மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 

 சின்னப் பயலே.. சின்னப் பயலே.. சேதி கேளடா..

· (பட்டுக்கோட்டை எழுதிவைத்த உயில்!!)

aaaதமிழ்த்திரைச் சரித்திரத்தில் ஒரு பாட்டாளியின் குரல் – ஒடுக்கப்பட்டவர்களின் ஓசை – உழைப்பவர்களின் வியர்வை – நெசவாளர்களின் குமுறல் – சாலைவண்டி இழுப்பவர்களின் சுமை – சாமான்ய மக்களின் பிரதிநிதித்துவம் – சமத்துவ சமுதாயப் பார்வை – அவலங்களைத் தட்டிக்கேட்கும் உறுதி – மானிட குணங்களின் கசடுகளை களையத் துடிக்கும் கூர்மை! பாமரர்களும் புரிந்துகொள்ளும் பகுத்தறிவுச் சிந்தனை – ஆயிரமாயிரம் கவிஞர் பெருமக்கள் வந்து எழுதி வைக்க வேண்டியவற்றை தன் 29 வயதில் மரணத்தைத் தொட்ட மக்கள் கவிஞன் ஒட்டுமொத்தமாய் ஓங்கி ஒலித்தான் என்றால் அது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களையே குறிக்கும்!

ஏழைகளின் தோழனாய்.. பாட்டாளிகளின் கூட்டாளியாய்.. உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்குரலாய்.. முத்து முத்தாய் இவன் எழுதி வைத்தப் பாட்டு! தஞ்சை மண்ணிலிருந்து தவழ்ந்து வந்த தமிழ்!! அர்த்தபுஷ்டிகளோடு இவன் படைத்த வரிகள் சமுதாய அவலங்களின்மீது எப்போதும் விழுகின்ற சவுக்கடிகள்!!

சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளில் வலியோர் கை ஓங்கி நிற்பதும் மெலியோர் கை தாழ்ந்திருப்பதும் இல்லான் எனும் நிலை மாற்றிடவும் மக்கள் புரட்சியால் கைகூடும் என்கிற திடநம்பிக்கையோடு சத்திய வரிகளைத் தந்தவன் இவன் என்பது மறக்க முடியாதது.

பொற்காலப் பாடல்கள் இவைதான் என்று வருங்காலச் சந்ததியினருக்கு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் பட்டுக்கோட்டையின் பாடல்கள் அங்கே நிச்சயமாய் பரிணமிக்கும்! ஏட்டிலே இவன் பாடல்கள் பதிந்திருப்பதைக் காட்டிலும் மக்கள் இதயங்களில் பதிந்திருப்பதே அதிகம்!! நூற்றுக்கணக்கில் விளைந்த இவர்தம் முத்துக்குவியலில் நான் முதல் முத்தாகக் கருதும் பாடலிது.

அரசிளங்குமரி என்னும் திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில்.. மக்கள் திலகம் பாடுவதாய் அமைந்த பாட்டு! எளிய வரிகள் இனிய இசை இவைகளின் கலவைதான் என்பதுடன் தன் இனிய குரலால் வருடங்களைத் தாண்டி வாழுகின்ற பாடலுக்கு உயிரூட்டியிருக்கிறார் டி.எம்.செளந்திரராஜன்.

சின்னப்பயலேசின்னப்பயலே சேதி கேளடா நான்
சொல்லப்போற வார்த்தையை நன்றாய் எண்ணிப்பாரடா – நீ எண்ணிப்பாரடா
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

ஆளும்வளரணும் அறிவும்வளரணும் அதுதாண்டாவளர்ச்சி – உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்காலம் தரும்பயிற்சி – உன்
நரம்போடுதான் பின்னிவளரணும் தன்மான உணர்ச்சி (சின்னப்பயலே)

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா – தம்பி மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா – நீ வலது கையடா
தனியுடைமைக் கொடுமைகள்தீர தொண்டு செய்யடா – நீ தொண்டு செய்யடா
தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா – எல்லாம்பழைய பொய்யடா (சின்னப்பயலே)

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க – உன்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே – நீ
வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே – நீ வெம்பிவிடாதே (சின்னப்பயலே)

இது எழுதிவைத்த பாடல் மட்டுமல்ல! வளரும் மழலைக்கு சொல்லப்படும் கருத்துக்களாய்

நிறைந்திருந்தாலும் வளர்ந்தவர்களுக்கும் தேவைப்படும் பொக்கிஷமாகவே கருதப்படுகிறது.

பட்டுக்கோட்டையார் பாடல் என்றால் அதில் பட்டுத்தெறிக்கும் முத்துக்கள் கொட்டிக்கிடக்குமோ? என்றைக்கும் மனதை விட்டு அகலாத ஒரு திரைப்பாடலாய் இப்பாடல் உலா வருவதை எவர் இங்கே மறுக்க முடியும்?

வீரம், விவேகம், தன்மானம், பகுத்தறிவு என்றெல்லாம் மனித உணர்வுகளை மீட்டியெடுக்கும் உன்னதமான பாடல் உண்டென்றால் அது இப்பாடல் அன்றி வேறு எது??

சுருக்கமாய் சொல்ல விழைகிறேன்.. இது தன்மானமுள்ள தலைமுறைகளுக்காக அன்றைக்கே பட்டுக்கோட்டை எழுதிவைத்த உயில்!

http://www.youtube.com/watch?v=izlGxawSiKo

http://www.youtube.com/watch?v=izlGxawSiKo

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.