தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 50

0

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் M.A., M.Phil., Ph.D.,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி-  egowrisss@gmail.com

திருவள்ளுவர் – உவமங்களின் பிரம்மா!

முன்னுரை

‘தெய்வப் புலமை’ என்னுந் தொடர் தெய்வத்தான் அருளப்பட்ட புலமை எனப் பொருள்படுமாறு நின்ற குறிப்புத் தொடர். கற்றறிந்தார் படைப்பில் காணமுடியாத அனைத்துப் படைப்புக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குவது திருக்குறள். மானுட ஆற்றல் அறிவுக்குட்படாதபோது தெய்வ நம்பிக்கை வருவது இயல்பு! தமிழில் திருக்குறளின் சாரமில்லாத எந்தப் படைப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு கூறில் மட்டும் திருக்குறள் யாரும் தொடமுடியாத இடத்தில் நிற்கிறது. அது அதில் காணப்படும் உவமங்கள். அழகியல் சார்ந்த உவமங்களைக் கருத்தியல் விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதே தமிழ்க்கவிதைகளின் உவமக் கோட்பாடு. அந்தக் கோட்பாட்டை முழுமையாக யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இருவகை அறிவும் புலப்படுமாறு பின்பற்றியவர்  திருவள்ளுவர். இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை நாயனாரின் உவம ஆற்றலை ஆராய்வதாக அமைகிறது.

திருக்குறள் உவமங்களின் தனித்தன்மை

பொதுவாக ஒரு கருத்தினை விளக்க ஒன்றுக்கும் மேற்பட்ட உவமங்கள் பொருத்தமாகலாம். பெண்ணின் முகத்துக்கு நிலவையும் ஒப்பிடலாம், மலரையும் ஒப்பிடலாம். தீக்குள் விரலை வைத்தாலும் விரல் துடிக்கும். பாம்பு தீண்டினாலும் விரல் துடிதுடிக்கும். இரண்டனையும் உவமமாக்கலாம். எனவே பொருளும் உவமமும் தம்முள் இடமாற்றம் செய்து கொள்ளலாம். அதாவது பொருள் தனக்கான உவமத்தை மாற்றிக் கொள்ளலாம். உவமம் தான் விளக்க வேண்டிய பொருளை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் திருக்குறளில் இது இயலாது. குறட்பாக்களில் பயின்று வரும் உவமங்கள் அவை விளக்கும்  பொருண்மைகளைத் தவிர வேறு பொருண்மைகளை விளக்கப் பயன்படாது. குறட்பாவின் பொருண்மைகளை விளக்க திருவள்ளுவர் பயன்படுத்திய உவமங்களைத் தவிர வேறு உவமங்களைக் கொண்டும் விளக்க முடியாது. இது விளக்கும் ஒளியும் போலப் பிணைந்தது. பிரிக்க இயலாதது.

அகரத்தை உவமமாக்கியது ஏன்?

திருக்குறளின் முதற்பால் அறத்துப்பால். அதன் முதற்பகுதி பாயிரம். நான்கு அதிகாரங்களைக் கொண்ட இந்தப் பாயிரத்தின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் வாழ்த்தின் முதற்குறள்,

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”

என்பதாகும். இதற்குப் பரிமேலழகர் “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை” என்று எழுதுகிறார். உவமத்தையும் பொருளையும் தனித்தனிச் சுட்டி இரண்டையும் இணைக்கின்ற உவமச்சொல் இல்லாத நிலைக்கு ‘எடுத்துக்காட்டுவமை’ என்பது அனைவருக்கும் தெரிந்த இலக்கண உண்மையே!. ஆனால் இந்த எடுத்துக்காட்டுக்கான காரணங்களைப் பரிமேலழகர் ஆராய்கிறார். அகரத்தை ஏன் உவமமாக்க வேண்டும்? அகரத்திற்கு ஏன் தலைமைப் பதவி? அகரம் எப்படித் தலைமையாகும்? எழுத்துக்களுக்குத் தலையெழுத்தாய் இருப்பதால் அகரம் உவமமாயிற்று என்றால் எப்படித் தலைமையெழுத்தாய் இருக்கிறது? எல்லா எழுத்தொலிகளுக்குள்ளும் ஊடுருவி நிற்பதால் அது தலைமையாயிற்று. இந்த நுட்பங்களையெல்லாம் ‘இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை’ என்னும் ஒரே தொடரால் குறிக்கிறார் பரிமேலழகர். அந்தத் தலைமைப் பண்பை விளக்குகிறார். எழுத்துக்களுக்கு அகரமாகிய ஒலி தலைமை தாங்குகிறது. உலகத்திற்கு ஆதியாகிய பகவன் தலைமை தாங்குகிறார். பொழிப்பில் ‘முதல்’ என்று எழுதி விளக்கத்தில் ‘தலைமை’ என்று தாம் எழுதிய விளக்கத்திற்கான காரணத்தை அவரே பதிவு செய்கிறார்.  “அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாத மாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும்” என அகரத்தின் தலைமைக்கான காரணத்தைத் தொடர்ந்து விளக்குகிறார். திருவள்ளுவர் கூறும் ‘அகரத் தலைமை’ வரிவடிவத்தை நோக்கியதன்று. ஒலி வடிவத்தை நோக்கியது. ஒலியை ‘நாதம்’ என்பது மரபு. ‘அ’ என்னும் வரிவடிவம் முதல் எழுத்தாக எழுதப்படுவதால் அதனைத் தலையெழுத்தாக எண்ணிவிடக் கூடாதல்லவா? அதனாலேதான் அகரம் என்பது ஒலியைக் (நாதமாத்திரை) குறித்தது என்று எழுதுகிறார். “ஆதி பகவற்குத் தலைமை செயற்கை உணர்வானன்றி இயற்கை உணர்வானும் முற்றும் உணர்தலானும் கொள்க” என்று எழுதுகிறார். உவமத்தின் சிறப்பினை விளக்கிய பரிமேலழகர் பொருளின் தலைமைச் சிறப்பையும் அதற்கான காரணத்தையும் இந்தத் தொடரில் விளக்குகிறார்.

கடவுளா? உலகமா?

இந்தக் குறட்பாவின் கிடக்கை நிலைக்கான உரை மேலே சொல்லப்பட்டது. “எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன. இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது” என்பதே அந்நிலையில் பெறப்படும் பொருள். மேலெழுந்தவாரியாக நோக்கினால் ‘இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது’ என்னுந் தொடர் சரியாக அமைந்திருப்பதுபோல் தோன்றும். தோன்றினால் என்ன ஆகும்? உலகம் முதலில் தோன்றியதாகவும் அவ்வாறு முன்னர்த் தோன்றிய உலகத்திற்கு இறைவன் முதலாக இருக்கிறான் என்பதுபோல் ஆகும்? அப்படி ஆனால் என்ன தவறு? உலகம் முன்னதாகவும் இறைவன் பின்னதாகவும் ஆக்கப்படுவான்! இறைவன்தான் உலக உயிர்களைப் படைத்தவனேயன்றி உலக உயிர்கள் இறைவனைப் படைக்கவில்லை. இந்தக் கருத்து கிடக்கை நிலைப்பொருளில் கிட்டாது. கிட்டாதாயின் என்ன செய்ய வேண்டும்? “இறைவனைக் காணமுடியாது. ஆனால் அவன் படைத்த உலகத்தைக் காணலாம். எனவே கண்ணால் காணக்கூடிய உலகத்தைக் காட்டி “இதோ உலகம்! இந்த உலகம் உண்மையானால் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? ஆமாம்! அவன்தான் இறைவன். எனவே உலகத்துக்கு முதன்மை இறைவன் எனத் திருவள்ளுவர் கூறியிருந்தாலும் இறைவனால் படைக்கப்பட்டதுதான் உலகம்! எனவே இறைவன் ஒருவன் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்”. இந்த விளக்கங்களையெல்லாம் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

“காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் (திருவள்ளுவர்) கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதி பகவன் என்பது கருத்தாகக் கொள்க”

உலகத்தை முன்னிறுத்தி இறைவனுடைய இருப்பினைத் குறள் உணர்த்தியது. பரிமேலழகரோ அதனை மாற்றி இறைவனை முன்னிறுத்தி அவனால் படைக்கப்பட்டதுதான் இவ்வுலகம்! எனவே இறைவனது உண்மையை உணர்க என்று விளக்கிக்காட்டுகிறார். காட்டவே அகரம் எழுத்துக்களுக்குத் தலைமை. ஆண்டவன் உலகத்திற்குத் தலைமை என்னும் நிரல் பொருள் புலப்படுவது காண்க.

உவமை அணி, வேற்றுமை அணி – ஒரு விளக்கம்

தமிழ்க்கவிதை கோட்பாடுகளில் உவமம் உண்டு. ஆனால் உவம அணி என்பது இல்லை. அது வடமொழி வழக்கு. சிங்காரம் செய்வதாலேயே செத்தது பிழைக்காது! ‘உவம அணி’ என்பது சிங்காரம். அவ்வளவுதான். ஆனால் உவமம் அத்தகையதன்று. ஒளியைப் பிரதிபலிக்கும் ஆடியைப் போன்றது அது. அதன் பணியே பொருளைப் புலப்படுத்துவதுதான். ‘உவமம்’ என்பது ஒப்பீடேயானாலும் அது பொருளுணர்த்துகிற பாங்கு பன்முகத் தன்மை கொண்டது. ‘அது போன்றது இது’ என்பதும் உவமம். அதனை விட இது சிறந்தது என்பதும் உவமமே! முன்னது ஒப்புப் பொருண்மை. பின்னது உறழ்ச்சிப் பொருண்மை. ஒப்பு இல்லாமல் உறழ்ச்சி கிடையாது. ஒப்பு சொன்னால் உவமம். உறழ்ந்து சொன்னால் வேற்றுமை. இந்த நுண்ணியம் இழையும் குறட்பாக்கள் பல. அவற்றுள் ஒன்றினை ஆராய்வதன்வழித் திருவள்ளுவர் எப்படி உவமங்களின் பிரம்மா ஆகிறார் என்பதை அறிய முடியும்.

“மோப்பக் குழையும் அனிச்சமும்
நோக்கக் குழையும் விருந்தும்”

திருக்குறளில் ‘ஒன்று மற்றொன்றைவிடச் சிறந்தது, ஒன்று மற்றொன்றைவிடத் தாழ்ந்தது’ என்பன போன்ற பதிவுகள் வரும். ஆனால் அவை எப்படிச் சிறந்தது? எப்படித் தாழ்ந்தது? என்பதற்கான காரணத்தைத் திருவள்ளுவர் கூறமாட்டார். அவற்றிற்கான காரணங்களைக் கண்டறிவது கற்பார் கடன். அல்லது உரையாசிரியர் பணி. இது ஓர் உரைநெறி. இந்நெறியில் பரிமேலழகர் உரை தனித்தன்மை பெற்றது. “பெண்ணின் பெருந்தக்க யாவுள?” என்னும் திருவள்ளுவரின் வினாவிற்கு விடையிறுத்த பரிமேலழகர், “கற்புடையாள்போல் அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் யாவுள?” (54) என்றார் என எழுதுவதையும், “செல்லா இடத்துச் சினம் பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே! ஏனையது இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீய பிற இல்லை என்றார்” (302) என எழுதுவதும் காண்க. இந்த வகையில் எதிர்பாராச் சூழலில் இல்லத்திற்கு வரும் விருந்தின் இயல்பு அனிச்சப்பூவினும் மென்மையானது என்பதைச் சொல்ல வருகிறார். திருக்குறள் அறத்துப்பாலில் ஒன்பதாவது அதிகாரத்தின் பத்தாவது இறுதிப்பாடலாக அமைந்தது,

“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” (90)

என்னும் குறட்பாவாகும். இதற்கு,

  • அனிச்சம் மோப்பக் குழையும் – அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது
  • விருந்து முகந்திரிந்து நோக்கக் குழையும் – விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர் எனப் பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார்.

அதிகாரக் கருத்துப் பகுப்பு

ஒவ்வொரு அதிகாரத்து உட்பொருளையும் பாகுபடுத்திக் கொள்ள பரிமேலழகர் பெரிதும் முயன்றிருக்கிறார். இந்தப் பகுப்புத்தான் திருக்குறளுக்கான புத்துரைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற உரைத்தளவாடங்கள் ஆகும்.

  1. விருந்தோம்பலின் சிறப்பு (1-2)
  2. விருந்தோம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் (3-5)
  3. விருந்தோம்புவார் மறுமைக்கண் எய்தும் பயன் (6)
  4. இருமைப் பயனுக்கான காரணம் (7)
  5. விருந்தோம்பாவழிப் படும் குற்றம் (8-9)
  6. விருந்தோம்புவார்க்கு வேண்டிய இன்முகம் (10)

எனப் பகுத்துக்காட்டி, விருந்தோம்பலின் பன்முகப் பரிமாணத்தை எடுத்து விளக்கியதால்தான், ‘இத்தகைய சிறப்புக்கள் உடைய விருந்தினை ஓம்புவார்க்கு இருக்க வேண்டிய எளிய ஆனால் தலையாய இயல்பு இன்முகமே’ என்பதை அவரால் இறுதிக் குறட்பாவிற்கான விளக்கமாக்க முடிந்தது.

பொழிப்புரை நுட்பம்

  • ‘அனிச்சம் குழையும்’ என உடன்பாட்டில் குறளிருக்க ‘மோந்துழியன்றிக் குழையாது’ என எதிர்மறை வாய்பாட்டில் உரைகாண்கிறார். அதிகாரம் விருந்தோம்பல். விருந்தினர் மனம் குழைவதே பரிமேலழகரின் கருத்தில் நின்றதாதலின் உடன்பாட்டு உவமத்தை எதிர்மறை வாய்பாட்டிலும் பொருளை உடன்பாட்டிலும் வெளிப்படுத்துகிறார். ‘(காண்டல் தொடுதல் அன்றி,) மோந்தால்தான் அனிச்சம் குழையும்., திரிபு நோக்கினாலேயே விருந்து குழையும்’ என்பது கருத்து.

விளக்கம்

‘அனிச்சம்’ ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.

விளக்கவுரையில் கண்ட உரைநுட்பம்

  • திருக்குறளில் ‘அனிச்சம்’, ‘குவளை’ ஆகிய இரண்டு பூக்கள், முறையே மென்மைக்கும் கண்ணுக்கும் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளன. ‘வாழி அனிச்சமே’(1111) (மென்மையால்), ‘அனிச்சப்பூ கால்களையாள்’(1115) (மென்மை கருதாது) ‘அனிச்சமும்’ (1120) (மென்மைக்காக எடுக்கப்பட்ட) என்னும் இடங்களிலெல்லாம் ‘அனிச்சம்’ என்னும் சொல் தலைமகன், தலைமகள் நலத்தைப் புகழ்வது ஆதலின் பூவை நேரடியாகக் குறித்தது. இக்குறட்பா ஆசிரியர் கூற்றாக அமைந்ததாதலின் ‘அனிச்சம்’ என்னும் மரத்தின் பெயர் மலருக்கு ஆகுபெயர் ஆயிற்று. அதாவது தலைவன் மரத்தைப் பற்றிப் பேசாது மலரைப் பற்றித்தான் பேசுவான் என்பது குறிப்பு. பாட்டில் ‘குழையும்’ என்ற வினையால் ‘அனிச்சம்’ ஆகுபெயராயிற்று, குழைவது மரத்திற்கின்மையின். தலைமகன் கூற்றில் அனிச்சம் ஆகுபெயராகாததற்கு அவன் கருத்தில் அனிச்சப்பூ மட்டுமே நின்றதனான் என்க.
  • மேம்போக்காக இந்தப் பாடலைக் கண்ணுறுவார் இதனை எடுத்துக்காட்டுவமமாகவே கொள்ளக்கூடும். மோந்தால் அனிச்சம் குழையும் (மாறுபட்ட) நோக்கினால் விருந்து குழையும்’ என்னும் பாட்டின் கிடக்கை நிலையும் அவ்வாறு கொள்ளுமாறு அமைந்திருப்பதும் உண்மை.
  • மென்மைக்கு எடுத்துக்காட்டு அனிச்சப்பூ. ‘பூ’ என்னும் சொல்லுக்கே ‘மென்மை’ என்பது பொருள். ‘பூந்தென்றல்’, ‘பூங்கோதை’, ‘பூங்கதவு’ என்பன காண்க. அனிச்சப்பூ என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. வேற்றுமைத் தொகையாகவும் கொள்ளலாம். அனிச்சம் பூக்களில் மென்மையானது. அதனினும் விருந்தினர்கள் மென்மையானவர்கள் என்றுதான் வள்ளுவர் சொல்ல வருகிறார். பாட்டில் அதற்கான காரணம் வெளிப்பட இல்லை. அக்காரணத்தை ‘மோப்ப’, ‘திரிந்து நோக்க’ என்னும் இருசொற்களைக் கொண்டு கண்டறிய முற்படுகிறார். முற்பட்டு ‘மோத்தல்’ என்பது ‘காண்டல், தொடுதல், மோத்தல் என்னும் நிரலில் மூன்றாவதாகவும் ‘நோக்குதல்’ என்பது அவற்றின் தொடக்க வினையாகவும் அமைந்திருப்பதை அறிகிறார். கண்ணால் காணுகிறபொழுது அனிச்சம் வாடாது. விரல்களினால் தீண்டுகிறபோதும் வாடாது. மூக்கினால் மோந்தால்தான் அது வாடும். தொலைவில் வரும் விருந்தினர்களைக் காண்பது ஒருவினை. அவர்களை இன்சொல்லால் வரவேற்பது அடுத்தவினை. அவர்களை அறுசுவை உண்டியளித்து ஓம்புதல் அவற்றின் தொடர்வினை. ஓம்புபவர் தொலைவில் வரும் விருந்தினர்களைத் தம் பார்வையால் மாறுபட்டு நோக்கினாலேயே மனம் வாடுவர். எனவே மூன்றாம் நிலையில் வாடும் அனிச்சப்பூவினும் முதல் நிலையிலேயே வாடி விடும் விருந்தினர் மென்மையானவர் என்னும் உண்மையைப் பதிவு செய்கிறார். இதனைச் “சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப்பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்” என்னும் பகுதி உணர்த்துவது காண்க.

பாம்போடு குடும்பம் நடத்தினால்

தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித் தமிழ்ப் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இலக்கண வரையறை மாணவர்க்குக் கற்பிப்பது. இது மட்டுமே ஆசிரியப் பெருமக்களின் நாட்கடன் ஆகிவிட்டது. தொடர்கல்வியோ அதனடிப்படையிலான தொடர் சிந்தனை வளர்ச்சியோ புதியன கண்டறியும் ஆர்வமோ இல்லாமற்போனது. அவற்றுள் ஒன்றுதான் இல்பொருள் உவமம் பற்றிய பேராசிரியப் பெருமக்களின் அரைகுறைப் புரிதல்!

இல்பொருள் உவமம் என்றால் என்ன?

“காணப்பட்ட இந்த உலகத்தில் இல்லாததொரு பொருளைப் படைப்பாளன் தன் மனக்கண்ணில் அல்லது கற்பனைக் கண்ணில் கண்டு அதனைத்தான் சொல்ல வரும் கருத்து விளக்கம் பெறுவதற்காக உவமமாக்கினால் அது இல்பொருள் உவமம் எனப்படும்.” இதுதான் பள்ளிக்கல்வித் துறையால் ஏற்பளிக்கப்பட்ட இல்பொருள் உவமமத்திற்கான பொருள் வரையறை. உண்மையில் அணியிலக்கணம் கூறும் தண்டியலங்காரத்தில் ‘இல்பொருள் உவமம்’ என்னும் அணியே சொல்லப்படவில்லை.

‘பூதம்’ என்றால் மண்ணுலகம். ஐம்பெரும் பூதம் என்னும் வழக்கு உண்மையாயினும் சிறப்பு நோக்கிப் பூமியைக் குறித்தது! அதற்கு எதிர்ச்சொல் ‘அபூதம்’. அதாவது மண்ணுலகில் இல்லாததொன்று. மண்ணுலகில் இல்லாததொரு பொருளை உவமமாக்கினால் அதற்கு ‘அபூத அணி’ என்று பெயர். இதற்காக எடுத்துக்காட்டப்பட்ட பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

‘‘எல்லாக் கமலத்து எழிலும் திரண்டொன்றின்
வில்லேர் புருவத்து வேல்நெடுங்கண் – நல்லீர்!
முகம்போலும் அன்ன முறுவலித்தார் வாழும்
அகம்போலும் எங்கள் அகம்!’’

  1. “வில்லேர் புருவத்து வேல்நெடுங்கண் – நல்லீர்!” என்பது முன்னிலை!.
  1. எல்லாக் கமலத்து எழிலும் திரண்டொன்றின் முகம் போலும் அன்ன முறுவல் என்பது இவ்வுலகில் இல்லாத உவமம்

தண்டியலங்காரத்தில் அபூத உவமத்தையே இல்பொருள் உவமமாகச் சொல்கிறோம் என்பதைக் கூடத் தமிழ்ப் பேராசிரியர்கள் அறியமாட்டார்கள்.

“இருகை யானையை ஒத்திருந்து என்
கருவை யான் கண்டிலேன்”

என்று மணிவாசகர் ‘இருகை யானை’ என்று இந்த உலகத்தில் இல்லாததைத் தனக்கு உவமமாக்கிக் கொள்கிறார்.

“தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்தொன்றாய்க் கூட்டி,
சர்க்கரையும் கற்கண்டின் பொடியும்மிகக் கலந்தே,
தனித்தநறும் தேன்பெய்து, பசும்பாலும் தெங்கின்
தனிப்பாலும் சேர்த்தொரு தீம்பருப்பிடியும் விரவி,
இனித்தநறு நெய்யளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்த சுவைக்கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதே,
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்கு நடத் தரசே,!
அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே!!’’

என்று இறைவனின் தரிசன இன்பத்தை, இருக்கின்ற பொருட்களைக் கொண்டு தாமே உருவாக்கிக் கொண்ட இல்லாததொரு பொருளை உவமமாக்குவார் வள்ளற்பெருமான். அடிகள் சொல்லுகின்ற உவமம் பல உவமப் பொருட்களின் கலவை என்பதைக் கருத்திருத்துதல் வேண்டும். இந்தப் பின்புலத்தில்தான் திருவள்ளுவர் எழுதிய,

“உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று” (890)

என்னும் உவமம் சிந்திக்கப்படுகிறது. பாம்புடன் ஒருவன் வாழ்வது என்பது இவ்வுலகில் இல்லாத ஒன்று. உட்பகை அளவால் சிறிதாயினும் வருகின்ற கேட்டினால் பெரிது. எனவே கண்ணோடாத உட்பகையைக் கொல்ல வேண்டும் என்பதுதான் கருத்து. இந்தக் கருத்தினை விளக்க வந்த திருவள்ளுவர், அதாவது மனப்பொருத்தம் இல்லாதவரோடு வாழ்வது கூடாது என்னும் பொருண்மையை விளக்க ஒரு குடிலுக்குள் பாம்போடு உடன் உறைவதை’ உவமமாக்கியிருக்கிறார்.

வினை, பயன், மெய், உரு என்னும் நான்கின் அடிப்படையில்தான் உவமம் அமையும் என்னும் கருத்தியலைத் தாண்ட முடியாதவர்கள் இந்த உவமத்தின் பொருளாழத்தையும் பொருண்மையை விளக்கிக் காட்டும் நுண்ணியத்தையும் அறிதல் அருமையே! குறட்பாவில் ‘வாழ்க்கை’ என்பது தொழிற்பெயர். ‘உறைதல்’ என்பதும் தொழிற்பெயர். இவ்விரண்டனை மட்டும் நோக்கி இதனை வினையுவமை என்று எளிதாகக் கொண்டால் ஏற்படுகிற இலக்கிய அனுபவ இழப்பினை உணர்தல் வேண்டும். பாம்பு இருக்கிறது. குடிலும் இருக்கிறது. மனிதர்களும் இருக்கிறார்கள். இருக்கிற பொருட்களையெல்லாம் ஒன்றாக்கி இல்லாததோர் ஓர் அரிய உவமத்தை உருவாக்கம் செய்து மாபெரும் அரசநீதியையும் வாழ்வியல் உண்மையையும்  கூறியிருக்கிறார். உடம்பாடு இல்லாதவர் வாழ்க்கை எதில் போய் முடியும் என்பதை விளக்க இவ்வுலகில் ஓர் உவமத்தைக் கண்டறிய இயலாத நிலையில் தாமே ஒரு உவமத்தைப் படைத்துக் கொள்கிறார் திருவள்ளுவர்.

புலித்தோல் போர்த்திய பசு

‘கள்ளம், கபடம்’ என்பன உள்ளத்து எதிர்மறை இயல்புகள். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. பழமொழி உண்மையானால் இயல்பு வெளிப்பட வேண்டும். ஆனால் சில நேர்வுகளில் சிலர் தங்களது உள்ளத்து இயல்புகளைப் பொய்ச் சிரிப்பாலும் போலிச் சொற்பூச்சுக்களாலும் மறைத்து நல்லவர்கள் போல நடமாடுவார்கள். ‘நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே!’ என்பார் கண்ணதாசன். இவர்கள் உண்மையில் புலிக்குணம் கொண்டவர்கள். வேடமோ பசு. இவர்களைத்தான் உலகியலில் பசுத்தோல் போர்த்திய புலி என்பார்கள். இது உலகியல். ஆனால் திருவள்ளுவர் இதனை மாற்றுகிறார். அதாவது உலகியலையும் மாற்றுகிறார். பழமொழியையும் மாற்றுகிறார். ஏன் மாற்றுகிறார் என்றால் அவர் சொல்ல வந்த கருத்தியலுக்கு இந்த உலகியல் உவமம் பொருந்தாது என அறிகிறார். எனவே உவமத்தைப் பொருளுக்கேற்ப மாற்றிக் கொள்கிறார்.

‘வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று’ (273)

பெற்றம் புலித்தோலைப் போர்த்திச் சாது வேடமிடும் உலகில் புலி பெற்றத்தின் தோலைப் போர்த்திக் கொண்டு தீவிரவாதி வேடம் கட்டுவதைத்தான் உவமமாக்கியிருக்கிறார்.

புல்லை மேய்வதற்குப் புலித்தோல் தேவையில்லை!

பசு புல்லைத்தான் மேயும். அது விளைச்சலை மேய முற்படுகிறபோதுதான் துரத்தப்படும். அச்சமின்றி மக்களும் துரத்துவார்கள். இங்கே கதையே வேறு. பசு தனக்குரிய புல்லைத் தவிர்த்து விளைச்சலை மேய்கிறது. விளைச்சலை மேய்ந்தால் வயலுக்கு உரிமையானவன் விடுவானா? எனவே வேடத்தை மாற்றிக் கொள்கிறது. பசு வேடத்தை மாற்றிப் புலிவேடம் போட்டுக் கொள்கிறது. காரணம் அதற்குப் புல்லுக்குப் பதிலாக விளைச்சல் மேல் பேராசை. தனது பேராசையைத் தணித்துக் கொள்ள வேண்டுமானால் பிறருக்கு அச்சத்தைத் தருகின்ற ஒரு வேடம் தேவை. பிறருடைய அறியாமையும் தேவை. புலித்தோல் போர்த்தியிருப்பதால் அதனிடம் செல்ல அஞ்சுவார்கள். புலி புல்லை மேயாது என்னும் அறியாமையையும் பசு பயன்படுத்திக் கொள்ளும்.

போலித் துறவிகள் சமுதாயத்தின் அறியாமையையும் அச்சத்தையும் பயன்படுத்திக் கொண்டு பிறர்க்குரிய மகளிரைத் துய்க்கும் கூடாவொழுக்கத்தை விளக்குவதற்காக வள்ளுவர் பயன்படுத்திய உவமம்தான் ‘புலித்தோல் போர்த்திய பசு’

“வலியின் நிலைமையான்’ என்ற அடையானும் ‘மேய்ந்தற்று’ என்னுந் தொழிலுவமையானும் வல்லுருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம்.

காவலர் கடியாமை புலி புல் தின்னாது என்பதனானும் அச்சத்தாலுமாம்.

ஆகவே வல்லுருவம் கோடற்குப் பயன் அன்ன காரணங்களால் உலகத்தார் அயிராமை ஆயிற்று.

இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியுமின்றிப் பிறர் அயிரா வல்லுருவமும் கொண்டு  நின்றவன் மனவழிப்படுதலாவது தன் மனம் ஓடிய வழியே ஓடி மறைந்து பிறர்க்குரிய மகளிரை விழைதலாம்.

அவ்வாறாதல் பெற்றம் தனக்குரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற் போலும் என்னும் உவமையான் அறிக”

புலி புல்லை மேயாது என்பது உண்மை. பசுத்தோலைப் போர்த்திக் கொண்டு புலி உலாவுதல் போல வஞ்சகர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.  ஆனால் பசுபோலத் தோன்றிக் கொண்டு புலிவேலை செய்யும் சில போலித் துறவிகளைச் சாடுகிற திருவள்ளுவர் இந்த அரிய உவமத்தைப் பயன்படுத்துகிறார். எண்ணிப் பார்க்க வேண்டும்! தான் சொல்ல வந்த  கருத்தியல் உலகியல்! அதற்கான உவமம் அவருக்குக் கிட்டாத நிலையில் ஒரு மரபுசார்ந்த பழமொழியை முற்றிலும் மாற்றிப் புதிய அதாவது இவ்வுலகில் இல்லாத உவமத்தைக் கொண்டு தன்னுடைய பொருண்மையை விளக்கிக்காட்டுகிறார். இந்த உவமம் மரபார்ந்த தமிழிலக்கியப் பரப்பு காணாதது. நினைத்துப் பார்க்க முடியாதது! இந்த உவமத்தைக் கொண்டு வேறு எந்தப் பொருண்மையையும் விளக்க முடியாது. போலித்துறவிகளின் தோலுரிக்க இந்த உவமத்தைத் தவிர வேறு எந்த உவமத்தையும் பயன்படுத்த முடியாது.

அறியாத பிணத்தை அணைப்பது போல

காதல் உணர்வுக்கும் உறவுக்கும் மலரின் மென்மையை உவமமாக்குவார் திருவள்ளுவர். மலரினும் மெல்லிது காமம்!. அதன் செவ்வித் தலைப்படுவர் சிலராக இருத்தலைக் கண்ட திருவள்ளுவர் அதற்கான காரணத்தை ஆய்வாராயினார். விலைமகளிரின் கூட்டமும் அங்கே கிட்டுவதாகக் கருதப்படும் போலி இன்பமுமே காரணம் என்பதைக் கண்டார். மலர் என்று காதலை உருவகப்படுத்தியவரும் அவரே! பிணத்தோடு உறவு கொள்வது என்று எடுத்துக்காட்டியவரும் அவரே! கவிதையில் முரண் என்பதன் உச்சி தொட்டவர் திருவள்ளுவர். திருக்குறள் பொருட்பால் ‘வரைவில் மகளிர்’ என்னும் அதிகாரத்தில் ஒரு குறட்பா உள்ளது. அது,

“பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று’’.  (913)

‘மைவிழியார் மனை அகல்’ என்பது ஔவை வாக்கு. ஒருத்தனுடைய மனைவி அவனுடைய இல்லிலேயே இருப்பதால் ‘அகல்’ என்ற ஏவல் விலைமகளிரிடம் செல்லும் ஒழுக்கக்கேடனுக்கே என்பது பெறப்படும். ஒரு தவறைத் திறமை என்று கருதுகிற வரைக்கும் அது தொடரும். அது அருவெறுப்பு எனப் புரிந்து கொண்டால் விரைவில் முடிவுக்கு வரும். இது தத்துவவியல். இருநாடுகளுக்குள் நடைபெறும் போர்களை நாம் திறமை என்று நினைக்கிறவரை அது தொடர்ந்து நடக்கத்தான் செய்யும். ‘போர்’ என்பது மனிதகுலத்திற்கு எதிரானது. அது ‘அருவெறுப்பானது’. ‘அசிங்கமானது’ என்ற கருத்தியல் விதைத்து முளைக்குமானால் போர் முடிவுக்கு வரும் சாத்தியம் உண்டு. இந்த உளவியலைத்தான் திருவள்ளுவர் இந்தக் குறட்பாவில் உவமமாக முன்னெடுத்துப் பதிவு செய்கிறார்.

உவமச் சிறப்பு

கணவன், மனைவி தனியின்பம் காணுகிற அறை பற்றிப் பாவேந்தர் தம் குடும்ப விளக்கில் சித்திரிப்பார். இங்கே அது இருட்டறை. அங்கே உயிர்த்துடிப்பான அன்போடு கூடிய உறவான மனைவி. இங்கே உயிரிழந்த பிணம். அந்தப் பிணத்தின் பால்பகுப்பைக் கூடத் திருவள்ளுவர் கூறவில்லை. முன்பின் தெரியாத (ஏதில்) ஒன்றனின் பிணம். பிணம் உயர்திணையா? அஃறிணையா? என்பதும் அறியக்கூடவில்லை. பிணத்தை எனப் பிணம் செயப்படுபொருள் ஆகியிருப்பதால் ‘கிடப்பதைத் தழுவியது’ என்பது பெறப்படும். ‘தாரும் மாலையும் மயங்கித் தழுவுவது’ உயிர்களின் தழுவல்! அதனால் அது உயிர்தளிர்ப்பத் தீண்டல்! வரைவில் மகளிரைத் தழுவுவதால் கிட்டுகிறது எனக் கருதப்படும் போலியின்பத்தை அறியாத பிணத்தைத் தழுவுவதால் வருவதாகக் கருதப்படும் இன்பத்தையொத்தது என்பது வள்ளுவரின் கருத்து.

(பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாத ஓரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால், அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவராநின்றும் பொருள்நோக்கிப் புறத்தால் தழுவுவர்; அதனை ஒழிக என்பதாம்.)

வரைவின் மகளிரால் பெறப்படும் இன்பம் இழிவானது. உவமம் உயர்ந்த பொருளைச் சொல்ல வேண்டும் என்பது இலக்கிய விதி. இழிவினைச் சுட்ட வந்த திருவள்ளுவர், இழிவின் உச்சமாக இந்த இன்பத்தைச் சுட்டுகிறார்.

உவமம் பற்றிய அறிஞர் கருத்துக்கள்

இந்தக் குறளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த உவமம் பற்றித் தங்கள் கருத்துக்களைச் சான்றோர் சிலர், பதிவு செய்திருக்கிறார்கள். அவற்றை அறிந்து கொள்வது தமிழ்க் கவிதைகளின் உவமக்கோட்பாட்டை இன்னும் ஆழமாக உணர வழிகோலும்.

மொழியியல் பேரறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் “இத்தகைய பிணந்தழுவும் வழக்கம் தமிழரல்லாத வேற்றினத்தாரிடையே ஆசிரியர் தம் காலத்தில் இருந்தது கண்டு, அதை உவமமாக அமைத்திருத்தல் வேண்டும்” என்று கருத்துரைக்கின்றார்.

18-ஆம் நூற்றாண்டிற்கும் 19-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் (1792-1823) தென்னாட்டில் வாழ்ந்த பிரெஞ்சுக் கிறித்தவ சமயக்குரவராகிய அப்பர் தூபாயிசு, தம் தாய்மொழியில் எழுதிய ‘இந்துப் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்’ என்னும் நூலில் கீழ்வருமாறு வரைந்திருக்கிறார்.

“இதே மக்களிடை, இனி, அருவருப்பானதும் வெறுப்புண்டு பண்ணுவதுமான ஒரு வழக்கத்தைக் கொண்ட நம்பூதிரி என்னும் ஒரு தனிக்குலமும் உள்ளது. இக்குலப்பெண்கள் வழக்கமாகப் பூப்படையுமுன் மணஞ்செய்து வைக்கப்படுகின்றனர். ஆயின், பூப்புக்குறிகள் வெளிப்படையாகத் தோன்றும் பருவத்தையடைந்த பெண் ஆடவனொடு கூடுமுன் இறக்க நேரின், அவள் சவவுடம்பைப் பேய்த்தன்மையான புணர்ச்சிக்குட்படுத்த வேண்டுமென்பது கண்டிப்பான குலமரபாம். இதன் பொருட்டு அப்பெண்ணின் பெற்றோர் அத்தகைய அருவருப்பான மணவகையை முற்றுவித்தற்கு இசையும் ஒரு வெங்கப்பயலைப் பணப்பரிசு கொடுத்து அமர்த்த வேண்டியுள்ளது. ஏனெனின், அம்மணம் முற்றுவிக்கப்பெறாவிடின், அக்குடும்பம் தன்மானத்தை இழந்துவிட்டதாகக் கருதிக்கொள்ளும்.” (மூன்றாம் பதிப்பு, பக்.17-19.)

மேற்கண்ட அறிஞர் பெருமக்களின் கருத்துக்களையெல்லாம் நோக்கினால் திருவள்ளுவர் தாம் சொல்லும் கருத்து விளக்கத்திற்காக சமுதாய நிகழ்வுகளை உற்று நோக்கியும் உவமம் சொல்வார் என்றும் கருதலாம். காரணம் பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் என்பதை ‘இல்பொருள் உவமம்’ என்றும் கூறமுடியாது. இட்டுக்கட்டிய உவமம் என்றும் கூற முடியாது. இத்தகைய அருவெறுப்பான கற்பனை உறுதியாகத் திருவள்ளுவருக்குத் தோன்றியிருக்க முடியாது.

உவமத்தின் நுண்ணியம் எதுவெனின் பொருளுக்காகத் தழுவுவார் வரைவின் மகளிர் என்பது பொருண்மை. பொருளுக்காகக் தழுவுவது ஆண் என்பது உவமம். இந்த உவமத்தை வேறு பொருண்மையை விளக்க பயன்படுத்த முடியாது. அந்தப் பொருண்மையை இந்த உவமம் அன்றி வேறு ஒரு உவமம் கொண்டு விளக்கவும் முடியாது.

நிறைவுரை

குறட்பாக்களில் ஒன்றிரண்டும் தெரியாது அவரைப் ‘பேராசான்’ என்று புகழ்வதிலோர் மகிமை இல்லை. திருக்குறள் என்னும் நீதி நூலை இலக்கியமாக்கியதில் அவர் பயன்படுத்திய உவமங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. இலக்கியங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவம நெறிகளுக்கும் திருக்குறளில் அது பயன்படுத்தப்பட்டிருக்கும் நெறிகளுக்கும் வேறுபாடுகள் உண்டு. காமத்துப்பாலில் திருவள்ளுவர் தன்னை மறைத்துக் கொண்டு ஏனைய அகத்திணை மாந்தர்களாக வடிவெடுத்துப் பேசும் உவமங்கள் தனித்த நோக்கிற்கும் ஆய்விற்கும் உரியன. திருவள்ளுவர் நேரடியாகச் சொன்னாலும் மறைமுகமாகச் சொன்னாலும் திருக்குறள் உவமங்களும் அவை விளக்க வந்த பொருண்மைகளும் தம்முள் பிணைந்தவை., பிரிக்கக் கூடாதவை, பிரிக்க இயலாதவை. திருக்குறளின் பிரம்மாவான திருவள்ளுவர் உவமங்களின் பிரம்மாவாகவும் காட்சியளிக்கிறார்!

 (நிறைவு)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *