கண்ணீர்
என்னருமைக் கண்ணீரே,
இன்னலிலே என் தோழா,
உன்னருமை நானறிவேன்
ஒன்றுரைப்பேன் கேளாய் நீ
நலிந்தார்க்கு நற்றோழா நானறிவேன் நின் திறமை
வலிமையுள்ள நின் முன்னே வாள் திறனும் சிறிதாகும்
ஞாலத்தின் முழுமையிலும் நீ தூண்டி நடத்திட்ட
கோலப் பெருஞ்செயல்கள் கோடி கோடி ஆகுமையே
வாயினால் வடித்திடவே வார்த்தையிலாச் செய்தியெலாம்
நீயாக உரைத்திடுவாய் நீள் விழியினில் நின்று.
பேசவொணாப் பெருஞ்செய்தி இதயத்தில் உளதெல்லாம்
நேசமுடை நெஞ்சத்தில் நீயே உரைத்திடுவாய்.
உள்ளத்துச் சோகத்தை உன்னி உன்னி நின்னை பெரு
வெள்ளம் போல் பெருக்கிவிட வேட்கை பிறக்குதையே.
ஆனால்
பத்துப் பேர் என்னைப் பார்த்து நிற்கும் போது
முத்துப் போல் நீ வந்து முகம் காட்டி நிற்கிறாய்
பிறரறியாது உன்னைப் பேணி மறைக்கிறேன்
ஊரறிய அழுவதிலே உண்டாமோ ஆறுதலும்
அருகில் யாருமே இல்லாத நேரம் நீ
பெருகி வரவேண்டுமெனப் பிடித்து வைக்கிறேன்.
தனிமையிலே நின்றுன்னை ஆறாய்ப் பெருக்குவதே
மனச்சுமை குறைத்திடும் மார்க்கம் ஆகிவிடும்.
படத்திற்கு நன்றி
துண்பமும் துயரமும் வரும் போது அதை போக்கும் முதல் உற்ற தோழன் கண்ணீர். கண்ணீர் விட்டு அழுதால் அதன் பாரம் கொஞ்சம் குறையும். அந்தக் கண்ணீரை நண்பனாக்கி வந்த கவிதை அருமை.