கவிஞர் காவிரிமைந்தன்

வார்த்தைச் சித்தர்  – ஞான பாரதி

வலம்புரி ஜான் அவர்கள் வழங்கிய

சிறப்பு வானொலி நிகழ்ச்சிப்பதிவின் எழுத்தாக்கம்

நிகழ்ச்சி தயாரிப்பு – திரு.என்.சி. ஞானப்பிரகாசம்

அமைப்பில் உதவி – திரு.ஜெ.சுரேஷ்குமார்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் எழுத்தாக்கம் –

கவிஞர் காவிரிமைந்தன்

(நாள் – 13.10.2001) சனிக்கிழமை காலை  8.00 மணி முதல் 9.00 மணிவரை

 

(தொடக்கம்)

p67aநூறாண்டு காலம் வாழ்க.. நோய் நொடியில்லாமல் வாழ்க

       ஊராண்ட மன்னர் புகழ்போல.. உலகாண்ட புலவர்தமிழ்போல …

பாடல் ஒலிக்கிறது..

வார்த்தைச் சித்தர் வானொலி நிலையத்தின் பதிவு அறையில் நுழைகிறார்.

என்.சி.ஞானப்பிரகாசம் : வணக்கம் நேயர்களே..

 வாழ்க்கையில் சிலர் சித்து வேலை செய்வார்கள்.  ஆனால் வார்த்தையில் சித்துவேலை செய்பவர்தான் இன்றைய சிறப்பு விருந்தினர்!  பாரெங்கும் பாரதியின் பெருமைகளை பயமின்றி சொல்லிவரும் படைப்பாளி இவர்!  இன்றைய சினிமா நேரத்தின் விருந்தாளி!  சிறப்பு விருந்தினரான வலம்புரி ஜான் அவர்களை வருக வருகவென வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

 என்.சி.ஞானப்பிரகாசம் – வணக்கம் சார்!  செளக்கியமா இருக்கீங்களா?

வலம்புரியார் –  நல்லா இருக்கேன்.

 என்.சி.ஞானப்பிரகாசம் – பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே உங்களுக்குத் தமிழ்மீது ஆர்வம் அதிகமா?

 வலம்புரியார் –  படிக்கின்றபோதே தமிழின்மீது இயல்பான ஒரு நாட்டம் ஏற்பட்டது.  மே தினத்தில் முதன்முறையாக மேடையில் பேசினேன்.  மேதினியில் மக்களுக்கு மேன்மை தரும் தினம் மே தினம் என்பதே என்னுடைய முதல் வரி!  பேசுவதற்காக படிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தை இயற்கை எனக்குள் வரவழைத்ததால் அதற்கப்பாலே படிக்காமல் இருக்க இயலவில்லை.  பேசுவதற்காகப் படித்தேன்.  அதற்கப்பாலே படிப்பதில் அமிழ்ந்து தொடர்ந்து தொய்வில்லாமல் இவையெல்லாம் படிக்கிறபோது தமிழினுடைய மேன்மை, மொழியினுடைய சிறப்பு நெஞ்சுக்குள்ளே குடிகொண்டன.

 என்.சி.ஞானப்பிரகாசம் – நீங்கள் விரும்பியிருக்கின்ற திரைப்பாடல் – இன்று போய் நாளை வாராய் என..

 வலம்புரியார் – காரணம் வந்து, அது இசைச் சித்தருடைய பாடல் என்பதற்காக மாத்திரமல்ல..  பிறிதோர் இப்போது அப்படிப் பாட முயற்சித்தாலும் அவர் மாதிரிப் பாடலாமே தவிர அது போல பாட இயலுமா என்பது கேள்வி.  அது மாத்திரமில்லாமல், இந்த மண்ணில் எப்போதும் மக்கள் போற்றி வணங்குகிற, வாசிக்கப்படுகிற இராமயணத்திலே ஒரு சிறந்த கட்டத்தை மையமாக எடுத்துச் சொல்கிறது.  இராவணன் என்றால் அவன் வந்து ஒரு அவல வீரன்! ஏதோ ஒரு மோசமானவன் என்றெல்லாம் சித்தரித்துக் காட்டுகின்ற நிலைமை மாறி அவனுக்குள்ளும் ஒரு உள்ளமிருக்கிறது! அந்த உள்ளம் கள்ளமில்லாமல் இருந்தது என்பதற்கு கனிந்த அடையாளம் இப்பாடல் இருப்பதால் இப்பாடலை நான் எப்போதும் விரும்புவேன்..

 பாடல் – இன்று போய் நாளை வாராய்.. என

                     எனை ஒரு மனிதனும் புகலுவதோ..

என்.சி.ஞானப்பிரகாசம் – நீங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது.. சுவராஜ்ஜியா என்றொரு பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருந்தது.  அதில் ஒரு அரசியல் கட்டுரை.. அந்தக் கட்டுரையில் தவறு ஒன்று உள்ளது என்று நீங்கள் சுட்டிக் காட்டி எழுதியிருந்தீர்கள்.  அந்த அரசியல் வித்தகர் – அரசியல் ஞானி – உங்களுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தார்! அதைப் பற்றிப் பேசலாமே!

வலம்புரியார் – அது என்னுடைய புதுமுகவகுப்பில் நான் இருந்தபோது அந்த பாளையங்கோட்டையில் வருகிற ஒரே பத்திரிக்கை சுவராஜ்ஜியாதான்.  வேறு ஆங்கிலப் பத்திரிக்கைகள் வராது.  பிளிட்ஸ் மற்றும் சுவராஜ்ஜியா வரும்.  சுவராஜ்ஜியா வாங்கிக் கொண்டு ஒரு நாள் வாசித்தேன்.  வாசிக்கிற போது குடும்பக் கட்டுப்பாட்டிற்கு எதிராக சக்கரவர்த்தி ராஜாஜி ஆச்சாரியார் அவர்களுடைய கட்டுரை வந்திருந்தது.  அது அவருடைய கருத்து.. ஆனால், அப்படி அந்தக் கட்டுரை வெளிவந்த அதே பக்கத்தில் ‘நிரோத்’ பற்றிய விளம்பரம் வந்திருந்தது. ஆகவே இவருடைய பத்திரிக்கை .. அந்தப் பத்திரிக்கையில் இப்படிப்பட்ட விளம்பரம் வரலாமா என்று தைத்தது.  ஆகவே உடனே நான் அவருக்கு எழுதினேன்.  என் வயதைப் பார்க்காமல், நான் இந்த நாடு அறிந்தவனா அறியாதவனா என்பதையெல்லாம் கருதாமல் நான் சுட்டிக் காட்டிய கருத்து உண்மையா இல்லையா என்பதை மாத்திரமே பார்த்து அவர் உடனே எனக்குப் பாராட்டுத் தெரிவித்தார்கள்.  அந்தக் கடிதத்தைக்கூட என்னுடைய புத்தகம் ஒன்றில் அப்படியே பதிப்பித்திருக்கிறேன்.  இரண்டாம் அலைவரிசை என்கிற புத்தகத்தில் அது காணக் கிடைக்கிறது.

என்.சி.ஞானப்பிரகாசம் – அவர் என்ன எழுதியிருந்தார் என்பதை நேயர்களுக்குச் சொல்லலாமே..

வலம்புரியார் – வேறொன்றுமில்லை.. அவர் எழுதியதெல்லாம் இந்த மாதிரி.. நீங்கள் சுட்டிக்காட்டியது சரி.. ஆனால் சுயராஜ்ஜியா என்னுடைய பத்திரிக்கையல்ல! அதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நீங்கள் சுட்டிக் காட்டியது சரி என்றால் நான் இதை வந்து பதிப்பாளருக்கு உடனே தெரிவிப்பேன்.. ஆசிர்வாதங்கள்.. (அவருடைய தமிழில்..) என்று எழுதியிருந்தார்.

என்.சி.ஞானப்பிரகாசம் – அடுத்து நீங்கள் விரும்பிய பாடல்..

வலம்புரியார் – அது ‘உன்னழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசைவரும்!’ என்று சொல்கிற போது அது ஒரு உச்சமான கற்பனை! ஒரு பெண்ணைப் பார்த்து பெண் மயங்குகிறாள் என்றால் அது உண்மையாகவே அதிலே வஞ்சமிருக்க வேண்டிய இடத்திலே நெஞ்சமிருக்கிறது!  அந்த அழகு அப்படிப்பட்டது என்று சொல்வதற்கு உவமிக்கிற இடம் சிறப்பாக இருக்கிறது.  அது மாத்திரமல்லாமல் இன்றைக்கு இசை என்பது ஒரு கூத்தடிப்பு போல ஆகிப்போன காலததில் மென்மையான ஒரு தென்றலைப்போல் ஒரு மகரந்த வரிகளை வீசுவதைப் போல ஒரு மத்தளம் மெலிதாய் அதிர்வதைப் போல – வருகிற அந்த இசை எனக்குள் சின்ன வயதில் ஏற்படுத்தியிருக்கிறது.  நமது ரத்த அணுக்களில் சின்ன வயதில் கேட்ட ஒரு பாடல் இடம்பிடித்துக் கொள்கிறது. அது எத்தனை வயதானாலும் அப்பாடல் நம்மோடே பயணிக்கிறது.  அப்படித்தான் இப்பாடல் இன்னமும் என் கூடவே வந்து கொண்டிருக்கிறது.

உன்னழகைக் கன்னியர்கள்… (உத்தமப் புத்திரன் திரைப்படத்தில்)

என்.சி.ஞானப்பிரகாசம் – அபரீதமான புகழ் தேவையெனில் சிலர் அரசியலை விரும்புகிறார்கள்.. சிலர் சினிமாவை விரும்புகிறார்கள். சிலர் ஆன்மீகத்தை விரும்புகிறார்கள்.  வார்த்தைச் சித்தருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது எது?

வலம்புரியார் – புகழ் பெறுவதற்காக நான் இவைகளைத் தேடவில்லை.  காரணம் புகழைத் தேடுபவர்களுக்கு புகழ் ஒருபோதும் வராது தேடாமல் இருந்தால் வரும்.  அப்ப.. தேடாமலிருந்தால்தான் வரும் என்பதற்காகவா என்றால் அதுவுமில்லை! இயல்பாக நமக்கு வாழ்க்கையில் எழுத்து பேச்சு இவைகளெல்லாம் எளிதாக அமைந்தன.  ஆன்மீகத்திலே ஒரு நாட்டமிருக்கிறது.  ஆன்மீக நாட்டம் என்பது பிறவிதோறும் தேடுகிற தேடலால் வருவது.  இந்தப்பிறவியிலே தொடங்கி ஒருவர் வந்து சமயச் சின்னங்களை  அணிந்துகொண்டு தன்னை வந்து ஒரு ஆன்மீக ஞானியாக ஆக்கிக்கொள்ள இயலாது.  பிறவிதோறும் தேடுகிற தேடல்.  அந்தப் பிறவிதோறும் தேடுகிற தேடலுக்கு இந்தப் பிறவியில் பதில் கிடைத்திருக்கிறதா என்றால் கிடைத்திருக்கிறது.  அந்த கிடைப்பு என்பது அரிதானது.  அது கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  எடுத்துச் சொன்னாலும் அதை எடுத்துக் கொள்பவர்கள் ஒன்றிரண்டு பேர்தானிருப்பார்கள்.  புத்தனிடம் வந்து ஆனந்தன் கேட்டான்.. புத்தா.. நீ ஞானம் பெற்றவன்.  ஞானம் பெறுவது எப்படி என்று எனக்குச் சொல்லித்தருவாயா என்று கேட்டான்.  அதற்கு கெளதம புத்தர் – நான் சொல்லித்தர இயலாது.. ஆனால் நீ கற்றுக் கொள்ளலாம் என்றார்.  சொல்லித் தராததை நான் எப்படிக் கற்றுக் கொள்வது என்று அவர் 20 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டேயிருந்தார்.  ஞானம் என்பது ஒரு வாய்ப்பாடல்ல.. வெளிப்படுத்துவதற்கு!  புத்தனுக்கு எவனும் சொல்லவில்லை.  புத்தன் தானே கண்டெடுத்தான்.  கண்டெடுப்பதே ஞானம். பிறர் உணர்த்துவதல்ல.. நாமே கண்டுபிடிப்பது!  ஆக அந்த மாதிரி முயற்சியில் இறங்கி ஓரளவு நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.  ஆக எதிலுமில்லாத மனநிறைவு ஆன்மீகத்திலிருக்கிறது.  அதிலொன்றும் மறுப்பதற்கில்லை.  இன்னுமும் சொல்லப்போனால், அதில் சுயநலம் கலந்திருக்கிறது.  காரணம் அது பேரின்பம் என்பதை அறிந்தவன்தான் அறிவான்.

என்.சி.ஞானப்பிரகாசம் – அடுத்து.. கர்ணன் படத்திலிருந்து ஒரு பாடல்..  என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்..

வலம்புரியார் – இது இந்த வரலாற்றுப் படங்கள் பொதுவாக எனக்குப் பிடிக்கும். ஆங்கிலத்திலுமே கூட வரலாற்றுப்படம் வந்தால் அதை சென்று நான் பார்ப்பேன்.  திரையரங்குகளுக்கே பல ஆண்டுகளாக போகாமலிருக்கிற நான் தப்பித்தவறி எங்கேயாவது வரலாற்றுப்படம் ஆங்கிலம் என்றால் அதை சென்று பார்ப்பது வழக்கம்.  வரலாறு என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டுவது! நேற்றைக்கு வந்து நடந்த ஒரு சம்பவத்திற்கு என்ன விடையோ அதுதான் இன்றைய சம்பவத்திற்கும்! விடை ஒன்றுதான்! காலங்களால் அது மாறலாம்!  தேசங்களால் அது மாறலாம்! ஆனால் வாழ்க்கை அளிக்கிற விடை ஒன்றுதான்! ஆக அந்த அடித்தளத்தில் வரலாற்று மாணவன் நான்.  வரலாறு வழி காட்டுகிற காரணத்தால் இது ஒரு வகையான வரலாறு. கர்ணனுடைய வரலாறு!  அவனுடைய சிறப்பியல்புகளைச் சொல்வது.  அவனுடைய சிறந்த அந்த நோக்கங்கள்.. வாழ்க்கை நெறிகளைச் சொல்வது.  அதை மிகச் சரியாக அவர்கள் சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள்.  அந்தப் பாடலிலே ஒரே இசையில் இல்லாமல் பல இசைகளைக் கலந்து அது நம்மை வந்து நோகடிக்காமல்,  நொந்துதலில் ஆழ்த்தாமல், அப்படியே நுங்கு நுரையாக பொங்கிவரும் பாடல் என்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்

வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்

பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்

பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்

என்.சி.ஞானப்பிரகாசம் – .இலக்கியம் சமுதாய மாற்றத்தை உருவாக்குமா?

வலம்புரியார் – சமூக மாற்றத்தை உருவாக்குகிற ஒன்றுக்குப் பெயர்தான் இலக்கியம்.  ஒரு காலத்தில் இலக்கியம் கற்பனையாக இருந்தது.  குற்றாலக் குறவஞ்சியில்.. திரிகூட ராசப்பக் கவிராயர் பாடுகின்றபோது..

மந்துசிந்துகனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கவனசித்தர் வந்துவந்து காயசைத்து விளப்பர்

செழுங்குரங்கு தேமாவில் பழங்களைப் பந்தடிக்கும்

தேன்மலர்செண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்

என்று பாடினார்.. ஆக.. வெடிக்கும்  நடிக்கும்  துடிக்கும் என்றெழுதுவதும்.. இவர் பாடுகிற பாட்டிலே குற்றாலமே குளிர்ந்து கீழே இறங்கிவருகிற அழகைப் பார்க்கிறோம் என்று பேசுவதும் சமுதாயத்திற்கு உதவுமா?  கற்பனையிலே மிதக்கிறவனுக்கு அது கருவியாகுமே தவிர, சமுதாய மாற்றத்திற்கு உதவாது.  ஆனால், உலகம் முழுவதிலும் ஹோஷோவிலிருந்து, மாசேதுங்கிலிருந்து அது மாதிரி வரலாற்றை உருவாக்குகிற மனிதர்கள் கவிதைகளால் சமுதாயம் மாற வேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள்.  ஆக.. சமுதாயத்தை மாற்றுகின்ற கருவிதான் இலக்கியம். வாழ்க்கையிலிருந்து வருவது இல்கியம்.  வாழ்க்கைக்கு வழிகாட்டுவது  இலக்கியம்.

என்.சி.ஞானப்பிரகாசம் – ஒண்ணுமே புரியலே இப்படி ஒரு பாடல்..

வலம்புரியார் – உலகத்திலே எனக்கு ஒரு வேறு பாடு உண்டு.  மற்றவர்களுக்கும் எனக்கும் ஒரு வேறுபாடு என்று நான் கருதுகிறேன் என்றால்.. எனக்கொன்றும் தெரியாது என்பது தெரியும். பலருக்கு ஒன்றும் தெரியாது என்பது தெரியாது.  தெரியாது என்பதை தெரிந்து கொள்வது ஞானத்தினுடைய துவக்கம்.  ஆக எனக்கு ஒன்றும் தெரியாதது மாத்திரமல்ல.. என்னதான் முயற்சித்தாலும் இறுதிவரை தெரிந்து கொள்ள இயலாது என்பதுகூட எனக்குத் தெரிந்திருக்கிறது.  ஆனால், தெரிந்து கொள்ள முடியாத ஒன்றுக்காக ஏன் முயற்சிக்கிறீர்கள் என்றால்.. முடிவிலே இன்பம் இல்லை.. தேடலிலேதான் இன்பம்.. வானத்தைப் பாருங்கள்.. நீலவண்ணமாக.. அந்த வானமிருக்கிறதே.. அதை எங்காவது தொட இயலுமா? காரணம் வானம் என்று ஒன்று இல்லவே இல்லை.  தோற்றம்தான்.. ஆக, தேடலில் உள்ள சுகம் அடைவதில் இல்லை.  ஆக இது குழப்பமல்ல.. இது வளர்ச்சி!

வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுகிற பாட்டு இது.. ஆகவே எனக்குப் பிடிக்கும்!

ஒண்ணுமே புரியலே உலகத்திலே

என்.சி.ஞானப்பிரகாசம் – ஒரு பக்கம் கவிதை.. மறு பக்கம் ஆன்மீகம்.. இன்னொரு பக்கம் – பட்டிமன்றம்; பிறிதொரு பக்கம் தொலைக்காட்சி.. கிடைக்கின்ற 24 மணி நேரத்தை எப்படி பெருக்குகிறீர்கள்? வகுக்கிறீர்கள்? எப்படி கூட்டுகிறீர்கள்?

வலம்புரியார் – நான் அதை ஒரு எந்திரத்தைப் போல செய்வதில்லை. ஒரு நாளில் இதிலிருந்து அதைச் செய்ய.. அதிலிருந்து இதைச் செய்ய என்றால் மனிதன் எந்திரமயமாகிப் போகிறான்.  எந்திர வாழ்க்கையில் ஒருவனுக்கு ஆதாயம் உண்டா என்றால் இல்லை.. இன்பம் உண்டா என்றால் இல்லை.. அப்படி வகுத்துக் கொள்ளாமல் காலையில் எழுந்ததும் கடன்களை முடித்துவிட்டு.. பத்திரிக்கைகள் பார்ப்பது, அதற்கப்பாலே செய்திகளைக் கேட்பது, அதற்கப்பாலே பார்த்தால் புத்தகத்திற்குள் நுழைந்துவிடுவது.. இந்தப் புத்தகத்தில் நுழைகிற ஒன்றுக்கு மாத்திரம் .. எப்போது நுழைய வேண்டும் .. எப்போது திரும்ப வேண்டும் என்றெல்லாம் தெரியாது.  இரவிலே வெகுநேரம்வரை விழித்திருப்பேன். உதாரணத்திற்கு இரவு 12 மணிக்கு படுக்கப்போனால் 3 மணிக்கு நான் எழும்பிவிடுவேன். 3 மணிக்கு ஏன் எழும்புகிறேன் நான் என்று வெகுநாட்களாக சிந்தித்தேன்.  அந்த 3 மணியை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இயற்கை என்னைத் தட்டி எழுப்பியது. திருவள்ளுவர் நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் என்று பேசுகிறார்.  ஆகவே 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று எவர் சொன்னாலும் அவர்கள் சமுதாயத்தினுடைய முதல் தரமான எதிரிகள் என்று நான் கருதுகிறேன்.  3 மணிக்கு விழித்து 2 மணி நேரம் படித்துவிட்ட அதற்கப்பாலே பார்த்தால் 1 மணி நேரம் தூங்கினால் எனக்குப் போதும்.  மதியத்தில் தூங்குவதற்கு முயற்சி பண்ணுவேன் உடல் நலம் கருதி.  ஆனால் பல வேளைகளில் தூங்க இயலாது.  தூங்காமல் தூங்கி சோம்புறு காலம் என்று வள்ளலார் பேசினாரே அப்படி நமக்கு வாய்த்ததோ என்று மகிழ்வேன்.  ஆக இந்த நேரத்தில் இதைச் செய்வது என்றல்ல.. ஆக வருகிற படி செய்வேன்.  கூட்டங்களுக்குப் போவோம்.  இறுதியாகப் பேசவிடுவார்கள்.  அப்ப ஏறத்தாழ ஒரு 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும்.  5 மணி நேரத்தில் நம்முடைய நேரம் மாத்திரமல்ல.. 5 பெருக்கல் 1000 என்று பார்த்தால் 5000 மணி நேரத்தை செலவிடுகிறோம் என்பதை தமிழர்கள் ஒரு போதும் உணர மாட்டார்கள்.  ஆகவே அந்த இடங்களில் கேட்கத்தகுந்த பேச்சாக இருந்தால் கேட்பேன். கேட்கத்தகுந்த பேச்சாக இல்லாவிட்டால் நான் வந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருப்பேன் அல்லது ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருப்பேன்.. எப்படியாவது அந்த நேரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உணர்வு எப்போதும் இருக்கும்.

என்.சி.ஞானப்பிரகாசம் – யாருக்கும் வெட்கமில்லை  – இப்படி ஒரு பாட்டு!

வலம்புரியார் – கவியரசர் கண்ணதாசன் முதன் முதலாக என் கன்னத்தில் பொட்டு வைத்தவர்.  சின்ன வயதிலே நான் இந்த ஊருக்கு வந்தபோது முதன் முதலாக என் கவிதையை அவருடைய கடிதம் இதழிலே பதித்து நான் எழுதுவதுகூட வரும் என்கிற நம்பிக்கையை எனக்குள்ளே விதைத்தவர்.  அதற்கப்பாலே என்னுடைய புத்தகங்கள் – தாகங்கள், அம்மா அழைப்பு, வரலாற்றில் கலைஞர் போன்ற புத்தகங்களுக்கெல்லாம் அணிந்துரை தந்தார்.  என் வயதில் சத்தியமாகச் சொல்லப்போனால் வேறு ஒருவரை அவ்வளவு பாராட்டியதில்லை; புகழ்ந்ததில்லை.. அந்த அளவுக்கு உச்சிமேல் வைத்து மெச்சிப்புகழ்ந்ததால் அவருடைய நினைவுகளோடு நான் எப்போதும் சஞ்சரிக்கிறேன்.  இதிலே பிடித்த வரி இந்த உலகம் எப்படியிருக்கிறது என்று இவ்வளவு எளிமையாய் எப்படிச் சொல்ல இயலும்?  பைபிள் மாதிரி எளிமையானது!  என்ன சொல்கிறார்.. மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்! நீ சொன்னால் காவியம்!  காவியத்தைத்தான் சொல்லணும்னு அவசியமில்லை.. நீ சொல்லிட்ட இல்ல.. நீ சொன்னா காவியம் என்று சொல்கிறார் என்றால் அவர் வந்து அடிக்கிற அடி சமுதாயத்தின் பீடைகளுக்கெல்லாம் சேர்த்து அடிக்கிற அடி.. ஒரு மென்மையான மனிதன்.. ஒரு தென்றலைப் போல் வந்து ஆலமரத்தை வேரோடு சாய்க்கிற ஆற்றலுடைய மனிதன்.. ஆகவே அந்த கவிஞனுக்கு எப்போதும் நான் தலை வணங்குவேன்.  இந்தப் பாடல் எனக்குப் பொதுவாகப் பிடிக்கும்..

மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்

மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்
சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள் உங்கள்
மார்பினைக் காட்டுதடா
என்.சி.ஞானப்பிரகாசம் – வளர்ந்துவரும் வானம்பாடிகளுக்கு வலம்புரியார் ஒரு சரணாலயம் – சரிதானே?

வலம்புரியார் – நான் நிரம்ப இளைஞர்களை தோள்கொண்ட மட்டும் தூக்கியிருக்கிறேன்.  என்னுடைய கருத்து – நான் தூக்கியிருக்காவிட்டால் மற்றவர்கள் தூக்குவார்கள்.  காரணம் அவனுக்கு ஒரு கை கருவியே தவிர நாமே அவனை வளர்ப்பதில்லை! அவர் எந்த சரணாலயத்திலேயாவது புகுந்து எப்படியாவது தப்பித்துக் கொண்டு வருவான்.  நிரம்ப இளைஞர்கள் என்னிடம் கேட்பார்கள் – நாங்கள் நிரம்ப எழுதுகிறோம்.  எழுதியதெல்லாம் திரும்ப வந்துவிடுகிறதே என்று சோர்ந்துவிடுவார்கள்.  நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம் ஒரு பொருள் வந்து புறப்பட்ட இடத்திற்கு திரும்பிவரும் என்பது பூகோள விதி.  அப்படி நீங்கள் எழுதியது உங்களுக்கே திருப்பப்படுகிறதென்றால் பூகோள விதியை நீங்கள் நிறைவேற்றுவதற்கு காரணமாய் இருந்தீர்கள் என்று கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, வேறு அல்ல என்று சொல்வேன்.  மீண்டும் மீண்டும் எழுத வேண்டும்.  காரணம் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் பத்திரிக்கையில் போடுகிறேன் என்று சொல்லி எதிர்பார்க்க வைத்து குப்பைக்கூடையில் போட்டவர்களெல்லாம் ஒரீரண்டு வருட காலத்தில் என்னிடத்தில் அணிந்துரை தேடி வந்தார்கள்.  ஆக.. எந்த இளைஞனையும் அலட்சியப்படுத்தக்கூடாது.  அவனுக்குள்ளே இருக்கிற ஆற்றலை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதில் ஒரு சமுதாயப் பணி இருக்கிறது.  ஆகவேதான் எனக்கு அதில் விருப்பம் அதிகம்!

என்.சி.ஞானப்பிரகாசம் – அடுத்து உங்களுக்குப் பிடித்த பாடல்! அபூர்வ ராகங்கள் – அதிசய ராகம்!

வலம்புரியார் – அதிசய ராகம் எப்போதும் பிடித்ததற்கு என்ன காரணம் என்றால் இந்த அபூர்வ ராகங்கள் வெளிவந்த போது 100வது நாள் விழா நடந்தது.  இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் கற்பகம்பாள் திருமண மண்டபத்தில் அந்த ஆண்டில் நடைபெற்ற கூட்டத்தில் மூவரை அழைத்திருந்தார்.  அப்போது தமிழகத்தில் முதன் முறையாக முதலமைச்சராகியிருந்த கலைஞர், ஏ.எல்.சீனிவாசன், நான் – மூன்று பேரும் மேடையிலிருந்தோம்.  கமலஹாசன் இருந்தார். ரஜினிகாந்த்துக்கு அதுதான் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட இடம்.  அப்போது நான் பேசுகிறபோது ஸ்ரீவித்யா இருந்தார்.  அப்போது நான் சொன்னேன்.. இவர் ஒரு சந்தனக் கட்டை.. ஒரு சிறந்த கலைஞனிடம் சிக்கியிருப்பதால் இதிலிருந்து ஒரு கலைச்சிற்பம் உருவாகும் என்று சொன்னேன்.  என்னை அறியாமல் சொன்னது.  அவர் இன்றைக்கும் அதை நினைத்து மகிழ்ச்சியடைகிறார்.  அதிலே பேசிக்கொண்டிருந்தபோது கவியரசர் வந்தார்கள்.  மேடைக்கு வரவில்லை.  கொஞ்சம் உடல்நலம் குறைவாக இருந்தது.  மேடைக்கு எதிரே வந்தமர்ந்தார்கள்.  அவரைச் சொல்ல வேண்டும் என்பதற்காக.. இந்த ஒரு புறம்பார்த்தால் மிதிலையின் மைதிலி.. மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி – என்று சொன்னாரே தவிர எந்தப்புறம் என்று சொல்லாமல் அதை நமது சிந்தனையுடைய அந்தப்புரத்திற்கே விட்டார் என்று சொன்னேன்.

என்.சி.ஞானப்பிரகாசம் – நமது இன்றைய இளைஞர்கள் எதன்மீது பற்று வைத்திருக்கிறார்கள்?  அவர்கள் பார்க்கும் பார்வையும் பயணம் செய்யும் பாதையும் சரிதானா?

வலம்புரியார் –  எல்லா இளைஞர்களும் தவறு செய்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை.  சிறந்த இளைஞர்கள் எப்போதும் இருக்கிறார்கள்.  இவர்களை எப்படிக் கண்க்கிடுவது என்றால்.. பிரெஞ்சுப் புரட்சி நடந்தது.  அது உலகத்தினுடைய வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றிருக்கிறதே தவிர, பாஸ்டில் சிறையை வீழ்த்தியவர்கள் 23 பேர்தான்.  ஆக வால்டே ரூசோவின் சிந்தனையை உள்வாங்கிக் கொண்டவர்களே 23 பேர்கள்தான்.  பிரெஞ்சுப் புரட்சி என்று பேசுகிறோம்.  ஏசு பெருமானுடைய சீடர்களே 12 பேர்தான்.  இவர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் இருப்பார்கள்.  ஏனென்றால் இவர்கள்தான் செயல்படுகிற சிறுபான்மை.  மற்றவர்கள் எல்லாம் செயல்படாத பெரும்பான்மை.  இது செயல்படுகிற சிறுபான்மை குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  இந்த சமுதாயத்தில் செயல்படுகிற சிறுபான்மை என்று நான் அழைக்கிற இளைஞர்கள் எப்போதும் குறைந்துவிடுவதில்லை.  எங்கோ இருப்பார்கள்.  பொதுவாக இருக்கிற இளைஞர்கள் வந்து அவர்கள் கால்கள் போன போக்கிலே போகிறார்கள்.  அவர்களுக்கு எதிலே பற்று இருக்கிறது?  முதலிலே அவர்கள்மீது அவர்களுக்கு பற்று இருக்க வேண்டும்!  அது அவர்களுடைய நம்பிக்கையை உருவாக்கும். மொழி, சமுதாயம், தன்னைப் பெற்றவர்கள், ஆசிரியர்கள் என்று அப்படி தங்களை வளர்த்துக் கொள்ளவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு.  இன்னமும் சொல்லப்போனால், என்னுடைய ஒரே குற்றச்சாட்டு – எல்லா இளைஞர்களுமல்ல.. அனேக இளைஞர்கள் என்ன கருதுகிறார்கள் என்றால் கனிகளைப் பெற வேண்டுமென்று கருதுகிறார்களே தவிர அதற்கான வியர்வை நதியைச் சிந்த வேண்டுமென்று கருதுவதில்லை.  காரணம் சுற்றிலும் பார்க்கிறார்கள் – சும்மா இருப்பவர்கள் எல்லாம் உலகத்திலே வளர்ந்து பெரிதாகிவிடுகிற சூழலைப் பார்க்கும்போது நாமேன் உடலை வளைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  நான் இளைஞர்களுக்கு சொல்வதெல்லாம் நீ வாழ்க்கையில் வெற்றிபெறாவிட்டால்கூட பாதகமில்லை.. உழைப்பை மட்டும் விட்டுவிடாதே!  அதாவது உலகத்தில் நாம் சொல்வதை சொல்லிக் கொண்டிருப்போம்!  செய்வதை செய்துகொண்டிருப்போம்!  இருட்டு விலகட்டும்!  விலகாமல் போகட்டும்!  வெளிச்சம் ஏற்றுவதை மாத்திரம் நம் விரல்கள் விட்டுவிடக் கூடாது!

என்.சி.ஞானப்பிரகாசம் – பாதை தெரியுது பார் என்கிற படத்திலிருந்து ஒரு பாடல்.. தென்னங்கீற்று …

வலம்புரியார் – தென்னங்கீற்று  கூந்தலிலே.. அந்தப் பாடல் ஒரு இயற்கையை வர்ணிக்கிறபோது எவ்வளவு அருமையான காட்சியை மனதுக்குள்ளே உருவாக்குகிறது என்று நான் எண்ணி எண்ணிப் பார்த்து வியந்திருக்கிறேன்.  அந்த சிட்டுக்குருவி என்று சொல்கிறபோது.. பாரதி பேசிய சிட்டுக்குருவியை நினைப்பேன்.  சிட்டுக்குருவியினுடைய வாழ்க்கையை நான் பக்கம் பக்கமாக படித்திருக்கிறேன்.  நாம் நினைப்பது போல் அதன் வாழ்க்கை நேற்று தோன்றி இன்று முடிவதல்ல.. மனிதன் பிறக்காத காலத்தில் மண்ணிலிருந்த பறவைகளில் சிட்டுக்குருவிகள் ஒன்று.  அவை மணலிலே விளையாடுவது மணலிலே குளிப்பது இவைகளையெல்லாம் பார்க்கிறபோது இளம்வயதிலே எனக்குள்ளே உண்டான அந்த வியப்பான பிரமிடுகள் இன்னமும் கலைந்து போகவில்லை.  எனவே இந்தப் பாடல் என் நினைவுப் புத்தகத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!

என்.சி.ஞானப்பிரகாசம் – தாய் பத்திரிக்கையைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது .. அதைப்பற்றிச் சொல்லுங்களேன்..

வலம்புரியார் – தாய் பத்திரிக்கையின் ஆசிரியராக பன்னிரண்டரை ஆண்டுகள் இருந்தேன். தொடக்கத்திலிருந்து நான்தான் ஆசிரியராக இருந்தேன்.  ஒரு வேலையைச் செய்கிறபோது அதிலே முழுக்க தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக எனக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் நான் இழக்க வேண்டி வந்தது.  ஆனாலும் அந்தப் பத்திரிக்கையைச் சிறப்பாகக் கொண்டுவரவேண்டுமென்று உழைத்து: இறைவனின் பேரருளாலும் நம்முடைய உழைப்பாலே 23000 பிரதிகளிலே தொடங்கி 220000 பிரதிகள் வரை விற்கிற ஒரு மாயத்தை அந்நாளில் அது செய்தது.  நிரம்ப இளைஞர்களுக்கு அது வாய்ப்பு தந்தது.  சில இளைஞர்கள் வருவார்கள்.  பார்க்க வேண்டும் என்பார்கள்.  எழுதிக்கொண்டிருக்கிறார்.. பிறகு வாருங்கள் என்றால் கோபித்துக் கொண்டு செல்வார்கள்.  அவ்வாறு கோபித்துக் கொள்ளும் இளைஞர்களை நான் உடனே  கூப்பிடுவேன்.  ஏனென்றால் அந்தக் கோபம்தான் தமிழ்நாட்டில் இல்லாத ஒன்று.  கோபம் என்றால் சாதாரண கோபமல்ல.. சமுதாயத்தை மாற்றுகிற கண்ணிய சீற்றம்.. அப்படித்தான் ஒருத்தர் ஒரு நாள் வந்தார்.  வந்தவனுடைய பெயர் அருமையான பெயர்.. ஒரு கவிஞர் அவர்.  கனகதாசன் என்பது அவர் பெயர். வருகிறபோதே அந்தக் கவிஞர் என்னிடத்தில் சொன்னார்.. காத்திருக்கும் வரை நான் காற்று.. புறப்பட்டுவிட்டால் புயல்.. இது உம்முடைய வரி இல்லையே என்றேன்.  என் வரி இல்ல சார்.. என்றான்.  அவ்வளவுதான் தமிழ்ல வசனம் பேசியது.  நான் கேட்டேன் ஊர் எது என்று.. அவர் சொன்னார்..

              மூக்குள்ள பேருக்கெல்லாம் முந்திரிப்பூ வாசம்வரும்

              பாக்கு வண்டி மிகுந்திருக்கும்.. பலாக்கள் தொங்கும்.

பண்ருட்டி எந்தன் ஊரே..

ஊரைத்தானே கேட்டேன்.. உற்பத்தியாயிற்று பாட்டு.. பேரைக் கேட்டிருந்தால் ஒரு பிரளயமே பிறந்திருக்கும் என்றார்.  என்னான்னு கேட்டா.. அவருக்கு திக்குவாயாம்.. வசனமாக பேசச்சொன்னால் வாய் திக்குகிறது.  அவர் தீந்தமிழிலே கவிதையாகச் சொல்லச்சொன்னால் திக்குகிற வாயைக்கூட அது திருத்துகிறது என்று போதித்த அவர் எனக்கு ஒரு ஆசிரியர்.

அவரைப்பற்றி ஆசிரியத்தொகுதியில் எழுதினேன்.  அவரது பெற்றோர்கள் மகிழ்ந்தார்கள்.  இன்றைக்கு அவர் வருவாய்த் துறையில் ஒரு அதிகாரியாக பணிபுரிகிறார்.  அவர் ஒழிந்த நேரங்களில் கவிதை பண்ணி தமிழ் அன்னைக்குச் சூடி வருகிறார்.

என்.சி.ஞானப்பிரகாசம் – பெர்னாட்ஷா என்றொரு நாடக மேதை மற்றவர்களுக்குத் தந்த முன்னுரைகளை வைத்து ஒரு புத்தகம் வந்திருக்கிறது.  அதுபோல் நீங்கள் மற்றவர்களுக்குத் தந்த அணிந்துரைகளை வைத்து ஒரு நூல் வந்திருக்கிறது.. அதைப்பற்றிப் பேசலாமே..

வலம்புரியார் – அது வந்து எதிரொலி விஸ்வநாதன் என்கிற ஒரு நண்பர் அந்த நூலைச் செய்திருக்கிறார்.  அதில் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்.  அது சிறந்த புத்தகமாய் நான் கருதுவதில்லை.  காரணம் அவர் என்னுடைய சிறந்த நண்பர்.  ஏனென்றால் அதில் என்னுடைய குறைகள் அலசப்படவில்லை.  என்னுடைய நிறைகளை மாத்திரமே சேர்த்து கோர்த்து மற்றவர்கள் எனக்கு மொழிந்தப் பாராட்டுக்களையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக்கியிருக்கிறார்.  பெரும்பாலும் நான் அதைப் பார்ப்பதுமில்லை.  படிப்பதுமில்லை.  பல பேர் கேட்பார்கள்.. ஏன் அவைகளை எல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை என்று.. என்னுடைய ஒரே பதில்.. பறவைகளின் பணி பறப்பதுதானே தவிர, சிறகுகளை சேர்ப்பது அல்ல.. பறவை அதன் போக்கிலே போக வேண்டும்.  சிறகுகளைச் சேர்ப்பது கீழே உள்ளவர்களின் வேலையே தவிர பறவைக்கு அந்த வேலை இல்லை.. அதுபோல் நான் ஒரு பறவை.

என்.சி.ஞானப்பிரகாசம் – இரத்தத்திலகத்திலிருந்து ஒரு பாடல்.  ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..

வலம்புரியார் – அதுவும் கவியரசர் கண்ணதாசனுடைய அருமையான பாடல்.  இதில் உமர்கயாமுடைய தத்துவமிருக்கிறது.  பல பேர் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதைப் போல உமர்கயாம் ஒரு குடிகாரர் அல்ல.. அவர் மது என்று சொல்வது, ஆன்மீக வெள்ளத்தைச் சொல்கிறார்.  அரபி மொழி அறிந்தவர்கள், பார்சி மொழி அறிந்தவர்கள் எவராவது இப்படிப் பேசினால் அவர்களை அடித்தே விடுவார்கள்.. ஏனென்றால் அப்படிப்பட்ட மகத்தான மனிதரை தவறான கண்ணோட்டத்திலே பார்த்து நாட்டிலே பழக்கி விட்டார்கள்.  அதிலும் ஒரு கவிஞனின் ஆளுமை தெரிகிறது..

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

ஒரு கோலமயில் என் துணையிருப்பு

இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு

நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

அப்படிச் சொல்கிற போது ஓரு கவிஞன் தலைநிமிர்ந்து நிற்கிறான்.  மனிதன் வேறு கவிஞன் வேறு.. கவிஞர்கள் மனிதர்களாக இல்லாவிட்டால் அவர்கள் கவிஞர்களே அல்ல.. ஆனால் இங்கே.. ஒரு மனிதனாக இருந்து கவிஞராக இருக்கிற.. கவிதையாக இருக்கிற .. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்திட்ட மாபெரும் மனிதனுடைய  சுயப் பிரகடனம்.  ஆகவே நமக்குத் தொழில் கவிதை.. நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி பேசியவண்ணமே.. தன்னைத்தானே அறிமுகப்படுத்துகிற அந்தத் துணிச்சல்மிக்க வரிகள் எனக்கு எப்போதும் பிடிக்கும்.

என்.சி.ஞானப்பிரகாசம் – பாரதி காண விரும்பிய புதுமைப் பெண்கள் நாங்கள் பார்த்திருக்கிறோம்.  பாரதி கண்ட புரட்சிப் பெண்கள் யார்? யார்?

வலம்புரியார் – புரட்சிப் பெண்கள் என்றால் முற்போக்கானவர்கள் என்பது மாத்திரமல்ல.. சமுதாய அக்கறை படைத்தவர்கள்.  அப்படிப் பார்க்கிறபோது.. இந்திய மண்ணில்.. அன்னை தெரசா வந்து ஒரு புதுமைப்பெண். புதுமைப் பெண் என்றால் வயதைப் பார்ப்பார்கள்.  பெண்தானே.. வயதைப் பற்றியதல்ல.. கல்கத்தாவில் காலிகன் என்கிற இடத்தில் ஏழை பாழைகளுக்காக ஒரு ஆசிரமம் கட்டி வந்தார்.  அதற்காக கையேந்தி வந்தார்.  ஒரு பணக்காரர் பார்த்துக் கொண்டேயிருந்து காறி உமிழ்ந்தார்.  அந்த எச்சிலைத் தன் கரங்களிலே வாங்கிக் கொண்டு.. இந்த எச்சில் எனக்குப் போதும்.  என் ஏழைகளுக்கு என்ன தரப் போகிறீர்கள் என்று கேட்டார்.  ஆக.. அவளைவிட புரட்சிப் பெண்ணை இந்த மண்ணில் நான் சந்தித்ததில்லை.  புரட்சிப் பெண்கள் என்று சொல்கிறபோது பாரதி கண்ட புதுமைப் பெண் என்றெல்லாம் பேசுவார்கள்.  எனக்குப் பார்க்கிறபோது அந்த அம்மா ஒருத்திதான்.  அதுபோல சீனநாட்டிலே ஹேன்சுயின் என்றொரு எழுத்தாளர்.  அந்த எழுத்தாளர் புரட்சிப் பெண்.. ஏனென்றால் நான் அவர்களை அறிவேன்.  அவர்கள்தான மாசேதுங்கின் வரலாற்றை எழுதியவர்கள்.. Morning Dilige காலை வெள்ளம் என்று பெயர்.  வாழ்க்கை முழுவதுமே ஒரு நோபில் பரிசு பெறுகின்ற அளவிற்கு அவர்கள் தன்னை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.  அப்படி உலக அளவில் எனக்கு சிலரை நன்றாக எனக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது.  மற்றவர்கள் அப்படி இப்படி இருக்கிறார்கள்.  ஆக ஒரு புரட்சிப் பெண் என்று சொன்னால் அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணத்துக்கு உட்பட்டவர்களாக இந்த இரண்டு பேரையும் நான் எப்போதும் கருதுவேன்.

என்.சி.ஞானப்பிரகாசம் – அடுத்து நாடோடி மன்னன் படத்தில் ஒரு பாடல்.. காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்..

வலம்புரியார் – இது வந்து பட்டுக்கோட்டை ஒரு பாட்டுக் கோட்டை.. இந்தப் பட்டுக்கோட்டை ஒரு பலாப்பழச் சொற்களுக்குள்ளே பருவைரக் கருத்துக்களை வைத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.  ஏனென்றால் பொதுவுடைமை அறிக்கையில் காரல் மார்க்ஸ் அவர்களும் ஃபெடரிக் கேங்கில்ஸ் அவர்களும் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்.. நீங்கள் இழுக்க வேண்டியது சங்கிலிகளைத் தவிர வேறொன்றுமில்லை என்று சொன்னார்கள்.  இந்த அரிய கருத்தை திரைப்பாடலிலே கொண்டு வர இயலுமா என்றால் .. கொண்டு வர இயலும் என்று காட்டி.. காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் .. என்று பாடி வைத்தார் பட்டுக்கோட்டையார்.  அவருடைய பாடல்கள் அதிகமில்லை என்றாலும் கூட ஒரு ஆயிரம் பாடல்கள் எழுதித்தான் நிற்கவேண்டும் என்பதல்ல என்பதற்கு பட்டுக்கோட்டை ஒரு சிறந்த உதாரணம்.  ஆக ஒரு இலட்சியத்தை ஒரு கவிஞன் சாதாரண மக்களுக்கு ஊட்டுவதிலே எவ்வளவு நாட்டம் காட்டுகிறான் எனபதற்கு அடையாளமாய் இருப்பதால் இது எனக்குப் பிடிக்கும்.

       சும்மாக் கிடந்த நிலத்தைக் கொத்தி..

       சோம்பலில்லாம ஏர்நடத்தி..

       கம்மாக் கரையை உசத்திக் கட்டி

       நெல்லு விளைஞ்சிருக்கு ..

என்.சி.ஞானப்பிரகாசம் – அக்கறைச் சீமையிலே நடந்த ஒரு சம்பவத்திற்கு அக்கறையாக இங்கிருந்து ஒரு கடிதம் எழுதினீர்கள்.. நினைவிருக்கிறதா?

வலம்புரியார் – நினைவிருக்கிறது.  BERTROM Russels உடைய இல்லத்தை இடிக்கப் போகிறார்கள் என்று ஆங்கில நாளேட்டிலே செய்தி வந்தது. வந்து House of Commonsல ஒரு தீர்மானம் வந்தது.  பத்திரிக்கையிலே அது வந்தபோது.. இங்கே இருந்து ஒரு கடிதம் எழுதி நான் அந்த நாட்டின் அரசியாருக்கு அனுப்பி வைத்தேன்.  BERTROM Russels உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல.. பரந்த இந்த உலகமெல்லாமே அவருக்குச் சொந்தம் என்று கடிதம் எழுதினேன்.  தூதுவர் வந்து ஆனால் அந்த  முயற்சி கைவிடப்பட்டதாக என்று சொன்னார்.  நான் எழுதியதற்காக அல்ல.. உலகம் முழுவதுமிருந்து அப்படி எழுதியிருக்கிறார்கள்.  இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால் சின்ன வயதில் BERTROM Russels Best என்கிற புத்தகம் எனக்குக் கிடைத்தது.  அந்தப் புத்தகத்தைப் படித்தபோதுதான் முதன் முதலாக உலகத்தில் இப்படிப்பட்ட எண்ணங்களும் இருக்கின்றன என்கிற அந்த சிந்தனையே வந்தது.  அவரை எனக்கு வெகுவாகப் பிடிக்கும்.

என்.சி.ஞானப்பிரகாசம் – அரசு கொடுத்தது கலைமாமணி பட்டம். வார்த்தைச் சித்தர்..  ஞான பாரதி எப்போது கிடைத்தது?

வலம்புரியார் – வார்த்தைச் சித்தர் என்கிற பட்டத்தை வழங்கியவர் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள்.  ஞான பாரதி என்கிற பட்டத்தை வழங்கியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

காலங்காலமாக வார்த்தைச் சித்தர் என்றால் வார்த்தைச் சித்தர். வானாவுக்கு வானா.. வருகிறதல்லவா.. வேறொன்றும் நாம் அருள் பெற்றுக்கொண்டு வரவில்லை.  அன்பொழுக மக்கள் அப்படி அழைக்கிறார்கள்.  இராதகிருஷ்ணன் அறிஞர்.. அவரை தத்துவஞானி என்று சொல்கிறார்கள்.  தத்துவ ஞானி என்கிறீர்களே.. என்ன தத்துவம் சொன்னார் என்று எவரையேனும் கேட்டுப்பாருங்கள்.. ஏதாவது ஒன்றைச் சொன்னால் நான் அவர்களுக்குத் தலை வணங்குவேன்.  மற்றவர்களுடைய தத்துவங்களை எடுத்துச் சொன்னாலே நம் நாட்டில் அவர்களை தத்துவஞானி என்று சொல்கிறார்கள்.  அந்த வார்த்தைகளில் கொஞ்சம் வசிய மையைப் பூசினால் வார்த்தைச் சித்தர் என்று சொல்வார்கள்.

ஞான பாரதி என்கிற பெயர் எனக்குப் பிடித்ததற்கு காரணம் என்னவென்றால் அது பாரதியோடு ஒட்டிவருகிறது.  பாரதியினுடைய ஒரு நிழலாக அவருடைய கால் தடத்தில் ஒருபிடி மண்ணாக இருப்பதுகூட எனக்குப் பெருமை என்று நினைக்கிறவன். ஆகவேதான் அந்தப் பட்டங்களை மற்றவர்கள் போடும்போது நான் தடுப்பதில்லை..

 என்.சி.ஞானப்பிரகாசம் – வானொலி நிலையத்திற்கு வந்து சிறப்பான நல்ல பல தகவல்களைச் சொன்னீர்கள்.

வலம்புரியார் – நன்றி வணக்கம்!!

என்றும் அன்புடன்,
காவிரிமைந்தன்
(மு.இரவிச்சந்திரன்)
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
சென்னை 600 075
தற்போது – அபுதாபி..
00971 50 2519693

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.