கலாரசிகை மணிமொழிக்கு,

வணக்கம். தங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றேன். உண்மையிலேயே பேருவகை அளித்த மடல்.

உங்கள் கடித்தத்தைப் படித்து முடித்தவுடன், சுஜாதா அவர்கள் ஒரு சிறுகதையில் லாட்டரியில் பரிசு கிடைப்பதற்கான சாத்தியம் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது –

“ஒரு குரங்கு டைப் அடிக்கற இயந்திரத்துக்கு முன்னால் உட்கார்ந்துவிட்டு, தக்கா புக்கான்னு அடிச்சு, அடிச்ச விஷயம் அகஸ்மாத்தா கம்பராமாயணத்தில் ஒரு பாட்டா அமையதறதுக்கு எவ்வளவு சான்ஸ் இருக்கோ, அவ்வளவு சான்ஸ் தான் இந்த லாட்டரியில..” என்று எழுதியிருப்பார்.

என்னைப் பொறுத்தவரையில், என் போன்ற ஓவியர்களுக்கு இதுபோன்ற கடிதங்கள் வருவதென்பதும், லாட்டரியில் பரிசு விழுவதென்பதும் ஒன்று தான்! என்னை ‘தக்கா புக்காவென தட்டச்சும் குரங்கு’ என்று கூறவில்லை. உங்களைப் போன்ற கலாரசி(கர்)கைகள் எல்லாம் பேரதிசயம் என்றே கூற வருகிறேன்!

எவ்வளவு அழகாக என் ஓவியங்களை உள்வாங்கியிருக்கிறீர்கள்?

உங்கள் கடிதத்தைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டே இருக்கிறேன். உண்மையில் இந்தக் கடிதமே ஒரு அழகிய ஓவியம்! என் படைப்புகளைப் பற்றி நீங்கள் பாராட்டி எழுதியதற்காகச் சொல்லவில்லை. உண்மையில், நீங்கள் தான் அந்த ஓவியங்களை வரைந்து முடித்துள்ளீர்கள்.

உங்கள் கேள்விக்கு வருவோம். “அது என்ன ‘து..தூ.. (TuToo)’ என்று ஒரு புனைபெயர்? குறில் நெடிலென கவித்துவமாயும் இருக்கிறது; ஒன்றும் புரியாததாயும் இருக்கிறது?

கவிதைக்கான அனைத்து லட்சணங்களும் என் புனைபெயரிலேயே வந்து விட்டது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். 🙂

கவிஞனுக்கும், ஓவியனுக்கும் அடிப்படையில் வேறுபாடு எதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. கவிஞன் ஒரு ஓவியத்தை  மனக்கண்ணால் தரிசித்துவிட்டு கவிபடைக்கிறான். ஓவியன், கவிதையைக் மனதிலேயே எழுதிமுடித்துவிட்டுப் பின் ஓவியம் வரைகிறான். ஒரு கவிஞனுக்குள் நிச்சயம் ஒரு ஓவியனும், ஒரு ஓவியனுக்குள் நிச்சயம் ஒரு கவிஞனும் இருந்தே ஆகவேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

சரி, என் புனைபெயருக்கு வருவோம். இதற்கான பதிலை நிச்சயம் ஒரு வரியில் என்னால் கூற முடியாது. அது ஒரு பெரிய கதை! சிறிது நேரம் இந்த ஓவியனுக்குள் இருக்கும் கதாசிரியனையும் பொறுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன், மணிமொழி.

அன்றைய தினத்து நினைவுகளின் வண்ணங்கள் இன்னும் என் மனதில் திட்டுத் திட்டாக ஒட்டிக் கொண்டு இருக்கின்றன.

அன்றைக்கு அலுவலகத்தில் “அட போங்க! என்ன வாழ்க்கையோ?” என்று ஒரு நான்கு நண்பர்களிடமாவது சொல்லிப் புலம்பி இருப்பேன். காலை வீட்டிலிருந்து கிளம்பும் போது, வீட்டாருடன் பெரிய வாக்குவாதம். என் அண்ணன், அண்ணி, தாய்மாமா, பற்றாக்குறைக்கு என் மாமனார் வேறு. என்னைக் கிட்டத்தட்ட ஒரு விசாரணைக் கைதியைப்போல் நிறுத்திக் கேள்விகளைக் கேட்டுவிட்டு, பின்னர் அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனர்.

அதற்கு முந்தைய வாரம் மும்பையில் நடந்த சர்வதேச ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க வந்திருந்த என் ஆதர்ச ஓவியர் ராம் எங்கள் வீட்டில்தான் தங்கினார். நான் அலுவலகத்துக்கு ஒரு வாரம் விடுப்பு எடுத்து விட்டு கண்காட்சியில் அவரோடு இருந்தேன்.

அதுவே என் வீட்டாருக்கு அப்போது இமாலயப் பிரச்சினை.

“இயந்திரவியல் முடித்துவிட்டு பஜாஜ் நிறுவனத்தில் வாகன வடிவமைப்பாளராகப் பணியாற்றும் எனக்கெதற்கு இந்த ஓவியக் குப்பைகள் எல்லாம்?” என்பது அவர்கள் வாதம்.

மும்பை காண்டிவிலியில் நாங்கள் வசித்துவந்த வீடு என் தந்தை கட்டியது. மிகப் பெரிய இரண்டடுக்கு வீடு. கீழ் வீட்டில் என் அண்ணனும், மேலே நானும் குடியிருந்தோம். அவருடைய குழந்தைகள் எப்போதும் என் வீட்டில்தான் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.

நான் சிறுசிறு வீட்டுப் பராமரிப்பு வேலைகளைக்கூட செய்வதில்லை என்பது என் அண்ணனின் குற்றச்சாட்டு. மளிகைக் கடைக்குச் செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது போன்ற வேலைகளைச் செய்வதில்லை என்பது என் மனைவியின் குற்றச்சாட்டு. தங்கள் வீட்டில் நடக்கும் முக்கியமான குடும்ப நிகழ்வுகளில்கூட நான் பங்கேற்பதில்லை என்பது சென்னையிலிருந்து வந்திருக்கும் என் மாமனாரின் குற்றச்சாட்டு. என் அண்ணனின் குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்தவிடாமல், ஓவியம் வரையச் சொல்லி கட்டாயப்படுத்துகிறேன் என்று என் அண்ணன் மூலமாக பழி சுமத்திய என் அண்ணி.

இவையனைத்திற்கும் மூலகாரணமே ஓவியக்கலையில் எனக்கு இருந்த நாட்டம் தான். என் ஓவியப்படைப்புக்களைப் பார்த்தாலே அவர்களுக்கு ஏனோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

நிலைமை இப்படி இருக்க, ஒரு ஓவியர் வந்து வீட்டில் ஒரு வாரம் தங்கினால் சும்மா இருப்பார்களா? யோசித்துப் பாருங்கள்.

அதிலும் அவருக்காக நான் விடுப்பு வேறு எடுத்துக்கொண்ட விஷயம் என் மாமனாரை  ரொம்பவுமே பாதித்துவிட்டதுபோல் தெரிந்தது.

“வீட்டக் கொஞ்சம் பாருங்க மாப்ள. ஏதோ பெயின்டிங் முடிக்கணும்னு சொல்லி, என் மொத பொண்ணு சீமந்தத்துக்குக் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டீங்க. இன்னைக்கி எவனோ ஒருத்தனுக்காக அலைஞ்சிட்டு இருக்கீங்க! இது என்ன நியாயம்?” என்றார் என் மாமனார்.

“பெரியவங்க கஷ்டம் இவங்களுக்கு புரியாது ராமநாதன். சிவா, எவ்வளோப்பா செலவு பண்ண அந்த பெயிண்ட் அடிக்கற தாடிகாரப் பயலுக்கு?” – இது என் தாய்மாமா கிருஷ்ணமூர்த்தி.

“பெயிண்ட் அடிக்கிறவரா? கலைத்தாய் இவர் மேல கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம்” என்று நினைத்துக்கொண்டு அமைதியாக நின்றேன்.

என்னைச்சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில் அமைதியைக் கடைப்பிடிப்பது என் வழக்கம். ஏனென்றால் அந்த சமயங்களில் நாம் பேசுவதால் எந்த உபயோகமும் இல்லை. அது பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். மேலும், நாம் செய்து கொண்டிருப்பது என்னவென்றே தெரியாமல் நம்மை விமர்சனம் செய்துகொண்டிருப்பவர்களிடம் பிரதிவாதம் செய்வது என்பது, குருடனுக்கு பச்சை நிறம் எப்படி இருக்கும் என்று விளக்குவது போன்றது.

“”உங்கப்பா கஷ்டப்பட்டு சேத்ததெல்லாம் அழிச்சிடாதப்பா. அவ்ளோதான் சொல்லமுடியும். நல்ல வேலைல வேற இருக்க. அதுல ஒழுங்கா ஷைனாகற வழிய பாரு சிவா.”

ஏதோ வேலைக்குப் போகாமல் குடித்துவிட்டு தெருவில் விழுந்து கிடப்பவனிடம் பேசுவது போன்று தொடர்ந்து விடாமல் அறிவுரைகளை பொழிந்துகொண்டிருந்தார் என் மாமா.

ராமை அந்தேரிக்கு அழைத்துச் சென்றதிலும், அவருடன் உணவு அருந்தியதிலும் என் சொத்தே அழிந்துவிட்டது போன்ற பிரமையை உருவாக்கிய அவர் பேச்சு எனக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இருந்தாலும் என் வாதங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை – மேலே கூறிய அதே காரணங்களுக்காக.

இவர்களாவது பரவாயில்லை. என்னைக் காதலித்து மணந்துகொண்ட என் மனைவிக்கு என்ன ஆயிற்று? அவளால் கூட என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

திருமணத்திற்கு முன்பே, என் கனவுகளைப் பற்றி எவ்வளவு விஷயங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டேன். அத்தனைக்கும் துணையாய் இருப்பேன் என்று கூறிய அவள் இன்று,

“அவர் வேணும்னா அவர் உண்டு அவர் பெயிண்டிங் உண்டுன்னு ஜாலியா இருக்கட்டும். நான் சென்னைக்கு போயி வேலை பார்க்கப்போறேன்” என்று நாகூசாமல் சொன்னாள்.

அதற்குக் காரணம் அவளுடைய பொசசிவ்னெஸ் என்றே நினைக்கிறேன். என்னுடைய ஓவியக்கலையைக் கிட்டத்தட்ட அவள் சக்களத்தியாகவே பார்க்கிறாள். அதிலும் ஏதாவது ஒரு பெண்ணின் படம் வரைந்தால் போதும் – முடிந்தது கதை! எல்லாவற்றுக்கும் மேலாக, அவளுடைய அக்காவின் சீமந்தத்திற்கு நான் போகாதது, நான் இழைத்த தவறுகளிலேயே ‘ உலக மகா தவறு!’.

அன்றுதான் முதன்முதலாக என் பெற்றோர்கள் இல்லாத வெற்றிடத்தை முழுவதுமாக உணர்ந்தேன். சிறுவயதில் இருந்தே எனக்கு ஓவியம் என்றால் அவ்வளவு நாட்டம். நான் ஆறுவயதில் மூன்று கோடுகளைப் போட்டதற்கே கைதட்டி ரசித்து, என்னை ஊக்கப்படுத்துவதற்காகவே, வண்ண வண்ண பென்சில்களையும், ஸ்கெட்சுகளையும், தூரிகைகளையும், வெள்ளைத் தாள்களையும் வாங்கி வந்து குவித்தவர்கள் அவர்கள்.

அத்தனை அவிவேகிகளும் சேர்ந்து என்னைக் கேள்வி கேட்பதைப் பார்த்துக்கொண்டு அவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? இல்லை, அவர்களுக்கெல்லாம் என் தந்தை முன்பு பேசத்தான் துணிவு இருந்திருக்குமா?

ஓவியர் ராம் போன்றவர்கள் வீட்டிற்கு வருவது எவ்வளவு பெரிய பாக்கியம். இதுபோன்ற வாய்ப்புக்கள் என்னைப்போன்ற வளரும் கலைஞர்கள் அனைவருக்கும் கிடைக்குமா? என் ஓவியங்களை எல்லாம் பார்த்து எவ்வளவு ரசித்தார், பாராட்டினார். அந்த மகா கலைஞன் இந்த அற்பனின் ஓவியம் ஒன்றை ‘மாஸ்டர் பீஸ்’ என்று கூறியதோடு மட்டுமில்லாமல், அந்த சர்வதேசக் கண்காட்சியில் என் ஓவியங்கள் சிலவற்றையும் வைத்து அழகு பார்த்தாரே! அந்தப் பெருந்தன்மையைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கும்? எத்தனை  பெரிய கலைஞர்களை அங்கே எனக்கு அறிமுகப்படுத்தினார்!

அதற்கு முன்புவரை எத்தனை  பத்திரிக்கைகளுக்கு எனது ஓவியங்களை அனுப்பி இருப்பேன்? அவற்றிற்கெல்லாம் பதில் கடிதம் கூடக் கிடைத்ததில்லை. ஆனால், ராம் என்னுடைய ஓவியங்களை அவரே அவருக்குத் தெரிந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு அனுப்பினாரே! அவரோடு நானிருந்தது எனக்கல்லவா பயன்பட்டது. அவர் நினைத்திருந்தால் ஒரு விடுதியில் தங்கியிருக்கலாம். ஆனால், ஒரு ரசிகன் மீதிருந்த அதீத அன்பினாலல்லவா அவர் என்னோடு வந்து தங்கினார்.

ஒரு கலைஞனுக்குத் தான் எத்தனை பிரச்சினைகள் பாருங்கள் மணிமொழி – வீட்டிலும், சமுதாயத்திலும்? சமுதாயத்தில் தொடர்ந்து அவன் படைப்பின் மேலெழும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டி இருக்கிறது. அதுவாவது பரவாயில்லை என்பேன். வீட்டில், முதலில் ஒரு படைப்பை உருவாக்குவதற்கே போராட வேண்டியிருக்கிறது.

இப்படி ஏதேதோ எண்ணவோட்டங்களில் அன்றைக்கு தொலைந்து போயிருந்த என்னை உலுக்கியது என் உடன் பணிபுரிந்த நண்பர் சேகரின் கணீரென்ற குரல்.

“என்னங்க ஷிவா, ப்ரூட் ஜூஸ் குடிக்கபோறேனு சொல்லிட்டு வந்து கேன்டீன்ல இவ்ளோ நேரம் உக்காந்து என்ன கனவு கண்டுட்டு இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே என் முன்னால் வந்து அமர்ந்தார்.

“அதான் காலைலயே சொன்னேனேங்க.”

“அட விடுங்க ஷிவா. இதெல்லாம் ஒரு பிரச்சினையா? உங்களுக்கு ஒரு நல்ல ஐடியா கொடுக்கட்டுமா? நீங்க மொதல்ல எங்கூட MBA பார்ட் டைம் கோர்ஸ் ஜாய்ன் பண்ணுங்க.”

“என்ன ஷேகர் சொல்றீங்க? இதுக்கு எங்க வீட்ல இருக்கறவங்களே பரவாயில்லை போல இருக்கே?”

“நோ.. நோ. நான் இன்னும் முடிக்கல. MBA கிளாஸ் போறேன்னு சொல்லிட்டு ஈவினிங்லயும், வீகென்டுலயும் ஒரு சின்ன ரூம் ரென்டுக்கு எடுத்து அங்க பெயிண்ட் பண்ணுங்க.”

“இது ரியலிஸ்டிகாவே படலையே ஷேகர். வேற ஏதாவது ஐடியா கொடுங்க.”

“ஷிவா, அவனவன் எதுக்கெல்லாமோ சின்ன வீடு வெச்சிருக்கான். நீங்க உங்க ட்ரீம்ஸ்காக ஒரு ஸ்மால் ரூம் ரென்ட் எடுக்கறது தப்பா? இன்னைக்கி எத்தனையோ ஆர்டிஸ்ட் புனைபெயர்ல வரையறாங்க, எழுதறாங்க. நீங்க பாட்டுக்கு சைலன்டா உங்க வேலைய பாருங்க ஷிவா”

சிந்தனையில் ஆழ்ந்த என்னிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார் ஷேகர், “நம்ம மக்கள் எப்பவுமே ஜெயிச்சவன் கொடுக்கற பேட்டிய ஆ..னு வாயத் தொறந்து டிவி-ல பாத்து கைதட்டுவாங்க. நம்ம வீட்லயே ஜெயிக்கறதுக்குப் பாடுபடறவன கண்டுக்க மாட்டாங்க. ஆனா கிண்டல் மட்டும் நல்லா பண்ணுவாங்க.”

“அப்போ ஏன் ராம் மாதிரி ஆளுங்கள கண்டுக்க மாட்டேங்கறாங்க.”

“தட்ஸ் பிகாஸ் தே டோன்ட் நோ அபோவ்ட் திஸ் ஆர்ட். இதுல வேற நீங்க மாடர்ன் ஆர்ட் ஆசாமி. அவங்களுக்கு என்ன புரியும்? எதையோ கிறுக்கி டைம் வேஸ்ட் பண்றான்னு நெனெக்கிறாங்க. இதுவே நீங்க ஒரு கீபோர்டிஸ்டா இருந்து A.R.ரஹ்மான் உங்க வீட்டுக்கு வந்தா இப்படி பிகேவ் பண்ணுவாங்களா யோசிச்சு பாருங்க? அவ்வளோ ஏன்? இந்த ராம் மட்டும் ஒரு டிவி சீரியல்ல நடிசிருந்தார்னா இப்போ நெலமையே வேற மாதிரி இருந்திருக்கும்.” என்று சேகர் பேசிய விஷயங்கள் எனக்கு நியாயமாகப்பட்டது.

அதிலும் புனைபெயரில் வரைவது என்பது சிறந்த யோசனையாகப்பட்டது. மாலை வீட்டிற்குச் செல்லும் வழியில் பல புனைபெயர்கள் தோன்றின. எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை.

இப்படிச் சிந்தனையில் ஊறியபடியே வீட்டிற்குள் நுழைந்த போது, எங்கள் வீட்டு ரோஜா செடிகளுக்கு மத்தியில் நான் கண்ட காட்சி என்னை உலுக்கியது.

ராம் என்னிடம் மாஸ்டர் பீஸ் என்று பாராட்டிய என்னுடைய ஓவியம் கீழே கேட்பாரற்று விழுந்து கிடந்தது. சற்றுநேரத்திற்கு முன்பு என் மனைவியோ அல்லது அண்ணியோ, உலரவைப்பதற்காகக் கம்பியில் தொங்கவிடப்பட்ட துணியிலிருந்து விழுந்த தண்ணீர்த் துளிகள், சொட்டுச் சொட்டாய் என் ஓவியத்தை அழித்துக்கொண்டிருந்தன.

ஓடிச்சென்று அதை எடுக்க குனிந்தபோதுதான் கவனித்தேன். என் ஓவியம் அப்படியொன்றும் உருக்குலைந்து போய்விடவில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்தத் துளிகள் ஒவ்வொன்றும் தூரிகைகளாய் மாறி என் ஓவியத்தை மேலும் அழகுபடுத்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தபோது, “துளிகளே தூரிகைகளாய்…” என்கிற கவித்துவமான தலைப்போடு சேர்த்து, அந்தத்துளிகள் வரைந்த ஓவியத்தைப் பற்றிக் கவிதை வரிகளும் கொட்டின.

அப்போது பிறந்தது து..தூ.. (TuToo) என்கிற என் புனைபெயர் மட்டும் அல்ல; எனக்குள் இருந்த கவிஞனும்தான்.

நாம் நிச்சயம் சந்திக்கவேண்டும், மணிமொழி. ஓவியங்களால் சூழப்பட்ட இந்தச் சிறு வீடு உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறது.

என்றென்றும் அன்புடன்,

து..தூ.. (என்கிற) சிவா.

 

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “ரசிகை மணிமொழிக்கு ஒரு மடல்..

 1. Author’s note: 

  Anton Chekhov is my favorite and one of the greatest short story writers in History. He’s a physician by profession. 

  He said once – “Medicine is my lawful wife and literature my mistress”.

  Just thought of sharing this with the readers. Thanks. 

 2. ஒரு கலைஞனுக்கு அங்கீகாரம் தனது படைப்புகளை ரசிகர்கள் புரிந்துகொள்வதுதான். அதை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். 

  பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்! 
  ஆண்டன் செகாவ் சொல்லியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. 

 3. ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு என் அன்புகலந்த நன்றி!!! 

  போட்டியில் பரிசுபெற்ற தங்களுக்கு என் வாழ்த்துகள்!!!

 4. மாதவன் சார்… ரொம்ப அழகா ஒரு கலைஞனோட உணர்வுகளைச் சொல்லி இருக்கீங்க… மணிமொழி போன்ற ரசி(கர்)கைகளுக்காக கலைஞர்கள் எவ்வளவு ஏங்குகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தி இருப்பது மிக சிறப்பு!!!

  என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!

 5. “துளிகளே தூரிகைகளாய்
  கவித்துவமான  அருமையான வண்ணமயான கடிதம் ..
  பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்..!

 6. சமீரா, ராஜராஜேஷ்வரி,

  கடிதத்தை வாசித்ததற்கும், தங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!

 7. அற்புதமான படைப்பு. ஒரு கலைஞனின்…கவிஞனின்..ஆழ்மன உணர்வுகளை அப்படியே படம்பிடித்து காட்டும் அருமையான கடிதம்.பாராட்டுகள்…வாழ்த்துக்கள்…

 8. மிக்க நன்றி, புதுவை பிரபா!!

  போட்டியில் சிறப்புப்பரிசு பெற்ற தங்களுக்கும் என் வாழ்த்துகள்!!

Leave a Reply

Your email address will not be published.