செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(386)

அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர்.

– திருக்குறள் – 427 (அறிவுடைமை)

புதுக் கவிதையில்

அறிவுள்ளவர் என்பவர்,
பின்னால் வரவிருப்பதை
முன்னாலே அறிந்தே
அதன்படி செயல்படும்
ஆற்றல் உள்ளவர்..

அவ்வாறு முன்னரே
அறிந்தொழுகும்
திறமை இல்லாதவர்
அறிவு இல்லாதவரே…!

குறும்பாவில்

பின்னால் வரப்போவதை முன்னாலே
அறிவார் அறிவுடையார்,அவ்வா றறிந்திடும்
திறமை யில்லார் அறிவிலாரே…!

மரபுக் கவிதையில்

அரசியல் களமது  தனில்நாளை
ஆவதை முன்னரே அறிந்தேதான்
வரவினுக் கேற்றதாய்ச் செயல்படவே
வல்லமை மிக்கவ ரறிவுடையார்,
சிரமமும் தொல்லையும் தருபகையைச்
சீக்கிர மறிந்ததைத் தடுத்தேதான்
அரசினுக் குதவியே துயர்துடைக்கும்
ஆற்றலே யிலாதவர் அறிவிலாரே…!

லிமரைக்கூ

ஆவதை அறிய வல்லார்
ஆவார் அறிவுடையார், அதனை அறியார்
ஆவரே அறிவே இல்லார்…!

கிராமிய பாணியில்

அறிவிருக்கணும் அறிவிருக்கணும்
மனுசனுக்கு நல்ல அறிவிருக்கணும்,
ஒலகத்து வாழ்க்கயில
ஒயர்ந்த அறிவிருக்கணும்..

பின்னால வரப்போறத
முன்னால அறிஞ்சி
அதுக்குத் தக்க வாழுறவந்தான்
உண்மயில அறிவாளி,
அவந்தான் ராசாவுக்கும் ஏத்ததவன்..
அப்பிடிப்பட்ட
அறிவு இல்லாதவன்
அறிவாளியே இல்ல..

தெரிஞ்சிக்கோ,
அறிவிருக்கணும் அறிவிருக்கணும்
மனுசனுக்கு நல்ல அறிவிருக்கணும்,
ஒலகத்து வாழ்க்கயில
ஒயர்ந்த அறிவிருக்கணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *