தண்டுவட மாகிநீ எனைநிற்க வைத்தாய்,

உண்டஉண வாகவே உதிரத்தில் சேர்ந்தாய்,

வண்டுதொட வாடிடும் அணிச்சத்தைப் போலவே,

கண்டுமுனைக் காணாமல் நான்வாடி னேனே!                                                              33

 

பத்துவடி வெடுத்து நின்ற மாலுக்கும்,

பத்துசிர மெடுத்த இலங்கைக் கோனுக்கும்,

சித்துவடி வாகிமுழு முக்தியடைந் தோருக்கும்,

பித்துவடி வானமுது பரமனே துணை!                                                               34

 

கரிமுகனும் கந்தனும் இருபுறமும் இருக்க,

திரிபுறம் எரித்தவன் உடலோடு இணைந்து,

பரிமளம் மணக்கும் பார்வதியும் இருக்க,

விரிமனம் கொண்டிந்த காட்சியைக் காண்போம்!                                                           35

 

வினோதத் தாண்டவனே, வெண்ணிலவைப் பூண்டவனே,

விவாதப் பொருளாக என்மனதில் நீண்டவனே,

விகாரமனம் நீக்கும் வேலவனின் ஆண்டவனே,

விதானமாகி நின்று காக்கும் கூத்தனே!                                                                            36

 

இரவும் பகலும் நீங்கா துலகில்,

அரவம் பூண்டு ஆடும் நாதனின்,

பரவும் கருணைப் பேரொளி தன்னில்,

குரவர் போல அனைவரும் நனைவோம்!                                                                      37

 

பச்சை யப்பனாய், பசுப தீசனாய்,

அம்மை யப்பனாய், தில்லை நாதனாய்,

புற்றிடங் கொண்ட புனித ஈசனாய்,

பக்தனைக் காக்க அத்தன் வருகிறான்!                                       38

 

கோபியரோ டாடியவன், பாண்டவர்கள் நாடியவன்,

ஆநிரைகள் அசைந்தாட அழகுகுழல் ஊதியவன்,

தீபமெனும் சீதையினைத் துயரமுடன் தேடியவன்,

பாடியதும் நாடியதும் பெருமைமிகு ஈசனையே!                                                            39

 

அரசமர இலைகள் அசைந்தாடும் இன்னிசையில்,

அருவிநீர் சலசலத்து அசைந்தோடும் தண்ணிசையில்,

அடர்கறுங் குயிலிசைக்கும் அழகான பண்ணிசையில்,

அமர்ந்திசைத் திடுவான் அம்மை யப்பன்!                                                                          40

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க