பாரதியாரும், பாரதிதாசனும் எம்முடைய வழிகாட்டிகள். ஒவ்வொரு தமிழனுக்கும் இவர்கள்தானே வழியாட்டியாக இருக்க முடியும்? என் படைப்புத் தொழிலுக்கு ஊக்கம் கொடுத்து எனக்கு குருவாக இருந்தவர் வல்லிக்கண்ணன். அவரில்லையென்றால் இன்று இந்த தி.க.சி. இல்லை.

1941ஆம் ஆண்டில், நெல்லை இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது வல்லிக்கண்ணன் என்ற என் இலக்கிய குருநாதரைக் கண்டுபிடித்தேன். முழுநேர எழுத்தாளராக ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் தம்முடைய அரசாங்க வேலையை உதறித் தள்ளிவிட்டு தம் குடும்பத்தினருடன் எங்கள் வீட்டிற்கருகில் குடிவந்தவர். நேரம் கிடைத்த போதெல்லாம் அவ்ருடன் கழிந்த என் பொழுதுகள் எனது இலக்கியப்பசிக்குக் கிடைத்த உணவு எனலாம்.

கேள்வி: தாமரை இதழாசிரியராக தங்களுடைய அனுபவம்?

தி.க.சி. : அமரர் ஜீவா அவர்கள் தோற்றுவித்த ‘தாமரை’ என்ற இலக்கிய இதழில் ஆசிரியர் பொறுப்பில், தரமான 100 இதழ்களைத் தயாரித்து, தாமரையின் பொற்காலம் என்ற பெரும் பேற்றைப் பெற்றேன். எழுபதுகளில், தமிழக இடதுசாரி இலக்கியம் தமிழ்ப் பண்புடனும், அதிகமான தத்துவப்பழு இல்லாத வகையிலும், ஒரு வரையறையுடன் வெளிவந்தது. இன்றைய முற்போக்கு இலக்கிய உலகில் சாதனை புரிந்துவரும் பலரையும் இனங்கண்டு ஊக்குவித்து தமிழுக்கு வழங்கிய பெருமை தாமரைக்கு உண்டு. எனக்கு அரசியலிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் ஜீவா என்கிற அடலேறுதான்.

கேள்வி : சோவியத், சீன நாவல்கள் பலவற்றை தமிழாக்கம் செய்துள்ளீர்கள். தமிழாக்கம் செய்வதற்கான முறைமைகளின் அடிப்படை கருத்துகள் பற்றி சொல்லுங்கள்

தி.க.சி. மொழிபெயர்ப்பு ஒரு கலை. படைப்பாளியின் மூலம் கெடாமல், வேறு ஒப்புமையை புகுத்தாமல், சொந்த நடையில் நல்ல மொழியில் எளிமையா, கொடுப்பதே நல்ல மொழிபெயர்ப்பு. வார்த்தைக்கு வார்த்தை மாற்றம் செய்ய வேண்டுமென்பது பொருளல்ல. தவறுகளை திருத்திக்கொள்ள சற்றும் தயக்கம் வேண்டியதில்லை. நான் என்றுமே அதற்கு வெட்கப்பட்டதும் இல்லை. எழுதப்பட்ட காலம், அதன் சூழல் இவையெல்லாம் கருத்தில் கொண்டு, அந்த மூலக்கருவில் மாற்றம் வராமல் தம் சொந்த நடையில் புரியும்படி கொடுக்க வேண்டும். சரஸ்வதி ராமநாதன் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். 1965 – 72 காலகட்டத்தில், நான் தாமரை இதழில் பொறுப்பாசிரியராக இருந்த போது ஆண்டுதோறும் ’மொழிபெயர்ப்பு சிறுகதை மலர்’ ஒன்றை வெளியிட்டு வந்தோம். அதில் சரஸ்வதி ராம்நாத் அவர்களின் ஒரு இந்தி மொழிபெயர்ப்பு சிறுகதை தவறாமல் இடம்பெறும். அதேபோல், ‘கலை மகள்’ இதழில் உதவி ஆசிரியராக இருந்து கொண்டே, (1940-50களில்) மராத்தியிலிருந்து நேரடியாக காண்டேகரின் பதிமூன்று நாவல்கள், மற்றும் நூற்றைம்பது சிறுகதைகளையும் அற்புதமாக தமிழாக்கி, இலக்கிய உலகிலும், எழுத்தாளர்களிடையேயும் ஓர் எழுச்சியை உருவாக்கியவர், கா.ஸ்ரீ.ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாச ஆச்சார்யா. இத்தோடு நிற்காமல், தமிழ் இலக்கியத்தின் பெருமைகளை இந்தி வாசகர்களுக்கும் உணர்த்தும் வகையில் புதுமைப்பித்தன், கல்கி, கு.ப.ரா, வ.வே.சு ஐயர், கல்கி, பி.எஸ்.ராமையா, மகாகவி பாரதியின் கட்டுரைகள் போன்றவற்றை இந்தியில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். இந்தியைவிட, தமிழ்தான் சிறந்தது என்று ஆணித்தரமாக வாதிடுவாராம்..

கேள்வி: இன்றைய தமிழ்க் கவிதைகள் மற்றும் இலக்கியங்கள் பற்றி…?

தி.க.சி. : படைப்புகள் சமுதாய நோக்கம் கொண்டவைகளாக இருக்க வேண்டியது அவசியம். திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு ஆயிரம் கவிதைகள் அழகாகப் புனையலாம். புதுக்கவிதை என்ற பெயரில் எதிர்மறையான கருத்துக்களை அழகு நடையில் கொடுத்து சமுதாயத்தை தீய வழியில் நடத்திச் செல்பவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள். மொழியைப் போன்றே உள்ளார்ந்த கருத்துகளும் இன்றியமையாதவை. மனிதநேயமிக்க அழகியல், அறிவியல், அறயியல் இம்மூன்றையும் ஒருங்கிணைத்து புதிய படைப்புகளை வெளியிடுவதும், படைப்பதுமான  பணிகளே இன்றைய காலத்தின் அவசியமாகும்.

தமிழ் உள்ளவரை பாரதி எனும் ஞானசூரியனின் ஒளி வெள்ளம் இவ்வுலகில் பாய்ந்து கொண்டேதான் இருக்கும். புதுமைப்பித்தன், கல்கி போன்ற எத்த்னையோ எழுத்தாளர்கள் மகாகவியின் கதிர்வீச்சுகளாக தமிழ் இலக்கிய உலகில் வாழ்ந்தார்கள், இன்றும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நமக்குக் கல்கியும் வேண்டும், புதுமைப்பித்தனும் வேண்டும். இருவரும் பாரதியின் குறிக்கோள்களைத் தமிழர்களின் வாழ்விலும், அவர்தம் இதயத்திலும் தம் படைப்புகள் மூலமாக் விதைத்தவர்கள். அவர்களின் பாதையும், இலக்கியத்தரமும் மிக வித்தியாசமானது. ஆயினும் இருவரும் தமிழில் மறுமலர்ச்சி இலக்கியம் படைத்தவர்கள். அதற்காகவேத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, இடையறாது உழைத்தவர்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் சி.சு. செல்லப்பா விட்டுச் சென்ற சுவடுகள் என்றும் அழியாதவை. தற்காலத் தமிழ்க் கவிஞர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் கே.சி.எஸ். அருணாசலம். தமிழ் இலக்கிய உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தரமான கவிஞராகவும், சிறுகதை ஆசிரியராகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும், திரைப்படப் பாடலாசிரியராகவும் கலை, இலக்கிய அமைப்புகளில் செயற்பாட்டு வீரராகவும் திகழ்ந்தவர்.

கேள்வி: தமிழ்ர் வாழ்வில் தாங்கள் எதிர்பார்க்கும் புரட்சிகர மாற்றங்கள் எவை?

தி.க.சி. ”இருக்கும் நிலைமாற்ற ஒரு புரட்சி மனப்பான்மை ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம். பொதுமக்கள் நலம் நாடிப் பொதுக்கருத்தைச் சொல்க. புன்கருத்தைச் சொல்வதில் ஆயிரம் வந்தாலும் அதற்கொப்ப வேண்டாமே” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

கார்ப்பரேட் கலாச்சாரம் தீவிரமாக வளர்க்கப்பட்டு வரும் இன்றைய தமிழக, இந்திய சூழலில் சிறு பத்திரிக்கைகள் மற்றும் எழுத்தாளர்களின் கொள்கை நெறியும், போக்கும் பாரதிதாசன் பாதையில் இருக்க வேண்டுமென்பது என்னுடைய அழுத்தமான கருத்து. புரட்சிகரத் தமிழ் தேசியம், பன்முக இந்திய தேசியம், மனித நேயமிக்க சர்வ தேசியத்தின் தலைசிறந்த பிரதிநிதிகளான மகாகவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன், இலத்தீன் அமெரிக்கா மகாகவி பாப்லோ நெரூடா இவர்களின் பாதையில் படைப்பாளிகளின் உள்ளடக்கமும், படைப்புகளும் அமையப் பெறுதல் வேண்டும். மகாகவி பாப்லோ நெரூடாவின் படைப்புகள் தமிழாக்கம் பெற வேண்டும். மக்களின் பண்பாட்டைச் சீரழிக்கும் படுமோசமான உளவியல் யுத்தத்தை பெரும்பான்மையான, அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும்  தவறான பாதையில் திசை திருப்பும் வகையில் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகின்றன. இதில் எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் பலிகடா ஆகாமல் இருக்க வேண்டும். தம் மன நிறைவிற்காக எழுதும் எண்ணம் எழுத்தாளர்களிடையே வளர வேண்டும். தரம் காக்கப்பட வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உன்னத இலட்சியங்கள் கொண்டவைகளாக இருக்க வேண்டும்.

தமிழியம், தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழலியம், விஞ்ஞானப் பூர்வமான மார்க்ஸியம் என்னும் துறைகளில் தமிழ்ப் பண்பாட்டை வளர்க்க முயலும் முற்போக்கு எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் தகுந்த அங்கீகாரம் பெறுதல் வேண்டும். கடந்த பத்தாண்டுக் காலத்தில் தமிழ் வாசகர்கள், பத்திரிக்கைகள், பதிப்பாளர்களிடையே தரமான இலக்கியங்களையும், படைப்பாளிகளையும் இனங்கண்டு பாராட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இலக்கிய மதிப்பு வாய்ந்த நூல்களை வாங்கிப் படிப்பதோடு, அது குறித்து கலந்துரையாடுதல், ஆழ்ந்த சர்ச்சைகளில் ஈடுபடுதல், கருத்தரங்குகள் நடத்துதல் போன்றவற்றில் தமிழ் மக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் மிகுந்த ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சிக்குரிய விசயம். சிந்திக்க விரும்பும் வாசகர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கூடுகிறது. குறிப்பாக சரிபாதியினராக உள்ள பெண்களின் சிந்தனையில் தீவிர மாற்றம் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. பெண்கல்வி பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்னும் கொள்கைகள் மக்கள் மீது திணிக்கப்படும் இவ்வேளையில், சுதந்திரம், ஜனநாயகம், சமதர்மம், வளமான வாழ்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டிய காலமிது.

கேள்வி : விஞ்ஞானப்பூர்வமான மார்க்சியம் என்றீர்களே? அதைப்பற்றி சற்று விளக்கமாக…….

தி.க.சி. இது குறித்து ஒரு நீண்ட கட்டுரையே எழுத வேண்டும். என் உடல் நலமும், அகவையும், அதற்கு இடம் கொடுக்கவில்லை. சுருக்க்மாக பதில் கொடுக்கிறேன்.

விஞ்ஞானப்பூர்வமான மார்க்சியம் என்பது, என் கருத்தில், மார்க்ஸ் – எங்கல்ஸ் – லெனின் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, இந்திய முகமும் குரலும்கொண்ட ஒரு சோசலிசத்தை இந்தியாவில் நாம் அமைப்பதுதான்! இரசியப்பாதை, சீனப்பாதை, வியட்நாம் பாதை, கியூபா பாதை, இவற்றில் அமைந்த அரசுகள் எல்லாம் விஞ்ஞானப்பூர்வமான மார்க்சிய அடிப்படையில் அமைந்தவைதாம்; அந்த அரசுகளும்கூட இன்றைய உலகமய் நவீன – தாராளமய – தனியார்மயச் சூழ்நிலைக்கு ஏற்ப இன்று தம்மைத்தக அமைத்துக்கொண்டு மக்கள் ஜனநாயகத்திற்கும் அரசாகத் திகழ முயன்று கொண்டிருக்கிறது. எனவே ’விஞ்ஞானப்பூர்வமான மார்க்சியம்’ நம் நாட்டில் பெருமளவு வளர வேண்டுமென்றால் அதற்கேற்ற நடைமுறைச் சூழ்நிலைகளை அரசியல், பொருளாதார, சமுதாய கலாச்சாரத் துறைகளில், நாம் – அதாவ்து – இந்திய மக்கள் ஏற்படுத்த வேண்டும்; அதற்கு இன்றையச் சூழலில் பற்பல ஆண்டுகள் ஆகலாம். எனினும் அந்தப் பாதையில் தத்துவத் தெளிவுடனும், ஸ்தாபன பலத்துடனும் துணிந்து களம் இறங்கிப் போராட வேண்டும்!!

ஒரு மனிதநேயமிக்க சிறந்த தமிழறிஞரை சந்தித்த மன நிறைவுடன், அவர் மனமுவந்து வழங்கிய , வே.முத்துக்குமார் அவர்கள் தொகுப்பில் வெளிவந்துள்ள தி.க.சி. அவர்களின் ‘காலத்தின் குரல்’ என்ற அருமையான நூலுடனும் விடைபெற்று வந்தோம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மனிதப் பயிர்களுக்கு மழையைப் போன்றவர்!

  1. //படைப்புகள் சமுதாய நோக்கம் கொண்டவைகளாக இருக்க வேண்டியது அவசியம். திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு ஆயிரம் கவிதைகள் அழகாகப் புனையலாம். புதுக்கவிதை என்ற பெயரில் எதிர்மறையான கருத்துக்களை அழகு நடையில் கொடுத்து சமுதாயத்தை தீய வழியில் நடத்திச் செல்பவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள். மொழியைப் போன்றே உள்ளார்ந்த கருத்துகளும் இன்றியமையாதவை. மனிதநேயமிக்க அழகியல், அறிவியல், அறயியல் இம்மூன்றையும் ஒருங்கிணைத்து புதிய படைப்புகளை வெளியிடுவதும், படைப்பதுமான பணிகளே இன்றைய காலத்தின் அவசியமாகும்.//

    அற்புதமான இந்தக் கருத்தை தற்கால எழுத்தாளர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

    //ஒரு மனிதநேயமிக்க சிறந்த தமிழறிஞரை சந்தித்த மன நிறைவுடன்,//

    அதே நிறைவு வாசித்த எங்களுக்கும் ஏற்பட்டது! மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *