ஆண்டாள் பிரியதர்ஷினி நூல்கள் அறிமுக விழா – 28.01.2022
Blog
-

ஒரு சாகசப் பயணம்
மீன் வடிவ இருசக்கரப் பலகையில் நின்றபடி இதோ ஒரு சாகசப் பயணம். கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் கண்ட காட்சி.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

சேக்கிழார் பாடல் நயம் – 158 (ஆன பெருமை)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
வரலாறு :
பெரிய புராணத்தின் அடுத்த நாயனார் முருக நாயனார் ஆவார். உமை யம்மையைத் தழுவிச் சடையில் கங்கையை தரித்த பெருமானின் அடியார்கள் விரும்பி அடையும் ஊர், சோழநாட்டில் உள்ள பூம்புகலூராகும். அவ்வூரில் அடியாரணிந்த திருநீற்றொளியால் இரவும் வெளிச்சம் தரும்; மலரில் உறையும் வண்டும் ஒலியுடன் விளங்கும். அங்கே அவ்வண்டுகள் தாவியமரும் மலர்களில் தென் பொழியும்; அதுபோல அங்கே மலர்கலில் தேன் உண்ணும் வண்டுகளும், பறவைகளும் தேன்போன்ற பதிகஇசை பாடும். அங்கு வண்டுகளின் இசை கேட்டுத் தேன் துளிக்கும் மலர் போலப் பதிக இசை கேட்ட மக்களின் முக மலரும் கண்ணீர் துளிக்கும்.
பாடல் :
ஆன பெருமை வளஞ்சிறந்த வந்தண் புகலூ ரதுதன்னின்
மான மறையோர் குலமரபின் வந்தார் முந்தை மறைமுதல்வர்,
ஞான வரம்பின் றலைநின்றார், நாகம் புனைவார் சேவடிக்கீழ்
ஊன மின்றி நிறையன்பா லுருகு மனத்தார் முருகனார்.பொருள் :
அத்தகைய பெருமையும் வளனும் சிறந்து விளங்கிய அழகிய குளிர்ச்சியுடைய புகலூர் என்னும் அந்தத்தலத்தில், பெருமையுடைய வேதியர் குலத்தில் அவதரித்தார்; முந்தையாகிய வேத முதல்வர்; ஞானத்தின் முடிந்த எல்லையிற் சிறந்து நின்றார்; அரவை அணியாகக் கொண்ட சிவபெருமானது திருவடிகளின்கீழ்க் குற்றமில்லாது நிறையும் அன்பினால் உருகும் மனத்தினை யுடையவர் முருகனார் எனப்படுவோர்.
ஆன என்ற சீர் மேற்கூறியபடி உயிரினை உயர்த்துதற்கான; உலக நிலைக்கான ஏனையபெருமைகள் ஆகாதன என்பதாம். ஆனபெருமை வளம் முன்பே கூறப்பட்ட சிவத்துவ விளக்கத்துக்குரிய பெருமையும், அது விளங்குதற்குரிய இடமாகிய உலகவளங்களும் ஆகும்.
அந்தண் புகலூர் – அழகு – சோலைகள், தடங்கள், அவற்றிற்பூக்கும் மலர்கள் என்றிவற்றாலாகுவது. தண்மை – பிறவிவெப்பத்துக்கு அஞ்சிப் புகல் அடைந்தோரது வெப்பத்தைமாற்றிக் குளிர்ச்சிசெய்யுந் தன்மை.
“வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும்,
அஞ்சி யுனையடைந்தே னையா பராபரமே”என்றபடி இங்கு உலகத் துயிர்கள் சரண்புக அவர்களுக்கு அபயங்கொடுத்துக் காத்தல் குறித்தது.
ஆனபெருமை – ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசுகள், ஆளுடைய நம்பிகள் என்ற மூவரும் ஈரிரண்டு முறை வந்து தரிசித்தனர். பிள்ளையாரும் அரசுகளும் திருநீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய பல அடியார் திருக்கூட்டத்துடன் முருகநாயனாரது திருமடத்திற் பலகாலம் தங்கித்
“திருத்தொண்டின் நிலையுணர்ந்து” ,
“திருத்தொண்டர்பெருமையினை விரித்துரைத்தங்கு,
ஒருப்படுசிந் தையினார்கள் உடனுறைவின் பயன்பெற்றார்” .ஆளுடைய அரசுகள் பொய்ப்பாசம் போக்குவார் இங்குத்தங்கி
“நையுமனப் பரிவோடு நாடோறுந் திருமுன்றிற்,
கைகலந்த திருத்தொண்டு செய்துபெருங் காதலுடன்,
வைகுநா ளெண்ணிறந்த வண்டமிழ் மாலைகள் மொழிந்து”“புகலூரன் என்னையினிச் சேவடிக்கீழ் இழித்திடுமென் றெழுகின்ற,
முன்னுணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்து” ,“நண்ணரிய சிவானந்த ஞானவடிவே யாகி,
அண்ணலார் சேவடிக்கீழ்”அமர்ந்திருக்கப் பெற்றனர்! உலகத்தாருக்கு அடிமைத்திறத்தின் பெருமை யைக் காட்டியருளும் வகையாலே பங்குனி உத்திரத் திருவிழாவில் அடியார்களை ஊட்டுதற்குப் பொன் வேண்டிய ஆளுடைய நம்பிகள் செங்கல் செழும்பொன்னாகப் பெற்றனர். இவ்வரலாறுகள் இத்தலத்தின் பெருமையை விளக்குவனவாய் இங்குக் கருதத்தக்கன.
மறையோர் குலமரபின் வந்தார் என்றதனால் அவர் அவதரித்தது வேதியர் குலமென்பதும், மறைமுதல்வர்என்றதனால் அக்குலத்தில் அவதரித்த பெருமை மட்டினமையாது, அக்குலத்துக் கேற்ப வேதியரொழுக்கத்தாலும், சிறந்து வேத வாய்மையின் முதன்மைபெற்று விளங்கினார் என்பதும் உணர்த்தப்பட்டது!
ஞான வரம்பின் தலைநின்றார் என்ற தொடர், வேதம் வல்லவராய் விளங்கியதோடு சிவாகம சீலராகிச் சிவாகமங்களிற் சொல்லப்பட்ட சிவஞானங் கைவரப்பெற்ற முதன்மையுடையவராய் அத்துறைகளில் விதிப்படி ஒழுகி நின்றனர் என்பதாம்.
இங்கு நாயனார் செய்த தொண்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்குபாதங்களின் திருத்தொழில்களுமாம் என்பது மேல்வரும் ஏழு திருப்பாட்டுக்களிற் போந்த பொருளாவதும் காண்க. மேற்சொன்னமறை என்பது வேதங்களையும், இங்குக்கூறிய ஞானம் என்றது சிவாகமங்களையும் குறித்தது. தலை நிற்றல் – ஒழுக்கத்திற் சிறத்தல்.
ஊனம் என்ற சொல், இடையறாது அன்பு செலுத்துதற்கு வரும் தடைகளைக் குறித்தது. அன்பால் மனம் உருகுதலாவது – பெரியவற்றுளெல்லாம் பெரியவனாகிய இறைவன் உயிர்களின் சிறுமை எண்ணாது எஞ்ஞான்றும் செய்துவரும் பேரருளின் பெருமையினை எண்ணியெண்ணி அன்பு செய்தலால் உள்ளம் நெகிழ்தல்.
“அத்தாவுன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்….
பிழைத்தனக ளெத்தனையும் பொறுத்தாயன்றே….
எம்பெருமான் றிருக்கருணை யிருந்தவாறே” ,“நாய் சிவிகை யேற்றுவித்த அம்மை”;
“நாயனைய வென்னைப் பொருட்படுத்தி நன்கருளித்,
தாயனைய னாயருளும் தம்பிரான்”முதலிய திருவாக்குக்கள் காண்க.
வேதங்களில் தலைசிறந்ததனால் சிறப்பாகிய சிவாமங்களில் தேர்ந்தார்; அதனால் ஞானவழி நின்றார்; அதன் பயனாகச் சிவன்சேவடிகளில் அன்பினால் உருகி, அவரது நாமம் பயின்றார்; அதனாற் சிவபூசையே உறுதிப்பொருள் என்றறிந்து சிவனை முப்போதும் மலர்கொண்டு அலங்கரித்துப் பூசித்து அழகு பார்த்துக் களித்தார்; திருவடி ஞானத்திற் சிறக்கவே அடி அணைந்த அடியார் தொண்டினிற் சிறந்தொழுகினார்; அதனாற் சிவனடிப் பேறுபெற்றனர் என்று இம்முறையே, இப்பாட்டிற் சொல்லிய இத்தன்மைகளே மேல்வரும் சரித நிகழ்ச்சிகளாய் விளைந்தன என்பதும்கண்டுகொள்க.
“வேதச் சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத்,
திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின்
ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்”என்ற சிவஞான சித்தியார் திருவாக்கு இங்குக் கருதத்தக்கது.
முருகனார் வந்தார்; அவர் முதல்வர்; அவர் தலைநின்றார்; அவர் மனத்தார் எனமுடித்துக்கொள்க. அவர் என்ற சொல் வருவித்து முதல்வர் முதலிய மூன்று பெயர்ப் பயனிலைகளுடன் கூட்டிமுடிக்க.
இப்பாடலில் முருக நாயனார் வேதியர் மரபில் வந்து, சிவாகமம் கற்று, சிவனடி மறவாத சிந்தையராய் , சிவநாமம் பயின்றார். அதனால் சிவபூசை செய்து, அடியார்களின் தொண்டில் சிறந்து விளங்கினார். அதனால் சிவன் திருவடிப்பேறு பெற்றார் என்பதைச் சுருக்கமாகக் கூறுகிறது. பின்னர் விரிவைக் காணலாம்.
-

விழித்தெழுந்த இந்தியா
அண்ணாகண்ணன்
தகதகக்கும் அகமுகத்து நகைநமக்குச் சித்திரம்
சகலருக்கும் சகலமென்ற இதுநமக்குத் தத்துவம்
நிகரிலாத நெறியறங்கள் நிதம்நமக்குச் சத்தியம்
பகைவருக்கும் அருளுகின்ற அருள்நமக்கு நித்தியம்மனிதனென்ற பெருமிதத்தை வழியவிட்ட நம்முகம்
கனிவுமிக்க மனம்பனிக்கப் பளபளக்கும் நம்விழி
இனிமைமிக்க மதுரகாதல் இசைததும்பும் நம்குரல்
இனிதுவக்கும் பெரிதுவக்கும் இளகிநிற்கும் நம்முயிர்யுகயுகத்துக் கருச்சுமந்து விழித்தெழுந்த இந்தியா
ஜெகஜெகத்தை வழிநடத்தும் தேசம்இந்த இந்தியா
வகுவகுத்து இடரனைத்தும் சிதறடிக்கும் இந்தியா
பகுபகுத்து முனைகுவித்துப் பணிமுடிக்கும் இந்தியாசெயல்சிறந்து இயல்சிறந்து பெயல்சிறந்து வாழ்கவே
பயில்சிறந்து எயில்சிறந்து ஒயில்சிறந்து வாழ்கவே
பயிர்சிறந்து உயிர்சிறந்து உயர்சிறந்து வாழ்கவே
நயம்சிறந்து லயம்சிறந்து சுயம்சிறந்து வாழ்கவேஅனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.
ஓவியம் – வி.கிருத்திகா
-

சௌந்தர்ய லஹரி – 5
ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் ஐந்தாவது ஸ்லோகம். அன்னையை ஆராதனை செய்வதால் கிடைக்கக்கூடிய அளப்பரிய பலன்களை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

மயிலைப் பாரு! மயிலைப் பாரு!
தேசியப் பெண்குழந்தைகள் தினமான இன்று, பெண்குழந்தைகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள். இந்த நாளில், நித்திலா பாடிப் பழகிய ‘மயிலைப் பாரு மயிலைப் பாரு’ என்ற பாடலை வெளியிடுகிறோம்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

சௌந்தர்ய லஹரி – 4
ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் நான்காவது ஸ்லோகம். அகிலம் புரக்கும் அம்பிகையின் அருட்சிறப்புகளை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

கண்டத் திப்பிலி ரசம்
தொல்காப்பியரும் திருவள்ளுவரும் பயன்படுத்தியிருக்கக் கூடிய பண்டைய மூலிகை, திப்பிலி ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம்.
திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘கண்டத் திப்பிலி’ என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களைக் குணமாக்க, கண்கண்ட மருந்தாகப் பயன்படுகிறது. இன்றைய கொரோனா தொற்றுக் காலத்தில் இது சமய சஞ்சீவியாகத் திகழ்கிறது.
இந்தக் கண்டத் திப்பிலியைக் கொண்டு ரசம் செய்வது எப்படி? இதோ செய்து காட்டுகிறார், சுதா மாதவன். நீங்களும் செய்து பாருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

புதிய பிள்ளைப்பருவங்கள்-9
மீனாட்சி பாலகணேஷ்
குருகுல வாசம்/ கல்வி கற்றல் (ஆண்பால் பிள்ளைத்தமிழ்)
ஒருவர் தம் வாழ்வில் முந்தியிருந்து சிறப்படைந்து விளங்க, கல்விகற்றல் பெரிதும் இன்றியமையாததாகும். ஆண்மக்களாயின் பழங்காலத்தில் அவர்களைக் குருகுலவாசம் செய்ய அனுப்புவது ஒரு வழக்கமாக இருந்து வந்தது. ஆசிரமத்தில் குருவுடன் தங்கி, அவரும் அவர் மனைவியுமிடும் பணிகளைச் செய்து உதவி, பின் கல்வியையும் கற்றொழுகி, அவற்றிற் சிறந்து வீடுதிரும்புதல் வழக்கிலிருந்து வந்தது.
கிருஷ்ணன் சந்தீபனி முனிவரிடம் கல்விகற்க அவருடைய குருகுலத்தில் இருந்ததைப் புராணங்களில் நாம் குருகுல வாசமாகக் காண்கிறோம். பதின்மூன்று வயதாகும்வரை கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் யசோதையின் செல்லக்குழந்தையாக வளர்ந்த கிருஷ்ணன் கம்சனைக் கொன்று தன்னைப் பெற்ற தாய்தந்தையரான தேவகி, வசுதேவர்களைச் சிறைமீட்கிறான். அதன்பின் வசுதேவர் கிருஷ்ணனுக்கு உபநயனம் செய்விக்கிறார். கிருஷ்ணனையும் பலராமனையும் முறையாகக் கல்விகற்க சந்தீபனி முனிவரின் ஆசிரமத்திற்கு வசுதேவர் அனுப்பி வைக்கிறார் எனவும் அறிகிறோம். இங்குதான் கிருஷ்ணன் பிற்காலத்தில் தன் உயிர்த்தோழனான சுதமா எனும் குசேலரைச் சந்திக்கிறான்.
இவர்கள் கல்விகற்று வந்த நாட்களில் ஒருநாள் குருவின் மனைவியார் அடுப்பெரிக்க, உலர்ந்த விறகினைக் கொண்டுவருமாறு இவர்களிடம் கூற, இவர்களும் காட்டினுள் பயணிக்கின்றனர். விறகினைத் தேடிக்கொண்டு நீண்ட தூரம் சென்றுவிட்டனர். நீண்டநேரமும் ஆகிவிட்டது. மின்னல், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்கின்றது. மழையில் வழி தவறித் தவறான பாதையில் சென்று பயத்துடன் ஒரு மரத்தினடியில் நிற்கின்றனர். இவர்களைக் கிருஷ்ணனே தைரியமூட்டி, கொடிய வனவிலங்குகளிடமிருந்து தப்பிக்க மரக்கிளைகளில் ஏறிக்கொண்டு வாகாக இருக்குமாறு செய்விக்கிறான். பொழுது புலர்ந்ததும் சீடர்களைக் காணாமல் குரு சந்தீபனி முனிவரே கவலைகொண்டு அவர்களைத் தேடிக்கொண்டு கானகத்துள் வந்து அவர்களை ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
கிருஷ்ணனும் பலராமனும் மிகக்குறைந்த காலத்திலேயே, அதாவது அறுபத்தொன்று நாட்களிலேயே தாம் கற்க வேண்டிய அனைத்தையும் கற்றுத்தேர்ந்தனர். குருவின் ஆசிரமத்தை விட்டுச் செல்லும் முன்பு குருதட்சிணையாக அவருக்கு என்ன வேண்டும் எனக்கேட்டு அதனையளிப்பது சீடர்களின் வழக்கம். ஆகவே கிருஷ்ணனும் பலராமனும் சந்தீபனி முனிவரிடம் குருதட்சிணை பற்றி அவரையே கேட்டனர். குருவிற்கு கிருஷ்ணன் திருமாலின் அவதாரம் எனத் தெரியும். நீண்ட நாட்களின் முன்பு கடலில் நீராடச் சென்ற அவரது ஒரே மகனை ஒரு அரக்கன் கடலினுள் இழுத்துச் சென்றுவிட்டான். அவனை மீட்டுத்தர இயலுமானால் அதுவே தாம் வேண்டும் குருதட்சிணை என்றார் குரு.
கிருஷ்ணன் பலராமனுடன் பிரபாச கடற்கரைக்குச் சென்று அங்கு சங்காசுரன் எனும் அசுரனைக்கொன்று அவனால் விழுங்கப்பட்ட சிறுவனை மீட்டு வருகின்றான். சங்காசுரனிடமிருந்து பாஞ்சசன்னியம் எனும் சங்கினையும் எடுத்துத் தனதாக்கிக் கொள்கிறான். தன் மகனைத் திரும்பப்பெற்ற குருவும் பெரிதும் மகிழ்ந்து கிருஷ்ணனையும் பலராமனையும் ஆசிர்வதிக்கிறார் எனப் பல புராணங்கள் கூறுகின்றன.
கற்கவே கசடறக் கல்வியைக் குருவிடம்
சந்தீபனி யாசிரமத்திற்
றந்தைதர மாசற்ற மற்ற சிறாருடன்
மனமகிழ்ந் துறைந்தங்குபொற்பாத மலர் பதித்துப் பூமகளின்
துணைவனே! பதுமநாபனே!
பொன்மகள் ருக்குமிணி கேள்வனே! கேசவனே!
பங்கமின்றிக் கல்விச்செல்வம்
பெற்றிடவே பார்த்தனுக் குக்கீதையு ரைத்தகண்ணனே!
பெருமைமிகு அண்ணன்
பலராமனு நண்பன் சுதாமாவு முடனிருக்க
பேரானந்த முடன்கல்விகற்றிடவே கருத்துடன் ஆங்கிருந்து ஆசானுமன
மகிழவவர் மனையாளும்
தமக்கிட்ட பணிகளைச் சிறக்கச் செய்து
குருகுலத்தே இருந்தவனே! 1.————
பங்கமின்றிக் கற்றகல்வி பலித்திட ப்
பக்குவமாய்ப் பாடம்சொன்ன குருவுக்காகப்
பரிவுடனே காணிக்கை யளித்திடவே
பாங்காகப் பரந்தாமன் வினவிடவேதுங்கமுனியும் தவமிருந்து பெற்றமகன்
தன்னை யொருகட லரக்கன்
கவர்ந்து சென்றதைக் கவலையுடன்
கூறிடவே கண்ணன்பல ராமனுடனேபொங்கிடும லைகள்புரண்டெ ழும்பெருங்கடலுள்
புகுந்தே யக்கடலினிடை புதுமையாகவே
பஞ்சசன்னிய வரக்கன்றன்னைப் பங்கஞ்செய்து
புங்கவரின் புதல்வனை மீட்டெடுத்தச்சங்கமதனைக் கைப்பெற்று சாதனைசெய்து
சயத்துடனே குருவினிடம் வந்தடைந்தான்
சாகசஞ் செய்துமீட்ட சிறுமகனை
சந்தீபனி முனிமகிழக் கொடுத்திட்டான். 2.———————-
சொற்ப தினமான பத்தாறு நாட்களிலே
அற்பு தமாய்க் கற்றகல்வி அருமையாகவே
கற்ப துவுங்கேட்ப துவும்பலித மாகவே
பற்ப நாபன் திருவடிகள் பணிந்திடுவமே! 3.——————-
இப்பாடல்களில் கிருஷ்ணன் குருகுலவாசம் செய்து கல்வி கற்றதனைக் கண்டோம்.
இத்தகைய பிள்ளைப்பருவங்கள் காண்போர் கருத்திற்கேற்பவும், எண்ணுவோர் எண்ணத்திற்கிணங்கவும் இன்னும் பலவாகக்கூட இருக்கலாம். கடந்த ஒன்பது அத்தியாயங்களில் என் அறிவிற்கெட்டியவாறு நான் சிந்தையில் எண்ணிக் களித்த பருவங்களைப் பாடிக் களித்தேன். பகிர்ந்தும் கொண்டேன். இத்துடன் இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன். படித்து ரசித்த வாசக உள்ளங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
(நிறைந்தது)
-

பாம்புப் புடலை அறுவடை – 2
நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று பாம்புப் புடலை அறுவடை.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
-

வானத்தில் எத்தனை வண்ணங்கள் – தொடர் நிகழ்ச்சி
வணக்கம்
ஜனவரி 24, திங்கள் மாலை 6.30-7.30,
சென்னை ஆர் கே கனவென்ஷன் (லஸ் அருகில், மயிலாப்பூர்)
‘வானத்தில் எத்தனை வண்ணங்கள்’ தொடர் நிகழ்ச்சி.
நேரில் வரலாம்! அல்லது நேரலையில் காணலாம்: https://youtu.be/zg84Otjk_jo
அன்புடன்,
ரமணன் -

தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 50
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் M.A., M.Phil., Ph.D.,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி- egowrisss@gmail.comதிருவள்ளுவர் – உவமங்களின் பிரம்மா!
முன்னுரை
‘தெய்வப் புலமை’ என்னுந் தொடர் தெய்வத்தான் அருளப்பட்ட புலமை எனப் பொருள்படுமாறு நின்ற குறிப்புத் தொடர். கற்றறிந்தார் படைப்பில் காணமுடியாத அனைத்துப் படைப்புக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குவது திருக்குறள். மானுட ஆற்றல் அறிவுக்குட்படாதபோது தெய்வ நம்பிக்கை வருவது இயல்பு! தமிழில் திருக்குறளின் சாரமில்லாத எந்தப் படைப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு கூறில் மட்டும் திருக்குறள் யாரும் தொடமுடியாத இடத்தில் நிற்கிறது. அது அதில் காணப்படும் உவமங்கள். அழகியல் சார்ந்த உவமங்களைக் கருத்தியல் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதே தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடு. அந்தக் கோட்பாட்டை முழுமையாக யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருவகை அறிவும் புலப்படுமாறு பின்பற்றியவர் திருவள்ளுவர். இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை நாயனாரின் உவம ஆற்றலை ஆராய்வதாக அமைகிறது.
திருக்குறள் உவமங்களின் தனித்தன்மை
பொதுவாக ஒரு கருத்தினை விளக்க ஒன்றுக்கும் மேற்பட்ட உவமங்கள் பொருத்தமாகலாம். பெண்ணின் முகத்துக்கு நிலவையும் ஒப்பிடலாம், மலரையும் ஒப்பிடலாம். தீக்குள் விரலை வைத்தாலும் விரல் துடிக்கும். பாம்பு தீண்டினாலும் விரல் துடிதுடிக்கும். இரண்டனையும் உவமமாக்கலாம். எனவே பொருளும் உவமமும் தம்முள் இடமாற்றம் செய்து கொள்ளலாம். அதாவது பொருள் தனக்கான உவமத்தை மாற்றிக் கொள்ளலாம். உவமம் தான் விளக்க வேண்டிய பொருளை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் திருக்குறளில் இது இயலாது. குறட்பாக்களில் பயின்று வரும் உவமங்கள் அவை விளக்கும் பொருண்மைகளைத் தவிர வேறு பொருண்மைகளை விளக்கப் பயன்படாது. குறட்பாவின் பொருண்மைகளை விளக்க திருவள்ளுவர் பயன்படுத்திய உவமங்களைத் தவிர வேறு உவமங்களைக் கொண்டும் விளக்க முடியாது. இது விளக்கும் ஒளியும் போலப் பிணைந்தது. பிரிக்க இயலாதது.
அகரத்தை உவமமாக்கியது ஏன்?
திருக்குறளின் முதற்பால் அறத்துப்பால். அதன் முதற்பகுதி பாயிரம். நான்கு அதிகாரங்களைக் கொண்ட இந்தப் பாயிரத்தின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் வாழ்த்தின் முதற்குறள்,
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”என்பதாகும். இதற்குப் பரிமேலழகர் “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை” என்று எழுதுகிறார். உவமத்தையும் பொருளையும் தனித்தனிச் சுட்டி இரண்டையும் இணைக்கின்ற உவமச்சொல் இல்லாத நிலைக்கு ‘எடுத்துக்காட்டுவமை’ என்பது அனைவருக்கும் தெரிந்த இலக்கண உண்மையே!. ஆனால் இந்த எடுத்துக்காட்டுக்கான காரணங்களைப் பரிமேலழகர் ஆராய்கிறார். அகரத்தை ஏன் உவமமாக்க வேண்டும்? அகரத்திற்கு ஏன் தலைமைப் பதவி? அகரம் எப்படித் தலைமையாகும்? எழுத்துக்களுக்குத் தலையெழுத்தாய் இருப்பதால் அகரம் உவமமாயிற்று என்றால் எப்படித் தலைமையெழுத்தாய் இருக்கிறது? எல்லா எழுத்தொலிகளுக்குள்ளும் ஊடுருவி நிற்பதால் அது தலைமையாயிற்று. இந்த நுட்பங்களையெல்லாம் ‘இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை’ என்னும் ஒரே தொடரால் குறிக்கிறார் பரிமேலழகர். அந்தத் தலைமைப் பண்பை விளக்குகிறார். எழுத்துக்களுக்கு அகரமாகிய ஒலி தலைமை தாங்குகிறது. உலகத்திற்கு ஆதியாகிய பகவன் தலைமை தாங்குகிறார். பொழிப்பில் ‘முதல்’ என்று எழுதி விளக்கத்தில் ‘தலைமை’ என்று தாம் எழுதிய விளக்கத்திற்கான காரணத்தை அவரே பதிவு செய்கிறார். “அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாத மாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும்” என அகரத்தின் தலைமைக்கான காரணத்தைத் தொடர்ந்து விளக்குகிறார். திருவள்ளுவர் கூறும் ‘அகரத் தலைமை’ வரிவடிவத்தை நோக்கியதன்று. ஒலி வடிவத்தை நோக்கியது. ஒலியை ‘நாதம்’ என்பது மரபு. ‘அ’ என்னும் வரிவடிவம் முதல் எழுத்தாக எழுதப்படுவதால் அதனைத் தலையெழுத்தாக எண்ணிவிடக் கூடாதல்லவா? அதனாலேதான் அகரம் என்பது ஒலியைக் (நாதமாத்திரை) குறித்தது என்று எழுதுகிறார். “ஆதி பகவற்குத் தலைமை செயற்கை உணர்வானன்றி இயற்கை உணர்வானும் முற்றும் உணர்தலானும் கொள்க” என்று எழுதுகிறார். உவமத்தின் சிறப்பினை விளக்கிய பரிமேலழகர் பொருளின் தலைமைச் சிறப்பையும் அதற்கான காரணத்தையும் இந்தத் தொடரில் விளக்குகிறார்.
கடவுளா? உலகமா?
இந்தக் குறட்பாவின் கிடக்கை நிலைக்கான உரை மேலே சொல்லப்பட்டது. “எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன. இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது” என்பதே அந்நிலையில் பெறப்படும் பொருள். மேலெழுந்தவாரியாக நோக்கினால் ‘இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது’ என்னுந் தொடர் சரியாக அமைந்திருப்பதுபோல் தோன்றும். தோன்றினால் என்ன ஆகும்? உலகம் முதலில் தோன்றியதாகவும் அவ்வாறு முன்னர்த் தோன்றிய உலகத்திற்கு இறைவன் முதலாக இருக்கிறான் என்பதுபோல் ஆகும்? அப்படி ஆனால் என்ன தவறு? உலகம் முன்னதாகவும் இறைவன் பின்னதாகவும் ஆக்கப்படுவான்! இறைவன்தான் உலக உயிர்களைப் படைத்தவனேயன்றி உலக உயிர்கள் இறைவனைப் படைக்கவில்லை. இந்தக் கருத்து கிடக்கை நிலைப்பொருளில் கிட்டாது. கிட்டாதாயின் என்ன செய்ய வேண்டும்? “இறைவனைக் காணமுடியாது. ஆனால் அவன் படைத்த உலகத்தைக் காணலாம். எனவே கண்ணால் காணக்கூடிய உலகத்தைக் காட்டி “இதோ உலகம்! இந்த உலகம் உண்மையானால் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? ஆமாம்! அவன்தான் இறைவன். எனவே உலகத்துக்கு முதன்மை இறைவன் எனத் திருவள்ளுவர் கூறியிருந்தாலும் இறைவனால் படைக்கப்பட்டதுதான் உலகம்! எனவே இறைவன் ஒருவன் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்”. இந்த விளக்கங்களையெல்லாம் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.
“காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் (திருவள்ளுவர்) கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதி பகவன் என்பது கருத்தாகக் கொள்க”
உலகத்தை முன்னிறுத்தி இறைவனுடைய இருப்பினைத் குறள் உணர்த்தியது. பரிமேலழகரோ அதனை மாற்றி இறைவனை முன்னிறுத்தி அவனால் படைக்கப்பட்டதுதான் இவ்வுலகம்! எனவே இறைவனது உண்மையை உணர்க என்று விளக்கிக்காட்டுகிறார். காட்டவே அகரம் எழுத்துக்களுக்குத் தலைமை. ஆண்டவன் உலகத்திற்குத் தலைமை என்னும் நிரல் பொருள் புலப்படுவது காண்க.
உவமை அணி, வேற்றுமை அணி – ஒரு விளக்கம்
தமிழ்க்கவிதை கோட்பாடுகளில் உவமம் உண்டு. ஆனால் உவம அணி என்பது இல்லை. அது வடமொழி வழக்கு. சிங்காரம் செய்வதாலேயே செத்தது பிழைக்காது! ‘உவம அணி’ என்பது சிங்காரம். அவ்வளவுதான். ஆனால் உவமம் அத்தகையதன்று. ஒளியைப் பிரதிபலிக்கும் ஆடியைப் போன்றது அது. அதன் பணியே பொருளைப் புலப்படுத்துவதுதான். ‘உவமம்’ என்பது ஒப்பீடேயானாலும் அது பொருளுணர்த்துகிற பாங்கு பன்முகத் தன்மை கொண்டது. ‘அது போன்றது இது’ என்பதும் உவமம். அதனை விட இது சிறந்தது என்பதும் உவமமே! முன்னது ஒப்புப் பொருண்மை. பின்னது உறழ்ச்சிப் பொருண்மை. ஒப்பு இல்லாமல் உறழ்ச்சி கிடையாது. ஒப்பு சொன்னால் உவமம். உறழ்ந்து சொன்னால் வேற்றுமை. இந்த நுண்ணியம் இழையும் குறட்பாக்கள் பல. அவற்றுள் ஒன்றினை ஆராய்வதன்வழித் திருவள்ளுவர் எப்படி உவமங்களின் பிரம்மா ஆகிறார் என்பதை அறிய முடியும்.
“மோப்பக் குழையும் அனிச்சமும்
நோக்கக் குழையும் விருந்தும்”திருக்குறளில் ‘ஒன்று மற்றொன்றைவிடச் சிறந்தது, ஒன்று மற்றொன்றைவிடத் தாழ்ந்தது’ என்பன போன்ற பதிவுகள் வரும். ஆனால் அவை எப்படிச் சிறந்தது? எப்படித் தாழ்ந்தது? என்பதற்கான காரணத்தைத் திருவள்ளுவர் கூறமாட்டார். அவற்றிற்கான காரணங்களைக் கண்டறிவது கற்பார் கடன். அல்லது உரையாசிரியர் பணி. இது ஓர் உரைநெறி. இந்நெறியில் பரிமேலழகர் உரை தனித்தன்மை பெற்றது. “பெண்ணின் பெருந்தக்க யாவுள?” என்னும் திருவள்ளுவரின் வினாவிற்கு விடையிறுத்த பரிமேலழகர், “கற்புடையாள்போல் அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் யாவுள?” (54) என்றார் என எழுதுவதையும், “செல்லா இடத்துச் சினம் பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே! ஏனையது இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீய பிற இல்லை என்றார்” (302) என எழுதுவதும் காண்க. இந்த வகையில் எதிர்பாராச் சூழலில் இல்லத்திற்கு வரும் விருந்தின் இயல்பு அனிச்சப்பூவினும் மென்மையானது என்பதைச் சொல்ல வருகிறார். திருக்குறள் அறத்துப்பாலில் ஒன்பதாவது அதிகாரத்தின் பத்தாவது இறுதிப்பாடலாக அமைந்தது,
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” (90)என்னும் குறட்பாவாகும். இதற்கு,
- அனிச்சம் மோப்பக் குழையும் – அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது
- விருந்து முகந்திரிந்து நோக்கக் குழையும் – விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர் எனப் பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார்.
அதிகாரக் கருத்துப் பகுப்பு
ஒவ்வொரு அதிகாரத்து உட்பொருளையும் பாகுபடுத்திக் கொள்ள பரிமேலழகர் பெரிதும் முயன்றிருக்கிறார். இந்தப் பகுப்புத்தான் திருக்குறளுக்கான புத்துரைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற உரைத்தளவாடங்கள் ஆகும்.
- விருந்தோம்பலின் சிறப்பு (1-2)
- விருந்தோம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் (3-5)
- விருந்தோம்புவார் மறுமைக்கண் எய்தும் பயன் (6)
- இருமைப் பயனுக்கான காரணம் (7)
- விருந்தோம்பாவழிப் படும் குற்றம் (8-9)
- விருந்தோம்புவார்க்கு வேண்டிய இன்முகம் (10)
எனப் பகுத்துக்காட்டி, விருந்தோம்பலின் பன்முகப் பரிமாணத்தை எடுத்து விளக்கியதால்தான், ‘இத்தகைய சிறப்புக்கள் உடைய விருந்தினை ஓம்புவார்க்கு இருக்க வேண்டிய எளிய ஆனால் தலையாய இயல்பு இன்முகமே’ என்பதை அவரால் இறுதிக் குறட்பாவிற்கான விளக்கமாக்க முடிந்தது.
பொழிப்புரை நுட்பம்
- ‘அனிச்சம் குழையும்’ என உடன்பாட்டில் குறளிருக்க ‘மோந்துழியன்றிக் குழையாது’ என எதிர்மறை வாய்பாட்டில் உரைகாண்கிறார். அதிகாரம் விருந்தோம்பல். விருந்தினர் மனம் குழைவதே பரிமேலழகரின் கருத்தில் நின்றதாதலின் உடன்பாட்டு உவமத்தை எதிர்மறை வாய்பாட்டிலும் பொருளை உடன்பாட்டிலும் வெளிப்படுத்துகிறார். ‘(காண்டல் தொடுதல் அன்றி,) மோந்தால்தான் அனிச்சம் குழையும்., திரிபு நோக்கினாலேயே விருந்து குழையும்’ என்பது கருத்து.
விளக்கம்
‘அனிச்சம்’ ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.
விளக்கவுரையில் கண்ட உரைநுட்பம்
- திருக்குறளில் ‘அனிச்சம்’, ‘குவளை’ ஆகிய இரண்டு பூக்கள், முறையே மென்மைக்கும் கண்ணுக்கும் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளன. ‘வாழி அனிச்சமே’(1111) (மென்மையால்), ‘அனிச்சப்பூ கால்களையாள்’(1115) (மென்மை கருதாது) ‘அனிச்சமும்’ (1120) (மென்மைக்காக எடுக்கப்பட்ட) என்னும் இடங்களிலெல்லாம் ‘அனிச்சம்’ என்னும் சொல் தலைமகன், தலைமகள் நலத்தைப் புகழ்வது ஆதலின் பூவை நேரடியாகக் குறித்தது. இக்குறட்பா ஆசிரியர் கூற்றாக அமைந்ததாதலின் ‘அனிச்சம்’ என்னும் மரத்தின் பெயர் மலருக்கு ஆகுபெயர் ஆயிற்று. அதாவது தலைவன் மரத்தைப் பற்றிப் பேசாது மலரைப் பற்றித்தான் பேசுவான் என்பது குறிப்பு. பாட்டில் ‘குழையும்’ என்ற வினையால் ‘அனிச்சம்’ ஆகுபெயராயிற்று, குழைவது மரத்திற்கின்மையின். தலைமகன் கூற்றில் அனிச்சம் ஆகுபெயராகாததற்கு அவன் கருத்தில் அனிச்சப்பூ மட்டுமே நின்றதனான் என்க.
- மேம்போக்காக இந்தப் பாடலைக் கண்ணுறுவார் இதனை எடுத்துக்காட்டுவமமாகவே கொள்ளக்கூடும். மோந்தால் அனிச்சம் குழையும் (மாறுபட்ட) நோக்கினால் விருந்து குழையும்’ என்னும் பாட்டின் கிடக்கை நிலையும் அவ்வாறு கொள்ளுமாறு அமைந்திருப்பதும் உண்மை.
- மென்மைக்கு எடுத்துக்காட்டு அனிச்சப்பூ. ‘பூ’ என்னும் சொல்லுக்கே ‘மென்மை’ என்பது பொருள். ‘பூந்தென்றல்’, ‘பூங்கோதை’, ‘பூங்கதவு’ என்பன காண்க. அனிச்சப்பூ என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. வேற்றுமைத் தொகையாகவும் கொள்ளலாம். அனிச்சம் பூக்களில் மென்மையானது. அதனினும் விருந்தினர்கள் மென்மையானவர்கள் என்றுதான் வள்ளுவர் சொல்ல வருகிறார். பாட்டில் அதற்கான காரணம் வெளிப்பட இல்லை. அக்காரணத்தை ‘மோப்ப’, ‘திரிந்து நோக்க’ என்னும் இருசொற்களைக் கொண்டு கண்டறிய முற்படுகிறார். முற்பட்டு ‘மோத்தல்’ என்பது ‘காண்டல், தொடுதல், மோத்தல் என்னும் நிரலில் மூன்றாவதாகவும் ‘நோக்குதல்’ என்பது அவற்றின் தொடக்க வினையாகவும் அமைந்திருப்பதை அறிகிறார். கண்ணால் காணுகிறபொழுது அனிச்சம் வாடாது. விரல்களினால் தீண்டுகிறபோதும் வாடாது. மூக்கினால் மோந்தால்தான் அது வாடும். தொலைவில் வரும் விருந்தினர்களைக் காண்பது ஒருவினை. அவர்களை இன்சொல்லால் வரவேற்பது அடுத்தவினை. அவர்களை அறுசுவை உண்டியளித்து ஓம்புதல் அவற்றின் தொடர்வினை. ஓம்புபவர் தொலைவில் வரும் விருந்தினர்களைத் தம் பார்வையால் மாறுபட்டு நோக்கினாலேயே மனம் வாடுவர். எனவே மூன்றாம் நிலையில் வாடும் அனிச்சப்பூவினும் முதல் நிலையிலேயே வாடி விடும் விருந்தினர் மென்மையானவர் என்னும் உண்மையைப் பதிவு செய்கிறார். இதனைச் “சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்” என்னும் பகுதி உணர்த்துவது காண்க.
பாம்போடு குடும்பம் நடத்தினால்
தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித் தமிழ்ப் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இலக்கண வரையறை மாணவர்க்குக் கற்பிப்பது. இது மட்டுமே ஆசிரியப் பெருமக்களின் நாட்கடன் ஆகிவிட்டது. தொடர்கல்வியோ அதனடிப்படையிலான தொடர் சிந்தனை வளர்ச்சியோ புதியன கண்டறியும் ஆர்வமோ இல்லாமற்போனது. அவற்றுள் ஒன்றுதான் இல்பொருள் உவமம் பற்றிய பேராசிரியப் பெருமக்களின் அரைகுறைப் புரிதல்!
இல்பொருள் உவமம் என்றால் என்ன?
“காணப்பட்ட இந்த உலகத்தில் இல்லாததொரு பொருளைப் படைப்பாளன் தன் மனக்கண்ணில் அல்லது கற்பனைக் கண்ணில் கண்டு அதனைத்தான் சொல்ல வரும் கருத்து விளக்கம் பெறுவதற்காக உவமமாக்கினால் அது இல்பொருள் உவமம் எனப்படும்.” இதுதான் பள்ளிக்கல்வித் துறையால் ஏற்பளிக்கப்பட்ட இல்பொருள் உவமமத்திற்கான பொருள் வரையறை. உண்மையில் அணியிலக்கணம் கூறும் தண்டியலங்காரத்தில் ‘இல்பொருள் உவமம்’ என்னும் அணியே சொல்லப்படவில்லை.
‘பூதம்’ என்றால் மண்ணுலகம். ஐம்பெரும் பூதம் என்னும் வழக்கு உண்மையாயினும் சிறப்பு நோக்கிப் பூமியைக் குறித்தது! அதற்கு எதிர்ச்சொல் ‘அபூதம்’. அதாவது மண்ணுலகில் இல்லாததொன்று. மண்ணுலகில் இல்லாததொரு பொருளை உவமமாக்கினால் அதற்கு ‘அபூத அணி’ என்று பெயர். இதற்காக எடுத்துக்காட்டப்பட்ட பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.
‘‘எல்லாக் கமலத்து எழிலும் திரண்டொன்றின்
வில்லேர் புருவத்து வேல்நெடுங்கண் – நல்லீர்!
முகம்போலும் அன்ன முறுவலித்தார் வாழும்
அகம்போலும் எங்கள் அகம்!’’- “வில்லேர் புருவத்து வேல்நெடுங்கண் – நல்லீர்!” என்பது முன்னிலை!.
- எல்லாக் கமலத்து எழிலும் திரண்டொன்றின் முகம் போலும் அன்ன முறுவல் என்பது இவ்வுலகில் இல்லாத உவமம்
தண்டியலங்காரத்தில் அபூத உவமத்தையே இல்பொருள் உவமமாகச் சொல்கிறோம் என்பதைக் கூடத் தமிழ்ப் பேராசிரியர்கள் அறியமாட்டார்கள்.
“இருகை யானையை ஒத்திருந்து என்
கருவை யான் கண்டிலேன்”என்று மணிவாசகர் ‘இருகை யானை’ என்று இந்த உலகத்தில் இல்லாததைத் தனக்கு உவமமாக்கிக் கொள்கிறார்.
“தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்தொன்றாய்க் கூட்டி,
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும்மிகக் கலந்தே,
தனித்தநறும் தேன்பெய்து, பசும்பாலும் தெங்கின்
தனிப்பாலும் சேர்த்தொரு தீம்பருப்பிடியும் விரவி,
இனித்தநறு நெய்யளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்த சுவைக்கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதே,
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்கு நடத் தரசே,!
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே!!’’என்று இறைவனின் தரிசன இன்பத்தை, இருக்கின்ற பொருட்களைக் கொண்டு தாமே உருவாக்கிக் கொண்ட இல்லாததொரு பொருளை உவமமாக்குவார் வள்ளற்பெருமான். அடிகள் சொல்லுகின்ற உவமம் பல உவமப் பொருட்களின் கலவை என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும். இந்தப் பின்புலத்தில்தான் திருவள்ளுவர் எழுதிய,
“உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று” (890)என்னும் உவமம் சிந்திக்கப்படுகிறது. பாம்புடன் ஒருவன் வாழ்வது என்பது இவ்வுலகில் இல்லாத ஒன்று. உட்பகை அளவால் சிறிதாயினும் வருகின்ற கேட்டினால் பெரிது. எனவே கண்ணோடாத உட்பகையைக் கொல்ல வேண்டும் என்பதுதான் கருத்து. இந்தக் கருத்தினை விளக்க வந்த திருவள்ளுவர், அதாவது மனப்பொருத்தம் இல்லாதவரோடு வாழ்வது கூடாது என்னும் பொருண்மையை விளக்க ஒரு குடிலுக்குள் பாம்போடு உடன் உறைவதை’ உவமமாக்கியிருக்கிறார்.
வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில்தான் உவமம் அமையும் என்னும் கருத்தியலைத் தாண்ட முடியாதவர்கள் இந்த உவமத்தின் பொருளாழத்தையும் பொருண்மையை விளக்கிக் காட்டும் நுண்ணியத்தையும் அறிதல் அருமையே! குறட்பாவில் ‘வாழ்க்கை’ என்பது தொழிற்பெயர். ‘உறைதல்’ என்பதும் தொழிற்பெயர். இவ்விரண்டனை மட்டும் நோக்கி இதனை வினையுவமை என்று எளிதாகக் கொண்டால் ஏற்படுகிற இலக்கிய அனுபவ இழப்பினை உணர்தல் வேண்டும். பாம்பு இருக்கிறது. குடிலும் இருக்கிறது. மனிதர்களும் இருக்கிறார்கள். இருக்கிற பொருட்களையெல்லாம் ஒன்றாக்கி இல்லாததோர் ஓர் அரிய உவமத்தை உருவாக்கம் செய்து மாபெரும் அரசநீதியையும் வாழ்வியல் உண்மையையும் கூறியிருக்கிறார். உடம்பாடு இல்லாதவர் வாழ்க்கை எதில் போய் முடியும் என்பதை விளக்க இவ்வுலகில் ஓர் உவமத்தைக் கண்டறிய இயலாத நிலையில் தாமே ஒரு உவமத்தைப் படைத்துக் கொள்கிறார் திருவள்ளுவர்.
புலித்தோல் போர்த்திய பசு
‘கள்ளம், கபடம்’ என்பன உள்ளத்து எதிர்மறை இயல்புகள். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. பழமொழி உண்மையானால் இயல்பு வெளிப்பட வேண்டும். ஆனால் சில நேர்வுகளில் சிலர் தங்களது உள்ளத்து இயல்புகளைப் பொய்ச் சிரிப்பாலும் போலிச் சொற்பூச்சுக்களாலும் மறைத்து நல்லவர்கள் போல நடமாடுவார்கள். ‘நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே!’ என்பார் கண்ணதாசன். இவர்கள் உண்மையில் புலிக்குணம் கொண்டவர்கள். வேடமோ பசு. இவர்களைத்தான் உலகியலில் பசுத்தோல் போர்த்திய புலி என்பார்கள். இது உலகியல். ஆனால் திருவள்ளுவர் இதனை மாற்றுகிறார். அதாவது உலகியலையும் மாற்றுகிறார். பழமொழியையும் மாற்றுகிறார். ஏன் மாற்றுகிறார் என்றால் அவர் சொல்ல வந்த கருத்தியலுக்கு இந்த உலகியல் உவமம் பொருந்தாது என அறிகிறார். எனவே உவமத்தைப் பொருளுக்கேற்ப மாற்றிக் கொள்கிறார்.
‘வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று’ (273)பெற்றம் புலித்தோலைப் போர்த்திச் சாது வேடமிடும் உலகில் புலி பெற்றத்தின் தோலைப் போர்த்திக் கொண்டு தீவிரவாதி வேடம் கட்டுவதைத்தான் உவமமாக்கியிருக்கிறார்.
புல்லை மேய்வதற்குப் புலித்தோல் தேவையில்லை!
பசு புல்லைத்தான் மேயும். அது விளைச்சலை மேய முற்படுகிறபோதுதான் துரத்தப்படும். அச்சமின்றி மக்களும் துரத்துவார்கள். இங்கே கதையே வேறு. பசு தனக்குரிய புல்லைத் தவிர்த்து விளைச்சலை மேய்கிறது. விளைச்சலை மேய்ந்தால் வயலுக்கு உரிமையானவன் விடுவானா? எனவே வேடத்தை மாற்றிக் கொள்கிறது. பசு வேடத்தை மாற்றிப் புலிவேடம் போட்டுக் கொள்கிறது. காரணம் அதற்குப் புல்லுக்குப் பதிலாக விளைச்சல் மேல் பேராசை. தனது பேராசையைத் தணித்துக் கொள்ள வேண்டுமானால் பிறருக்கு அச்சத்தைத் தருகின்ற ஒரு வேடம் தேவை. பிறருடைய அறியாமையும் தேவை. புலித்தோல் போர்த்தியிருப்பதால் அதனிடம் செல்ல அஞ்சுவார்கள். புலி புல்லை மேயாது என்னும் அறியாமையையும் பசு பயன்படுத்திக் கொள்ளும்.
போலித் துறவிகள் சமுதாயத்தின் அறியாமையையும் அச்சத்தையும் பயன்படுத்திக் கொண்டு பிறர்க்குரிய மகளிரைத் துய்க்கும் கூடாவொழுக்கத்தை விளக்குவதற்காக வள்ளுவர் பயன்படுத்திய உவமம்தான் ‘புலித்தோல் போர்த்திய பசு’
“வலியின் நிலைமையான்’ என்ற அடையானும் ‘மேய்ந்தற்று’ என்னுந் தொழிலுவமையானும் வல்லுருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம்.
காவலர் கடியாமை புலி புல் தின்னாது என்பதனானும் அச்சத்தாலுமாம்.
ஆகவே வல்லுருவம் கோடற்குப் பயன் அன்ன காரணங்களால் உலகத்தார் அயிராமை ஆயிற்று.
இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியுமின்றிப் பிறர் அயிரா வல்லுருவமும் கொண்டு நின்றவன் மனவழிப்படுதலாவது தன் மனம் ஓடிய வழியே ஓடி மறைந்து பிறர்க்குரிய மகளிரை விழைதலாம்.
அவ்வாறாதல் பெற்றம் தனக்குரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற் போலும் என்னும் உவமையான் அறிக”
புலி புல்லை மேயாது என்பது உண்மை. பசுத்தோலைப் போர்த்திக் கொண்டு புலி உலாவுதல் போல வஞ்சகர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் பசுபோலத் தோன்றிக் கொண்டு புலிவேலை செய்யும் சில போலித் துறவிகளைச் சாடுகிற திருவள்ளுவர் இந்த அரிய உவமத்தைப் பயன்படுத்துகிறார். எண்ணிப் பார்க்க வேண்டும்! தான் சொல்ல வந்த கருத்தியல் உலகியல்! அதற்கான உவமம் அவருக்குக் கிட்டாத நிலையில் ஒரு மரபுசார்ந்த பழமொழியை முற்றிலும் மாற்றிப் புதிய அதாவது இவ்வுலகில் இல்லாத உவமத்தைக் கொண்டு தன்னுடைய பொருண்மையை விளக்கிக்காட்டுகிறார். இந்த உவமம் மரபார்ந்த தமிழிலக்கியப் பரப்பு காணாதது. நினைத்துப் பார்க்க முடியாதது! இந்த உவமத்தைக் கொண்டு வேறு எந்தப் பொருண்மையையும் விளக்க முடியாது. போலித்துறவிகளின் தோலுரிக்க இந்த உவமத்தைத் தவிர வேறு எந்த உவமத்தையும் பயன்படுத்த முடியாது.
அறியாத பிணத்தை அணைப்பது போல
காதல் உணர்வுக்கும் உறவுக்கும் மலரின் மென்மையை உவமமாக்குவார் திருவள்ளுவர். மலரினும் மெல்லிது காமம்!. அதன் செவ்வித் தலைப்படுவர் சிலராக இருத்தலைக் கண்ட திருவள்ளுவர் அதற்கான காரணத்தை ஆய்வாராயினார். விலைமகளிரின் கூட்டமும் அங்கே கிட்டுவதாகக் கருதப்படும் போலி இன்பமுமே காரணம் என்பதைக் கண்டார். மலர் என்று காதலை உருவகப்படுத்தியவரும் அவரே! பிணத்தோடு உறவு கொள்வது என்று எடுத்துக்காட்டியவரும் அவரே! கவிதையில் முரண் என்பதன் உச்சி தொட்டவர் திருவள்ளுவர். திருக்குறள் பொருட்பால் ‘வரைவில் மகளிர்’ என்னும் அதிகாரத்தில் ஒரு குறட்பா உள்ளது. அது,
“பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று’’. (913)‘மைவிழியார் மனை அகல்’ என்பது ஔவை வாக்கு. ஒருத்தனுடைய மனைவி அவனுடைய இல்லிலேயே இருப்பதால் ‘அகல்’ என்ற ஏவல் விலைமகளிரிடம் செல்லும் ஒழுக்கக்கேடனுக்கே என்பது பெறப்படும். ஒரு தவறைத் திறமை என்று கருதுகிற வரைக்கும் அது தொடரும். அது அருவெறுப்பு எனப் புரிந்து கொண்டால் விரைவில் முடிவுக்கு வரும். இது தத்துவவியல். இருநாடுகளுக்குள் நடைபெறும் போர்களை நாம் திறமை என்று நினைக்கிறவரை அது தொடர்ந்து நடக்கத்தான் செய்யும். ‘போர்’ என்பது மனிதகுலத்திற்கு எதிரானது. அது ‘அருவெறுப்பானது’. ‘அசிங்கமானது’ என்ற கருத்தியல் விதைத்து முளைக்குமானால் போர் முடிவுக்கு வரும் சாத்தியம் உண்டு. இந்த உளவியலைத்தான் திருவள்ளுவர் இந்தக் குறட்பாவில் உவமமாக முன்னெடுத்துப் பதிவு செய்கிறார்.
உவமச் சிறப்பு
கணவன், மனைவி தனியின்பம் காணுகிற அறை பற்றிப் பாவேந்தர் தம் குடும்ப விளக்கில் சித்திரிப்பார். இங்கே அது இருட்டறை. அங்கே உயிர்த்துடிப்பான அன்போடு கூடிய உறவான மனைவி. இங்கே உயிரிழந்த பிணம். அந்தப் பிணத்தின் பால்பகுப்பைக் கூடத் திருவள்ளுவர் கூறவில்லை. முன்பின் தெரியாத (ஏதில்) ஒன்றனின் பிணம். பிணம் உயர்திணையா? அஃறிணையா? என்பதும் அறியக்கூடவில்லை. பிணத்தை எனப் பிணம் செயப்படுபொருள் ஆகியிருப்பதால் ‘கிடப்பதைத் தழுவியது’ என்பது பெறப்படும். ‘தாரும் மாலையும் மயங்கித் தழுவுவது’ உயிர்களின் தழுவல்! அதனால் அது உயிர்தளிர்ப்பத் தீண்டல்! வரைவில் மகளிரைத் தழுவுவதால் கிட்டுகிறது எனக் கருதப்படும் போலியின்பத்தை அறியாத பிணத்தைத் தழுவுவதால் வருவதாகக் கருதப்படும் இன்பத்தையொத்தது என்பது வள்ளுவரின் கருத்து.
(பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாத ஓரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால், அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவராநின்றும் பொருள்நோக்கிப் புறத்தால் தழுவுவர்; அதனை ஒழிக என்பதாம்.)
வரைவின் மகளிரால் பெறப்படும் இன்பம் இழிவானது. உவமம் உயர்ந்த பொருளைச் சொல்ல வேண்டும் என்பது இலக்கிய விதி. இழிவினைச் சுட்ட வந்த திருவள்ளுவர், இழிவின் உச்சமாக இந்த இன்பத்தைச் சுட்டுகிறார்.
உவமம் பற்றிய அறிஞர் கருத்துக்கள்
இந்தக் குறளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த உவமம் பற்றித் தங்கள் கருத்துக்களைச் சான்றோர் சிலர், பதிவு செய்திருக்கிறார்கள். அவற்றை அறிந்து கொள்வது தமிழ்க் கவிதைகளின் உவமக்கோட்பாட்டை இன்னும் ஆழமாக உணர வழிகோலும்.
மொழியியல் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் “இத்தகைய பிணந்தழுவும் வழக்கம் தமிழரல்லாத வேற்றினத்தாரிடையே ஆசிரியர் தம் காலத்தில் இருந்தது கண்டு, அதை உவமமாக அமைத்திருத்தல் வேண்டும்” என்று கருத்துரைக்கின்றார்.
18-ஆம் நூற்றாண்டிற்கும் 19-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் (1792-1823) தென்னாட்டில் வாழ்ந்த பிரெஞ்சுக் கிறித்தவ சமயக்குரவராகிய அப்பர் தூபாயிசு, தம் தாய்மொழியில் எழுதிய ‘இந்துப் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்’ என்னும் நூலில் கீழ்வருமாறு வரைந்திருக்கிறார்.
“இதே மக்களிடை, இனி, அருவருப்பானதும் வெறுப்புண்டு பண்ணுவதுமான ஒரு வழக்கத்தைக் கொண்ட நம்பூதிரி என்னும் ஒரு தனிக்குலமும் உள்ளது. இக்குலப்பெண்கள் வழக்கமாகப் பூப்படையுமுன் மணஞ்செய்து வைக்கப்படுகின்றனர். ஆயின், பூப்புக்குறிகள் வெளிப்படையாகத் தோன்றும் பருவத்தையடைந்த பெண் ஆடவனொடு கூடுமுன் இறக்க நேரின், அவள் சவவுடம்பைப் பேய்த்தன்மையான புணர்ச்சிக்குட்படுத்த வேண்டுமென்பது கண்டிப்பான குலமரபாம். இதன் பொருட்டு அப்பெண்ணின் பெற்றோர் அத்தகைய அருவருப்பான மணவகையை முற்றுவித்தற்கு இசையும் ஒரு வெங்கப்பயலைப் பணப்பரிசு கொடுத்து அமர்த்த வேண்டியுள்ளது. ஏனெனின், அம்மணம் முற்றுவிக்கப்பெறாவிடின், அக்குடும்பம் தன்மானத்தை இழந்துவிட்டதாகக் கருதிக்கொள்ளும்.” (மூன்றாம் பதிப்பு, பக்.17-19.)
மேற்கண்ட அறிஞர் பெருமக்களின் கருத்துக்களையெல்லாம் நோக்கினால் திருவள்ளுவர் தாம் சொல்லும் கருத்து விளக்கத்திற்காக சமுதாய நிகழ்வுகளை உற்று நோக்கியும் உவமம் சொல்வார் என்றும் கருதலாம். காரணம் பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் என்பதை ‘இல்பொருள் உவமம்’ என்றும் கூறமுடியாது. இட்டுக்கட்டிய உவமம் என்றும் கூற முடியாது. இத்தகைய அருவெறுப்பான கற்பனை உறுதியாகத் திருவள்ளுவருக்குத் தோன்றியிருக்க முடியாது.
உவமத்தின் நுண்ணியம் எதுவெனின் பொருளுக்காகத் தழுவுவார் வரைவின் மகளிர் என்பது பொருண்மை. பொருளுக்காகக் தழுவுவது ஆண் என்பது உவமம். இந்த உவமத்தை வேறு பொருண்மையை விளக்க பயன்படுத்த முடியாது. அந்தப் பொருண்மையை இந்த உவமம் அன்றி வேறு ஒரு உவமம் கொண்டு விளக்கவும் முடியாது.
நிறைவுரை
குறட்பாக்களில் ஒன்றிரண்டும் தெரியாது அவரைப் ‘பேராசான்’ என்று புகழ்வதிலோர் மகிமை இல்லை. திருக்குறள் என்னும் நீதி நூலை இலக்கியமாக்கியதில் அவர் பயன்படுத்திய உவமங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. இலக்கியங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவம நெறிகளுக்கும் திருக்குறளில் அது பயன்படுத்தப்பட்டிருக்கும் நெறிகளுக்கும் வேறுபாடுகள் உண்டு. காமத்துப்பாலில் திருவள்ளுவர் தன்னை மறைத்துக் கொண்டு ஏனைய அகத்திணை மாந்தர்களாக வடிவெடுத்துப் பேசும் உவமங்கள் தனித்த நோக்கிற்கும் ஆய்விற்கும் உரியன. திருவள்ளுவர் நேரடியாகச் சொன்னாலும் மறைமுகமாகச் சொன்னாலும் திருக்குறள் உவமங்களும் அவை விளக்க வந்த பொருண்மைகளும் தம்முள் பிணைந்தவை., பிரிக்கக் கூடாதவை, பிரிக்க இயலாதவை. திருக்குறளின் பிரம்மாவான திருவள்ளுவர் உவமங்களின் பிரம்மாவாகவும் காட்சியளிக்கிறார்!
(நிறைவு)
-

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்
ஆங்கில மூலம்: எமிலி டிக்கின்ஸன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன் செல்வீகம் கற்பிக்கும் வறுமை -14
உன் செல்வீகம் எனக்கு வறுமை கற்பிக்கும்
ஒரு கோடீஸ்வரி, நான் ! எனக்கு
சிறிது சொத்து பெண்டிர் பீற்றல் போல்
பியூனஸ் ஆரஸ் பிரதேச விந்தை.நாடு மாறிப் புலம் பெயர்ந்தாய் நீ
பெரு என்பது வேறுபட்ட நாடு.
வறுமை யாவும் நான் மதிப்பவை
எல்லாம் ஆழ்ந்து நோக்கினேன்
நல்வாழ்வுச் செல்வம் உனக்குளது.Stanzas One and Two
Your Riches — taught me — Poverty.
Myself — a Millionaire
In little Wealths, as Girls could boast
Till broad as Buenos Ayre —You drifted your Dominions —
A Different Peru —
And I esteemed all Poverty
For Life’s Estate with you —வைரச் சுரங்கம் பற்றி சிறிது அறிவேன்
கற்கள் பெயர் மட்டுமே தெரியும்
பொதுக் கற்களின் வண்ண மயங்கள்
கிரீட வைரங் களின் அரிய காட்சிராணி சந்தித்தால் நிரம்ப அறிவேன்
ராஜாங்கப் பெரும்புகழ் அறிய வேண்டும்
ஆயினும் அது வேறுவிதச் செல்வம்
அதனை இழப்பின் அரசியும் ஏழையேStanzas Three and Four
Of Mines, I little know, myself —
But just the names, of Gems —
The Colors of the Commonest —
And scarce of Diadems —So much, that did I meet the Queen —
Her Glory I should know —
But this, must be a different Wealth —
To miss it — beggars so —உறுதி இந்திய சுக வசிப்பு அனுதினம்
உன்னைக் கவனிப்பது அனைவரும்
சிறு தவறின்றி, ஒரு புகாரின்றி
செல்வீக யூத வாழ்வு எனக்குமா ?ஐயமின்றி அது குபேர புரி வாழ்வு
என் ஆற்றலுக்கு எல்லை மீறியது
சிரிப்புக் கொரு சுரங்கம் தினம் எனின்
வைரம் ஒன்றை விடமிகச் செழிப்புStanzas Five and Six
I’m sure ’tis India — all Day —
To those who look on You —
Without a stint — without a blame,
Might I — but be the Jew —I’m sure it is Golconda —
Beyond my power to deem —
To have a smile for Mine — each Day,
How better, than a Gem!தங்கச் சுரங்கம் அங்கே உளதெனத்
தெரிந்து கொள்வது திருப்தி செய்வது.
சரியான தருணம் நிரூபித் தாலும்
தூரத்தை சற்று சிந்திக்க வேண்டும்தூரம், புதையல் சுரங்கம் ஊகிப்பாய்
முத்து விலை மதிப்பை எண்ணிப்பார்
நழுவிச் செல்லும் விரல் நடுவே
பள்ளிக் கூடப் பாவை போல்.Stanzas Seven and Eight
At least, it solaces to know
That there exists — a Gold —
Altho’ I prove it, just in time
Its distance — to behold —Its far — far Treasure to surmise —
And estimate the Pearl —
That slipped my simple fingers through —
While just a Girl at School.****************
பாதை தெரியவில்லை – 15
பாதை தெரிய வில்லை சொர்க்க புரியின்
கதவுகள் பூட்டிக் கிடந்தன தூண்கள் சரிந்து
பூகோளப் பாதிகள் தலைகீழாய்ப் போயின
பிரபஞ் சத்தை தொட்டது என் கரம்.பின்புறம் அது நுழையும், நான் மட்டும்
பூகோ ளத்தில் ஒருதனிப் புள்ளி
வட்டத்தின் சுற்றளவு விட்டு விலகி
மணித் தண்டின் நுனிக்கு அப்பால்.I saw no Way—
The Heavens were stitched—
I felt the Columns close—
The Earth reversed her Hemispheres—
I touched the Universe—And back it slid—and I alone—
A Speck upon a Ball—
Went out upon Circumference—
Beyond the Dip of Bell— -

குறளின் கதிர்களாய்…(386)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(386)
அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர்.– திருக்குறள் – 427 (அறிவுடைமை)
புதுக் கவிதையில்…
அறிவுள்ளவர் என்பவர்,
பின்னால் வரவிருப்பதை
முன்னாலே அறிந்தே
அதன்படி செயல்படும்
ஆற்றல் உள்ளவர்..அவ்வாறு முன்னரே
அறிந்தொழுகும்
திறமை இல்லாதவர்
அறிவு இல்லாதவரே…!குறும்பாவில்…
பின்னால் வரப்போவதை முன்னாலே
அறிவார் அறிவுடையார்,அவ்வா றறிந்திடும்
திறமை யில்லார் அறிவிலாரே…!மரபுக் கவிதையில்…
அரசியல் களமது தனில்நாளை
ஆவதை முன்னரே அறிந்தேதான்
வரவினுக் கேற்றதாய்ச் செயல்படவே
வல்லமை மிக்கவ ரறிவுடையார்,
சிரமமும் தொல்லையும் தருபகையைச்
சீக்கிர மறிந்ததைத் தடுத்தேதான்
அரசினுக் குதவியே துயர்துடைக்கும்
ஆற்றலே யிலாதவர் அறிவிலாரே…!லிமரைக்கூ…
ஆவதை அறிய வல்லார்
ஆவார் அறிவுடையார், அதனை அறியார்
ஆவரே அறிவே இல்லார்…!கிராமிய பாணியில்…
அறிவிருக்கணும் அறிவிருக்கணும்
மனுசனுக்கு நல்ல அறிவிருக்கணும்,
ஒலகத்து வாழ்க்கயில
ஒயர்ந்த அறிவிருக்கணும்..பின்னால வரப்போறத
முன்னால அறிஞ்சி
அதுக்குத் தக்க வாழுறவந்தான்
உண்மயில அறிவாளி,
அவந்தான் ராசாவுக்கும் ஏத்ததவன்..
அப்பிடிப்பட்ட
அறிவு இல்லாதவன்
அறிவாளியே இல்ல..தெரிஞ்சிக்கோ,
அறிவிருக்கணும் அறிவிருக்கணும்
மனுசனுக்கு நல்ல அறிவிருக்கணும்,
ஒலகத்து வாழ்க்கயில
ஒயர்ந்த அறிவிருக்கணும்…! -

சௌந்தர்ய லஹரி – 3
ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் மூன்றாவது ஸ்லோகம். பராசக்தியின் பாத தூளி என்னவெல்லாம் கொடுக்கும் என்பதை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

