Blog

  • யாத்ரானுபவம்-2013

    பெருவை பார்த்தசாரதி

    DSC05687

    இன்று நாம் எந்த ஒரு மருத்துவரிடம் சென்றாலும், அவர்கள் மருத்துச் சீட்டோடு கூடவே பரிந்துரைப்பது நடைபயிலுதலும் ஒன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, அன்றாடம், அதிகாலை நடைபயிலுதல் என்பது மனிதனுக்குள்ள அத்தியாவசியக் கடமைகளுள் ஒன்றாகிவிட்டது. ஆனால் இன்று இருக்கும் அவசர யுகத்தில் தினமும் நடைப் பயிற்ச்சி முடித்துவிட்டு அலுவலகம் செல்வதென்பது பலருக்கு சற்று சிரமம்தான்.

    அனுதினமும் நடக்கமுடியவில்லையே?..என்பவர்களுக்கு, வாரத்தில் ஒரு நாள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு நாளாவது எங்காவது நடந்து செல்ல வேண்டும் என்றும் தோன்றும்.   தினமும் அலுவலகம், வீடு, குடும்பம் போன்ற அன்றாட பணிகளில் ஈடுபட்டு அந்த வட்டத்துக்குள்ளேயே சுழன்றுகொண்டிருப்பவர்களுக்கு, ஒரு சில நாட்கள் இவை எல்லாவற்றையும் மறந்து, எங்காவது அடர்ந்த காடு, இயற்கைவளம் நிறைந்த வயல்வெளிகள், ஆரோக்கியமான சுற்றுச் சூழல் இவற்றையெல்லாம் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது சகஜம்!..

    இப்படி ஒரு ஆசை எழுவது, பொதுவாக அனைவருக்கும் பொருந்தும்.  ஆக ஒரு தொலைதூர நடைப்பயணத்தின் அடிப்படையில் தோன்றியதுதான் “பாத யாத்திரை”. இருப்பிடத்துக்கு வெகுதொலைவில் உள்ள ஆலயங்கள், மலைமேல் எழுந்தருளியிருக்கும் இறைவனைத் தரிசிக்க நடப்பயணமாகச் சென்று வருதல் என்பது, தொன்றுதொட்டு அனைத்து மக்களாலும் கடைபிடித்து வரப்படுகிறது.

    சேர்ந்தார்ப்போல் நான்கு நாட்கள் விடுமுறை வரும்போது, வீட்டில் அடைந்து கொண்டு வெளியே செல்லாமல், தொலைக்காட்சி முன்னும். இணைய தளத்திலும் காலம் கழிவதைவிட இறையருட்தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று வந்தால், மனம் விசாலம் அடைந்து,, நிம்மதி நிரந்தரமாகக் குடிகொள்ளும்.

    தேக ஆரோக்கியத்திற்காக தினமும் விளையாட்டு மைதானத்திலும், பூங்காக்கள் மற்றும் சாலைகளிலும் நடந்து சென்றாலும், இறை சிந்தனையோடு நீண்ட நெடுந்தூரத்தை நடந்து கடக்க திருமலை பாத யாத்திரை கைகொடுத்தது.

    இந்த யாத்ரானுபவத்தை வல்லமை வாசகர்களோடு பங்கிட்டுக் கொள்ள விழைகிறேன்.

    சென்னை எல்லை முடிந்து, ஆந்திர எல்லை ஆரம்பித்தவுடன், வழிநெடுக பச்சைப்பசேலென்ற வயல்வெளிகள், பறவைகளும், விலங்குகளும் எழுப்பும் ஒலி மிகத்துல்லியமாகக் கேட்டதை ரசித்தபடி, சில்லென்ற தண்ணீரில் ஆங்காங்கே பசுமைமான புல்வெளியில் குளித்த படி நான்கு நாட்கள் பயணம்.

     ஒவ்வொரு நாளும், இரவில் இரண்டு மணிக்கு மேலும், பகலில் மூன்று மணிக்கு மேலும் தொடர்ந்து நடந்து சென்று, கடக்க வேண்டிய தூரத்தை மெதுவாகக் கடந்து விட்டோம்.  சூரிய, சந்திரக் ஒளிக்கதிர்கள் தொடர்ந்து நமது உடலில் பட்டுக் கொண்டே இருந்ததால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மாறுதல் அடைந்ததை உணர முடிந்தது.

    நமது உடலில் உள்ள ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாடுகளும் கால் பாதத்தில்தான் அமைந்து இருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். அவ்வப்போது, ஒரு சில காத தூரத்தை செருப்பு அணியாமல் நடந்து சென்றதால், காலில் சிறுமணிக்கற்கள் குத்தி வலியைப் போக்கி, பாதத்திற்கு இதம் அளித்ததோடு, இதர உடல் உபாதைகள் குறைத்ததை உணர முடிந்தது. மனமும் சாந்தி அடைந்தது.

    சிறு சிறு குழுக்களாக, நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் தமக்குத்தெரிந்த ஆன்மீகக் கதைகளைச் சொல்ல அனைத்தையும் கேட்டுக்கொண்டே சென்றதால், நாட்கள் போனது தெரியவில்லை. ஆந்திர எல்லைமுதல் திருப்பதி வரை வழியில் உள்ள அனேக வீடுகளில் திண்டோடு கூடிய திண்ணை கட்டி வைத்திருப்பதைக் காண முடிகிறது. யாத்திரிகர்கள் குளிப்பதற்கு தண்ணீர், ஓய்வெடுக்க இடம் எல்லாம் இலவசமாகக் கொடுக்கிறார்கள். ஒரு சில இடங்களில், யாத்திர்கர் என்று சொன்னாலே அனைத்தும் இலவசம்தான்.

    ஏழுமலையானை எளிதில் தரிசிக்க இயலாது என்பதுபோல், நான்காவது நாள் திருமலையை அடைந்தவுடன், சுமார் பத்து மணி நேரத்திற்கும் மேலாக கூண்டில் அடைக்கப்பட்ட பிறகு தான் பகவானின் அறுபுத தரிசனம் கிட்டியது.

    ஒவ்வொரு வருடமும் செல்லும் வழி ஒன்றுதான் என்பதால், சென்று வந்த தலங்களின் சிறப்புபற்றி சென்ற வருடம் வல்லமையில் வெளிவந்த பதிவை இதனுடன் இணைத்திருக்கிறேன்.

    http://www.vallamai.com/?p=30137

    Share
  • குறவன் பாட்டு-22

    குறவன் விற்பனைக்காக நகரம் செல்லுதல்

     

    கானகம் அனுப்பிய தூதுவனாக, குறவன்

    மாநகர் நோக்கி நடந்து சென்றானே,

    தூவனம் ஈந்த பொருட்களை ஏந்தி,

    நாணயமாக விற்க வந்தானே!                                                                                                                178

     

    வேலை நிமித்தம் நகரம் நாடி,

    மேலை நாட்டிலும் கிடைக்காப் பொருட்களை,

    ஏழைக் குறவன் ஏந்திக் கொண்டு,

    கூவிக் கூவி விற்றிட வந்தான்!                                                                                                                  179

     

    தேனைச் சுமந்து தெருவில் நடந்து,

    தெள்ளமு தென்று சொல்லி விற்றான்!

    பூனைப் புனுகைச் சுமந்து கொண்டு,

    காற்றில் நறுமணம் பரப்பி வந்தான்!                                                                                                          180

     

    யானை மயிரை முறுக்கிக் கட்டித்

    தாயத் தாக்கித் தோளில் சுமந்து,

    தாய்மார்க் கெல்லாம் விற்பனை செய்தான்!

    நோய்நொடி நீக்கும் நம்பிச் செய்தான்!                                                                                                      181

     

    காலைகடந்து பிற்பகல் வரவே, மண்

    பானைக் கலத்தில் சுமந்து வந்த,

    மீனை அவித்துச் செய்த உணவை

    மீதம் இன்றிச் சுவைத்து உண்டான்!                                                                                                            182

     

    மீனுண்ட மயக்கத்தில் மரத்தின் நிழலில்,

    கானைக் கடந்து நடந்த களைப்பில்,

    ஏனைக் கவலைகள் எல்லாம் மறந்து,

    கண்கள் மூடிக் குறவன் துயின்றான்!                                                                                                     183

     

    தூக்கம் கலைந்த குறவன் மீண்டும்,

    தன்உடைமை எல்லாம் தூக்கிக் கொண்டு,

    ஊக்கம் கலையா உள்ளத் துடனே,

    ஊருக்குள்ளே விற்றிட வந்தான்!                                                                                                                   184

     

    தோகை விரித்து ஆடிய மயில்கள்,

    உதிர்த்த தோகை எடுத்துக் கொண்டு,

    ஈகை குணத்துடன் எதிரில் வந்த,

    சிறுவர்க் கெல்லாம் கொடுத்து மகிழ்ந்தான்!                                                                                          185

     

    இறந்த மயில்களின் தோலை உரித்து,

    நிறைந்த கொழுப்பினைச் சேகரம் செய்து,

    சிறந்த முறையில் பக்குவம்செய்து, தீயில்

    எரிந்த புண்ணுக்கு மருந்தாய்க் கொடுத்தான்!                                                                                       186

     

    புலிப்பல் விற்பனை செய்தல்

     

    பழுப் பேறியபுலியின் பல்லைத் தங்கள்,

    கழுத் தேறிடும் நகையில் ஏற்ற,

    செழித் தாடிடும் செல்வம் கொண்டோர்,

    விழிப்போடு உயர்விலை தந்தனரே!                                                                                                            187

     

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் நீர் எழுச்சி ஊற்றுகள் முதன்முறைக் கண்டுபிடிப்பு

     
     
     

    Huge Geisers in Europa

    சனிக்கோளின்  துணைக்கோளில் நீர் முகில்,
    பனித்தூள்கள், அமோனியா
    வாயுக்கள் வெளியேறும் !
    பூதக்கோள் வியாழன் துணைக்கோளில்
    பீறிட்டெழும் நீர் எழுச்சிகள்,
    பூமிப் பிளவுகளில்
    சீறியெழும்
    வெந்நீர் ஊற்றுக்கள் போல் !
    நீர்முகில் வாயுக்கள் !
    பனித்துளித் துகள்களும்
    எரிமலை போல்
    விண்வெளியில் வெடித்தெழும் !
    புண்ணான பிளவுகள்
    மூடும் மீண்டும் திறக்கும் !
    எழுச்சியின் வேகம் தணியும் !
    பிறகு விரைவாகும் !
    பனித்தட்டுகள் உருகித்
    தென் துருவத்தில்
    திரவமானது எப்படி ?
    நீர் ஊற்று வெளியேற
    உந்துவிசை அளிப்பது எது ?
    விந்தை யான நீர் எழுச்சி !
    புரிந்தும் புரியாது உலகில் நீர்
    உருவான முறை  !

    ++++++++++++++

    Enceladus Erupts

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி முதன்முறையாக பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவின் [Europa] தென் துருவத்தி

    ​ ​

    லிருந்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயு முகில் பேரளவில் நீராவியாகப் பீறிட்டு எழுந்ததைக் கண்டு பிடித்துள்ளது.  கணனி மாடல் மூலம் கணித்ததில் நீர் எழுச்சியின் உயரம் 200 கி.மீ. [120 மைல்] என்றும், நீர் வெளியேற்ற அளவு வினாடிக்கு 3000 கி.கிராம். என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.  இது  மாபெரும் கண்டுபிடிப்பு.  இவ்வித ஆவிநீர் முகில் எழுச்சி காணப் பட்டால் , அங்கே திரவ நீர் பேரளவில் தள மட்டத்துக்குக் கீழே சிறிது ஆழத்தில் இருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லலாம்.. 

    ஸிந்தியா ஃபிலிப்ஸ் [SETI Institute in Mountain View, California] [December 12, 2013]

    முதன்முதல் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா நீர் ஆவி முகிலைப் பீறிட்டது கண்டுபிடிக்கப் பட்டது.

    2013 டிசம்பர் 12 ஆம் தேதி நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி முதன்

    ​ ​

    முதலாகப் பூதக்கோள் வியாழனின் பனிக்கோளான துணைக்கோள் ஈரோப்பாவின் [Europa] தென் துருவத்திலிருந்து பேரளவு நீர் ஆவி முகில் எழுச்சி வெளியேறியதைக் கண்டுபிடித்தது. இது மாபெரும் ஒரு கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு பனிக்கோள் ஈரோப்பாவின் மேல்தட்டுக்குக் கீழே திரவ நீர்க் கடல் இருப்பது வலுவாகிறது.   அதன் நீரில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனவா என்னும் வினாவுக்குப் போதிய விடை கிடைக்கலாம். 

    Jupiter and Europa

    1995 முதல் 2003 வரை பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றி உளவிய காலிலியோ விண்கப்பல் ஈரோப்பாவின் தளத்தில் பிளவுகள் இருப்பதைக் கண்டிருக்கிறது.  ஆனால் அதிலிருந்து பீறிடும் நீர் எழுச்சிகளைக் கண்டதில்லை.   இப்போது  நீர் எழுச்சி கண்டு பிடிப்பு, தரை மேற்தட்டு மெலிந்த தென்றும், மென்மை ஆனதென்றும் தெரிவித்துள்ளது.  மேலும் தரைக்கடியில் பெரியதோர் நீர்க்கடல் இருப்பதையும் ஊகிக்க வழி வகுத்தது.   இதுபோல் சனிக்கோளின் பனிக்கோளான துணைக்கோள் என்சிலாடஸிலும் [Enceladus] நீர் எழுச்சிகள் எழுவதை 2005 இல் காஸ்ஸினி விண்ணுளவி காட்டியுள்ளது.   கணனி மாடல் மூலக் கணித்ததில் ஈரோப்பா நீர் எழுச்சியின் உயரம் 200 கி.மீ. [120 மைல்] என்றும், நீர் வெளியேற்ற அளவு வினாடிக்கு 3000 கி.கி. என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

    முந்தைய காலிலியோ விண்ணுளவி முயற்சிகளில் இவ்வித நீர் எழுச்சிகளைக் காணாது போயிருக்கலாம் என்று லாரென்ஸ் ரோத் கூறுகிறார்.  அவர் டெக்ஸஸில் உள்ள ஸான் அன்டானியோ தென் மேற்கு ஆய்வகத்தைச் சேர்ந்தவர்.  பூதக்கோளின் வலுத்த ஈர்ப்பு விசைக்கு எதிர்ப்புறம் வரும் போது ஈரோப்பா துணைக் கோளிலிருந்து நீர் பீறிடுகிறது என்று கூறுகிறார் லாரென்ஸ்.   தற்போது ஹப்பிள் விண்ணோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நீர் எழுச்சிக் காட்சி  7 மணிநேரம்  நீடித்து இருந்து கண்டுபிடிப்பை உறுதிப் படுத்துள்ளது.

    ஈரோப்பா துணைக்கோள் நீர்க்கடலில் உயிரின வளர்ச்சி இருந்திருப்பதை ஒருவேளை விஞ்ஞானிகள் காணலாம்.   தற்போது பூதக்கோள் வியாழனை நோக்கிப் போகும் ஈசாவின் ஜீயிஸ் [JUICE] விண்ணுளவித் திட்டமும், நாசாவின் ஜூனோ [JUNO]  திட்டமும் நீர் எழுச்சிக் காட்சியை நெருங்கிக் கூர்ந்து நோக்கும்.   தரைக்கடியில் நீர் இருந்தால், அடியில் தோண்டா மலே நீர் எழுச்சியில் உயிரின வளர்ச்சித் தடங்களைக் விஞ்ஞானிகள் காண முடியும்.

    fig-1c-europa-internal-structure

    சனிக்கோளில் எழுந்த பூதப்புயலில் நீர்ப்பனி முகில்கள், அம்மோனியா பனித்தூள்கள் அருகிலே காணப்பட்டன.   அந்தக் கலப்பில் நீர்ப்பனியின் பரிமாணம் சுமார் 22%, அம்மோனியா பனி 55%, மீதி அளவில் ஓரளவு அம்மோனிய ஹைடிரோ ஸல்ஃபைடு இருந்தது.   இதுவரை [2013 செப்டம்பர்]  இவ்விதம் பரிமாண அளவீட்டில் நீர்ப்பனி முகில், வாயுப் பனி கலவையைத் துல்லியமாக யாரும் சனிக்கோள் சூழ்வெளியில் இருப்பதை வெளியிட்டதில்லை.

    லாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி  [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]

    “சனிக்கோளின் இந்தப் பூதப்புயல் முகில் மூட்டத் துகள்கள் எரிமலை போல், [200 கி.மீ.] ஆழ்தளத்தி லிருந்து மேல்நோக்கி வீசி எறியப்பட்டு,  சூழ்வெளி மண்டலத்தில் முதன்முறை நேரே தெரியும்படிக் காட்டி

    ​ ​

    யுள்ளது.   நீர் மயத் துளிகள் சனிக்கோளின் ஆழ்தளத்தி

    ​ ​

    லிருந்துதான் இழுக்கப் பட்டு ஆற்றல் மிக்க வெப்பச் சுழற்சியால் 

     ​ ​

    [Powerful Convection], சூழ்வெளி மேலே வீசப்பட்டிருக்க வேண்டும்.  ஆவியான நீர்மை குளிரில் குவிந்து பனியாக மாறி உறைகிறது. ” 

    லாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி  [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]

    fig-1b-geysers-in-the-south-pole-of-enceladus

    2010-2013 ஆண்டுகளில் அடித்த சனிக்கோளின் பூதப்புயலில் முதன்முறையாக நீர்ப்பனி முகில்களும், அம்மோனிய வாயுப் பனித்தூள்களும் தூக்கி எறியப்பட்டதை நாசா அனுப்பிய காஸ்ஸினி விண்ணுளவி பரிமாண அளவில் காட்டியுள்ளது.   இது விஞ்ஞானி

    ​ ​

    களுக்கு சனிக்கோளின் முகில் மூட்டத்தின் கீழே என்ன உறைந்துள்ளன என்று தெளிவாய் எடுத்துக் காட்ட அரியதோர் வாய்ப்பை அளித்துள்ளது.   அத்துடன் சனிக்கோளின் சூழ்வெளியில் நடக்கும் இயக்கத்தைப் புரியவும், கலந்துள்ள இரசாயன மூலக்கூறுகளை அறியவும் முடிகிறது. சனிக்கோள் பரிதியை 30 ஆண்டுகட்கு ஒருமுறை சுற்றி வருகிறது.   இத்தகைய பூதப்புயல் 30 ஆண்டுக்கு ஒருமுறையே சனிக் கோளின் வட புறத்துக் குமிழில்  நேர்கிறது.   2010 ஆண்டில் நிகழ்ந்த பூதப்புயல் மானிடர் கண்ட ஆறாவது பெரும் புயலாகக் கருதப்படுகிறது.   இது அடிக்கத் துவங்கி பூதப்புயலாகி சீக்கிரம் 15,000 கி.மீ. [9300 மைல்] நீளத்தைத் தொட்டது. முக்கிய கண்டுபிடிப்பு என்ன வென்றால்,  பூதப்புயலில் தெரிந்தமுகில் மூட்டத் துகள்கள், மூன்று பண்டங்களின் கலவையாக அறியப்பட்டன:  நீர்ப்பனித் துகள்கள், அம்மோனியா பனித் தூள்கள், அடுத்து ஒருவேளை அம்மோனிய ஸல்ஃபைடாக இருக்கலாம்.   மேலும் அவ்வித பூதப் புயல்கள் வெளித் தெரியும் முகில் மட்டத்திலிருந்து சுமார் 200 கி.மீ. ஆழத்திலிருந்து கிளம்பி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  பூதப்புயலின் வேகம் சுமார் மணிக்கு 300 மைல் தூரத்துக்கும் மேற்பட்டது. 

    Encyladus

    “(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்சிலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க ஒன்று வேறில்லை !  மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்ப

    ​ ​

    ளிக்கிறது !  அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை.  அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது.  நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.” 

    காரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]

    “என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன.  மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”

    கிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு

    fig-2-hot-giant-geysers-in-enceladus-south-pole

    “சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்கு

    ​ ​

    களின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!” 

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)] ”

    சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    american-yellowstone-park-geysers

    “இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”

    டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris] ”

    பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    Cassini Space Probe -1

    சனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி

    2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றி வரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக் கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது.  என்சிலாடஸ் பனித்

    ​ ​

    தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன.  என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது.  மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன,  அந்தப் பிளவு

     ​ ​

    களிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார்.  அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார். 

    fig-1a-geysers-in-saturns-moon-enceladus1

     

    சனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel).  சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது.  சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது.  அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது.  E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன.  பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படு கிறது.  அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப் படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்

    ​ ​

    புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன.  காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகள் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. 

    Cassini Image of Water

    என்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன ?

    வரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன.  என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது.  வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசை யால் எதிராகத் தள்ளப்படுகிறது.  ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன.  பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன.  சில இடங்களில் ஆழம் குறைவு.  அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன. பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்).  ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்

    ​ ​

    தான் இருக்க வேண்டும்.  ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன ?  பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன ?  அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது ?  இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது ? 

    fig-3-greenland-ice-cold-land

    பரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்

    ​ ​

    கோளும் ஒன்று.  பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு.  யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு.  நீர் வெள்ளத் துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே.   காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென் துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது.  அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித் தளங்களைக் காட்டியது.  மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன.  மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது. 

    fig-1c-how-the-geyser-does-function

     
    தென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்

     

    என்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது.  சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக் கலாம்.  அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக் கலாம்.  பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித் தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித் தூள்களுடன் பீறிட்டு எழலாம்.  என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக் கோள் டிரிடான் (Triton).  பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.
    தென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது.  பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C)   பனித் தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது.  இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது.  அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது.  வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறு களும் காணப்பட்டன.  2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒரு வேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.

    fig-4-hot-geysers-jump-upon-friction

    சனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்

     

    2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்

    ​ ​

    கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம்,

    ​டை​

    டான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது! 

    fig-3-water-springs

    2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன் முதல் அனுப்பியுள்ளது! சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டு பிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக் கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது !

     fig-4-earth-titan-atmosphere

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?

    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html (Elceladus & Mars)

    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html (Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html (Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Saturn’s Strangely Warm Moon By Emily Sohn [Dec 2005]
    25. NASA’s Report : Icy Particles Streaming form Saturn’s Enceladus [Dec 6, 2005]
    26 A Hot Start Might Explain Geysers on Enceladus [March 24, 2006]
    27. Science Daily: Enormous Plume of Dust & Water Spurts into Space from the South Pole of Enceladus [Feb 23, 2008]
    28. Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Signal Underground Water & Microbial Life By Casey Kazan [Nov 11, 2008]
    29.  Saturn’s Dynamic Moon Enceladus Shows More Signs of Activity [Dec 15, 2008]
    30. Astronomy Now Online – Cassini Reveals Enceladus’ Shifting Terrain By Dr. Emily Baldwin [Dec 19, 2008]
    31 NASA Scientists Ask : Is Life Possible on Saturn’s Moon Enceladus ? [Dec 19, 2008]

    32  http://www.wired.co.uk/news/archive/2013-09/04/saturn-hurricane-water-ice [September 4, 2013]

    33  http://www.universetoday.com/104488/massive-storm-reveals-water-deep-within-saturns-atmosphere/ [September 3, 2013]

    34.http://www.saturndaily.com/reports/Massive_storm_pulls_water_and_ammonia_ices_from_Saturns_depths_999.html[September 13, 2013]

    35. http://www.lpi.usra.edu/education/explore/ice/background/iceSolarSystem/  [October 9, 2009]

    36. http://www.dailygalaxy.com/my_weblog/2013/12/spectacular-water-plumes-reaching-heights-of-200-kilometers-discovered-on-europa-.html  [December 13, 2013]

    37.  http://www.newscientist.com/article/dn24743-first-water-plume-seen-firing-from-jupiter-moon-europa.html?full=true&print=true#.Ur9Kr6i_gsU  [December 12, 2013]

    38.  http://en.wikipedia.org/wiki/Galileo_(spacecraft)  [December 28, 2013]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) [December 28, 2013]

    Share
  • ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்..

    கவிஞர் காவிரி மைந்தன்

    சினிமாப் பாடல்களில் என்ன இருக்கு? அதற்கெதற்கு இத்தனை முக்கியத்துவம்? சினிமாங்கிறதே வெறும் பொழுது போக்கிற்காகத்தான்! அதைப் பார்த்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்கிற முணுமுணுப்புகள் சில சமயம் நம்மை யோசிக்க வைக்கும்! ஆனா.. நடைமுறையில் சினிமாவும் சரி.. சினிமாப்பாடல்களும் சரி.. மனித வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.. அதுவும் நாம் சுட்டிக்காட்டும் பொற்காலப் பாடல்களில் இடம்பெற்ற பல்வேறு பாடல்கள்.. பகுத்தறிவை ஊட்டுவனவாக, தன்னம்பிக்கை தருவதாக, ஆறுதலை அளிப்பதாக என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்! மேலும் அவை வெறும் பாடல்வரிகளாக மட்டும் பவனிவராமல் இசையோடு இணைந்து வருகின்றபோது பாடல்கள் பதியாத இதயங்கள் ஏது? இதோ ஒரு எடுத்துக்காட்டு!

    அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பெரியவர் சுந்தரவரதன் குரோம்பேட்டையிலிருந்து வருகிறேன்.. என்கிற அறிமுகத்துடன் என்னோடு பழைய பாடல்கள்பற்றி பேசத் தொடங்கினார். ஒரு நாள் காலை ஸ்நானம் முடித்து வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து தோளிலே துண்டையும் போட்டுக்கொண்டு கறிகாய் வாங்க மார்க்கெட்டிற்கு நடந்து சென்றபோது சாலையில் தங்கியிருந்த மழைநீர்.. அவ்வழியே சென்ற நான்கு சக்கர வாகனத்தால் தனது உடைகள் அனைத்தையும் முற்றிலுமாய் பாழ்படுத்திவிட்டதுவாம். எந்த ஒரு நபருக்கும் அப்படி நேரும்போது என்ன செய்வோம். அந்த வாகன ஓட்டியை உரக்கக்குரல் எழுப்பித் திட்டோ திட்டு என்று திட்டித்தீர்ப்போம்! இதுவே இயல்பாய் மனிதர்கள் செய்வது! இவர் என்ன செய்தார் தெரியுமா? அமைதியாய் சில நிமிடங்கள் ஒதுங்கி நின்றாராம். பிறகு.. கீழ்க்காணும் அன்புக்கரங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளை சந்தோஷமாய் பாடியபடியே வீட்டிற்குத் திரும்பினாராம்..

    வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்.. அந்த
    நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்..
    உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? அந்த
    ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?

    ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்..இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..

    கோபப்படும்போது நமது உடலில் அதிகமான ரத்தநாளங்கள் செயல்படவேண்டியிருக்கின்றன. ரத்த அழுத்தம் அதிகமாகிறது. நமது கோபத்தால் அந்த இடத்தில் ஆவது ஒன்றும் கிடையாது.. ஆனாலும் அதுதெரிந்திருந்தும்.. கோபத்தை அடக்கமுடியாமல் நாமே அவஸ்தைக்கு உள்ளாகிறோம். கோபம் வரும்போது சுவாமி பெயரை உச்சரிக்கவும்.. 1, 2, 3 என்று எண்களை வரிசைப்படுத்தி எண்ணவும் என்று பல்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டிருந்தாலும்.. நடைமுறையில் செய்கிறோமா? இதுபோன்ற உண்மை நிலையை உணர்த்தும் பாடல்களை சற்று உரக்க உச்சரித்தால் உள்ளம் அமைதி பெறுமே!

    இப்ப சொல்லுங்க.. திரைப்படப் பாடல்கள்தானேன்னு விட்டுவிட முடியுமா? நல்லது எங்கே இருந்தாலும் அது நமக்குத்தானே!!

    திரைப்படம்: அன்புக் கரங்கள்

    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை: ஆர். சுதர்சனம்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    ஆண்டு: 1965

    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
    காக்காக் கூட்டத்தப் பாருங்க
    காக்காக் கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்க?
    காக்காக் கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்க?
    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

    வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் – அந்த
    நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
    வீட்டெ விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம் – அந்த
    நாலும் தெரிஞ்சு நடந்து கிடடா நல்லா இருக்கலாம்
    உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா?
    உன்னைக் கேட்டு என்னக் கேட்டு எதுவும் நடக்குமா? – அந்த
    ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?

    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

    தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே – அந்தத்
    தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
    தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே – அந்தத்
    தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே
    பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை
    பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை – இதைப்
    புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை

    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

    கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் – வானில்
    கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
    கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் – வானில்
    கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
    நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
    நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம் – நாம்
    நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்

    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
    காக்காக் கூட்டத்தப் பாருங்க – அதுக்குக்
    கத்துக் கொடுத்தது யாருங்க?
    ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்

    1965ல் வெளிவந்த அன்புக் கரங்கள் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி இயற்றி ஆர். சுதர்சனம் இசையமைத்து டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல். எம் ஜி ஆருக்காக எழுதப்பட்டு.. பிறகு சிவாஜிக்கு பயன்படுத்தப்பட்ட பாடல் வரிகள் போல் தோன்றுகிற பாடல். மனதை தொடுகிற வரி..

    உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? அந்த
    ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?
    ஒரு பெரிய தத்துவத்தை இதைவிட எளிமையாய் எப்படி சொல்ல முடியும்?

    சில சமயங்களில் வாலி .. கண்ணதாசனைவிட எதார்த்தமாக தெரிகிறார் என்கிறார் திரைப்பாடல் ஆர்வலர் ராகப்ரவாகம் சுந்தர் அவர்கள்.

    வாலி அவர்கள் மறைந்தபோது .. தி ஹிந்து நாளிதழில் ஒரு கட்டுரை..

    “எனக்கு வசதியான குடும்பம் இருந்தும் சினிமாவிலே ஜெயிக்கணும்னு ‘இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டேன்’ ‘வெய்யில்லே சுத்தினா தலை வலி வரும்.. மழயிலே நனைஞ்சா ஜலதோஷம் வரும்.. இதுதான் கர்மா.. ” – வாலி ..

    “கர்மா என்பதை இதைவிட எளிமையாக யாரும் சொல்லமுடியாது தி ஹிந்து நாளிதழில் மாலதி ரெங்கராஜன் எழுதிய கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
    http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

    http://www.youtube.com/watch?v=4fL5GLsmtSk

    Share
  • சீதாயணம் நாடகப் பின்னுரை

    சீதாயணம் படக்கதை -13

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு : வையவன்

    ஓவியம் : ஓவித்தமிழ்

    unnamed (1)

    unnamed (2)

    unnamed (3)

    jay

    சீதாயணம் – ஓரங்க நாடகத்தின் பின்னுரை

    பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச் சண்டைகளும், இனச் சண்டைகளும், மாநிலச் சண்டைகளும், மொழிச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் காயப் படுத்திப் போவது வருந்தத்

    ​ ​தக்க வரலாற்று மைல் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைப் போருக்குப் பிறகு மதப்போரை மறுபடியும் துவக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும் புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்! இராமன் பிறந்த புனித பூமியான அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசாகாமல் இந்து கோயில் எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல் மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வர்க்கமும் இராமன் அவதாரத் தேவன் அல்லன் என்று பலமுறை பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்த தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப் போராட்டங்கள் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது!
    இராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன் வரலாற்றில் குறிப்பிடுவதற் கில்லை! புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை! அசோக மாமன்னர் புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும் இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர்க்கவு மில்லை! அவனது வரலாற்றில் எந்த சமயத்திலும் சிந்திக்கத் தக்க, கல் வெட்டில் பொறிக்கத் தகுந்த எந்தப் பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ பேசியதில்லை! தரணியைக் காக்க வந்த தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை! இராவணன் உள்பட அக்கிரமம் செய்த அரக்கர்களைக் கொன்றதைத் தவிர, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற எந்த மகத்தான பணிகளையும் இராமன் செய்திருப்பதாகத் தெரிய வில்லை. கிருஷ்ண பகவான் இசைத்ததாகக் கூறும் பகவத் கீதை போல இராமன் இந்துமத வேத நூலெதுவும் எழுதவில்லை! மெய்யாக கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதரித்துப் பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தர்க்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே!

    உலகிலே மாபெரும் மகாபாரதக் காவியத்தை எழுதிய வியாச முனிவர்தான் அற்புத வேதநூல் பகவத் கீதையை ஆக்கினார் என்பது என் அழுத்தமான கருத்து. பூமியில் அவதரித்து யுத்த களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவரில் அர்ச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும் தர்க்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப் பின்னால் வந்தவர், கிருஷ்ண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும் பெற தெய்வீக முலாம் பூசி விட்டர்கள். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு, எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று நமக்கு வள்ளுவர் கூறி இருக்கிறார்.

    சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் இராம கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால் பலரால், பலமுறை மாற்றமாகித் தெய்வீக முலாம் பூசப்பட்டுப் புராணப் பொய்க் கதையாய், உணர்ச்சி ஊட்டாத, உயிரற்ற காவியமாய்ப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜகோபாலாச்சாரியார் தானெழுதிய இராமாயண நூலில் கூறுகிறார். தெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று சொன்ன வுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங் களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க வர்க்கத்தின் விதிகளையும், வரலாற்றையும் காட்டுகிறது! எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார்.

    வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி, கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத் தவறு மில்லை! தெய்வம் தொழாள் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின் அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே, வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி யிருக்கிறார்! கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன ?

    இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண கதைகள் அனைத்தும் ஆணாதிக்க வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன! பஞ்ச பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பனையமாக வைத்து இழந்தார்கள்! துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில் நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான். பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான். இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக் கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன் எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே!

    மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம் செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே! இப்போதும் பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வர்க்கம் ஆண்டு வந்தாலும், சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது! ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ இரண்டில் ஒன்றில்லாத இல்லங்கள் கலியுகத்தில் மிகமிகக் குறைவே.

    இராமன் ஆண்ட காலத்தில் வாழ்ந்து, இராம வரலாற்றை அறிந்த வஷிஸ்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகிய முப்பெரும் முனிவர்களில் வால்மீகி மட்டும் இராம கதையை ஏன் எழுதினார் என்பது கேட்கத் தக்க ஒரு கேள்வி. மூன்று முனிவர்களில் யார் மூத்தவர், யார் இளையவர், யார் இடைப்பட்டவர் என்பது தெரியவில்லை. அவர்களில் முக்கியமாக வஷிஸ்ட முனிவரே இராமன், பரதன், சத்துருகனன், இலடசுமணன் ஆகிய நான்கு இளவரசர்களுக்கும் குருகுல ஆசிரமத்தில் ஆரம்பக் கல்வி முதல் வேத ஞானக் கல்வியும் புகட்டி, வில்வித்தை, வாள்வீச்சு போன்ற போர்த்துறை திறமைகளைப் பெறவும் பயிற்சி அளித்தவர். அதைப் போன்று ஆசிரமத்தில் சீதாவின் புதல்வர் லவா, குசா இருவருக்கும் ஆரம்பக் கல்வி, வில், வாள் போர்ப் பயிற்சி அளித்தவர், வால்மீகி. இராமனது வயது, லவா, குசா இரட்டையர் வயது வேறுபாடுகளைப் பார்க்கும் போது, வால்மீகி முனியே மூவரிலும் இளையவர் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். இராம கதையை வால்மீகி முதலில் தானாகவே எழுத ஆரம்பித்தாரா அல்லது சீதா ஆசிரமத்தில் வந்த பிறகு எழுத ஆரம்பித்தாரா என்பதும் தெரியவில்லை. சீதா ஆசிரமத்தில் இருந்து தன் அவலக் கதை முழுவதையும் கூறிய பின், வால்மீகி இராம கதையில் ஈடுபாடு கொண்டு எழுதத் துவங்கி யிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது.

    [தொடரும்]

    **********

    தகவல்

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

    3. Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata By: Romesh C. Dutt [1969]

    6. Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma [2004]

    7. http://jayabarathan.wordpress.com/seethayanam/ [நெஞ்சின் அலைகள்]​

    8. ​http://www.vallamai.com/?p=21424 [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013) [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • தமிழ் வளர்க்க ஒரு யோசனை – நீதிபதி மூ.புகழேந்தி குரல் பதிவு

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    Justice_Mu_Pugazenthiஓய்வுபெற்ற நீதிபதி மூ.புகழேந்தி அவர்களைக் கவிஞர் புதுகை மா.உதயகுமாரும் நானும் 27.12.2013 அன்று, தாம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். மூ.புகழேந்தி அவர்கள், 14 நூல்களை இயற்றியுள்ளார். கவிஞர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நாவல் எழுதியுள்ளார். சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

    இவருடன் உரையாடியபோது, தமிழை வளர்க்க, ஒரு யோசனை கூறினார். பள்ளி நிலையில் தமிழை ஒரு பாடமாக வைத்துள்ளது போல், கல்லூரி அளவிலும், அதிலும் கலை – அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்லாது, மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட இதர கல்லூரிகளிலும் இளங்கலை மட்டுமல்லாது முதுகலை மாணவர்களுக்கும் தமிழை ஒரு பாடமாக வைக்க வேண்டும். அப்போது தமிழ் தானாக வளரும் என்றார்.

    அவரது கருத்துகளை இங்கே கேளுங்கள் –

    http://www.4shared.com/mp3/mnYZEaci/Pugazenthi_judge_final.html

    நேர அளவு: 03.55 நிமிடங்கள்

    மெல்லிசை: வசந்தி சுப்பிரமணியன்

    Share
  • வாழ்க்கை நலம் – 41

    குன்றக்குடி அடிகள்

    41. கூட்டுறவு

     

    ‘உலகத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றமெல்லாம் கூட்டுறவின் அடிப்படையில் தோன்றியனவாகும். தோல்விகள் எல்லாம், வாழ்க்கையையும் நடவடிக்கையையும் உண்டாக்கும் பொருள்களிடையே கூட்டுறவு காணப்பட்டதால் நேர்ந்தவைகளாகும்’ என்றார் – எஸ். கே. டே. “கூட்டுறவு இயக்கம் மிக முக்கியத்துவம் ஆகிவிட்டதை எல்லாரும் புரிந்து கொண்டதாகச் சொல்வதற்கில்லை” என்றார் மாமேதை லெனின்.

    கூட்டுறவு, மக்கள் இயக்கமாக விளங்க வேண்டும். கூட்டுறவு அமைப்புகளில் அரசியல் கட்சிகள் தலையீடும், அரசின் அதிகாரங்களும் ஊடுருவுதல் கூடாது. கூடவே கூடாது. இதனால் அரசின் தொடர்போ – மேற்பார்வையா, தணிக்கையோ கூடாது என்பதல்ல. அரசின் அணுகுமுறைகள் கூட்டுறவை பொருத்தவரையில் குடியரசின் அடிப்படையான குடிமக்களின் நல்லிணக்க வாழ்க்கைக்கும், கூட்டுறவுப் பொருளாதார வளர்ச்சித் துறைக்கும் நிர்வாகத் துறைக்கும் பயிற்ருவித்து வழிகாட்டக் கூடியதாக அமைய வேண்டும்.

    எந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகக் குழுவைக் கலைத்தல் – தனி அலுவலர் நியமித்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது. இங்ஙனம் செய்வது மனித உரிமைகள் அடிப்படையிலும், அறநெறி அடிப்படையிலும் முற்றிலும் தவறானது.

    ஏனெனில் கூட்டுறவில் அதன் உறுப்பினர்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களைப் பங்குகளாக இட்டு வைத்துள்ளார்கள். அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை அந்தக் கூட்டுறவு அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவு அங்கத்தினர்களை – கூட்டுறவு நிர்வாகிகளை விலக்குவது மரபல்ல.

    மக்களும் கூட்டுறவைத் தங்களுடையதாகவும் பொதுநலத்திற்கு உரியதாகவும் கொண்டு ஒத்திசைந்து வாழ்தல் வேண்டும். கூட்டுறவில் தனி நலத்திற்கும் பொது நலத்திற்கும் இடையே மோதல் ஏற்படும்போது, பொது நலத்திற்கே முதன்மை இடம் வழங்கப் பெறுதல் வேண்டும். ஏனெனில் தன்னலத்தில் பொது நலம் அடங்காது. பொது நலத்தில் தனி மனித நலம் அடங்கும். மேலும் பத்திரமாகவும் இருக்கலாம்.

    “ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்.”

    (திருக்குறள் – 214)

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

     

    Share
  • எது அவமானம்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் நியுயார்க் நகரில் துணைத் தூதுவராக இருந்த தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டதையடுத்து இந்தியாவில் எல்லாக் கட்சி அரசியல் தலைவர்களும் பூமிக்கும் வானத்துக்குமாகக் குதிக்கிறார்கள். அவர் கைதுசெய்யப்பட்டது இந்தியத் தூதரக ஊழியர் என்ற முறையில் செய்த தவறுக்காக அல்ல. தனிப்பட்ட முறையில் தன் வீட்டில் வேலைபார்த்த பெண்ணுக்கு அமெரிக்கச் சட்டத்தின்படி சரியான சம்பளம் கொடுக்கவில்லை என்பதற்காகவும் அந்தப் பெண்ணுக்கு விசா வாங்குவதற்குரிய விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் கொடுத்தார் என்பதற்காகவும்தான். அமெரிக்காவின் சட்டங்களைப் பொறுத்தவரை இவை இரண்டும் மிகப் பெரிய தவறுகள். அவற்றை யார் செய்திருந்தாலும் அமெரிக்காவில் தண்டனை கிடைத்திருக்கும். வேலைக்காரப் பெண்ணுக்குக் குறைந்த சம்பளம் கொடுப்பது இந்தியாவில் வேண்டுமானால் தவறாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் அமெரிக்காவில் இது மிகப்பெரிய தவறு. விசா விண்ணப்பத்தில் பொய்த் தகவல்கள் கொடுப்பதும் பெரிய தவறு. இவை இரண்டையும் யார் செய்தாலும் இதே மாதிரிதான் நடத்தப்பட்டிருப்பார்கள். லஞ்சம் வாங்க முயன்றார் என்ற குற்றத்திற்காக இல்லினாய் மாநில முன்னாள் முதல்வர் பதினாலு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று இப்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். மலைமுழுங்கிகளாக இருக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு பெரிய செல்வாக்கு பெற்ற அரசியல்வாதியையும் அமெரிக்கா விட்டுவைப்பதில்லை என்ற உண்மை தெரிந்திருந்தால் இப்படி நடந்துகொள்வார்களா? பதிலுக்குப் பதில் என்று என்னென்னவோ சின்னத்தனமான காரியங்களை எல்லாம் செய்துவருகிறார்கள். இம்மாதிரிச் செயல்கள் இந்தியாவின் நன்மைகளுக்குத்தான் இடையூறாக விளையும் என்று ஏன் இந்த அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவில்லை?

    இந்தியாவில் மிகப் பெரிய ஊழல்கள் புரிந்த பீஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடந்து ஒரு வழியாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களைச் சிறையில் கழித்த இவர் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார். தன் சொந்த வீட்டிற்குப் போகுமுன் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் உள்ள கோவில் ஒன்றுக்குச் செல்கிறார். (மாட்டுத் தீவன ஊழலில் 950 கோடி ரூபாயை முழுங்கிவிட்டு எப்படி இறைவனைச் சந்திக்கச் செல்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை.) இவரோடு உடன் செல்ல இவருடைய ஆதரவாளர்கள். இவருடைய பாதுகாப்புக்கு காவல் துறையைச் சேர்ந்தவர்கள். கோவிலுக்குள் நுழையும் முன்பு லாலு தன் காலணிகளைக் கழற்றுகிறார். அதைக் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வாங்கி தன் கக்கத்தில் இடுக்கிக்கொள்கிறார். டி.எஸ்.பி லெவலில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி லாலுவின் காலகளைக் கழுவிவிடுகிறார். கோவிலுக்குள் சென்று லாலு சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்புகிறார். அவருடைய காலணிகளைக் கக்கத்தில் வைத்துக்கொண்டிருந்தவர் அவற்றை லாலுவின் கால்களில் மாட்டிவிடுகிறார்.

    மிகப் பெரிய ஊழல் புரிந்து அரசுக்குச் சேர வேண்டிய மிகப் பெரிய தொகையைக் கையாண்டிருக்கிறார் லாலு. இவருக்கு மரியாதை செலுத்த இன்னும் ஆட்கள் இருப்பதைப் பார்த்து ஒவ்வொரு இந்தியனும் தலைகுனிய வேண்டும். இதை இந்தியாவின் பெரிய அவமானமாகக் கருத வேண்டும். சட்டம், ஒழுங்கைப் பாரபட்சமில்லாமல் கடைப்பிடிக்கும் அமெரிக்காவைப் பார்த்து இந்தியாவும் சட்டம், ஒழுங்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதிசெய்துகொள்ள வேண்டும். இதை விட்டுவிட்டுப் பாராளுமன்றத்தில் கால்வைக்க மாட்டேன், அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கமாட்டேன், என்று கூறுவதும் அமெரிக்கத் தூதரகத்தில் வேலைபார்ப்பவர்களுக்குரிய சலுகைகளை நீக்குவதும் அமெரிக்கத் தூதரகத்தில் வேலைபார்க்கும் ஓரினத் தம்பதிகளைச் சிறையில் தள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுவதும் இந்திய அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தப் பாடுபட வேண்டுமேயொழிய சின்னத்தனமான காரியங்களில் இறங்கி இந்தியாவின் மதிப்பை இன்னும் குறைத்துக்கொள்ளக் கூடாது.

    எது இந்தியாவுக்கு அவமானம் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். குற்றம் செய்தவரைக் கைது செய்வதா? குற்றம் செய்தவரின் காலைக் கழுவுவதா?

    Share
  • நாற்பது வருஷ வாழ்வும் தாழ்வும்.

    தஞ்சை வெ.கோபாலன்

    பிரம்மச்சரியம் என்பது மிக உயர்ந்த சுயகட்டுப்பாடு. அனுமன், பீஷ்மர் போன்றவர்கள் நமது புராணங்களின்படி கடுமையாக பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து வந்தவர்கள் என்பது தெரிகிறது. இது ஒரு தவம் போன்றது. பொறிகளின் வசம் மனத்தை ஒப்படைத்து அவை போகும் திசையெல்லாம் போய் தடுமாறாமல், ஐம்புலன்களையும் அடக்கித் தன் வசம் வைத்துக் கொண்டு மனதை ஒருமைப்படுத்தி நல்வழியில் வாழ்பவன் மனிதருள் மாணிக்கமாகத் திகழமுடியும் என்பது நமது பாரத கலாச்சாரம் சொல்லும் நியதி.

    இந்த பிரம்மச்சரியத்துக்குச் சில அரிய சக்தி உண்டு என்கின்றனர் பெரியோர். பன்னிரெண்டு வருடங்கள் கடுமையாக பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவன் இடும் சாபம் பலிக்கும் என்பர். அதைப் போல மற்றுமொரு பன்னிரெண்டாண்டுகள் கழிந்தபின் அவன் வாழ்த்தினால் சாபம் நீங்கி நல்வாழ்வு பெற முடியுமாம். முப்பத்தியாறு ஆண்டுகள் பிரம்மச்சரியம் கடைப்பிடித்தவன் வழங்கும் ஆசி பிறரது பாவங்களையும் நீக்கி அவனுக்கு நல்வாழ்வு தரமுடியும் என்பது பெரியோர் வாக்கு.

    அந்த ஊரின் பெயர் அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் ஈசனின் பெயரால் வந்தது. அந்த சுவாமியின் திருநாமம் காயாரோகணம். இது என்ன புரியாத புதிர் போன்ற பெயர் என்று தோன்றுகிறதல்லவா. இந்தச் சொல்லை காயம் என்றும் ஆரோகணம் என்றும் இரண்டாகப் பிரிக்க வேண்டும். காயம் என்பது நமது உடல், ஆரோகணம் என்பது மேல்நோக்கிச் செல்வது, இசையில் ஆரோகணம், அவரோகணம் என்பர். நாம் இந்த பூமியில் எடுத்திருக்கும் பூத உடலோடு மேலுலகம் செல்வதையே காயாரோகணம் எனச் சொல்லலாம். இந்த ஊரையும் திரு நாகைக்காரோகணம் எனத்தான் குறிப்பிடுவர், அதுதான் நாகைப்பட்டினம். இந்த ஊரிலும் எப்படி மதுரையில் மீனாட்சியின் புகழோ, அப்படியே இங்குள்ள அம்மன் நீலாயதாட்சியின் பெயரே முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. ஊரில் ஒரு சிலர் இந்த காயாரோகணம் எனும் பெயரை ஆண் குழந்தைகளுக்கு வைத்திருப்பர்.

    இங்கு ஒரு பெரும் செல்வந்தர் இருந்தார். கடல் வாணிபம் செய்து கோடீஸ்வரராக வாழ்ந்து வந்தார். சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தும், கெளரவமும் அவருக்கு இருந்து வந்தது. இவருடைய முக்கியமான வியாபாரம் பர்மாவிலிருந்து கொண்டு வரப்படும் தேக்கு மர வியாபாரம் அதோடு பர்மாவிலிருந்து வரும் அரிசி. இந்த வகை அரிசி மலிவானது. ஏழை மக்கள் இந்த அரிசியை அதிகம் வாங்கிப் பயன்படுத்துவர் என்பதால், கடற்கரையோரமாக ஒரு பழைய கட்டடத்தில் கப்பலில் இறங்கிய மூட்டைகளை சேமித்து வைத்திருப்பார். இங்கிருந்து கடைகளுக்கு எடுத்துச் செல்வார்கள். அவருக்குப் பல உப்பளங்கள் இருந்ததால் உப்பு மொத்த வியாபாரமும் இருந்தது. இவருடைய பெயர் காயாரோகணம்.

    இந்த காயாரோகணம் செல்வாக்கு உள்ளவர். பிரிட்டிஷ் காலத்தில் இவருக்கு அதிகமான செல்வாக்கு இருந்தது. அரசாங்க உயர் அதிகாரிகள் எல்லாம் இவரிடம் அதீத மரியாதை செலுத்தி வந்தனர். அப்போதெல்லாம் நாகைப்பட்டினம் துறைமுகம் முக்கியமான துறைமுகமாக இருந்தது. ஆப்பிரிக்கா, மொரீஷஸ், பிஜி, மற்ற கீழை நாடுகளுக்குப் போகின்றவர்கள் நாகப்பட்டினம் வந்து கப்பலில் ஏறித்தான் பயணத்தைத் தொடங்குவர். இது ஒரு முக்கிய துறைமுக நகரமென்பதால் இங்கு வசதியாகவும் செல்வாக்கோடும் வாழ்ந்த இந்த காயாரோகணம் என்பார் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்து வந்தார். அவர்களிடம் ராவ் பகதூர் என்ற விருதையும் பெற்றிருந்தார். சொந்த வாழ்க்கையில் சில விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகி சிலரை வெறுத்தும், சிலர் மீது அபாரமான மதிப்பும் வைத்திருந்தார். தேச விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த கதர்க்குல்லாய் அணிந்த காந்தி கட்சியாரை இவருக்கு அறவே பிடிக்காது, அதைச் சொல்லிலும் செயலிலும் அதிகமாகவே காட்டி வந்தார்.

    அவ்வூரின் பல சமூக அமைப்புகளில் அவர் உறுப்பினராகவோ, நிர்வாகியாகவோ ஏதோவொரு பதவி இவருக்கு உண்டு. சாதாரண கூலிகளும், ஏழைகளும் இவரைக் கண்டால் உடலை வளைத்து வணங்கிவிட்டுச் செல்வர். இவர் பொதுவாக நடந்து போகும் வழக்கம் இல்லை, ஏதாவதொரு வாகனத்தில்தான் இவரது பயணம் இருக்கும். ஓய்வு தினங்களிலும், பொது நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களிலும் இவர் தன்னுடைய மாளிகையின் முதல் மாடியின் பால்கனியில் நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு கடல் காற்றை அனுபவித்துக் கொண்டு வெளிநாட்டு பானங்களை அருந்திக் கொண்டிருப்பார். அதுபோன்ற சமயங்களில் அந்த பகுதியே வெடிச் சிரிப்பும் கும்மாளமுமாகவே இருக்கும். காயாரோகணம் சாதாரணமாகப் பேசும் பேச்சில்கூட ஏதோ பெரிய நகைச்சுவை இருப்பது போல கூடியிருப்பவர்கள் ஓகோவென்று சிரித்து மகிழ்வார்கள்.

    இத்தனை செல்வத்தைப் படைத்திருந்த அவர் எந்த தர்ம காரியங்களும் செய்ததாக ஊரார் சொன்னதில்லை. ஆனால் பிரிட்டிஷாரை ஆதரிக்கும் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கும், ஆங்கில புத்தாண்டு, இங்கிலாந்து அரசியார் பிறந்த நாள் விழா, கவர்னர் வந்தால் வரவேற்பு போன்றவற்றிற்கு இவருடைய பங்களிப்பு அதிகமாகவே இருக்கும்.

    இவரிடம் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் குறைந்த ஊதியத்திலேயே பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் ஊதியத்தை உயர்த்தித் தரவேண்டுமென்று கேட்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, தன் வியாபாரமே நஷ்டத்தில் நடக்கிறது; இத்தனை ஆட்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது; பர்மா தனி நாடாக ஆகிவிட்டதால் அங்கிருந்து மரமோ, அரிசியோ கொண்டு வருவது சிரமமாகப் போய்விட்டது. ஆகையால் இந்த ஊதியம் கட்டுப்படியாகவில்லையானால் அவர்கள் எல்லாம் நின்று கொள்ளட்டும், நானும் வியாபாரத்தைக் குறைத்துக் கொள்கிறேன் என்றார் காயாரோகணம்.

    ஏழை எளியவர்களுக்கு வேறு என்ன வழி. நல்லதோ கெட்டதோ இவரிடம் அடிமையாக வாழ்ந்தாகிவிட்டது. உயிருள்ள வரை அடிமையாகவே வாழ்ந்து விடுவதே நல்லது எனும் முடிவுக்கு வந்துவிட்டனர். அந்த ஊரில் மட்டும் அவருக்கு ஏகப்பட்ட வீடுகள்; சில பங்களாக்கள் ஊரிலேயே மிகப் பெரியவை. அவர் மட்டும் சற்று பழமையான அவருடைய தந்தையார் காலத்தில் கட்டப்பட்ட பங்களாவில் வசித்து வந்தார்.

    ஒரு நாள் பிற்பகல் நேரம், காயாரோகணமும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலரும் அவர் பங்களா பால்கனியில் வழக்கம் போல உட்கார்ந்து கொண்டு பானங்களை அருந்திக் கொண்டும், தின்பண்டங்களை கொரித்துக் கொண்டும் பேசிச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். பால்கனியிலிருந்து பார்த்தால் அவர் பங்களா வாசலில் வருபவர்கள் நன்றாகத் தெரியும். அப்படி யார் வருகிறார்கள் என்பதையும் அவர் அவ்வப்போது கவனித்துக் கொண்டிருப்பார்.

    அந்த நேரத்தில் ஒரு ஏழை மனிதன். இடையில் அழுக்குச் செங்காவி படிந்த நான்கு முழ வேட்டி முழங்காலுக்குச் சற்று கீழ்வரை கட்டி, மேலே ஒரு துண்டை தோளில் போட்டுக் கொண்டு சட்டை எதுவும் அணியாமல் வந்து நின்றார். அவர் முன் தலை முழுவதும் வழுக்கை, பின் தலையில் மட்டும் சிறிய குடுமி முடியப்பட்டிருந்தது. வந்து நின்ற அவர் மாடி பால்கனியில் குரல்கள் கேட்டு அங்கே வாசலில் தயங்கி நின்று மாடியை அண்ணாந்து பார்த்தார்.

    தேவைக்கு மேலாகவே பானம் உள்ளே சென்றிருந்ததால் அவருக்கு போதை நன்கு தலைக்கேறியிருந்தது. தன் வீட்டு வாசலில் வந்து நிற்கும் இந்த ஆண்டி யார் என்று பார்த்துவிட்டுத் தன் குரலை கனைத்துக் கொண்டு, “யாரையா அது வாசலில்? என்ன வேண்டும்? இங்கே வந்து ஏன் நிற்கிறாய்?” என்றார் அதிகாரம் தொனிக்கும் குரலில்.

    வந்த அந்த எளிய மனிதன் மிக்க பணிவோடு “ஐயாவைப் பார்த்து சில வார்த்தைகள் பேசலாமா? உங்க கிட்டே ஒரு உதவி நாடி வந்திருக்கேன்.” என்றார்.

    “உனக்கு எந்த ஊர். என் கிட்டே என்ன உதவி எதிர்பார்த்து வந்தே? பசியா, சோறு வேணுமா?” என்றார் காயாரோகணம்.

    “ஐயா! என் பசிக்கு இல்லை ஐயா, ஊரார் பசியை தணிக்க நான் அன்னதானம் செஞ்சுண்டு வரேன். அந்த பணிக்கு உங்களால ஆன அரிசியோ, பணமோ கொடுத்தா வாங்கிண்டு போகலாம்னு வந்தேன். எனக்கு ஊர் கும்பகோணம் பக்கம்” என்றார் அந்த மனிதர்.

    “நீ கும்பகோணமாயிருந்தா என்ன கொட்டையூரா இருந்த எனக்கென்ன ஐயா! பசியா இருந்த கொஞ்சம் நில்லு, சோறு போடச் சொல்றேன். பசியாற சாப்பிட்டுப் போ, ஊருக்கெல்லாம் சாப்பாடு போட எங்கிட்ட எதுவும் கிடையாது. ஏன்யா! உனக்கு சோத்துக்கே வழியில்லை, இந்த லட்சணத்துல ஊருக்கு சாப்பாடு போடப்போறே, அதுக்கு நான் அரிசி, பணம் கொடுக்கணுமா?” என்றார் காயாரோகணம் கேலியாக. அவருடைய இந்த கேலியைக் கேட்டு கூட இருந்தவர்கள் ஓகோவென்று கைகொட்டி ஆரவாரம் செய்து கொக்கரித்துச் சிரித்தார்கள்.

    ஒரு ஏழை, ஒட்டிய வயிறு, ஒழுங்கான உடைகூட இல்லை, ஆனால் மனம் நிறைய வறியவர்கள் வயிற்றுக்குச் சோறிட வேண்டுமென்பதற்காக, சுய கெளரவம் கூட பார்க்காமல் அன்னியர் வீட்டு வாயிலில் நின்று பிச்சை கேட்பவனை எள்ளி நகையாடும் அந்த வசதிபடைத்த செல்வச் சீமான்களின் நோக்கம், இந்த ஏழையைக் கேலி செய்வதல்ல, அந்த செல்வந்தரை மகிழ்ச்சியடையச் செய்வதற்காகத்தான்.

    வந்தவர் முகத்தில் ஏமாற்றமோ, வருத்தமோ, அவமானமோ இல்லை. வந்து நின்றபோது இருந்த அதே எதிர்பார்ப்பு, அமைதி இப்போதும் இருந்தது. இதைப் போல இதற்கு முன்பும் எத்தனை இடங்களில் இது போல அவமானப் பட்டிருப்பாரோ என்னவோ அதனால் அவர் மனமொடிந்து போய்விடவில்லை. வீட்டுக்காரர் சொன்ன கடும் சொல்லை ஜீரணித்துக் கொண்டாரோ இல்லை அவர் மனத்தைச் சுட்டதோ தெரியவில்லை, மேலும் சற்றுத் தயங்கி நின்றார்.

    அப்போது பால்கனியில் வீட்டு முதலாளியுடன் உட்கார்ந்து பானம் பருகிக் கொண்டிருந்த ஒருவர் பேசினார். “இன்னும் ஏன்யா நிக்கறே! அதான் ஐயா சொல்லிட்டாருல்ல. போய் வேற இடம் பாரு, போ!” என்றார் அவர்.

    “சரி” எனும் பாவனையில் அந்த முதியவர் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து மெல்ல நகர்ந்தார். அப்படி அவர் போகும்போது முணுமுணுக்கவோ, வாய்க்குள் அவர்களை சபித்துவிட்டோ போகவில்லை. மாறாக அவரோடு பிறந்த அந்தப் பணிவு, இரக்கம், அன்பு இவற்றால் உந்தப்பட்டு வலக்கையை உயர்த்தி வாழ்த்துவது போல அசைத்துவிட்டுப் போனார்.

    “பாரய்யா! அவனுக்குள்ள திமிரை. இல்லைன்னு சொல்லிட்டாராம், அதுக்காக அவன் இவரை வாழ்த்தரானாம், கையை உயர்த்தி வாழ்த்தி விட்டுப் போறான்” என்றார் மாடிக்காரர் ஒருவர். வந்த ஏழை போய்விட்டார். அவர் வந்ததோ, அன்று நடந்த சம்பாஷணைகளோ அங்கிருந்த அனைவருக்கும், காயாரோகணம் உட்பட அனைவருக்குமே மறந்து போய்விட்டது. காலம் ஓடிக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து சுதந்திர இந்தியா உதயமாகிவிட்டது. நம் நாட்டை நம்மவர்களே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முன்பு பர்மா இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தபோது பர்மா தேக்கும், பர்மா அரிசியும் இவருக்குச் செல்வத்தைக் கொண்டு வந்து குவித்தது. சுதந்திரத்துக்கு கால் நூற்றாண்டுகளுக்கு முன்பே பர்மா தனி நாடாகிவிட்டது. நமது கதாநாயகர் காயாரோகணத்துக்கும் வியாபாரம் படுத்துவிட்டது. அதே ஊரில் முடிசூடா மன்னனாக இருந்த காலம் போய் இப்போது சுதந்திர இந்தியாவில் அமைந்த ஆட்சியோடு ஒத்துப் போக முடியாமல், இவர் யாரையெல்லாம் கேலி பேசினாரோ, அவர்கள் எல்லாம் இப்போது ஆட்சிபுரியும் பிரிவினரோடு சேர்ந்து விட்டதால், இவர் தனித்து விடப்பட்டதைப் போல உணர்ந்தார்.

    காயாரோகணத்துக்கு வியாபாரத்தில் சரிவும், தன்னுடைய சுய செல்வாக்கில் சரிவும், பண வசதிக் குறைவும், வயதின் மூப்பும் சோர்வடையச் செய்திருந்தது. எதிலும் அதிக ஆர்வமின்றி வீடே கதியென்று முடங்கிக் கிடக்கத் தொடங்கினார். இவரை எந்த பொது நிகழ்ச்சிக்கும் யாரும் அழைப்பதுமில்லை. இவர் காலத்தில் இவர் கொள்கைகளுக்காக இவரைக் கொண்டாடியவர்களுக்கும் இப்போது வயது மூப்பு வந்துவிட்டதால் இவரை யாரும் சீண்டுவாரில்லை. பல காலம் போட்டுக் கழற்றிய ஆடையைப் போல இவர் கழற்றி ஒரு ஓரமாக வீசப்பட்டிருந்தார்.

    ஒவ்வொன்றாகத் தன்னுடைய பங்களாக்களை விற்றார். வியாபாரம் பிரிட்டிஷ் காலத்தோடு முடங்கிப் போய்விட்டது. ஒன்றிரண்டு மிச்சமிருந்த சொத்துக்களும் விற்கப்பட்டு விட்டன. இவருடைய எப்போதும் குடியிருந்த அந்த பழைய பங்களாவையும் இப்போது விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு விலை பேசவும் ஆட்கள் வந்திருந்தார்கள். முன்பு பால்கனியில் உட்கார்ந்து உத்சாக பானம் அருந்திய காயாரோகணத்தை இப்போது பார்க்கமுடியவில்லை. நிமிர்ந்தே இருந்த அவரது தலை இப்போது குனிந்தே இருந்தது. பளபளவென்று காட்சியளித்த அவரது முகம் சுருங்கிக் குழி விழுந்து கண்கள் உள்ளே போய் எளிய தோற்றத்தில் இருந்தார். இந்த நிலையில் இவர் யார் வீட்டு வாசலிலாவது போய் நின்றால், ஒன்றும் இல்லை போய்யா என்பார்கள், அந்த நிலைமை அவருக்கு. என்ன கொடுமை?

    இந்த வீடுதான் கடைசி சொத்து. இது விற்று வரப்போகும் பணமும் தற்போது அவருக்கு இருக்கும் கடன்களைக் கொடுத்தால் சரியாகப் போய்விடும், கையில் ஒரு பைசாகூட மிஞ்சாது. அதன் பின் எங்கே போய் இருப்பது, எப்படி சாப்பிடுவது. உற்றார் உறவு எல்லோரும் எப்போதோ விட்டுப் பிரிந்து போய்விட்டார்கள். உற்ற துணையாக இருந்த அவருடைய மனைவியும் காலமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. யாரோ அருகிலுள்ள ஒரு குடிசை வீட்டில் இருப்பவர், ஏதொவொரு காலத்தில் இவரிடம் வேலை செயதவராம் அவர் பரிதாபப்பட்டு எங்க முதலாளி என்று சொல்லிக் கொண்டு இவருக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். இனி இவர் இந்த வீட்டைவிட்டுப் போய்விட்டால் அதற்கும் இனி திண்டாட்டம் தான்.

    வீட்டை வாங்குபவர்கள் ஒரு காரில் வந்து இறங்கினார்கள். நாலைந்து பேர் வந்தனர், அதில் அனைவரும் நல்ல பளிச்சென்று கதர் வேட்டி, கதர் முழுக்கைசட்டை அணிந்து தோளில் கதர் துண்டுடன், பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் போல காட்சியளித்தனர். அவர்களோடு சற்று அழுக்கு வேட்டியை இடையில் கட்டிக் கொண்டு சட்டையில்லாமல் மேலே ஒரு துண்டு அணிந்து கொண்டு படு கிழம் ஒன்றும் வந்தது. அவரைப் பார்த்ததும் காயாரோகணத்துக்கு மனத்தில் சுரீர் என்று தைத்தது. முன்பு எப்போதோ, வாசலில் வந்து இதே கோலத்தில் வந்து நின்ற ஒரு ஏழை மனிதரைத் தான் மனிதாபிமானம் இல்லாமல் துரத்திவிட்ட நிகழ்ச்சி நெஞ்சில் நிழலாடியது. அவர்தானோ இவர்? சேச்சே இருக்காது. இத்தனை வருஷம் கழித்து அந்த பரதேசி வரமுடியுமா, நம் மனம் அப்படி சொல்கிறது என்று தேற்றிக் கொண்டார்.

    வந்தவர்கள் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர்கள். நல்ல செல்வந்தர் வீட்டார். அவர்கள் நடத்தி வரும் ஒரு தர்ம ஸ்தாபனத்துக்கு அந்த ஊரில் ஒரு கட்டடம் பார்த்துக் கொண்டிருந்தனர். வயது முதிர்ந்த ஆதரவற்ற பெரியவர்களைத் தங்கவைத்து அவர்களுக்கு ஆதரவு தருவது அந்த தர்ம தாபனத்தின் நோக்கம். அவர்களுடன் வந்த அந்த ஏழைக் கிழவர் பல ஊர்களிலும் கோயில் திருவிழாக்கள் சமயத்தில் அன்னதானம் செய்யும் பெரியவர். அவர் மூலமாக மக்கள் வழிபடும் ஒரு மதத் தலைவரும் மடாதிபதியுமான பெரியவர் இந்த தர்ம கைங்கர்யத்தைச் செய்யச் சொல்லி அனுப்பியிருக்கிறார். இந்த வீட்டை முதியோர் இல்லமாகத்தான் நாங்கள் நடத்தப் போகிறோம். இந்த வேலை முடிந்து இல்லம் தயாராகிவிட்டது என்ற செய்தியை இந்த முதியவர் அந்த மடாதிபதியிடம் போய் சொல்வார் என்ற விவரங்களையெல்லாம் வந்தவர்கள் காயாரோகணத்திடம் சொன்னார்கள்.

    வந்த அந்த ஏழை முதியவரை தலை நிமிர்ந்து பார்த்தார் காயாரோகணம். இவர் அவராகத்தான் இருக்க முடியும், ஆனால் அவர் அந்த பழைய நிகழ்ச்சிகள் எதையும் நினைவு வைத்திருப்பவர் போல காட்டிக் கொள்ளவில்லையே. அவரிடமே கேட்டு விடலாமா? மனது கேட்கவில்லை, கேட்டே விட்டார்.

    “ஏன் சுவாமி? நீங்க இதுக்கு முன்பு ஒரு முறை பல வருஷங்களுக்கு முன்னால இந்த வீட்டு வாசலுக்கு வந்து அன்னதானத்துக்கு அரிசி அல்லது பணம் வேணும்னு கேட்டிருக்கீங்களா. உங்களைப் பார்த்த மாதிரி நினைவு” என்றார் காயாரோகணம்.

    அந்த கிழவர் மெல்ல யோசித்துவிட்டு, “எனக்கு நினைவில்லை. பல வருஷமா, நான் பல ஊர்களுக்கும் போறேன், பல பேரைப் பார்க்கிறேன். அன்ன தானத்துக்கு அட்சதை கேட்பேன், காய் கறி, சாமான்கள், பணம் உதவி கேட்பேன். பல ஊர் கோயில் திருவிழா சமயத்துல அன்னதானம் செய்வேன், பெரியவர் சொன்னதால அதை செஞ்சிண்டுருந்தேன். இப்பவும் செய்யறேன். இவாளுக்கு இங்க ஒரு இல்லம் தொடங்கணும்னு சொன்னதால இவாளோடு இங்கே வந்தேன். வேற எனக்கு எதுவும் நினைவில்லையே” என்றார் அவர்.

    நாப்பது வருஷம் வாழ்ந்தவனுமில்ல, நாப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்ல என்று பொதுவாக மக்கள் சொல்லும் வாக்கு பொய்யில்லை போலிருக்கிறது என்று நினைத்து மனம் கசிந்தார் காயாரோகணம்.

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (2)

    ராமஸ்வாமி ஸம்பத்

    மிதிலையை அடைந்த மூவரும் ஜனகரின் அரண்மனை நோக்கி நடந்தனர்.

    வழியில் அரண்மனை கன்னிமாட வளாகத்தில் உள்ள பூம்பொழிலில் தோழியருடன் பூப்பந்து ஆடிக்கொண்டிருந்த இளவரசி ஸீதையின்மீது ராமனின் பார்வை படிந்தது. அண்ணலும் நோக்கினான்; ஏதோ ஒரு ஈர்ப்பினால் அவளும் நோக்கினாள். அவ்வளவுதான்! கவிச்சக்கிரவர்த்தியின் வர்ணனைபோல்

           மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும்

           ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்

           கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்

           பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ.

    [இடையில்லை என்று சொல்லும்படி நுண்ணிய இடை உடைய ஸீதையும், இழிவு இல்லை என்று சொல்லும்படி புண்ணிய குணங்களை நண்ணிய ராமனும் தம்முடைய இரண்டு உடம்புகளுக்குப் பொருந்திய ஒரே உயிர் போல் ஆனார்கள். திருப்பாற்கடலின் பள்ளியிலே கூடியிருந்து புணர்ச்சி நீங்கிப் பிரிந்து போனவர்கள் மீண்டும் இங்கே சந்தித்தால் அவர்களது காதல் சிறப்பை வெளியிட வாய்ப்பேச்சும் தேவையோ?]

    அக்கணத்திலிருந்து இருவரின் மனநிலை ’ஒருவருக்காகவே மற்றொருவர் பிறந்து இருக்கிறோமோ’ எனும் ஆலோசனையில் வீழ்ந்தது. தன் பிறப்பின் ரகசியத்தை அறிந்த வைதேகி (விதேக அரசனால் கண்டெடுக்கப்பட்ட நங்கையாதலால் ஸீதை இப்படியும் அழைக்கப்பட்டாள்) ‘என் மனம் ஏன் இப்படி அலை பாய்கிறது? ஒருவேளை இத்தனை நாள் இவருக்காகவே காத்திருக்கிறேனா? அதே நேரத்தில் இந்த இளைஞரால் அந்த பருத்த வில்லான சிவதனுசினை நாண் ஏற்றமுடியுமா எனும் ஐயமும் எழுகிறதே. இந்த வில் உள்ள, எவராலும் நகர்த்த முடியாதிருந்த, பெட்டியை சிறுவயதில் விளையாட்டாக நான் தூக்கியபின் தந்தை ஜனக மஹாராஜா இந்த சிவதனுசினை எவர் நாண் ஏற்றுகிறாரோ அவருக்கே என் பெண் ஏற்றவளாவள் என்று மொழிந்தபின் எத்தனை ராஜகுலத்தினைச் சேர்ந்தவர் முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளனர். இவ்விளைஞரால் முடியுமா? எதுவாகிலும் சரி. இவரிடம் மனத்தைப் பறிகொடுத்தபின் இவருக்கே நான் ஆட்செய்ய வேண்டும். வேறு எவர்க்கும் வாழ்க்கைப்படேன்’ என்று எண்னி எண்ணி விரக தாபத்தில் விம்மியவாறு இருந்தாள். அங்கே ராமனும் ஸீதையின் சந்திரபிம்ப வதனத்தை நினைந்தவாறே தூக்கமின்றி தவிக்கலுற்றான்.

    மறுநாள் ஜனக மன்னன் யாகசாலையில் நடந்த ஸீதா சுயம்வரத்தில், விஸ்வாமித்திரரின் ஆணைப்படி ராமன் இதுவரை ஸீதையைத் தவிர எவராலும் ஏந்தப்படாத சிவதனுசினை லாவகமாகத் தூக்கி நாணேற்றியபோது ஒரு பலத்த ஓசையுடன் அந்த வில் இரண்டாக ஒடிந்தது. ‘ஆஹா, என் நெடுங்காலத் தவத்திற்குப் பலன் கிடைத்துவிட்டது’ என்ற மட்டற்ற மகிழ்ச்சியோடு ஜனகபுத்திரியான ஜானகி மின்னல் வேகத்தில் ஓடிவந்து ராமனுக்கு மாலை சூட்டினாள்.

    தசரதனுக்குத் தகவல் கிடைத்தும் தன் பரிவாரம் சூழ மிதிலை வந்து சேர்ந்தான். அதன்பின் ஒரு நல்ல மங்களமான வேளையில் ராமன் ஸீதையையும், லக்ஷ்மணன் ஊர்மிளையையும் (ஜனகனின் இன்னொரு புதல்வி), பரதன் சத்ருக்கினன் முறையே மாண்டவியையும் சுருதகீர்த்தியையும் (இருவரும் ஜனகன் தம்பி குசத்துவன் குமாரிகள்) மணந்தனர். ராமன் வரும் வரை காத்திருந்த ஸீதையை அவனிடம் சேர்ப்பித்துவிட்டு விஸ்வாமித்திரர், நாரதர் தனக்கு இட்ட பணியினை செவ்வனே முடித்த மகிழ்வோடு, ‘போனான் வடதிசைவாய் உயர் பொன்மால்வரை புக்கான்’.

               *                                          *                                                         *

    மஹேந்திரகிரியில் தவக்கோலம் பூண்டிருந்த பரசுராமான் செவியில் மிதிலையில் உடைபட்ட சிவதனுசின் பேரரவம் விழுந்தது. ‘என்ன, சிவதனுசு முறிந்து விட்டதா? அப்படியானால் நான் எதற்காகக் காத்திருக்கிறேனோ அவ்வேளை நெருங்கிவிட்டது’ என நினைந்தான் மஹாவிஷ்ணுவின் ஆவேச அவதாரமும் (ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் எடுக்கப்படும் அவதாரம்) சிரஞ்ஜீவியுமான பரசுராமன். உடனே கையில் நாராயணதனுசை ஏந்தி மிதிலை நோக்கிப் புறப்பட்டான்.

    ஸீதாராம கல்யாணம் முடிந்து அயோத்தி திரும்பும் தசரத பரிவாரம் பயங்கரமான ஊளையோடு வீசும் பலத்த புயல் ஒன்றினால் தாக்கப்பட்டது. ”இது பரசுராமனின் வருகையை பறைசாற்றுகிறது” என்ற வசிஷ்டரின் கூற்றைக் கேட்ட அயோத்தி அரசன் நடுநடுங்கினான். அருகில் நெருங்கிய பரசுராமன் தாள் பணிந்து அவனிடம், ”க்ஷத்திரிய குலத்தின்மேல் கொண்ட கோபம் தங்களுக்கு இன்னும் தணியவில்லையா பிரபூ? தவக்கோலம் பூண்டிருக்கும் தாங்கள் மீண்டும் கொலைவெறி கொள்ளக் கூடாது. தயவு செய்து மணக்கோலத்தில் இருக்கும் என் மக்களை ஏதும் செய்யாதீர்” என்று கெஞ்சினான்.

    அதனை லட்சியம் செய்யாத பரசுராமன், சினத்தினால் சிவந்த கண்களோடு ராமனை நோக்கி  ‘ஓஹோ, நீதான் சிவதனுசை முறித்தவனோ? அன்றொரு நாள் சங்கர நாராயணரிடையே நடந்த போட்டியில் விரிந்தபோன சிவதனுசை ஒடித்துவிட்டு நீ உன்னை பெரிய வில்லாளியாக பாவிக்கிறாயோ?” என்று இடிமுழக்கம் செய்தான்.

    [விஸ்வகர்மனால் உருவாக்கப்பட்ட இரு வில்கள் சிவனுக்கும் திருமாலுக்கும் அளிக்கப்பட்டன. அவ்விரு வில்களில் எது பலம் வாய்ந்தது என அறிய பிரமதேவன் அப்பரந்தாமர் மத்தியில் ஒரு போட்டியை ஏற்பாடு செய்தார். உக்கிரமான அப்போட்டியில் சிவதனுசு இலேசாக விரிந்தது. அதனால் சினமுற்ற சிவனார் இன்னும் கடுமையாகப் போரிட, பிரமதேவன் நடுநடுங்கி தன் தவற்றால் விளையாட்டு வினையாகவதை உணர்ந்து இருவரையும் சமாதானம் செய்து அவர்களிடம் மன்னிப்புக் கோரினார். அவ்வில் இரண்டும் காலப்போக்கில் முறையே ஜனகனையும் பரசுராமனையும் அடைந்தன]

    ராமன் ஒரு இளநகையோடு, “பெருமை மிக்க ஜாமதக்னி முனிவரே (ஜமதக்னி மஹரிஷியின் மகன்), முதற்கண் இச்சிறுவன் ராமனின் வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். தாங்கள் என்னை என்ன செய்யவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?” என்றான் பணிவோடு.

    “உண்மையிலேயே நீ ஒரு உயர்ந்த தனுர்தரன் என்றால் இதோ இந்த விஷ்ணுதனுசை நாணேற்ற முடிகிறதா பார்.”

    அதே புன்முறுவலுடன் ராமன் அவ்வில்லைப் பற்றி எளிதாக நாண் பூட்டி, கோதண்டத்தைப் பொறுத்தினான். அத்தருணம் பரசுராமனின் புஜத்திலிருந்து ஒரு மகத்தான திவ்யசக்தி ராமனுள் புகுந்தது. பரசுராமன், ‘நாராயணதனுசு உரிய இடத்தில் சேர்ந்துவிட்டது’ என தன்னுள் மகிழ்ச்சி கொண்டு, வெளிப்படையாக ராமனிடம் தோல்வியை ஒப்புக்கொண்டான்.

    “அந்தண குலச்ரேஷ்டரே, உம்மை நான் கோதண்டத்திற்குப் பலியாக்க விரும்பவில்லை. ஆனால் வில்லேறிய கோதண்டத்திற்கு ஒரு காவு தேவை. சொல்லுங்கள் நான் எதனைக் குறிவைப்பது?” என்றான் ராமன்.

    “ராமா, உன்போன்ற மாவீரனைக் காணத்தான் நான் இத்தனை காலம் காத்திருந்தேன். நான் க்ஷத்திரியர்களை வென்று சேர்த்த ராஜ்யங்கள் அனைத்தையும் காச்யப முனிவருக்கு அளித்து விட்டேன். அதனால் இப்போது என்னுடையது எனச் சொல்லக்கூடியது எல்லாம் என் தவப்பலன்தான். அதைக் குறிவைத்து என்னை விட்டுவிடு. எனக்கென ஒரு நிலத்தை மேலைக்கடலில் உருவாக்கி, அங்கு தவம்புரிய விரும்புகிறேன். உனக்கு மங்களம் உண்டாகட்டும்”  என்று வாழ்த்தி, ராமன் வரும் வரை காத்திருந்த பரசுராமன் விடைபெற்றுக் கொண்டான்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (89)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    கிறீஸ்துவ பெருநாளான நத்தார் தினம் கூடும் இவ்வாரத்திலே உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    அன்பு, காதல் என்பது ஒரு உள்ளத்தின் அதீத உணர்வென்பார்கள். காதல் என்பது இலக்கியத்தில் இனிதாக விளக்கப்பட்டிருக்கிறது. காதல் எனும் உணர்வு ஏதோ புதிய தலைமுறையில் கண்டு பிடிக்கப்பட்டதல்ல.

    தொல்காப்பியம் என எமது இலக்கியத்தின் ஆரம்ப ஆதாரங்களில் இருந்து இன்றுவரை இக்காதலின் வெவ்வேறு அங்கங்கள் வெவ்வேறு வடிவங்களில் அழகிய தமிழில் அர்த்தப்படுத்தப் பட்டிருக்கிறது.

    ஆனால் காதல் எனும் அன்பின் அதீத வெளிப்படுத்தலை கொச்சைப்படுத்தாதவர்களும் இல்லை . பலர் காதல் எனும் போர்வையில் பலரது வாழ்வினைச் சிதைத்த சம்பவங்களையும் நாம் அறியாமலில்லை.

    என்னடா இது ? சக்தி மிகவும் ஆடம்பரமாகக் காதலை வியாபிக்கிறானே இங்கே போகிறது இவன் மடல் எனும் கேள்வி உங்கள் உள்ளங்களில் நர்த்தனமாடுவதை நான் நன்கறிவேன்.

    கடந்தவாரம் லண்டனை நோக்கி ரயிலில் பயணம் செய்தபோது பத்திரிகையில் யதேச்சையாகப் பார்த்த ஒரு செய்தி எனது நெஞ்சைத் தொட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் அவாவே எனது இப்பதிவிற்குக் காரணம்.

    இலண்டனின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் “கென்ட்(Kent)” எனும் இடத்தில் வாழ்பவர் “ரயன் பீலிக்ஸ் கிலீனி(Ryan Felix Glenny)” அவருக்கு வயது 23. மேற்கத்திய நாடுகளில் இருக்கும் வழக்க்கம் போல் இவரும் 22வயதான “வெல்ஸ்(Wells)” எனும் நங்கையுடன் குடித்தனம் நடத்தி வந்தார்.

     felix1

    இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உண்டு. 2 வயதான மகனும், பத்து மாதங்கள் நிறைந்த பெண்குழந்தையும் உண்டு.

    தனது வயிற்றில் ஏற்பட்ட அஜீரணக் கோளாறுகளினால் அவதிக்குள்ளான இவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    பல பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்ட இவர் வயிற்றின் அடிப்பகுதியில் ஏற்படும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    அதற்குரிய பலவிதமான வைத்தியங்கள் சத்திரசிகிச்சை மற்றும் கதிர்வீச்சு வைத்தியம் என்பனவற்றிற்கு உள்ளானார்.

    இருப்பினும் இவரது புற்றுநோய் சிகிச்சைக்கப்பாற்பட்டு பரவி விட்டது என்றும் இவர் உயிரோடிருப்பது இன்னும் சில மாதங்களே எனும் கசப்பான செய்தி இவரது மகனின் பிறந்தநாள் பரிசாக இவர்களுக்குக் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து இவர்கள் எடுத்த முடிவே காதலின் அதியுச்சத்தைக் காட்டுகிறது.

     felix2

    ஆமாம் தனது வாழ்வின் இறுதி நிர்ணயிக்கப்பட்டதும் அவர்கள் தாமிருவரும் சட்டமூலம் தமது பந்தத்தை உறுதியாக்க முடிவெடுத்தார்கள்.

    அவர் படுத்த படுக்கையாகவிருக்கும் வைத்தியசாலைக் கட்டிலிலேயே தனது காதலியை, தனது குழந்தைகளின் தாயை சட்டமூலம் தனது மனைவியாக்கினார்.

    பாதிரியாரும், அவரது நெருங்கிய உறவினர்களும் அந்நிகழ்விற்கு சமூகமளித்திருந்தார்கள் .

    இவர்களுக்காக அவரது உற்ற நண்பர் ஒரு நிதிசேகரிப்பை ஆரம்பித்து இதுவரை சுமார் 26,000 ஸ்ரெலிங் பவுண்ஸ் அளவில் சேகரித்துள்ளார்.

    சிலமாதங்களே வாழப்போகும் தனது காதலனை தனது கணவனாக்க முடிவு செய்த அப்பெண்ணின் காதல் உணர்வு அதீதமானதே.

    தனது கணவனின் இறுதி கிறீஸ்துமஸ் நாளைத் தமது குழந்தைகளுடன் தனது கணவன் மகிழ்ச்சியாகக் களிக்க தான் அனைத்தையும் செய்யப் போவதாக அம்மங்கை தெரிவித்துள்ளார்.

    ஆமாம் காதல் அன்பின் உயர்ந்த ஒரு நிலையாக இருக்கிறது. அதன் மகத்துவத்தை அதன் பவித்திரத்தை இப்படியான ஒரு நிகழ்வு அதுவும் நாகரீகம் எனும் பெயரால் காம இச்சைகளுக்கு முதலிடம் அளிக்கும் மேற்கத்திய நாட்டில் நிகழ்ந்தது என்பது ஏனோ என்னிதயத்தைத் தொட்டது.

    மீண்டும் அடுத்த மடலில்

    Share
  • குறவன் பாட்டு-23

    குறத்தி விற்பனைக்காக நகரம் செல்லுதல்

     

    நாற்பது வயது நந்தவ னம்போல்,

    தோற்றத்தில் இருபது வயதுப் பெண்போல்,

    பாற்கடல் கொண்ட தெள்ளமு தம்போல்,

    பற்பல பொருட்களைச் சுமந்து நடந்தாள்!                                                                                             188

     

    இரவைப் பகலாக்கும் ஒளிமிகு விழிகளும்,

    பகலை இரவாக்கும் இருள்மிகு கூந்தலும்,

    இரண்டும் சந்திக்கும் மாலைப் பொழுதென,

    நுதலில் பொன்வண்ணம் பொங்க நடந்தாள்!                                                                                         189

     

    சிறுகச் சிறுகச் சேகரம் செய்த,

    சிவந்த கனிகள் சிறுபெருங் காய்கள்,

    நறுமணம் வீசும் பலநிற மலர்கள்,

    இன்னும் பலபொருள் சுமந்து வந்தாள்!                                                                                                    190

     

    தலைமேல் கைகூப்பி ஈசனைத் தொழுவதுபோல்,

    தன்னிரு கைதூக்கித் தலைமேல் கூடையினை,

    திடமாய்ப் பிடித்தபடி குறத்தியும் நடப்பது ஏன்?

    செய்யும் தொழில்தெய்வம் என்பத னாலோ!                                                                                        191

     

    வாரம் கடந்து வருடம் கடந்து,

    தொடர்ந்து வருகை புரியும் குறத்தியை,

    மலர்ந்த முகத்துடன் பெண்கள் பலரும்

    விரும்பி அழைத்துப் பொருட்களை வாங்கினர்!                                                                 192

     

    வியாபாரத் தந்திரம் எதுவும் செய்யாமல்,

    வார்த்தைகள் கொண்டு மாயம் செய்யாமல்,

    விரும்பிய பொருட்களை விரும்பிய வருக்கு,

    விலையைக் குறைத்து விற்பனை செய்தாள்!                                                                                     193

     

    சுமந்த பொருட்களின் பெயரைச் சொல்லி,

    குரலில் ஏற்ற, இறக்கம் காட்டி,

    கேட்பவர் கவனம் ஆர்வம் கூட்டி,

    வேடிக்கையாக விற்பனை செய்தாள்!                                                                                                         194

     

    கீரைக் கட்டுடன் வெட்டிய கரும்பைச்,

    சிறு கட்டுகளாகக் கட்டி முடித்து,

    நீரைத் தெளித்து கீரையின் ஈரம்,

    காயாமல் அதைக் காத்து நடந்தாள்!                                                                                                            195

     

    ஊருக் குள்ளே நுழையும் போது,

    பாரம் நிறைந்த கூடை சுமந்து,

    தேவைக் கதிகமாய் உணவை உண்ட,

    பாம்பைப் போல ஊர்ந்து வந்தாள்!                                                                                                               196

     

    கலப்பட மற்றுக் கானகம் ஈந்த,

    பலப்பல பொருட்களைக் குறத்தியும் ஏந்தி,

    கலகல வென்று சிரிப்பைச் சிந்தி,

    மளமள வென்று விற்பனை செய்தாள்!                                                                                                    197

     

    தெருவில் கூடை சுமந்து நடக்கையில்,

    இருளை மனதில் சுமந்த ஆண்களின்,

    கருணை வறண்ட காமப் பார்வைகள்,

    குறத்தியின் உடலைத் துளைப்பது கொடுமை!                                                                                    198

    Share
  • என்றும் புரியா இரகசியம் !

    என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
    எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()

    கண்கள் விளம்பிய இரகசியம் – உன்
    காதணி ஆடிய இரகசியம்
    முறுவல் உதிர்த்த இரகசியம் – பின்
    முணுமுணுத்த இதழ் இரகசியம்
    என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
    எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()

    கால்கள் சிணுங்கிய இரகசியம் மென்
    காலடி ஓசை இரகசியம்
    மூச்சும் பேச்சும் இரகசியம் – வெண்
    முத்து பற்கள் இரகசியம்
    கருமை எழுதிய இரகசியம் – இமைக்
    கற்றை வளைவதும் இரகசியம்
    என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
    எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()
    அன்பாய் குழைவதும் இரகசியம் – உன்
    அரவணைப் பெல்லாம் இரகசியம்
    அடம்பிடி வாதமும் இரகசியம் – பின்
    அடிமைப் படுத்திடும் இரகசியம்
    என்னச் சொல்வேன் பெண்ணே நீயோ படிக்க முடியா இரகசியம்
    எண்ணக் களஞ்சியம் கற்றும் நீயே என்றும் புரியா இரகசியம் ()

    Share
  • குப்பைத் தொட்டியில் அனார்க்கலி !

     

    garbage-bin
    சி. ஜெயபாரதன், கனடா

     

    சத்திரம், சாவடி எங்கள் பூமி!
    எப்போதும் வற்றாது
    என் கிணறு!
    வாசல்
    திறந்தே கிடக்கும் உம்மை
    வரவேற்க!
    வாயை
    மூடிக் கொள்ள
    தாள்ப்பாள் இல்லை!
    வாளேந்தி நிற்கும் வன்முறைக்
    காவலர் இல்லை,
    கண்காணிப் பில்லை !
    எதையும் போடலாம்! யாரும் போடலாம்!
    காதல் கடிதங்கள் !
    காயிதம், கந்தைத் துணிகள்!
    ஆபாச வார இதழ்கள்
    வீசி எறிந்த
    மோசக் கதை, கவிதைகள் !
    உயர்ந்த மதிப்பெண்
    வாங்கி
    வேலைக்கோ, மேற் படிப்புக்கோ
    வீணாய்ப் போட்ட
    விண்ணப்பத் தாள்கள்!
    வேண்டிய வற்றை
    யாரும்
    தோண்டிக் கொள்ளலாம்!

     

    எடுக்க எடுக்க
    அடுக்காய் வரும்,
    அமுத சுரபி
    எமது
    புதையல் களஞ்சியம் !
    திருமணப் பந்தியில்
    தின்ன முடியாமல்
    வயிறு முட்டி
    வாழையில் பல்வகை உணவை
    வாரிக் கொட்டி
    எனது
    வயிற்றை நிரப்பும்
    குபேரர் கூட்டம் ஒரு புறம்!
    பட்டினியால்
    பரிதபித் தென்னை
    நாடி வந்து
    நாய்களுடன் போட்டி யிட்டு
    பசியாறிக் கொள்ளும்
    குசேலர் கூட்டம் மறு புறம்!

     

    அதோ பார்!
    அப்பன்! அரக்கன்! கல்நெஞ்சன்!
    நள்ளிரவில் ஓடி வந்து
    கள்ளத் தனமாய்
    எனது
    அடி வயிற்றில் போடும்
    பெண் சிசு!
    மழலை
    பேசா பிஞ்சு!
    பாசமலர் விழிகள்
    மூடும் முன்பு
    காத்திட முடியாமல் கனல் பற்றி
    இதயம்
    பொங்குது!
    குழலினிய, யாழினிய மொழியில்
    இங்கா ? இங்கா ? எனும்
    சங்க நாதம்
    எழுந்து
    அனார்கலி போல்
    மோனமாய்
    அடங்கும்
    தாஜ் மஹாலாய் !

    ******************

    Share
  • பட்டுக்கோட்டை எழுதிவைத்த உயில்!!

    மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

     

     சின்னப் பயலே.. சின்னப் பயலே.. சேதி கேளடா..

    · (பட்டுக்கோட்டை எழுதிவைத்த உயில்!!)

    aaaதமிழ்த்திரைச் சரித்திரத்தில் ஒரு பாட்டாளியின் குரல் – ஒடுக்கப்பட்டவர்களின் ஓசை – உழைப்பவர்களின் வியர்வை – நெசவாளர்களின் குமுறல் – சாலைவண்டி இழுப்பவர்களின் சுமை – சாமான்ய மக்களின் பிரதிநிதித்துவம் – சமத்துவ சமுதாயப் பார்வை – அவலங்களைத் தட்டிக்கேட்கும் உறுதி – மானிட குணங்களின் கசடுகளை களையத் துடிக்கும் கூர்மை! பாமரர்களும் புரிந்துகொள்ளும் பகுத்தறிவுச் சிந்தனை – ஆயிரமாயிரம் கவிஞர் பெருமக்கள் வந்து எழுதி வைக்க வேண்டியவற்றை தன் 29 வயதில் மரணத்தைத் தொட்ட மக்கள் கவிஞன் ஒட்டுமொத்தமாய் ஓங்கி ஒலித்தான் என்றால் அது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களையே குறிக்கும்!

    ஏழைகளின் தோழனாய்.. பாட்டாளிகளின் கூட்டாளியாய்.. உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலாய்.. முத்து முத்தாய் இவன் எழுதி வைத்தப் பாட்டு! தஞ்சை மண்ணிலிருந்து தவழ்ந்து வந்த தமிழ்!! அர்த்தபுஷ்டிகளோடு இவன் படைத்த வரிகள் சமுதாய அவலங்களின்மீது எப்போதும் விழுகின்ற சவுக்கடிகள்!!

    சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளில் வலியோர் கை ஓங்கி நிற்பதும் மெலியோர் கை தாழ்ந்திருப்பதும் இல்லான் எனும் நிலை மாற்றிடவும் மக்கள் புரட்சியால் கைகூடும் என்கிற திடநம்பிக்கையோடு சத்திய வரிகளைத் தந்தவன் இவன் என்பது மறக்க முடியாதது.

    பொற்காலப் பாடல்கள் இவைதான் என்று வருங்காலச் சந்ததியினருக்கு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் பட்டுக்கோட்டையின் பாடல்கள் அங்கே நிச்சயமாய் பரிணமிக்கும்! ஏட்டிலே இவன் பாடல்கள் பதிந்திருப்பதைக் காட்டிலும் மக்கள் இதயங்களில் பதிந்திருப்பதே அதிகம்!! நூற்றுக்கணக்கில் விளைந்த இவர்தம் முத்துக்குவியலில் நான் முதல் முத்தாகக் கருதும் பாடலிது.

    அரசிளங்குமரி என்னும் திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில்.. மக்கள் திலகம் பாடுவதாய் அமைந்த பாட்டு! எளிய வரிகள் இனிய இசை இவைகளின் கலவைதான் என்பதுடன் தன் இனிய குரலால் வருடங்களைத் தாண்டி வாழுகின்ற பாடலுக்கு உயிரூட்டியிருக்கிறார் டி.எம்.செளந்திரராஜன்.

    சின்னப்பயலேசின்னப்பயலே சேதி கேளடா நான்
    சொல்லப்போற வார்த்தையை நன்றாய் எண்ணிப்பாரடா – நீ எண்ணிப்பாரடா
    சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

    ஆளும்வளரணும் அறிவும்வளரணும் அதுதாண்டாவளர்ச்சி – உன்னை
    ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
    நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்காலம் தரும்பயிற்சி – உன்
    நரம்போடுதான் பின்னிவளரணும் தன்மான உணர்ச்சி (சின்னப்பயலே)

    மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா – தம்பி மனதில் வையடா
    வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா – நீ வலது கையடா
    தனியுடைமைக் கொடுமைகள்தீர தொண்டு செய்யடா – நீ தொண்டு செய்யடா
    தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா – எல்லாம்பழைய பொய்யடா (சின்னப்பயலே)

    வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
    விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க – உன்தன்
    வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
    வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே – நீ
    வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே – நீ வெம்பிவிடாதே (சின்னப்பயலே)

    இது எழுதிவைத்த பாடல் மட்டுமல்ல! வளரும் மழலைக்கு சொல்லப்படும் கருத்துக்களாய்

    நிறைந்திருந்தாலும் வளர்ந்தவர்களுக்கும் தேவைப்படும் பொக்கிஷமாகவே கருதப்படுகிறது.

    பட்டுக்கோட்டையார் பாடல் என்றால் அதில் பட்டுத்தெறிக்கும் முத்துக்கள் கொட்டிக்கிடக்குமோ? என்றைக்கும் மனதை விட்டு அகலாத ஒரு திரைப்பாடலாய் இப்பாடல் உலா வருவதை எவர் இங்கே மறுக்க முடியும்?

    வீரம், விவேகம், தன்மானம், பகுத்தறிவு என்றெல்லாம் மனித உணர்வுகளை மீட்டியெடுக்கும் உன்னதமான பாடல் உண்டென்றால் அது இப்பாடல் அன்றி வேறு எது??

    சுருக்கமாய் சொல்ல விழைகிறேன்.. இது தன்மானமுள்ள தலைமுறைகளுக்காக அன்றைக்கே பட்டுக்கோட்டை எழுதிவைத்த உயில்!

    http://www.youtube.com/watch?v=izlGxawSiKo

    http://www.youtube.com/watch?v=izlGxawSiKo

    Share