கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 42

-மேகலா இராமமூர்த்தி

அனுமனை அயன்படையால் பிணித்து இழுத்துவந்து இராவணன் முன்னிலையில் நிறுத்தினான் இந்திரசித்து. அவனைப் பார்த்து ”யார் நீ?” என்று இராவணன் சினத்தோடு வினவ, தன்னைப் பற்றியும் தான் சீதையைத் தேடி வாலி மைந்தன் அங்கதன் அனுப்பிய தூதனாக இலங்கைக்கு வந்தது பற்றியும் இராவணனுக்கு விரிவாய் விளம்பினான் அனுமன்.

வாலி மைந்தனைப் பற்றி அனுமன் குறிப்பிட்டதைக் கேட்ட இராவணன், தன் பல்வரிசையைக் காட்டிச் சிரித்து, ”வாலி மைந்தன் அனுப்ப வந்த தூதனே!  மிகுவலி படைத்த வாலி நலமா? அவன் அரசாட்சி சிறப்பாக நடைபெறுகின்றதா?” என்று கேட்டான். அனுமன் நகைத்தபடியே, ”அரக்க இராவணனே! அஞ்சாதே! கொடுஞ்சினம் கொண்டவனான வாலி விண்ணுலகம் போய்ச் சேர்ந்துவிட்டான்; இனித் திரும்பி வரமாட்டான்; அவன் போன அன்றைக்கே அவனுடைய வாலும் போய் அழிந்துவிட்டது. அஞ்சனமேனியான் இராமனின் அடுகணை ஒன்றினால் வருந்தி இறந்தான் வாலி. இப்போது எங்களுக்கு அரசன் சூரியன் மகனான சுக்கிரீவன்” என்றான்.

அஞ்சலை அரக்க பார்விட்டு
அந்தரம் அடைந்தான் அன்றே
வெஞ்சின வாலி மீளான்
வாலும்போய் விளிந்தது அன்றே
அஞ்சன மேனியான் தன்
அடுகணை ஒன்றால் மாழ்கித்
துஞ்சினன் எங்கள் வேந்தன்
சூரியன் தோன்றல்
 என்றான். (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5888)

”வாலி இறந்துவிட்டான்; இனி அவனையும் அவன் வாலையும் எண்ணி அஞ்சவேண்டா” என்று இராவணனை எள்ளல்செய்த அனுமன், வாலி மரணித்த விதத்தைக் கூறுமுகத்தான் இராமனின் வில்திறனையும் இராவணனுக்குக் குறிப்பாலுணர்த்தித் தான் சொல்லின் செல்வன் என்பதை நிறுவினான்.

அஞ்சனை மைந்தன் வஞ்சனையின்றி இராமனின் வீரப் பிரதாபங்களை விதந்தோதுவதைக் கேட்ட இராவணன், ”வாலியைக் கொன்ற இராமனுக்கு நீவிர் அடிமைத் தொழில் செய்வது இழிசெயல் இல்லையா?” என்று பழித்துரைத்துவிட்டு, ”தூதனாக வந்த நீ இலங்கையில் சோலைகளையும் அரக்கர்களையும் அழித்தது ஏன்?” என்று கேட்டான் காட்டமாக.

சற்று சிந்தித்த அனுமன், இவனிடம் அனைவர்க்கும் பொதுவான அறக்கருத்துக்களை எடுத்துரைக்க இதுவே ஏற்ற தருணம் என்ற முடிவுக்கு வந்தவனாய், பதினாறு பாடல்களில் அவற்றை எடுத்தியம்புகின்றான்.

”நெருப்பினும் தூயவளான சீதையைத் துன்புறுத்தியதால் பெருந்தவம் ஆற்றிப் பெற்ற பலனை நீவிர் இழந்துவிட்டீர். தீமையால் என்றுமே நன்மையை வெல்ல முடியாது என்பதை உணர்க!

இச்சையின் இயல்பினால் அயலார் மனைவியை விரும்பி எந்நாளும் பிறர் தன்னை இகழ்ந்து சிரிக்கும் வண்ணம் நாணமற்றவனாய், பசுமையான செழித்த உடம்பு காமதாபத்தால் உலரப்பெற்றுப் பழிப்பை அடைகின்ற ஆண்மையும் சிறப்பினைப் பெறுமோ? என்று இகழ்ந்துரைத்தான்.

இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை
நச்சி நாளும் நகைஉற நாண்இலன்
பச்சை மேனி புலர்ந்து பழிபடூஉம்
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ.
(கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5903)

பிறன்மனை நயத்தலின் இழிவு இப்பாடலில் வீரியமாய் எடுத்துரைக்கப் பெற்றுள்ளமையைக் காண்கின்றோம்.

எளிதென இல்லிறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
(குறள் – 145) என்ற குறட் கருத்தையே மேற்கண்ட பாடல் பிரதிபலிக்கின்றது.

”ஆகவே, இந்த இழிசெயலை விடுவாய். பெறற்கரிய உன் செல்வத்தையும், பல்வகைச் சுற்றத்தையும், உன்னுடைய உயிரையும் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால் சீதையை இராமனிடம் ஒப்படைப்பாய் என்று உன்னிடம் சொல்லச் சொன்னான் சூரியன் மகனாகிய சுக்கிரீவன்” என்று இராவணனிடம் இயம்பினான் அனுமன்.

ஆனால், அனுமனின் உரைகளுக்கு இராவணன் செவிசாய்க்கவில்லை; மாறாக ஒரு குரங்கு எனக்கு அறிவுரை கூறுகின்றது என்று எள்ளி நகையாடிவிட்டு, ”அது இருக்கட்டும்! தூதனாக இங்குவந்த நீ அரக்கர்களைக் கொன்றது ஏன்?” என்று மீண்டும் வினவினான்.

”அதுவா? உன்னை எனக்குக் காட்டுவார் இல்லை; அதனால்தான் காவல்மிகுந்த உன் சோலையை அழித்தேன்; என்னைக் கொல்லவந்தவர்களை நான் கொன்றேன்; அதன்பின்னரும் எளியவனாய் உன்மாட்டு வந்தது உன்னைக் கண்டு சில செய்திகளைக் கூறவேண்டும் என்பதற்காகவே” என்றான் அனுமன் அலட்சியமாக.

காட்டுவார் இன்மையால் கடி காவினை
வாட்டினேன் என்னைக் கொல்ல வந்தார்களை
வீட்டினேன் பின்னும் மென்மையினால் உன்தன்
மாட்டு வந்தது காணும் மதியினால்.  
(கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5913)

”நான் வரவேண்டும் என்று விரும்பியதால்தான் மிகவும் எளிய(வ)னாக என்னைக் காட்டிக்கொண்டு இங்கே வந்தேன். அயன்படைக்கு அஞ்சியன்று” என்ற குறிப்புப் பொருளும் அனுமனின் சொற்களில் பொதிந்திருக்கின்றது.

அனுமனின் அச்சமற்ற அலட்சியச் சொற்களால் சீற்றமடைந்த இராவணன், ”இந்தக் குரங்கைக் கொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டான். அனுமனை நெருங்கிய கொலையாளிகளைப் பார்த்து, அவையிலிருந்த இராவணனின் தம்பியும் அறநெறியில் நடப்பவனுமான வீடணன், ”நில்லுங்கள்!” என்று தடுத்தான். அவர்கள் தயங்கி நிற்கவே, எழுந்துநின்று இராவணனை வணங்கிவிட்டு, ”ஐயனே நீ அறிவாற்றல் மிக்கவன்; வேதங்களை நன்கு கற்றவன்; இந்திரனை வென்ற பேரரசன். அப்படியிருக்க மற்றொருவர் சொல்லச் சொன்னதைச் சொல்லும் தூதனைக் கொல்லக் கருதுதல் முறையா? என்று அமைதியாய்க் கேட்டான்.

தொடர்ந்தவன்… “இப்புவியிலும், அண்டக் கோளத்திலும், அதன்புறமாகிய பகிரண்டத்திலும், பொய்ம்மையில்லா வேதநெறியைப் பொருந்திவாழும் உலகங்களிலும், வெவ்வேறு இடங்களில் உள்ள அரசர்களிலும் மாதரைக் கொன்றவர் உளர் என்றபோதிலும், பழமையான நீதி தவறாதவர்களில், தம்மிடம் வந்த தூதரைக் கொன்றவர் யாருளர்?” என்ற வினாவை எழுப்பினான்.  

பூதலப் பரப்பின் அண்டப்
பொகுட்டினுள் புறத்துள் பொய்தீர்
வேதம் உற்றுஇயங்கு வைப்பின்
வேறுவேறு இடத்து வேந்தர்
மாதரைக் கொலை செய்தார்கள்
உளர்என வரினும் வந்த
தூதரைக் கொன்றுளார்கள்
யாவரே தொல்லை நல்லோர்
. (கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5917)

பாவங்களில் கொடிது மாதரைக் கொல்வது; அதனினும் கொடிது தூதரைக் கொல்வது என்ற செய்தியை வீடணன் இப்பாடலில் தெளிவாய் வெளிப்படுத்துகின்றான்.

சங்க இலக்கியத்தில் பெண்கொலை புரிந்த நன்னன் என்று ஓர் மன்னன் குறிக்கப்படுகின்றான். நன்னனது காவல் மரத்து மாங்காயை அருகிலுள்ள ஆற்றில் குளிக்கும்போது கண்டெடுத்த பெண்ணொருத்தி அதனைத் தின்றுவிட, அவளுக்குக் கொலைத் தண்டனை விதித்தான் நன்னன். அப்பெண்ணின் தந்தையார் அக்குற்றத்திற்குக் கழுவாயாக அப்பெண்ணின் எடைக்குச் சமமான பொன்னாலான பாவையையும், எண்பத்தொரு களிறுகளையும் தருவதாய்க் கூறியும் அதனையேற்காது தன் கொலைத் தண்டனையை நிறைவேற்றி நீங்காப் பழி சுமந்தான்.

இவ்வாறு ஓர் அபலைப் பெண்ணைக் கொல்வதைவிடவும் பிறரிடமிருந்து வந்த தூதரைக் கொல்வது கொடியதாய் அன்று கருதப்பட்டது என்பதை அறிகையில் அரசாட்சி என்பது அறத்தின் ஆட்சியாக இருக்கவேண்டும் என்பதில் அற்றைய அரசர்கள் செலுத்திய கவனம் புலப்படுகின்றது.

வீடணனின் பொருளுரையை ஏற்ற இராவணன், ”நல்லது உரைத்தாய் தம்பி! இவன் குற்றம் புரிந்தவனாயினும் தூதன் என்பதால் நீ சொல்வதுபோல் இவனைக் கொல்லுதல் இழுக்கமுடையதே ஆகும் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்” என்று சொல்லிவிட்டு அனுமனை நோக்கி, ”நீ உன்னை அனுப்பியவர்களிடம் சென்று, சீதையை விடமுடியாதென்ற, என் நோக்கத்தை உரைத்து அவர்களைப் போருக்கு அழைத்து வா!” என்றான்.

அடுத்து அங்கிருந்த அரக்கர்களைப் பார்த்து, ”இந்தக் குரங்கின் தொல்லைக்கிடமான வாலானது அடியோடு அழியும்படி அதில் நெருப்பை வைத்து, இவனை நகரைச் சுற்றி இழுத்துச் சென்று பின்பு நகரின் எல்லையைக் கடந்துபோகும்படி விட்டுவிடுங்கள்!” என்று கட்டளையிட்டான். இலங்கைக் காவலனின் ஆணையை ஏற்ற அரக்கர்கள் ஆரவாரத்துடன் கிளம்பினார்கள்.

தம் மனைவிமார்களின் கழுத்திலிருந்த மங்கலக் கயிற்றைத் தவிர வீட்டிலும் நாட்டிலும் தட்டுப்பட்ட அனைத்துக் கயிறுகளையும் அள்ளிக்கொண்டு வந்து அவற்றால் அனுமனைக் கட்டினார்கள்.

இவ்வாறு கயிறுகளால் கட்டப்பட்டபோதே அயன்படையிலிருந்து விடுபட்டான் அனுமன். (அயன்படையால் கட்டுண்டிருக்கும்போது வேறொரு கயிற்றினால் கட்டினால் அது பலமிழந்துவிடும்; அதனை அரக்கர்கள் அறியவில்லை.) தன் வாலில் இவர்கள் நெருப்பு வைப்பது மிகவும் நல்லது; இலங்கையை நான் கொளுத்துதற்கு அதுவே பெருந்துணைசெய்ய வல்லது என்று தன்னுள் எண்ணி மகிழ்ந்தான் அஞ்சனையின் அருமை மைந்தன்.

இராவணன் அரண்மனையைக் கடந்து வெட்டவெளிக்கு அனுமனை அழைத்துச் சென்ற அரக்கர்கள், அவன் வாலில் துணிகளைச் சுற்றி அவ்வாலை நெய்யிலும் எண்ணெயிலும் தோய்த்தெடுத்து அதில் கொடுநெருப்பைக் கொளுத்திவிட்டு அண்டம் பொடிபட மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர்.

வேந்தன்கோயில் வாயிலொடு
விரைவில் கடந்து வெள்ளிடையின்
போந்து புறம்நின்று இரைக்கின்ற
பொறைதீர் மறவர் புறம்சுற்ற
ஏந்து நெடுவால் கிழிசுற்றி
முற்றும் தோய்த்தார் இழுதுஎண்ணெய்
காந்து கடுந்தீக் கொளுத்தினார்
ஆர்த்தார் அண்டம் கடிகலங்க.
(கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5927)

இவ்வாறு அரக்கர்கள் ஆர்த்திருக்க, இச்செய்தி அறிந்த சீதையோ மிகுந்த வேதனையுற்றவளாய் அங்கியக் கடவுளைத் தொழுது, ”தீயே! நான் கற்பில் தூயவள் என்பது உண்மையானால் நீ அனுமனைச் சுடாதே!” என்று வேண்டிக்கொண்டாள்.

அங்கியக் கடவுள் சீதையின் வேண்டுதலை ஏற்று நிறைவேற்றினான். அதன்விளைவாய் அனுமனின் வாலில் தீ எரிந்துகொண்டிருந்தபோதும் அஃது அவனைச் சுடவில்லை; மாறாகச் சில்லென்ற குளிர்ச்சியைத் தந்தது.

தன் காயம் (உடல்) சுடாமல் குளிர்வது சனகன் பாவை கற்பினால் ஏற்பட்ட மாயம் என்றுணர்ந்த அனுமன் களிப்படைந்தான்.

இலங்கை நகர் முழுவதையும் பகலில் மற்றொரு முறை காணுதற்கு இது நல்ல வாய்ப்பு என்றெண்ணித் தன்னைக் கயிறுகளால் கட்டியிழுத்துச் சென்ற அரக்கர்களோடு நகரின் எல்லைவரை சென்ற அனுமன் திடீரென்று உயரே கிளம்பவே அவனைக் கட்டியிழுத்துச் சென்ற அரக்கர்கள் அனைவரும் மேலிருந்து கீழே விழுந்தனர்.

அவர்களிடமிருந்து தப்பிய அனுமன் இலங்கை நகர மாளிகைகள்தோறும் எரியும் வாலோடு தாவிச் செல்ல இலங்கை நகர் முழுவதிலும் தீ பரவியது.

தீ பரவியதால் இலங்கையில் நிகழ்ந்த அவல நிகழ்வுகளை நாம் சிலப்பதிகாரக் கண்ணகி மதுரையை எரித்தபோது ஆங்கே நிகழ்ந்தவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சிலம்பின் வென்ற சேயிழை நங்கையான கண்ணகி ”தீத் திறத்தார் பக்கமே சேர்க” என்று அங்கியக் கடவுளுக்கு ஆணையிட்டதால் நல்லோர்கள் தீயின் வாயிலிருந்து தப்பினர். ஆனால், அனுமன் அவ்வாறெல்லாம் யாருக்கும் விலக்களிக்கவில்லை. அதனால் இலங்கையெங்கும் அழல் மண்டியது. இராவணனின் பிரம்மாண்டமான எழுநிலை மாளிகையும் எரியால் அழிந்ததால் அவன் அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. அரக்கர்களோடும் தன் உரிமை மகளிரோடும் மாளிகைவிட்டு வெளியேறிப் புட்பக விமானத்தில் ஏறியவன், தன்னோடு வந்த அரக்கர்களைக் கண்களில் தீயெழ நோக்கி, “உலகங்களை எரித்தழிக்கும் ஊழிக் காலம் வந்துவிட்டதா? அல்லது வேறு காரணங்களால் இலங்கை நகரம் வெந்துவிட்டதா?” எனக் கேட்டான்.

அரக்கர்கள் அவனிடம், ”அரசே! நம்மால் வாலில் எரியூட்டப்பட்ட குரங்கு சுட்டது இலங்கையை” என்றனர். அதுகேட்ட இராவணன், “புன்தொழில் குரங்கின் வலிமையால் இலங்கை எரிந்து சாம்பலானது; நெருப்பு நம் நகரத்தைத் தின்று ஏப்பம் விட்டது; இதனைக் கண்டால் நம்மிடம் தோற்றோடிய தேவர்கள் நகைப்பார்கள்; நம் போர்த்திறமை மிக நன்று!” என்று வெகுளி மேலீட்டால் சிரித்து, ”இலங்கைக்குத் தீங்குசெய்த அந்தக் குரங்கு ஊரைவிட்டு நீங்குமுன் பற்றி வாருங்கள்!” என்று கட்டளையிட்டான்.

அனுமனோடு மீண்டும் போரெதிர்ந்து அவனைப் பற்ற முயன்றனர் அரக்கர்கள்; போரில் அவர்களை அழித்த அனுமன், தான் வைத்த நெருப்பு சீதையிருந்த சோலைப்புறத்தைச் சுடாதது கண்டு நனிமகிழ்ந்து சீதையை நாடிவந்து அவள் அடிதொழுது விடைகொண்டான்.

அனுமன் இருக்கும் தைரியத்தில் இலங்கையை அதுவரை அழித்துவந்த அக்கினி தேவன், அனுமன் அங்கிருந்து புறப்பட்டுவிடவே, அரக்கர்கள் தன்னைக் கண்டால் நிந்தித்துப் பிடித்துச் செல்வர் என்றஞ்சி, ஓடி ஒளிந்துகொண்டான்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

Leave a Reply

Your email address will not be published.