இந்த வார வல்லமையாளர்!
திவாகர்
விக்கிரமாதித்தன் கதையில் மிகவும் எது முக்கியமானது என்றால் அந்த அரசனின் விடாமுயற்சி எனும் சிறப்பான குணம்தான். ஒவ்வொருநாள் இரவும் மெனக்கெட்டுப் போய் முருங்கை மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் வேதாளத்தைத் தன் தோளில் தொங்க்ப்போட்டுக்கொண்டும் அந்த வேதாளத்தின் கதையை விடாமல் கேட்டுவிட்டு அது திருப்பிக் கேட்கும் கேள்விக்கு திருப்தியாக விடை சொல்லிக்கொண்டும், விடை கிடைத்தாலும் உடனே அவனை விட்டு நழுவிப்போகும் வேதாளத்தை சற்றும் மனம் தளராமல் மறுபடியும் அடுத்த நாள் இரவு தேடிப் போய்ப் பிடித்து தோளில் தொங்கபோட்டுக்கொண்டு… அடடா, அவன் பொறுமையே பொறுமை என்று படிப்போர் பாராட்டத்தான் செய்வர்.
இந்த விக்கிரமாதித்தனின் விடாமுயற்சி போல இன்னொரு பெண்மணி இப்படித்தான் நம் தமிழ் நாட்டு தொல் மரபுகளை சேமித்து வைக்கவும், அதைப் பாதுகாக்கவும் ஒவ்வொரு முறையும் (யாரைப் புதிதாகப் பார்க்க நேர்ந்தாலும்) கேட்டுக் கொண்டே இருப்பார். அப்படி மற்றவர்களை மட்டும் கேட்டுவிட்டு நின்று விடாமல் அந்தப் பணியை தானே முன்னின்று செய்வதிலும் வல்லவர். அவர்தான் ஜெர்மனியைச் சேர்ந்த மலேயத் தமிழர் திருமதி சுபாஷிணி டிரெம்மல்.
சுபாவை கடந்த ஆறு வருடங்களாகவே தெரியும். என் அழைப்பை ஏற்று விசாகப்பட்டினம் வருகை தந்தவர். வந்தவர் ஒரு பொழுதும் சும்மா இராமல் தமிழ்ச்சங்கத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தமிழ் மரபைக் காக்க அவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்லிகொடுத்தார். இது அவரது இயல்பான வேலைகளில் ஒன்று என அன்றுதான் தெரிந்துகொண்டேன். எந்த ஊர் சென்றாலும் அந்த ஊருக்கே உரிய பெருமைகளைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற கொள்கையும் அதன் தொடர்பான அவரது விடா முயற்சியும் சென்ற இடங்களிலெல்லாம் மக்களை அதற்கேற்றவாறு ஊக்குவித்துக்கொண்டும் செல்லும் இவரது திறன் ஆற்றல் மிக்கது. இப்படித்தான் கடந்தமுறை இந்தியா வந்தபோது அவர் சென்ற ஊர்களில் கண்ட அனுபவங்களையும் தொல் பெருமையையும் சமீபத்தில் பதிவிட்டு வருகிறார். அதனுள் சென்றவாரம் பதிப்பித்த தேவகோட்டை ஜமீன் பதிவில் ஒரு விசேஷம் இருந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு எழில் நகரம் தேவகோட்டை. வரலாற்றை கேட்டு அறிந்து கொள்ளும் போது பாஸ்கர சேதுபதி அவர்கள் ராஜாவாக பதவி பெறுவதைத் தடுக்க பங்காளிகள் முயற்சித்த போது நடந்த குழப்பத்தில் பாஸ்கர சேதுபதிக்கு உதவிய ஏ.எல்.ராமசாமி செட்டியார் அவர்களை தான் ராஜாவாக பொறுப்பேற்ற பின்னர் கௌரவித்து அவருக்கு ஏராளமான நிலங்களை வழங்கி தேவகோட்டை பகுதிக்கு அவரை ஜமீந்தாராக நியமனமும் செய்திருக்கின்றார்.இவர் ஜமீந்தாராக ஆகிய பின்னர் செய்த ஆலயத் திருப்பணிகள் பல. காளையார் கோயில் திருப்பணி, ராமேஸ்வர சத்திரம் மற்றும் கோயில் திருப்பணி, காளகஸ்தி கோயில் திருப்பணி, சாலை புதுப்பித்தல் எனப் பல சமூகப் பணிகளைச் செய்ததை நாம் மறக்க முடியாது. http://voiceofthf.blogspot.de/2012/12/blog-post.html
இதில் விசேஷம் என்னவென்றால் இவர் செல்லுமிடமெல்லாம் அவர்களது பேட்டியைப் பதிவு செய்வதுதான். அந்தப் பதிவின் போது பலர் அறியாத புதிய செய்திகள் கிடைக்கின்றன. குறிப்பாக நகரத்தார் ராஜாக்களுக்கு அந்தக் காலங்களில் கடன் கொடுத்து உதவுவது போன்ற விஷயங்கள், தஞ்சை போன்ற பெரிய இடங்களை அடமானமாக ராஜாக்கள் வைக்க ஒப்புக்கொண்ட விஷயங்கள், ராமேஸ்வரம் போன்ற பெரிய கோயில்களுக்கு அவர் முன்னோர் செய்த திருப்பணிகள், அந்தக் காலகட்டத்து மக்களின் வாழ்க்கை விவரங்கள், செட்டியார்களின் வாழ்க்கைப் போக்குகள் இன்னும் பல விஷயங்கள் பேட்டி எடுக்கப்பட்டு வரும்போதும் அப்படியே அவைகள் சேமிக்கப்படும்போதும் பிற்கால சந்ததியினருக்கு இந்த விஷ்யங்கள் எப்பேர்ப்பட்ட உதவிகளை அது செய்யப்போகிறது என்பதனை நினைத்துப் பார்த்தாலே சந்தோஷம் வருகின்றது. ஏற்கனவே பாரதி பிறந்த எட்டயபுரத்தைப் பற்றி பலர் அறியாத விஷயங்களை புகைப்படங்களோடு பதிவு செய்து பாதுக்காத்து வைத்திருக்கிறார். இவர் முயற்சியால் மரபு விக்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல நல்ல விஷயங்கள் மரபு விக்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. விஷயதானத்தை சிறந்த வகையில் பகிர்ந்து கொள்ள எல்லா வழிகளையும் பின்பற்றும் இவரது விடாமுயற்சியைப் பாராட்டாமல் இருக்கமுடியுமா?
விக்கிரமாதித்தனின் விடாமுயற்சி கடைசியில் வேதாளத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, பின்னர் அது விக்கிரமாதித்தனுக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்யப்போவதும் கதையைப் படிப்பவர்களுக்குதான் புரியும். ஆனால் சுபாவின் விடாமுயற்சியின் பலன்கள் யாவும் பிற்கால சந்ததியினருக்கே.. அவர் மட்டுமல்ல, அவரால் ஊக்குவிக்கப்பட்டு அவரைப் போலவே மரபைப் பாதுகாக்கும் ஒவ்வொருவரின் செயலும் பிற்காலச் சந்ததியினருக்கு எத்தனையோ உதவிகள் செய்யப்போகிறதுதான். விக்கிரமாதித்தனின் விடாமுயற்சியை விட சுபாவின் விடாமுயற்சி சிறப்பாக இருக்கிறது.
இந்த தற்கால விக்கிரமாதித்தியின் (விக்கிரமாதித்தனுக்கு பெண்பால் பெயர் கொடுத்தால் விக்கிரமாதித்திதானே) தொல் மரபைப் பாதுகாக்கும் பணிகளுக்கு நம் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும் தாராளமாகத் தெரிவிக்கின்ற அதே நேரத்தில் இந்த வாரத்தில் அருமையான ஒரு குரல்பதிவைத் தந்த திருமதி சுபா அவர்களை இந்த வாரத்து வல்லமையாளராகத் தேர்ந்தெடுப்பதில் வல்லமை குழுவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. வல்லமையாளரான சுபாவால் மேலும் புதுப்புது விஷயங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படப் போகின்றது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
கடைசிபாரா:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது –
அண்ணா கண்ணனுக்கு திருமண நல்வாழ்த்துகள் இங்கே சொல்லவில்லை என்றால் எப்படி? நீண்டு நீடூழி காலம் இன்பமாய் இருவருமாய் இல்லறத்தை சுவைத்திட வேண்டுவோம்.
மிகவும் தேவையான பணியை, சிரத்தையாகச் செய்து வரும் திருமதி.சுபா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
அண்ணா கண்ணன் மற்றும் ஹேமமாலினிக்கு இனிய திருமண வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன் 🙂
இந்த வார வல்லமையாளர் சுபாவிற்கு வாழ்த்துக்கள். 🙂
…தேமொழி