பனித்துளி சுமக்கும் புற்கள்

தனுசு

அதிகாலை நேரம்
பசும் புல்வெளி மீது
படுத்துறங்கும் பனியே
உன்னையும் புல்வெளியையும்
இணைத்துத் தான்
எத்தனை எத்தனை கவிதை
நானும் பாடுவது….

அன்றொரு நாள்
“இதோ இந்த அருகம் புல்
இரவு முகூர்த்தம் முடித்து
அதிகாலையில்
தலை குளித்துவிட்டு
வருகிறது” என்று எழுதினேன்

அடுத்தொரு நாள்
“என் நிலாக் காதலியின்
அழகைப் பார்த்ததால்
அவமானப்பட்டு பச்சைப்புற்களின்
நுனி மூக்கு வேர்க்கிறது” என்று எழுதினேன்

நேற்றைக்கு
“நிலவோடு
நேசக்கலவையின்
இச்சை முடியாத போது
இரவுப்பொழுது முடிந்து விட்டதை எண்ணி
பச்சைப் புற்கள்
கண்ணீர் சிந்துகிறது” என்று எழுதினேன்

இன்று
“என் குலப் பெண்கள் திருவிழாவில்
கரகமும் கலசமும் சுமப்பது போல்
அதிகாலையின் இயற்கைத் திருவிழாவில்
அருகம் புற்கள்
பனிக்குடம் சுமக்கிறது” என்று எழுதினேன்

நாளை
“பருவ அடையாளங்களை
தாங்கி நிற்கும் குமரியைப் போல்
நீர்த் திவலையைத் தாங்கி நிற்கும்
பச்சைப் புற்கள்” என்று எழுதுவேன்

இன்னும் எழுதுவேன்
அதற்கும் முன்
ஒரு
உண்மையை யாராவது சொல்லுங்களேன்…

பருவப்பெண்ணின்
ஈர அதரங்களைத் தொட்டால் கூசி சுருங்குவது போல்
அதிகாலையில்
பனிப் பச்சையின் ஸ்வாசம் முகர்ந்து
இவைகளை ருசிக்கும்போது
குளிரும் சிலிர்ப்பால்
கூச்சமடையும் என்னை…..

அவைகளை
தினந்தோறும் கவி எழுதும் என்னை…..

அந்த புற்கள்
நிமிர்ந்து பார்க்காமல்
குனிந்த தலையோடு இருக்க….

பகலின் வெளிச்சம் படும் போது
பனி விலக்கி
அந்த சூரியனுக்கு மட்டும்
அழகிய புற்கள்
நிர்வாண தரிசனம்
தருகிறதே அது ஏன்?

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “பனித்துளி சுமக்கும் புற்கள்

 1. கவிஞருக்கு 
  நிதம் ஒரு வர்ணனை 
  தினம் ஒரு கற்பனை
  பொழுதொரு கவிதை 
  ஆனால் மாறாது 
  விழுவதென்னவோ அதே பனி 
  …தேமொழி 

 2. அதீதக் கற்பனை அருமையானக் கவிதை
  பகிர்விற்கு நன்றிகள் கவிஞரே!

 3. கவிதையை ரசித்துப் படித்து கருத்து சொன்ன நண்பர் ஆலாசியத்துக்கும், கருத்தை கவிதையாகவே சொன்ன தோழி தேமொழிக்கும் மனமார்ந்த நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *