சேக்கிழார் பாடல் நயம் – 158 (ஆன பெருமை)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
வரலாறு :
பெரிய புராணத்தின் அடுத்த நாயனார் முருக நாயனார் ஆவார். உமை யம்மையைத் தழுவிச் சடையில் கங்கையை தரித்த பெருமானின் அடியார்கள் விரும்பி அடையும் ஊர், சோழநாட்டில் உள்ள பூம்புகலூராகும். அவ்வூரில் அடியாரணிந்த திருநீற்றொளியால் இரவும் வெளிச்சம் தரும்; மலரில் உறையும் வண்டும் ஒலியுடன் விளங்கும். அங்கே அவ்வண்டுகள் தாவியமரும் மலர்களில் தென் பொழியும்; அதுபோல அங்கே மலர்கலில் தேன் உண்ணும் வண்டுகளும், பறவைகளும் தேன்போன்ற பதிகஇசை பாடும். அங்கு வண்டுகளின் இசை கேட்டுத் தேன் துளிக்கும் மலர் போலப் பதிக இசை கேட்ட மக்களின் முக மலரும் கண்ணீர் துளிக்கும்.
பாடல் :
ஆன பெருமை வளஞ்சிறந்த வந்தண் புகலூ ரதுதன்னின்
மான மறையோர் குலமரபின் வந்தார் முந்தை மறைமுதல்வர்,
ஞான வரம்பின் றலைநின்றார், நாகம் புனைவார் சேவடிக்கீழ்
ஊன மின்றி நிறையன்பா லுருகு மனத்தார் முருகனார்.
பொருள் :
அத்தகைய பெருமையும் வளனும் சிறந்து விளங்கிய அழகிய குளிர்ச்சியுடைய புகலூர் என்னும் அந்தத்தலத்தில், பெருமையுடைய வேதியர் குலத்தில் அவதரித்தார்; முந்தையாகிய வேத முதல்வர்; ஞானத்தின் முடிந்த எல்லையிற் சிறந்து நின்றார்; அரவை அணியாகக் கொண்ட சிவபெருமானது திருவடிகளின்கீழ்க் குற்றமில்லாது நிறையும் அன்பினால் உருகும் மனத்தினை யுடையவர் முருகனார் எனப்படுவோர்.
ஆன என்ற சீர் மேற்கூறியபடி உயிரினை உயர்த்துதற்கான; உலக நிலைக்கான ஏனையபெருமைகள் ஆகாதன என்பதாம். ஆனபெருமை வளம் முன்பே கூறப்பட்ட சிவத்துவ விளக்கத்துக்குரிய பெருமையும், அது விளங்குதற்குரிய இடமாகிய உலகவளங்களும் ஆகும்.
அந்தண் புகலூர் – அழகு – சோலைகள், தடங்கள், அவற்றிற்பூக்கும் மலர்கள் என்றிவற்றாலாகுவது. தண்மை – பிறவிவெப்பத்துக்கு அஞ்சிப் புகல் அடைந்தோரது வெப்பத்தைமாற்றிக் குளிர்ச்சிசெய்யுந் தன்மை.
“வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும்,
அஞ்சி யுனையடைந்தே னையா பராபரமே”
என்றபடி இங்கு உலகத் துயிர்கள் சரண்புக அவர்களுக்கு அபயங்கொடுத்துக் காத்தல் குறித்தது.
ஆனபெருமை – ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசுகள், ஆளுடைய நம்பிகள் என்ற மூவரும் ஈரிரண்டு முறை வந்து தரிசித்தனர். பிள்ளையாரும் அரசுகளும் திருநீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய பல அடியார் திருக்கூட்டத்துடன் முருகநாயனாரது திருமடத்திற் பலகாலம் தங்கித்
“திருத்தொண்டின் நிலையுணர்ந்து” ,
“திருத்தொண்டர்பெருமையினை விரித்துரைத்தங்கு,
ஒருப்படுசிந் தையினார்கள் உடனுறைவின் பயன்பெற்றார்” .
ஆளுடைய அரசுகள் பொய்ப்பாசம் போக்குவார் இங்குத்தங்கி
“நையுமனப் பரிவோடு நாடோறுந் திருமுன்றிற்,
கைகலந்த திருத்தொண்டு செய்துபெருங் காதலுடன்,
வைகுநா ளெண்ணிறந்த வண்டமிழ் மாலைகள் மொழிந்து”
“புகலூரன் என்னையினிச் சேவடிக்கீழ் இழித்திடுமென் றெழுகின்ற,
முன்னுணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்து” ,
“நண்ணரிய சிவானந்த ஞானவடிவே யாகி,
அண்ணலார் சேவடிக்கீழ்”
அமர்ந்திருக்கப் பெற்றனர்! உலகத்தாருக்கு அடிமைத்திறத்தின் பெருமை யைக் காட்டியருளும் வகையாலே பங்குனி உத்திரத் திருவிழாவில் அடியார்களை ஊட்டுதற்குப் பொன் வேண்டிய ஆளுடைய நம்பிகள் செங்கல் செழும்பொன்னாகப் பெற்றனர். இவ்வரலாறுகள் இத்தலத்தின் பெருமையை விளக்குவனவாய் இங்குக் கருதத்தக்கன.
மறையோர் குலமரபின் வந்தார் என்றதனால் அவர் அவதரித்தது வேதியர் குலமென்பதும், மறைமுதல்வர்என்றதனால் அக்குலத்தில் அவதரித்த பெருமை மட்டினமையாது, அக்குலத்துக் கேற்ப வேதியரொழுக்கத்தாலும், சிறந்து வேத வாய்மையின் முதன்மைபெற்று விளங்கினார் என்பதும் உணர்த்தப்பட்டது!
ஞான வரம்பின் தலைநின்றார் என்ற தொடர், வேதம் வல்லவராய் விளங்கியதோடு சிவாகம சீலராகிச் சிவாகமங்களிற் சொல்லப்பட்ட சிவஞானங் கைவரப்பெற்ற முதன்மையுடையவராய் அத்துறைகளில் விதிப்படி ஒழுகி நின்றனர் என்பதாம்.
இங்கு நாயனார் செய்த தொண்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்குபாதங்களின் திருத்தொழில்களுமாம் என்பது மேல்வரும் ஏழு திருப்பாட்டுக்களிற் போந்த பொருளாவதும் காண்க. மேற்சொன்னமறை என்பது வேதங்களையும், இங்குக்கூறிய ஞானம் என்றது சிவாகமங்களையும் குறித்தது. தலை நிற்றல் – ஒழுக்கத்திற் சிறத்தல்.
ஊனம் என்ற சொல், இடையறாது அன்பு செலுத்துதற்கு வரும் தடைகளைக் குறித்தது. அன்பால் மனம் உருகுதலாவது – பெரியவற்றுளெல்லாம் பெரியவனாகிய இறைவன் உயிர்களின் சிறுமை எண்ணாது எஞ்ஞான்றும் செய்துவரும் பேரருளின் பெருமையினை எண்ணியெண்ணி அன்பு செய்தலால் உள்ளம் நெகிழ்தல்.
“அத்தாவுன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்….
பிழைத்தனக ளெத்தனையும் பொறுத்தாயன்றே….
எம்பெருமான் றிருக்கருணை யிருந்தவாறே” ,
“நாய் சிவிகை யேற்றுவித்த அம்மை”;
“நாயனைய வென்னைப் பொருட்படுத்தி நன்கருளித்,
தாயனைய னாயருளும் தம்பிரான்”
முதலிய திருவாக்குக்கள் காண்க.
வேதங்களில் தலைசிறந்ததனால் சிறப்பாகிய சிவாமங்களில் தேர்ந்தார்; அதனால் ஞானவழி நின்றார்; அதன் பயனாகச் சிவன்சேவடிகளில் அன்பினால் உருகி, அவரது நாமம் பயின்றார்; அதனாற் சிவபூசையே உறுதிப்பொருள் என்றறிந்து சிவனை முப்போதும் மலர்கொண்டு அலங்கரித்துப் பூசித்து அழகு பார்த்துக் களித்தார்; திருவடி ஞானத்திற் சிறக்கவே அடி அணைந்த அடியார் தொண்டினிற் சிறந்தொழுகினார்; அதனாற் சிவனடிப் பேறுபெற்றனர் என்று இம்முறையே, இப்பாட்டிற் சொல்லிய இத்தன்மைகளே மேல்வரும் சரித நிகழ்ச்சிகளாய் விளைந்தன என்பதும்கண்டுகொள்க.
“வேதச் சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத்,
திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின்
ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்”
என்ற சிவஞான சித்தியார் திருவாக்கு இங்குக் கருதத்தக்கது.
முருகனார் வந்தார்; அவர் முதல்வர்; அவர் தலைநின்றார்; அவர் மனத்தார் எனமுடித்துக்கொள்க. அவர் என்ற சொல் வருவித்து முதல்வர் முதலிய மூன்று பெயர்ப் பயனிலைகளுடன் கூட்டிமுடிக்க.
இப்பாடலில் முருக நாயனார் வேதியர் மரபில் வந்து, சிவாகமம் கற்று, சிவனடி மறவாத சிந்தையராய் , சிவநாமம் பயின்றார். அதனால் சிவபூசை செய்து, அடியார்களின் தொண்டில் சிறந்து விளங்கினார். அதனால் சிவன் திருவடிப்பேறு பெற்றார் என்பதைச் சுருக்கமாகக் கூறுகிறது. பின்னர் விரிவைக் காணலாம்.