ரஞ்சனி நாராயணன்

மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே!

உன் நெடுநாளைய ஆசையை இன்று நிறைவேற்றியிருக்கிறேன். நீ சொல்வாயே, இந்த ஈமெயில் கொசு மெயில் எல்லாம் எனக்கு வேண்டாம். கொஞ்ச நேரம் எனக்காக செலவழித்து காகிதமும் பேனாவும் எடுத்து சற்று மெனக்கெட்டு நாலுவரி எழுது. எனக்குத் தோன்றும் போதெல்லாம் படித்துப் பார்ப்பேன் என்பாயே, அந்த உன் ஆசையை நிறைவேற்றிவிட்டேன்.

இப்போதெல்லாம் பழைய நினைவுகளே அதிகம் வருகின்றன, அம்மா. உன் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்குப் போவேனே, அந்த நினைவுகள். இன்னும் இன்னும் அந்த காலத்திய நினைவுகள் பசுமையாக மனதில் வாசம் வீசிக் கொண்டிருக்கின்றன, அம்மா.

‘எனக்கு ஏன் மணிவண்ணன் என்று பெயர் வைத்தாய், என் பள்ளித்தோழன் என்னை வணி மண்ணன் என்று கேலி செய்கிறான்’ என்று ஒருமுறை உன்னிடம் வந்து அழுதேன், நினைவிருக்கிறதா, அம்மா? நீ என்ன சொன்னாய் தெரியுமா? ‘அட! உன் தோழனுக்கு தெரியுமா? இரண்டு வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மாற்றிப் போட்டுப் பேசுவது தான் உன் பெயரை அவன் என்ன அழகாக மாற்றி இருக்கிறான் பார்’ என்று இன்னும் பல ஸ்பூனரிச வார்த்தைகளைச் சொன்னாய். ‘என்.எஸ். கிருஷ்ணன் இந்த உத்தியை ‘சந்திரலேகா’ படத்தில் பயன்படுத்துவார். ‘தரையிலே உக்காரு’ என்பதை உரையிலே தக்காரு என்பார்’ என்றாய்.

நான் கொஞ்சம் சமாதானம் ஆனவுடன், ‘இத பாரு மணி, நம் குடும்பமே ‘மணி’ குடும்பம். மணிமணியான குடும்பம்! உன் அப்பா பெயர் மணிமாறன், என் பெயர் மணிமொழி, உன் பெயர் மணிவண்ணன். உன் அக்கா மணிமேகலை. வேறு யாருக்காவது இப்படி கிடைக்குமா? இன்னொரு விஷயம் ஒப்பிலியப்பனை ஆழ்வார் ‘பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன்’ என்கிறார். திருமங்கையாழ்வாரும் ‘முத்தினை, மணியை, மணி மாணிக்க வித்தினை’ திருவிண்ணகர் போய் சேவித்துவிட்டு வாருங்கள்’ என்கிறார். உனக்குத் தெரிந்த திருப்பாவையில் மாலே! மணிவண்ணா! என்று கண்ணனை அழைக்கிறாள் ஆண்டாள். உன் பெயர் அத்தனை அழகான பெயர்’ என்று சொல்லிவிட்டு, ‘உன் மனைவியின் பெயரும் இதேபோல மணி என்று வரவேண்டும்’ என்றாய். நான் சின்னவன் அப்போது. ‘போம்மா’ என்று சிணுங்கிக்கொண்டு எழுந்து போய்விட்டேன். ஆனால் நீ இதைப் பற்றி எத்தனை தீவிரமாக இருந்திருக்கிறாய் என்று பிறகு தெரிந்தது. எனது மனைவி பெயர் ரமா என்றிருந்ததை நீ ரமாமணி என்று மாற்றினாய், எங்கள் திருமணத்திற்குப் பிறகு.

எப்படியம்மா நீ ஸ்பூனரிசம் பற்றியும் பேசுகிறாய், திவ்யபிரபந்தம் பற்றியும் பேசுகிறாய் என்று வியந்து நின்றேன் மனதிற்குள். இப்போதும் அந்த வியப்பு மாறவில்லை அம்மா!

எனக்கு உன்னையும் அப்பாவையும் நன்றாக நினைவிருக்கிறது. நீ கொஞ்சம் கருப்புதான் ஆனாலும் ரொம்பவும் அழகு. அப்பா நல்ல நிறம். சட்டென்று பார்த்தால் நீதான் உயரம் போலத் தோன்றும். உன் ஆளுமை அப்படி. உன் பெயர் போலவே நீ சொல்லும் மொழிகளும் மணிதான். பேசும்போதே உன் குரலின் மென்மை மற்றவர்களை வசீகரிக்கும். வார்த்தைகளையும் அப்படித்தான் தேர்ந்தெடுத்துப் பேசுவாய். கோவம் என்பதே வராது உனக்கு. மென்மையான குரலில் நீ பாடும் ‘ஆசை முகம் மறந்துபோச்சே’ இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறதம்மா. கடிதம் எழுதுவதும் நான் உன்னிடமிருந்து கற்றதுதான். குட்டிகுட்டியாக உன் எழுத்துக்கள் ஒரு சீராக மணிமணியாக இருக்கும். உன் அப்பா நீ இப்படித்தான் இருப்பாய் என்று அகக்கண்களால் உணர்ந்து இப்படி ஒரு பெயர் வைத்தாரோ? உன் கடிதங்களைப் படிக்கும்போது உன் வார்த்தைகள் அருவமாக நின்று மனதை வருடிக் கொடுக்கும்.

உன்னையும் அப்பாவையும் பலமுறை இங்கு வந்து என்னுடன் இருக்கும்படி சொன்னேன். ஏனோ இருவருக்கும் இங்கு வர விருப்பம் இல்லை. அக்காவிற்கும், எனக்கும் திருமணம் ஆகி இருவரும் வேறு வேறு ஊர்களில் இருந்தோம். நீங்கள் இருவரும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு திவ்ய தேசம் போய் அங்கு தங்கி எல்லா உற்சவங்களும் சேவித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லி கிளம்பிவிட்டீர்கள். எனக்கு மிகவும் வருத்தம். ஒருமுறை நீங்கள் இருவரும் திருக்கண்ணபுரத்தில் இருந்தபோது நான் மனைவி குழந்தைகளுடன் அங்கு வந்திருந்தேன். இரவு முநியதரையன் பொங்கல் வாங்கி வரச்சொல்லி எங்களுக்குக் கொடுத்தாய். இரவு நாமிருவரும் மெல்லியதாக அலையடித்துக் கொண்டிருந்த மிகப்பெரிய குளக்கரையில் உட்கார்ந்திருந்தபோது சொன்னாய்: ‘ஸ்ரீரங்கத்தில் பிறக்க வேண்டும்; திருக்கண்ணபுரத்தில் பரமபதிக்கவேண்டும். எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா? ஸ்ரீரங்கத்தில் பிறந்துவிட்டேன்.
‘சரணமாகும் தனதாளடைந்தார்கெல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்’

எனக்கு இந்த பாக்கியத்தைக் கொடுப்பாரா?’ என்றாய். என்னுடன் வர மறுத்துவிட்டாய்.

நீ இங்கு வரவேண்டும் அம்மா. வந்து என் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்லவேண்டும். சௌரிபெருமாள் பக்தனுக்காக கூந்தல் வளர்த்தது, தவிட்டுப் பானை தாடாளன், ஸ்ரீரங்கம் பெருமாளின் ஈரவாடை வண்ணான் சேவை – ஆ! மறந்துவிட்டேனே, திருவரங்கனின் உலா பற்றி நிச்சயம் சொல்லவேண்டும். இதைப்போல சரித்திர நிகழ்வுகளை நம் அடுத்த தலைமுறைக்கு நாம்தானே சொல்லவேண்டும் என்று நீதானே அடிக்கடி சொல்லுவாய்?

குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி இருப்பது எத்தனை பெரிய பாக்கியம்? இன்னும் ஒரு விஷயம், அம்மா. சீர்காழியில் இருக்கும் நம் பூர்விக வீட்டை விற்றுவிட வேண்டாம். நாங்கள் சின்ன வயதில் கோடைவிடுமுறை என்றால் ஸ்ரீரங்கத்தில் இருந்த பாட்டி வீட்டிற்குத் தான் போவோம். மறக்கமுடியாத நாட்கள்! கொளுத்தும் வெயில் எங்களை ஒன்றுமே செய்யாது. காலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு (அப்போதெல்லாம் காப்பி தான் எங்களின் ஆரோக்கியபானம்) கொள்ளிடத்திற்குப் போவோம். நாங்களாகவே நீச்சல் கற்றுக் கொண்டோம். வேடிக்கை என்ன தெரியுமா, அம்மா? என் பிள்ளைகளுக்கு பயிற்சியாளர் வந்து நீச்சல் சொல்லிக் கொடுப்பார். சிறுவயதில் ‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கேற்ப ஆடிபெருக்கன்று ரயில் பாலத்தின் மேலிருந்து கொள்ளிடத்தில் குதித்து நீந்திக் கரை சேர்ந்ததை அவர்களிடம் சொல்லிச் சொல்லி பெருமைப்படுவேன். என் குழந்தைகளுக்கும் பாட்டி வீடு என்கிற சொர்க்கத்தைக் காட்ட விரும்புகிறேன்.

என் ஞாபகசக்தி உனக்கு வியப்பாக இருக்கிறது, இல்லையா? ஆனால் ‘வர வர இப்போது நடப்பதெல்லாம் உங்களுக்கு நினைவே இருப்பதில்லை’ என்று ரமாமணி சொல்கிறாள் அடிக்கடி. டாக்டர் வருகிறார். ஏதேதோ மருந்துகள் கொடுக்கிறார். இதோ இப்போதும் என் காலடியில் ஒரு சின்னப் பையன் உட்கார்ந்திருக்கிறான். என்னை தாத்தா, தாத்தா என்கிறான். யார் என்றே தெரியவில்லை.

உன்னுடன் செலவழித்த நாட்கள் மட்டுமே நினைவில் இருக்கின்றன. உனக்கு தினமும் பல பல கடிதங்கள் எழுதுகிறேன்.

மணிமொழியாகிற என் அம்மா…..என் அம்மா…..

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே!

  1. தாய்மையின் மீதான பற்றுதலோடு சரளமான நடையில் எழுதப்பட்டுவந்த கடிதத்தின் இறுதிப்பத்தி சரேலென்று மனம் கனக்கச் செய்துவிட்டது. அருமையாக கோர்வையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.

  2. நான் எழுத நினைத்ததைக் கோர்வையாக எழுதி இருக்கிறேனா என்று கொஞ்சம் சந்தேகம் இருந்தது. உங்கள் மறுமொழி எனக்கு அந்த சந்தேகத்தை போக்கியதுடன், பாராட்டுதல்கள் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது, கீதா.
    நன்றி!

  3. அன்பு   ரஞ்சனி, மகனின் கடிதம் மிக அருமை. அவனே தாத்தா என்கிற வரை கடிதம் வந்துவிட்டது. எல்லாம் மறந்த  நிலையிலும் அன்னையை மறக்காத மகன். மிக அருமை.   அரங்கனின் மகிமையும் சௌரிராஜனின் மகிமையும் சேர்ந்து உலா வந்துவிட்டது உங்கள் கடிதத்தில். பரிசு கிடைத்தற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  4. கடித இலக்கியம்.

    நான் இன்னொரு மாதிரி எதிர்பார்த்தேன். அம்மா மறைந்திருப்பாள் என்று மட்டும்.

    இங்கும் அப்படித்தான் என்றாலும் வித்தியாசமாக.. அம்மா மட்டும் என்றும் நினைவை விட்டு மறைவதில்லை. ஆண்கள்தான் அம்மாவிடம் அதிக பாசமாக இருப்பார்கள் என்று சொல்லப்படுவதை ஒரு பெண்ணாக நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

  5. அருமையான கடிதம்.  எல்லாருமே இப்படித் தான் அவங்க அம்மாவை நினைச்சுட்டு இருப்பாங்க போல! எனக்கும் அம்மா நினைவு இப்போது அதிகமா வருகிறது.  இது ஶ்ரீராமுக்கும் சேர்த்துக் கொடுத்த பதில்.  ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அப்பாவை விட அம்மா கிட்டேத் தான் அதிகம் பழகி இருப்பாங்க.  அம்மா நினைவு தான் வரும். 🙂

  6. எல்லாமே மணிமணியான விஷயங்கள்.  இரண்டு நாட்கள் முன்னால் கூட மெகா தொலைக்காட்சியில் திருக்கண்ணபுரத்தைக் காட்டினாங்க. நீங்களும் எழுதி இருந்தீங்க.  நாங்க போயிட்டு வந்ததையும் சொல்லி இருந்தேன்.  ஆனால் தவிட்டுப்பானை தாடாளன் தான் புரியலை. ஈரவாடை வண்ணானை நல்லாவே தெரியும். 🙂

  7. @வல்லி,
    கடிதத்தைப் படித்து மனம் நெகிழ்ந்து எழுதிய கருத்துரைக்கு நன்றி! என்னால் மறக்கமுடியாத இரண்டு ஊர்கள் ஸ்ரீரங்கம், திருக்கண்ணபுரம். என்னுடைய கடைசி ஆசையும் கடிதத்தில் இருக்கிறது, பாருங்கள். 

  8. @ஸ்ரீராம்,
    நீங்கள் சொல்லியிருப்பது போல முடித்திருந்தால் அது சாதாரணக் கடிதம் ஆகியிருக்கும், இல்லையா? போட்டிக்கு என்று எழுதும்போது சிறப்பு சேர்க்கை வேண்டுமே. 
    இந்த மாதிரி நிலையில் உள்ள என் சொந்தக்காரர் ஒருவரை பார்த்துவிட்டு வந்து, அன்று முழுவதும் என்னால் வேறு எதைப்பற்றியும் சிந்திக்க முடியவில்லை. அந்தத் தாக்கத்தையும் சேர்த்து எழுதினேன்.

    அம்மாவிடம் எல்லா ஆண்களும் பாசமாக இருப்பார்கள் (திருமணத்திற்குப் பிறகு!) என்று சொல்லமுடியாது, ஸ்ரீராம். இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. 

    இன்னும் ஒரு கதை மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை எழுதி முடித்தவுடன் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கலாம்!
    கருத்துரைக்கு நன்றி!

  9. @கீதா
    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. எனக்கும் என் அம்மாவின் நினைவு அதிகம் வருகிறது – வயதாவதாலோ என்னவோ!
    சீர்காழி உற்சவப் பெருமாளை ஒரு மூதாட்டி ஒரு தவிட்டுப் பானைக்குள் வைத்துக் காபாற்றினாளாம், அந்த கோவில் அன்னியப் படையெடுப்புக்கு ஆளான போது. அதனால் அவர் பெயர் தவிட்டுப் பானை தாடாளன்.
    ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்களுக்கு ஈரவாடை வண்ணான் சேவை தெரியாமல் போகுமா?
    அவசியம் திருக்கண்ணபுரம் போய்விட்டு வாருங்கள். 
    கடிதத்தைப் படித்து பாராட்டியதற்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.