-மேகலா இராமமூர்த்தி

தன் குலத்தைக் காக்கும்பொருட்டு இராவணனோடு இணைந்து வாழ்வாயாக என்று சீதையிடம் மன்றாடிய மாயாசனகனைக் கண்டு கடுங்கோபம் கொண்ட சீதை, ”பேசத் தகாத வார்த்தைகளை நீ பேசினாய்; இராமனால் காப்பாற்றப்பட்டால் உயிர்வாழ்வாய் அல்லது இறந்தொழிவாயாக!” என்று ஏசினாள்.

அப்போது சீதையை மேலும் அச்சுறுத்தும் வகையில் மாயாசனகனைத் தான் கொல்லப்போவதாக வாளை உருவினான் இராவணன். அதுகண்டு அஞ்சாத சீதை, ”உன்னால் என்னையும் கொல்லமுடியாது; (மாயாசனகனைச் சுட்டிக்காட்டி) இவனையும் கொல்லமுடியாது; இராமனின் அம்புக்கு நீயோ உன் உறவுகளோ பிழைத்திருக்கப்போவதில்லை” என்றாள் அலட்சியமாக.

அதுகேட்டு மாயாசனகனைக் கொல்லப் பாய்ந்த இராவணனைத் தடுத்த மகோதரன், ”இவன் உனக்கு இழைத்த தீங்கென்ன? எதற்காக இவனைக் கொல்லவேண்டும்? பகைவனாகிய இராமனை நீ வெற்றிகொண்டால் தானாகச் சீதை உன் வசமாவாள்” என்று கூறி அவ்விடத்திலிருந்து இராவணனை நகர்த்திச் சென்றான்.

அவ்வேளையில், வானரப் படையின் ஆர்ப்பும் வானவரின் ஆர்ப்பும் இராவணனின் செவிகளில் விழ, ”தம்பி போர்க்களத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளானோ? அதனால்தான் இந்த ஆர்ப்பொலியோ?” என்று சிந்தித்தான். போர்க்களத்திலிருந்து விரைந்துவந்த தூதுவர் கும்பகருணன் இறந்த செய்தியை இராவணனுக்குத் தெரிவித்தனர். அதுகேட்ட இராவணன் அதிர்ச்சியடைந்து நிலத்தின்மேல் வீழ்ந்தான். ஈருடலும் ஓருயிருமாய் வாழ்ந்திருந்த தங்கள் சகோதர பாசத்தை எண்ணி,

”நீ எனக்கு தம்பி மட்டுந்தானா? தேவர்களாகிய தாமரைக் காட்டைக் கலக்கி அழிக்கும் மதயானை போன்றவனே! நான்முகன் பிரமனின் மகனாகிய புலத்தியன் மகனாகிய விச்சிரவசுவின் வழித் தோன்றலே! ஆடவர்குல திலகனே! இந்திரனின் புகழுக்குக் காரணமான நல்வினைப் பயனைத் துடைத்த என் தம்பியே! நான் உன்னைப் பற்றி இவ்வாறான சொற்களைக் கேட்கும்படி ஆனேனே!” என்று பெருங்குரலெடுத்து அரற்றினான்.

தம்பியோ வானவராம் தாமரையின் காடு உழக்கும்
தும்பியோ நான்முகத்தோன் சேய்மதலை தோன்றாலோ
நம்பியோ இந்திரனை நாமப் பொறி துடைத்த
எம்பியோ யான் உன்னைஇவ் உரையும் கேட்டேனோ.
(கம்ப: மாயாசனகப் படலம் – 7709)

”வலிமைமிகு தோளனே! நீ குளிக்கும்போது உன் பாதங்களைத் தேய்க்க வடக்கிலுள்ள மேருமலையன்றோ கல்லாய்ப் பயன்படும்? அத்தகு பெருவீரனான நீ, சாதாரண மானுடர்களின் அம்புக்கு இரையாகி மாண்டாய் எனும் சொல் என்னை வேதனையில் ஆழ்த்துகின்றதே!” என்றான் துயரத்தோடு.

கும்பகருணன் இறந்த செய்தியையும், அதுகேட்டு இராவணன் அரற்றிக்கொண்டிருப்பதையும் கண்ட சீதை உவகை கொண்டாள். அப்போது மந்திரிகள் தேற்ற அங்கிருந்து அகன்று சென்றான் இராவணன்.

சீதையின் அருகில்வந்த திரிசடை, அங்கே மாயாசனகனாக வந்துநின்றவன் மாயங்கள் செய்வதில் வல்லவனான மருத்தன் எனும் அரக்கன்; உன் தந்தையல்லன் என்ற உண்மையை உணர்த்தச் சீதை நிம்மதியடைந்தாள்.

அரண்மனைக்குச் சென்ற இராவணன் தன் தம்பிக்குத் துணைநின்று அவனைக் காக்காது களபலி கொடுத்துவிட்டு வந்திருக்கும் தன் அமைச்சர் முதலானோரைப் பார்த்து, ”போரில் வெல்ல இயலுமென்றால் போருக்குச் செல்லுங்கள்! இல்லை எங்களால் போர்க்களத்தில் பகைவனிடம் அடிபட்டுச் சாகத்தான் முடியும் என எண்ணுதிராயின் போருக்கே போகவேண்டாம்; உங்கள் கருத்தைக் கூறுங்கள்!” என்றான் கடுஞ்சினத்தோடு.

அதுகேட்டு இராவணனின் வீரமகன் அதிகாயன் எழுந்து,

“உன் தம்பியின் உயிருக்கு இறுதி செய்தவனான இராமனின் தம்பி உயிருக்கு அழிவுசெய்து அவனுக்கு நடுக்கந்தரும் வன்துயரைச் செய்யாமல் போவேனாயின் ஆடவரில் சிறந்தவனான உனக்கு நான் மகனல்லன்!” என்று வெஞ்சினத்தோடு வஞ்சினம் உரைத்தான். [இவன் இராவணனுக்கும் அவனுடைய இரண்டாவது மனைவி தான்யமாலிக்கும் பிறந்தவன். அதிகாயன் என்ற சொல்லுக்குப் பேருடல் படைத்தவன் என்ற பொருள்.]

உம்பிக்கு உயிர்ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர்ஈறு சமைத்து அவனைக்
கம்பிப்பது ஓர் வன்துயர் கண்டிலனேல்

நம்பிக்கு ஒருநன் மகனோ இனிநான். (கம்ப: அதிகாயன் வதைப் படலம் – 7737)

”நன்று சொல்லினை மைந்தா! நீ இலக்குவனின் உயிரை முடித்தால் அதன்பின்பு நான் அந்த இராமனின் உயிரை முடிப்பேன்” என்றுரைத்துப் பெருஞ்சேனையோடு அதிகாயனைப் போர்க்களத்துக்கு அனுப்பினான் இராவணன்.

களத்தில் சிறிய தந்தை கும்பகருணனின் தலையற்ற உடலைக்கண்டு வருந்திய அதிகாயன், மயிடன் எனும் அரக்கனை அழைத்து ”இலக்குவனிடம் சென்று என்னோடு பொருத வரச்சொல்!” என்று புகன்றான்; அதனை நிறைவேற்ற மயிடன் விரைந்து அங்கிருந்து அகன்றான்.

இராம இலக்குவர் இருக்குமிடம் சென்ற மயிடன், இலக்குவனிடம் அதிகாயனின் உட்கிடையை உரைக்க, இலக்குவனைத் தழுவிப் போருக்குச் செல் என்று விடைகொடுத்தான் இராமன்.

”பெருவீரனான அதிகாயனுடன் இலக்குவனைப் போர்புரியத் தனியே அனுப்பலாகாது; நாமும் துணை செல்வோம்” என்றான் வீடணன். அதுகேட்டு முறுவலித்த முகில்வண்ணன் இராமன், ”எண்ணாயிரங்கோடி இராவணரும், விண்ணோரும் மண்ணோரும், நெருங்குதற்கரிய மும்மூர்த்திகளும் போருக்கு வந்தாலும் அவர்களையும் எதிர்க்கவல்ல ஆற்றல்வாய்ந்த என் தம்பியின் வில்லாற்றைக் கண்ணால் காண்பாய்!” என்றான்.

எண்ணாயிர கோடி இராவணரும்
விண்நாடரும் வேறுஉலகத்து எவரும்
நண்ணா ஒருமூவரும் நண்ணிடினும்
கண்ணால்இவன் வில்தொழில் காணுதியால். (கம்ப: அதிகாயன் வதைப் படலம் – 7803)

அரக்கர் சேனைக்கும் குரக்குச் சேனைக்கும் பெரும்போர் தொடங்கிற்று. தேரிலிருந்து அதிகாயன் போரிட, இலக்குவனைத் தன் தோளில் தாங்கிக்கொண்டு போரிட உதவினான் அங்கதன். அனுமனும் இலக்குவனோடு இணைந்து போரிட்டு அரக்கர் படையை அழித்தான்; திரிசிரன் (முத்தலையன்) எனும் இராவணனின் மற்றொரு மைந்தனைத் தேய்த்துக் கொன்ற அனுமன், போரிடுவதற்கு மேற்கு வாயில் நோக்கிப் போயினான். அனுமனின் செயல்கண்டு விக்கித்துப் போன அதிகாயன், இலக்குவனோடு போர்புரிய முனைந்தபோது, இலக்குவன் அவனைப் பார்த்து, “எறிதற்குரிய படைக்கலங்கள் வைத்துள்ள உன் சேனைகள் எல்லாம் அழிந்தபின்பு நீ போர் செய்வாயா? நீ மட்டும் தனித்து என்னோடு நெடிய போரினைச் செய்வாயா? உன் விருப்பமென்ன?” என்று வினவினான்.

மன்னவன் தம்பி மற்றுஅவ் இராவணன் மகனை நோக்கி
என்உனக்கு இச்சை நின்ற எறிபடைச் சேனை எல்லாம்

சின்னபின்னங்கள் பட்டால் பொருதியோ திரிந்து நீயே
நல்நெடுஞ் செருச் செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான்.
(கம்ப: அதிகாயன் வதைப் படலம் – 7913)

”உன்னை நான் போருக்கழைத்தது தனியாகப் போரிட்டு வெல்லத்தான்!” என்று அதிகாயன் உரைக்கவும், குறுநகை சிந்திய இராமனின் இளவல் அதிகாயனோடு போரைத் தொடங்கினான். வானும் நிலனும் கடலும் அதிகாயனின் பகழிகளால் நிறைந்தன; இவன் கொலைத் தொழில் கற்றது காலனிடமோ என்றஞ்சும்படி வானர சேனையைக் கொன்று குவித்தான் அவன்.

இலக்குவனின் அம்புகள் அதிகாயனின் மார்பைத் துளைத்தபோதும் அவற்றுக்குச் சற்றும் சளைக்காதவனாய்த் தன் அம்புகளை மாரிபோல் தொடர்ந்து சொரிந்தான் அதிகாயன்.

இலக்குவன் அம்புகளைத் தொடர்ந்து எய்தும் அதிகாயன் வீழ்ந்துபடவில்லை; அப்போது இலக்குவன் அருகில் தோன்றிய காற்றரசன் (வாயுதேவன்) நான்முகன் படையாலன்றி (பிரம்மாத்திரம்) இவன் சாகமாட்டான் என்பதை அவனுக்குரைக்க, ”நன்று” என்று உவந்த இலக்குவன், நான்முகன் படையைத் தன் அம்போடு சேர்த்துச் செலுத்த, அஃது அதிகாயனின் தலையைக் கொய்துகொண்டு ஆகாயவழியில் சென்றது. அதன்பின்னர் அங்கதன் தோளினின்று இறங்கினான் இலக்குவன்.

அப்போது அதிகாயனின் தம்பி நராந்தகன் இலக்குவனோடு போர்புரிய வாளோடு வந்துவிட, இடைபுகுந்த அங்கதன் அவன் கை வாளினாலேயே அவனை வீழ்த்திக் கொன்றான்.

அதிகாயன் உள்ளிட்ட அரசகுமாரர்கள் இறந்த செய்தியைத் தூதர்கள் வாயிலாய் அறிந்த இராவணன், ஆற்றொணாத் துயரில் ஆழ்ந்தான். தன் மகன் இறந்த செய்தியை அறிந்த அதிகாயனின் தாய் தான்யமாலி இராவணனின் தாள்களில் வீழ்ந்து புரண்டழுதாள்.

அவள் அரற்றக் கண்டு மௌனமாய் அமர்ந்திருந்த இராவணனைப் பார்த்து, ”என்ன ஐயா சிந்தித்திருக்கின்றாய்? இறந்துபோன அரக்கர்களையெல்லாம் திரும்பிவருமாறு கூப்பிடமாட்டாயோ? காமத்தைக் கைக்கொண்ட நீ உயிர்பிழைப்பாயோ? இன்னமும் இந்தச் சீதை காரணமாய் இன்னும் வரவிருக்கும் துன்பங்கள் சிலதானோ? (இல்லை பல!) என்று கனன்றுரைத்தாள்.

இலங்கை மாநகரெங்கும் அழுகுரல் ஒலித்தது. அது முழுமதி நாளில் தோன்றும் கடலோசையை ஒத்திருந்தது. ஊரெங்கும் ஒலித்த அரக்கியரின் அவலக்குரல் கேட்டு, ”இராவணனுக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ?” என்று ஐயுற்று அவன் அரண்மனை அடைந்தான் இந்திரசித்தன். அங்கே இராவணனைக் கண்டு ஒருவாறு மனந்தேறியவன், ”ஏனிந்த அழுகுரல்? என்னவாயிற்று?” என்று ஐயத்தோடு வினவினான்.

அதிகாயன் உள்ளிட்ட உன் தம்பியர் உயிரைக் காலன் கவர்ந்து சென்றுவிட்டான்” என்று இராவணன் உரைக்கவும், ”போர்க்களத்தில் அவர்களைக் கொன்றது யார்?” என்று கேட்டான் இந்திரசித்தன். ”அதிகாயனை இலக்குவனும் அவன்பின்னால் நின்றிருந்த கும்பநிகும்பரை அனுமனும் கொன்றனர்” என்றான் இராவணன் வேதனையோடு.

கடுங்கோபத்தோடு தந்தையை நோக்கிய இந்திரசித்தன்,

”அரசே! வலிமைமிகு குரங்குப் படையை உடைய மானிடராகிய இராமலக்குவரின் போர்வன்மையை நீ முதல்நாள் போரில் அறிந்திருந்தும் அவர்களோடு போரிட என்ன காரணத்தாலோ என்னை ஏவவில்லை; அதனால் எம்பியரைக் கொன்றவர் அவரில்லை; இவர்களைக் கொலைசெய்யுங்கள் என்று நீயே கொடுத்தாய்; அவர்கள் இறந்துபட்டதால் நம் வலிமை குறைந்துவிட்டது” என்றுரைத்து நீண்டநேரம் அதனையே நினைந்து சினத்தோடு நெருப்புப்போல் பெருமூச்சு விட்டுநின்றான் இந்திரசித்தன்.

கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய்
வன்தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா
என்றானும் எனைச்செல ஏவலை இற்றது என்னா
நின்றான் நெடிதுஉன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான்.
(கம்ப: நாகபாசப் படலம் – 8008)

”போனதை நினைத்து வருந்தியும் உன்னைக் குறைசொல்லியும் இனியென்ன பயன்?” என்று இராவணனிடம் கூறிய இந்திரசித்தன், என் தம்பி அதிகாயனைக் கொன்ற இலக்குவனின் உயிரை அவன் உடலிலிருந்து பிரிக்காமல் இனி இலங்கை திரும்பேன்! அதைச் செய்யாது போவேனேல் உயிர்வாழேன்!

சாவாமருந்து (அமுதம்) போன்றவனாகிய என் தம்பி அதிகாயனின் அரிய உயிரைக் கவர்ந்த இலக்குவனை எமனுக்கு விருந்தாக்காமல் வானவர் நகைக்குமாறு நான் போர்க்களத்தில் வில்லை ஏந்தி நிலத்தில் நின்றேனேல் நான் இராவணன் மகனல்லன்!” என்று வஞ்சினமுரைத்துப் பல்லாயிரங் கோடிப் படைக்கலங்களோடு பேய்க்கொடி பறக்கும் தேரிலேறி ஆறாச்சினத்தோடு போர்க்களத்துக்குப் புறப்பட்டான்.

அங்கே போர்க்களத்தைவிட்டு நீங்காமல் நின்றுகொண்டிருந்த இலக்குவன் இந்திரசித்தன் பெரும்படையுடன் வருவதைக் கண்டு, ”யாரிவன்?” என்று வீடணனிடம் வினவினான்.

அவன், ”ஐய! இவன் தேவர் தலைவனைப் போரில் வென்றவன்; இன்றைய போர் கடுமையானதாய் இருக்கும்; எனவே, நீ தக்க துணைவரோடு போரிடுதல் நன்று” என்றான்.

அப்போது இலக்குவனுக்குத் துணையாகக் காற்றின் மைந்தன் அனுமன் விரைந்துவர, கூடவே சுக்கிரீவனும் அவன் சேனையும் வந்திணைந்தனர்.  

கடும்போரில் இருபக்கமும் பெருஞ்சேதம் விளைந்தது. அனுமன் எறிந்த குன்றைத் தன் அம்புகளால் தூளாக்கிய இந்திரசித்தன், அனுமனைப் பார்த்து ”நில்லடா சற்று நில்லடா! உன்னை எண்ணித்தான் நான் போர்க்களத்துக்கு வந்தேன்; நீ வில்லெடுத்துப் போர் செய்யாமல் உனது வலிமையைப் புகழ்ந்து சொல்லிக்கொண்டு இன்னும் உயிரோடிருந்து விளையாடுகின்றாய்; வெல்லும் நோக்கத்தோடு போர்க்களம் வந்த என் வலிமையடக்க இருப்பவை கல்லும் நீண்ட மரங்களுமா? அடா! சொல்வாயாக!” என்று இகழ்ச்சியோடு கூறினான்.

நில்லடா சிறிது நில்லடா உனை
நினைந்து வந்தனென் முனைக்கு நான்
வில்எடாமை நினது ஆண்மை பேசி உயி
ரோடு நின்று விளையாடினாய்
கல் அடா நெடு மரங்களோ வரு
கருத்தினேன் வலி கடக்கவோ
சொல் அடா என இயம்பினான் இகல்
அரக்கன் ஐயன் இவை சொல்லினான்.
(கம்ப: நாகபாசப் படலம் – 8074)

அதுகேட்ட அனுமன், ”வலிமையற்ற மெல்லியனே! எங்கள் பக்கத்திலும் வில்லெடுத்துப் போர்செய்வதற்குரிய கொடிய வீரர் சிலர் உளர்; கல்லெடுத்துப் போர்செய்வதற்கு உரியவனான நானும் நிற்கின்றேன்; அவ்வாறு இருத்தலை இன்று அல்லது நாளைக்குள் நீ காணலாம்; ஒளிபொருந்திய படைக்கலங்களைத் தாங்கிய இந்திராதியர் உன்னிடம் தோற்று உயிரைத் தாங்கிக்கொண்டு செல்வார்கள்; ஆனால், போரில் தோற்றுப் புல்லை வாயினால் கவ்வ வந்தவர்கள் அல்லோம் நாங்கள்; வேறுசில போர்வகைகளைத் தொடங்கி உன்னோடு போரிட வந்துள்ளோம்.” என்றான்.   

வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில
வீரர் இங்கும் உளர் மெல்லியோய்
கல் எடுக்க உரியானும் நின்றனன்
அது இன்று நாளையிடை காணலாம்
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு
இடைந்து உயிர் கொடு ஏகுவார்
புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில
போர் எடுத்து எதிர் புகுந்துளோம்.
(கம்ப: நாகபாசப் படலம் – 8075)

இப்பாடலில் பயின்றுவந்துள்ள “கல் எடுக்க உரியானும் நின்றனன்” என்ற தொடருக்கு அரக்க இனத்தை அழித்து அவர்களுக்கு வீரக் கல்லெடுப்புச் சடங்கு நடத்தற்குரிய அனுமன் என்ற பொருளும் உரையாசிரியர்களால் சொல்லப்பட்டிருக்கின்றது.

போரில் தோற்றவர் வாயினால் புல்லைக் கவ்வுதல் அன்றைய மரபு. தற்காலத்தில் தோற்றவனை மண்ணைக் கவ்வினான் என்று கூறுவதை இதனோடு ஒப்பிடலாம்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *