Blog

  • எப்படி இருக்கு நைஜீரியா?

    எப்படி இருக்கு நைஜீரியா?

    நைஜீரியாவில் படிக்கும் ஷ்ரவந்தி பிரசன்னா, என் தம்பி மகள். விடுமுறைக்காகச் சென்னைக்கு வந்திருந்தார். அவருடன், கடந்த வாரம் கணுப் பொங்கல் அன்று ஒர் உற்சாக உரையாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நெல்லிக்காய் அறுவடை

    நெல்லிக்காய் அறுவடை

    நம் வீட்டுத் தோட்டத்தில் இன்று நெல்லிக்காய் அறுவடை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இன்னம்பூரான் சௌந்தரராஜன் (1933 – 2022)

    இன்னம்பூரான் சௌந்தரராஜன் (1933 – 2022)

    வல்லமையாளர் இன்னம்பூரான், 2022 ஜனவரி 15 அன்று மறைந்தார். வல்லமை அன்பர்கள் அனைவர் சார்பிலும் நம் ஆழ்ந்த இரங்கல். அவர் மறைவு குறித்த சில இரங்கல் குறிப்புகள்

    முனைவர் நா.கணேசன். அமெரிக்கா

    இனிய நண்பர் இன்னம்பூரான், பெருமாள் பக்தர். சுதந்திரப் போராட்டக் காலத்தை நன்கறிந்த மூத்த இணைய நண்பர். அவர் மறைந்துவிட்டார் என நரசையா குறிப்பிட்டார். இன்னம்பர் தேவார ஸ்தலம். அவ்வூரில் உள்ள பெருமாள் கோவில் திருப்பணி இன்னம்பூரான் குடும்பத்தார் ஈடுபட்டனர். ஏழை நிலையில் உள்ள மாணவ மாணவியருக்கு நிறைய உதவினார். ஓய்வு பெற்ற காலத்தில் தமிழில் எழுதத் தொடங்கினார். துணை ஆடிட்டர் ஜெனரல் ஆக மத்திய சர்க்காரில் பதவி வகித்த தமிழர் இன்னம்பூரான். இன்றில்லை. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

    அவரது ஜீவிய லட்சியமாக, திரு. வி. க. வாழ்க்கையை ஆய்வாளர்கள் ஆராய வேண்டும் என்றிருந்தது. தமிழக கல்லூரிகளில் Dominant narrative என்னும் வகையில் பெரியார் வாழ்க்கை இருக்கிறது. அவரோடு இயைந்தும், முரணியும் சமகாலத்தினராகிய திரு. வி. க. ஆய்வுகளை ஆழமாகச் செய்து, நூல் படைப்பார் இல்லை. சில குழுக்களில் வரம்பு மீறித் தாக்குதல்கள் வந்தபோதும் அமைதி காத்தவர். ஹரிகி, தேவ், மோகனரங்கன், நா. கண்ணன், சைலஜா, பவளசங்கரி, நான், வினைதீர்த்தான் …. எனப் பலர் கூகுள் குழுக்களில் நிறைய எழுதிய காலங்கள் முடிந்துவிட்டன. நூ.த.லோ.சு, போல, இன்னம்பூரானும் சில ஆண்டுகளாய் எழுதுவதைப் பார்க்க முடிவதில்லை.

    “தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
    அழுது காமுற்று அரற்று கின்றாரையும்
    பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
    எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.” – தேவாரம்.

    நயமாக, தம் கருத்துகளை விளக்கும் முறையை இணையத்தில் பலருக்கும் கற்பித்த மூத்த நண்பர் இன்னம்பூரானுக்கு என் அஞ்சலிகள்.

    முனைவர் அண்ணாகண்ணன், சென்னை

    அடடா, பேரிழப்பு நமக்கு.

    சில நாள்கள் முன்பு ஏனோ திடீரென இவரை நினைத்தேன். பேசி நாளாயிற்றே, அழைக்க வேண்டும் என. இந்தச் செய்தி அறிந்து வருந்துகிறேன்.
    வல்லமையின் ஆலோசகராகப் பங்களித்தார். ஏராளமான கட்டுரைகள், கருத்துரைகள் வழங்கியவர். தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை, கனம் கோர்ட்டார் அவர்களே, இன்னம்பூரான் பக்கம், பாமர கீர்த்தி……… எனப் பல தொடர்களை வல்லமை மின்னிதழில் எழுதினார். அவருடைய படைப்புகளை இங்கே வாசிக்கலாம்
    இங்கிலாந்தில் உள்ளது போன்ற குடிமக்கள் ஆலோசனை மையத்தை இந்தியாவில் தொடங்கலாமா என்பது குறித்து அவருடன் கலந்துரையாடினேன். இதற்காக, நான் பணியாற்றிய சென்னை ஆன்லைன் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆலோசனைகள் வழங்கினார்.
    அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிற்கு என் கட்டுரைச் சுருக்கம் தேர்வுபெற்றது. ஆனால், நேரில் வந்து கட்டுரை வழங்க வேண்டும் என்பதால், செல்ல இயலவில்லை என்றேன். நியாண்டர் செல்வனை எனக்கு அறிமுகப்படுத்தி, இவருடன் இணைந்து கட்டுரை எழுதுங்கள், அவர் நேரில் சென்று கட்டுரை வழங்குவார், இருவர் பெயரிலும் கட்டுரை வெளியாகும் என வழிகாட்டினார். ஆனால், நான் அந்த வாய்ப்பினை முன்னெடுத்துச் செல்லவில்லை.
    நாகராஜன் வடிவேல், இன்னம்பூரான் ஆகியோருடன் இணைந்து பெசன்ட் நகரில் ஜிகர்தண்டா அருந்தியது நினைவில் நிற்கிறது.
    இ என ஒற்றைச் சொல்லால் அறியப்பட்டார். இனிமை என்பதன் சுருக்கம் அது. அவர் நினைவுகளால் வாழ்வார்.
    சி. ஜெயபாரதன், கனடா  
    இனிய மேதையின் புனித வாழ்வு மறையாது, மறைந்தது. ஆழ்ந்த இரங்கல் அன்னாருக்கு.
    செ.இரா.செல்வகுமார், கனடா
    நா. கணேசனின் இரங்கற்செய்தி நல்ல தரவுகளைக் கொண்டுள்ளது.  அவர் எழுதிய தனிமடல்கள் சிலவற்றைப் பகிர முடியாது எனினும் அவருடைய நேர்மையான அன்பான பார்வையை என்னால் உணர முடிந்தது. அவரைப் போன்ற நல்லோர்கள் பெருகவேண்டும். வாழ்க அவர்தம் புகழும் நற்செயல்களும்.
    பவளசங்கரி, ஈரோடு

    இ ஐயா அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது. மின்தமிழில் இணைந்த ஆரம்பல் காலத்தில் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்து நிறைய தன்னம்பிக்கை அளித்து எழுதுவதற்கான பல கருத்துகளை கூறிக்கொண்டே இருப்பார். பல நேரங்களில் வலியுறுத்தி எழுத வைப்பார். என் எழுத்துலகின் அடுத்த கட்ட நகர்விற்கு ஐயாவும் ஒரு காரணமாக இருந்தவர் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். வெகு நாட்கள் தொடர்பில் இருந்தவர், சமீப காலங்களாக தொடர்பில் இல்லை என்று அவருடைய வலைதளங்களில் சென்று பார்த்தபோதுதான் அவர் இலண்டன் சென்று விட்டதை புரிந்து கொண்டு பின்னூட்டம் போட்டு வந்தேன். ஆனாலும் பதில் இல்லாதது கவலை அளித்தது. வேறு தொடர்பு எண் இல்லாததால் மின்னஞ்சலில் செய்தி போட்டு காத்திருந்தேன். நரசய்யா ஐயாவிடமிருந்து  இப்படியொரு செய்தி வரும் என்று நினைத்தே பார்க்கவில்லை.

    திரு கணேசன் ஐயா அவர்களின் உள்ளம் நெகிழச் செய்த இரங்கல் செய்தி மனம் கலங்கச் செய்கிறது.
    இ ஐயாவின் உன்னத ஆன்மா இறை நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல எம் இறையை இறைஞ்சுகிறேன். வாழ்க இ ஐயாவின் சேவைகள்.
    துளசி கோபால், நியூசிலாந்து
    வருந்துகின்றேன் 😔
    முனைவர் கண்மணி
    ஆழ்ந்த இரங்கல்கள்
    பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்ஸ்
    இன்னம்பூரன் ஐயா அவர்களின் மறைவு தமிழுக்குப் பேரிழப்பு!
    அவர் எழுத்துக்களை ஆர்வமுடன் படித்துச் சுவைத்தது உண்டு
    நேரில்  பழக்கம் இல்லை எனினும் அவரைப் பற்றி அறிவேன்.
    அவர் மறைவுக்கு ஆழ்ந்த  இரங்கல் தெரிவிக்கிறேன் !
    அவரான்மா இறைவனின் நிழலில் இளைப்பாறுக!
    பார்வதி இராமச்சந்திரன்
    ஈடு செய்ய இயலாத பேரிழப்பு…! என் எழுத்துகளையும் படித்து அவரளித்த ஊக்கம் மறக்க முடியாது. இனிமையும் பண்பும் நிறைந்த மாமனிதர்.  தன் ஒவ்வொரு செயலும் பயன் தரத் தக்க வகையில் வாழ்ந்த உன்னதமானவர். சொல்லில் வடிக்க இயலாத வேதனை இது!
    தேவ்

    ஈடு செய்ய இயலா இழப்பு!

    இளைஞர் போல் சுறுசுறுப்பாக இருப்பார்.
    கவனப்படுத்திய கணேசர் ஐயாவுக்கு நன்றி.

    சொ. வினைதீர்த்தான்

    சிறந்த மனிதர் திரு இன்னம்பூரன் சார்.  நல்லறிஞர். ஆர்வத்துடன் குழு உரையாடலில் பங்கெடுப்பவர். பதிவுகளில் பரஸ்பர மதிப்புப் பாராட்டி எழுதுபவர். பல விடயங்கலிலும் ஆழ்ந்த புரிதலுடன் செய்திகளைப் பகிர்ந்துகொள்பவர்.
    அழகப்பா பல்கலைகழகத்தில் உரை ஆற்றியுள்ளார். 4, 5 ஆண்டுகளுக்கு முன்னர் காரைகுடி கம்பன் கழக விழாவில் மூன்று நாட்கள் காரைக்குடியில் தங்கியிருந்து பங்கேற்றார். உடன் கழித்த பொழுதுகள் மறக்க முடியாதவை. பழகுதற்குக் குழந்தை போல எளியவர்.  திரு காளைராசன் இல்லத்தில் அன்புடன் தங்கியிருந்தார். அண்மையில் திரு மோகனரங்கன் இழையில் எழுதியிருந்தார். விசாரித்திருந்தார்.
    ஒரு கிட்னி தானமளித்து மற்றொரு கிட்னியுடன் நெடிய நாள் வாழ்ந்திருந்து உறுப்புக் கொடைக்கு வழிகாட்டியவர். இன்று அவர் தன்னுடைய உடலையே மருத்துவ மாணவர் கற்றுக்கொள்ள உதவியுள்ளார் என்று நினைக்கும்போது மனம் நெகிழ்கிறது.
    நா.கண்ணன், உலகக் குடிமகன்
    இன்னம்பூரான் பற்றி எப்போதுமே இனிமையான நினைவுகள்தான். இன்னம்புரான் என முதலில் எழுதப்போய், “ஓய்! நான் பூரான், புரான் இல்லை! என்று சொன்னவர்”  இப்படித்தான் எப்போதும் நகைச்சுவையுடன் பேசுவார். மின்தமிழுக்கும், தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் நிறையப் பங்களித்துள்ளார். எத்தனையோ முன்னெடுப்புகள! எனக்கு மிகவும் பிடித்தது, “பாமரகீர்த்தி” எனும் முன்னெடுப்பு. மெய்கீர்த்திகள் எழுத அரசு இருக்கிறது. நம்மைப் போன்ற பாமரர்களின் கீர்த்தியை எழுத யார் உளர்? எனும் கேள்வி ஆழமானது, புத்திசாலித்தனமானது. ஒருவகையில் யோசித்துப் பார்த்தால் பேஸ்புக் எனும் முன்னெடுப்பு “பாமரகீர்த்திதான்”. நம் கீர்த்தியை நாம் சொல்லிக்கொள்ள ஒரு ஊடகம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். எனவே அது பேஸ்புக் எனும் முகநூல்.  இப்படிப் பல வகையில் சிந்திக்க வைப்பது ”பாமரகீர்த்தி”. அவர் தாம்பரம் அருகில் இருக்குமொரு காலனியில் வாழ்ந்தார். எனது சகோதரியும் அங்கு வாழ்கிறார். அங்கிருக்கும் போதும் பள்ளிச் சிறார்களுக்கு வித்யாதானம் செய்து கொண்டிருந்தார். கடைசியாக தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நிகழ்வில் பங்கு கொண்டு இனிமையான இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். வாழ்ந்த போது ஒரு சிறுநீரகம் தானம். இறந்த பின் முழு உடலும் தானம். அவ்வாறெனில் இன்னம்பூரான் வேறு, வேறு உடல்களில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று பொருள். கேட்டால் இதுவும், “மரணமில்லாப் பெருவாழ்வுதான்” என்று சொன்னாலும் சொல்வார். இனிக்கப் பேசும் இன்னம்பூரான் இனி எங்கு எவ்வாறு பேசுவார் என்பது ஆய்வுப் பொருள்! வாழ்க!
    Share
  • சௌந்தர்ய லஹரி – 2

    சௌந்தர்ய லஹரி – 2

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியின் இரண்டாவது ஸ்லோகம். ஓர் அற்புதமான காட்சி, நம் முன் விரிகிறது. சக்தியின் ஆற்றல், எங்கும் விகசித்து நிற்கிறது. இதை எளிய தமிழில் விளக்குகிறார் மதுமிதா.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அணிலின் குரல்

    அணிலின் குரல்

    அணில் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? இதோ கேளுங்கள். இது ஏன் இப்படி உரக்க, இவ்வளவு நேரமாகக் குரல் கொடுக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சௌந்தர்ய லஹரி | தமிழில் விளக்கம்

    சௌந்தர்ய லஹரி | தமிழில் விளக்கம்

    ஆதி சங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரி, பக்தி இலக்கியத்தில் ஒரு மாணிக்கம். காலங்களைக் கடந்து நிற்கும் கவிதைப் பெட்டகம். சிந்தையைச் சிலிர்க்க வைக்கும் செவ்வியல் சித்திரம். சௌந்தர்ய லஹரி என்பதற்கு அழகின் அலைகள் எனப் பொருள். அன்னையின் அழகை விதந்தோதும் இந்த அலைகளின் ஒவ்வொரு துளியும் அமுதம். இந்த மதுரகவியைத் தமிழில் விளக்குகிறார், கவிஞர் மதுமிதா. பருக வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தொங்கா கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சி

    தொங்கா கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சி

    சி. ஜெயபாரதன், கனடா

    Tonga photos before and after volcano eruption, tsunami

    Powerful undersea volcano eruption in Tonga on January 14.

    Powerful undersea volcano eruption in Tonga on January 14., 2022

    Several flights from Australia, New Zealand and Fiji to Tonga were postponed due to the ash cloud. Early data suggests the volcanic eruption was the biggest since the 1991 blast at Mount Pinatubo in the Philippines, New Zealand-based volcanologist Shane Cronin told Radio New Zealand.

    பசிபிக் பெருங்கடல் தொங்கா தீவு அருகில் சீறி எழுந்த சுனாமியால் பாதிக்கபட்ட கிழக்காசிய நாடுகள்

    2022 ஜனவரி 15 ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் உள்ள தொங்கா தீவு அருகில் அதிகாலை 4;26 மணிக்கு ,7.6 ரிக்டர் அளவு பூகம்பம் உண்டாகி, கடல் அடித்தள அசுர எரிமலை பீறிட்டு 12 மைல் [20 கி.மீ. ] உயரத்துக்குப் புகைமண்டலம் எழுந்தது. அத்துடன் பேரளவு ஆற்றல் சுனாமி தூண்டப்பட்டு, கிழக்காசிய நாடுகளின் கடர்கரையில் சுமார் 49 அடி உச்ச உயரத்தில் பேரலைகள் தாக்கியுள்ளன. அந்த சமயத்தில் 6.2 ரிக்டர் பூகம்பம் ஹவாயி தீவை ஆட்டி அசைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் பசிபிக் ஆசிய நாடுகள் ஜப்பான், டைவான், ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, பெரு, ஹவாயி, பிஜி தீவு, தக்க தருணத்தில் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமிப் பேரலை அடிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன. இயற்கையின் இந்த கோரப் பேரிடர் பேரழிவுகளால் தொங்கா அரசாட்சியைச் [TONGA KINGDOM] சேர்ந்த 169 தீவுகளில் வாழும் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார். தொங்கா அரசாங்கப் பரப்பு ஹவாயிக்கு தென்மேற்கு திசையில் சுமார் 5000 கி.மீ.[3100 மைல்] தூரத்தில் உள்ளது.

    2014 ஆண்டுக்குப் பிறகு ஹுங்க தொங்கா எரிமலை [HUNGA TONGA VOLCANO] தற்போது 2021 டிசம்பர் 20 இல் வாய் திறந்து உள்ளது. டிசம்பர் 25 இல் வாய் மிகப் பெரிதாகி விஷவாயுப் புகை மண்டலம் 12 மைல் [20 கி.மீ.] உயர்ந்து சுமார் 30 மைல் [50 கி.மீ.] அகலம் பரவி விட்டது. அதைவிடத் திரட்சி ஆகி 2022 ஜனவரி 14 இல் அதன் இடி முழக்கம் 40 மைல் தூரத்தில் [65 கி.மீ.] கேட்டுள்ளது. அந்த இடி நாதம் 520 மைல் [840 கி.மீ.] தூரமுள்ள சமோவாக்கு [Samoa] எட்டி விட்டது. அந்த பயங்கர இடிச் சத்தம் 430 மைல் [700 கி.மீ.] தூரமுள்ள பிஜி தீவு, 1200 மைல் [2000 கி.மீ.] தூரமுள்ள நியூஜிலாந்து, 6000 மைல் [9700 கி.மீ.] தூரமுள்ள அலாஸ்கா வரை சென்றுள்ளது. 2022 ஜனவரி மாதத்தில் சில சமயத்தில் 200,000 மின்னல் அடிப்புகள் பதிவாகி உள்ளன. எழும் புகை இருட்டடிப்பு வாயு [ஸல்ஃபர் டையாக்சைடு] 400,000 டன் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் இது போன்ற அசுர எரிமலைச் சுனாமிகள் 100 கீழ் நேர்ந்துள்ளன என்று அறியப்படுகிறது. 2022 ஜனவரியில் பீறிட்ட ஹுங்க தொங்கா எரிமலை ஆயிரத்தில் ஒன்று என்று கருதப் படுகிறது.

    A tsunami measuring 1.5 meters triggered by the shockwave hit Tonga during the weekend, inundating homes and roads and damaging communication lines. However, no death has been reported so far.

    The shockwave was registered as far away as Alaska and Chennai in a sharp rise and fall of air pressure. The booming sound was reportedly heard as far as New Zealand that lies about 2,500 km from Tonga.

    More recent reports claimed that most communications lines could be down for up to two weeks. Nevertheless, Tonga also made the news on the crypto front. The tiny island nation in the Tasman Sea of the South Pacific Ocean is accepting bitcoin donations in the aftermath of Saturday’s volcanic shockwave that caused the tsunami.

    Volcanic Eruption, Earthquake Rock Tonga, Trigger Tsunami Threats In The South Pacific

    A grab taken from footage by Japan’s Himawari-8 satellite and released by the National Institute of Information and Communications (Japan) on January 15, 2022 shows the volcanic eruption that provoked a tsunami in Tonga. – The eruption was so intense it was heard as “loud thunder sounds” in Fiji more than 800 kilometres (500 miles) away. (Photo by Handout / NATIONAL INSTITUTE OF INFORMATION AND COMMUNICATIONS (JAPAN) / AFP)

    தகவல்:

    Volcanic Eruption, Earthquake Rock Tonga, Trigger Tsunami Threats In The South Pacific

    https://en.wikipedia.org/wiki/2022_Hunga_Tonga_eruption_and_tsunami#:~:text

    Share
  • தக்காளிக் காய் மசியல்

    தக்காளிக் காய் மசியல்

    தக்காளிக் காய் மசியல், சுவையும் சத்தும் நிறைந்தது. இதைக் கலந்து சாப்பிட்டால், சாப்பாடே களை கட்டும். இதை எப்படிச் செய்வது தெரியுமா? இதோ சுதா மாதவன் செய்து காட்டுகிறார். நீங்களும் செய்து பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஷிர்டி சாய்பாபா ரதம்

    ஷிர்டி சாய்பாபா ரதம்

    பொங்கல் அன்று தாம்பரத்தில் இந்தச் சாய்பாபா ரதத்தைப் பார்த்தேன். ரதம் முழுக்க ஷிர்டி சாய்பாபா படங்களும் சிலைகளும் இருந்தன. கூடவே திருமால், இலட்சுமி, விநாயகர்… என இந்து தெய்வங்களின் படங்களும் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் இந்த ரதத்துக்குச் சிறிய காணிக்கைகள் கிடைத்தவண்ணம் இருந்தன. இந்த ரதத்தை இயக்குபவருக்கு இதுவே முழு நேரத் தொழில். அவருடன் ஒரு சிறிய உரையாடலும் இந்தப் பதிவில் உள்ளது.

    ரதத்துடன் ஒலித்த இந்திப் பாடலுக்குக் காப்புரிமை இருப்பதால், ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரை வேண்டினேன். சாயி பக்தரான அவர், உடனே ஒரு பாடலை இயற்றி இசையமைத்துப் பாடிக் கொடுத்துவிட்டார். இதைக் கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • யானைத்தந்த வெண்டை விதைகள்

    யானைத்தந்த வெண்டை விதைகள்

    நம் மாடித் தோட்டத்திலிருந்து யானைத்தந்த வெண்டை விதைகளைச் சேகரித்து வைத்துள்ளோம். உங்களுக்கு இந்த விதைகள் வேண்டுமா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மதுரை மீனாட்சி திருக்கோவில்

    மதுரை மீனாட்சி திருக்கோவில்

    மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் – 2022 ஜனவரியில்.

    படங்கள் – ஓவியர் ஸ்யாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 157 (பாதம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 157 (பாதம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு:

    மூர்த்தி நாயனாரை அடக்கியாண்ட வடுக மன்னன் சிவச்சார்பு இல்லாமையால்  விரைவில் மாண்டு நரகம் புக்கான். மக்கள் அவனுக்கு இறுதிக்கடன்  செய்தனர். அவனுக்கு வாரிசு இல்லாமையால், மன்னன்  இல்லா அரசு உயிரற்ற உடல்போன்றதாகும்.  என்றனர். ஆதலால் யானை ஒன்றைக்  கண்கட்டி அனுப்பினால், அவ்வேழம் கைக்கொண்டமனிதன் அரசாட்சி கொள்வான் என்று, பூசனைசெய்து, ‘’உரிய அரசனைக் கொணர்க’’  என்று ஏவினர். அந்த யானை எங்கும்  திரிந்து , ஆலவாய்  அண்ணல் கோயிலை அடைந்தது.

    முன்னாள்  இரவில் மூர்த்தியார்  கனவில்  இறைவன்  அருள் வாக்கு கூறியதைக் கேட்ட  அடியார் ‘’இறைவன் அருளியவாறே  அரசுரிமை பெறுவேன்’’ என்று  திருக்கோயில் வாயிலுக்கு வந்தார்.   அரசயானை அங்கே வந்து உலகம் உய்யும் பொருட்டு, அடியாரை எடுத்து தன்  பிடரிமேல் தாங்கிச் சென்றது. மக்கள் பணிந்து   செய்த  ஆரவாரத்தின் இடையே அரசனின் ஆட்சி மன்றத்தில் இருந்த  அரியாசனத்தில்  அடியாரை ஏற்றி  வணங்கியது.

    மக்கள் அனைவரும் அடியாராகிய அரசனைப் போற்றி, அரசாபிடேகம் செய்ய விரும்பினார். மக்கள் வேண்டியதால்  சடாமுடியே அரசமுடி, திருநீறே  அபிடேகம்  சிவனுடைய  மாலைகளையே அணிகலன்கள்  எனக் கொண்டு  தவராச  யோகியாக  அரியணை ஏறினார்.  அறிவார்ந்த  அமைச்சர்களும் அதற்கேற்ற சடங்குகள் செய்தனர். அவ்வாறே அரசேற்ற அடியார்  அரச வீதியில் யானைமேலேறிச் சென்று , சிங்காதனம் ஏறினார்.

    சமணர் நெறி நீக்கிச்  சிவநெறி  மேற்கொண்டு அக்கமணிமாலை தாங்கி  மூர்த்தியார், அரசாட்சி  செய்யத்  தொடங்கினார்.  பெண்களின் பால் காமம் நீக்கி,  ஐம்புலன்களையும் அடக்கி, உலக உயிர்களுக்கு இடர் வராமல் காத்து, அவர் ஆண்ட  இறைவனடி  சேர்ந்த  சிறப்பைச்  சேக்கிழார் பாடுகிறார்,

    பாடல்:

    பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
    ஏதம் பிணியா வகை இவ் உலகு ஆண்டு, தொண்டின்
    பேதம் புரியா அருள் பேர் அரசுஆளப் பெற்று
    நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே.

    இதன்பொருள்: தமது பாதங்களைவேற்றரசர்கள் சூழ்ந்து பணிந்துபோற்றக், கெடுதிகள் பீடிக்காதவகையால் இவ்வுலகினை அரசாண்டு திருத்தொண்டினின்றும் விலகாத அருட்பேரரசும் ஆளப்பெற்று, இறைவனாரது கழலணிந்த திருவடிகளைப் பெருமையுடைய மூர்த்தியார் அடைந்தனர்.

    விளக்கம்:

    பரமன்னவர் – வேற்றரசர். வென்றனர் என்பது முன்னரே  கூறினாராதலின், அவ்வாறு வெல்லப்பட்ட பரமன்னரும், வெல்லப்படாமல் தாமே இவரது நீதியும் ஆணை வலிமையும் கண்டு வந்து சாரும் மன்னரும் வந்து பாதம் பணிந்து போற்றினர் என்க.

    திருவாதவூரடிகளது அமைச்சுத்திறத்தினை நயந்து பலதேய மன்னர்களும் தாமே வந்து பணிந்து நட்புரிமை கொண்டு நடந்தனர் என்ற செய்தியை இங்கே நினைவுகூர்க.

    ஏதம் பிணியா  வகை  இவ்வுலகு ஆண்டு  என்பதற்கு,  புறப்பகையால் வரும் ஏதம்

    பிணியாவகையிலும், அகப்பகையால் வரும் ஏதம் பிணியாவகையிலும் உலகாண்டனர் என்க.

    தொண்டின் பேதம் புரியா – சிவத்தொண்டினின்றும் பிரியாத – சிறிதும் திறம்பாத. அருட்பேரரசு – சிவனதருளின் கீழதாகிய பெரும்பாக்கியம். உலகாளும் அரசினும் அரனது திருத்தொண்டாகிய அரசே பெரிது என்று காட்டுவார்  அருட்பேரரசு எனச் சிறப்பு அடைமொழி தந்து விதந்து எடுத்துக் கூறினார். உலகுயிர்மேல் வைத்த சீவகாருண்ணியத்தினும் சிவனருட் பெருமையே பெரிதெனக் கொண்டனர் மூர்த்தியார் என்பது காண்க. (உலகு) ஆண்டு என்றமைந்த ஆசிரியர், (பேரரசு) ஆளப்பெற்று என்று சிறப்பித்துக் கூறிய திறனும் இக் கருத்தே பற்றியது. மேல்வரும் பாட்டில் களிற்றன்பர் என்றதும் காண்க.

    முடிமன்னர்களாகிய தமிழ் மூவேந்தர்களில் ஒருவராய், “மன்னவரும் பணிசெய்ய வடநூல்தென் றமிழ்முதலாம், பன்னுகலை பணிசெய்யப் பாரளிப்பா” ராகிய ஐயடிகள் காடவர்கோ னாயனார் இக் கருத்துப்பற்றியே (உலக)

    “அரசாட்சி இன்னல் என  இகழ்ந்து  அதனை யெழிற்குமரன் மேல் இழிச்சி,

    நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார்”

    என்ற சரிதம் கேட்கின்றோம். அவரது திருவுள்ளநிலை இக்கருத்தே பற்றிய தென்பது

    “படிமுழுதும்  வெண்குடைக்கீழ்ப்    பாரெலா   மாண்ட,
    முடியரசர்   செல்வத்து  மும்மை  – கடியிலங்கு,
    தோடேந்து  கொன்றையந்தார்ச்   சோதிக்குத்   தொண்டுபட்டு
    ஓடேந்தி   யுண்பது  உறும்”

    என்று அவர் அருளிய க்ஷேத்திரத் திருவெண்பாவினால்  அறியப்படும். இதனையே வியந்து எடுத்துப் பாராட்டி

    “முடியரசாம்   அத்திற்கு   மும்மைநன் றால்  அரற்கா
    ஐயம்  ஏற்றலென்னும், பத்திக்கட லையடிகள்”

    என்று துதித்தருளினர் நம்பியாண்டார்நம்பிகள் .

    “போகம்வேண்டி வேண்டிலேன் புரந்தராதி யின்பமும்”

    என்ற திருவாசகம்  முதலியவை காண்க.

    “கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன்;
    மேலை யிந்திர னரசினைக் கனவினும் வெஃகேன்;
    மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன்;
    சால நின்பதத் தன்பையே வேண்டுவன் றமியேன்”

    என்று  கந்தபுராணத்தில்  வீரவாகுதேவர் கேட்ட வரத்தின் உள்ளுறையும் கருதுக.

    அண்ணலார்  என்ற சொல்,  பெருமையுடையவரைட் குறித்தது.  பெரும்பேறாகிய

    சிவனடிப் பேறு பெற்ற இடமாதலின் இப்பெயராற் கூறினார்.

    இப்பாடலால், ‘’அரசாட்சி  ஏற்பவர்  துறவியாக  இருக்க வேண்டும்’’  என்ற உலகியல்  மொழியைப்  பெரிய புராணம்  கூறுவதை  உணரலாம்.  இறையருளையே  வேண்டுபவர்  செய்யும் அரசாட்சி  இறையருளாட்சியாகவே  இருக்கும் என்பதை  இப்பாடல் குறிக்கிறது.

    Share
  • தைப்பூசத்துக்குப் போகணும் (சிறுகதை)

    தைப்பூசத்துக்குப் போகணும் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    போன வருடமே பத்துமலைக்குப் போய் முருகனைத் தரிசிக்க முடியவில்லையே என்று பெரிய குறை சின்னசாமிக்கு.

    பல ஆண்டுகளுக்குமுன்பு ரப்பர் தோட்டப்புறத்தில் வாழ்ந்தபோது லோரிக்காரனுக்கு முப்பது வெள்ளி கொடுத்து, `கோலும்பூ’ருக்கு வந்து தரிசனம் செய்ததுடன் சரி. அப்போது, கடவுளையே நேரில் பார்த்ததுபோன்று அடைந்த மகிழ்ச்சியை இந்த ஜன்மத்தில் மறக்க முடியுமா!

    ஏனோ, அதன்பின் அந்த பாக்கியம் கைகூடவில்லை.

    செல்வம் தன்னுடன் வரும்படி அழைத்தபோது, மனைவி போனால் என்ன, நினைத்தபோதெல்லாம் பத்துமலை தரிசனம் கிடைக்குமே என்ற நப்பாசையுடன் மகன் வீட்டில் தங்க ஒத்துக்கொண்டார்.

    தொற்றுநோய் அவருடைய ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டது.

    ஏதோ ஊசியாம், குத்திக்கொண்டால் நோய் அண்டாதாம் என்று பலருடன் உட்கார்ந்து, ஊசி போட்டுக்கொண்டார்.

    அன்று இரவெல்லாம் தலைவலியும், காய்ச்சலும் அவரைப் படுத்த, `சாமி குத்தம்! இதோ இருக்கு பத்துமலை! ஆனா, போக முடியல்லியே!’ என்று காரணம் கற்பித்துக்கொண்டார்.

    இந்தப் புது வருடத்தில், `பக்தர்கள் போகலாம்!’ என்று அரசாங்கமே அனுமதித்தது.

    சின்னசாமியின் குதூகலம் அதிக நேரம் நீடிக்கவில்லை.

    “ரெண்டுவாட்டி ஊசி குத்திக்கிட்டவங்கதான் போக முடியும்பா,” என்று செல்வம் விளக்கினான், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.

    இரண்டாவது வாய்ப்பு வந்தபோது, “நல்லா இருக்கிறபோதே ஊசி குத்தினா, திரும்பவும் காய்ச்சலும், தலைவலியும் வந்து தொலைக்கும். எதுக்குடா வீண் வம்பு!” என்று போக மறுத்துவிட்டார்.

    அவரைப்போல் வயதானவர்களிடம் பேசிப் பயனில்லை என்று மகனும் வற்புறுத்தவில்லை.

    ஆனால், கடந்த இரு வாரங்களாக, எதையோ பறிகொடுத்தவர்போல் காணப்பட்ட தந்தையைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாக இருந்தது.

    காலமெல்லாம் ஓடாக உழைத்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டவர்! அவருடைய இந்த சின்ன ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாவிட்டால், தான் என்ன மகன்!

    “வா, செல்வம்! ஒடம்புக்கு என்ன?” என்று வரவேற்றான் மணிவண்ணன்.

    “நல்லாத்தான் இருக்கேன். அப்பா தைப்பூசத்துக்குப் போகணும்னு ரொம்ப ஆசைப்படறாருடா,” என்று இழுத்தான் செல்வம்.

    “கூட்டிட்டுப் போறது!” என்றான் பால்ய நண்பன்.

    “அதுக்குத்தான் ஒன்னைப் பாக்க வந்தேன்”.

    “பத்துமலைக்கு எப்பவும் லட்சக்கணக்கானபேர் வருவாங்க. இந்த வருசம், ஒரே சமயத்திலே ஆறாயிரம் பேர்தான் உள்ளே போகலாமாம். எனக்கோ கும்பலே ஆகாது. ஒனக்குத் தெரியாதா!” என்று கழன்றுகொள்ளப்பார்த்தான் மணி.

    “அதில்லேடா..,” என்று இழுத்த செல்வம், “நீ டாக்டர்தானே! இரண்டாவது ஊசியும் போட்டாச்சு அப்படின்னு ஒரு சர்டிபிகேட் குடுத்தா..!”

    முதலில் அதிர்ந்த நண்பன், ஒரு புண்ணிய காரியத்துக்காகத்தானே செய்யப்போகிறோம் என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டான்.

    “எத்தனை?” என்று செல்வம் கேட்டபோது, “சரிதான் போடா,” என்று செல்லமாக விரட்டினாலும், `காசு பாக்க இது சின்னாங்கான (சுலபமான) வழியா இருக்கே!’ என்ற எண்ணமும் எழாமலில்லை.

    ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்துவிடலாமே!

    குறுக்கு வழியில் போக மனிதர்களுக்கா பஞ்சம்!

    ஆளுக்கு நானூறோ, ஐநூறோ விதித்தால், ஒரே மாதத்தில்.. என்று அவன் மூளை கணக்குப்போட ஆரம்பித்தது.

    தைப்பூசத்திற்கு முதல் நாள்.

    எல்லா தினசரிகளின் முதல் பக்கத்திலும், `டாக்டரின் மோசடி’ என்ற பெரிய தலைப்பு. முகத்தைச் சட்டையால் மூடியபடி டாக்டர் மணிவண்ணன். இருபுறமும் காவல்துறை அதிகாரிகள்.

    முருகனைத் தரிசித்துவிட்ட பெருமகிழ்ச்சியிலிருந்தார் சின்னசாமி.

    “என்னப்பா? இப்படி தொண்டைக்கட்டும், இருமலுமா இருக்கீங்களே! டாக்டர்கிட்ட கூட்டிப்போறேன், வாங்க,” என்ற மகனிடம், “எனக்கு ஒண்ணுமில்லேடா,” என்று மறுத்தார்.

    அப்போது அவருக்குத் தெரியவில்லை, தான் யாரிடமிருந்தோ ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட நோயைத் தானும் பரப்பிவிட்டோம் என்கின்ற உண்மை.

    Share
  • கூடங்குள அணுமின்சக்தி ஆலை

    கூடங்குள அணுமின்சக்தி ஆலை

    சி. ஜெயபாரதன், கனடா

    கூடங்குள அணுமின் உலைகள்
    கூவத்து நதிக் கரையில்
    மேவப் பட்ட
    தீவிர மரணப் பீடங்கள் அல்ல!
    சிதைந்து போய்ச்
    சாம்பலான செர்நோபில்
    சமாதி அல்ல !
    இந்தியர் வரிப்பண
    உப்பைத் தின்று
    வளரும்
    ஒப்பிலா விஞ்ஞானிகள்
    உன்னத பொறித் துறை
    நிபுணர்கள் கட்டி
    எழுப்பிய
    பிரம்மாண்ட மின்சாரப்
    பிரமிடுகள் !

    ஊரே தீப்பற்றி எரிய
    வீணை வாசித்த ரோமாபுரி
    நீரோ மன்னன்
    எழுப்பிய
    கோரக் காலிஸீய அரண் அல்ல!
    கூடங்குள அணு உலை மூடிக் கிடந்தால்
    நாடு வளம் குன்றும்!
    கணினிகள்
    மிளகாய்ப் பெட்டிகளாய்
    கண்ணீர் சிந்தும்!
    மின் விசிறிகள் மூச்சிழக்கும்!
    மின்சார மின்றி
    சம்சாரம்
    மங்கலம் பாடும்!

    சினிமாக் கொட்டகை
    மாட்டுக்
    கொட்டமாய்க்
    கொட்டாவி விடும்!
    கவச குண்டல மாய்த்
    தொங்கும்
    செல்லரித்துப் போன
    கைபேசிகள்!
    மாட்டு வண்டிகள் இழுக்கும்
    சாணி யுகம் மீளும்.
    காணி நிலத்தில், புற்றுப்
    பாம்புகள் படமெடுக்கும்
    எரிந்த
    சாம்பலி லிருந்து!

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 42

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 42

    -மேகலா இராமமூர்த்தி

    அனுமனை அயன்படையால் பிணித்து இழுத்துவந்து இராவணன் முன்னிலையில் நிறுத்தினான் இந்திரசித்து. அவனைப் பார்த்து ”யார் நீ?” என்று இராவணன் சினத்தோடு வினவ, தன்னைப் பற்றியும் தான் சீதையைத் தேடி வாலி மைந்தன் அங்கதன் அனுப்பிய தூதனாக இலங்கைக்கு வந்தது பற்றியும் இராவணனுக்கு விரிவாய் விளம்பினான் அனுமன்.

    வாலி மைந்தனைப் பற்றி அனுமன் குறிப்பிட்டதைக் கேட்ட இராவணன், தன் பல்வரிசையைக் காட்டிச் சிரித்து, ”வாலி மைந்தன் அனுப்ப வந்த தூதனே!  மிகுவலி படைத்த வாலி நலமா? அவன் அரசாட்சி சிறப்பாக நடைபெறுகின்றதா?” என்று கேட்டான். அனுமன் நகைத்தபடியே, ”அரக்க இராவணனே! அஞ்சாதே! கொடுஞ்சினம் கொண்டவனான வாலி விண்ணுலகம் போய்ச் சேர்ந்துவிட்டான்; இனித் திரும்பி வரமாட்டான்; அவன் போன அன்றைக்கே அவனுடைய வாலும் போய் அழிந்துவிட்டது. அஞ்சனமேனியான் இராமனின் அடுகணை ஒன்றினால் வருந்தி இறந்தான் வாலி. இப்போது எங்களுக்கு அரசன் சூரியன் மகனான சுக்கிரீவன்” என்றான்.

    அஞ்சலை அரக்க பார்விட்டு
    அந்தரம் அடைந்தான் அன்றே
    வெஞ்சின வாலி மீளான்
    வாலும்போய் விளிந்தது அன்றே
    அஞ்சன மேனியான் தன்
    அடுகணை ஒன்றால் மாழ்கித்
    துஞ்சினன் எங்கள் வேந்தன்
    சூரியன் தோன்றல்
     என்றான். (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5888)

    ”வாலி இறந்துவிட்டான்; இனி அவனையும் அவன் வாலையும் எண்ணி அஞ்சவேண்டா” என்று இராவணனை எள்ளல்செய்த அனுமன், வாலி மரணித்த விதத்தைக் கூறுமுகத்தான் இராமனின் வில்திறனையும் இராவணனுக்குக் குறிப்பாலுணர்த்தித் தான் சொல்லின் செல்வன் என்பதை நிறுவினான்.

    அஞ்சனை மைந்தன் வஞ்சனையின்றி இராமனின் வீரப் பிரதாபங்களை விதந்தோதுவதைக் கேட்ட இராவணன், ”வாலியைக் கொன்ற இராமனுக்கு நீவிர் அடிமைத் தொழில் செய்வது இழிசெயல் இல்லையா?” என்று பழித்துரைத்துவிட்டு, ”தூதனாக வந்த நீ இலங்கையில் சோலைகளையும் அரக்கர்களையும் அழித்தது ஏன்?” என்று கேட்டான் காட்டமாக.

    சற்று சிந்தித்த அனுமன், இவனிடம் அனைவர்க்கும் பொதுவான அறக்கருத்துக்களை எடுத்துரைக்க இதுவே ஏற்ற தருணம் என்ற முடிவுக்கு வந்தவனாய், பதினாறு பாடல்களில் அவற்றை எடுத்தியம்புகின்றான்.

    ”நெருப்பினும் தூயவளான சீதையைத் துன்புறுத்தியதால் பெருந்தவம் ஆற்றிப் பெற்ற பலனை நீவிர் இழந்துவிட்டீர். தீமையால் என்றுமே நன்மையை வெல்ல முடியாது என்பதை உணர்க!

    இச்சையின் இயல்பினால் அயலார் மனைவியை விரும்பி எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்கும் வண்ணம் நாணமற்றவனாய், பசுமையான செழித்த உடம்பு காமதாபத்தால் உலரப்பெற்றுப் பழிப்பை அடைகின்ற ஆண்மையும் சிறப்பினைப் பெறுமோ? என்று இகழ்ந்துரைத்தான்.

    இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
    நச்சி நாளும் நகைஉற நாண்இலன்
    பச்சை மேனி புலர்ந்து பழிபடூஉம்
    கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ.
    (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5903)

    பிறன்மனை நயத்தலின் இழிவு இப்பாடலில் வீரியமாய் எடுத்துரைக்கப் பெற்றுள்ளமையைக் காண்கின்றோம்.

    எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி.
    (குறள் – 145) என்ற குறட் கருத்தையே மேற்கண்ட பாடல் பிரதிபலிக்கின்றது.

    ”ஆகவே, இந்த இழிசெயலை விடுவாய். பெறற்கரிய உன் செல்வத்தையும், பல்வகைச் சுற்றத்தையும், உன்னுடைய உயிரையும் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் சீதையை இராமனிடம் ஒப்படைப்பாய் என்று உன்னிடம் சொல்லச் சொன்னான் சூரியன் மகனாகிய சுக்கிரீவன்” என்று இராவணனிடம் இயம்பினான் அனுமன்.

    ஆனால், அனுமனின் உரைகளுக்கு இராவணன் செவிசாய்க்கவில்லை; மாறாக ஒரு குரங்கு எனக்கு அறிவுரை கூறுகின்றது என்று எள்ளி நகையாடிவிட்டு, ”அது இருக்கட்டும்! தூதனாக இங்குவந்த நீ அரக்கர்களைக் கொன்றது ஏன்?” என்று மீண்டும் வினவினான்.

    ”அதுவா? உன்னை எனக்குக் காட்டுவார் இல்லை; அதனால்தான் காவல்மிகுந்த உன் சோலையை அழித்தேன்; என்னைக் கொல்லவந்தவர்களை நான் கொன்றேன்; அதன்பின்னரும் எளியவனாய் உன்மாட்டு வந்தது உன்னைக் கண்டு சில செய்திகளைக் கூறவேண்டும் என்பதற்காகவே” என்றான் அனுமன் அலட்சியமாக.

    காட்டுவார் இன்மையால் கடி காவினை
    வாட்டினேன் என்னைக் கொல்ல வந்தார்களை
    வீட்டினேன் பின்னும் மென்மையினால் உன்தன்
    மாட்டு வந்தது காணும் மதியினால்.  
    (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5913)

    ”நான் வரவேண்டும் என்று விரும்பியதால்தான் மிகவும் எளிய(வ)னாக என்னைக் காட்டிக்கொண்டு இங்கே வந்தேன். அயன்படைக்கு அஞ்சியன்று” என்ற குறிப்புப் பொருளும் அனுமனின் சொற்களில் பொதிந்திருக்கின்றது.

    அனுமனின் அச்சமற்ற அலட்சியச் சொற்களால் சீற்றமடைந்த இராவணன், ”இந்தக் குரங்கைக் கொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டான். அனுமனை நெருங்கிய கொலையாளிகளைப் பார்த்து, அவையிலிருந்த இராவணனின் தம்பியும் அறநெறியில் நடப்பவனுமான வீடணன், ”நில்லுங்கள்!” என்று தடுத்தான். அவர்கள் தயங்கி நிற்கவே, எழுந்துநின்று இராவணனை வணங்கிவிட்டு, ”ஐயனே நீ அறிவாற்றல் மிக்கவன்; வேதங்களை நன்கு கற்றவன்; இந்திரனை வென்ற பேரரசன். அப்படியிருக்க மற்றொருவர் சொல்லச் சொன்னதைச் சொல்லும் தூதனைக் கொல்லக் கருதுதல் முறையா? என்று அமைதியாய்க் கேட்டான்.

    தொடர்ந்தவன்… “இப்புவியிலும், அண்டக் கோளத்திலும், அதன்புறமாகிய பகிரண்டத்திலும், பொய்ம்மையில்லா வேதநெறியைப் பொருந்திவாழும் உலகங்களிலும், வெவ்வேறு இடங்களில் உள்ள அரசர்களிலும் மாதரைக் கொன்றவர் உளர் என்றபோதிலும், பழமையான நீதி தவறாதவர்களில், தம்மிடம் வந்த தூதரைக் கொன்றவர் யாருளர்?” என்ற வினாவை எழுப்பினான்.  

    பூதலப் பரப்பின் அண்டப்
    பொகுட்டினுள் புறத்துள் பொய்தீர்
    வேதம் உற்றுஇயங்கு வைப்பின்
    வேறுவேறு இடத்து வேந்தர்
    மாதரைக் கொலை செய்தார்கள்
    உளர்என வரினும் வந்த
    தூதரைக் கொன்றுளார்கள்
    யாவரே தொல்லை நல்லோர்
    . (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5917)

    பாவங்களில் கொடிது மாதரைக் கொல்வது; அதனினும் கொடிது தூதரைக் கொல்வது என்ற செய்தியை வீடணன் இப்பாடலில் தெளிவாய் வெளிப்படுத்துகின்றான்.

    சங்க இலக்கியத்தில் பெண்கொலை புரிந்த நன்னன் என்று ஓர் மன்னன் குறிக்கப்படுகின்றான். நன்னனது காவல் மரத்து மாங்காயை அருகிலுள்ள ஆற்றில் குளிக்கும்போது கண்டெடுத்த பெண்ணொருத்தி அதனைத் தின்றுவிட, அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான் நன்னன். அப்பெண்ணின் தந்தையார் அக்குற்றத்திற்குக் கழுவாயாக அப்பெண்ணின் எடைக்குச் சமமான பொன்னாலான பாவையையும், எண்பத்தொரு களிறுகளையும் தருவதாய்க் கூறியும் அதனையேற்காது தன் கொலைத் தண்டனையை நிறைவேற்றி நீங்காப் பழி சுமந்தான்.

    இவ்வாறு ஓர் அபலைப் பெண்ணைக் கொல்வதைவிடவும் பிறரிடமிருந்து வந்த தூதரைக் கொல்வது கொடியதாய் அன்று கருதப்பட்டது என்பதை அறிகையில் அரசாட்சி என்பது அறத்தின் ஆட்சியாக இருக்கவேண்டும் என்பதில் அற்றைய அரசர்கள் செலுத்திய கவனம் புலப்படுகின்றது.

    வீடணனின் பொருளுரையை ஏற்ற இராவணன், ”நல்லது உரைத்தாய் தம்பி! இவன் குற்றம் புரிந்தவனாயினும் தூதன் என்பதால் நீ சொல்வதுபோல் இவனைக் கொல்லுதல் இழுக்கமுடையதே ஆகும் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்” என்று சொல்லிவிட்டு அனுமனை நோக்கி, ”நீ உன்னை அனுப்பியவர்களிடம் சென்று, சீதையை விடமுடியாதென்ற, என் நோக்கத்தை உரைத்து அவர்களைப் போருக்கு அழைத்து வா!” என்றான்.

    அடுத்து அங்கிருந்த அரக்கர்களைப் பார்த்து, ”இந்தக் குரங்கின் தொல்லைக்கிடமான வாலானது அடியோடு அழியும்படி அதில் நெருப்பை வைத்து, இவனை நகரைச் சுற்றி இழுத்துச் சென்று பின்பு நகரின் எல்லையைக் கடந்துபோகும்படி விட்டுவிடுங்கள்!” என்று கட்டளையிட்டான். இலங்கைக் காவலனின் ஆணையை ஏற்ற அரக்கர்கள் ஆரவாரத்துடன் கிளம்பினார்கள்.

    தம் மனைவிமார்களின் கழுத்திலிருந்த மங்கலக் கயிற்றைத் தவிர வீட்டிலும் நாட்டிலும் தட்டுப்பட்ட அனைத்துக் கயிறுகளையும் அள்ளிக்கொண்டு வந்து அவற்றால் அனுமனைக் கட்டினார்கள்.

    இவ்வாறு கயிறுகளால் கட்டப்பட்டபோதே அயன்படையிலிருந்து விடுபட்டான் அனுமன். (அயன்படையால் கட்டுண்டிருக்கும்போது வேறொரு கயிற்றினால் கட்டினால் அது பலமிழந்துவிடும்; அதனை அரக்கர்கள் அறியவில்லை.) தன் வாலில் இவர்கள் நெருப்பு வைப்பது மிகவும் நல்லது; இலங்கையை நான் கொளுத்துதற்கு அதுவே பெருந்துணைசெய்ய வல்லது என்று தன்னுள் எண்ணி மகிழ்ந்தான் அஞ்சனையின் அருமை மைந்தன்.

    இராவணன் அரண்மனையைக் கடந்து வெட்டவெளிக்கு அனுமனை அழைத்துச் சென்ற அரக்கர்கள், அவன் வாலில் துணிகளைச் சுற்றி அவ்வாலை நெய்யிலும் எண்ணெயிலும் தோய்த்தெடுத்து அதில் கொடுநெருப்பைக் கொளுத்திவிட்டு அண்டம் பொடிபட மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர்.

    வேந்தன்கோயில் வாயிலொடு
    விரைவில் கடந்து வெள்ளிடையின்
    போந்து புறம்நின்று இரைக்கின்ற
    பொறைதீர் மறவர் புறம்சுற்ற
    ஏந்து நெடுவால் கிழிசுற்றி
    முற்றும் தோய்த்தார் இழுதுஎண்ணெய்
    காந்து கடுந்தீக் கொளுத்தினார்
    ஆர்த்தார் அண்டம் கடிகலங்க.
    (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5927)

    இவ்வாறு அரக்கர்கள் ஆர்த்திருக்க, இச்செய்தி அறிந்த சீதையோ மிகுந்த வேதனையுற்றவளாய் அங்கியக் கடவுளைத் தொழுது, ”தீயே! நான் கற்பில் தூயவள் என்பது உண்மையானால் நீ அனுமனைச் சுடாதே!” என்று வேண்டிக்கொண்டாள்.

    அங்கியக் கடவுள் சீதையின் வேண்டுதலை ஏற்று நிறைவேற்றினான். அதன்விளைவாய் அனுமனின் வாலில் தீ எரிந்துகொண்டிருந்தபோதும் அஃது அவனைச் சுடவில்லை; மாறாகச் சில்லென்ற குளிர்ச்சியைத் தந்தது.

    தன் காயம் (உடல்) சுடாமல் குளிர்வது சனகன் பாவை கற்பினால் ஏற்பட்ட மாயம் என்றுணர்ந்த அனுமன் களிப்படைந்தான்.

    இலங்கை நகர் முழுவதையும் பகலில் மற்றொரு முறை காணுதற்கு இது நல்ல வாய்ப்பு என்றெண்ணித் தன்னைக் கயிறுகளால் கட்டியிழுத்துச் சென்ற அரக்கர்களோடு நகரின் எல்லைவரை சென்ற அனுமன் திடீரென்று உயரே கிளம்பவே அவனைக் கட்டியிழுத்துச் சென்ற அரக்கர்கள் அனைவரும் மேலிருந்து கீழே விழுந்தனர்.

    அவர்களிடமிருந்து தப்பிய அனுமன் இலங்கை நகர மாளிகைகள்தோறும் எரியும் வாலோடு தாவிச் செல்ல இலங்கை நகர் முழுவதிலும் தீ பரவியது.

    தீ பரவியதால் இலங்கையில் நிகழ்ந்த அவல நிகழ்வுகளை நாம் சிலப்பதிகாரக் கண்ணகி மதுரையை எரித்தபோது ஆங்கே நிகழ்ந்தவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

    சிலம்பின் வென்ற சேயிழை நங்கையான கண்ணகி ”தீத் திறத்தார் பக்கமே சேர்க” என்று அங்கியக் கடவுளுக்கு ஆணையிட்டதால் நல்லோர்கள் தீயின் வாயிலிருந்து தப்பினர். ஆனால், அனுமன் அவ்வாறெல்லாம் யாருக்கும் விலக்களிக்கவில்லை. அதனால் இலங்கையெங்கும் அழல் மண்டியது. இராவணனின் பிரம்மாண்டமான எழுநிலை மாளிகையும் எரியால் அழிந்ததால் அவன் அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. அரக்கர்களோடும் தன் உரிமை மகளிரோடும் மாளிகைவிட்டு வெளியேறிப் புட்பக விமானத்தில் ஏறியவன், தன்னோடு வந்த அரக்கர்களைக் கண்களில் தீயெழ நோக்கி, “உலகங்களை எரித்தழிக்கும் ஊழிக் காலம் வந்துவிட்டதா? அல்லது வேறு காரணங்களால் இலங்கை நகரம் வெந்துவிட்டதா?” எனக் கேட்டான்.

    அரக்கர்கள் அவனிடம், ”அரசே! நம்மால் வாலில் எரியூட்டப்பட்ட குரங்கு சுட்டது இலங்கையை” என்றனர். அதுகேட்ட இராவணன், “புன்தொழில் குரங்கின் வலிமையால் இலங்கை எரிந்து சாம்பலானது; நெருப்பு நம் நகரத்தைத் தின்று ஏப்பம் விட்டது; இதனைக் கண்டால் நம்மிடம் தோற்றோடிய தேவர்கள் நகைப்பார்கள்; நம் போர்த்திறமை மிக நன்று!” என்று வெகுளி மேலீட்டால் சிரித்து, ”இலங்கைக்குத் தீங்குசெய்த அந்தக் குரங்கு ஊரைவிட்டு நீங்குமுன் பற்றி வாருங்கள்!” என்று கட்டளையிட்டான்.

    அனுமனோடு மீண்டும் போரெதிர்ந்து அவனைப் பற்ற முயன்றனர் அரக்கர்கள்; போரில் அவர்களை அழித்த அனுமன், தான் வைத்த நெருப்பு சீதையிருந்த சோலைப்புறத்தைச் சுடாதது கண்டு நனிமகிழ்ந்து சீதையை நாடிவந்து அவள் அடிதொழுது விடைகொண்டான்.

    அனுமன் இருக்கும் தைரியத்தில் இலங்கையை அதுவரை அழித்துவந்த அக்கினி தேவன், அனுமன் அங்கிருந்து புறப்பட்டுவிடவே, அரக்கர்கள் தன்னைக் கண்டால் நிந்தித்துப் பிடித்துச் செல்வர் என்றஞ்சி, ஓடி ஒளிந்துகொண்டான்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share