கன்னிராசி (மொழிபெயர்ப்புச் சிறுகதை)
மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
முனைவர் நா. தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை
ஒரு வேதியியல் மாணவியான எஸ். மாயாவுக்குப் புவியியலிலும் விருப்பம் இருந்தது. அவள் கரும்பனைகளுக்கு நடுவில் கிழக்காகப் பாய்ந்து செல்லும் பேருந்திலிருந்து வெளியில் கைநீட்டினாள். வெகுதொலைவில் இருண்ட நீல நிறத்தில் மலைகள். அவைகளின் பேரென்ன என்று அவள் உடனிருந்த வினோதிடம் கேட்டாள். ஆனால் அவனுக்கு சொல்ல முடியவில்லை. அவன் படித்தது வரலாறு.
பஸ் சிவப்பு நிறக் கண்களுள்ள பெரிய டைனோசரின் படத்திற்கு அருகில் நின்றது. பஸ்ஸிலிருந்து இறங்கியதும் மாயாவுக்கு ஒரு ஃபேன்டசிக்குள் அகப்பட்டது போலிருந்தது. ஆறேழு கிறிஸ்துவ சிஸ்டர்களும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் அவளுக்கு முன்பாகக் கடந்து சென்றனர். சீருடை அணிந்த மாணவர்களுக்கிடையில் எங்கேயோ தானிருப்பதாக அவள் உணர்ந்தாள். ஒவ்வொரு மாணவிகளையும் அவள் உற்றுப் பார்த்தாள்.
“வாங்க”.வினோத் கூறினான். அவன் பாதையைக் கடந்தான்
மாயா அவனைப் பின்தொடர்ந்தாள்.
அவர்கள் காற்றாடி மரங்கள் அடர்ந்து நிற்கின்ற ஒரு வழியில் நடந்தனர். நடுவழியின் இருபக்கங்களிலும் சுற்றுலாப்பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காட்டேஜுகள். அவைகளுக்குப்பின்னால் மரத்தில் கற்பூர மாங்காய் காய்த்திருந்தது. காற்றில், பழுத்த கற்பூர மாம்பழங்களின் வாசம். மிகத்தொலைவிலல்லாமல் பள்ளி மணியின் முழக்கம், மாயா அதற்கு செவிமடுத்தாள். மறுபடியும் அவளுக்கு வீட்டு ஞாபகம் வந்தது.
கறுப்புநிற ஃபேண்டும் வெள்ளைச்சட்டையுமணிந்த ரூம்பாய் வலதுபுறத்திலுள்ள நானூற்றி இருபதாம் எண்ணிட்ட காட்டேஜைத் திறந்தான். அவன் முதலில் செய்த வேலை ஏர்கண்டிஷனை செயல்படச்செய்வதுதான். அதைத்தொடர்ந்து அறை முழுவதும் ஏதோ ஒரு சத்தம் நிறைந்தது.
“மாயா குளிக்கறியா?”. சூட்கேஸை கட்டில் மேல் கிடக்கும் கம்பளிப்போர்வைக்கு மேல் வைத்துவிட்டு வினோத் கேட்டான்.
ரூம் பாய் போகவில்லை. மாயாவுக்கு வினோதின் அநாகரீக விசாரணைப் பிடிக்கவில்லை. எப்படியிருந்தாலும் காட்டேஜூக்கு வருவதற்கு முன்பே அவள் குளிப்பதைப்பற்றி சிந்தித்திருந்தாள். நீண்ட பயணம் முடிந்து வந்தது வேறு. மார்ச் மாதம் வேறு.
“நான் குளிக்கப்போறேன்.” ரூம்பாய் வெளியில் போனதும் மாயா கூறினாள். அவள் துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் போனாள். கதவுகள் சாத்தப்பட்டிருந்தாலும் ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடிகள் வழியாக வினோத் தன்னை ரசிக்கிறாள் என்பதை அறியாமல் அவள் ஷவருக்குக்கீழே நின்றாள்.
மாயாவை நினைத்துக் கொண்டே வினோத் படுக்கையில் சாய்ந்து படுத்துக்கொண்டிருந்தான். அவளின் உடையில்லாத உடல் வழியாக நீர் வடிந்தது. அதன் ஓசையில் ஒரு பாட்டின் தாளமும் கலந்திருந்தது. “மெஹந்தி கி ராத் ஆயி. மெகந்தி கி ராத்…….”
மாயா தெளிவான ஒரு சிரிப்புடன் கதவைத் திறக்கும் போது வினோத் கதவிற்கு நேர் முன்பாக கைகள் நீட்டி நின்று கொண்டிருந்தான். அருமையான நீராடல் மூலம் கிடைத்த உற்சாகம் அவளுக்கு நொடியிடையில் நஷ்டமானது.
“சே என்னது இது?” அவள் வினோதின் பிடிக்குள் இருந்துத் தன்னை விடுவித்தாள். அதே வேளை கதவைத்தட்டுகிற சத்தம் கேட்டது.
ரூம்பாய்
“நைட்டுக்கு என்ன வேணும் சார்?” அவன் பணிவுடன் கேட்டான்.
“சப்பாத்தியும் சிக்கனும் போதும். ரேண்டு பீரும்” வினோத் கூறினான்.
மாயா, வானத்தின் நீலநிற ஆடையை தனக்காகத் தேர்ந்தெடுத்தாள். மாலை நேர யாத்திரைக்கு மிகவும் சரியான வேடம் என்று வினோத் புகழ்ந்தான். இருவரும் மாலை நேரப் பாதையில் இறங்கினர். வண்ணவண்ண இறகுகள் வைத்தத் தொப்பிகள் அணிந்த பலச்சுற்றுலாப் பயணிகள் அவர்களுக்கு முன்னால் காட்சியளித்தனர்.
அதே போன்று ஒரு தொப்பி தனக்கும் வேண்டுமென்று மாயா ஆசைப்பட்டாள். தாமதிக்காமல் அவளுடைய ஆசை நிறைவேறியது.
“எப்படி இருக்கு?” அவள் தொப்பியை தலையில் அணிந்து வினோதிடம் கேட்டாள்.
“வேறு ஏதோ உலகத்திலிருந்து வந்தவள் போல” அவன் கூறினான்.
“எர்ணாகுளத்திலிருக்கற ஹாஸ்டல மறந்தர்றலாம் இல்லயா?” மாயா சிரித்தாள். வினோத் அவளின் கன்னக்குழிகளை ரசித்தான். அவை உடனே மறைந்தன.
ரோப்வேயில் செல்லும்போது எர்ணாகுளத்தில் உள்ள ஹாஸ்டலோ, கருணை மிகந்த குணமுடைய மேட்ரனோ, உடன் தங்கியிருப்பவர்களோ, ஒற்றப்பாலத்தில் உள்ள வீடோ, குடும்ப அங்கங்களோ மாயாவின் மனதில் இருக்கவில்லை. அவளுடைய வலது கைப்பத்தியை வினோத் சேர்த்துப்பிடித்திருந்தான். அவள் உற்சாகத்துடன் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தாள். வினோத் அடிக்கடி அவளுடையக் கன்னங்களையும் பின்னங்கழுத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய பார்வை தனது உடல் மேல் விழுவதை அவள் கவனிக்கவில்லை. ஒரு சிறு சிறுமியின் ஆர்வத்தைப்போல அவள் தனக்குக் கீழே உள்ளக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். இல்லுமினேஷன் அவளுக்கு ஒரு புதிய அனுபவமானது.
இரவு. ஆல்கஹாலைப் போன்ற வீர்யம் நிறைந்த பழுத்த கற்பூரமாம்பழத்தின் வாசனையை சுவாசித்துக்கொண்டு அன்வர் ஹுசைனும், சதானந்தனும் ஒரு காட்டேஜின் வெளியில் உட்கார்ந்திருந்தனர். காற்றாடி மரங்கள் அவர்களுக்கு முன் கிளைகளை அசைக்காமல் நின்றது.
“அங்கே என்னமோ நடக்குது” அன்வர் ஹுசைன் நேர் எதிர்புறமுள்ள காட்டேஜிற்கு நேராக விரல் சுட்டிக்காட்டிக் கூறினான்.
அறைக்குள் விளக்கு அணைக்கப்படவில்லை. ஆனால் கண்ணாடி ஜன்னல்களுக்கு அப்புறமுள்ள அடர்ந்த திரைச்சீலைகள் அறையின் இரகசியங்களை நிலைநிறுத்தப் போதுமானதாக இருந்தன. அன்வர் ஹுசைனும், நண்பனும் சத்தம் போடாமல் காட்டேஜை நெருங்கினர். இருவரும் வராண்டாவிற்குச்சென்று கவனத்துடன் நின்றனர்.;
“மாயா உனக்கென்னை நம்பிக்கையில்லயா?”
“நம்பிக்கையில்லேன்னா நான் உங்கூட வருவனா?”
“அப்பறம் இப்ப என்ன ஆச்சு?”
“ஒன்னும் ஆகலயே”
“இப்ப உன்னோட நடவடிக்க எனக்கு விசித்திரமா இருக்கு”
“எனக்குத் தூக்கம் வருது”
“சும்மா தூங்கறதுக்காகவா நாம இவ்வளவு தூரம் வந்தோம்?”
“நான் நெனச்சுது உங்கூட ஒரு பயணம் மட்டும்தான். எ ப்ளசன்ட் ட்ரிப்”
“சும்மா வெளயாடறத விடு”
“நா வெளயாடல”
“மாயா ப்ளீஸ்”
“வினோத்! நல்ல பையனாப் போய் தூங்கப்பாரு”
“நா சொல்றதக் கொஞ்சம் கேளு”
“இனி ஒன்னும் சொல்ல வேண்டாம்”
“மாயா……..”
“நோ……..”
வெளியில் காதுகளைக் கூர்மையாக்கி நிற்கின்ற அன்வர் ஹுசைனுக்கும், சதானந்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. கொலுசுகள் போட்டக் கால்களை படுக்கையிலிட்டு அடித்துக் கொண்டிருந்தாள்.
“பகவதி” அவள் விளித்தாள்
“இந்த அறைக்கு யாரும் வரமாட்டங்க” வினோத் கூறினான்.
“கடவுளே நான் எதுக்கு உங்ககூடவந்தேன்.” மாயா விதும்பினாள்.
அன்வர் ஹுசைனும் சதானந்தனும் ஒருவரையொருவர் பார்த்தனர். ஆக்கிரமிப்பினுடையவும், எதிர்த்து நிற்பதினுடையவும் ஓசைகள் அவர்களின் காதுகளில் பதிந்து கொண்டிருந்தன. பிறகு நிசப்தத்தின் ஓர் இடைவேளை. வெளியில் நிற்பவர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது.
“நான் நெனச்சது நாம விரும்பறோமுன்னு” மாயா கூறினாள்.
”அதுதானே உண்மை.” வினோத் கூறினான்.
“ஆனா நீங்க என்ன, ரேப் செய்ய முயற்சிக்கறீங்களே. எதுக்கு?”
“நீ ஒத்துக்கறதில்லயே”
“நான் இத எதிர்பார்க்கல”
“நீ என்னோட பொறுமைய சோதிக்கற”
“கை வலிக்குது”
“வலிக்கட்டும்”
“விடு”
அன்வர் ஹுசைன், சதானந்தனின் தோளைத் தொட்டு ஒரு சைகைக் காட்டினான். இருவரும் சேர்ந்து ஆலோசிப்பதற்காக நடுவழியில் இறங்கி நின்றனர்.
“கதவத் தட்டலாமா?” அடக்கிப்பிடித்தக் குரலில் அன்வர் ஹுசைன் கேட்டான்.
“அது வேணுமா?” சதானந்திற்கு சந்தேகமாயிற்று.
“அப்படீனா போலீஸ்க்கு ஃபோன் பண்ணலாம்”
“பேப்பர்ல செய்தி வந்தா அந்தப்பொண்ணு அப்பறம் உயிரோட இருக்கமாட்டா”
“வேறென்ன செய்றது”
“நா இப்பவே எறங்கிப்போயிடுவேன்” காட்டேஜிற்குள்ளிருந்து பெண்ணின் சத்தம் உயர்ந்தது.
“இந்த இரவிலயா” அவன் கேட்டான்.
அன்வர் ஹுசைன் என்னமோ சொல்லத் தொடங்கினான்.
“ஷ்…..ஷ்….. சதானந்தன் அவனைத் தடுத்தான். காட்டேஜின் கதவைப்பார்த்துக்கொண்டு அவர்கள் காற்றாடி மரங்களுக்கு நடுவில் இரண்டு சிலைகள் போல நின்றனர்.