பூகோளம் முன்னிலைக்கு மீளாது
சி. ஜெயபாரதன், கனடா
காலவெளி கார்பன் வாயு கலந்து
கோலம் மாறிப் போச்சு !
ஞாலத்தின் வடிவம்
கோர மாச்சு !
நீர்வளம் வற்றி
நிலம் பாலையாச்சு !
துருவத்தில்
உருகுது பனிக் குன்று !
உயருது
கடல்நீர் மட்டம் !
பூகோளம் சூடேறி
கடல் உஷ்ணமும் ஏறுது !
காற்றின் வேகமும் மீறுது !
பேய்மழை
நாடெல்லாம் பெய்து
வீடெல்லாம் வீதியெல்லாம் மூழ்குது !
வெப்ப யுகத்தில்
காடெல்லாம் எரிந்து
கரிவாயு
பேரளவு பெருகுது !
பூமியே மாறிப் போச்சு
மீளா நிலைக்கு !
பூகோளம் முன்னிலைக்கு
மீண்டும் மீளாது !
வேலை போச்சு !
கூலி போச்சு !
நோய் நொடிகள்
தாக்க,
மக்கள் அனாதைகள் ஆகிப்
புலப்பெயர்ச்சி !
இப்போ
வெப்ப யுகப் பிரளய
வேளையில்
நாமென்ன செய்யலாம்
நாட்டுக்கு ?
ஊருக்கு ஊர் தேவை ;
ஓராயிரம்
தன்னார்வத்தில் தாவி வரும்
முன்னுதவிப் படை,.
ஒரு நூறு
முதல் உதவிப் படை
பன்னூறு
பின்னுதவிப் படைகள்.
ஊர்ச் செல்வர்
உண்டி, வாகனம், ஆயுதங்கள்,
கருவிகள்
தங்கு விடுதிகள் தயார்
செய்வதற்கு.
பேரிடர் பாதுகாப்பு
கண்காணிப்பு.
முதற்கண் தேவை.
பூமி சூடாகி வாழ இயலாது
போராட்டம்
நடக்குது !
நாமென்ன செய்யலாம்
நாட்டுக்கு ?
பெட்ரோல்
விலை ஏறுது !
உணவைக் குறைத்து
உடல் எடை பெருக்காது,
ஓட்டு
பெட்ரோல் கார்களை.
உயரத்தில் பற தேவைப்படின்
ஜெட் விமானத்தில்.
பயணத்தைக் குறைப்பாய் !
பேருந்து, ரயிலில்
பயணம் செய்வாய்.
நிலக்கரி, எரிவாயு எரிசக்தி
பயன்பாடு
அவசரத் தேவைக்கு மட்டும்.
கவனமாய் இயக்கு
அணுமின் சக்தி நிலையம்.
விலை மிகை ஆயினும்
யுரேனிய உலோகம் பேரளவு
கிடைக்குது.
தேவையான தீங்கு !
தொழிற்சாலையில் வேலைகள்
உண்டு
பலருக்கு, ஆயினும்
கரிவாயு வெளிவீச்சைக்
குறை, குறை,
குறை படிப்படியாய் !
கரிவாயுவை
விழுங்கும், மாற்றும்
இரசாயன முறைகளை ஆய்ந்து
கண்டுபிடி.
தண்டனை உண்டு
தவறிடும் அதிபருக்கு !
பச்சை எரிசக்தி சாதனங்கள்
வாகனங்கள்
நாட்டில் பெருக இயங்க
நாளாகும்,
பத்து, இருபது ஆண்டுகள்
ஆகலாம் !