குறவன் பாட்டு-23
குறத்தி விற்பனைக்காக நகரம் செல்லுதல்
நாற்பது வயது நந்தவ னம்போல்,
தோற்றத்தில் இருபது வயதுப் பெண்போல்,
பாற்கடல் கொண்ட தெள்ளமு தம்போல்,
பற்பல பொருட்களைச் சுமந்து நடந்தாள்! 188
இரவைப் பகலாக்கும் ஒளிமிகு விழிகளும்,
பகலை இரவாக்கும் இருள்மிகு கூந்தலும்,
இரண்டும் சந்திக்கும் மாலைப் பொழுதென,
நுதலில் பொன்வண்ணம் பொங்க நடந்தாள்! 189
சிறுகச் சிறுகச் சேகரம் செய்த,
சிவந்த கனிகள் சிறுபெருங் காய்கள்,
நறுமணம் வீசும் பலநிற மலர்கள்,
இன்னும் பலபொருள் சுமந்து வந்தாள்! 190
தலைமேல் கைகூப்பி ஈசனைத் தொழுவதுபோல்,
தன்னிரு கைதூக்கித் தலைமேல் கூடையினை,
திடமாய்ப் பிடித்தபடி குறத்தியும் நடப்பது ஏன்?
செய்யும் தொழில்தெய்வம் என்பத னாலோ! 191
வாரம் கடந்து வருடம் கடந்து,
தொடர்ந்து வருகை புரியும் குறத்தியை,
மலர்ந்த முகத்துடன் பெண்கள் பலரும்
விரும்பி அழைத்துப் பொருட்களை வாங்கினர்! 192
வியாபாரத் தந்திரம் எதுவும் செய்யாமல்,
வார்த்தைகள் கொண்டு மாயம் செய்யாமல்,
விரும்பிய பொருட்களை விரும்பிய வருக்கு,
விலையைக் குறைத்து விற்பனை செய்தாள்! 193
சுமந்த பொருட்களின் பெயரைச் சொல்லி,
குரலில் ஏற்ற, இறக்கம் காட்டி,
கேட்பவர் கவனம் ஆர்வம் கூட்டி,
வேடிக்கையாக விற்பனை செய்தாள்! 194
கீரைக் கட்டுடன் வெட்டிய கரும்பைச்,
சிறு கட்டுகளாகக் கட்டி முடித்து,
நீரைத் தெளித்து கீரையின் ஈரம்,
காயாமல் அதைக் காத்து நடந்தாள்! 195
ஊருக் குள்ளே நுழையும் போது,
பாரம் நிறைந்த கூடை சுமந்து,
தேவைக் கதிகமாய் உணவை உண்ட,
பாம்பைப் போல ஊர்ந்து வந்தாள்! 196
கலப்பட மற்றுக் கானகம் ஈந்த,
பலப்பல பொருட்களைக் குறத்தியும் ஏந்தி,
கலகல வென்று சிரிப்பைச் சிந்தி,
மளமள வென்று விற்பனை செய்தாள்! 197
தெருவில் கூடை சுமந்து நடக்கையில்,
இருளை மனதில் சுமந்த ஆண்களின்,
கருணை வறண்ட காமப் பார்வைகள்,
குறத்தியின் உடலைத் துளைப்பது கொடுமை! 198
இரவும் பகலும் சந்திக்குமிடம்,
இது ஒரு வித்தியாசமான சிந்தனை..
வாழ்த்துக்கள்…!
நல்லதோர் கோணம், அருமை.
தலைமேல் கைகூப்பி ஈசனைத் தொழுவதுபோல்,
தன்னிரு கைதூக்கித் தலைமேல் கூடையினை,
திடமாய்ப் பிடித்தபடி குறத்தியும் நடப்பது ஏன்?
செய்யும் தொழில்தெய்வம் என்பத னாலோ!
அன்புடன்
….. தேமொழி
கவிதைகளை இரசித்துப் படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ள நண்பர்கள் திரு.செண்பக ஜெகதீசன் மற்றும் திருமதி.தேமொழி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.