Blog

  • (Peer Reviewed) தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு

    (Peer Reviewed) தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்    
    உதவிப்பேராசிரியர், மொழிகள் துறை 
    பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 
    பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
    வல்லம், தஞ்சை மாவட்டம் – 613403.   
    மின்னஞ்சல் முகவரி-   egowrisss@gmail.com

    முன்னுரை

    இலக்கியம் வெற்றி பெறுவது உத்திகளால். உத்தி பலவகைப்படும். வெளிப்பாட்டு உத்தி என்பது அவற்றுள் ஒன்று. கவிஞன் தன் உள்ளத்துக் கருத்துக்களையும் கற்பனைகளையும் பலவகையாக வெளிப்படுத்த முடியும். தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைத் தன்னுணர்ச்சிப் பாடல்கள் என்பர். முன்னிலைப்பொருளை நோக்கி விளித்துச் சொல்கிற இலக்கியங்களும் உள. கவிதையைப் கேட்பதற்கான பொருள்களை அழைத்துப் பாடுவதும் தூது என்ற இலக்கிய வகையில் அடங்கும். ஒருவன் தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை, வழிப்போக்கர்களை நோக்கிச் சொல்வதும் அக்காலத்தில் ஒரு இலக்கிய வகையாகக் கருதப்பட்டிருக்கிறது. இங்கே வழிப்போக்கர்கள் என்பது வறுமை தீர்க்கும் இடம் நோக்கிச் செல்வாரைக் குறிக்கும். ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் பரந்த மனப்பான்மையின் பழந்தமிழ்ச் சான்றாகத் திகழ்கின்ற இந்தக் கவிதை உத்திக்கு ‘ஆற்றுப்படை’ என்று பெயரிட்டு வழங்கியமையை அறிய முடிகிறது. இது பற்றிய சில செய்திகளை ஆராய்வதாக இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கட்டுரைக் கட்டமைப்பு

    இந்தக் கட்டுரை ஒரு இலக்கிய வகைமையின் உள்ளடக்கச் சுருக்கமாக  அமையாமல் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய வரலாற்றை ஆராய முயல்வதாக அமைகிறது. எனவே காலமுறைத் திறனாய்வு பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு கால இலக்கியத்திலும் இதன் தாக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பற்றியும் புதுக்கவிதை, ஹைக்கூ, லிமரைக், சென்ட்ரியூ முதலியன வளர்ச்சியடைந்திருக்கும் தற்காலத்தில் மரபார்ந்த இலக்கியங்களின் இரங்கத்தக்கநிலை பற்றியும் சுட்டிக் காட்டுகிறது.

    ஆற்றுப்படை – ஒரு விளக்கம்

    ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது பிற்காலத்திய வழக்கு. அன்றைய ஆற்றுப்படையின் அடிப்படையே அதுதான். வழி தெரியாதவனுக்கு வழி சொல்லவே மறுக்கும் அல்லது தவறான வழிகாட்டும் தற்கால அவசர உலகத்தில் ஆற்றுப்படையின் ஊடிழையான மனிதநேய மாண்பினைப் புரிந்து கொள்வது அவ்வளவு எளிமையானதன்று. குழு வாழ்க்கை நடத்திய முன்னோர்களின் வாழ்க்கைத் தடத்தில் ஆற்றுப்படுத்தல் கோடையிலே வீசிய குளிர் தென்றல்!. ‘எங்கிருந்து வருகிறாய்? என்று வறுமையாளன் கேட்கிறான். இன்னாரிடம் சென்றேன்! இவையிவை பெற்றேன்! அங்கிருந்து வருகிறேன்! அன்பனே! நீயும் செல்! அன்பனே அங்கே உனக்கு அன்பும் கிட்டும் ஆதரவும் கிடைக்கும் உனது வறுமை ஒழியும் வாழ்வு சிறக்கும்’ என்று ஒருவனை மற்றொருவன் வழிநடத்துவதே, (வழிகாட்டலே) ஆற்றுப்படையின் உள்ளடக்கமாகும்.

    தொல்காப்பியமும் ஆற்றுப்படையும்

    தொல்காப்பியப் பொருளதிகாரம் ‘கவிதையியல் பற்றிய இலக்கணம்’ என்னும் கருதுகோள் ஒப்புக்கொள்ளப்படுமானால், ‘ஆற்றுப்படை’என்பது இலக்கியத்தின் வெளிப்பாட்டு உத்திமுறைகளில் ஒன்று என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். ‘ஆற்றுப்படை’ இலக்கியம் அன்றைய சமுதாயத்தின் தனிமனித வறுமை நிலையையும் பிறர்நலம் பேணும் பெற்றியையும் ஒருசேரப் படம்பிடித்துக்காட்டும் இலக்கியத் தொழில்நுட்பமாகும்.

    கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
    ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
    பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
    சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கம்

    என்பது தொல்காப்பியம் காட்டும் அக்கால ஆற்றுப்படை இலக்கணம். இதனுள் ‘பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு’என்னும் தொடர் ஆற்றுப்படுத்துவோர்  ஆற்றுப்படுத்தப்படுவோர் ஆகியோர்தம் பொருளாதார நிலையைக் குறிப்பாகச் சுட்டுகிறது.  தற்போது பெற்றவன் முன்பு பெறாதவனாகத்தான் இருந்தான் என்பது குறிப்பு. இத்துடன், பத்துப்பாட்டில் அமைந்துள்ள ‘திருமுருகாற்றுப்படை’ முருகப்பெருமானாகிய ஒருவனே ஆற்றுப்படுத்துவோனாகவும் ஆற்றுப்படுத்தப்படுவோனாகவும் என்னும் இருநிலைப் பாத்திரமாகத் தோன்றுவதையும் கருத்திற் கொள்ளலாம். இறைவன் ஆதலின் இது சாத்தியமாயிற்று என்பதும் ஒன்று. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துவது கூத்தராற்றுப் படை என்றால் பாணனை பாணன் ஆற்றுப்படுத்துவது பாணாற்றுப்படை என்றால், முருகனை முருகன் ஆற்றுப்படுத்துதல் அல்லவா முருகாற்றுப்படை என்றாகும்? இருப்பவன் ஒருவனே! இதற்கு எப்படிப் பொருளமைதி கூற வேண்டுமெனின் இறைவனுடைய கந்தழி பெற்றான் ஒருவன் முருகனாகவே மாறிவிடுகிறான். கந்தழி பெற்றவன் பெறாதவனை முருகனிடத்தில் ஆற்றுப்படுத்துகிறான். இதுபற்றிய விரிவான விளக்கத்தைப் பேராசிரியர் துரை.அரங்கசாமி தனது ‘அன்பு நெறியே தமிழர் நெறி’ என்னும் நூலில் ஆராய்ந்துள்ளார்.

    தொல்காப்பியர் காலச் செல்வாக்கு

    ஆற்றுப்படை இலக்கியம் தொல்காப்பியர் காலத்துக் கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை என நான்காக இருந்தது. இலக்கிய வகைமைகளை எடுத்துக் கூறும் தொல்காப்பியர் ஏனைய இலக்கிய வகைகளைக் காட்டிலும் இந்த ஆற்றுப்படை இலக்கியத்தை விதந்தோதுகிறார். எனவே அவர் காலத்துக்கு முன்பே இவ்வகை இலக்கியம் சிறந்திருந்திருக்கலாம் என்பதை ஓரளவு அனுமானிக்க முடியும்.

    இலக்கிய வரலாறு எழுத வேண்டிய முறை

    பொதுவாக இலக்கிய வரலாறு எழுதுகின்ற ‘பேராசிரியர்கள்’ இலக்கியம் ஒன்றின் நதிமூலத்தைக் கண்டறிவதில்லை. அதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை. இலக்கியத்தின் உள்ளடக்கத்தையே அவர்கள் வரலாறு என்று கருதிவிடுவதுதான் இதற்குக் காரணம். சான்றாகத் தூது இலக்கியத்தின் வளர்ச்சி என்றால் அதன் முளை  இராமாயணத்தில் அங்கதன் தூது, பாரதத்தில் கண்ணன் தூது என்றவிடத்திலிருந்து அல்லவா தொடங்க வேண்டும்? பிறகு வரலாற்றில் தூது என்பது தொண்டைமான் இளந்திரையனிடத்தில் அதியமானுக்காக ஔவையார் சென்ற தூதும்  பிரபந்தங்களில் காணப்படும் தூதுக் கூறுகளும் ஆராயப்படல் வேண்டும். இத்தகைய தொடராய்வுக்குப் பின்பே தூது எவ்வாறு தனித்த இலக்கியமாக உருப்பெற்றது என்பது ஆராயப்படல் வேண்டும். அதுவன்றித் தூது கலிவெண்பாவில் பாடப்பெற வேண்டும் என்பதும் அது அகப்பொருள் சார்ந்து அமைய வேண்டும் என்பதும் அதன் வகைகள் இன்னின்ன எனப் பட்டியலிடுவதும் இன்னின்ன பொருளைத் தூதாக விடுக்கலாம் என்பதும் சரியான வரலாறாகவோ வரலாற்றாய்வாகவோ அமையாது.

    ஆற்றுப்படை இலக்கியத்தின் தோற்றமும் கட்டமைப்பும்

    ஆற்றுப்படை இலக்கியத்தைக் கலைஞர்களின் இலக்கியமாகவும் கருதலாம். காரணம் இந்த நூல்களின் நாயகர்களாக அமைந்தவர்கள் கலைஞர்களே. மன்னன் பாட்டுடைத் தலைவனாக இருந்தாலும் அவனைப் பற்றிய அத்தனைச் செய்திகளையும் பரிசில் பெற்றுவரும் இரவலனே எடுத்துக் கூறுகிறான். அதாவது மன்னர்களின் திருவோலக்கத்தில் குழுவாக அமர்ந்து பாடப்பெற்ற மன்னன் பெருமை நாட்டின் சாதாரண வறுமை நீங்கப் பெற்ற இரவலனால் பாடப்பெற்றது. சுருங்கச் சொன்னால் புரவலன் பெருமையை இரவலன் பாடினான். இரவலர்கள் அனைவரும் இசை வல்லுநர்கள். ஆற்றுப்படை இலக்கியத்தின் வளர்ச்சிக்கு இவர்களே காரணம்.  மொழிக்கு முன்னே தோன்றியது இசை என்பதும் இசையிலிருந்தே மொழி தோன்றியிருக்க வேண்டும் என்பதும் மொழியியலார் கருத்து. எனவே மொழியும் மொழியில் தோன்றிய பாடல்களும் தொடக்கத்தில் இசையாகவே இருந்திருக்க வேண்டும். இசையாகவே பாடப்பெற்றவையாதலின் இவை நாட்டுப் பாடல்களைப்போலப் பெரும்பாலும் வாய்மொழி இலக்கியங்களாகத்தான் தோன்றியிருக்க வேண்டும்.

    பழுமரம் தேடும் பறவையினராய் எங்கோ ஒரு மன்னனிடம் சென்று அவனைப் புகழ்ந்து பாடிய இரவலர்கள் தாம் பரிசில் பெற்ற வரலாற்றின் வாய்மொழி வடிவமே ஆற்றுப்படை எனலாம்.

    அவ்வப்பொழுது மன்னன் முன்னிலையில் பாடப்பெற்ற பாடல்கள் தங்களைப் போன்றோரும் தம்மைப் போன்றே பரிசில் பெற வேண்டும் என்னும் வேட்கையின் வெளிப்பாடே இதன் அடுத்த நிலையாகக் கருதப்படலாம்.

    இதன் தொடர்ச்சியாகத் தான் பரிசில் பெற்ற மன்னனின் திருவோலக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறுவதாக வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

    பாணர்கள் கையிலிருந்துப் புலவர்களுக்கு மாறிய ஆற்றுப்படை

    ஒப்பாரிக்கு யாப்பிலக்கணம் கிடையாது. காரணம் அது மக்கள் வழக்கு. அவலத்தின் ஆற்றல் கூறுவது. அடர்த்தி வெளிப்படுவது. ஆனால் இந்த ஒப்பாரி திரைப்படத்தில் இடம்பெறுகிறபோது திரையிசைப் பாடலாசிரியர் கையில் வந்துவிடுகிறது. அந்த நிலையில் அது தனித்தன்மை பெறுகிறது. அந்தத் தனித்தன்மை முந்தைய பாமர வழக்கினின்றும் சிறந்துமிருக்கலாம். சிறவாமலும் அமையலாம். தூது இலக்கியமும் அவ்வாறே. கலிவெண்பாவில் பாடப்பெற வேண்டிய தூதிலக்கியம் தற்காலத்தில் எல்லா யாப்பு வகையிலும் பாடப்பெறுகிறது என்பதையும் திரையிசைப்பாடல்களில் இசையமைப்பாளரின் இசைக்கேற்ற வகையில் பாடப்பெறுகின்றன என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆற்றுப்படை இலக்கியமும் அதுபோன்றதுதான். தொழில்முறைப் பாணர்களிடமிருந்து அதாவது இசைக்கலைஞர்கள் கையில் தவழ்ந்த ஆற்றுப்படைப்பாட்டு தமிழ்ப் பாநெறி அறிந்த புலவர்கள் கையில் வந்தபோது பல மாற்றங்களை அடைந்தது. அவ்வாறு அடைந்த மாற்றங்களுள் ஆற்றுப்படைப் பாடப்படும் பாவகையும் முறையும் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.

    ஆசிரியப்பாவில் பாடப்பெறும் ஆற்றுப்படை

    இரவலர்கள் கையிலிருந்த ஆற்றுப்படை இலக்கியம் புலவர்கள் கையில் வந்தபோது அடைந்த மாற்றங்களில் பாவகை தலையாயது என்பது சென்ற பத்தியில் உணர்த்தப்பட்டது. பாணர்களுக்கு இசை தெரியும். புலவர்களுடைய பாடல்களில் பொருள் நயத்தை உணர முடியும். அந்தப் பாடல்களில் இசை பற்றிய குறிப்புக்கள் இருக்கலாமே தவிர இசையே பாடலாக அமையவில்லை. பெரும்பாலும் ஆசிரிய உரிச்சீர்கள் பயின்று வருவதால் ஆசிரியப்பா என்பாரும் உளர். உண்மையில் உரைநடைக்கு அடுத்த பாநிலையின் தொடக்கமாக அமைந்ததாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் பயன்படுத்தியதாலும் அதற்கு அப்பெயர் வந்திருக்கக் கூடும். ஆசிரியர் என்பதற்குப் புலவர் என்பதும் ஒரு வழக்கு. ‘ஆசிரியர் நக்கீரர்’ என்பது காண்க. இவ்வாறு இசைவாணர்களுக்கான ஆற்றுப்படை இலக்கியம் புலவர்கள் கைக்குத் தொல்காப்பியத்துக்கு முற்பட்ட நிலையிலேயே வந்திருக்க வேண்டும். பின்னாலே வந்த புலவர் பெருமக்கள் தாம் பாடிய ஆற்றுப்படைத் துறையில் தமக்கு முன்னோர்களாகிய பாணர்களை ஒரு பாத்திரமாக இடமளித்துப் பெருமைப்படுத்தினர் எனலாம். புலவர்களது கற்பனைத்திறன், வரலாற்றறிவு, இயற்கை ஈடுபாடு ஆகியனவற்றுக்கெல்லாம் ஆற்றுப்படை இலக்கியம் இலக்கியத் தளமானது,. களமானது என்றால் அது மிகையில்லை.

    சங்க இலக்கியங்களில் ஆற்றுப்படை

    ‘ஆற்றுப்படை’என்பது தமிழிலக்கியத்தின் புறத்துறைகளில் ஒன்றாகக் கருதப்பட்டது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடக்கின்றன.  புறநானூற்றில் ‘பாணாற்றுப்படை’என்ற வகையில் (68, 69, 70, 138, 141, 155, 180) சில பாடல்களும், ‘விறலியாற்றுப்படை’என்னும் வகையில் (64, 103, 105, 133) சில பாடல்களும் ‘புலவராற்றுப்படை’என்னும் வகையில் (48) ஒருபாடலும் கிடைத்துள்ளன. பதிற்றுப்பத்திலும் ‘பாணாற்றுப்படை’, ‘விறலியாற்றுப்படை’ என்னும் வகையில் பல ஆற்றுப்படைப் பகுதிகள் உண்டு. ‘தொல்காப்பியர் காலத்தில் நான்காக இருந்த ஆற்றுப்படை வகைகள் சங்கக்காலத்தில் ஐந்தாக வளரச்சியடைந்தது. கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் என்பாருடன் புலவர்களும் ஆற்றுப்படுத்தியதாகப் புறநானூற்றில் குறிப்பு உண்டு. புலவர்களும் பரிசிலராதலால் பரிசு பெறத்தக்க புலவர்களைத் தாம் பரிசில் பெற்ற மன்னர்களிடத்தில் ஆற்றுப்படுத்தியிருக்கலாம். பத்துப்பாட்டில் முதுற்பாட்டாக அமைந்த திருமுருகாற்றுப்படை ஏனைய ஆற்றுப்படை அமைப்பிலிருந்து சற்று வேறுபட்டு அமைந்திருப்பது முன்னரே சுட்டப்பெற்றது.

    இறைவனிடம் புலவர்களை ஆற்றுப்படுத்தியதாக அமைக்கப்பட்ட புது வண்ண ஆற்றுப்படைகளை அடியொட்டிப் பிற்கால இலக்கண நூல்கள் அவற்றுக்கு இலக்கணத்தை வரையறை செய்த முறையையும் வரலாற்றில் காணமுடிகிறது.

    இருங்கண் வானத்து இமையோர் உழைப்
    பெரும்புலவன் ஆற்றுப்படுத்தன்று

    எனப் புறப்பொருள் வெண்பா மாலையும்,

    “புலவ ராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே”

    எனப் பன்னிரு பாட்டியலும் இலக்கணம் வகுத்திருப்பதை அறிய முடிகிறது. பாணாற்றுப்படை என்னும் ‘ஒருபெயர்’ வழக்கே, சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை என ‘இருபெயர்’ வழக்காக வகைப்பட்டது. சீறியாழை வைத்திருப்பவன் சிறுபாணன் எனவும் பேரியாழை வைத்திருப்பவன் பெரும்பாணன் எனவும் பிரித்துணரப்பட்டனர்.

    பாணாற்றுப்படை ஒரு விளக்கம்

    பாணாற்றுப்படைகளில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை என்னும் இலக்கியம் பத்துப்பாட்டுள் ஒன்றாகக் கோக்கப்பட்டுள்ளது. இது நல்லியக்கோடனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் சான்றோரால் பாடப்பெற்றது. தொண்டைமான் இளந்திரையனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சான்றோரால் பாடப்பெற்ற பெரும்பாணாற்றுப்படையும் பத்துப் பாட்டுள் அமைந்துள்ளது.

    பொதுவாகப் பெரும்பாணாற்றுப்படைத் துறையில் புறநானூற்றில் முன்பே குறிப்பிட்டுள்ளபடி ஏழு பாடல்களும் பதிற்றுப்பத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளது.

    விறலியாற்றுப்படை என்னும் பெயரால் ஏனைய ஆற்றுப்படை நூல்களைப் போல் தனிநெடும் பாட்டு கிட்டவில்லையெனினும் தொகை நூல்களில் மிகுதியாகக் காணப்படுவன இத்துறை சார்ந்த பாடல்களே. புறநானூற்றில் நான்கும் பதிற்றுப்பத்தில் ஐந்துமாகக் கூடுதல் ஒன்பது பாடல்கள் இத்துறையில் கிட்டியுள்ளன.

    ஏனைய தொகுதிகளில் காணப்படாத பொருநராற்றுப்படையும் கூத்தராற்றுப்படையும் பத்துப்பாட்டில் மட்டுமே கோக்கப்பட்டுள்ளன. கூத்தராற்றுப்படைக்கு ‘மலைபடு கடாஅம்’ என்னும் பெயர் வழக்குமுண்டு. நன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பெருங்குன்றூர் கௌசிகனார் கூத்தராற்றுப்படையைப் பாட, பெண்பாற்புலவர் எனக் கருதப்படும் முடத்தாமக் கண்ணியார் கரிகால் பெருவளத்தானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பொருநராற்றுப்படையைப் பாடியிருக்கிறார்.

    இவ்வாறு தனிப்பெருந்துறையாக ஆற்றுப்படைத் துறை விளங்கியிருக்கிறது. தொல்காப்பியம் வாழ்வியல் நூல் என்னும் கருத்தியலிலிருந்து விலகி மாபெரும் இலக்கியவியல் அல்லது பாவியல் நூல் என்பதற்கு இதுவும் ஒரு வலுவான சான்றாகும். தனிநெடும் பாடல்களாகப் பத்துப்பாட்டுள் அமைந்த இவ்வாற்றுப்படைத்துறை சிறுகுறு பாடல்களுக்கான துறையாகத் தொகை நூல்களில் அமைந்திருக்கின்றது என்பது நோக்கத்தக்கது.

    ஆற்றுப்படையின் பிற்கால வளர்ச்சி

    சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆற்றுப்படைப் பாடல்களை மையமாகக் கொண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய ‘பன்னிரு பாட்டியல்’ என்னும் இலக்கண நூல் ஆற்றுப்படைக்கு இலக்கணம் கூறியிருக்கிறது. தமிழைப் பொருத்தவரையில் இலக்கிய வளர்ச்சி என்பது மொழியின் எளிமையாகவே கருதப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத் தொகுப்புக்களின் மொழிநடையும் அவற்றைத் தொடர்ந்து இலக்கியங்களின் மொழிநடையும் இலக்கியத்தின் ஏனைய கூறுகளில் சிறந்து விளங்கினாலும் மொழிநடையைப் பொருத்தவரையில் எளிமையே அரசாண்டது. இது நீர்த்துப் போகும் அளவுக்கு இன்றைக்கு நிலைமை இருக்கிறது.

    ஆற்றுப்படை இலக்கியங்களின் வளர்ச்சிநிலையைப் பொருத்தவரையில் திருஞான சம்பந்தப் பெருமான் பாடிய கோடிக்கரை ஆற்றுப்படை குறிப்பிடத்தக்கது. பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய கச்சியப்ப முனிவரால் இயற்றப்பட்ட திருத்தணிகையாற்றுப்படையும் ஆசிரியர் பெயர் தெரியாத திருப்பாணாற்றுப்படையும் இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில பத்திகளுக்கு முன்னர் கூறியவாறு சங்க இலக்கியங்களில் காணப்படும் புலவராற்றுப்படை பதினேழாம் நூற்றாண்டுவரை தொடர்ந்துள்ளது. திருமேனி இரத்தினக் கவிராயர் என்பார் எழுதிய புலவராற்றுப்படை இந்த நிரலில் வரும். இடைக்கால இலக்கியங்களில் ஏகம்பவாணன் ஆற்றுப்படையும் அருணகிரிநாதர் எழுதிய மற்றொரு திருமுருகாற்றுப்படையும் சிந்திக்கத்தக்கன.

    ஆற்றுப்படை இலக்கியப் படைப்பில் இஸ்லாமியர்

    குலாம் காதிர் நாவலர் என்பாரால் எழுதப்பட்ட ‘புலவராற்றுப்படை’ கவனத்தைக் கவர்கின்றதொரு ஆற்றுப்படையாகும். இது மதுரைத் தமிழ்ச் சங்கத்தலைவர் பாண்டித்துரைத் தேவரிடம் புலவர் ஒருவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. பெரும்பாலான ஆற்றுப்படை நூல்களில் இரவலர்களும் புலவர்களும் நடந்து சென்று பாட்டுடைத் தலைவனைக் காண்பதைத்தான் கண்டிருக்கிறோம். இந்த ஆற்றுப்படையில் ஆற்றுப்படுத்தப்படுகிறவன் புகைவண்டியில் செல்வதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசில் பொருளாகக் கைக்கடியாரத்தைப் பெற்றதாகவும் பாடப்பெற்றுள்ளது. சொற்பொழிவாற்றுப்படை, காதலியாற்றுப்படை, மாணாக்கர் ஆற்றுப்படை, ஆசானாற்றுப்படை, செந்தமிழ்ச் செல்வியாற்றுப்படை எனப் பல்வகையாக ஆற்றுப்படைகள் தோன்றியிருக்கின்றன.

    ஆற்றுப்படை ஒரு பண்பாட்டுக் கருவூலம்

    “பசித்தவனுக்கு உணவை வழங்குவதை விட, அதை உருவாக்கிக் கொள்ளும் வழியை அவனுக்குச் சொல்லிக் கொடுப்பதே சிறந்த அறம்” என்பது மேல்நாட்டுப் பொன்மொழி. இன்றைய நடப்பியலின் எதிர்மறைப் போக்கினைச் சிந்தித்தால் அன்றைய ஆற்றுப்படை இலக்கியம் ஒரு பண்பாட்டு இலக்கியம் என்பதை அறிந்து கொள்ள முடியும். தான் தேடிய செல்வத்தைத் தானே துய்ப்பதும் துய்க்க இயலாக் காலத்து மாண்டு போவதும் தேடிய செல்வம் வீணாவதும் நிகழ்கால நடப்பியல். ஆனால் தனக்குப் பரிசளித்தவனின் முழு முகவரியைக் கூறி அந்த முகவரிக்குச் செல்லும் தடத்தினைச் சிறிதும் வழுவில்லாமல் எடுத்துரைத்து ‘இன்ன பரிசில் யான்பெற்றேன் எனப் ‘பெற்ற பெருவளத்தை’ மறைக்காமல் காட்டி மற்றொருவனையும் வாழச்செய்யும்’ மனநிலையின் மொழிவழி வெளிப்பாடே ஆற்றுப்படை இலக்கியத்தின் சாரமாகும். சங்க காலத்துக் கலைஞர்களின் பண்பாட்டையும் வாழ்வையும், அவர்களை ஆதரித்துக் கலை வளர்த்த புரவலர்களின் ஈர உள்ளத்தையும், வீர நெஞ்சத்தையும் ஆற்றுப்படைகள் இலக்கிய ஓவியங்களாகக் காட்டி நிற்கின்றன. ‘கொடுப்பதூஉம் அழுக்கறுப்பார்கள்’ நிறைந்த உலகில் கொடுப்பவன் இருக்கும் இடத்திற்கு வழிகாட்டும் இரவலர்கள் புரவலர்களினும் உயர்ந்தவர்களாகவே கருதப்படுவர்.

    இருபதாம் நூற்றாண்டில் ஆற்றுப்படை இலக்கியம்

    தமிழிலக்கிய வரலாற்றில் சங்ககாலத்திற்குப் பின் ஏனைய இலக்கிய மரபுகள்  உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் தொடர்ந்து வந்திருப்பினும், ஆற்றுப்படை இலக்கியம் மட்டும் அத்தகைய தொடர்ச்சியைப் பெற்று வந்ததற்கான அடையாளத்தைக் காண இயலவில்லை. சங்க இலக்கியங்களுக்குப் பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவை இருபதாம் நூற்றாண்டில்தான் தோன்றினவோ என எண்ணுமாறே வரலாறு அமைந்துள்ளது.

    1. திருச்சியைச் சார்ந்த அமிர்தம் சுந்தரநாதபிள்ளை எழுதிய ‘புலவராற்றுப்படை’
    2. மேலூர் பி.கே. சீனிவாச ஆச்சார்யா எழுதிய ‘மன்பதை ஆற்றுப்படை’
    3. தஞ்சை பழநிவேல் பிள்ளை எழுதிய ‘வரமுருகாற்றுப்படை’
    4. திம்மப்ப அந்தணர் எழுதிய ‘ஞானியார் ஆற்றுப்படை’
    5. இராமகோவிந்தசாமிப் பிள்ளை எழுதிய ‘ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா ஆற்றுப்படை’
    6. பி.எம் வேணுகோபால் எழுதிய ‘வடஅரங்க ஆற்றுப்படை’
    7. டி.எஸ்.சீனிவாசஆச்சார்யா எழுதிய ‘நமசிவாய மூர்த்தி ஆற்றுப்படை’
    8. வே.ரா. தெய்வசிகாமணி எழுதிய ‘சென்னிமலை முருகன் ஆற்றுப்படை’

    முதலிய ஆற்றுப்படை நூல்கள் இந்த நூற்றாண்டில் தோன்றியவற்றுள் சிலவாகலாம்.

    ஆற்றுப்படை இலக்கியங்களும் அ.கி.பரந்தாமனாரும்

    தமிழில் ஆற்றுப்படை இலக்கிய வடிவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் ஆவார். அவரெழுதிய ஆற்றுப்படை நூல்கள்,

    1. 1926 இல் எழுதிய ‘தமிழ் மகள் ஆற்றுப்படை’ (189 வரிகள்)
    2. 1943 இல் எழுதிய ‘திருத்தொண்டர் ஆற்றுப்படை’ (297 வரிகள்)
    3. 1958 இல் எழுதிய ‘அன்னை இயற்கை ஆற்றுப்படை’ (303 வரிகள்)

    மேற்கண்ட ஆற்றுப்படைகளுள் ‘திருத்தொண்டர் ஆற்றுப்படை’ புதியதொரு சிந்தனையை உள்ளடக்கியது. ‘திருத்தொண்டர்’’ என்னும் திருநாமம் சைவ அடியவர்களுக்கே உரியது. அதனைத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களுக்குரியதாக்கி, அவர்பால் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இது. திரு.வி.க.விடம் கல்வி பயின்றுப் பொதுவாழ்வு நெறியைக் கற்றுக் கொண்ட ஒருவர் மற்றொருவரை நோக்கி, அத்தகைய பண்புநலன்களைப் பெற்றுப் பொதுத்தொண்டு செய்யுமாறு ஆற்றுப்படுத்துவது  இதன் உள்ளடக்கமாகும்.

    இருபதாம் நூற்றாண்டு ஆற்றுப்படை இலக்கியங்களில் மரபும் புதுமையும் 

    இருபதாம் நூற்றாண்டு ஆற்றுப்படை நூல்கள் பெரும்பாலும் ‘யாப்புத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கைச் ‘செய்யுள் தளவாடங்களாகவே’ தோன்றுகின்றன. ‘கலம்பகம் பார்த்தொரு கலம்பகம்’, ‘அந்தாதி பார்த்தொரு அந்தாதி’என்னும் பாவேந்தரின் கூற்றை உறுதி செய்வனவாக அவை அமைந்துள்ளன. இருப்பினும், பத்துப்பாட்டுள் செம்பாதியாய் நின்று ‘உமாமகேசுவரராகத்’தோன்றும் இவ்வாற்றுப்படை இலக்கியங்களுள், உருவத்தால் மரபுசார்ந்தும் உணர்ச்சி — உள்ளடக்கம் ஆகியவற்றால் புதுமை சார்ந்தும் கற்பனை நயம் சார்ந்தும் கருத்துக்களின் பெட்டகமாகத் திகழ்கின்ற படைப்புக்களும் உண்டு.

    1. ‘மாணவர் ஆற்றுப்படை’என்பது பேராசிரியர் டாக்டர் சி. இலக்குவனார்அவர்களால் புதுக்கோட்டைக் கல்விச் செல்வரும் வள்ளலுமான பி.ஏ. சுப்பிரமணியபிள்ளை அவர்களைப் பற்றி, 1959ஆம் ஆண்டு 190 வரிகள்  கொண்டதொரு நூலாக எழுதப்பட்டது.
    1. கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை தன்னுடைய ஆசிரியரும் பீட்டர்ஸ் உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியருமான ஆ.சுப்பிரமணிய அய்யர் அவர்களிடம் தம் நெஞ்சை ஆற்றுப்படுத்துவதாகப் பாடியது ‘ஆசான் ஆற்றுப்படை’ நூலாகும்.

    ஆற்றுப்படைகளின் பாடுபொருள்கள் பல்வகையாக அமைந்திருப்பினும், மேற்சுட்டியனபோலக் கல்வி தொடர்பான ஆற்றுப்படைகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் தனித்தும் சிறந்தும் விளங்குகின்றன. அறியாமையாகிய இருட்டை விலக்குவதிலும் குருவணக்கத்திலும் கவிஞர்களுக்குள்ள ஆர்வத்தையும் மனப்பான்மையையும் இவை வெளிப்படுத்துவதாகக் கொள்ள முடியும். ‘மாணவர் ஆற்றுப்படை’ என்றும் ‘மாணாக்கர் ஆற்றுப்படை’ என்றும் ‘ஆசான் ஆற்றுப்படை’ என்றும் அவை தாங்கியுள்ள பெயர்களே அவற்றின் பொருண்மையை விளக்கப் போதுமானவையாக உள்ளன.

    கடவூர் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படையின் தனித்தன்மை

    மரபுசார்ந்த வடிவங்களோ, சொல்லாட்சிகளோ புதியன தோன்றுவதற்குத் தடையாக இருப்பதில்லை. உத்தியால் மரபுசார்ந்தும் பாடுபொருளாலும் கற்பனையாலும் புதுமை கூட்டியும் அமைந்துவிடுமானால் எந்தவொரு படைப்பிலக்கியத்திற்கும் தனித்தன்மை தானாகவே அமைந்துவிடும். பாவேந்தர் பாரதிதாசனின் பெரும்பாலான படைப்புக்கள் இவ்வாறு அமைந்தனவே. கவிஞர் கடவூர் மணிமாறன் படைத்திருக்கும் மாணாக்கர் ஆற்றுப்படையும் இதற்கோர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.  கல்வி சார்ந்த பொருண்மைகள் ஆற்றுப்படை நூல்களின் உள்ளடக்கமாக அமைந்ததற்குச் சமுதாய வரலாறு சார்ந்த மற்றொரு காரணமும் உள்ளது. பொதுவாக இந்தியாவில் சிறப்பாகத் தமிழகத்தில் கல்வியின் பெருமை உணரப்பட்டதும் அதற்கான உரிமை பெற்றதும் இருபதாம் நூற்றாண்டில்தான். அனைவருக்கும் கல்வி என்பதே இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் அமைந்த எந்த அரசுக்கும் கொள்கையாக அமைந்தது. படைப்பாளர்களும் கவிஞர்களும் சமுதாயத்தின் இந்தத் தேவையைத் தங்கள் படைப்பாற்றல் மூலம் வெளிப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மையாகும்.

    பரிசில் பெற்ற ஒருவர் பெறாத ஒருவரைக் குறிப்பிட்டதொரு வள்ளலை நோக்கி ஆற்றுப்படுத்துவதே ஆற்றுப்படையின் பொதுவிலக்கணம். அதாவது அவ்விருவரும் ‘வளத்தைப் பெற்றதையும் பெறாததையும் தவிர’வேறு எல்லா வகையினும் ஒரே தன்மையினராய் இருப்பர். இவ்வடிப்படையில் நோக்கினால், ‘மாணாக்கர் ஆற்றுப்படை’ மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறின்றி, ஆசிரியர் ஒருவர் மாணவர்களை ஆற்றுப்படுத்துமாறு அமைத்துக் காட்டியது ஆற்றுப்படை இலக்கணப் பொருண்மையை இன்னும் விரிவுபடுத்தியதாகக் கருதமுடியும்.

    ஆக்கம் நாடி அரும்பயன் தேடும்
    நோக்கம் மிகுந்தோர் ஒருங்கக் கூடுமின்!”

    என்னும் வரிகளால் மணிமாறனின் மாணாக்கார் ஆற்றுப்படையின் தனித்தன்மையைக் கீழ்க்கண்டவாறு வரையறுக்க முடிகிறது.

    1. ஆற்றுப்படுத்தும் ஆசிரியர் ஒருவராகவும் ஆற்றுப்படுத்தப்படும் மாணவர்கள் பலராகவும் இருப்பது
    2. ஆற்றுப்படுத்தப்படும் இடம், பாட்டுடைத்தலைவனின் திருவோலக்கத்திற்குப் பதிலாகக் கல்வி நல்கும் பள்ளியாக இருப்பது.
    3. கல்விக்காக வேற்றிடம் சென்று அல்லற்பட வேண்டாமென்று அறிவுறுத்துவது.

    மேற்கண்ட மூன்று கூறுகளால் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படை, ஏனைய ஆற்றுப்படைகளினின்றும் தனித்தும் சிறந்தும் விளங்குகிறது.

    பின்னத்தூராரின் ஒருவரும் மணிமாறனின் பலரும்

    இருபதாம் நூற்றாண்டின் முதல் ஆற்றுப்படை நூல் கும்பகோணம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த பின்னத்தூர் நாராயணசாமி அய்யரால் எழுதப்பட்டது. ‘மாணாக்கர் ஆற்றுப்படை’என்னும் பெயரால் 1900ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நூல் 335 வரிகளைக் கொண்டுள்ளது. நகராட்சிப் பள்ளியில் படித்து நன்னிலையில் உள்ள ஒருவர் கற்பதற்கு வசதியற்ற ஒரு மாணவனை, அப்பள்ளிக்கு ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனுள் தனிமனிதரிடம் ஆற்றுப்படுத்தும் தொல்காப்பிய மரபு புதுவடிவம் பெற்று, ஒரு நிலையத்தை நோக்கி ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ள புதுமைப் போக்கு நோக்கத்தக்கது. பின்னத்தூராரின் ஆற்றுப்படை உட்பட, ஆற்றுப்படை நூல்கள் அனைத்தும் ஒருவர் மற்றொருவரை ஆற்றுப்படுத்துவதாக அமைய, கடவூர் மணிமாறனின் மாணாக்கர் ஆற்றுப்படை, ஒருவர் பலரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கல்விப்பணியில் ஆசிரியர் ஒருவராகவும் மாணவர் பலராகவும் அமைந்துவிடுவது இயல்பாதலின், இத்தகைய அமைப்பு ஆற்றொழுக்கான உணர்ச்சி வெளிப்பாட்டுக்குத் துணையாகிவிடுவதைக் காணமுடிகிறது.

    திணைச்சிறப்பும் துறையமைதியும்

    புறத்திணைகளில் பாடாணும் காஞ்சியும் தனித்துவம் மிக்கன. நிலையாமையை எடுத்துக் கூறி அறத்தை முன்னிறுத்துவது காஞ்சியெனின், மனிதனின் விழுமியங்களை எடுத்துக்கூறி வீரத்தினும் அவை சிறந்தன என்னும் உண்மையை எடுத்துக் கூறுவது பாடாணாகும். அதாவது பாடாண் திணை என்பது மனிதனின் தலைமைப் பண்புகளாகிய அறிவு, ஆற்றல், தன்னலமறுப்பு, ஈகை, அன்பு, அருள் முதலிய பண்புகளைப் பாடுகின்ற திணை. மேற்கண்ட தனித்த இலக்கிய வரலாற்றை உள்ளடக்கிய ஆற்றுப்படை இலக்கியத்தின் கட்டமைப்பை ஓர் இலக்கியச் சான்று கொண்டு விளக்கி இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.

    பாடாண்திணை, புலவராற்றுப்படைத் துறையில் பொய்கையார் பாடியதாக ஒரு பாட்டு புறநானூற்றில் காணப்படுகிறது. இந்தப் பாட்டில் இன்னின்ன வளமுடையது எம்மூர். அவ்வூரை ஆள்கிறவன் இவன் எம் மன்னன். அவனிடம் சென்று பரிசு பெறுகிறபோது வழிகாட்டிய என்னை மறந்துவிடாதே’ எனச் சொல்வது போல் அமைத்திருக்கிறது. .

    நாட்டுவளத்தைக் குறிப்பாக வண்ணனைச் செய்கிறார் புலவர். வளமில்லாதவன் வள்ளலாகத் திகழ்வது இயலாது ஆதலின் அது முதலில் கூறப்படுகிறது. மலர்களை வைத்து வளத்தைக் கூறுகிறார் பொய்கையார். கோதையாகிய சேரனைக் கோதையாகிய பெண்கள் தழுவுகிறார்கள். அவ்வாறு தழுவுகிற பெண்களைக் கோதைகள் (மாலைகள்) தழுவுகின்றன.

    கோதை மார்பிற் கோதை யானும்
    கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்

    என்று கோதை என்ற சொல்லைச் சேரனுக்கும் மங்கையர்க்கும் மலர்களுக்கும் ஆக்கிப் பாடுகிறார். கரிய கழிகளில் பூத்த நெய்தல் மலர்களாலும் தேன் நாறுகின்ற தொண்டி என்பார்.

    மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
    கள் நாறும்மே கானலந் தொண்டி

    என்று பாடுகிறார். கோதை ஆள்கிற சிறப்பும், அவனைத் தழுவுகிற மாதர்ச் சிறப்பும், மாதரைத் தழுவுகிற மாலையின் சிறப்பும், கழியில் மலர்ந்த நெய்தல் சிறப்பும் வழிகாட்டுகிற பொய்கையாருக்குத் தற்போது சேய்மையாதலின் அந்த ஊர்தான் தன்னுடைய ஊர் என்று புலவரிடம் கூறுகிறாராம்.

    அஃது எம் ஊரே!’

    என்பது புலவர் மொழி!. ‘அந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆளுகிற கோதை மார்பன் தன்னுடைய அரசன்’ என்பதை,

    அவன் எம் இறைவன்!’

    எனப் பாடுகிறார். இந்த இடத்தில் மன்னன் என்னாது இறைவன் எனப் புலவர் சொல்லியதற்கு ஒரு காரணம் உண்டு. அரசநீதி செலுத்துகிற இடத்தில்தான் அவன் மன்னன் அல்லது அரசன். புரவலனாக மாறிப் புலவர்களுக்கு உதவுகிறபோது அவன் இறைவன் என்பது குறிப்பு. ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்பது நோக்குக.

    ‘அன்னோன் படர்தி’

    என்று முன்னிலையில் ஆற்றுப்படுத்துகிறான். ஒருவேளை இரவலனுக்கு விருப்பமில்லாவிடின், என்ன செய்வது? ‘படர்தியாயின்’ என்னும் ஐயக்கிளவியால் ‘சென்றால் பெறலாம்’ என்பதோடு நிறுத்திக் கொள்கிறான்.

    எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல!
     அமர் மேம்படூஉங் காலை நின்
    புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனவே!”

    என்னும் இறுதி வரிகளில் “புலவரே! அவனைக் கண்டால் காணுமிடத்து போர்க்களத்தில் நீ அடைந்த மேம்பாட்டைப் பாடி நின் புகழை மேம்படுத்தியவனைக் கண்டேன்” என்று என்னையும் நினைப்பாயாக” என்று பொய்கையார் பாடுகிறார்.

    கோதை மார்பிற் கோதை யானும்
    கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்
    மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
    கள் நாறும்மே கானலந் தொண்டி
    அஃது எம் ஊரே! அவன் எம் இறைவன்!
    அன்னோர் படர்தி யாயின் நீயும்
    எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல!
    அமர் மேம்படூஉங் காலை நின்
    புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனவே!” (புறம். 68)

    ஆற்றுப்படுத்தப்பட்ட மன்னனின் வரலாறு மருட்சியை ஏற்படுத்துகிறது.    கோதை மார்பன் என்பவன் சேர மன்னருள் ஒருவன். இவனுக்கும் மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்த பழையன்மாறன் என்பவனுக்கும் பகைமை இருந்தது. கிள்ளிவளவன் என்ற சோழ மன்னன் பழையன் மாறன் என்பவனைப் போரில் வென்றான். அதாவது சேரனுக்கும் பாண்டியனுக்கும் பகையாம். ஆனால் சோழன் பாண்டியனை வெல்கிறானாம். அதனால் சேரன் மகிழ்ந்தானாம்.

    நெடுந் தேர்,
    இழை அணி யானைப் பழையன் மாறன்,
    மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
    வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
    கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
    கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
    ஏதில் மன்னர் ஊர் கொள,
    கோதை மார்பன் உவகையின் பெரிதே. (அகநானூறு 345)

    தமிழன் ஒற்றுமை எவ்வளவு உயர்ந்ததாகப் பாடப்படுகிறது பார்த்தீர்களா????? ‘‘பாண்டியன் ஏதில் மன்னராம்’!. அவ்வாறு மகிழ்ந்த சேரனிடத்துப் புலவர் பொய்கையார் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது இந்தப் பாடல். “தலைவனது ஊரையும் இயல்பையும் கூறிமுதுவாய் இரவல எம்மும் உள்ளெனத் தம் தலைமை தோன்றக் கூறினமையின் இது புலவராற்றுப்படை ஆயிற்றுஎன்னும் பாடலின் பின் குறிப்பு புலவர்களின் செம்மாந்த மனநிலையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

    ஆற்றுப்படையை அறிந்தால் அனைத்தும் அறியலாம்.

    படித்துக் கெட்டவர்கள் யாருமிலர். படிக்காமல் கெட்டவர்கள் இருக்கக் கூடும். எனவே இலக்கியச் சுவையுணர் திறனும், இலக்கிய ஆய்வுத் திறனும் கைவரப் பெற்றவர்கள் ஒரு நூலைப்பற்றிய தோற்றத்தையும் வளர்ச்சியையும் அறிந்து கொண்டால் அவ்விலக்கியத்தை முற்றும் அறிந்ததாகக் கருதப்படுவர். இசை, கூத்து என்னும் நுண்கலைகள் எவ்வாறு பழந்தமிழகத்தில் போற்றப்பட்டன என்பதையும் கலைஞர்கள் எவ்வாறு ஆட்சியாளர்களால் மதிக்கப் பெற்றனர் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அழுக்காறு அறியா அக்காலக் கலைஞர்களின் அகவழகையும் மக்கள் வாழ்வியல் நுட்பங்களைக் கவிதையாக்கும் பழந்தமிழ்ப் புலவர் பெருமக்களின் புலமைத்திறத்தையும் அறிந்து கொள்ள முடியும். வாரி வழங்கும் மன்னர்கள் ஆண்ட திறத்தையும் அவர்தம் வள்ளன்மையைப் பாடிப் புகழ்ந்த இரவலர்கள் மற்றும் புலவர்களின் நன்றியுணர்ச்சியையும் அறிந்து கொள்ளலாம். சுருங்கச் சொன்னால் சங்கக் காலம் தமிழகத்தின் பொற்காலம் என்பதற்கான சான்றுகளில் ஆற்றுப்படை இலக்கியச் சான்றுகள் தனித்துவம் மிக்கன.   

    நிறைவுரை

    இலக்கியக் கூறுகளில் காலத்திற்கேற்பக் கருத்துக்களும் பாடுபொருளும் வடிவமும் மாறுபடும். ஆனால் கற்பனையும் உணர்ச்சியும் மாறுபடாது. அவை புதுமையாகவும் அடர்த்தி வேறுபாட்டோடும் வெளிப்படும். தமிழ்க்கவிதைகளைப் பொருத்தவரை ஹைக்கூ, லிமரைக், சென்ட்ரியூ என ஜப்பானிய இறக்குமதிக் கவிதை வடிவங்களைப் பயன்படுத்திப் படைப்புத் தொழிலைச் செய்ய எத்தனிக்கிறோம். இந்த மண்ணின் மரபுக்கேற்ற இலக்கியங்களை அத்தகைய வடிவங்கள் முழுமையாக்குமா என்பது ஐயமே!  ஆற்றுப்படை ஓர் இலக்கிய வடிவம். இலக்கிய வடிவங்களைப் பொருத்தவரையில் தொல்காப்பியம் நெகிழ்ச்சியுடையது. அந்த அடிப்படையில் தற்காலத்திற்கேற்பத் திருத்தலங்களை நோக்கியோ, புகழ்மிகு கல்வி நிலையங்களை நோக்கியோ, அறிஞர்களின் இல்லம் நோக்கியோ கவிஞர்களின் இருக்கை நோக்கியோ ஆற்றுப்படை இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். நிலைமை அவ்வாறில்லை. பழைமையில் புதுமை தேக்குகின்ற முயற்சி பாரதி, பாரதிதாசனோடு முடிவடைந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறின்றி ‘இன்று ‘புதிதாய்ப் பிறந்தோம்” என்று இலக்கியங்களும் மகிழ வேண்டும் என்றால் ஆற்றுப்படை முதலிய பழந்தமிழ் வடிவங்கள் தற்காலக் கவிஞர்களின் சிந்தனையிலும் கணிப்பொறியிலும் எழுதுகோலிலும் நர்த்தனம் புரிதல் வேண்டும்.

    துணை செய்த நூல்கள்

    1. கடவூர் மணிமாறன் மாணாக்கர் ஆற்றுப்படை, விடியல் வெளியீட்டகம்,109, மேலத்தெரு, கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம்.

    2. ஒளவை துரைசாமிப்பிள்ளை புறநானூறு மூலமும் உரையும், தெ.இ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,  சென்னை. மறுபதிப்பு – 1967.

    3. துரை. அரங்கனார் கருவிலே திருவுடையான், மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக்கோபுரத் தெரு, மதுரை – 1, இரண்டாம் பதிப்பு – 1964.

    4. தொல்காப்பியர்    தொல்காப்பியம் – பொருளதிகாரம், கு.சுந்தரமூர்த்தி (ப.ஆ.), 14, தெற்குத் தெரு, திருப்பனந்தாள் அஞ்சல், தஞ்சை மாவட்டம், இரண்டாம் பதிப்பு – 1970

    5.    நக்கீரர் நெடுநல்வாடை, தி.தெ.இ.சை.சி.நூ.ப.கழகம் லிமிடெட், சென்னை, மூன்றாம் பதிப்பு – 1955

    6.   மர்ரே பதிப்பகம் 1955இல் வெளியிட்ட பாட்டும் தொகையுமாகிய தொகுப்பு நூல்கள்.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் ஆற்றுப்படை இலக்கியம் – ஒரு வரலாற்றாய்வு’  என்னுந்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு 

    1. ‘வாய்மொழி இலக்கியங்கள் படைப்பிலக்கியங்களாகப் பரிணாமம் பெறும்’ என்னும் இலக்கிய வரலாற்றின் நுண்ணியத்தைச் சிறப்பாக அணுகியிருக்கும் கட்டுரையாசிரியர். ஆற்றுப்படை இலக்கியத்தைச் சரியான தளத்தில் வைத்து ஆராய முயன்றிருக்கிறார். 
    1. பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் எழுதும் இலக்கிய வரலாறு என்பது குறிப்பிட்ட நூலின் உள்ளடக்க அமைதியைப் பந்திவைப்பதாகவே அமைந்துள்ளதை அனைவரும் அறிவர். இவர் ‘வரல் ஆறு’ என்பதற்கேற்ப நூல் வந்த மூலத்தையும் நடந்த தடத்தையும் கண்டறிவதையே இலக்கிய வரலாறாகக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது நோக்கத்தக்கது. 
    1. பாடாண் திணை  மற்றும் ஆற்றுப்படைத் துறை முதலியன பற்றிய விளக்கத்தையும், சங்கக் காலத்திற்குப் பிறகு தவளைப் பாய்ச்சலாக ஆற்றுப்படை இலக்கியம் அமைந்து போனது என்பதையும் தக்க சான்றுகளுடன் நிறுவுகிறார். 
    1. ஏனைய ஆற்றுப்படைகளிலிருந்து திருமுருகாற்றுப்படை வேறுபடும் நுண்ணியத்தைப் பதிவிடும் ஆசிரியர் அதுபோன்றதொரு விளக்கத்தை ‘மாணாக்கர் ஆற்றுப்படைக்கும்’ தந்து சமன்செய்து சீர் தூக்கும் கோல்போல் இலக்கியத் தரநிர்ணயத்தைச் செய்வது .ஆய்வுக்குத் தேவையான நடுநிலைப் பண்பைப் புலப்படுத்துவதாக அமைகிறது. 
    1. வரலாற்றை முன்னே சொல்லி, புலவராற்றுப்படையில் அமைந்த ஒரு பாட்டைப் பின்னே சொல்லி விளக்கியிருப்பது ‘இலக்கணம் கண்டதற்கு இலக்கியமாக’ மாறுபட்டதொரு சுவையினைத் தருகிறது. 
    1. பல ஆற்றுப்படை நூல்களைப் பற்றிய விளக்கமும் பட்டியலும் கட்டுரையாசிரியரின் உழைப்பையும் பொறுப்புணர்வையும் உணர்த்துவதாக உள்ளது.


    Share
  • கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா?

    கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா?

    கனடாவில் வெறுப்புக் குற்றச் செயல்களும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. எனவே இந்தியர்கள் கனடாவில் பயணிக்கும் போதும் படிக்கும் போதும் எச்சரிக்கையோடும் விழிப்போடும் இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தத் திடீர் அறிக்கையின் பின்னணி என்ன? கனடாவில் இந்தியர்களுக்கு ஆபத்தா? கனடாவின் கள நிலவரம் என்ன? கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் உடன் ஓர் உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் ராஜேஷ்

    நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் ராஜேஷ்

    ஒவ்வொரு பொம்மைக்குப் பின்னும் கலைஞர் ஒருவரின் உழைக்கும் கைகளும் படைப்பூக்கமும் கற்பனை வளமும் இருக்கின்றன. காஞ்சிபுரம் பொம்மைக் கலைஞர் ராஜேஷ் கைவண்ணத்தில் உருப்பெற்றுள்ள பொம்மைகளைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(418)

    குறளின் கதிர்களாய்…(418)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(418)

    செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
    னுய்யா விழுமந் தரும்.

    -திருக்குறள் -313(இன்னா செய்யாமை)

    புதுக் கவிதையில்…

    தாம் தீமையேதும்
    செய்யாத நிலையில்,
    தமக்குத் தீங்குசெய்வோர் மீது
    சினந்து எதிர்த்துத்
    தீங்கு செய்யும்
    துறவறத்தார் தமக்கு,
    தீங்கதுவே மீளமுடியாத்
    துன்பத்தையே தந்திடும்…!

    குறும்பாவில்…

    தீமையேதும் செய்யாதபோதும் தீமைசெய்வோரை
    எதிர்த்துத்துத் தீங்குசெய்யும் துறந்தார்க்குத் தீங்கதுவே
    மீளவியலாத் துன்பத்தைத் தந்திடுமே…!

    மரபுக் கவிதையில்…

    சற்றும் தீமை செயாதபோதும்
    சார்ந்தே இடரைத் தருந்தீயோர்
    பெற்றே வருந்திக் கலங்கிடவே
    பெரிதாய்த் தீங்கு செய்கின்ற
    முற்றும் துறந்த பெரியோர்க்கே
    முயன்றே செய்யும் தீங்கதுவே
    சற்றும் மீள வழியிலாத
    சதியாம் துன்பம் தந்திடுமே…!

    லிமரைக்கூ…

    தீமைசெயாமலே செய்வார் தீங்கு,
    அவரொறுக்கத் தீமைசெயும் துறவோர் தமக்கே
    அளவிலாக் கேடுவருமே ஆங்கு…!

    கிராமிய பாணியில்…

    செய்யாத செய்யாத
    கெடுதல் செய்யாத,
    அடுத்தவங்களுக்கு ஒருநாளும்
    கெடுதல் செய்யாத..

    ஒருத்தருக்கும் தீமசெய்யாதபோதும்
    நமக்குக் கெடுதல் செய்றவங்களுக்கும்
    கெடுதல் செய்யாம
    இருக்கிறதே ஒசந்த கொணம்,
    அப்புடியில்லாமக் கெடுதல் செய்யிறவன்
    தொறவியாயிருந்தாலும்,
    அவனுக்கு அந்தக் கெடுதலால
    மீளமுடியாத துன்பந்தான் வருமே..

    அதால
    செய்யாத செய்யாத
    கெடுதல் செய்யாத,
    அடுத்தவங்களுக்கு ஒருநாளும்
    கெடுதல் செய்யாத…!

    Share
  • திருப்பதி மலைமேல் இருப்பவனே

    திருப்பதி மலைமேல் இருப்பவனே

    பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமையில், ‘திருப்பதி மலைமேல் இருப்பவனே’ என்ற பாடலை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் திலகா

    நவராத்திரி கொலு பொம்மைகள் 2022 | காஞ்சிபுரம் திலகா

    காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு, இந்த ஆண்டும் களை கட்டியிருக்கிறது. களிமண் பொம்மைக் கலைஞர் திலகாவின் கைவண்ணத்தில் மின்னும் புத்தம் புதிய பொம்மைகளைக் கண்டு களியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பூகோளம் முன்னிலைக்கு மீளாது

    பூகோளம் முன்னிலைக்கு மீளாது

    சி. ஜெயபாரதன், கனடா

    காலவெளி  கார்பன்  வாயு கலந்து
    கோலம் மாறிப் போச்சு !
    ஞாலத்தின் வடிவம்
    கோர மாச்சு !
    நீர்வளம் வற்றி
    நிலம் பாலையாச்சு !
    துருவத்தில்
    உருகுது பனிக் குன்று !
    உயருது
    கடல்நீர் மட்டம் !
    பூகோளம் சூடேறி
    கடல் உஷ்ணமும் ஏறுது !
    காற்றின் வேகமும் மீறுது !
    பேய்மழை
    நாடெல்லாம் பெய்து
    வீடெல்லாம் வீதியெல்லாம் மூழ்குது !
    வெப்ப யுகத்தில்
    காடெல்லாம் எரிந்து
    கரிவாயு
    பேரளவு பெருகுது !

    பூமியே மாறிப் போச்சு
    மீளா நிலைக்கு !
    பூகோளம் முன்னிலைக்கு
    மீண்டும் மீளாது !
    வேலை போச்சு !
    கூலி போச்சு !
    நோய் நொடிகள்
    தாக்க,
    மக்கள் அனாதைகள் ஆகிப்
    புலப்பெயர்ச்சி !
    இப்போ
    வெப்ப யுகப் பிரளய
    வேளையில்
    நாமென்ன செய்யலாம்
    நாட்டுக்கு ?

    ஊருக்கு ஊர் தேவை ;
    ஓராயிரம்
    தன்னார்வத்தில் தாவி வரும்
    முன்னுதவிப் படை,.
    ஒரு நூறு
    முதல் உதவிப் படை
    பன்னூறு
    பின்னுதவிப் படைகள்.
    ஊர்ச் செல்வர்
    உண்டி, வாகனம், ஆயுதங்கள்,
    கருவிகள்
    தங்கு விடுதிகள்  தயார்
    செய்வதற்கு.
    பேரிடர் பாதுகாப்பு
    கண்காணிப்பு.
    முதற்கண் தேவை.

    பூமி சூடாகி வாழ இயலாது
    போராட்டம்
    நடக்குது !
    நாமென்ன செய்யலாம்
    நாட்டுக்கு ?

    பெட்ரோல்
    விலை ஏறுது !
    உணவைக் குறைத்து
    உடல் எடை பெருக்காது,
    ஓட்டு
    பெட்ரோல் கார்களை.
    உயரத்தில் பற தேவைப்படின்
    ஜெட் விமானத்தில்.
    பயணத்தைக் குறைப்பாய் !
    பேருந்து, ரயிலில்
    பயணம் செய்வாய்.

    நிலக்கரி, எரிவாயு எரிசக்தி
    பயன்பாடு
    அவசரத் தேவைக்கு மட்டும்.
    கவனமாய் இயக்கு
    அணுமின் சக்தி நிலையம்.
    விலை மிகை ஆயினும்
    யுரேனிய உலோகம் பேரளவு
    கிடைக்குது.
    தேவையான தீங்கு !

    தொழிற்சாலையில் வேலைகள்
    உண்டு
    பலருக்கு, ஆயினும்
    கரிவாயு வெளிவீச்சைக்
    குறை, குறை,
    குறை படிப்படியாய் !
    கரிவாயுவை
    விழுங்கும், மாற்றும்
    இரசாயன முறைகளை ஆய்ந்து
    கண்டுபிடி.
    தண்டனை உண்டு
    தவறிடும்  அதிபருக்கு !

    பச்சை எரிசக்தி சாதனங்கள்
    வாகனங்கள்
    நாட்டில் பெருக இயங்க
    நாளாகும்,
    பத்து, இருபது ஆண்டுகள்
    ஆகலாம் !

    Share
  • சுவரில் ஒரு தோட்டம்!

    சுவரில் ஒரு தோட்டம்!

    தோட்டம் அமைக்கத் தனியே இடம் தேவையில்லை. ஒரு சுவரே போதும். நாம் தூக்கி எறியும் தண்ணீர்ப் புட்டிகளையே வைத்து, ஓர் அழகான தோட்டத்தை அமைக்க முடியுமா? முடியும் எனக் காட்டியுள்ளது, சென்னை அம்பத்தூரில் உள்ள என்.சி.எச். நிறுவனம். இவர்களின் புது முயற்சியைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 55

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 55

    -மேகலா இராமமூர்த்தி

    தன் குலத்தைக் காக்கும்பொருட்டு இராவணனோடு இணைந்து வாழ்வாயாக என்று சீதையிடம் மன்றாடிய மாயாசனகனைக் கண்டு கடுங்கோபம் கொண்ட சீதை, ”பேசத் தகாத வார்த்தைகளை நீ பேசினாய்; இராமனால் காப்பாற்றப்பட்டால் உயிர்வாழ்வாய் அல்லது இறந்தொழிவாயாக!” என்று ஏசினாள்.

    அப்போது சீதையை மேலும் அச்சுறுத்தும் வகையில் மாயாசனகனைத் தான் கொல்லப்போவதாக வாளை உருவினான் இராவணன். அதுகண்டு அஞ்சாத சீதை, ”உன்னால் என்னையும் கொல்லமுடியாது; (மாயாசனகனைச் சுட்டிக்காட்டி) இவனையும் கொல்லமுடியாது; இராமனின் அம்புக்கு நீயோ உன் உறவுகளோ பிழைத்திருக்கப்போவதில்லை” என்றாள் அலட்சியமாக.

    அதுகேட்டு மாயாசனகனைக் கொல்லப் பாய்ந்த இராவணனைத் தடுத்த மகோதரன், ”இவன் உனக்கு இழைத்த தீங்கென்ன? எதற்காக இவனைக் கொல்லவேண்டும்? பகைவனாகிய இராமனை நீ வெற்றிகொண்டால் தானாகச் சீதை உன் வசமாவாள்” என்று கூறி அவ்விடத்திலிருந்து இராவணனை நகர்த்திச் சென்றான்.

    அவ்வேளையில், வானரப் படையின் ஆர்ப்பும் வானவரின் ஆர்ப்பும் இராவணனின் செவிகளில் விழ, ”தம்பி போர்க்களத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளானோ? அதனால்தான் இந்த ஆர்ப்பொலியோ?” என்று சிந்தித்தான். போர்க்களத்திலிருந்து விரைந்துவந்த தூதுவர் கும்பகருணன் இறந்த செய்தியை இராவணனுக்குத் தெரிவித்தனர். அதுகேட்ட இராவணன் அதிர்ச்சியடைந்து நிலத்தின்மேல் வீழ்ந்தான். ஈருடலும் ஓருயிருமாய் வாழ்ந்திருந்த தங்கள் சகோதர பாசத்தை எண்ணி,

    ”நீ எனக்கு தம்பி மட்டுந்தானா? தேவர்களாகிய தாமரைக் காட்டைக் கலக்கி அழிக்கும் மதயானை போன்றவனே! நான்முகன் பிரமனின் மகனாகிய புலத்தியன் மகனாகிய விச்சிரவசுவின் வழித் தோன்றலே! ஆடவர்குல திலகனே! இந்திரனின் புகழுக்குக் காரணமான நல்வினைப் பயனைத் துடைத்த என் தம்பியே! நான் உன்னைப் பற்றி இவ்வாறான சொற்களைக் கேட்கும்படி ஆனேனே!” என்று பெருங்குரலெடுத்து அரற்றினான்.

    தம்பியோ வானவராம் தாமரையின் காடு உழக்கும்
    தும்பியோ நான்முகத்தோன் சேய்மதலை தோன்றாலோ
    நம்பியோ இந்திரனை நாமப் பொறி துடைத்த
    எம்பியோ யான் உன்னைஇவ் உரையும் கேட்டேனோ.
    (கம்ப: மாயாசனகப் படலம் – 7709)

    ”வலிமைமிகு தோளனே! நீ குளிக்கும்போது உன் பாதங்களைத் தேய்க்க வடக்கிலுள்ள மேருமலையன்றோ கல்லாய்ப் பயன்படும்? அத்தகு பெருவீரனான நீ, சாதாரண மானுடர்களின் அம்புக்கு இரையாகி மாண்டாய் எனும் சொல் என்னை வேதனையில் ஆழ்த்துகின்றதே!” என்றான் துயரத்தோடு.

    கும்பகருணன் இறந்த செய்தியையும், அதுகேட்டு இராவணன் அரற்றிக்கொண்டிருப்பதையும் கண்ட சீதை உவகை கொண்டாள். அப்போது மந்திரிகள் தேற்ற அங்கிருந்து அகன்று சென்றான் இராவணன்.

    சீதையின் அருகில்வந்த திரிசடை, அங்கே மாயாசனகனாக வந்துநின்றவன் மாயங்கள் செய்வதில் வல்லவனான மருத்தன் எனும் அரக்கன்; உன் தந்தையல்லன் என்ற உண்மையை உணர்த்தச் சீதை நிம்மதியடைந்தாள்.

    அரண்மனைக்குச் சென்ற இராவணன் தன் தம்பிக்குத் துணைநின்று அவனைக் காக்காது களபலி கொடுத்துவிட்டு வந்திருக்கும் தன் அமைச்சர் முதலானோரைப் பார்த்து, ”போரில் வெல்ல இயலுமென்றால் போருக்குச் செல்லுங்கள்! இல்லை எங்களால் போர்க்களத்தில் பகைவனிடம் அடிபட்டுச் சாகத்தான் முடியும் என எண்ணுதிராயின் போருக்கே போகவேண்டாம்; உங்கள் கருத்தைக் கூறுங்கள்!” என்றான் கடுஞ்சினத்தோடு.

    அதுகேட்டு இராவணனின் வீரமகன் அதிகாயன் எழுந்து,

    “உன் தம்பியின் உயிருக்கு இறுதி செய்தவனான இராமனின் தம்பி உயிருக்கு அழிவுசெய்து அவனுக்கு நடுக்கந்தரும் வன்துயரைச் செய்யாமல் போவேனாயின் ஆடவரில் சிறந்தவனான உனக்கு நான் மகனல்லன்!” என்று வெஞ்சினத்தோடு வஞ்சினம் உரைத்தான். [இவன் இராவணனுக்கும் அவனுடைய இரண்டாவது மனைவி தான்யமாலிக்கும் பிறந்தவன். அதிகாயன் என்ற சொல்லுக்குப் பேருடல் படைத்தவன் என்ற பொருள்.]

    உம்பிக்கு உயிர்ஈறு செய்தான் ஒருவன்
    தம்பிக்கு உயிர்ஈறு சமைத்து அவனைக்
    கம்பிப்பது ஓர் வன்துயர் கண்டிலனேல்

    நம்பிக்கு ஒருநன் மகனோ இனிநான். (கம்ப: அதிகாயன் வதைப் படலம் – 7737)

    ”நன்று சொல்லினை மைந்தா! நீ இலக்குவனின் உயிரை முடித்தால் அதன்பின்பு நான் அந்த இராமனின் உயிரை முடிப்பேன்” என்றுரைத்துப் பெருஞ்சேனையோடு அதிகாயனைப் போர்க்களத்துக்கு அனுப்பினான் இராவணன்.

    களத்தில் சிறிய தந்தை கும்பகருணனின் தலையற்ற உடலைக்கண்டு வருந்திய அதிகாயன், மயிடன் எனும் அரக்கனை அழைத்து ”இலக்குவனிடம் சென்று என்னோடு பொருத வரச்சொல்!” என்று புகன்றான்; அதனை நிறைவேற்ற மயிடன் விரைந்து அங்கிருந்து அகன்றான்.

    இராம இலக்குவர் இருக்குமிடம் சென்ற மயிடன், இலக்குவனிடம் அதிகாயனின் உட்கிடையை உரைக்க, இலக்குவனைத் தழுவிப் போருக்குச் செல் என்று விடைகொடுத்தான் இராமன்.

    ”பெருவீரனான அதிகாயனுடன் இலக்குவனைப் போர்புரியத் தனியே அனுப்பலாகாது; நாமும் துணை செல்வோம்” என்றான் வீடணன். அதுகேட்டு முறுவலித்த முகில்வண்ணன் இராமன், ”எண்ணாயிரங்கோடி இராவணரும், விண்ணோரும் மண்ணோரும், நெருங்குதற்கரிய மும்மூர்த்திகளும் போருக்கு வந்தாலும் அவர்களையும் எதிர்க்கவல்ல ஆற்றல்வாய்ந்த என் தம்பியின் வில்லாற்றைக் கண்ணால் காண்பாய்!” என்றான்.

    எண்ணாயிர கோடி இராவணரும்
    விண்நாடரும் வேறுஉலகத்து எவரும்
    நண்ணா ஒருமூவரும் நண்ணிடினும்
    கண்ணால்இவன் வில்தொழில் காணுதியால். (கம்ப: அதிகாயன் வதைப் படலம் – 7803)

    அரக்கர் சேனைக்கும் குரக்குச் சேனைக்கும் பெரும்போர் தொடங்கிற்று. தேரிலிருந்து அதிகாயன் போரிட, இலக்குவனைத் தன் தோளில் தாங்கிக்கொண்டு போரிட உதவினான் அங்கதன். அனுமனும் இலக்குவனோடு இணைந்து போரிட்டு அரக்கர் படையை அழித்தான்; திரிசிரன் (முத்தலையன்) எனும் இராவணனின் மற்றொரு மைந்தனைத் தேய்த்துக் கொன்ற அனுமன், போரிடுவதற்கு மேற்கு வாயில் நோக்கிப் போயினான். அனுமனின் செயல்கண்டு விக்கித்துப் போன அதிகாயன், இலக்குவனோடு போர்புரிய முனைந்தபோது, இலக்குவன் அவனைப் பார்த்து, “எறிதற்குரிய படைக்கலங்கள் வைத்துள்ள உன் சேனைகள் எல்லாம் அழிந்தபின்பு நீ போர் செய்வாயா? நீ மட்டும் தனித்து என்னோடு நெடிய போரினைச் செய்வாயா? உன் விருப்பமென்ன?” என்று வினவினான்.

    மன்னவன் தம்பி மற்றுஅவ் இராவணன் மகனை நோக்கி
    என்உனக்கு இச்சை நின்ற எறிபடைச் சேனை எல்லாம்

    சின்னபின்னங்கள் பட்டால் பொருதியோ திரிந்து நீயே
    நல்நெடுஞ் செருச் செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான்.
    (கம்ப: அதிகாயன் வதைப் படலம் – 7913)

    ”உன்னை நான் போருக்கழைத்தது தனியாகப் போரிட்டு வெல்லத்தான்!” என்று அதிகாயன் உரைக்கவும், குறுநகை சிந்திய இராமனின் இளவல் அதிகாயனோடு போரைத் தொடங்கினான். வானும் நிலனும் கடலும் அதிகாயனின் பகழிகளால் நிறைந்தன; இவன் கொலைத் தொழில் கற்றது காலனிடமோ என்றஞ்சும்படி வானர சேனையைக் கொன்று குவித்தான் அவன்.

    இலக்குவனின் அம்புகள் அதிகாயனின் மார்பைத் துளைத்தபோதும் அவற்றுக்குச் சற்றும் சளைக்காதவனாய்த் தன் அம்புகளை மாரிபோல் தொடர்ந்து சொரிந்தான் அதிகாயன்.

    இலக்குவன் அம்புகளைத் தொடர்ந்து எய்தும் அதிகாயன் வீழ்ந்துபடவில்லை; அப்போது இலக்குவன் அருகில் தோன்றிய காற்றரசன் (வாயுதேவன்) நான்முகன் படையாலன்றி (பிரம்மாத்திரம்) இவன் சாகமாட்டான் என்பதை அவனுக்குரைக்க, ”நன்று” என்று உவந்த இலக்குவன், நான்முகன் படையைத் தன் அம்போடு சேர்த்துச் செலுத்த, அஃது அதிகாயனின் தலையைக் கொய்துகொண்டு ஆகாயவழியில் சென்றது. அதன்பின்னர் அங்கதன் தோளினின்று இறங்கினான் இலக்குவன்.

    அப்போது அதிகாயனின் தம்பி நராந்தகன் இலக்குவனோடு போர்புரிய வாளோடு வந்துவிட, இடைபுகுந்த அங்கதன் அவன் கை வாளினாலேயே அவனை வீழ்த்திக் கொன்றான்.

    அதிகாயன் உள்ளிட்ட அரசகுமாரர்கள் இறந்த செய்தியைத் தூதர்கள் வாயிலாய் அறிந்த இராவணன், ஆற்றொணாத் துயரில் ஆழ்ந்தான். தன் மகன் இறந்த செய்தியை அறிந்த அதிகாயனின் தாய் தான்யமாலி இராவணனின் தாள்களில் வீழ்ந்து புரண்டழுதாள்.

    அவள் அரற்றக் கண்டு மௌனமாய் அமர்ந்திருந்த இராவணனைப் பார்த்து, ”என்ன ஐயா சிந்தித்திருக்கின்றாய்? இறந்துபோன அரக்கர்களையெல்லாம் திரும்பிவருமாறு கூப்பிடமாட்டாயோ? காமத்தைக் கைக்கொண்ட நீ உயிர்பிழைப்பாயோ? இன்னமும் இந்தச் சீதை காரணமாய் இன்னும் வரவிருக்கும் துன்பங்கள் சிலதானோ? (இல்லை பல!) என்று கனன்றுரைத்தாள்.

    இலங்கை மாநகரெங்கும் அழுகுரல் ஒலித்தது. அது முழுமதி நாளில் தோன்றும் கடலோசையை ஒத்திருந்தது. ஊரெங்கும் ஒலித்த அரக்கியரின் அவலக்குரல் கேட்டு, ”இராவணனுக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ?” என்று ஐயுற்று அவன் அரண்மனை அடைந்தான் இந்திரசித்தன். அங்கே இராவணனைக் கண்டு ஒருவாறு மனந்தேறியவன், ”ஏனிந்த அழுகுரல்? என்னவாயிற்று?” என்று ஐயத்தோடு வினவினான்.

    அதிகாயன் உள்ளிட்ட உன் தம்பியர் உயிரைக் காலன் கவர்ந்து சென்றுவிட்டான்” என்று இராவணன் உரைக்கவும், ”போர்க்களத்தில் அவர்களைக் கொன்றது யார்?” என்று கேட்டான் இந்திரசித்தன். ”அதிகாயனை இலக்குவனும் அவன்பின்னால் நின்றிருந்த கும்பநிகும்பரை அனுமனும் கொன்றனர்” என்றான் இராவணன் வேதனையோடு.

    கடுங்கோபத்தோடு தந்தையை நோக்கிய இந்திரசித்தன்,

    ”அரசே! வலிமைமிகு குரங்குப் படையை உடைய மானிடராகிய இராமலக்குவரின் போர்வன்மையை நீ முதல்நாள் போரில் அறிந்திருந்தும் அவர்களோடு போரிட என்ன காரணத்தாலோ என்னை ஏவவில்லை; அதனால் எம்பியரைக் கொன்றவர் அவரில்லை; இவர்களைக் கொலைசெய்யுங்கள் என்று நீயே கொடுத்தாய்; அவர்கள் இறந்துபட்டதால் நம் வலிமை குறைந்துவிட்டது” என்றுரைத்து நீண்டநேரம் அதனையே நினைந்து சினத்தோடு நெருப்புப்போல் பெருமூச்சு விட்டுநின்றான் இந்திரசித்தன்.

    கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய்
    வன்தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா
    என்றானும் எனைச்செல ஏவலை இற்றது என்னா
    நின்றான் நெடிதுஉன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான்.
    (கம்ப: நாகபாசப் படலம் – 8008)

    ”போனதை நினைத்து வருந்தியும் உன்னைக் குறைசொல்லியும் இனியென்ன பயன்?” என்று இராவணனிடம் கூறிய இந்திரசித்தன், என் தம்பி அதிகாயனைக் கொன்ற இலக்குவனின் உயிரை அவன் உடலிலிருந்து பிரிக்காமல் இனி இலங்கை திரும்பேன்! அதைச் செய்யாது போவேனேல் உயிர்வாழேன்!

    சாவாமருந்து (அமுதம்) போன்றவனாகிய என் தம்பி அதிகாயனின் அரிய உயிரைக் கவர்ந்த இலக்குவனை எமனுக்கு விருந்தாக்காமல் வானவர் நகைக்குமாறு நான் போர்க்களத்தில் வில்லை ஏந்தி நிலத்தில் நின்றேனேல் நான் இராவணன் மகனல்லன்!” என்று வஞ்சினமுரைத்துப் பல்லாயிரங் கோடிப் படைக்கலங்களோடு பேய்க்கொடி பறக்கும் தேரிலேறி ஆறாச்சினத்தோடு போர்க்களத்துக்குப் புறப்பட்டான்.

    அங்கே போர்க்களத்தைவிட்டு நீங்காமல் நின்றுகொண்டிருந்த இலக்குவன் இந்திரசித்தன் பெரும்படையுடன் வருவதைக் கண்டு, ”யாரிவன்?” என்று வீடணனிடம் வினவினான்.

    அவன், ”ஐய! இவன் தேவர் தலைவனைப் போரில் வென்றவன்; இன்றைய போர் கடுமையானதாய் இருக்கும்; எனவே, நீ தக்க துணைவரோடு போரிடுதல் நன்று” என்றான்.

    அப்போது இலக்குவனுக்குத் துணையாகக் காற்றின் மைந்தன் அனுமன் விரைந்துவர, கூடவே சுக்கிரீவனும் அவன் சேனையும் வந்திணைந்தனர்.  

    கடும்போரில் இருபக்கமும் பெருஞ்சேதம் விளைந்தது. அனுமன் எறிந்த குன்றைத் தன் அம்புகளால் தூளாக்கிய இந்திரசித்தன், அனுமனைப் பார்த்து ”நில்லடா சற்று நில்லடா! உன்னை எண்ணித்தான் நான் போர்க்களத்துக்கு வந்தேன்; நீ வில்லெடுத்துப் போர் செய்யாமல் உனது வலிமையைப் புகழ்ந்து சொல்லிக்கொண்டு இன்னும் உயிரோடிருந்து விளையாடுகின்றாய்; வெல்லும் நோக்கத்தோடு போர்க்களம் வந்த என் வலிமையடக்க இருப்பவை கல்லும் நீண்ட மரங்களுமா? அடா! சொல்வாயாக!” என்று இகழ்ச்சியோடு கூறினான்.

    நில்லடா சிறிது நில்லடா உனை
    நினைந்து வந்தனென் முனைக்கு நான்
    வில்எடாமை நினது ஆண்மை பேசி உயி
    ரோடு நின்று விளையாடினாய்
    கல் அடா நெடு மரங்களோ வரு
    கருத்தினேன் வலி கடக்கவோ
    சொல் அடா என இயம்பினான் இகல்
    அரக்கன் ஐயன் இவை சொல்லினான்.
    (கம்ப: நாகபாசப் படலம் – 8074)

    அதுகேட்ட அனுமன், ”வலிமையற்ற மெல்லியனே! எங்கள் பக்கத்திலும் வில்லெடுத்துப் போர்செய்வதற்குரிய கொடிய வீரர் சிலர் உளர்; கல்லெடுத்துப் போர்செய்வதற்கு உரியவனான நானும் நிற்கின்றேன்; அவ்வாறு இருத்தலை இன்று அல்லது நாளைக்குள் நீ காணலாம்; ஒளிபொருந்திய படைக்கலங்களைத் தாங்கிய இந்திராதியர் உன்னிடம் தோற்று உயிரைத் தாங்கிக்கொண்டு செல்வார்கள்; ஆனால், போரில் தோற்றுப் புல்லை வாயினால் கவ்வ வந்தவர்கள் அல்லோம் நாங்கள்; வேறுசில போர்வகைகளைத் தொடங்கி உன்னோடு போரிட வந்துள்ளோம்.” என்றான்.   

    வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில
    வீரர் இங்கும் உளர் மெல்லியோய்
    கல் எடுக்க உரியானும் நின்றனன்
    அது இன்று நாளையிடை காணலாம்
    எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு
    இடைந்து உயிர் கொடு ஏகுவார்
    புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில
    போர் எடுத்து எதிர் புகுந்துளோம்.
    (கம்ப: நாகபாசப் படலம் – 8075)

    இப்பாடலில் பயின்றுவந்துள்ள “கல் எடுக்க உரியானும் நின்றனன்” என்ற தொடருக்கு அரக்க இனத்தை அழித்து அவர்களுக்கு வீரக் கல்லெடுப்புச் சடங்கு நடத்தற்குரிய அனுமன் என்ற பொருளும் உரையாசிரியர்களால் சொல்லப்பட்டிருக்கின்றது.

    போரில் தோற்றவர் வாயினால் புல்லைக் கவ்வுதல் அன்றைய மரபு. தற்காலத்தில் தோற்றவனை மண்ணைக் கவ்வினான் என்று கூறுவதை இதனோடு ஒப்பிடலாம்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • கன்னிராசி (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    கன்னிராசி (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை

    ஒரு வேதியியல் மாணவியான எஸ். மாயாவுக்குப் புவியியலிலும் விருப்பம் இருந்தது. அவள் கரும்பனைகளுக்கு நடுவில் கிழக்காகப் பாய்ந்து செல்லும் பேருந்திலிருந்து வெளியில் கைநீட்டினாள். வெகுதொலைவில் இருண்ட நீல நிறத்தில் மலைகள். அவைகளின் பேரென்ன என்று அவள் உடனிருந்த வினோதிடம் கேட்டாள். ஆனால் அவனுக்கு சொல்ல முடியவில்லை. அவன் படித்தது வரலாறு.

    பஸ் சிவப்பு நிறக் கண்களுள்ள பெரிய  டைனோசரின் படத்திற்கு அருகில் நின்றது. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் மாயாவுக்கு ஒரு ஃபேன்டசிக்குள் அகப்பட்டது போலிருந்தது. ஆறேழு கிறிஸ்துவ சிஸ்டர்களும்  நூற்றுக்கணக்கான மாணவர்களும் அவளுக்கு முன்பாகக் கடந்து சென்றனர். சீருடை அணிந்த மாணவர்களுக்கிடையில் எங்கேயோ தானிருப்பதாக அவள் உணர்ந்தாள். ஒவ்வொரு மாணவிகளையும் அவள் உற்றுப் பார்த்தாள்.

    “வாங்க”.வினோத் கூறினான். அவன் பாதையைக் கடந்தான்

    மாயா அவனைப் பின்தொடர்ந்தாள்.

    அவர்கள் காற்றாடி மரங்கள் அடர்ந்து நிற்கின்ற ஒரு வழியில் நடந்தனர். நடுவழியின் இருபக்கங்களிலும் சுற்றுலாப்பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காட்டேஜுகள். அவைகளுக்குப்பின்னால் மரத்தில் கற்பூர மாங்காய் காய்த்திருந்தது. காற்றில், பழுத்த கற்பூர மாம்பழங்களின் வாசம். மிகத்தொலைவிலல்லாமல் பள்ளி மணியின் முழக்கம், மாயா அதற்கு செவிமடுத்தாள். மறுபடியும் அவளுக்கு வீட்டு ஞாபகம் வந்தது.

    கறுப்புநிற ஃபேண்டும்  வெள்ளைச்சட்டையுமணிந்த  ரூம்பாய்  வலதுபுறத்திலுள்ள நானூற்றி இருபதாம் எண்ணிட்ட காட்டேஜைத்  திறந்தான். அவன் முதலில் செய்த வேலை ஏர்கண்டிஷனை செயல்படச்செய்வதுதான். அதைத்தொடர்ந்து அறை முழுவதும் ஏதோ ஒரு சத்தம் நிறைந்தது.

    “மாயா  குளிக்கறியா?”. சூட்கேஸை கட்டில் மேல் கிடக்கும் கம்பளிப்போர்வைக்கு  மேல் வைத்துவிட்டு  வினோத்  கேட்டான்.

    ரூம் பாய் போகவில்லை. மாயாவுக்கு வினோதின் அநாகரீக விசாரணைப் பிடிக்கவில்லை. எப்படியிருந்தாலும் காட்டேஜூக்கு வருவதற்கு முன்பே அவள் குளிப்பதைப்பற்றி  சிந்தித்திருந்தாள். நீண்ட பயணம் முடிந்து வந்தது வேறு. மார்ச் மாதம் வேறு.

    “நான் குளிக்கப்போறேன்.” ரூம்பாய் வெளியில் போனதும் மாயா கூறினாள். அவள் துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் போனாள். கதவுகள் சாத்தப்பட்டிருந்தாலும் ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடிகள் வழியாக  வினோத் தன்னை ரசிக்கிறாள் என்பதை அறியாமல் அவள் ஷவருக்குக்கீழே நின்றாள்.

    மாயாவை நினைத்துக் கொண்டே வினோத் படுக்கையில் சாய்ந்து படுத்துக்கொண்டிருந்தான். அவளின் உடையில்லாத உடல் வழியாக நீர் வடிந்தது. அதன் ஓசையில் ஒரு பாட்டின் தாளமும் கலந்திருந்தது. “மெஹந்தி கி ராத் ஆயி. மெகந்தி கி ராத்…….”

    மாயா தெளிவான  ஒரு சிரிப்புடன் கதவைத் திறக்கும் போது வினோத் கதவிற்கு நேர் முன்பாக கைகள் நீட்டி நின்று கொண்டிருந்தான். அருமையான நீராடல் மூலம் கிடைத்த உற்சாகம் அவளுக்கு நொடியிடையில் நஷ்டமானது.

    “சே என்னது இது?” அவள் வினோதின் பிடிக்குள் இருந்துத் தன்னை விடுவித்தாள். அதே வேளை கதவைத்தட்டுகிற சத்தம் கேட்டது.

    ரூம்பாய்

    “நைட்டுக்கு என்ன வேணும் சார்?” அவன் பணிவுடன் கேட்டான்.

    “சப்பாத்தியும் சிக்கனும் போதும். ரேண்டு பீரும்” வினோத் கூறினான்.

    மாயா, வானத்தின் நீலநிற ஆடையை தனக்காகத் தேர்ந்தெடுத்தாள். மாலை நேர யாத்திரைக்கு மிகவும் சரியான வேடம் என்று வினோத் புகழ்ந்தான். இருவரும் மாலை நேரப் பாதையில் இறங்கினர். வண்ணவண்ண இறகுகள் வைத்தத் தொப்பிகள் அணிந்த பலச்சுற்றுலாப் பயணிகள் அவர்களுக்கு முன்னால் காட்சியளித்தனர்.

    அதே போன்று ஒரு தொப்பி தனக்கும் வேண்டுமென்று மாயா ஆசைப்பட்டாள். தாமதிக்காமல் அவளுடைய ஆசை நிறைவேறியது.

    “எப்படி இருக்கு?” அவள் தொப்பியை தலையில் அணிந்து வினோதிடம் கேட்டாள்.

    “வேறு ஏதோ உலகத்திலிருந்து வந்தவள்  போல” அவன் கூறினான்.

    “எர்ணாகுளத்திலிருக்கற ஹாஸ்டல மறந்தர்றலாம் இல்லயா?” மாயா சிரித்தாள். வினோத் அவளின் கன்னக்குழிகளை ரசித்தான். அவை உடனே மறைந்தன.

    ரோப்வேயில் செல்லும்போது எர்ணாகுளத்தில் உள்ள ஹாஸ்டலோ, கருணை மிகந்த குணமுடைய மேட்ரனோ, உடன் தங்கியிருப்பவர்களோ, ஒற்றப்பாலத்தில் உள்ள வீடோ, குடும்ப அங்கங்களோ மாயாவின் மனதில் இருக்கவில்லை. அவளுடைய வலது கைப்பத்தியை வினோத் சேர்த்துப்பிடித்திருந்தான். அவள் உற்சாகத்துடன் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தாள். வினோத் அடிக்கடி அவளுடையக் கன்னங்களையும் பின்னங்கழுத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய பார்வை தனது உடல் மேல் விழுவதை அவள் கவனிக்கவில்லை.  ஒரு சிறு சிறுமியின் ஆர்வத்தைப்போல அவள் தனக்குக் கீழே உள்ளக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். இல்லுமினேஷன் அவளுக்கு ஒரு புதிய அனுபவமானது.

    இரவு. ஆல்கஹாலைப் போன்ற வீர்யம் நிறைந்த பழுத்த கற்பூரமாம்பழத்தின் வாசனையை சுவாசித்துக்கொண்டு அன்வர் ஹுசைனும், சதானந்தனும் ஒரு காட்டேஜின் வெளியில் உட்கார்ந்திருந்தனர். காற்றாடி மரங்கள் அவர்களுக்கு முன் கிளைகளை அசைக்காமல் நின்றது.

    “அங்கே என்னமோ நடக்குது” அன்வர் ஹுசைன் நேர் எதிர்புறமுள்ள காட்டேஜிற்கு நேராக விரல் சுட்டிக்காட்டிக் கூறினான்.

    அறைக்குள் விளக்கு அணைக்கப்படவில்லை. ஆனால் கண்ணாடி ஜன்னல்களுக்கு அப்புறமுள்ள அடர்ந்த திரைச்சீலைகள் அறையின் இரகசியங்களை நிலைநிறுத்தப் போதுமானதாக இருந்தன. அன்வர் ஹுசைனும், நண்பனும் சத்தம் போடாமல் காட்டேஜை நெருங்கினர். இருவரும் வராண்டாவிற்குச்சென்று கவனத்துடன் நின்றனர்.;

    “மாயா உனக்கென்னை நம்பிக்கையில்லயா?”

    “நம்பிக்கையில்லேன்னா நான் உங்கூட வருவனா?”

    “அப்பறம் இப்ப என்ன ஆச்சு?”

    “ஒன்னும் ஆகலயே”

    “இப்ப உன்னோட நடவடிக்க எனக்கு விசித்திரமா இருக்கு”

    “எனக்குத் தூக்கம் வருது”

    “சும்மா தூங்கறதுக்காகவா  நாம இவ்வளவு தூரம் வந்தோம்?”

    “நான் நெனச்சுது உங்கூட ஒரு பயணம் மட்டும்தான். எ ப்ளசன்ட் ட்ரிப்”

    “சும்மா வெளயாடறத விடு”

    “நா வெளயாடல”

    “மாயா ப்ளீஸ்”

    “வினோத்! நல்ல பையனாப் போய் தூங்கப்பாரு”

    “நா சொல்றதக் கொஞ்சம் கேளு”

    “இனி ஒன்னும் சொல்ல வேண்டாம்”

    “மாயா……..”

    “நோ……..”

    வெளியில் காதுகளைக் கூர்மையாக்கி நிற்கின்ற அன்வர் ஹுசைனுக்கும், சதானந்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. கொலுசுகள் போட்டக் கால்களை படுக்கையிலிட்டு அடித்துக் கொண்டிருந்தாள்.

    “பகவதி” அவள் விளித்தாள்

    “இந்த அறைக்கு யாரும் வரமாட்டங்க” வினோத் கூறினான்.

    “கடவுளே நான் எதுக்கு உங்ககூடவந்தேன்.” மாயா  விதும்பினாள்.

    அன்வர் ஹுசைனும் சதானந்தனும் ஒருவரையொருவர் பார்த்தனர். ஆக்கிரமிப்பினுடையவும், எதிர்த்து நிற்பதினுடையவும் ஓசைகள் அவர்களின் காதுகளில் பதிந்து கொண்டிருந்தன. பிறகு நிசப்தத்தின் ஓர் இடைவேளை. வெளியில் நிற்பவர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது.

    “நான் நெனச்சது நாம விரும்பறோமுன்னு” மாயா கூறினாள்.

    ”அதுதானே உண்மை.” வினோத் கூறினான்.

    “ஆனா நீங்க என்ன, ரேப் செய்ய முயற்சிக்கறீங்களே. எதுக்கு?”

    “நீ ஒத்துக்கறதில்லயே”

    “நான் இத எதிர்பார்க்கல”

    “நீ என்னோட பொறுமைய சோதிக்கற”

    “கை வலிக்குது”

    “வலிக்கட்டும்”

    “விடு”

    அன்வர் ஹுசைன், சதானந்தனின் தோளைத் தொட்டு ஒரு சைகைக் காட்டினான். இருவரும் சேர்ந்து ஆலோசிப்பதற்காக நடுவழியில் இறங்கி நின்றனர்.

    “கதவத் தட்டலாமா?” அடக்கிப்பிடித்தக் குரலில்  அன்வர் ஹுசைன் கேட்டான்.

    “அது வேணுமா?” சதானந்திற்கு சந்தேகமாயிற்று.

    “அப்படீனா போலீஸ்க்கு ஃபோன் பண்ணலாம்”

    “பேப்பர்ல செய்தி வந்தா அந்தப்பொண்ணு  அப்பறம்  உயிரோட  இருக்கமாட்டா”

    “வேறென்ன செய்றது”

    “நா இப்பவே எறங்கிப்போயிடுவேன்” காட்டேஜிற்குள்ளிருந்து பெண்ணின் சத்தம் உயர்ந்தது.

    “இந்த இரவிலயா” அவன் கேட்டான்.

    அன்வர் ஹுசைன் என்னமோ சொல்லத் தொடங்கினான்.

    “ஷ்…..ஷ்….. சதானந்தன் அவனைத் தடுத்தான். காட்டேஜின் கதவைப்பார்த்துக்கொண்டு அவர்கள் காற்றாடி மரங்களுக்கு நடுவில் இரண்டு சிலைகள் போல நின்றனர்.

    Share
  • நீ அறியாத போர்

    நீ அறியாத போர்

    சு. திரிவேணி
    கோயம்புத்தூர்

    சிறிய கதவு திறந்ததும்
    சீறிவருகிறது காளை
    ஆங்காரமாய்க் கொம்பை முட்டித்
    தரையைக் கிழிக்க முற்படுகிறது
    மிருகத்தின் மூர்க்கத்தைப்
    புத்திக்கூர்மையால் அடக்கும்
    ஆதி மனிதனின் எச்சம்
    இந்த விளையாட்டு
    வெல்வதோ வீழ்வதோ –
    நேருக்கு நேராய்!
    கண் முன்னால்!!

    நாகரிகம் என்னும் பெயரில்
    போலியான வார்த்தைகளால்
    விஷம் தடவி வீசும்
    வாள்வீச்சாய்த் துரோகத்தின்
    தீ நாக்குகளில் சுட்டுப் பொசுக்கும்
    உனக்கெங்கே தெரியப்போகிறது
    நேர்மையான போர்!

    Share
  • அறிவியல் & தொழில்நுட்பத்தில் எழுத்துக் கலை | அண்ணாகண்ணன் உரை

    அறிவியல் & தொழில்நுட்பத்தில் எழுத்துக் கலை | அண்ணாகண்ணன் உரை

    அறிவியல், பொறியியல், தொழில்நுட்பங்களைத் தமிழில் எழுதுதல் என்ற தலைப்பிலான பயிலரங்கு, 19.09.2022 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொறியியல், தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையமும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியும் இணைந்து இதை நடத்தின. இதில், அறிவியல் & தொழில்நுட்பத்தில் எழுத்துக் கலை என்ற தலைப்பில் முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 2

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 2

    மீனாட்சி பாலகணேஷ்

    பிள்ளையார் மீதான இன்னும் இரண்டு அருமையான ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களைக் காணப்போகிறோம்.

    3. குப்பிளான் கற்கரை விநாயகர் பிள்ளைத்தமிழ்

    ஈழநாட்டின் செம்மண் வளமுடைய குப்பிழான்பதி எனும் ஊரானது கலையும் தமிழும் சைவமும் ஒருங்கே வளர்ந்த ஊராகும்.

    ஈழநாட்டிலேயே உள்ள கௌரி அம்மை சமேதரான கேதீஸ்வரப் பெருமானின் திருவாலயத்தினின்றும் கொண்டுவரப்பட்ட  விநாயகர் விக்கிரகங்கள் மூன்றில் ஒன்றைக் குப்பிளான் கற்கரைப் பதியில் பிரதிஷ்டை செய்ததாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. (சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம், இந்துசாதனம், 17.08.2010)

    ஆற்றல் மிக்க ஆன்மீகச் சொற்பொழிவாளரான சைவப்புலவர் திரு. ஏ. அனுஷானந்தன் என்ற புலவனார் கற்கரை விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் அருமையான நூலை ஆக்கியுள்ளார். இதிலிருந்து நான்கு பாடல்களே நமக்குக் காணக் கிடைத்துள்ளன. அவற்றின் இனிமையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

    எந்த நூலைப் பாடுமுன்பும் நூலாசிரியர், விநாயகரை வேண்டித் தன் நூலைக் காத்தருள வேண்டுவார். பின்பு, காப்புப்பருவத்தில் காக்குங்கடவுளான திருமாலை வேண்டுவது மரபாகும். இது விநாயகப் பெருமானைப் பற்றிய பிள்ளைத்தமிழல்லவா? இந்நூலாசிரியர் தமது முதல் பாடலில் பிள்ளையாரின் தகப்பரான சிவபெருமானை வேண்டுகிறார்;

    மயன், மாந்தாதா, மாதுவஷ்டா, மண்டோதரி (இராவணன் மனைவி) என்பவர்களுடன், நவக்கிரகங்களுள் ஒன்றான கேதுவும் போற்றி வணங்கும் சிவபிரான்; சம்பந்தரும் சுந்தரரும் தமிழால் பாடிப் போற்றப்பட்டவர். சீத நெடுநற் பாலாவிக் கேதீச்சரத் தலத்தோனே! 1520ம் ஆண்டளவில் (ஆயிரத்து ஐநூற்றிருப தாண்டளவில்) அழிக்கப்பட்ட கோவிலின் புதைவினின்று கிடைத்த உனது மைந்தனானவனின் பெருமை விளங்கக் காப்பாயே! என அக்கோவிலின், சரித்திரத்தை உள்ளடக்கிப் பொருள்நயம் மிகப் பாடியுள்ளார். யாரோ வெளிநாட்டவர் அரசாண்டபோது சிதைக்கப்பட்ட கோவிலின் இடத்திருந்து கண்டெடுக்கப்பட்ட பிள்ளையார் இவரென்று இதனால் ஒருவாறு ஊகிக்க இயலுகின்றது.

    மயன் மாந்தாதா மாதுவஷ்டா
    மண்டோதரியென் பாருடனே
    கேதுப் பெயரோன் போற்றிசெயக்
    கேடில் ஞானசம்பந்தர்
     ……………………………………
    ஆயுங்காலை ஆயிரத்து
    ஐநூற் றிருப தாண்டளவில்
    பூனைக் கண்ண ரழிகோயில்
    புதையிலிருந்து வந்தநெடும்
    சேயன் உந்தன் மைந்தன்சீர்
    சிறக்கக் காப்பு அருள்வாயே!
    ஆனை வதனன் அரசடியில்
    ஆடிமகிழக் காப்பாயே!

    அடுத்து அழகான வருகைப்பருவப் பாடலொன்று. காணலாமா?

    கரங்களால் தலையில் குட்டிக்கொண்டு காரிய சித்திக்காக உன்னை வேண்டிக்கொள்ள வேண்டுமென்பார்கள்; குடுமியை உடைய தேங்காயைக் கல்மேல் வீசியடித்து உடைத்துச் சிதறுகாய் போட்டு நமது துன்பங்களை நீக்க வேண்டிக்கொள்ள வேண்டுமென்பார்கள். எங்கள் துயரங்கள் அனைத்தையும் விரட்டி ஓட்டி வாழ்விக்க எலிமேல் வருவாய் எங்கோவே! கஜமுகனை உனது தந்தத்தால் பிளந்து அழித்தவனே! திரிபுரத்தைத் தனது நகைப்பினால் எரித்த சிவபிரானின் புதல்வனே வருக வருகவே!

    கரங்கள் மொட்டித் துயர்தலைமேல்
    கவினப் பிடித்து மெய்யாக
    நிரயம் விழினும் நின்னினைவே
     …………………………..
    கரத்தி லேந்துமுடித் தேங்காய்
    கன்மேலடித் துக்கரையில் துயர்
    ………………………………
    வரத்தி லோங்கு கஜமுகனை
    வலிய கோட்டாற் பிளந்தழித்தாய்
    புரத்தை நகையா லட்டவனின்
    புதல்வா வருக வருகவே.

    பிள்ளையார் வழிபாட்டில் தலைமேல் குட்டிக்கொள்வது, பின் தடைகள் நீங்க, கல்மேல் சிதறுகாய் உடைத்தல் எனும் வழிபாட்டு முறைகளைப் பாடலில் இணைத்துப் பதிவு செய்து வைத்தமை அருமையானது.

                                       ——————————–

    4. கனகை விநாயகர் பிள்ளைத்தமிழ்

    அடுத்து நாம் பார்க்கப் போவது கீழ் கரவையிலுள்ள கனகராவளவில் கோவில் கொண்டருளியுள்ள விநாயகப்பெருமான் மீது சிவராசசிங்கம் எனும் அடியார் பாடியுள்ள கனகை விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் நூலைத்தான்.

    பிள்ளையார் தொடர்பான அருமையான கதைகளைக் கூறுவதுமான பாடல்களைக் கொண்டது இந்நூல்.  செங்கீரைப் பருவத்திலுள்ள ஒரு பாடல் விநாயகர் மாம்பழம் பெற்ற கதையை உரைக்கின்றது!

    கோலமயில்மீது ஊர்ந்துவரும் பரங்குன்ற வேலன் இந்த உலகை வலம்வருமுன்பே தாய்தந்தையரான சிவமும் சக்தியும்தான் அனைத்து உலகமும் என்று உணர்ந்து, அப்படியே வலமும் வந்து அவர் கையினின்றும் மாங்கனி பெற்ற கனகைவாழ்  விநாயகா! செங்கீரை ஆடுகவே! என வேண்டும் பாடல்.

    கோல நீலம யிலினி லூர்பரங்
    குன்றின் வாழுங் குருபரன் விசைகொடு
    ஞாலந் தன்னை வலம்வரு முன்சிவ
    நாதன் தாதையே சர்வமு மெனவரும்
    வால ஞானத் திறத்தி லவர்தமை
    வலம்வந் தேகனி வாங்கிநம் கனகைவாழ்
    நாலு வாய்ப்பர! ஆடுசெங் கீரையே
    ஞான நாயக ஆடுசெங் கீரையே

    பொதுவாகவே பிள்ளைத்தமிழ் நூல்களில் அவ்வந்தத் தெய்வங்கள் எழுந்தருளியுள்ள தலங்களின் சிறப்புகளையும் பூசை முறைமைகளையும் விளக்கும் செய்திகளையும் பல பாடல்களிலும் கண்டு மகிழலாம்.

    இந்த மரபினையொட்டி இந்நூலில் புலவர் யாழ்ப்பாணத்து வழிபாட்டு மரபை உட்பொதிந்து இயற்றியுள்ள ஒரு பாடலை நாம் சிற்றில் பருவத்தில் காணலாம்.

    யாழ்ப்பாணத்துக் கோயில்களில் புராண படனம் முக்கியமான பங்கு வகித்து வந்துள்ளது. முருகன் கோயில்களில் கந்தபுராணப் படிப்பு சிறப்பாக இடம்பெறும். பௌராணிகர் ஒருவர் செய்யுளைப்பாட, மற்றொருவர் “பொருள் சொல்வது” வழக்கம். இவ்வாறு பொருள் கூறுபவர் சமய, இலக்கிய தத்துவத் துறைகளில் தமக்கிருக்கும் ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்துவார். அடியார்கள் கேட்டு அருள் வெள்ளத்தில் மூழ்குவர். அனைவருக்கும் அன்னதானமும் அளிக்கப்படும்.

    இப்பாடலில் சிற்றிலிழைத்து விளையாடும் சிறுமியர் அதைச் சிதைக்க முயலும் சிறுவன் விநாயகனை வேண்டுகின்றனர். “சிவன் மகனே! இப் புண்ணியத் திருநாளில் புகழ்வாய்ந்த தில்லைநாத நாவலர், சிலேடைக்கவி ரத்தினம் முதலான சிறப்புவாய்ந்த பௌராணிகர்கள் வள்ளி திருமணம் புராணபடனம் செய்ய இருக்கின்றனர். அதனைக் கேட்க வரும் அடியார்களுக்கு சுவைமிகுந்த உணவை அன்னதானம் செய்யும் பணி எம்முடையதாகும். ஆகவே அது பங்கமாகாதபடி சிறுமிகளாகிய நாங்கள் கையால் கட்டிய (மணல்) சிற்றில்களை அழித்து விடாதே!” என வேண்டுகின்றனராம்.

    பொல்லா வினைகள் தீர்கனகைப்
    புனிதக் கோயில் தனிற்கந்த
    புராண படனமிடம் பெறுமிப்
    புண்ய நாளிற் புகழ்மிக்க
    தில்லை நாத நாவலர்செஞ்
    சிலேடைக் கவிரத் தினமுதலாம்
    சிரேட்ட பௌரா ணிகர்வள்ளி
    திருக்கல் யாணப் படிப்பிற்றம்
    சொல்விற் பனங்காட் டிடவுள்ளார்
    சுவைகூ ரன்னம் அவர்க்களிக்கும்
    தூயகட னுண்டெமக் கிடையில்
    தோன்றி விளையாட் டாக்கருணைச்
    செல்வா கருமம் பங்கமுறும்
    செயலாய்ச் சிற்றில் சிதையேலே
    சிவனார் மூத்த திருக்குமரா
    சிறியேம் சிற்றில் சிதையேலே.

                                                   (சிற்றில் பருவம்)

    அழகும் இனிமையும், ஆன்மீகச் செய்தியும் கொண்டொளிரும் உயர்வான பாடல். நாமும் கனகை பரமானந்த விநாயகரை இருகரங்கூப்பி வணங்கி உலகனைத்தையும் காக்க வேண்டுவோமாக!

    இப்பிள்ளைத்தமிழ் நூல்கள் அனைத்துமே பக்திச்சுவை நிரம்பப்பெற்று, அழகான இனிய தமிழில் பல சுவையான கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டு பொலிகின்றன.

    (வளரும்)

    Share
  • மரணித்தும் மறையாத மகாராணி

    மரணித்தும் மறையாத மகாராணி

    சக்தி சக்திதாசன்
    இலண்டன்

    ஒரு நாடு ஸ்தம்பித்து போய்விட்டது என்பதை வெறும் கதைகளிலும், கட்டுரைகளிலுமே கண்டு வந்த எமக்கு அதன் தாத்பரியத்தைக் கண் முன்னால் காணும் நிலை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது.

    நான் இங்கிலாந்துக்குள் காலடி வைத்து இப்போது 47 வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகின்றன. நான் காலடி வைத்த நாள் முதல் நேற்றுவரை இங்கிலாந்தில் மாற்றமின்றி நான் கண்ட ஒரேயொரு அடையாளம், ஒரேயொரு மனிதர் இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் என்றால் அது மிகையில்லை.

    இவர் யார் ? இவர் இத்தகைய ஒரு இடத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலக மக்கள் மத்தியிலும் பெற்றிருக்கக் காரணம் என்ன ? இங்கிலாந்து மகாராணியார் எனும் பதவி ஒன்றினால் மட்டும் எமது மகாராணியார் இத்தகைய பெரு மதிப்பை உலகளாவிய ரீதியில் பெற்றிருக்க முடியுமா ?

    இக்கேள்விகளுக்கு விடைகாண முயலும்போதுதான் இவரின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. மகாராணி எனும் பதவியிலிருக்கும் போதும் மனிதத்துவத்தை இழக்காமல் கலாச்சார அடையாள விழுமியங்களைப் பாதுகாத்து வாழ்ந்த இவரின் அயராத சேவையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    இருபத்தைந்து வயது நிரம்பிய இளவரசியாக இளம் தாயாராக கணவனுடன் கெனியா நாட்டுக்கு விஜயம் செய்த இரண்டாவது எலிசபெத் அம்மையார் இங்கிலாந்துக்கு மகாராணியாக திரும்பிய போது அந்த இௐளம் தாயாரின் முன்னால் இருந்த பாரிய கடமையை ஏற்று எத்தகைய வகையில் செயலாற்றி முடித்தார் என்பதற்குச் சரித்திரம் சான்றாக அமைகிறது.

    அரசர் ஆறாவது ஜோர்ஜ் அவர்களது மூத்த புத்திரியாக லண்டன் Mayfair எனும் இடத்தில் 1926ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21ம் தேதி பிறந்தார் . இளவரசர் பிலிப் என்பவரை 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி மணந்தார். இன்றைய அரசராகிய மூன்றாவது சார்ள்ஸ் அவர்களோடு சேர்த்து நான்கு குழந்தைகளின் தாயாராவார்.

    73 ஆண்டுகள் எதுவித குழப்பங்களுமற்ற மணவாழ்க்கையில் இணைந்திருந்த மகாராணியாரின் கணவர் இளவரசர் எடின்பரோ கோமகன் பிலிப் அவர்கள் கடந்த ஆண்டு தனது 99 வயதில் 100 வயதுக்கு ஒரு மாதம் முன்னதாக தனது பூவுடலை நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    70 ஆண்டுகாலம் முடி சூடியிருந்த மகாராணியார் எதுவிதமான சர்ச்சைகளுக்குமுட்படாமல் தனது மரணம் வரை முடிக்குரியவராக இருந்தார் என்பது சரித்திரமே ! இத்தகைய ஒரு வெற்றியான வாழ்க்கையை அவர் அடைவதற்கான அவரது விசேடத் தன்மைகள் என்ன?

    வெற்றியான மகாராணியார் வாழ்க்கை ஏதோ சுமூகமாக ஓடியது என்று சொன்னால் இல்லை என்றே பதில் வரும். அவரைச் சுற்றி அவரது சொந்தங்கள் உறவுகளினால் ஏற்பட்ட பல சர்ச்சைகளை அவர் கையாண்ட விதமே அவரது பண்புக்கு அத்தாட்சியாக இருக்கிறது.

    அவரது மூத்த மகனாக முடிக்குரிய இளவரசராக இருந்த இன்றைய அரசராக அறிவிக்கப்பட்ட இளவரசர் சார்ல்ஸ் அவர்களது மணமுறிவும் அதைத்தொடர்ந்து அதனுடன் இணைந்து எழுந்த பலவிதமான இளவரசி டயானா சம்பந்தமான சர்ச்சைகளையும் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவர் கையாண்ட விதம் பிரமிக்கத் தக்கது.

    அதையடுத்து அவரது இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ அவர்களுடைய மணமுறிவு மட்டுமல்ல , சமீபத்தில் அவர் மீது எழுந்த பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் பாரபட்சமின்றி அரச கெளரவங்கள் அனைத்தையும் அவரிடமிருந்து விலக்கியதன் மூலமாக ஒரு தாய் எனும் நிலையிலில்லாமல் ஒரு நாட்டின் மகாராணி எனும் நிலையிலிருந்து எடுத்த முடிவுகள் அவர் தனது நாட்டுக்கான சேவைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

    இங்கிலாந்து அரச பரம்பரைக்குள் முதலாவதாக வந்த வேற்றின பந்தத்தை ஏற்று அதற்குக் காரணமான அவரது பேரனான இளவரசர் ஹரி அவர்களையும் அனுசரித்து அவர் நடந்து கொண்ட விதம் அவரது பண்பினை மேலோங்கி நிற்க வைக்கிறது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது பேரன் இளவரசர் ஹரியும் , அவரது மனைவியும் தாம் அரச குடும்பத்துடனான உரிமைகளிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது மட்டுமல்ல அமேரிக்காவில் இரச குடும்பத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் அளித்த நேர்காணல்கள் அளித்ததையும் உள்வாங்கி அதனை மிகவும் சாதுரியமாகக் கையாண்டு தன்னுடைய மதிப்பை உலகளாவிய ரீதியில் உயர்த்திக் கொண்டார்.

    இப்படியாக நேற்று 08.09.2022 தனது பூவுடலை நீத்து வானுலகம் எய்திய மகாராணியார் தனது பிரத்தியேக வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகளை தனது தேச சேவைக்கு எவ்வித பங்கமும் ஏற்படா வகையில் பணியாற்றியதே இவரின் அதியுன்னத பண்பாகக் கணிக்கப்படுகிறது.

    இதுவரை இவர் தனது 70 ஆண்டுகால முடியாட்சியில் 15 இங்கிலாந்துப் பிரதமர்களைக் கண்டு அவர்களைச் சம்பிரதாயபூர்வமாக நியமித்திருக்கிறார். உலகளாவிய ரீதியில் எடுத்துப் பார்த்தோமானால் இதுவரை 170 நபர்களைப் பிரதமராகப் பார்த்திருக்கிறார், இவர் மகாராணியாகியது செய்த முதலாவது பிரதமர் நியமனம் நான் பிறந்த மண்ணாகிய அப்போதைய சிலோன் என்றழைக்கப்பட்ட இலங்கையின் பிரதமர் டட்லி சேனநாயக்கா ஆவார். இவர் செய்த கடைசிப் பிரதமர் நியமனம் இரண்டு நாட்களுக்கு முன்பாக இங்கிலாந்தின் பிரதமர் லிஸ் ட்ரஸ் அவர்களாவார்.

    இங்கிலாந்தின் முடிக்குரிய மகாராணியாக மட்டுமல்லாமல் பொதுநலவாய நாடுகளின் தலைவியாக இவர் ஆற்றி வந்த கடமைகள் எண்ணிலடங்கா. இதுவரை சுமார் 600 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கெளரவ தலைவராக பணியாற்றிய இவரது சேவை அளப்பரியது.

    தன்னுடைய தலைமையின் கீழுள்ள பொதுநலவாய நாடுகளின் பிரஜைகள் ஒவ்வொருவரையும் தன்னுடைய பிரஜைகளாகவே கருதிச் செயல்பட்டு வந்தவர் இரண்டாவது எலிசபெத் மகாராணியார்.

    இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆட்சிக்காலத்தில் முதல் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் சார் வின்சென்ட் சார்ச்சில் அவர்கள். இவர் பிறந்தது 1874ம் ஆண்டு. இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆட்சிக்காலத்தில் கடைசிப் பிரதமராக இருப்பவர் திருமதி லிஸ் ட்ரஸ். இவர் பிறந்தது 1975ம் ஆண்டு. ஆக மொத்தம் மகாரணியாரின் ஆட்சிக் காலத்தில் இவர் கண்ட பிரதமர்களின் வயது இடைவெளி 100 வருடங்களாகும். இதுவோர் உலக சாதனை என்றால் மிகையில்லை.

    இத்தனை பிரதமர்களையும், இத்தனை ஆட்சி மாற்றங்களையும் சந்தித்த மகாராணியாரின் பழகும் தன்மையில் மட்டும் எதுவித மாற்றங்களுமேயில்லை, சமூக, விஞ்ஞான, சமய மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்டுக் கொண்டிருந்தும் மகாராணியாரோ மனிதத்துவம் மீதும், இறையின் மீதும் கொண்ட நம்பிக்கையை இழக்காமல் இருந்ததே அவரது இந்த நன்மதிப்பின் முக்கிய காரணமாகிறது.

    என்றுமே நாட்டின் அரசியல் மாற்றங்கள் மீதோ அன்றி அரசியல்வாதிகள் மீதோ எதுவிதமான சொந்தக் கருத்துக்களையும் இவர் திணிப்பதேயில்லை எப்போதுமே தனது சொந்தக் கருத்து எதுவாயிருந்தாலும் அரசியலில் நடுநிலைமையையே கடைப்பிடித்து வந்துள்ளார்.

    தன்னுடைய அந்திம காலம் வரை தனது நாட்டுக்கான சேவையை செய்து கொண்டேயிருந்தார் என்பதே இவரது சேவை மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டாகிறது. வியாழக்கிழமை 08.09.2022 அன்று மறைந்த மகாராணியார் இரண்டு நாட்களுக்கு முன்புவரை அதாவது 06.09.2022 அன்று முன்னால் பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களது இராஜினாமாவை ஏற்றதோடு புதிய பிரதமர் திருமதி லிஸ் ட்ரஸ் அவர்களை சம்பிரதாயபூர்வமாக பிரமராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றுவரை உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் மகாரணி (The Queen) என்று சொன்னால் அனைவரின் நினைவிலும் மேலோங்கி நிற்பது இரண்டாவது எலிசபெத் மகாராணியார் ஒருவரே. இது அவர் மகாராணியார் எனும் சொல்லுக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒரு மதிப்பு என்றே எடுத்துக் கொள்வோம்.

    மறைந்த மதிப்பிற்குரிய இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் ஆத்மாவுக்கு அஞ்சலி செய்வதோடு அரசராகிய மூன்றாவது சார்ள்ஸ் அவர்கள் தன்னுடைய தாயாரின் பாதையில் ஒரு வெற்றியான அரசராகச் செயல்பட எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம். இங்கிலாந்துப் பிரஜைகளில் ஒருவனாக சக பிரஜைகளோடு எனது துயரையும் பகிர்ந்து கொள்கிறேன்.

    Share
  • புத்தூக்கம் தரும் மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய்!

    புத்தூக்கம் தரும் மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    முண்டாசுக் கவிஞனேநீ மூச்சுவிட்டால் கவிதைவரும்
    பண்டார மாயிருந்து பலகவிதை தந்தாயே
    தமிழ்வண்டாக நீயிருந்து தாகமெலாம் தீர்த்தாயே
    உண்டாலே அமுதமென உன்கவிதை இருந்ததுவே

    வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலரே
    தறிகெட்ட மனிதரை குறிபார்த்த மாகவியே
    விடுதலைச் சிறகுகளை விரித்திட்ட பெருங்கவியே
    வீழ்வேனா எனவுரைத்து வித்தானாய் புரட்சிக்கு

    மடமைத் தனத்துக்கு மாலையிட்டார் மண்டியிட
    அடிமைத் தளையிருந்தார் அலறியே ஓடிவிட
    பொடிவைத்து பாட்டிசைத்து போக்கியே நின்றாயே
    பொல்லாதார் வசையெல்லாம் பொசுங்கிவிடச் செய்தனையே

    பாப்பாக்கு பாட்டுரைத்து பலகாரம் கொடுத்தாயே
    பாஞ்சாலி கதையெடுத்து பகர்ந்தாயே சுயவுணர்வை
    வருமென்னும் நம்பிக்கை மனமுழுக்க கொண்டதனால்
    வருமுன்னே விடுதலைக்கு பாடிவிட்டாய் பள்ளுதனை

    வேதத்தில் திளைத்தாலும் வில்லங்கம் வெறுத்தாயே
    பாதகத்தை மிதித்துவிட கோபத்தை விரித்தாயே
    சோதனைகள் அத்தனையும் சாதனையாய் கொண்டாயே
    சுறுசுறுப்பின் உருவாக சுடராக எழுந்தாயே

    மூடத் தனத்தை முற்றாக வெறுத்திட்டாய்
    முத்திக்கு வித்தான பக்குவத்தை விதைத்திட்டாய்
    வேண்டாத குப்பைகளை வீசியே எறிந்திட்டாய்
    வீண்வாதம் செய்வோரை வெந்தணலில் வீசிட்டாய்

    அச்சமதை மடமையென்று அனைவருக்கும் சொன்னாயே
    உச்சிமீது வான்விழினும் அச்சம்தவிர் என்றாயே
    மெச்சும்படி வாழுஎன்று மெய்சிலிர்க்கச் சொன்னாயே
    இச்சைகொண்டு தமிழதனை இணைத்தபடி இருந்தாயே

    பசியுந்தன் கூடவரும் பாட்டதற்கு விருந்தாகும்
    பசிகண்டு வெகுண்டதால் பாரழிப்பேன் என்றாயே
    பசிபற்றி நீயறிவாய் பசியழிக்க நீபுகன்றாய்
    பாரததத்தின் விடிவுக்காய் பட்டினியை யேற்றாயே

    அன்னைத் தமிழின் அக்கினிக் குஞ்சானாய்
    அமிழ்த மெனத்தமிழை அரியாசனம் வைத்தாய்
    அஞ்சாமைக் குணத்தை ஆளுமை ஆக்கினாய்
    அடிமை இருளகற்ற ஆகிநின்றாய் ஆதவனாய்

    முத்தமிழைப்  பாரதியுன் சொத்தாக ஆக்கினாய்
    முத்திரையாய் கவியுலகில் முன்வந்து நின்றாய்
    எத்திக்கும் உனைநினைக்க இவ்வுலகில் வாழ்ந்தாய்
    புத்தூக்கம் தரும்மருந்தாய் புவியதனில் திகழ்கின்றாய்

    Share