ஜெயராமன்

அன்புள்ள மணிமொழிக்கு,

சிறப்புப் பட்டிமன்ற விவாதமேடையில் உனது மழைச்சாரல் போன்ற பேச்சினைக் கேட்கும் சந்தர்ப்பம் அளித்தமைக்கு உனக்கு என் நன்றி. பள்ளிநாட்களில் விவாதங்களிலும், பிற போட்டிகளிலும் நான் உன்பேச்சில் பார்த்த அதே வேகம் கண்டேன். உனது அந்நாள் தமிழ் ஆசிரியர் எனும் முறையில் பெருமிதமடைகிறேன். “சாதனைக்குத் தேவை கூடுதல் உரிமை அதிகாரம் வழங்கலே” என்ற உனக்களிப்பட்ட தலைப்புக்கேற்ப உன்வாதம் அமைந்திருந்தது. கொடுக்கப்பட்ட கடமையை செவ்வனே ஆற்றினாய். இருப்பினும் உனது ஆசிரியர் எனும் முறையில், சில கருத்துக்களை இங்கு தந்துள்ளேன். பயனளிக்கும் என நம்புகிறேன்.
கூடுதல் அதிகாரம் ! கூடுதல் உரிமை !!

சமத்துவம் கோரலில், சமாதானத்தையும் சகோரதத்துவத்தையும் தியாகம் செய்துவருகிறோம் ! அதிகாரம், உரிமை ஆகிய இரண்டும், நீரும், உணவும், காற்றும் போல் தவிர்க்கமுடியாத தேவைகள் என்பது ஓரளவு உண்மையே. ஆனால்,  தனிமனிதனின், சமூகத்தின் முடக்கநிலைக்கு அவையிரண்டுமே காரணமென்பது அளவுக்கு மீறிய கற்பனை!! எவ்வூனங்களுமின்றிப் பிறந்தோருள் பலர் தம் கால்களில் நிற்க இயலாது முடங்கியிருக்கையில், முடக்கும் ஊனங்களுடன் பிறந்தோருள் பலர் முன்னிலை வகிப்பதைப் பார்க்கிறோம்! எவ்வித கைதூக்கிவிடலுமின்றி! அவர்களுக்குரிய நியாயமான உரிமைகள் நிராகரிக்கப்பட்டும்கூட!! இது எப்படி சாத்தியமாகிறது? எவை சாத்தியமாக்குகின்றன??அவர்களின் தன்னம்பிக்கை, மனதிடம், சகிப்புத்தன்மை, சாதிக்கும் உறுதி, அயரா உழைப்பு இவையன்றி வேறேது காரணங்களாக இருக்கமுடியும்?

காலங்காலமாய் அதிகாரம், பதவி, உரிமை, வசதிகள் ஆகியன தேவைக்கும் அதிகமான அளவில் பெற்றவர்கள் நற்சாதனையாளர்களாய் இருந்திருந்தால், நம்நாடு, சமுதாயம், உலகம் விண்ணையும் முட்டியிருக்கும்! இல்லையே!! சரி , அவர்கள் தம்மளவிலாவது நல்லமனிதர்கள் எனும் நிலைஎட்டினார்களா? இல்லையே! அவர்கள் சுவீகரித்திருந்த அதிகாரமும், உரிமைகளும் அவர்களை மனிதன் எனும் இனப்பெயருக்கே அருகதையற்றவர்களாக ஆக்கிவிட்டனவே!

கடமைகளை மதிப்பவர் உரிமைகளைப்பற்றி கவலைப்படுவதில்லை! கடமை இயற்றலுக்கு, அதிகாரமும் உரிமைகளும் தடைகளாய் இருந்ததில்லை. “நாடு ..சமூகம் உனக்கு என்ன அளித்தது என வினவாதே ; நீ முதலில் அவற்றிற்கு என்ன நன்மை செய்தாய் என வினவிக்கொள் ” எளிய நிலை இருந்து உன்னதநிலைக்கு உயர்ந்த ஒரு சாதனையாளரின் கூற்று!! அளவுக்கு மீறிய அதிகாரமும், உரிமைகளும், ஆதிக்கம் செலுத்தலிலும், அழிவை விதைப்பதிலுமே பலநிலைகளில் பலரால் நிகழ்ந்துள்ளதென்பதை வரலாறு காட்டும். ” ஒருவரைக் கெடுப்பதற்கு எளிதான வழி அவருக்கு உயர் அதிகாரம், உரிமைகள் வழங்குவதே” என்பது சத்திய வாக்கு!!

அடுத்து, வெளியிலிருந்து பெறப்படும் அதிகாரம், உரிமை என்பன கால, இட வரம்புகளுக்குட்பட்டன என்பதை நாம் அறிதல் அவசியம்; பெறப்பட்டு பின் எடுத்துக்கொள்ளப்படுவன; நிரந்தரமற்றது! மேலும், இல்லாத ஒன்று இருப்பதுபோல் தோன்றுவது ! ஆம் ! பூரண உரிமை, அதிகாரம் எவருக்கு உள்ளது? முதல் குடிமகன் ஜனாதிபதிக்கு உள்ளதா? உண்மையில், உயருயர் அதிகாரப் பதவிகள் தனிமனிதனின் இயல்பான தினசரி வாழ்க்கைக்கே..கடைப்பிடிக்க என்னும் நல்ல சித்தாந்தங்களுக்கே உலை வைத்துவிடுகின்றன. அவன் வாழ்க்கை அவனிடமே இருப்பதில்லை! உரத்தை அள்ளி அள்ளிப்போடுவதால் விளைச்சல் அமோகமாகாது!! பாரதியார் மனதில் உறுதியையும், நெஞ்சில் நேர்மையையும், நினைவில் நல்லனவற்றையும் பராசக்தியிடம் வேண்டினார்! அவையே மனிதன் உயர உண்மையான பலம் தருபவை!!  ஆய்ந்தறியாது அதிகாரம் வழங்கல் பெறுவோரைக் கொலைசெய்தலுக்குச் சமம்!  “குருவி தலையில் பனங்காய் ஏற்றுதல் ” போன்றது! பாரம்சுமக்க இயலாது குருவி மடியும். அனைவருக்கும் சம உரிமை, அதிகாரம் என்பது நடைமுறையில் கனவுநிலை!!

அடுத்தவரின் உணர்ச்சிகளைத் தூண்டி, அதிக உரிமைகளுக்காக குரல் எழுப்பச் சொல்லி, அவர்களின் அனுதாபியெனக் கூறிக்கொண்டு, தனக்கு கேடயங்களாக தனது வாழ்வின் ஆதாரங்களாக அவர்களை மாற்றி, போலிப் போராட்டங்களை நிகழ்த்தி, தான் ஜீவிக்கும் பலர் உள்ளனர். அமைதியாய் மனநிறைவுடன் வாழும் மனித சமூகத்தில் குழப்பங்களை விதைத்து, அவர்களது வாழ்வில் சூறாவளிகளுக்கு காரணமாகும் போலி சமூகநலவாதிகள் ஏராளம்!

உயர்கல்வி, உயர் பதவி, அதிகாரம், வசதிகள் இவை மட்டுமே ஒருவரின் ஆற்றலும் தன்னம்பிக்கையும் வளர்ப்பன என்றால், மேற்படி வரம்பினுள் இருப்பவருள் ஏன் தற்கொலைகளும், மனச்சிதைவுகளும், போதைக்கு அடிமையாவதும் நிகழ்கின்றன? தங்களைத்தாங்களே நிலைப்படுத்திக்கொள்ள முடியாதவர்களால், எங்கனம் சமூகத்தை உயர்த்தமுடியும்??

“தனக்கு அதிகாரம் இல்லை… உரிமையில்லை… ஒதுக்கப்பட்டுள்ளோம்” எனும் எண்ணமே, மனோவியாதி; மனத்தடை; சில வேளைகளில் கடமைகளினின்றும் கழன்றுபோகும் தன்மை; சோம்பேறித்தனம்; சுய மதிப்பின்மை; விமர்சனங்களுக்கு அச்சம் ஏதேனும் ஒன்றால் இருக்கலாம்.

மற்றுமோர் கண்ணோட்டம்!

வாழ்வோட்டத்தின் சில நியதிகளைக் காக்க, உயிரினங்களால் மாற்ற இயலாத, மாற்றப்படக்கூடாத, இயற்கையால் திணிக்கப்பட்ட கடமைகள், வலிமைகள், இயலாமைகள், சுதந்திரங்கள் உள்ளன; அவற்றுள் சில பாலினம் சார் பாகுபாடுகளும்கூட! இவைகளை எதிர்த்து போராடுவது, குரல் எழுப்புதல், ஒப்ப மறுத்தல், சமத்துவம் கோரல் அறிவுடமை அன்று ; நன்மைபயப்பதுமன்று. விபரீதங்களையே விளைவிக்கும். வல்லமை கொண்டுமட்டுமே எல்லா சாதனைகளையும் புரிந்துவிடமுடியாது. கடப்பாரையால் முடியாதன சிறு ஊசியால் முடியும்!  அவரவர் தத்தம் தனிச்சிறப்பினை உணர்தல் வேண்டும்; அதில் நம்பிக்கை வைக்கவேண்டும்; சிகரம் எட்ட வழிகள் வழிகள் ஆயிரம்; இருப்பதைக் கொண்டு பயணத்தைத் தொடங்கவேண்டும்; இல்லாததை எதிர்பார்த்து காத்திருத்தல்.. அதை நினைந்து ஏங்கித் தேங்கிப்போதல்.. இரண்டும் சாதிக்க விரும்புவோர் செய்யார்!

இன்னுமோர் கேள்வி ! அதிகத்திற்கு ஆசைப்படும்முன் இருப்பதை முழுதும் பயன்படுத்தினோமா? நலன் தரும் வழியில் பயன்படுத்தினோமா?? நடுநிலையில் யோசித்தால் இல்லையென்ற பதிலே மனமுரைக்கும். “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்பர். இருப்பதைக்கொண்டு மன உறுதியுடன் சாதிப்பதே உண்மையான சாதனை! அதுதான் வல்லமை!! பாறைகளை மரவேர்கள் பிளந்துவிடுகின்றன! நெம்புகோல்கள் கொண்டு அசையா பாரங்கள் அகற்றப்படுகின்றன! சாதனைக்கு மன வைராக்கியமும், அர்ப்பணிப்புமே தேவை.

“அறவழி நிற்போருக்கு ஆண்டவன் துணையுண்டு ” என்பர். எண்ணங்கள் நல்லதாயின் எம்முயற்சியிலும் வெற்றியே!

சத்யமேவ ஜயதே!! சத்யம் காத்தலே சாதனைக்கு தாரக மந்திரம்!!

நல்லாசிகளுடன்
உனது அந்நாள் தமிழ் ஆசிரியர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க