ஞா.கலையரசி 

 

அன்பு மணிமொழிக்கு ஆதிரையின் மடல்!

அன்பு நண்பி மணிமொழிக்கு ஆதிரை எழுதியது.  இங்கு எல்லோரும் நலமே.  அங்கு உன் நலத்தையும் உன் குடும்பத்தார் நலத்தையும் அறிய அவா. 

கவினுக்கு இன்றோடு ஐந்து வயது பூர்த்தியாகிறது.  பெரியவளுக்கும் சின்னவளுக்கும் ஏற்படும் சண்டை இன்னும் நின்றபாடில்லை.  இருவரின் சண்டையைத் தீர்ப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது.

இருவருக்கும் தாய்மொழி வழிக் கல்வி தான் கொடுக்க வேண்டும் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தேன்.  ஆனால் நம் மக்களிடையே ஆங்கில மோகம் அளவுக்கதிகமாக இருப்பதால், நல்ல பள்ளிகள் என்ற பெயர் வாங்கிய அனைத்திலும், ஆங்கில வழிக்கல்வியே போதிக்கப்படுகிறது.

அந்தப்பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு மக்கள் தவமாய்த் தவமிருக்கிறார்கள்.  காலையில் பத்துமணிக்குத் திறக்கப்படும் பள்ளியில் குழந்தையைச் சேர்க்க விண்ணப்பம் வாங்க, இரவு முழுதும் சாலையில் கியூ வரிசையில் நிற்கிறார்கள்!

ஊரோடு ஒத்துவாழவேண்டும் என்ற பொன்மொழியைக் காரணம் காட்டி குழந்தைகளை ஒரு பெயர் பெற்ற கான்வெண்டில் சேர்த்து விட்டார் என் கணவர்.  என்னால் எதுவும் செய்ய இயலவில்லை.  இரண்டாவது மொழியாக பிரெஞ்சோ, ஹிந்தியோ எடுக்கக்கூடாது, தமிழ் தான் எடுக்க வேண்டும் என்பதில் மட்டும் நான் பிடிவாதமாக இருந்துவிட்டேன்.

பிள்ளைகளுக்குத் தான் ஏற்கெனவே தமிழ் தெரியுமே?  தமிழுக்குப் பதிலா ஹிந்தி, சம்ஸ்கிருதம் எதையாவது கத்துக்கலாமே, மதிப்பெண்ணும் கூடுதலாகக் கிடைக்கும் என்கிறாள் என் பக்கத்து வீட்டு மாமி.  மதிப்பெண் ஒன்றை மட்டுமே அடிப்படையாக வைத்துக் குழந்தைகளின் சிந்தனைத் திறனைத் தீர்மானிக்கும் நம் மக்களின் அறியாமை எப்போது மாறும் மணி?

குழந்தைக்குத் தமிழ் பேசத்தெரிந்தால்  போதாதா?  தமிழை எழுதப் படிக்கத் தெரிந்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? என்பது இவரது கேள்வி.

பொருள் புரியாமல் கவின் பாடும் ஆங்கில நர்சரி பாடல்களைக் கேட்டுப் புளகாங்கிதமடைகின்றனர் என் வீட்டார்.  வானம் பார்த்த பூமியில் வாழும் நம் குழந்தைகள், மழையே மழையே வா வா என்று வரவேற்றுப் பாடாமல், “ரெயின் ரெயின் கோ அவே”  என்று உற்சாகமாகப் பாடும்போது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை மணி!

சின்னவள் தூக்கத்தில் ரொம்பக் கெட்டி.  காலையில் அவளை எழுப்பிக் கிளப்புவது பெரும் பாடாக இருக்கிறது.  குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் கொஞ்ச நேரம் போய் விளையாடி விட்டு வாருங்கள் என்று சொல்கிறேன்.  சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்?நம் சின்னவயதில் தெருவில் இருட்டுகிற மட்டும் விளையாடிய அனுபவங்கள் எவ்வளவு பசுமையாக நினைவிலிருக்கின்றன?

‘மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா,’ என்றானே பாரதி!  ஆனால் வெளியே சென்ற கொஞ்ச நேரத்தில் குழந்தைகள் இருவரும் ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பி விடுகின்றனர்.  தெருவில் விளையாடுவதற்கு யாருமே இல்லையாம்.  பள்ளி விட்டு வந்தவுடன் குழந்தைகளை டியூசனுக்கு அனுப்பி விடுகின்றனர். அல்லது வீட்டுப் பாடம் செய்து  பிள்ளைகள் களைப்படைந்து, அப்படியே தூங்கி விடுகின்றனர்.

விரல்கள் ஒடிந்து போகும் அளவுக்கா குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பார்கள் மணி?  ஒரு நாள் கவினுக்குக் கொடுத்த  வீட்டுப் பாடத்தைக் கண்டு மலைத்துப் போய், குழந்தை எழுதுவது போல இடது கையால் நானே கிறுக்கி எழுதியனுப்பினேன்.  ஆனால் அவளது வகுப்பு ஆசிரியை அதைக் கண்டுபிடித்து, “நாளையிலிருந்து உன் அம்மாவைப் பள்ளிக்கு வரச்சொல் என்றாளாம்!” எப்படிக் கண்டுபிடித்தாள்? என எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம்!

கவின் எழுதியதையும், நான் எழுதியதையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.  அவள் ஓர் எழுத்தைச் சின்னதாகவும், இன்னொன்றை மண்டை மண்டையாகவும் எழுதியிருக்கிறாள்.  ஆனால் நான் என்னதான் கிறுக்கி எழுதியிருந்தாலும், எல்லா எழுத்துக்களும் ஒரே அளவாக யூனிபார்மாக இருந்ததை வைத்து அவள் கண்டுபிடித்திருக்க வேண்டும்.  பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்களே, அது போல திருட்டுத் தனம் செய்தாலும் மாட்டிக்கொள்ளாமல் செய்ய சாமர்த்தியம் வேண்டும் மணி!

பெரியவள் கயல் ஒருநாள் பள்ளி டயரியை மறந்து போய் விட்டாள் மணி!

அதற்காக ஒரு நாள் முழுதும் அவளை வகுப்பிற்கு வெளியே முட்டி போட்டுக்கொண்டே, ‘இனிமேல் டயரியை மறக்காமல் எடுத்துவருவேன்,’ என்று இருநூறு முறை இம்பொசிஷன் எழுதச் சொல்லியிருக்கிறாள் அவள் வகுப்பு ஆசிரியை.  மாலை வந்து கயல் அழுது கொண்டே முட்டியைக் காட்டவும், என் கோபம் எல்லையைக் கடந்து விட்டது மணி!  இத்தனைக்கும் இவள் தான் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவி!

குழந்தையுடன் போய் அந்த ஆசிரியையைப் பார்த்து என் ஆத்திரம் தீருமட்டும் திட்டிவிட்டு வந்து விட்டேன் மணி!  நீயெல்லாம் கல்யாணமாகி ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால் உனக்குக் குழந்தையின் அருமை தெரிந்திருக்கும் என்று திட்டியபோது அவள் முகமே சுருங்கிவிட்டது.  என் வீட்டாரோ ஏன் இப்படித் திட்டினாய், கண்டிப்பாக குழந்தைக்கு டி.சி. கொடுத்து விடுவார்கள் என்று என்னைப் பயமுறுத்தினர்.

குழந்தைக்கு அநீதி இழைக்கப்பட்டால் கூடப் பெற்றோர் இது போல் பயந்து கொண்டு கேள்வி கேட்காததால்,  இவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.  டி.சி. கொடுத்தால் கொடுக்கட்டும்; இப்படிப்பட்ட பள்ளி என் குழந்தைக்குத் தேவையில்லை என்று கூறினேன்.  ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

பள்ளிகள் குழந்தைகளைக் குழந்தைகளாக நடத்தாமல் சிறைக்கைதிகள் போல் நடத்தும் கொடுமை இனியாவது மாற வேண்டும்!  சிறுகதை மன்னர் புதுமைப்பித்தனின் ‘மோட்சம்,’ கதையைப் படித்திருக்கிறாயா மணி?

அக்காலத்தில் ஆசிரியர் மாணவரை நடத்தும் போக்கு, கொஞ்சங்கூட  மாறாமல் இன்னும் அப்படியே தான் இருக்கின்றது!

தெருவில் கிடந்த ஒரு நாய்க்குட்டிக்கு ஒரு நாள் பரிதாபப்பட்டுப் பால் ஊற்றப்போய், இப்போது அது எனது மூன்றாவது குழந்தையாகி விட்டது!   குழந்தைகள் அதற்கு ஜிம்மி என்று பெயரிட்டிருக்கிறார்கள்.  அதன் பெயரை யாரோ கேட்ட போது ‘பி.ஜிம்மி,’ என்று இன்ஷியலோடு கவின் சொன்னதைக் கேட்டு, நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.  அவளுடையது  போலவே ஜிம்மிக்கும் ‘பி’ இன்ஷியலாம்!

நீ மாற்றலாகிச் சென்ற பின்னரும், நம் நட்பு தொடர இந்தக் கடிதம்  மட்டுமே உதவுகிறது.  இது மட்டும் இல்லையென்றால் நம் தொடர்பு எப்போதோ அறுபட்டுப் போயிருக்கும்.  என் எண்ணங்களை, அனுபவங்களை, உன்னிடம் பகிர்ந்து கொள்வதில் உள்ள இன்பமே அலாதி தான் மணி!

மற்றவை உன் கடிதம் கண்டு பதில்,

இப்படிக்கு உன் அன்பு நண்பி,

ஆதிரை

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அன்பு மணிமொழிக்கு!…

  1. வகுப்பில் மற்ற மாணவர்களுடன் ஒப்பீடு, தவறு செய்தால் அனைவர் முன்னிலையிலும் கேவலமாக பேசுதல், தண்டித்தல், கை ஒடியும் அளவுக்கு வீட்டுப்பாடம் என்று குழந்தைகளிடமிருந்து அவர்களின் குழந்தைமையைப் பறிக்கும் வகையில், பல பள்ளிகள் நடந்துகொள்கின்றன. அவற்றைக் கடிதத்தின் மூலம் சுட்டியிருப்பது சிறப்பு. 
    பி.ஜிம்மி என்று குழந்தை, ஜிம்மிக்கும் இனிஷியல் கொடுத்தது ரசிக்கவைத்தது. பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *