ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 2

மீனாட்சி பாலகணேஷ்
பிள்ளையார் மீதான இன்னும் இரண்டு அருமையான ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களைக் காணப்போகிறோம்.
3. குப்பிளான் கற்கரை விநாயகர் பிள்ளைத்தமிழ்
ஈழநாட்டின் செம்மண் வளமுடைய குப்பிழான்பதி எனும் ஊரானது கலையும் தமிழும் சைவமும் ஒருங்கே வளர்ந்த ஊராகும்.
ஈழநாட்டிலேயே உள்ள கௌரி அம்மை சமேதரான கேதீஸ்வரப் பெருமானின் திருவாலயத்தினின்றும் கொண்டுவரப்பட்ட விநாயகர் விக்கிரகங்கள் மூன்றில் ஒன்றைக் குப்பிளான் கற்கரைப் பதியில் பிரதிஷ்டை செய்ததாக வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. (சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம், இந்துசாதனம், 17.08.2010)
ஆற்றல் மிக்க ஆன்மீகச் சொற்பொழிவாளரான சைவப்புலவர் திரு. ஏ. அனுஷானந்தன் என்ற புலவனார் கற்கரை விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் அருமையான நூலை ஆக்கியுள்ளார். இதிலிருந்து நான்கு பாடல்களே நமக்குக் காணக் கிடைத்துள்ளன. அவற்றின் இனிமையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
எந்த நூலைப் பாடுமுன்பும் நூலாசிரியர், விநாயகரை வேண்டித் தன் நூலைக் காத்தருள வேண்டுவார். பின்பு, காப்புப்பருவத்தில் காக்குங்கடவுளான திருமாலை வேண்டுவது மரபாகும். இது விநாயகப் பெருமானைப் பற்றிய பிள்ளைத்தமிழல்லவா? இந்நூலாசிரியர் தமது முதல் பாடலில் பிள்ளையாரின் தகப்பரான சிவபெருமானை வேண்டுகிறார்;
மயன், மாந்தாதா, மாதுவஷ்டா, மண்டோதரி (இராவணன் மனைவி) என்பவர்களுடன், நவக்கிரகங்களுள் ஒன்றான கேதுவும் போற்றி வணங்கும் சிவபிரான்; சம்பந்தரும் சுந்தரரும் தமிழால் பாடிப் போற்றப்பட்டவர். சீத நெடுநற் பாலாவிக் கேதீச்சரத் தலத்தோனே! 1520ம் ஆண்டளவில் (ஆயிரத்து ஐநூற்றிருப தாண்டளவில்) அழிக்கப்பட்ட கோவிலின் புதைவினின்று கிடைத்த உனது மைந்தனானவனின் பெருமை விளங்கக் காப்பாயே! என அக்கோவிலின், சரித்திரத்தை உள்ளடக்கிப் பொருள்நயம் மிகப் பாடியுள்ளார். யாரோ வெளிநாட்டவர் அரசாண்டபோது சிதைக்கப்பட்ட கோவிலின் இடத்திருந்து கண்டெடுக்கப்பட்ட பிள்ளையார் இவரென்று இதனால் ஒருவாறு ஊகிக்க இயலுகின்றது.
மயன் மாந்தாதா மாதுவஷ்டா
மண்டோதரியென் பாருடனே
கேதுப் பெயரோன் போற்றிசெயக்
கேடில் ஞானசம்பந்தர்
……………………………………
ஆயுங்காலை ஆயிரத்து
ஐநூற் றிருப தாண்டளவில்
பூனைக் கண்ண ரழிகோயில்
புதையிலிருந்து வந்தநெடும்
சேயன் உந்தன் மைந்தன்சீர்
சிறக்கக் காப்பு அருள்வாயே!
ஆனை வதனன் அரசடியில்
ஆடிமகிழக் காப்பாயே!
அடுத்து அழகான வருகைப்பருவப் பாடலொன்று. காணலாமா?
கரங்களால் தலையில் குட்டிக்கொண்டு காரிய சித்திக்காக உன்னை வேண்டிக்கொள்ள வேண்டுமென்பார்கள்; குடுமியை உடைய தேங்காயைக் கல்மேல் வீசியடித்து உடைத்துச் சிதறுகாய் போட்டு நமது துன்பங்களை நீக்க வேண்டிக்கொள்ள வேண்டுமென்பார்கள். எங்கள் துயரங்கள் அனைத்தையும் விரட்டி ஓட்டி வாழ்விக்க எலிமேல் வருவாய் எங்கோவே! கஜமுகனை உனது தந்தத்தால் பிளந்து அழித்தவனே! திரிபுரத்தைத் தனது நகைப்பினால் எரித்த சிவபிரானின் புதல்வனே வருக வருகவே!
கரங்கள் மொட்டித் துயர்தலைமேல்
கவினப் பிடித்து மெய்யாக
நிரயம் விழினும் நின்னினைவே
…………………………..
கரத்தி லேந்துமுடித் தேங்காய்
கன்மேலடித் துக்கரையில் துயர்
………………………………
வரத்தி லோங்கு கஜமுகனை
வலிய கோட்டாற் பிளந்தழித்தாய்
புரத்தை நகையா லட்டவனின்
புதல்வா வருக வருகவே.
பிள்ளையார் வழிபாட்டில் தலைமேல் குட்டிக்கொள்வது, பின் தடைகள் நீங்க, கல்மேல் சிதறுகாய் உடைத்தல் எனும் வழிபாட்டு முறைகளைப் பாடலில் இணைத்துப் பதிவு செய்து வைத்தமை அருமையானது.
——————————–
4. கனகை விநாயகர் பிள்ளைத்தமிழ்
அடுத்து நாம் பார்க்கப் போவது கீழ் கரவையிலுள்ள கனகராவளவில் கோவில் கொண்டருளியுள்ள விநாயகப்பெருமான் மீது சிவராசசிங்கம் எனும் அடியார் பாடியுள்ள கனகை விநாயகர் பிள்ளைத்தமிழ் எனும் நூலைத்தான்.
பிள்ளையார் தொடர்பான அருமையான கதைகளைக் கூறுவதுமான பாடல்களைக் கொண்டது இந்நூல். செங்கீரைப் பருவத்திலுள்ள ஒரு பாடல் விநாயகர் மாம்பழம் பெற்ற கதையை உரைக்கின்றது!
கோலமயில்மீது ஊர்ந்துவரும் பரங்குன்ற வேலன் இந்த உலகை வலம்வருமுன்பே தாய்தந்தையரான சிவமும் சக்தியும்தான் அனைத்து உலகமும் என்று உணர்ந்து, அப்படியே வலமும் வந்து அவர் கையினின்றும் மாங்கனி பெற்ற கனகைவாழ் விநாயகா! செங்கீரை ஆடுகவே! என வேண்டும் பாடல்.
கோல நீலம யிலினி லூர்பரங்
குன்றின் வாழுங் குருபரன் விசைகொடு
ஞாலந் தன்னை வலம்வரு முன்சிவ
நாதன் தாதையே சர்வமு மெனவரும்
வால ஞானத் திறத்தி லவர்தமை
வலம்வந் தேகனி வாங்கிநம் கனகைவாழ்
நாலு வாய்ப்பர! ஆடுசெங் கீரையே
ஞான நாயக ஆடுசெங் கீரையே
பொதுவாகவே பிள்ளைத்தமிழ் நூல்களில் அவ்வந்தத் தெய்வங்கள் எழுந்தருளியுள்ள தலங்களின் சிறப்புகளையும் பூசை முறைமைகளையும் விளக்கும் செய்திகளையும் பல பாடல்களிலும் கண்டு மகிழலாம்.
இந்த மரபினையொட்டி இந்நூலில் புலவர் யாழ்ப்பாணத்து வழிபாட்டு மரபை உட்பொதிந்து இயற்றியுள்ள ஒரு பாடலை நாம் சிற்றில் பருவத்தில் காணலாம்.
யாழ்ப்பாணத்துக் கோயில்களில் புராண படனம் முக்கியமான பங்கு வகித்து வந்துள்ளது. முருகன் கோயில்களில் கந்தபுராணப் படிப்பு சிறப்பாக இடம்பெறும். பௌராணிகர் ஒருவர் செய்யுளைப்பாட, மற்றொருவர் “பொருள் சொல்வது” வழக்கம். இவ்வாறு பொருள் கூறுபவர் சமய, இலக்கிய தத்துவத் துறைகளில் தமக்கிருக்கும் ஆழ்ந்த அறிவை வெளிப்படுத்துவார். அடியார்கள் கேட்டு அருள் வெள்ளத்தில் மூழ்குவர். அனைவருக்கும் அன்னதானமும் அளிக்கப்படும்.
இப்பாடலில் சிற்றிலிழைத்து விளையாடும் சிறுமியர் அதைச் சிதைக்க முயலும் சிறுவன் விநாயகனை வேண்டுகின்றனர். “சிவன் மகனே! இப் புண்ணியத் திருநாளில் புகழ்வாய்ந்த தில்லைநாத நாவலர், சிலேடைக்கவி ரத்தினம் முதலான சிறப்புவாய்ந்த பௌராணிகர்கள் வள்ளி திருமணம் புராணபடனம் செய்ய இருக்கின்றனர். அதனைக் கேட்க வரும் அடியார்களுக்கு சுவைமிகுந்த உணவை அன்னதானம் செய்யும் பணி எம்முடையதாகும். ஆகவே அது பங்கமாகாதபடி சிறுமிகளாகிய நாங்கள் கையால் கட்டிய (மணல்) சிற்றில்களை அழித்து விடாதே!” என வேண்டுகின்றனராம்.
பொல்லா வினைகள் தீர்கனகைப்
புனிதக் கோயில் தனிற்கந்த
புராண படனமிடம் பெறுமிப்
புண்ய நாளிற் புகழ்மிக்க
தில்லை நாத நாவலர்செஞ்
சிலேடைக் கவிரத் தினமுதலாம்
சிரேட்ட பௌரா ணிகர்வள்ளி
திருக்கல் யாணப் படிப்பிற்றம்
சொல்விற் பனங்காட் டிடவுள்ளார்
சுவைகூ ரன்னம் அவர்க்களிக்கும்
தூயகட னுண்டெமக் கிடையில்
தோன்றி விளையாட் டாக்கருணைச்
செல்வா கருமம் பங்கமுறும்
செயலாய்ச் சிற்றில் சிதையேலே
சிவனார் மூத்த திருக்குமரா
சிறியேம் சிற்றில் சிதையேலே.
(சிற்றில் பருவம்)
அழகும் இனிமையும், ஆன்மீகச் செய்தியும் கொண்டொளிரும் உயர்வான பாடல். நாமும் கனகை பரமானந்த விநாயகரை இருகரங்கூப்பி வணங்கி உலகனைத்தையும் காக்க வேண்டுவோமாக!
இப்பிள்ளைத்தமிழ் நூல்கள் அனைத்துமே பக்திச்சுவை நிரம்பப்பெற்று, அழகான இனிய தமிழில் பல சுவையான கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டு பொலிகின்றன.
(வளரும்)