Blog

  • சில மலர்கள் இரவில் மலர்வது ஏன்?

     

    பி. தமிழ்முகில் நீலமேகம்

    சில மலர்களில் மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் ஏற்படுகின்றது.அத்தகைய மலர்கள் இரவில் மட்டுமே மலர்கின்றன. அம்மலர்களின் வாசனை அபாரமாக இருக்கும்.மேலும், இரவில் மலரும் மலர்கள் வெண்மை நிறத்திலேயே இருக்கின்றன.இது அவற்றின் மரபணு தனிப்பண்பு ஆகும்.பகலில் மலரும் மலர்கள் பல்வேறு வண்ணங்களில் இருக்கின்றன.அதனால், வண்டுகள்,தேனீக்கள் போன்றவை அவைகளால் எளிதில் கவரப்படுகின்றன.வெண்ணிற மலர்கட்கு பகலில் வண்டுகள்,வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் தன்மை குறைவு. எனவே, அவை இரவில் மலரும் தழுவலைப் (adaption) பெற்றுள்ளன. வெண்மை நிற மலர்கள் இருளில் நன்கு தெரிவதால், அவை பூச்சிகள்,வௌவால்கள் ஆகியவற்றை எளிதில் கவர்கின்றன.மேலும், இவற்றின் அபார வாசனை பூச்சிகளை தன்வசம் இழுக்கின்றன.மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது.

    இரவில் மலரும் மலர்கள் சில: மல்லிகை, செம்பகம்,சம்பங்கி, மனோரஞ்சிதம்,வெண்தாமரை,நிஷாகந்தி.

    Share
  • திருமண வாழ்த்து!

     

    சக்தி சக்திதாசன்

     

     

    அன்புடைத் தம்பி

    அண்ணாகண்ணன்

    அழகுத் திருமகள்

    அன்பு ஹேமமாலினி

     

    இதயங்கள் தனை

    இணைத்தின்று நீவீர்

    இணைந்தீர் அழகாய்

    இல்லற வாழ்வினில்

     

    அன்பும் பண்பும் செல்வமும்

    அடைந்தே வாழ்வில்

    ஆனந்தம் கண்டிட்டு

    அடையட்டும் பெருவாழ்வே

     

    சிறந்த தம்பதியர் வாழ்வில்

    பெறுவது புரிந்துணர்வு ஒன்றே

    இருப்பதைப் பகிர்ந்து இதயத்தில்

    இனிமையைப் புகுத்திடுவீர்

     

    நேற்று வாழ்வின் அனுபவங்கள்

    இன்று வாழ்க்கையின் பொக்கிஷங்கள்

    நாளையை உங்கள் வசமாக்கிடும்

    நம்பிக்கை கொண்டே நடந்திடுவீர்

     

    செந்தமிழ்த் தேன் போல் சுவையும்

    சிந்திடும் மலர்களின் சுகந்தம் போல்

    செழித்திடும் வாழையின் சந்ததிபோல்

    சிறப்புடன் வாழ்ந்திட வாழ்த்திடுவோம்

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    விக்கிரமாதித்தன் கதையில் மிகவும் எது முக்கியமானது என்றால் அந்த அரசனின் விடாமுயற்சி எனும் சிறப்பான குணம்தான். ஒவ்வொருநாள் இரவும் மெனக்கெட்டுப் போய் முருங்கை மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் வேதாளத்தைத் தன் தோளில் தொங்க்ப்போட்டுக்கொண்டும் அந்த வேதாளத்தின் கதையை விடாமல் கேட்டுவிட்டு அது திருப்பிக் கேட்கும் கேள்விக்கு திருப்தியாக விடை சொல்லிக்கொண்டும்,  விடை கிடைத்தாலும் உடனே அவனை விட்டு நழுவிப்போகும் வேதாளத்தை சற்றும் மனம் தளராமல் மறுபடியும் அடுத்த நாள் இரவு தேடிப் போய்ப் பிடித்து தோளில் தொங்கபோட்டுக்கொண்டு… அடடா, அவன் பொறுமையே பொறுமை என்று படிப்போர் பாராட்டத்தான் செய்வர்.

    இந்த விக்கிரமாதித்தனின் விடாமுயற்சி போல இன்னொரு பெண்மணி இப்படித்தான் நம் தமிழ் நாட்டு தொல் மரபுகளை சேமித்து வைக்கவும், அதைப் பாதுகாக்கவும் ஒவ்வொரு முறையும் (யாரைப் புதிதாகப் பார்க்க நேர்ந்தாலும்) கேட்டுக் கொண்டே இருப்பார். அப்படி மற்றவர்களை மட்டும் கேட்டுவிட்டு நின்று விடாமல் அந்தப் பணியை தானே முன்னின்று செய்வதிலும் வல்லவர். அவர்தான் ஜெர்மனியைச் சேர்ந்த மலேயத் தமிழர் திருமதி சுபாஷிணி டிரெம்மல்.

    சுபாவை கடந்த ஆறு வருடங்களாகவே தெரியும். என் அழைப்பை ஏற்று விசாகப்பட்டினம் வருகை தந்தவர். வந்தவர் ஒரு பொழுதும் சும்மா இராமல் தமிழ்ச்சங்கத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தமிழ் மரபைக் காக்க அவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்லிகொடுத்தார். இது அவரது இயல்பான வேலைகளில் ஒன்று என அன்றுதான் தெரிந்துகொண்டேன். எந்த ஊர் சென்றாலும் அந்த ஊருக்கே உரிய பெருமைகளைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற கொள்கையும் அதன் தொடர்பான அவரது விடா முயற்சியும் சென்ற இடங்களிலெல்லாம் மக்களை அதற்கேற்றவாறு ஊக்குவித்துக்கொண்டும் செல்லும் இவரது திறன் ஆற்றல் மிக்கது. இப்படித்தான் கடந்தமுறை இந்தியா வந்தபோது அவர் சென்ற ஊர்களில் கண்ட அனுபவங்களையும் தொல் பெருமையையும் சமீபத்தில் பதிவிட்டு வருகிறார். அதனுள் சென்றவாரம் பதிப்பித்த தேவகோட்டை ஜமீன் பதிவில் ஒரு விசேஷம் இருந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு எழில் நகரம் தேவகோட்டை. வரலாற்றை கேட்டு அறிந்து கொள்ளும் போது பாஸ்கர சேதுபதி அவர்கள் ராஜாவாக பதவி பெறுவதைத் தடுக்க பங்காளிகள் முயற்சித்த போது நடந்த  குழப்பத்தில் பாஸ்கர சேதுபதிக்கு உதவிய ஏ.எல்.ராமசாமி செட்டியார் அவர்களை தான் ராஜாவாக பொறுப்பேற்ற பின்னர் கௌரவித்து அவருக்கு ஏராளமான நிலங்களை வழங்கி தேவகோட்டை பகுதிக்கு அவரை ஜமீந்தாராக நியமனமும் செய்திருக்கின்றார்.இவர் ஜமீந்தாராக ஆகிய பின்னர் செய்த ஆலயத் திருப்பணிகள் பல. காளையார் கோயில் திருப்பணி, ராமேஸ்வர சத்திரம் மற்றும் கோயில் திருப்பணி, காளகஸ்தி கோயில் திருப்பணி, சாலை புதுப்பித்தல் எனப் பல சமூகப் பணிகளைச் செய்ததை நாம் மறக்க முடியாது. http://voiceofthf.blogspot.de/2012/12/blog-post.html

    இதில் விசேஷம் என்னவென்றால் இவர் செல்லுமிடமெல்லாம் அவர்களது பேட்டியைப் பதிவு செய்வதுதான். அந்தப் பதிவின் போது பலர் அறியாத புதிய செய்திகள் கிடைக்கின்றன. குறிப்பாக நகரத்தார் ராஜாக்களுக்கு அந்தக் காலங்களில் கடன் கொடுத்து உதவுவது போன்ற விஷயங்கள், தஞ்சை போன்ற பெரிய இடங்களை அடமானமாக ராஜாக்கள் வைக்க ஒப்புக்கொண்ட விஷயங்கள், ராமேஸ்வரம் போன்ற பெரிய கோயில்களுக்கு அவர் முன்னோர் செய்த திருப்பணிகள், அந்தக் காலகட்டத்து மக்களின் வாழ்க்கை விவரங்கள், செட்டியார்களின் வாழ்க்கைப் போக்குகள் இன்னும் பல விஷயங்கள் பேட்டி எடுக்கப்பட்டு வரும்போதும் அப்படியே அவைகள் சேமிக்கப்படும்போதும் பிற்கால சந்ததியினருக்கு இந்த விஷ்யங்கள்  எப்பேர்ப்பட்ட உதவிகளை அது செய்யப்போகிறது என்பதனை நினைத்துப் பார்த்தாலே சந்தோஷம் வருகின்றது. ஏற்கனவே பாரதி பிறந்த எட்டயபுரத்தைப் பற்றி பலர் அறியாத விஷயங்களை புகைப்படங்களோடு பதிவு செய்து பாதுக்காத்து வைத்திருக்கிறார். இவர் முயற்சியால் மரபு விக்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல நல்ல விஷயங்கள் மரபு விக்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. விஷயதானத்தை சிறந்த வகையில் பகிர்ந்து கொள்ள எல்லா வழிகளையும் பின்பற்றும் இவரது விடாமுயற்சியைப் பாராட்டாமல் இருக்கமுடியுமா?

    விக்கிரமாதித்தனின் விடாமுயற்சி கடைசியில் வேதாளத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, பின்னர் அது விக்கிரமாதித்தனுக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்யப்போவதும் கதையைப் படிப்பவர்களுக்குதான் புரியும். ஆனால் சுபாவின் விடாமுயற்சியின் பலன்கள் யாவும் பிற்கால சந்ததியினருக்கே.. அவர் மட்டுமல்ல, அவரால் ஊக்குவிக்கப்பட்டு அவரைப் போலவே மரபைப் பாதுகாக்கும் ஒவ்வொருவரின் செயலும் பிற்காலச் சந்ததியினருக்கு எத்தனையோ உதவிகள் செய்யப்போகிறதுதான். விக்கிரமாதித்தனின் விடாமுயற்சியை விட சுபாவின் விடாமுயற்சி சிறப்பாக இருக்கிறது.

    இந்த தற்கால விக்கிரமாதித்தியின் (விக்கிரமாதித்தனுக்கு பெண்பால் பெயர் கொடுத்தால் விக்கிரமாதித்திதானே) தொல் மரபைப் பாதுகாக்கும் பணிகளுக்கு நம் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும் தாராளமாகத் தெரிவிக்கின்ற அதே நேரத்தில் இந்த வாரத்தில் அருமையான ஒரு குரல்பதிவைத் தந்த திருமதி சுபா அவர்களை இந்த வாரத்து வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பதில் வல்லமை குழுவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. வல்லமையாளரான சுபாவால் மேலும் புதுப்புது விஷயங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படப் போகின்றது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

    கடைசிபாரா:  

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது –

    அண்ணா கண்ணனுக்கு திருமண நல்வாழ்த்துகள் இங்கே சொல்லவில்லை என்றால் எப்படி? நீண்டு நீடூழி காலம் இன்பமாய் இருவருமாய் இல்லறத்தை சுவைத்திட வேண்டுவோம்.

    Share
  • பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு

                                                       சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


    [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ]

    [ஆர்க்டிக் வட்டாரப் பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்]


    சூட்டு யுகம் பூதமாகிப் புவிக்கு
    வேட்டு வைத்து மீளுது !
    நாட்டு நகரம், வீட்டு மக்கள்
    நாச மாக்கிப் போகுது !
    புயலை எழுப்ப மூளுது !
    பேய்மழை யைக் கொட்டி அழிக்குது !
    நீரை, நிலத்தை, வளத்தை,
    பயிரை, உயிரை, வயிறை
    இயற்கை சிதைக்க வருகுது !
    கடல் வெப்பம், மட்டம் ஏற்றி
    கரைப் பகுதி மூழ்க்குது !
    மெல்ல மெல்ல ஏறி உஷ்ணம்,
    மேலே மீறிப் போகுது !
    சூட்டு யுகப் பிரளயம்,
    நாட்டை நோக்கித் தாக்குது !
    உன்னை, என்னை, உலகின் கண்ணை
    இன்னும் பிதுக்கப் போகுது !

    ஓரிடம் எரிமலை பொங்கி
    உலகெலாம் பரவுது
    கரும்புகை மூட்டம் !
    ஓஸோன் குடையில்
    ஓட்டை விழுந்து,
    பரிதிக் கதிர்கள் தாக்கும் புவியை !
    துருவப் பனிப்பாறை
    உருகி, உருகி
    உப்புக் கடல் மட்டம் உயரும் !
    பருவக் காலச் சுழற்சி
    தாளம் மாறிப்
    வேளாண்மை தட்டிப் போகும் ,
    கோடை நீடிக்கும்,
    குளிர்காலப் பனிப்பாறை
    வளராமல் குள்ள மாகும்
    துருவ முனைகளில் !
    நிலப்பகுதி நீர்மய மாகும் !
    நீர்ப்பகுதி வரண்டு போகும் !
    மனித சமூகம் நாச மடைய,
    புனித வாழ்வு வாச மிழக்க
    புகுந்து விட்டது,
    பூத வெப்ப யுகப் பிரளயம் !

    ++++++++++++++++

    2000 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை கிரீன்லாந்தின் பனிப்பாறை 1500 கிகா டன் [1 gigaton = 1 billion ton] பரிமாணத்தை இழந்திருக்கிறது [190 gigaton per year] என்று ஒரு புதிய அறிவிப்பில் தெரிகிறது. அதாவது 2006 முதல் 2008 வரை ஆண்டு ஒன்றுக்கு பனிப் பரிமாண இழப்பு 273 கிகா டன்னாக ஏறி இருக்கிறது. 2000 முதல் 2008 வரை அறியப் பட்ட கடல் மட்ட உயரம் : 4 மில்லி மீடர். கடைசி மூன்று ஆண்டுகளில் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.75 மில்லி மீடராக ஏறியுள்ளது.

    Van Den Broeke [Dutch Researcher Spoke to SPEIGEL ONLINE]


    Arctic Ice Retreat

    “துணிச்சலான இந்தப் பணியின் வெற்றி அகில நாட்டு ஐக்கிய விஞ்ஞானச் சமூகத்தின் முயற்சி யாலும், விண்வெளி ஆணையாளர் பலருடைய துணைக்கோள்களின் துல்லிய உணர்வுக் கருவிகளின் அறிவிப்பாலும் கிடைத்தது. இந்த ஆதாரங்களின்றி, எப்படிப் பனித்தட்டுகள் உருகின வென்று நாங்கள் உறுதியோடு மக்களுக்கு அறிவித்திருக்க முடியாது. பூகோளச் சூடேற்றம் பற்றி நீண்ட காலமாய் நிலவிய நிச்சயமற்ற இந்த ஐயப்பாட்டை நாங்கள் நீக்கியிருக்க இயலாது.”

    பேராசிரியர் ஆன்ரூ ஷெப்பர்டு [லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து]

    “உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

    அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

    Icebergs in the Sea

    “பல ஆண்டுகளாக அண்டார்க்டிக் பனிப்பாறைப் பரிமாணத்தில் ஏற்பட்ட அரங்க மாறுதல்கள் பளிச்செனத் தெரிந்தாலும், எம்மிடமுள்ள துணைக்கோள் கணக்கெடுப்புகளில் பொதுவாகச் சமப்பாடு நிலைமை மாறாமல் இருப்பது காணப் பட்டது.

    டாக்டர் எரிக் ஐவின்ஸ் [Co-Leader, NASA Jet Propulsion Laboratory]

    “ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது. உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன. உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன. சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”

    உலகக் காலநிலை நிறுவகம் [World Meteorological Organization (WMO)]

    Industrial Gas Emission

    “2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள். அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங்களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது! வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதியாக்கப் பட்டது! அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”

    உள்நாட்டுக் காலநிலை மாறுபாட்டு அரங்கம் [Intergovernmental Panel for Climate Change (IPCC) April 2, 2001]

    “வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை! மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

    ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

    பூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது! கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது! கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்!

    அமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]


    Fig 4 Huge Forest Fires

    “கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.

    பூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:

    1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூதள உஷ்ணம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 ஆண்டிலிருந்து 2000 முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக்க வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி உஷ்ணம் ஏறியுள்ளது.

    2. 20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன. அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

    Fig 1 Carbon Emissions

    Fig 1 Global CO2 Concentrations

    3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது! கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்.

    4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன! வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

    5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

    6. WHO [World Health Organization] பூகோளச் சூடேற்றத்தால் [மித மிஞ்சிய சூடு / குளிர், வரட்சி, பஞ்சம், கடும் வெப்ப அலைகள், உணவுப் பற்றாக் குறை, மலேரியா போன்ற நோய்கள்] ஆண்டுக்கு 150,000 பேர் மரிப்பார் என்று எச்சரிக்கிறது.

    டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center] and [11 Facts About Global Warming]

    Global Warming Effects

    ஆர்க்டிக் வட்டார பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும் [டிசம்பர் 2012]

    துருவப் பகுதிகளில் பனிப்பாறைச் சரிவுகளும், பனிக்குன்றுகளும் உருகி கடல் மட்டம் உயர்வதும், கடல் நீர் வெப்பம் கூடுவதும் கடந்த 50 ஆண்டுகளாய் இரண்டாம் தொழிற் புரட்சி வலுவாகிக் கடும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் கொள்ளளவு மிகையாகி வருவதை யாரும் புறக்கணிக்க முடியாது. அதனால் பூமியின் பருவ நிலைக் கோளாறுகள், முரண்பாடுகள் பேரளவில் தோன்றி உலக மக்கள் நடை வாழ்வு, நாகரீகம் சிதைவாகி இன்னல் அடைந்து வருகிறார். 21 ஆம் நூற்றாண்டில் பயங்கரக் “காத்ரீனா” ஹர்ரிகேன் கடற் சூறாவளி அடித்து நியூ ஆர்லியன்ஸ் நகரம் முற்றிலும் சேதமடைந்து நாசமான ஓர் நரகக் காட்சியை தீட்டியது. 2012 அக்டோபரில் அடித்த பூத ஹர்ரிகேன் “ஸாண்டி” நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களை நிர்மூல மாக்கியது. ஹர்ரிகேன் கத்ரீனாவும், ஸாண்டியும் சூட்டு யுகம் தயாரித்த மாபெரும் பயங்கர ஹைடிரஜன் குண்டுகளாகக் கருதப் பட வேண்டும்.

    CO2  Emissions by countries

    சூட்டு யுகத்தில் 2012 ஆண்டில் அறியப்பட்ட சில எதிர்பாரா விளைவுகள்:

    26 ஆய்வகத்தின் 47 சூழ்மண்டல வாதிகள் கூடி 10 துணைக்கோள் அறிவிப்புகளைத் திரட்டி, துருவப் பனிப்பாறைச் சரிவுகளின் உறுதியான விளைவுகளை வெளியிட்டுள்னர். 1992 முதல் 2011 ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகளில் ஐரோப்பாவின் தூர இயக்கு உணர்வு துணைக்கோள் [ERS Mission : European Remote Sensing Satellite] அனுப்பிய தகவல்படி, கிழக்குக் கடற்கரை கிரீன்லாந்தின் பனித் தளம் ஐந்து கி. மீடர் [சுமார் 3 மைல்] சுருங்கி விட்டதாக அறியப் படுகிறது. துருவப் பகுதி பனித்தளப் பரிமாணத்தைக் கண்காணிக்கும் அந்த ஐரோப்பியத் துணைக் கோள் “பரிதி முகநோக்குத் துருவச் சுற்று வீதியில் [Sun-synchronous polar orbit] சுற்றி வருகிறது. 1992 ஆண்டு முதல் கிரீன்லாந்து அண்டார்க்டிக் பகுதிகளின் பனித் தட்டுகள் உருகிக் கடல் மட்டம் 11 மில்லி மீடர் உயர்ந்துள்ளதாக அறியப் படுகிறது. 2012 ஆண்டு வெளியீட்டின்படி துருவத்தில் கிரீன்லாந்து, அண்டார்க்டிகா இரண்டின் பனிச்சிதைவு 1990 ஆண்டைப் போல் மூன்று மடங்காகப் பெருகி யுள்ளது.

    Antarctica

    சூடேறும் பூகோளம் பற்றி முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அல் கோர்

    பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

    Global ocean mean temperature

    பூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி

    பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது! வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது! அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகை யாகிறது! வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது. அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது! அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும். அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.

    Atmospheric CO2

    பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது! பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது. அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது. பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது. நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன! பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித் தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன! அவ்விதமாக காலநிலை யந்திரமானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!

    Sea Level Change

    கிரீன்ஹௌஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion]. அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது! பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது. அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும். கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது! பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்ப தாகக் கணிக்கப் பட்டுள்ளது! பனிமண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது! மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடரியக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹௌஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது!

    Fig 1 Arctic Ice Melting


    சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

    கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை. அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2]. மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas]. அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது. அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692. அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

    2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது! பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது. அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது!

    (தொடரும்)

    தகவல்:

    1. Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference] (April 9, 2007)

    2. An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

    3. BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

    4. BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

    5. BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

    6. [11 Facts About Global Warining ]

    7. http://www.cosmosmagazine.com/news/676/ice-retreat-opens-passage-north-pole [September 21, 2006]

    8. http://www.spiegel.de/international/world/a-warming-arctic-greenland-s-ice-sheet-melting-faster-than-ever-a-661192.html [November 13, 2009]

    9. http://topics.nytimes.com/top/news/science/topics/globalwarming/index.html# [December 6, 2012]

    10. http://en.wikipedia.org/wiki/Global_warming [December 8, 2012]

    11. http://en.wikipedia.org/wiki/Hurricane_Katrina [Katrina Hurricane Damage in New Orleans] [December 9, 2012]

    12. http://en.wikipedia.org/wiki/Hurricane_Sandy [Sandy Hurricane Damage in New York, New Jersey etc]

    13. http://en.wikipedia.org/wiki/European_Remote-Sensing_Satellite [European Remote Sensing Satellite Mission] [December 7, 2012]

    14. http://en.wikipedia.org/wiki/Gravity_Recovery_and_Climate_Experiment The Gravity Recovery And Climate Experiment (GRACE), a joint mission of NASA and the German Aerospace Center [Noember 20, 2012]

    15. EcoAlert : Forty Seven ESA/NASA Experts Warn of Increasing Ice Melt & Rising Sea Levels [December 3, 2012]

    ++++++++++++++++++++

    S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 9, 2012) [R-1]

    Share
  • தொல்லைக்காட்சி: தர்மயுத்தம்-நீர்ப்பறவை-மர்ம தேசம்

    மோகன் குமார்

    சீரியல் பக்கம்: தர்மயுத்தம்

    விஜய் டிவியில் தர்மயுத்தம்  சீரியல் தினம் பத்தரை மணிக்கு வருகிறது. கிட்டி, அப்பாஸ், கார்த்திக் குமார் என ஒரே சினிமா நட்சத்திரங்கள் தான். எப்போதேனும் சில நிமிடங்கள் மட்டும் பார்க்க காரணம் சினிமா காரர்கள் நடிக்கிறார்கள் என்பதால் அல்ல.. முழுக்க முழுக்க வழக்கு, கோர்ட் என வக்கீல்கள் பற்றி சுழுலுவதால். இதில் பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதி முதல் முறையாய் நடிக்கிறார். கூடவே அவர் கணவர் ஸ்ரீராமுக்கும் ஒரு பாத்திரம். குடும்ப சீரியல் என்பது இது தானுங்களா ?

    நீர்ப்பறவை சிறப்பு நிகழ்ச்சி

    சீனு ராமசாமி, சரண்யா, விஷ்ணு ஆகியோரை வைத்து ரம்யா நீர்ப்பறவை பற்றி இரண்டு நாள் பேசி தீர்த்தார். சீனு ராமசாமி நடிகர் மாதிரி மேக் அப் எல்லாம் போட்டு வந்திருந்தார். கச்ச தீவு அருகே பதினெட்டு கிலோ மீட்டர் தாண்டினால் அடுத்த நாடு வந்துடுது; அந்த எல்லையை எப்படி ஞாபகம் வச்சு நிக்க முடியும்? நான் சிறுவனா இருப்பதில் இருந்து மீனவர் சுட்டு கொல்லப்படுவது நடக்குது ” என வருத்தத்தோடு பேசினார். சரண்யா இவரது ஆஸ்தான அம்மா நடிகை ஆகிவிட்டது தெரிகிறது. போன ரெண்டு படம் வெய்யில்லே போட்டு வாட்டீடீங்க என அவர் சொல்ல அடுத்த படம் ” கொடைக்கானலில்; அதுனால நீங்க கவலைப்படவேணாம் ” என்றார் சீனு ராமசாமி !

    ஆங்காங்கு காட்டிய படத்துளியில் மீண்டும் ரசித்தது சுனைனாவை தான் ! என்னா அழகுடே !

    பாட்டு டாட் காம்

    வார நாட்களில் தினம் இரவு ஒன்பது மணிக்கு சண் மியூசிக்கில் பாட்டு டாட் காம் என்ற நிகழ்ச்சி சற்று சுவாரஸ்யமாய் இருக்கு. இணையம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது ! நிகழ்ச்சி தொகுத்து வழங்க சுரேஷ் மற்றும் அஞ்சனா என்கிற இருவர் உட்கார்ந்து அரட்டை அடிக்கிறார்கள். (அந்த பெண் சூப்பர் சிங்கரில் பாடிய அனிதா என்கிற பாடகி போலவே இருப்பார். ) ஒவ்வொரு நாள் ஒவ்வொரு தலைப்பு எடுத்து கொண்டு முதலில் அதை சண் டிவி பேஸ்புக் பக்கத்தில் நிலை செய்தியாக போடுகிறார்கள். அதற்கு வரும் நல்ல காமன்டுகளை அவர்கள் பெயரோடு குறிப்பிட்டு விட்டு பாட்டு போடுகிறார்கள். இடையே யாராவது காலர் (Caller ) போன் செய்து கலாய்க்கிறார். நேரம் இருக்கும் போது ஒரு முறை இந்த நிகழ்ச்சியை பாருங்கள்.

    பிளாஷ்பேக் : மர்மதேசம்

    த்ரில்லர் கதைகள் டிவியில் பிரபலமாக இந்த சீரியல் ஒரு முக்கிய காரணம். பேய், பிசாசு போன்றவற்றின் மீதும் நம்பிக்கை கிடையாது; த்ரில்லர் படங்களும் பிடிக்காது எனும் என்னை போன்றவர்களும் இந்த நிகழ்ச்சியை பார்க்க முக்கிய காரணம் நாகா என்கிற இயக்குனர் தான். அந்த சீரியல் பார்க்கும்போது சினிமா பார்க்கிற மாதிரியே இருக்கும். தேவதர்ஷினி, சேட்டன் போன்றோருக்கு முதல் சீரியல் இது. ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என பல பக்கத்தில் மிரட்டியது. சின்ன திரையில் கலக்கிய நாகா சினிமாவில் பெரிதாய் முத்திரை பதிக்காதது வருத்தமே !

    கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்

    ஞாயிறு இரவு ஏழரை மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது “கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்” என்கிற சமையல் போட்டி. இளவரசன், நேத்திரன், பிரியா, பூஜா என சின்ன திரை பிரபலங்கள் கலந்து கொண்டு சமைத்து காட்டுகிறார்கள். குறிப்பிட்ட ஒரே வகை உணவு ஐட்டங்களை அனைவருக்கும் தந்து விட்டு, ஒரு மணி நேரத்துக்குள் அதை வைத்து உணவுகள் தயாரிக்க சொல்கிறார்கள். சமையலை சுவைத்து மார்க் போடும் நடுவர்களாக சமையல் நிபுணர்கள் தாமுவும், சஞ்சீவ் குமாரும் வருகிறார்கள்.

    அவங்க சமைக்கிறதை நம்ம ஹவுஸ் பாஸ் ஆர்வமா பார்க்க, நான் வேறு விஷயத்துல ஆர்வமா இருப்பேன். இதுல சமைக்க வர்ற ஒரு சீரியல் பொண்ணு செம அழகா இருக்கும் ஹி ஹி

    டிவி: குறுஞ்செய்திகள் 

    ** நீதானே என் பொன்வசந்தம் பட விளம்பரம் டிவியில் போடத்துவங்கி உள்ளனர். என்னமோ சந்தானம் தான் ஹீரோ மாதிரி ” புடிக்கல மாமு” பாட்டை போட்டு அவரை மட்டுமே காட்டுகின்றனர். ஜீவா ஆளையே காணும் ! யாருக்கு மார்க்கெட் இருக்கோ அவரை வச்சு படம் காட்டுறாங்க ! ம்ம்

    ** கலைஞர் டிவி யில் சினிமா செய்திகள் என்று ஒரு நிகழ்வு வருகிறது. வைரமுத்துவின் தண்ணீர் தேசம் நாவல் படமாக்கப்படுவதாக சினிமா செய்தியில் சொன்னார்கள். ( ஓடுங்கறீங்க ?)

    ** மறுபடி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி விஜய் டிவியில் ஆரம்பிக்குதாம். இம்முறை சூர்யா தானா அல்லது நடிகரை மாற்றுகிறார்களா என தெரியலை !

    Share
  • HEALTHY BODY MAKES HEALTHY MIND (14)

     

    Sangeetha

                                      14.EDAMAME

            

    Choose your soybean. There are many different options out there, from frozen, cooked and frozen, and fresh. If you are lucky enough to find fresh Edamame at your local market, opt for those! All other varieties are fine to use also.It have been called the “wonder veggie”because of its super-nutritional value.These beans are healthful substitute for protein sources that are high in cholesterol and saturated Fat(raises the LDL cholesterol,(ie Bad) ). But it is a good snack for the kids as it is rich in vitamin k, Folate and Mangenese, high fiber, protein, Iron,Thiamine,magnesium,phosphorous and copper.This food is low in sodium.

    Prepare your water. Some edamame experts will tell you that the only way to cook them is with salted water. Depending on your taste and dietary needs, you may choose to not salt the water. A recommended amount of salt for about a pound of edamame would be 1/2 tablespoon for salt lovers, 1 teaspoon for less of a salty taste. Add the salt to a large pot, 3/4 of the way filled with water.

    Add the edamame. When the water is at a rolling boil, add the edamame in small handfuls. If you dump all the beans it at once, you risk burns from splashing created by the beans.Remove pot from burner. Dump the entire contents of the pot through a colander. (In tamil: Jalladai patharam).There will be a lot of steam from the pot, so don’t put your face directly over the colander.For frozen beans, boil time is around 4-5 minutes. For fresh beans, test an individual edamame at around 5-6 minutes and gauge the firmness of the bean. Young fresh beans will be done in 3 minutes.

     

    Refrigerate to cool. While not a necessary part of the preparation, most people enjoy edamame cold rather than hot. Discard the pods in to a seperate bowl,and enjoy it .

    They are the base of soy sauce, tofu, and soymilk. You can eat them as a snack.Edamame are also an excellent addition to salads, soups, and rice dishes.



     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    p

     

     

     

     

    Share
  • இனிய மணநாள் வாழ்த்துக்கள்!

     

     

     

     

    பவள சங்கரி

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது (குறள் 45)

    இனிய இல்லறத்தில் இன்பமுடன்
    அன்பும் சிவமுமாய் இணைந்திருப்போரே
    பண்பும் பாசமும், நேசமும் கொண்டு
    திருமண பந்தத்தில் பல்லாண்டு பல்லாண்டு
    நீங்காத செல்வம் நிறைந்தோங்கி
    வாழ்வாங்கு வாழ்வீரே!!!

     

     

     

     

    Share
  • பனித்துளி சுமக்கும் புற்கள்

    தனுசு

    அதிகாலை நேரம்
    பசும் புல்வெளி மீது
    படுத்துறங்கும் பனியே
    உன்னையும் புல்வெளியையும்
    இணைத்துத் தான்
    எத்தனை எத்தனை கவிதை
    நானும் பாடுவது….

    அன்றொரு நாள்
    “இதோ இந்த அருகம் புல்
    இரவு முகூர்த்தம் முடித்து
    அதிகாலையில்
    தலை குளித்துவிட்டு
    வருகிறது” என்று எழுதினேன்

    அடுத்தொரு நாள்
    “என் நிலாக் காதலியின்
    அழகைப் பார்த்ததால்
    அவமானப்பட்டு பச்சைப்புற்களின்
    நுனி மூக்கு வேர்க்கிறது” என்று எழுதினேன்

    நேற்றைக்கு
    “நிலவோடு
    நேசக்கலவையின்
    இச்சை முடியாத போது
    இரவுப்பொழுது முடிந்து விட்டதை எண்ணி
    பச்சைப் புற்கள்
    கண்ணீர் சிந்துகிறது” என்று எழுதினேன்

    இன்று
    “என் குலப் பெண்கள் திருவிழாவில்
    கரகமும் கலசமும் சுமப்பது போல்
    அதிகாலையின் இயற்கைத் திருவிழாவில்
    அருகம் புற்கள்
    பனிக்குடம் சுமக்கிறது” என்று எழுதினேன்

    நாளை
    “பருவ அடையாளங்களை
    தாங்கி நிற்கும் குமரியைப் போல்
    நீர்த் திவலையைத் தாங்கி நிற்கும்
    பச்சைப் புற்கள்” என்று எழுதுவேன்

    இன்னும் எழுதுவேன்
    அதற்கும் முன்
    ஒரு
    உண்மையை யாராவது சொல்லுங்களேன்…

    பருவப்பெண்ணின்
    ஈர அதரங்களைத் தொட்டால் கூசி சுருங்குவது போல்
    அதிகாலையில்
    பனிப் பச்சையின் ஸ்வாசம் முகர்ந்து
    இவைகளை ருசிக்கும்போது
    குளிரும் சிலிர்ப்பால்
    கூச்சமடையும் என்னை…..

    அவைகளை
    தினந்தோறும் கவி எழுதும் என்னை…..

    அந்த புற்கள்
    நிமிர்ந்து பார்க்காமல்
    குனிந்த தலையோடு இருக்க….

    பகலின் வெளிச்சம் படும் போது
    பனி விலக்கி
    அந்த சூரியனுக்கு மட்டும்
    அழகிய புற்கள்
    நிர்வாண தரிசனம்
    தருகிறதே அது ஏன்?

     

    Share
  • அங்கிங்கெனாதபடி!

    நரசய்யா

    என்னைப் பொறுத்தவரையில் இக்கதை உண்மையாக நடந்த விஷயம்.சிறிதும் புனைவு கிடையாது!. நான் தான் கதாநாயகன். இப்போது நினைத்துப் பார்த்தாலும் பயமாக உள்ளது.


    1955 ஆம் வருடம் இறுதி மாதங்கள் – நான் ஐ. என். எஸ். பெங்கால் என்ற கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். கப்பல் பம்பாய்த் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்தது. அது மைன் ஸ்வீப்பர் வகையைச் சேர்ந்தது. சுமார் 100 அடி நீளமே கொண்ட மிகச் சிறிய இரண்டாம் உலக மஹா யுத்தத்தில் பங்கு கொண்ட கப்பல்; சுதந்திரத்தின் போது, பாகிஸ்தானும் இந்தியாவும்  பங்கு போட்டுக் கொண்ட போது இந்தியாவுக்குக் கிடைத்த வெகுமதிக் கப்பல் – என் போன்றவர்களுக்கு ஒரு தண்டனை. 22 வயதில் என் வயதினையொத்தவர்கள இன்னும் பெற்றோர் அரவணைப்பில் இருந்து கொண்டிருந்த நிலையில், நான், அந்தத் தண்டனைக் கப்பலில், (ஆம்; மற்ற மாலுமிகள் இம்மாதிரிக் கப்பல்களைத் தண்டனைக் கப்பல்கள் என்றுதான் அழைப்பர்) ஒரு விதமான சௌகரியங்களும் இல்லாத, எப்போதும் நின்று விடக்கூடிய பழுது பட்ட இயந்திரங்களுடன் அதில் பணி புரியும் எல்லோருக்கும் மிக்க வேதனையைத் தந்து கொண்டிருந்த கப்பலின் ஒரு மாலுமி! அதுவும் கப்பற்பொறியியல் துறை பயின்ற ஒரு மாலுமி! இத்தனை துன்பம் தந்துகொண்டிருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் என்னால் மிகவும் விரும்பப்பட்ட கப்பல்! அதன் கேப்டன் கமாண்டர் டி அல்மைடா எனபவருக்கு எப்போதும் கடல் வியாதி உண்டு! பக்கத்தில் ஒரு வாளியை வைத்துக்கொண்டு அதில் வாந்தி எடுத்துக் கொண்டு பிரிட்ஜில் (கப்பல் செலுத்துமிடம்) நின்று கொண்டிருப்பார். எஞ்சின் நின்றுவிட்டால் எங்கே அந்த நரசய்யா என்பார். அதுவும் அடிக்கடி நிகழும் சங்கதி! சீஃப் எஞ்சினீயரோ கோவாவைச் சேர்ந்த ஒரு வயலின் இசைக் கலைஞர். அவரை எஞ்சினீயர் என்று கூறுவதே தவறு! அவரே சொல்வார்: “எனக்கு எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்று கூட தெரியாது. ஆனால் நரசய்யா இருக்கும் வரை எனக்குக் கவலை இல்லை!” அதையே தான் கமாண்டர் அல்மைடாவும் உறுதி செய்வார்! ”நீ நீரோ போல பிடில் வாசிக்கத்தான் தகுதி; ரோம் எரிந்தாலும் கவலையில்லையே!” என்பார் அதே போல கொந்தளிக்கும் கடலிலும் வயலின் வாசித்துக் காட்டுவார். “பீதோவனின் கோதெர்ட் வாசிக்கிறேன் கேட்கிறாயா?” என்பார். தலையெழுத்து என்றால் இதுதான்; ஆனாலும் சிறந்த மனிதன் எவரும் கஷ்டப்படுவதை விரும்பமாட்டார்.

    அப்போது இந்தியாவையே அச்சுறுத்திய ஃப்ளூ காய்ச்சல் பம்பாயிலும் தனது கைங்கரியத்தைத் துவங்கியது. முதலில் கேப்டனுக்கு அந்தக் காய்ச்சல் வந்தது. தொடர்ந்து எல்லோருக்கும் வந்தது.

    ஓரிரவு எனக்குத் தலைவலி மிக அதிகமாகி விட்டது. நடு இரவில் காய்ச்சல் அதிகமாகிவிடவே என்னை பக்கத்திலிருந்த (எங்கள் கப்பலில் ஒரு விதமான மருத்துவ உதவியும் கிடையாது) ஒரு பெரிய கப்பலுக்குப் படகில் அழைத்துச் சென்றார் எனது நண்பர் தான்சாமா என்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அந்தக் கப்பலிலிருந்த ஒரே ஒரு எஸ். பி. ஏ (ஆண் நர்ஸ்) மருத்துவம் தெரிந்த அளவில் என்னைப் பரிசோதித்து விட்டு காய்ச்சல் மிகவும் அதிகமாக உள்ளதால், ஐ. என். எஸ் அஸ்வினி என்ற பம்பாயின் சிறந்த இந்திய கப்பற்படையின் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லும்படி கூறி விட்டார். அப்போது என்னை அங்கு அழைத்துச் செல்ல தான்சாமாவுக்குக் கிடைத்த வாகனம் ஒரு கடற்படையின் ஒரு பெரிய லாரிதான்! அந்த லாரியில் சில சாமான்கள் கொலாபாவுக்குச் சென்று கொண்டிருந்தன. அந்த சாமான்களுடன் என்னையும் மற்றொரு சாமான் போல, கம்பளியால் சுற்றிவைத்துக் கொண்டு வந்தார் அந்த தான்சாமா. வழி நெடுக அவர் இந்திய கப்பற்படையையும் அதிகாரிகளையும் திட்டிக்கொண்டு வந்தார். எனக்கு நினைவு வருவதும் போவதுமாய் இருந்தது. சுமார் இரண்டு வருடங்கள் அம்மாதிரி பிராயாணம் செய்த பிறகு, (அப்படித்தான் எனக்குத் தோன்றியது ஆனால் எடுத்துக் கொண்டது ஒரு மணிநேரம்) மருத்துவ மனை சென்றடைந்தோம்.

    அந்த மருத்துவமனையில் என்னைப் பரிசோதித்த ட்யூடி டாக்டர் என்னை அங்கே அட்மிட் செய்து விட்டு தான்சாமாவைப் போகச் சொல்லி விட்டார்! அவரையும் திட்டி விட்டு தான்சாமா ஃபிளீட் கேண்டீனுக்கு பியர் குடிக்கச் சென்று விட்டார். கோபம் வந்தால் அவருக்குக் குடிக்கத்தான் தெரியும். அதுவும் பியர் ஒன்றுதான்.

    நான் உணர்விழந்திருந்திருக்க வேண்டும். ஏனெனில் நான் கண் விழித்த போது மருத்துவ மனையின் ஒரு கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் பேசிக்கொள்வது எனக்குக் கேட்டது. என்னைப் பரிசோதித்த டாக்டர் என்னை “டி. ஐ. எல்” லில் (Dangerously Ill List) போட்டு விட்டதோடல்லாமல் என்னை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றச் சொன்னது எனக்குக் கேட்டது. திரும்பவும் பிரக்ஞை இழந்து விட்டேன்!  காலம் வெவ்வேறு விதமாக ஓடுகிறது. காத்திருக்கும் காதலர்களுக்கும் கட்டிலில் கிடக்கும் நோயாளிக்கும் வினாடிகள் நாட்களாக காணப்படுகிறது. அதுவும் தெரியாமல் இந்த மாதிரி ‘மிலிட்டரி’ ஆஸ்பத்திரிகளில் இருந்து விட்டால் சொல்லவே வேண்டாம். சாதாரணமாக இவையெல்லாம் கால்நடை மருத்துவ மனை போலத்தான் செயல் படுகின்றன. ‘தேசத்திற்காகத் தமது உயிரைத் தியாகம் செய்ய வந்திருக்கும்” என்று அரசியல் வாதிகளால் (வெட்கமற்றவர்கள் ) வருணிக்கப்படும் போர்வீரர்கள் கால்நடைகள் போலத்தான் நடத்தப்படுகிறார்கள் என்பது நான் கண் விழித்த போது தெரிந்தது. நான் இப்போது வெராந்தாவில் கிடத்தப்பட்டிருந்தேன். கண் விழித்த போது மிகவும் பெரிய மார்பகங்களை உடைய நர்ஸ், (இவருக்கே 50 வயதிருக்கும் போலத் தோன்றியது எனக்கு) என்னைத் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்ததைக் கண்டு, எனக்குப் பதிலாக அவரது மார்பகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆர்மி டாக்டருக்குச் சொன்னார்: “இன்னும் உயிருடன் தான் உள்ளான்” அவர் குரலில் ஏமாற்றம் இருந்தது போல எனக்குப் பட்டது! சித்திரகுப்தனும் எமனும் பேசிக்கொள்வது போல இருந்தது. “இன்னும் டயம் வரவில்லை” டாக்டர் தமது கண்களை வைத்த இடத்திலிருந்து எடுக்காமலேயே கூறினார்.

    சில நல்லதுகளும் இம்மாதிரி மருத்துவ மனைகளில் நடக்கின்றன. அந்த நர்ஸ் மிகவும் நல்லவர் என்பது பிறகு தான் எனக்குப் புரிந்தது. “நீ ஒரு வெஜிடேரியனா?”

    அப்போது நானிருந்த நிலையில் எனக்கே புரியவில்லை என்ன கேட்கிறாரெனப் புரியவில்லை. நான் மிரளுவதைப் பார்த்து, ஒரு தாயின் உணர்வோடு பேசினார். “நீ மெட்ராசி தானே? உன்னோடே மார்பிலே பூணூல் தெரிகிறது. அதனால் தான் கேட்டேன்” என்று மராத்தி கலந்த ஹிந்தியில் கேட்டார். “நிறைய பால் சாப்பிடு காய்ச்சல் போயாச்சு, தண்ணியும் நெறய்ய குடி” இப்போது அவர் தமிழில் பேச முயன்றது ஆச்சரியத்தை அளித்து! ஹிந்தியில் தொடர்ந்தார். அவர் சிறிது காலம் மெட்ராஸ் மிலடரி ஆஸ்பத்திரியில் வேலை செய்த போது தமிழ் கற்றாராம்! தமிழுக்கு வந்த தலைவலி!

    டாக்டர் வந்தார். பஞ்சாபி; எல்லோரையும் திட்டிக் கொண்டு வந்தார். என்னைப் பார்த்தும் கத்த ஆரம்பித்து விட்டார். “ஏன் கீழே கிடக்கிறாய்? செத்துத் தொலைவதற்கா?” அவர் கேள்வி எனக்கு ஆச்சரியத்தை அளித்து. ஏதோ நானே இங்கு வந்து படுத்திருப்பதாக எண்ணமோ?

    அவர் போன பிறகு அந்த நர்சை அழைத்தேன்.  ”நான் இங்கே வந்து எத்தனை நாளாயிற்று?”

    அவர் சொல்லித்தான் தெரிந்தது. மூன்று நாட்கள் முன்பு நான் அட்மிட் ஆன போது மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும் எங்கள் கமாண்டிங் ஆபிசர் வந்த பார்த்துச் சென்றதாகவும் ஆனால் அவரும் இங்கே பின்னர் அட்மிட் ஆகி விட்டதால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லயென்பதும் நான் சென்றுவிட்டால், (அதாவது உலகத்தை விட்டு) என்ன செய்வதெனப் பேசிக்கொண்டிருந்ததாகவும் சொன்னார். சிரித்துக் கொண்டே சொன்னார்!

    வெராந்தாவிலிருந்து உள்ளே  வார்டுக்கு மாற்றப்பட்டேன் அங்கு வேலைசெய்யும் ஆண்  நர்சுகள் திருமூலர் படித்திருப்பார்கள் போலும் என் பெயர் சொல்லாமல் பெயரினை நீக்கி என்னைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்! “பரவாயில்லை பயப்படாதே; இனிமேல் ஒரு ப்ராப்ளமும் இல்லை. ட்யூடி டாகடர் வருவார். அவரும் ஒரு பஞ்சாபி தான். கிறுக்கும் கூட. ஏதாவது கேட்டால் மருந்து சாப்பிட்டேன் என்று மட்டும் சொல். அவர் தான் உன்னை வெராந்தாவில் போடச் சொன்னவர்; நீ போகல்லை என்று வருத்தப்பட்டாலும் படுவார்!”

    அவர் வந்தார்! வந்தாரா? சுனாமி போல நுழைந்தார். “நீ இன்னும்  இருக்கிறாயா?”  வந்த கோபத்தை அடக்கிக் கொண்டேன் ஆனால் அவர் தொடர்ந்து பேசியது என் மனதை இளக வைத்தது. “ஒங்க அப்பா அம்மா செஞ்ச புண்ணியம் தான் ஒன்னைக் காப்பாத்தியிருக்கு!: எஸ்பெஷலி ஒங்க அம்மா! உனக்கு இனிமே சாவே கெடையாது!” என்று சொல்லி டிஸ்சார்ஜ் என்று எனது கேஸ் ஷீட்டில் எழுதிச் சென்று விட்டார். எங்களுக்குச் சகட யோகம் லாரிதான்! இந்தத்தடவை ஒரு த்ரீ டன்னர். பரவாயில்லை பெஞ்ச் போல சீட் கூட இருந்தது. திருமபவும் படகில்; ஆனால் சக மாலுமிகள் ஜாக்கிரதையாக்க் கப்பலில் ஏற்றினர். .

    மறுநாள் கப்பலில் தன்சாமா  ஒரு கப்பில் தக்காளி  சூப் மிகச் சூடாகக் கொண்டு வந்து கொடுத்தார். அமிர்தம் போலிருந்தது. அல்மைடா வந்து  பார்த்தார். “ந்ல்ல வேளை ஆஸ்பத்திரியில் உன்னைக் கொல்லாது விட்டார்கள்!”  ஒரு கிளாசில் விஸ்கியும் எலுமிச்சம் பழ ஜூசும் கலந்து அத்துடன் கொதிக்கும் நீரை ஊற்றி, “இது தான் ஹாட் ஸ்காட்ச். இதைக் குடித்தால் எல்லாவியாதியும் பறந்துவிடும்” என்றார்.

    பழனியில் அபிஷேகப் பாலை எடுத்துக் கொள்வதைப் போல அதைக் குடித்துவிட்டு நான் திருமுருகாற்றுப்ப்டையைச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

    தன்சாமா நல்ல(?)ழ் கெட்ட வார்த்தைகளால் எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தார். சீப் இஞ்சினீயர் பிடிலில் பீதோவன் வாசிக்கக் கண்ணயர்ந்து விட்டேன். கனவில் அந்த நர்ஸ் தனது பெரிய மார்பகங்களில் என்னை அணைத்துக் கொண்டு என்னைத் தாலாட்டுவது போலத் தெரிந்தது. அப்போதுதான் உண்மையும் புலப்பட்டது. சாவுக்கும் வாழ்வுக்கும் அதிக வித்தியாசமில்லை! நான் வைதர்ணியின் கரைகளைப் பார்த்தவனாயிற்றே!

    படத்திற்கு நன்றி:
    http://www.navsource.org/archives/11/05idx.htm

    Share
  • அன்னையர் தினம்

    கலையரசி

    “அம்மா! நாந்தாம்மா கெளரி பேசறேன்.”

    “என்னம்மா? காலங் கார்த்தால போன்?  மாப்பிள்ளை, குழந்தை எல்லாரும் செளக்கியம் தானே?

    ”எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க.  ஒங்கக் குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு?  உடம்பு, கிடம்பு சரியில்லையா?  இரத்த அழுத்தம் நார்மலாத் தானே இருக்கு?

    ”அதெல்லாம் ஒன்னுமில்லை.  மணி எட்டாவுது.  இப்பத்தான் படுக்கையிலேர்ந்து எழுந்திருச்சேன்.  அதான் குரல் கம்மியிருக்குது.  விடிகாலையில எழுந்திருச்சி நான் யாருக்குச் சாப்பாடு கட்டப் போறேன்?  நீங்கல்லாம் போன பிறகு எனக்குச் சமைக்கப் புடிக்கலே.  சாப்பிடப் புடிக்கலே.  வர வர வாழ்க்கையே ரொம்ப வெறுமையா இருக்கு கெளரி!”

    ”ஏம்மா சலிச்சிருக்கிறீங்க?  இவ்ளோ நாள் ஓடியாடி வேலை செஞ்ச வரைக்கும் போதும். இனிமே நீங்க ஓய்வெடுக்கிற வயசு.  நல்லாத் தூங்கிச் சாப்பிட்டுட்டு சந்தோஷமா இருங்க. சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டு என்னென்னவோ சொல்லிக்கிட்டுருக்கேன்.   இன்னிக்கு அன்னையர் தினம்! ஒங்களுக்கு வாழ்த்துச் சொல்லத் தான் கூப்பிட்டேன்.”

    ”அப்பிடியா? வர வர நாள், கெழமை எதுவுமே ஞாபகத்துல இருக்க மாட்டேங்குது.  வாழ்த்துக்கு ரொம்ப நன்றிம்மா”.

    ”சரிம்மா.  அவசரமா ஆபீசுக்குக் கிளம்பிக்கிட்டுருக்கேன். அப்பாவைக் கேட்டதாச் சொல்லுங்க.  அப்புறமா போன் பண்றேன்.”

    ”சரிம்மா.”

    ”யாரு போன்ல?”என்று கேட்ட கணவர் மணியிடம்

    ”நம்ம கெளரி தான்.  இன்னிக்கு அம்மா தினமாம். வாழ்த்துச் சொல்லக் கூப்பிட்டா,” என்றாள் காவேரி.

    ”அது சரி.  வெள்ளைக்காரனுங்க தான் ஒவ்வொன்னுக்கும் ஒரு நாளை ஒதுக்கி வைச்சிக் கொண்டாடுறாங்கன்னா

    நம்ம புள்ளைகளும் அதை அப்படியே காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டுதுங்களே.  இந்த மாதிரி பெத்த அம்மாவுக்கு வருஷத்துக்கு ஒரு நாள், போனாப் போவுதுன்னு அப்பாவுக்கும் ஒரு நாள்னு ஒதுக்கி, அன்னிக்கு அவசர அவசரமா ஒரு போன் பண்ணி வாழ்த்து சொல்றதோட தங்களோட கடமை முடிஞ்சிடுதுன்னு நினைக்குதுங்க. இந்த அவசர உலகத்துல பாசம், நேசம் எல்லாமே வெறும் சம்பிரதாயமா மாறிட்டு வருது காவேரி!

    ”சரி வுடுங்க.  அதுங்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலை.  இந்த மாதிரி ஒரு நாளை ஒதுக்கி வைச்சிருக்கிறதினாலேயாவது பசங்களுக்கு நம்ம ஞாபகம் வருதே, அதை நினைச்சி சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.”

    ”அதுவும் சரிதான். அவ்ளோ வேலையிலேயும் எம் பொண்ணு எவ்வளவு ஞாபகமா போன் பண்ணுது பாரு? ஒம் பையனும்

    இருக்கானே! இதெல்லாம் அவனுக்கெங்கே ஞாபகம் இருக்கப் போவுது?

    ”சும்மா இருக்கிற என்னைத் தூண்டிவிட்டு என் வாயைப் புடுங்கிறதுல, அப்பிடி என்ன சந்தோஷம் ஒங்களுக்கு?    அவனுக்கு என்ன வேலையோ?   இந்த மாதிரி சம்பிரதாயமா வாழ்த்து சொல்றதெல்லாம், அறவே அவனுக்குப் புடிக்காது.”

    ”என்னமோ போ. பையனை விட்டுக் கொடுக்காம பேசக் கத்துக்கிட்டே.  மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்துட்டுப் போனவன் தான்.  குழந்தையும் பொறந்து ரெண்டு வயசு முடிஞ்சிட்டுது.  பேரக்குழந்தையை இன்னும் நாம கண்ணாலேயே பார்க்கல.  போட்டோவிலேயும் கம்ப்யூட்டரிலேயும் பார்த்துத் திருப்திப்பட்டுக்கிறதோட சரி.  ஒரு தடவை வந்து காட்டிட்டுப் போடான்னு சொன்னா, விமான டிக்கெட்டுக்குக்  கணக்குப் பார்த்துட்டுப் பயணத்தை ஒத்திப் போட்டுக்கிட்டே போறான். எப்பத்தான் வரான்னு பார்ப்போம்.”

    “சரி சரி..  போயி  வேலையைப் பாருங்க. அவனை ஏதாச்சும் குத்தம் சொல்லலேன்னா, உங்களுக்குப் பொழுது போகாது.”

    கணவரிடம் மகனுக்காகப்  பரிந்து பேசினாலும், பையன் இப்போது மிகவும் மாறிப் போய்விட்டான் என்ற உறுத்தல், அவள் உள்மனதிலும் இல்லாமலில்லை.  வெளி நாடு போன புதிதில்,  இரண்டு நாட்களுக்கொரு முறை போன் பண்ணி அம்மாவிடம் பேசவில்லையாயின், அவன் தலை வெடித்துவிடும்.

    சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுகிறான், எல்லாரையும் பிரிந்து தனிமையில் வாடுகிறான் என்று காவேரி தான்

    அவனை வற்புறுத்தி  26 வயதாகும் போதே, பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்தாள்.  திருமணத்திற்குப்

    பிறகு இரண்டு நாட்களுக்கொரு  முறை இருந்த தொலைபேசி அழைப்பு, வாரத்திற்கொரு முறை என்றாகி இப்போதோ மாதத்துக்கொரு முறை என்றாகிவிட்டது.

    வேலை, குடும்பம், குழந்தைகள் என்றான பிறகு, அம்மாவுக்குப் போன் செய்ய அவனுக்கு நேரமின்றிப் போனது.

    “நான் பேசணும்னு நெனைக்கிறப்ப, உங்களுக்குப் பாதி ராத்திரி ஆயிடுது. சரி காலையில பண்ணிக்கலாம்னு நெனைப்பேன்.  வேலைப் பளுவில மறந்துடுதும்மா” என்பான் சமயத்தில்.

    மதியச் சாப்பாடு முடிந்து படுத்திருந்த போது, அழைப்பு மணி ஒலித்தது.  எழுந்து சென்று கதவைத் திறந்தவளுக்கு ஆச்சரியத்தில் தலைகால் புரியவில்லை.  ஆம்.  அவளது அன்பு மகன், தன் மகளுடன் வாசலில் நின்றிருந்தான்.

    ”என்னப்பா திடுதிப்பென்று சொல்லாமல் கொள்ளாமல்?”

    “அன்னையர் தினத்திற்கு உங்களுக்கு நேரிலேயே வாழ்த்துச் சொல்லணும்னு வந்தேன்மா”

    அப்பாவின் கால்களைக் கட்டிக்  கொண்டு, எட்டிப்பார்த்த குழந்தையைக் கண்டவள், “இது தான் நம்ம வீட்டுக் குட்டி தேவதையா? வாடாச் செல்லம்” என்று ஓடிப் போய் குழந்தையை வாரியெடுத்து உச்சி முகர்ந்து கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

    ’இப்போதாவது வந்து அம்மாவைப் பார்க்கணும்னு தோணிச்சே” என்று செல்லமாகப் பையனைக் கடிந்து கொண்டாள்.

    இரண்டாவது முறை மணி அடித்து விழிப்பு வந்த போதுதான், தான் கண்டது கனவென்று உணர்ந்தாள் காவேரி.

    கண நேரம் மகிழ்ச்சியில் திளைத்த மனதில், மறுபடியும் வெறுமை வந்து குடி கொண்டது.  ஒரு வேளை கனவில் கண்டது போலவே, மகன் உண்மையாகவே வந்து நின்றிருந்தால்?  அவசர அவசரமாக எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

    வாசலில் பால்காரன் நின்றிருந்தான்.

    ”என்ன வேணும்? பாக்கெட்டைப் போட்டுட்டு போக வேண்டியது தானே? எதுக்கு மணி அடிச்சே?”‘

    ”எக்ஸ்டிரா பாக்கெட் வேணுமான்னு கேட்கத்தான்,”.

    ”ஒன்னும் வாணாம் போ”

    ”சும்மா போனா, ’எப்பவும் மணியடிச்சி கேட்டுட்டுப்

    போன்னு சொல்றீங்க? கேட்டாக் கோவிச்சிருக்கிறீங்க.

    இன்னிக்கு என்ன வந்துச்சி ஒங்களுக்கு?,”  முணுமுணுத்துக் கொண்டே சென்றான் பால்காரன்.

    திரும்பி வந்து படுத்த போது, தூக்கம் முற்றிலுமாக விடைபெற்றுப் போயிருந்தது.

    ”இந்தக் குழந்தைகள் வளராமல் தன்னுடனே இருந்திருக்கக் கூடாதா?” என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. மகனை உடனே நேரில் பார்க்க வேண்டும் போலிருந்தது.  என்ன தான் கணிணி காமிராவில் பார்த்தாலும், நேரில் பார்த்து ஆசையாய்த் தொட்டு அரவணைக்கும் ஆனந்தம் வருமா?

    மகனுக்குத் தன் மேலுள்ள  பாசத்தைக் கிண்டல் செய்யும் கணவரின் வாயை அடைப்பதற்காகவாவது, அவனிடமிருந்து  இன்று போன் வர வேண்டும் என அவள் மனம் ஏங்கியது.  எனவே மற்ற நாட்களில் போன் வரும் சமயங்களில் “முட்டி வலிக்குது, நீஙக் போய் எடுங்க,”. என்று அலுத்துக் கொள்பவள், அன்றுமுழுக்க ஒவ்வொரு முறை மணியடிக்கும் போதும் ஓடி ஓடிப் போய் எடுத்து ஏமாந்தாள்.

    வேகமாக ஊன்றி ஊன்றி  நடந்ததினால், முழங்கால் வீங்கிக் கொண்டு வலிக்கத் துவ்ங்கியது. மணி இரவு எட்டரைக்கு மேலாகி விட்டது.  சாதாரணமாக பையனிடமிருந்து எட்டு மணிக்குள் போன் வந்து விடும்.  நேரமாக ஆக, இனி போன் வராது என்ற எண்ணத்தில் மனம் சோர்ந்தது.

    ”ஏங்க!  மணி ஒம்பது ஆகப் போவுது.  தோசை ஊத்தி வைச்சிட்டேன்.  சீக்கிரம் சாப்பிட வாங்க.  ரொம்ப அசதியாயிருக்கு. படுத்தாப் போதும்னு இருக்கு உடம்பு”

    ”ஏன் கல்லை இறக்கிட்டே? ஒனக்குத் தோசை ஊத்திக்கலையா?”

    ”எனக்கு வேணாம்.  பசியில்லை”

    ”இராப்பட்டினி கூடாது. அதுவுமில்லாம வெறும் வயித்துல மாத்திரை போடக் கூடாது.  ஒரு தோசையாவது சாப்பிடு காவேரி,”

    ”ஒன்னும் வேணாம். நீங்க கம்முனு சாப்பிட்டுட்டுப் போயி படுங்க.  இது வல்லமையான கட்டை. ஒரு நாளைக்கு மாத்திரை போடலேன்னா, உசிரு போயிடாது.”

    மணி பதினொன்றிருக்கும்.

    ”ஏங்க ஏங்க.  போன் அடிக்குது.  கொஞ்சம் ஏந்திரிச்சி போயி யாருன்னு பாருங்க.”

    கணவரைத் தொட்டு எழுப்பினாள்  காவேரி.  ஆனால் அவரிடம்  எந்த அசைவையும் காணோம்.

    ”அதுக்குள்ளே தூங்கிட்டீங்களா?  படுக்கறதுக்குள்ளே எப்படித்தான் ஒங்களுக்குக் குறட்டை வருதோ?”

    சலித்துக் கொண்டே எழுந்து  சென்று ரிசீவரை எடுத்தவளின்  முகம்  மலர்ந்தது.

    ”எப்படிப்பா இருக்கே?  உமா எப்படியிருக்கா?  கொழந்தை நல்லாயிருக்காளா?  ரொம்ப சந்தோசம்பா. காலையில கெளரி கூட போன் பண்ணி வாழ்த்து சொன்னா. இன்னிக்குக் கண்டிப்பா நீ போன் பண்ணுவேன்னு ஒங்கப்பாக்கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்.

    எப்பப் பார்த்தாலும் வேலை வேலைன்னு சரியாச் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்காதே.  ஒரு தரம் கொழந்தையை அழைச்சிட்டு வந்து கண்ணுல காட்டிட்டுப் போ.  வாரத்துக்கு ஒருவாட்டியாவது மறக்காம போன் பண்ணு.  சரிப்பா. வைச்சுடு.  எல்லாரையும் கேட்டதாச் சொல்லு.”

    ”ஏங்க ஒங்களைத்தானே.  லண்டன்லேர்ந்து தம்பி போன் பண்ணி ரொம்ப…….. நேரம் பேசிக்கிட்டிருந்தான்.

    காலையிலேர்ந்து கடுமையான வேலையாம். நேரமே இல்லியாம்.  இன்னிக்கு எப்பிடியாவது எனக்கு வாழ்த்து சொல்லணுங் கிறதுக்காகவே ஞாபகம் வைச்சிருந்து இராத்திரி ஆனாலும் பரவாயில்லன்னு போன் பண்ணினானாம். பாவங்க எம்புள்ளை.  இப்பவாச்சும் ஒத்துக்கிறீங்களா, அவனுக்கு என்மேல பாசம் ஜாஸ்தின்னு”

    ”சரி. சரி.  ஒத்துக்கறேன். மனுஷனை நிம்மதியாத் தூங்க விடு.  நீயும் நிம்மதியாப் படுத்துத் தூங்கு.  எங்க எழுந்திருச்சிப் போறே?”

    ”சாப்பிடப் போறேன்.”

    ”பசியே இல்லேன்னு சொன்னே?”

    ”அப்ப இல்லை. இப்ப ரொம்பப் பசிக்குது.”

    மனைவியின் உற்சாகத்தைப் பார்த்துச் சிரிப்பு வந்தது மணிக்கு.

    காலையிலிருந்து மனைவி  தவித்த தவிப்பைக் கண்டு  வேதனைப்பட்டவர், ’அம்மாவுக்குப் போன் பண்ணி அன்னையர் தின வாழ்த்தைச் சொல்,’ என்று பையனுடைய அலைபேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பியது தாம் தான், என்று கடைசி வரை  அவளிடம் சொல்லவேயில்லை.

    Share
  • கண்ணீர்

     சு.கோதண்டராமன்

    என்னருமைக் கண்ணீரே,

    இன்னலிலே என் தோழா,

    உன்னருமை நானறிவேன்

    ஒன்றுரைப்பேன் கேளாய் நீ

     

    நலிந்தார்க்கு நற்றோழா நானறிவேன் நின் திறமை

    வலிமையுள்ள நின் முன்னே வாள் திறனும் சிறிதாகும்

    ஞாலத்தின் முழுமையிலும் நீ தூண்டி நடத்திட்ட

    கோலப் பெருஞ்செயல்கள் கோடி கோடி ஆகுமையே

     

    வாயினால் வடித்திடவே வார்த்தையிலாச் செய்தியெலாம்

    நீயாக உரைத்திடுவாய் நீள் விழியினில் நின்று.

    பேசவொணாப் பெருஞ்செய்தி இதயத்தில் உளதெல்லாம்

    நேசமுடை நெஞ்சத்தில் நீயே உரைத்திடுவாய்.

     

    உள்ளத்துச் சோகத்தை உன்னி உன்னி நின்னை பெரு

    வெள்ளம் போல் பெருக்கிவிட வேட்கை பிறக்குதையே.

    ஆனால்

    பத்துப் பேர் என்னைப் பார்த்து நிற்கும் போது

    முத்துப் போல் நீ வந்து முகம் காட்டி நிற்கிறாய்

    பிறரறியாது உன்னைப் பேணி மறைக்கிறேன்

    ஊரறிய அழுவதிலே உண்டாமோ ஆறுதலும்

     

    அருகில் யாருமே இல்லாத நேரம் நீ

    பெருகி வரவேண்டுமெனப் பிடித்து வைக்கிறேன்.

    தனிமையிலே நின்றுன்னை ஆறாய்ப் பெருக்குவதே

    மனச்சுமை குறைத்திடும் மார்க்கம் ஆகிவிடும்.

    படத்திற்கு நன்றி

     

     

    Share
  • பூக்களில் பேதமென்ன?

    அனாமிகா

    அகமதாபாத் மார்க்கெட்; காய்கறி வாங்கிக் கொண்டிருந்த சுமித்ராவின் தோளில் சிநேகமாய் ஓர் கை விழுந்ததும், திரும்பிப் பார்த்தாள்.

    “சுமித்ரா! என்னைத் தெரியலை?! நான் தான் ப்ரியா!! சென்னைல பார்த்திருக்கோமே” என சிரிக்க, சுமித்ராவுக்கு நினைவு வந்தது. கூடவே அந்த நினைவுகள்; அக்கினியாய் எப்போதும் அவள் மனதை வாட்டும் நினைவுகள் தலை தூக்க, கஷ்டப்பட்டு அடக்கி புன்னகை செய்து கேட்டாள்:

    “எப்பவோ பார்த்தது இல்லையா? அதான் சட்டுனு  ஞாபகம் வரலை; எப்படி இருக்கீங்க? எங்க இந்தப் பக்கம்?”

    “வெகேஷனுக்கு நார்த் இண்டியா டூர் வந்தோம்; இங்க என் மச்சினர் வீடு இருக்கு. அப்படியே இங்க வந்திருக்கோம். வண்டியில அவரும், பொண்ணும் வெயிட் பண்றாங்க.”

    ஃபார்மாலிட்டிக்கு தன்  வீட்டு முகவரியைக் கொடுத்து, கண்டிப்பாக வரும்படி அழைத்து விடை பெற்றாள் சுமித்ரா.
    **********************************

    அன்றிரவு. சுமித்ராவுக்கு உறக்கம் வரவில்லை. அவர் கண்டுபிடித்து விட்டார்.

    “என்ன சுமி? என்னாச்சு? ஏன் இப்படி டல்லா இருக்கே?”

    கணவர் கேட்டு முடிக்குமுன்பே சுமிக்கு கண்களில் நீர் கோத்து விட்டது.

    “இன்னிக்கு மார்க்கெட்-ல தெரிஞ்சவங்களைப் பார்த்தேன்; அவங்க வி.எஸ். ஸகூல்ல ….பழக்கமானவங்க….”

    திணறியபடி அழுது கொண்டே சொன்னாள்; அவருடைய பார்வை சுவரில் மாட்டியிருந்த புகைப்படம் மீது பதிந்தது.

    எத்தனையோ ஆயிரம் முறைகள் எண்ணிப் பார்த்தும் ஆறாத அந்த அக்கினி நினைவுகளில் மீண்டும் சுமியின் மனம் மூழ்கியது.

    இதே போன்ற ஒரு இரவு நேரத்தில் தான் அந்த ஃபோன் வந்தது; வி.எஸ் ஸ்கூல்-ல் படித்துக் கொண்டிருந்த சுமியின் மழலைச் செல்வங்கள் சத்யாவும், ரமேஷும் எக்ஸ்கர்ஷன் போன பஸ்  விபத்துக்கு உள்ளானதாக் வந்த ஃபோன்! அவர்கள் வாழ்க்கையே ஒரு கேள்விக் குறியானது!

    என்ன செய்து என்ன?  பெற்ற இரு பிள்ளைகளையும் விதியின் கொடுமைக்கு பலி கொடுத்த ஒரு தாயின் துயரமும், வருத்தமும் ஈடு செய்ய முடியாதது!!!

    அந்த ஒரு மாதம் சுமித்ரா பைத்தியமாகவே இருந்தாள்; வீடு முழுக்க இறைந்து கிடக்கும் பிள்ளைகளின் உடைகள், சாக்ஸ், புத்தகங்கள், விளையாட்டு பொம்மைகள்; துக்கம் கேட்டு வரும் உறவினர், நண்பர்கள்: வீட்டின் ஒவ்வொரு இன்ச்சிலும் அவர்கள் இழப்பு அவளை நெருப்பாய் சுட்டது. அவள் நிலையறிந்து அடுத்த மாதமே மாற்றல் வாங்கிக் கொண்டு இங்கே அகமதாபாத் அழைத்து வந்து விட்டார் அவள் கணவர்; இடத்தை விட்டு வர முடிவது போல, நினைவுகளையும் விட்டு விட்டு வர இந்த மனதால் முடியுமானால் எவ்வுளவு நன்றாக இருந்திருக்கும்?

    ஆயிற்று; நான்கு வருடங்கள் ஓடி விட்டன; அதன் பின் சென்னை பக்கம் திரும்பவே இல்லை. விதியின் மேல் கொண்ட கோபத்தை சுமித்ரா சமூகத்திடம் காட்டினாள். யாரிடமும் பழகுவதில்லை; அவளே விதித்துக் கொண்ட தனிமைச் சிறை!!

    அழுகையின் ஊடே எப்போது தூங்கினாள் என்று தெரியாமலே தூங்கி விட்டாள்.                                                          ****************************

    நாலைந்து நாட்கள் ஆயின. “இனிமேல் ப்ரியா வர மாட்டாள்” என்று ஒருவாறு சுமித்ரா மனம் தெளிந்து விட்டிருந்தாள்.

    சமையல் முடிந்து ஓய்வாக சுமித்ரா அமர்ந்திருந்தாள். அழைப்பு மணி அடித்தது.

    வாசலில் ப்ரியா, அவள் கணவர் மற்றும் குழந்தை!

    வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்னகையோடு வரவேற்று சுமித்ரா உள்ளே அழைத்துச் சென்றாள். குழந்தைக்கு நாலு வயசிருக்கும்.

    “வீணா, ஆண்ட்டிக்கு வணக்கம் சொல்லு” என்றதும் அழகாக கைகுவித்து வணக்கம் சொல்லியது; அதன் பின் ஒரு இடத்தில் உட்காராமல் வீடு முழுக்க நடந்து, வீணா கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாள். ப்ரியாவின் கணவரும் உடன் சென்றார்.

    சுமித்ராவும் ப்ரியாவும் மட்டும் அமர்ந்திருந்தார்கள்; எதைப் பற்றி பேச வேண்டாம் என நினைத்து சுமித்ரா தவிர்த்தாளோ, சில நிமிஷங்களில் ப்ரியா அதைப் பற்றியே பேச ஆரம்பித்தாள்.

    “வி.எஸ். ஸ்கூல் ஆக்ஸிடெண்ட்டுக்கு அப்புறம் இங்க வந்துட்டீங்க இல்லியா?”

    சுமித்ரா எட்டிப் பார்த்த கண்ணீரை மறைத்து தலையாட்டினாள்.

    “உங்க பையன் நிகிலை கூட்டிட்டு வரலியா?”

    பேச்சை மாற்ற எண்ணி சுமித்ரா கேட்டதும், ப்ரியாவின் முகத்தில் சோகத்தின் நிழல்; கம்மலான குரலில், “அந்த ஆக்ஸிடெண்ட்டிலே நிகிலும் போய்ட்டான்”

    என்று சொல்ல, சுமித்ரா ஒரு நொடி அதிர்ந்து தான் போனாள்!!

    தன் பிள்ளைகளின் இழப்பு தெரிந்ததும் பிறகு எதையுமே சுமித்ரா தெரிந்து கொள்ளவில்லை; இப்போது தன் வேதனையையும், துக்கத்தையும் ப்ரியாவும் அனுபவித்திருக்கிறாள் என் தெரிந்ததும், அவளிடம் ஒரு பரிவு ஏற்பட்டது; கூடவே இப்போது தான் வீணா இருக்கிறாளே என்றும் தோன்றியது.

    “அப்புறமா தான் வீணா பிறந்தாளா?”

    “இல்லை” என ப்ரியா தலையாட்டினாள். சுமித்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை; ப்ரியாவே தொடர்ந்தாள்:

    “என்னைப் போல் நீங்களும் பாதிக்கப்பட்டவங்க; அதனால உங்க கிட்ட சொல்றேன். இல்லாட்டி நான் இதெல்லாம் யார் கிட்டவுமே சொல்றது இல்லை” என்ற ஒரு முன்னுரையோடு தொடர்ந்தாள்:

    “நிகில் போனப்புறம் எங்க வாழ்க்கையே இருட்டாயிடுச்சு; எனக்கு அதுக்கப்புறம் மறுபடி குழந்தை பிறக்க முடியாதுன்னு சூழ்நிலை. அப்ப திக்கு திசை தெரியாம முழிச்சிட்டிருந்தோம். ஒரு நாள் ‘பொம்முகுட்டி அம்மாவுக்கு’ ப்டம் பார்த்தப்போ, ஒரு யோசனை வந்தது; எனக்கும் அவருக்கும் இஷ்டம் இருந்ததாலே வீணாவை ஒரு அனாதை விடுதிலேர்ந்து முறையா தத்து எடுத்துக்கிட்டோம்; அப்ப அவளுக்கு ஒரு வயசிருக்கும்; வீணா வந்தப்புறம் மறுபடி எங்க வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வந்திருக்கு. ஒரு குழந்தையோட சிரிப்புக்கு மட்டும் தான் எந்த துக்கத்தையும் மறைய வைக்குற சக்தி இருக்கு.”

    “ஆனா…ப்ரியா….யாரோ பெத்துப் போட்ட குழந்தையை வளர்த்தா, நம்ம கடைசி காலத்துல…” சுமித்ரா முடிக்கு முன்பே, ப்ரியா குறுக்கிட்டாள்.

    “கடைசி காலத்துல அப்பா, அம்மாவைக் காப்பாத்தாத பிள்ளைங்க அவங்களுக்கு பிறந்தவங்க இல்லையா? நம்ம சொந்தப் பிள்ளைங்க நம்மைக் காப்பாத்தலேன்னா, நாம அவங்க மேல வைச்ச பாசம் பொய்யாயிடுமா என்ன? அதே மாதிரி நினைச்சுக்க வேண்டியது தான். வீணா நாங்க தத்தெடுத்த குழந்தைன்னு தெரியக் கூடாதுன்னு நாங்களும் பெங்களூர் வந்து செட்டில் ஆயிட்டோம். ரொம்ப நெருங்கினவங்களைத் தவிர மற்ற

    எல்லாரும் வீணாவை எங்க குழந்தையா தான் நினைக்கிறாங்க. அது தான் எங்களுக்கும் சந்தோஷமா இருக்கு.”

    ஆவேசமாய் பேசியதில் மூச்சு வாங்க, ஒரு நிமிடம் நிறுத்தியவள்,

    “சுமித்ரா! நாம ஆசையா வளர்த்த செடி பட்டுப் போயிடுச்சு; ஆனா எத்தனையோ செடிங்க கவனிப்பார் இல்லாம கருகி கிடக்குது. அதுல ஒரு செடிய நாம வளர்த்தா என்ன? யோசிச்சுப் பாரு.

    நாமே விதை போட்டு வளர்த்தாலும், நர்ஸரிலேர்ந்து வாங்கிட்டு வந்து தோட்டத்துலே வச்சாலும் எல்லா செடிகளோட மலர்களும் மணம் பரப்ப தானே செய்யுது!”

    சுமித்ராவின் மனதில் புதிய தீர்மானம்!! அந்த மகிழ்ச்சியில் ஆமோதித்து புன்னகை செய்தாள்!!

    ஆம், பூக்களில் பேதமென்ன?
    *******************************

    Share
  • ஆங்கிலத்தின் பரிணாம வளர்ச்சி

     

    தேமொழி

     

    னைத்து மொழிகளும் காலப் போக்கில் மாறுதலடையும். அவ்வாறு மாறுதலடையும் பொழுது, ஆதி காலத்தில் பேசப்பட்ட மொழிக்கும் தற்காலத்தில் பேசப்படும் அதே மொழிக்கும் இடையே அதிக வேறுபாடுகள் இருக்கும். இவ்வாறு மிகக் குறைந்த ஒற்றுமை உள்ள, காலத்தால் முந்திய படைப்புகளை அறிஞர்கள் பதம் பிரித்து பொருள் சொன்னால்தான் நமக்கே நம் மொழியைப் புரிந்துகொள்ள முடியும் என்ற நிலை ஏற்படுகிறது. நம் தமிழ் மொழிக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்திற்கும் இதே விதி பொருந்தும்.

     

    English - Evolution

     

    ஆங்கிலத்தின் பரிணாம வளர்ச்சியை விளக்க முற்பட்டு, அதற்குதவியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இரு வசனங்களுக்கும் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் கற்பனை செய்வோம். அவற்றை கூறுபவர்கள் யாராக இருக்கும், அவர்களுடைய நடை, உடை, பாவனை, கலாச்சாரம் எப்படி இருக்கும் என்று நம் கற்பனையை விரிவாக்குவோம்.

    காட்சி ஒன்று:  “They gave us a hearty welcome”

    காட்சி இரண்டு:  “They gave us a cordial reception”

    அந்த கற்பனையில் எழும் காட்சிகள் எவ்வாறு வேறுபட்டு காண்கிறது என்பதற்கு ஆங்கில மொழியில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி மாறுதல்கள் சான்றாக அமையும். வார்த்தைகளை உபயோகப்படுத்திய விதத்தை வைத்து, அவற்றைப் பேசியவர்களின் சமூக சூழ்நிலையை, உருவத்தை, உடைகளை, உணர்வுகளைப்பற்றி உங்களுக்கு ஓர் கற்பனை உருவாகி இருக்கலாம். அதற்கு அந்த வார்த்தைகள் உதவி செய்திருக்கும். இதை மேலும் ஆங்கிலத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் ஏன் என்று நாம் தெளிவாகப் புரிந்து கொள்வோம்.

     

    பொது ஆண்டு 400 இல் (கி.பி. 400) இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளின் பகுதிகள் ரோமானியர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இதனால் விளைந்த ஒரு நன்மை என்னவெனில்; இந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு ஐரோப்பாவின் வடபகுதியில் வாழ்ந்த, நாகரீகமற்ற இனமாகக் கருதப்பட்ட சாக்ஸ்சன் (Saxons) என்ற இனந்தினரிடம் இருந்து பாதுகாப்பு கிடைத்தது. சாக்ஸ்சன் இனத்தவர் இன்றைய ஜெர்மனி நாட்டுப் பகுதியில் வசித்த பழங்குடி இனத்தவர்.

    ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்த பொழுது, அவர்கள் இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் பகுதிகளை ஆள்வதைக் கைவிட்டனர், பின் வாங்கினர். இதன் விளைவாக ஜெர்மானியர், ஆங்கில்ஸ், சாக்ஸ்சன், ஃப்ரீஷியன்(Frisian) போன்ற வட ஐரோப்பிய இனத்தைச் சார்ந்த மக்கள் இங்கிலாந்து தீவுகளை நோக்கிப் படையெடுத்தனர். அங்கிருந்தவர்களை வீழ்த்தி அத்தீவுகளில் தங்கள் அரசை அமைத்தனர்.

    பிறகு பலநூற்றாண்டுகளாக இவர்கள் அந்த மண்ணில் ஆட்சி செலுத்தினர். இவர்களது ஜெர்மானிக் மொழியான ‘ஆங்கிலோ-சாக்ஸ்சன்’ (Anglo-Saxon) என அழைக்கப்பட்ட மொழி பரவலாக நடைமுறை வாழ்க்கையில் உபயோகப்படுத்தப்பட்டது. இந்த மொழியை மொழியியல் வல்லுனர்கள் “பழமையான ஆங்கிலம்” (Old English) என்று குறிப்பிடுவார்கள்.

    தற்கால ஆங்கிலம் பேசுபவர்களுக்கு ‘ஓல்ட் இங்கிலீஷ்’ என்பது முற்றிலும் வேறுபட்ட மொழியாகத் தோன்றக்கூடும். ஆனால் உன்னிப்பாக ஆராய்ந்தால் நமக்கு நன்கு அறிமுகமான சில வார்த்தைகளும் ஆங்காங்கே புலப்படும். உதாரணமாக, படத்தில் காண்பது போல, ஓல்ட் இங்கிலீஷ்ஷில் சில சொற்களின் எழுத்துக்கோர்வையை தற்கால உச்சரிப்பிற்கு ஏற்றவாறு மாற்றினால் பொதுவான வழக்கத்தில் உள்ள சில ஆங்கில சொற்கள் தெரிய வரும்.

     

    Old Engli

     

    வ்வாறு சில நூற்றாண்டுகள் அந்நாட்டு மக்கள் பழைய ஆங்கில வழக்கில் பேசி வந்தார்கள். ஏழாம் நூற்றாண்டில் வைக்கிங்களின் (Vikings) படையெடுப்பு நிகழ்ந்தது. இவர்கள் நார்ஸ்மென் (Norsemen) என்றும் அழைக்கப் படுவார்கள். அப்போரின் காரணமாக விளைந்த ஒப்பந்தத்தின்படி போர் ஒரு முடிவக்கு வந்தது. உடன்படிக்கையின் விளைவாக இங்கிலாந்து தீவுகள் இரு சம பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. தென்பகுதி சாக்ஸ்சன்களுக்கும் வடபகுதி டேன்ஸ் (Danes) மக்களுக்கும் என முடிவானது. இந்த டேன்ஸ் இனத்தினர் தற்கால டென்மார்க் (Denmark) பகுதியில் வசித்து வந்த இனத்தவர். இவர்கள் ‘ஓல்ட் நார்ஸ்’ (Old Norse) என்ற மொழியினைப் பேசி வந்தார்கள். ஓல்ட் நார்ஸ் மொழி வடஜெர்மானிய மொழி பிரிவிற்குள் வகைப் படுத்தப்படுகிறது.

    சாக்ஸ்சன் இனத்தவரும், டேன்ஸ் இனத்தவரும் காலப்போக்கில் கலந்துறவாடிய பிறகு, அவர்களது ஓல்ட் இங்கிலீஷ் மொழியும் ஓல்ட் நார்ஸ் மொழியும் இணைந்துவிட்டன. பல ஓல்ட் நார்ஸ் வார்த்தைகள், உதாரணமாக, Freckle, Leg, Skin, Root, Want போன்ற வார்த்தைகள் இன்றும் ஆங்கில மொழியின் உபயோகத்தில் இருக்கின்றன.

     

    முந்நூறு ஆண்டுகள் கழித்து, பொது ஆண்டு 1066 இல் இங்கிலாந்து தீவுகளில் மீண்டும் போர் நிகழ்ந்தது. இம்முறை ‘நார்மன்’ (Normans) இன மக்கள் போரில் வெற்றி பெற்றார்கள். இந்தப் போர் ‘நார்மன் கான்குவெஸ்ட்’ (Norman conquest of England) என்று வரலாற்றில் குறிப்பிடப் படுகிறது. நார்மண்டியின் இரண்டாம் வில்லியம், இங்கிலாந்தின் இரண்டாம் ஹெரால்ட் மீது நிகழ்த்திய வாரிசுரிமைப் போரில் இங்கிலாந்து மன்னர் வீழ்த்தப் பட்டு ஆட்சி கைமாறியது.

    இந்த நார்மன் இனத்தவரும் வைக்கிங் இனத்தவர்கள்தான். ஆனால் காலப்போக்கில் தங்கள் வைக்கிங் அடையாளங்களையும், கலாச்சாரத்தையும், மொழியையும் கைவிட்டு ஃபிரான்ஸ் நாட்டில் வசித்தவர்கள். பின்னர் ஃபிரான்ஸ் மக்களின் கலாச்சாரத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டவர்கள். நார்மன் கான்குவெஸ்ட் போருக்குப் பிறகு மூன்று நூற்றாண்டுகள் இங்கிலாந்து நாடு ஃபிரெஞ்ச் மன்னர்களின் கட்டுபாட்டிற்கு கீழ் வந்தது. ஃபிரெஞ்ச் மொழியும் இங்கிலாந்தின் ஆட்சி மொழி நிலைக்கு உயர்த்தப்பட்டது.

    இதனால் இங்கிலாந்தில் சமூக உயர்வு தாழ்வு நிலை ஏற்பட்டது. ஃபிரெஞ்ச் மொழி பேசும் அரசகுலம், பிரபுக்கள் போன்ற உயர்குல ஆட்சியாளர்கள் என்று ஒரு பிரிவும்; ஓல்ட் இங்கிலீஷ் பேசும், உழவுத் தொழில் புரியும் வேளாண் குடிமக்கள் என மற்றொரு பிரிவும் தோன்றியது. ஃபிரெஞ்ச் ஆட்சியில் கத்தோலிக்க குருமார்கள் இங்கிலாந்திற்கு வரவழைக்கப் பட்டு ஆதரிக்கபட்டர்கள். இந்தக் கத்தோலிக்க குருமார்கள் தங்கள் பங்கிற்கு லத்தீன் மொழியை இங்கிலாந்தில் நுழைத்தார்கள்.

    இது போன்ற பல மொழிகளின் கலப்பின் காரணமாக ஆங்கிலம் தன் தன்மையை மாற்றி வளைந்து கொடுத்து, பிறமொழிச் சொற்களையும் காலத்திற்கேற்றவாறு தன்னகத்தே இணைத்துக் கொண்டு வளர்ந்து செழித்தது. ஆங்கிலத்தின் ஆயிரக்கணக்கான புதிய சொற்கள்; அரசாங்கம், சட்டம், பெருமை மிகு உயர்குடி மக்களின் பிரபுத்துவம் (aristocracy) போன்றவற்றைக் குறிக்கும் சொற்கள், ஃபிரெஞ்ச் மற்றும் லத்தீன் மொழிகளில் இருந்து எடுத்து கையாளப்பட்டன.

    இந்த மொழிக்கலப்பின் காரணமாக ஆங்கிலத்தில் தற்காலத்தில் பயன் படுத்தப்படும் அந்நிய மொழிச் சொற்களுக்கான உதாரணங்கள்: Council, Marriage, Damage, Sovereign, Govern, Parliament ஆகியவை. இவ்வாறு மொழி விரிவடைந்ததும், ஆங்கில மொழி பேசும் மக்கள் தங்களை உயர்நிலையில் உள்ளவர்களாக காட்டிக்கொள்ள விரும்பி ஓல்ட் இங்கிலீஷ் சொற்களைத் தவிர்த்தார்கள். இதனால் உழைக்கும் வர்கத்தில் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொண்டார்கள். இவர்கள் பிரபுத்துவ மேல்குடி மக்கள் உபயோகித்த ஃபிரெஞ்ச் மற்றும் லத்தீன் மொழிகளின் சொற்களை ஆங்கிலத்தில் உரையாடும் பொழுது அதிகம் உபயோகித்தார்கள்.

     

    ப்பொழுது முதலில் கற்பனை செய்த காட்சிகளை மீள்பார்வை செய்வோம்.

    காட்சி ஒன்று:   “They gave us a hearty welcome” – இந்த வாக்கியத்தைக் கேட்கும் பொழுது சாதாரண மக்கள் உங்கள் கற்பனையில் எழுந்திருக்கலாம்.
    காட்சி இரண்டு:  “They gave us a cordial reception” – இந்த வாக்கியத்தைக் கேட்கும் பொழுது நாகரீகத்தில் மேம்பட்ட மக்கள் உங்கள் கற்பனையில் எழுந்திருக்கலாம்.

     

     

    கராதியின்படி ஒரே பொருள் கொண்ட சொற்கள் இது போன்று மாறுபட்ட உருவகங்களை மனதில் தோற்றுவிக்க என்ன காரணம்?

    hearty, welcome போன்ற சொற்கள் ஆங்கிலோ-சாக்ஸ்சன் சொற்களாகும்.
    cordial, reception போன்ற சொற்கள் ஃபிரெஞ்ச் மொழியில் இருந்து எடுத்து ஆங்கிலத்தில் உபயோகப் படுத்தப்படும் சொற்களாகும்.

    அதிகாரம், உயர் பண்புகள் போன்ற பொருள் தரும் சொற்கள் ஃபிரெஞ்ச் மொழியில் இருந்து தோன்றியவை. உழைப்பாளிகள், சாதாரண மக்கள் போன்றவர்களின் பண்புகளைக் குறிப்பது போன்ற பொருள் தரும் சொற்கள் ஆங்கிலோ-சாக்ஸ்சன் மொழியில் தோன்றியவை.

    ஆங்கில மொழியில் நிகழ்ந்த இந்த பரிணாம வளர்ச்சி வரலாற்றை அறியாதவர்களும் கூட, ஆங்கிலச் சொற்கள் உபயோகப்படுத்தப் படும் சூழ்நிலைக்கேற்ப இந்த வேறுபாடை அடிமனதில் அவர்கள் அறியாமல் வளர்த்துக் கொள்வார்கள்.

    நாம் சொல்லும், பேசும் சொற்களின் வழியேதான் வரலாறு வாழ்கிறது.

     

    சிந்தனைக்கு: இது போன்ற மொழி வளர்ச்சியை தமிழ் மொழி வளர்ச்சியுடன் ஒப்பிட்டாலும் இந்த உண்மை பொருந்தும்.
    முன்னர் தமிழும் சமஸ்கிருதமும் கலந்து தமிழ் எழுத்துக்களில் எழுதப்படுவதை ‘மணிப்ரவாளம்’ (தமிழில் ‘மணிமிடை பவளம்’) என்று குறிப்பிடுவார்கள். தற்காலத் தலைமுறையினர் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து ‘தங்லீஷ்’ என்று (அங்கீகரிக்கபடாத ஆனால் வழக்கில் உள்ள ஒரு சொல்) ‘கொலைவெறியுடன்’ பேசி வருகிறோம்.

    அக்கால ஆங்கிலேயரைப் போலவே, எக்காலத்திலும் தமிழரிடையே வேற்று மொழி வார்த்தைகளை அதிகம் உபயோகித்தால் நாகரீகத்தில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணமும் நடைமுறையில் உள்ளது.

     

    வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திரு நாடு.

     

     

    ஆதாரம், படங்கள் உதவி: Ted ED: How did English evolve?

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 49 (10.12.12)

     

    மலர்சபா

     

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

    மாதவி கோவலனுடன் வீற்றிருத்தல்
    ஆங்கே,
    கடலின் புலால் நாற்றம்…
    அதை மாற்றி
    நறுமணமாக்கிய
    மடல்கள் அவிழும்
    பூக்களை உடைய
    தாழை மரங்கள்
    வேலியெனச் சூழ்ந்திருந்து
    காவல் புரிந்த
    ஓர் இடத்தினில்……….
    ஓர் ஒப்பற்ற புன்னை மர நிழலில்
    அழுக்கேதும் அற்ற புதுமணற்பரப்பில்
    சித்திர வேலைப்பாடுக்ள் அமைந்த
    திரையதனைச் சுற்றிலும்
    வளைத்துக் கட்டப்பட்ட
    கூடாரம் ஒன்று அமைந்திருந்தது..
    அதனுள்
    மேற்கட்டு விதானத்துடன் கூடிய
    வெண்மையான தந்தத்தால் செய்த
    கட்டில் ஒன்று இடப்பட்டிருந்தது.
    பயணக்களைப்பால்
    வருந்தியிருந்த வாடியிருந்த
    வசந்தமாலையின் கையில் இருந்த
    திருந்திய நரம்பினையுடைய
    நல்யாழ் அதனை,
    மலர்நெடுங்கண் மாதவி
    செவ்வனே வாங்கிக்கொண்டு,
    அக்கட்டிலில் முன்கூட்டியே அமர்ந்திருந்த
    கோவலன் அவனொடு சேர்ந்து அமர்ந்தனள்.
    வெண்பா
    கடற்கரையிலுள்ள
    மடலவிழ் தாழையின் உள்ளே செறிந்த
    வெண்மையான இதழ்களில்,
    மாலைப்பொழுதில் தேனுண்டு உறங்கிய
    நீலநிற வண்டுகள்,
    காலைப் பொழுதில்
    களிப்பு தரும்
    தேனையும் பூந்தாதினையும்
    ஊதும்படியாக
    அழகிய தெளிந்த நிறத்தையுடைய
    காலைக்கதிரவனின் தேர் அதுவும்
    இளங்கதிர்களை வீசியே
    கீழ்திசையில் மெல்ல எழுந்தது.
    (கடல் ஆடு காதை முற்றிற்று.)
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 166 – 178
    படத்துக்கு நன்றி:
    Share
  • இஸ்ரேல் பயணம் 2

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை இஸ்ரேல் 1948-இல்  உருவாக்கப்பட்டதிலிருந்து இருந்து வருகிறது.  சுமார் 3000 வருட யூதர்களின் சரித்திரத்தைப் புரிந்துகொண்டால்தான் இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையின் பின்னணி விளங்கும்.  யூதர்களின் பழைய சரித்திரத்தை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

    மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் யூதர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.  அப்போது அவர்கள் சிறு சிறு பழங்குடிகளாக வாழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.  இவர்கள்தான் முதன் முதலில் ஒரே கடவுள் (monotheism) என்ற கோட்பாடுடைய மதத்தைப் பின்பற்றினார்கள் என்று சொல்லப்படுகிறது.

    இவர்கள் வாழ்ந்த இடம் கிட்டத்தட்ட பாலைவனம் போன்றிருந்தது.  செழிப்பான நிலம் இல்லையாதலால் பலர் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.  தண்ணீருக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் மீன் பிடிப்பவர்களாக தொழில் நடத்தினர்.  ரோம், எகிப்து, கிரீக் போன்ற நாட்டு மன்னர்கள் இவர்களை வென்றபோது யூதர்கள் அவர்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கின்றனர். ஒரு முறை நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது இவர்கள் இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

    ஒரு காலத்தில் எகிப்தின்  அரசர்களான ஃபேரோக்களின் அடிமைகளாக யூதர்கள் வாழ்ந்தனர் என்றும்   ஃபேரோவின் கொடுமைக்கு இலக்காகி இவர்கள் வாழ்ந்துகொண்டிருந்த போது இவர்களின் தலைவரான மோசஸ் இறைவன் இவருக்குக் கட்டளையிட்டபடி இவர்களை இப்போதைய இஸ்ரேல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்றும் கதை உண்டு.  Ten Commandments என்னும் ஆங்கிலப் படத்தின் கதை இதுதான்.  இஸ்ரேல் அவர்களுக்குக் கடவுள் அருளிய இடமாகக் கருதப்பட்டது.  அன்றிலிருந்து அதைத் தங்கள் புனித பூமியாக (Holy Land) யூதர்கள் கருதுகின்றனர்.  யூதர்களைப் புனித பூமிக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே மோசஸ் இறந்துவிட்டார்.  நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கனான் என்று அப்போது அழைக்கப்பட்ட, இப்போது இஸ்ரேல் இருக்கும், இடத்தை யூதர்கள் அடைந்தனர்.  இயேசு பிறப்பதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது நடந்ததாகக் கூறப்பட்டாலும் இதற்குச் சரித்திர ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை.  எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியதில் யூதர்களின் உழைப்பு எந்த விதத்திலும் இல்லை என்கிறார்கள் சில சரித்திர ஆசிரியர்கள்.  ஆனால் மேலே கூறிய படத்தில் இவை உண்மை என்று சித்தரிக்கப்படுகிறது.

    யூதர்களின் மூதாதையர்  ஆபிரகாம், ஐசக் மற்றும் ஜேக்கப் என்றும் ஜேக்கப்பின் பன்னிரண்டு மகன்களின் வாரிசுகள்தான் யூதர்கள் என்றும் பழைய ஏற்பாடு பைபிள் (Old Testament) சொல்கிறது.  (இந்த ஆபிரகாம்தான் தங்களுடைய மூதாதையர் என்று கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் கூறுகிறார்கள்.)  ஆபிரகாமின் சந்ததியினர் என்று கருதப்படும் யூதர்கள் இப்போதைய ஜெருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்ந்தனர்.  இவர்களுடைய மன்னர்களில் டேவிட் அரசரும் அவருடைய மகன் சாலமனும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.  ரோமானியர்கள், கிரேக்கர்கள், எகிப்தியர்கள் ஆகிய அந்நியர்களின் படையெடுப்பால் பல முறை அவர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்தனர்.

    சாலமன் காலத்தில்  ஜெருசலேமில் கட்டப்பட்ட யூதர்கள் கட்டிய முதல் கோவில் கி.மு. 587-இல் அவர்களுடைய பகைவர்களால்  அழிக்கப்பட்டது.  அதன் பிறகு  கட்டிய இரண்டாவது கோவில் கி.பி. 70-இல் ரோமானியர்களால் அழிக்கப்பட்டது.  அதனுடைய கிழக்குப் பகுதியில் இருந்த ஒரு வெளிச்சுவரின் ஒரு பகுதி மட்டும் இப்போது இருக்கிறது.

    கிறிஸ்துவர்கள் கடவுளின் குமாரர் என்று கருதும்  இயேசு, யூத சமுதாயத்தில் ஒரு யூதராகப் பிறந்தார்.  அவர் ஜெருசலேமில் இருந்த யூதர்களின் இரண்டாவது கோவிலில் மதகுருமார்களும் செல்வந்தர்களும் ஏழைகளையும் எளியவர்களையும் தங்கள் நலத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டதையும் அவர்களைச் சுரண்டிப் பிழைத்ததையும் கண்டித்தார்.  அவர்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டித்தார்.  இவர்களை அவர்களிடமிருந்து காப்பாற்றப் பல சமூக சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றார்.  அப்போதைய யூத சமூகத்தில் இருந்த குறைகளைக் களைந்து அதை நேர் வழியில் திருப்ப முயன்றார்.    இவருடைய சீர்திருத்தங்களினால் தங்கள் நலன்கள் பாதிக்கப்படலாம் என்று எண்ணிய செல்வந்தர்கள் மற்றும் சமூகத்தில் மேல்மட்டத்தில் இருந்தவர்கள் இவரைச் சதிசெய்து ரோமானிய அரசன் பிலாத்துவின் உதவியோடு சிலுவையில் அறைந்தனர்.  அந்தக் காலத்தில் சமூக விரோதிகளைச் சிலுவையில் அறைந்து கொல்வதுதான் பழக்கமாக இருந்தது.  சமூக சீர்திருத்தவாதியான இயேசு ஒரு சமூக விரோதியாகக் கருதப்பட்டார்.  அதனால் அப்போதைய யூத சமூகம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றது.  இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொண்ட சில யூதர்கள் கிறிஸ்துவ மதத்தை நிறுவினர்.  இயேசு கடவுளின் உண்மையான தூதர் என்றும் இறந்த மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தது உண்மையென்றும் நம்பினர்.  தங்களிடையே கடவுளின் தூதர் ஒருவர் தோன்றித் தங்களில் நல்லவர்கள் எல்லோரையும் ஒரு நாள் இறைவனிடம் அழைத்துச் செல்வார் என்று நம்பிக்கொண்டிருந்த யூதர்கள், அந்தத் தூதர் இயேசு என்பதையோ, இயேசு இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதையோ  நம்பத் தயாராக இல்லை.  இயேசு ஒருவரை மட்டும் கடவுள் கல்லறையிலிருந்து உயிர்த்தெழவைத்தார் என்று இயேசுவின் ஆதரவாளர்கள் கூறியது அவர்களுக்கு வினோதமாக இருந்தது.  நல்லவர்கள் எல்லோரையும் இறைவன் கல்லறையிலிருந்து உயிர்த்தெழ வைத்திருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.  ஆனால் இயேசுவைப் பின்பற்றிய யூதர்கள் கடவுளின் தூதர் இயேசுதான் என்றும் அவர் வருவார் என்று வேதங்களில் இருப்பதாகவும் கூறினர்.

    தங்கள் சமூகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்ற இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டபோதிலும், ரோமானியர்களோடு யூதர்களின் உறவு நலிந்துகொண்டே போனது.  தங்கள் சுதந்திரத்திற்காக இவர்கள் ரோமானியப் பேரரசிற்கு எதிராகப் போராடிய போதெல்லாம் நசுக்கப்பட்டனர்.  கடைசியாக கி.பி. 132-இலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவின் பல நாடுகளிலும் குடியேறினர்.   இவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற நேர்ந்த போதும், அவர்களுடைய இரண்டாவது கோவில் ரோமானியர்களால் கி.பி. 70-இல் இடிக்கப்பட்ட போதும் இயேசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் கடவுள் இவர்களைத் தண்டித்தார் என்று பின்னால் வந்த சில கிறிஸ்துவ போதகர்கள் எழுதினர்.

    கடவுளால் அனுப்பப்பட்ட அவருடைய தூதரைக் கொன்றதன் மூலம் யூதர்கள் மிகுந்த  பாவத்தைச் செய்தவர்கள்  ஆகிறார்கள் என்றும் அவர்களுடைய மதமும் வேதங்களும் உண்மையானவை அல்ல என்றும் அவர்களோடு  கிறிஸ்துவர்கள் எந்த உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கிறிஸ்துவ மத போதகர்கள்  கூற ஆரம்பித்தனர்.  இதைத்தான் யூத எதிர்ப்பு (Anti-Semitism) என்கிறார்கள்.  இது உலக சரித்திரத்தில் அன்றிலிருந்து இன்று வரை இருக்கிறது.  அமெரிக்காவில் கூட இது இன்று வரை இருக்கிறது என்று சொல்லலாம்.

    கிறிஸ்துவிற்குப்  பிறகு கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளுக்கு கிறிஸ்துவ  மதம் தழைக்கவில்லை.  அது  மட்டுமல்ல கிறிஸ்துவர்கள் மற்றக் குடிமக்களாலும் மன்னர்களாலும்  பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.  மூன்றாம் நூற்றாண்டு வரை  கிறிஸ்துவர்கள் பல தொல்லைகளுக்கு  ஆளாயினர்.  ஆனால் ரோமானிய அரசன் கான்ஸ்ட்டாண்டினின் தாய்க்குக் கனவில் ஒரு சிலுவை காட்சி அளித்ததோடு இறைவன் அவளிடம் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றும்படியும் அதைப் பரப்பும்படியும் கட்டளையிட்ட பிறகு கிறிஸ்துவ மதத்திற்கு எதிர்ப்பு இல்லாமல் போனதோடு அது வேகமாகவும் பரவியது.

    கான்ஸ்ட்டாண்டின்  தன்னுடைய கடைசிக் காலத்தில்  கிறிஸ்துவனாக மாறினான்.  அவனுக்குப் பின் வந்த முதல்  தியோடிசியஸ் கிறிஸ்துவ  மதத்தை நாட்டின் அதிகாரபூர்வ  மதமாக அறிவித்தது யூதர்களின் சரித்திரத்தில் பெரிய மாற்றமாக அமைந்தது.  கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை கூடியது.  தியோடிசியஸ்  யூதர்களின் குடியுரிமைகளுக்குப்  பங்கம் எதுவும் விளைவிக்கவில்லை  என்றாலும் கிறிஸ்துவ குருமார்கள்  யூதர்களையும் அவர்களுடைய மதத்தையும் தீவிரமாக விமர்சித்தனர்.  இருப்பினும் கிறிஸ்துவிற்குப் பிறகு சுமார் 600 ஆண்டுகளாக  ரோமானியர்களின் பல கடவுள்களைக்  கொண்ட பேகன் மதம்தான் கிறிஸ்தவர்களுக்கும்  யூதர்களுக்கும் பொது எதிரியாக விளங்கியது.  பக்கத்தில் பக்கத்தில் வாழ்ந்த அவர்களுக்கிடையே  சிற்சில சச்சரவுகள் தோன்றினாலும், யூதர்களின் நலன்கள் பாதிக்கப்படாமலேயே இருந்தன.  முதல் கிரிகிரி என்னும் போப் காலத்தில் யூதர்களை வற்புறுத்திக் கிறிஸ்துவ மதத்தில் சேர்ப்பதை அவர் கண்டித்தார்.  ஆயினும் யூதர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆதரவு தொடர்ந்து நீடிக்கவில்லை.

    ஹிரக்லியஸ் என்னும்  ரோமானிய அரசன் பாரசீகர்களோடு நடத்திய யுத்தத்தில் ஜெருசலேமை இழந்த பிறகு அந்த இழப்பிற்கு யூதர்கள் பாரசீகர்களோடு சேர்ந்து செய்த சதிதான் காரணம் என்று நினத்ததால் யூதர்களின் மதப் பழக்க வழக்கங்களை அடியோடு நிறுத்தினான்.  அவர்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டன.  அதே சமயம் பிரான்ஸிலும் ஸ்பெயினிலும் யூதர்கள் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.  ஸ்பெயினில் 694-இல் யூதர்களுக்குக் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் அல்லது அடிமைகளாக வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.  பின்னால் பல நாடுகளிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டதற்கு அரசியல் காரணங்கள், அந்நியர் வெறுப்பு, தங்கள் பிரச்சினைகளுக்கு அவர்களைப் பலிகடா ஆக்குவது போன்ற பல காரணங்கள் இருந்தாலும், தங்களுடைய இறைவனின் தூதரான இயேசுவைக் கொன்றவர்கள் என்ற காரணத்தால் கிறிஸ்துவர்கள் யூதர்களை வெறுத்ததுதான் முதன்மைக் காரணம்.

    வரலாற்றின் இடைக்  காலமான 600-1500-இல் யூதர்கள் பல நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்; பல கிறிஸ்துவ போப்கள் அவர்கள் மீது பல அவதூறுகளைக் கிளப்பினர்.  பல யூதர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கினர்.  வியாதிகள் மனிதர்கள் செய்த தவறுகளால் வருபவை, மத குருமார்களிடம் சென்றுதான் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் யூத மருத்துவர்களிடம் வைத்தியம் செய்துகொள்ள வேண்டாம் என்றும் கிறிஸ்தவ போப்புகள் மக்களிடம் கூறினர்.  யூதர்கள் வணிகம், வியாபாரம் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினர்.  அதிலிருந்தும் இவர்கள் விலக்கிவைக்கப்பட்டதால் யூதர்கள் வட்டிக்குக் கடன் கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்தனர்.  அதிக வட்டி வசூலிக்கிறார்கள் என்னும் குற்றமும் யூதர்கள் மேல் சுமத்தப்பட்டது.  (அதிக வட்டி வாங்கும் பழக்கம் யூதர்களிடம் இருந்ததால் இயேசு அவர்களைக் கண்டித்திருக்கிறார்.)

    ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி, இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்த பிறகு முஸ்லீம் அரசர்கள் பாலஸ்தீனத்தைப் பிடித்துக்கொண்டனர்.  அவர்களை வென்று பாலஸ்தீனத்தை மீட்கச்சென்ற, பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த சிலுவைப் போராளிகள் (crusaders) (கிறிஸ்துவ மதத்தைக் காப்பாற்ற வந்தவர்கள்) வழியில் பல யூதர்களுக்கும் நிறைய தீமைகள் விளைவித்தனர்.  முஸ்லீம் அரசர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது ஸ்பெயின் அரசு யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் அதிக வரி விதித்தது என்றாலும் யூதர்களை பலவந்தமாக மதம் மாறச் சொல்லவில்லை.  ஆனால் மறுபடி கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் ஆட்சியைப் பிடித்த பிறகு யூதர்கள் மீது 1265-இல் மத விசாரணையை (Inquisition) ஆரம்பித்தனர்.  கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய யூதர்களின் வாரிசுகளில் பலர் மத போதகர்களாக, துறவிகளாக மாறிய போதிலும் விசாரணை அவர்களையும் விட்டு வைக்கவில்லை; அவர்கள் உண்மையிலேயே மதம் மாறிவிட்டார்களா என்று பரிசோதித்தனர்.  1492-இல் போப் வெளியிட்ட ஆணை, கிறிஸ்தவர்கள் அல்லாத முஸ்லீம்களும் யூதர்களும் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலொழிய நாட்டை விட்டுக் கடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது.  (இதே போப்தான் ஸ்பெயின் அரசியால் அமெரிக்கக் கண்டத்திற்கு அனுப்பபட்ட கொலம்பஸ் செல்லும் இடங்களில் கிறிஸ்துவரல்லாதவர்களைச் சந்தித்தால் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் அவர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொள்ளலாம் என்றும் அனுமதி கொடுத்தார்.  இப்படி போப்பின் ‘ஆசீர்வாதத்தைப்’ பெற்ற கொலம்பஸும் அவரைப் பின்பற்றிச் சென்றவர்களும் அமெரிக்கக் கண்டங்களில் பல பழங்குடி மக்களைக் கொன்று குவித்தனர்.)

    பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் ஜெர்மனியிலும் யூதர்கள் பல கொடுமைகளுக்கு ஆளாயினர்.  இந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கப் பலர் போலந்து போன்ற நாடுகளுக்குச் சென்றனர்.  போலந்தில் யூதர்களின் வணிகத் திறமையைக் கற்றுக்கொள்வதற்காக பல செல்வந்தர்கள் இவர்களை ஆதரித்தனர்.  யூதர்கள் அங்கு அவர்களுடைய கல்வி நிறுவனங்களை நிறுவினர்.  ஆனால் மறுபடி பதினேழாம் நூற்றாண்டில் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களினால் யூதர்கள் பாதிக்கப்பட்டனர்.

    ரஷ்யப் பேரரசி கேத்தரின்  பத்து லட்சம் யூதர்களை ரஷ்யாவில்  குடியேற அனுமதித்தார்.  அரசி இவர்களுக்கு ஆதரவு  அளித்தாலும் அவர்களை மண்ணில்  பாடுபடும் விவசாயிகளாகவே  அனுமதித்திருந்தார்.  யூதர்களைத் தொழில்களில் அனுமதிக்கவில்லை.  இவருக்குப் பின் வந்த முதலாம்  அலெக்ஸாண்டர், முதலாம் நிக்கலஸ் காலத்தில் யூதப் பையன்கள் பன்னிரெண்டு முதல் இருபத்தைந்து வயது வரை ராணுவத்தில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர்.  யூதர்களுக்குப் பாதுகாப்பில்லாமல் இருந்ததால் பெரிய வெள்ளி போன்ற நாட்களில் (அன்றுதான் இயேசு சிலுவையில் அறையப்பட்டதைக் கிறிஸ்துவர்கள் நினைவுகூருவார்கள்) யூதர்கள் வெளியே வராமல் வீட்டிலேயே அடைந்துகிடந்தனர், சில கிறிஸ்துவர்கள் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்பதால்.

    பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த, புராடஸ்டெண்ட் கிறிஸ்துவப் பிரிவைத் தோற்றுவித்த மார்ட்டின் லூத்தர் யூதர்களைப் பற்றிப் படித்திருந்ததால் ‘இயேசு ஒரு யூதராகப் பிறந்தார்’ என்னும் நூலை எழுதி யூதர்களை கிறிஸ்துவ மதத்திற்கு இழுக்கலாம் என்று நினைத்தார்.  ஆனால் அப்படி நடக்காததால் யூதர்களையும் அவர்கள் மதத்தையும் தூற்ற ஆரம்பித்ததோடு வங்கித் தொழில், வர்த்தகம் ஆகியவற்றிலிருந்து யூதர்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், முடிவாக பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதைப் போல் ஜெர்மனியிலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தார்.

    பல நாடுகளில் யூதர்கள் தங்கள் திறமையினால் செல்வந்தர்களாகவும் அரசியலில் அதிகாரம் உள்ளவர்களாகவும்  விளங்கினாலும் அவர்களுடைய இந்த வாழ்க்கை வெற்றியே மற்றவர்களுக்கு அவர்கள் மேல் பொறாமையையும் வெறுப்பையும் உண்டாக்கியது.  மேலும் யூதர்கள் தாங்கள்  மற்றவர்களை விட உயர்ந்தவர்கள்  என்ற எண்ணத்தையும் எப்போதும்  கொண்டிருந்தனர்.  பல நாடுகளில்  மற்றவர்களிடமிருந்து தனித்தே  வாழ்ந்திருக்கிறார்கள்.  குடியேறிய எல்லா இடங்களிலும்  அந்தந்தச் சமுதாயங்களோடு  அவர்களால் இணைய முடியவில்லை.  இதனாலோ என்னவோ அந்தச் சமுதாய மக்களும் இவர்களைச் சரியாக நடத்தவில்லை.  தங்கள் யூத மதத்தையும் அதன் கோட்பாடுகளையும் இவர்களுடைய மதத்தலைவர்கள் தவறாமல் கடைப்பிடித்திருக்கிறார்கள்.  குடியேறிய நாடுகளில் பேசப்பட்ட மொழிகளைக் கற்றுக்கொண்டாலும் மதச் சடங்குகளில் தங்கள் மொழியான ஹீப்ருவைத் தொடர்ந்து உபயோகித்திருக்கிறார்கள்.  ஜெர்மனியில்தான் யூதர்களின் எண்ணிக்கை மற்ற எல்லா நாடுகளையும் விட அதிக அளவில் இருந்தது.  இங்கு ஜெர்மன் மொழியிலிருந்து உருவாகிய யிட்டிஷ் (Yiddish) மொழியைப் பேசினர்.

    ரஷ்யா, போலந்து, ஃபிரான்ஸ், ஸ்பெயின் என்று பல நாடுகளிலும் யூதர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் ஜெர்மனியில் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்த ஹிட்லர் இவர்களை லட்சக் கணக்கில் கொன்று குவித்தது ஐரோப்பாவில் இருந்த யூத எதிர்ப்பின் உச்சக் கட்டம் எனலாம்.  டிசம்பர் ஆறாம் தேதியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் கூறியிருப்பது போல் ஹோலகாஸ்ட் (Holocaust) என்று அழைக்கப்படும், ஹிட்லர் நடத்திய, யூதர்களின் படுகொலையைத் தொடர்ந்து தப்பிய யூதர்கள் ஜெர்மனியை விட்டு அகதிகளாக ஓடிவராமல் இருந்திருந்தால் இஸ்ரேல் என்ற நாடே உருவாகியிருக்காது.

    பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தே தங்களுக்கென்று ஒரு நாடு இருந்தால்தான் தங்களுடைய  நலன்களைக் காத்துக்கொள்ள  முடியும் என்று நினைக்க  ஆரம்பித்த யூதர்கள் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று அப்போதிலிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

    யூதர்கள் முதலிலிருந்தே – அதாவது பல ஆயிரம் ஆண்டுகளாகவே – தங்கள் எல்லோரையும் தங்களுடைய பழைய சொந்த நாடான பாலஸ்தீனத்தில் ஒன்று சேர்க்கக் கடவுளின் தூதர் ஒருவர் வருவார் என்று காத்திருந்தார்கள்.  இருந்தாலும் ஐரோப்பாவில் நிலவிய யூத எதிர்ப்பு கடவுளின் தூதர் வருவதற்காகக் காத்திருப்பதை விட தாங்களாக முயன்று தங்களுக்கென்று தனி நாடு ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இவர்களிடம் தோற்றுவித்தது.  மேலும் அந்த நாடு அவர்களின் பழைய புண்ணிய ஸ்தலமான பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினர்.  இவர்கள் அங்கு வாழ்ந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன என்பதையும் அங்கு இப்போது வேறு இன மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்பதையும் துரதிருஷ்டவசமாக (தங்களின் வசதிக்காக) அவர்கள் மறந்துவிட்டிருந்தனர்.  இவர்களின் இந்த ஆசையின் (பேராசை என்று கூடச் சொல்லலாம்) விளைவே இப்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்கு வித்திட்டது என்று கூறலாம்.  (இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லையென்றும் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இயேசு பூமிக்கு மறுபடி வந்து உலகம் பூராவையும் தன் ஒரே குடையின் கீழ் பாரபட்ச முறையில் ஆள்வார் என்றும் அப்போது உலகில் நேர்மை, நியாயம் கோலோச்சும் என்றும் பைபிளில் கூறப்பட்டிருக்கிறதாம்.  காஷ்மீர் பிரச்சினை போல் இப்போதைக்குத் தீர்வு காண முடியாத பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.  இந்த இரண்டு பிரச்சினைகளும் பிரிட்டிஷ் அரசால் ஏற்படுத்தப்படவை என்று கூறினால் அது மிகையாகாது.  இந்தப் பிரச்சினை உருவான கதையைப் பின்னால் பார்ப்போம்.)

    (தொடரும்)

    Share