இன்னம்பூரான் சௌந்தரராஜன் (1933 – 2022)

0

வல்லமையாளர் இன்னம்பூரான், 2022 ஜனவரி 15 அன்று மறைந்தார். வல்லமை அன்பர்கள் அனைவர் சார்பிலும் நம் ஆழ்ந்த இரங்கல். அவர் மறைவு குறித்த சில இரங்கல் குறிப்புகள்

முனைவர் நா.கணேசன். அமெரிக்கா

இனிய நண்பர் இன்னம்பூரான், பெருமாள் பக்தர். சுதந்திரப் போராட்டக் காலத்தை நன்கறிந்த மூத்த இணைய நண்பர். அவர் மறைந்துவிட்டார் என நரசையா குறிப்பிட்டார். இன்னம்பர் தேவார ஸ்தலம். அவ்வூரில் உள்ள பெருமாள் கோவில் திருப்பணி இன்னம்பூரான் குடும்பத்தார் ஈடுபட்டனர். ஏழை நிலையில் உள்ள மாணவ மாணவியருக்கு நிறைய உதவினார். ஓய்வு பெற்ற காலத்தில் தமிழில் எழுதத் தொடங்கினார். துணை ஆடிட்டர் ஜெனரல் ஆக மத்திய சர்க்காரில் பதவி வகித்த தமிழர் இன்னம்பூரான். இன்றில்லை. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

அவரது ஜீவிய லட்சியமாக, திரு. வி. க. வாழ்க்கையை ஆய்வாளர்கள் ஆராய வேண்டும் என்றிருந்தது. தமிழக கல்லூரிகளில் Dominant narrative என்னும் வகையில் பெரியார் வாழ்க்கை இருக்கிறது. அவரோடு இயைந்தும், முரணியும் சமகாலத்தினராகிய திரு. வி. க. ஆய்வுகளை ஆழமாகச் செய்து, நூல் படைப்பார் இல்லை. சில குழுக்களில் வரம்பு மீறித் தாக்குதல்கள் வந்தபோதும் அமைதி காத்தவர். ஹரிகி, தேவ், மோகனரங்கன், நா. கண்ணன், சைலஜா, பவளசங்கரி, நான், வினைதீர்த்தான் …. எனப் பலர் கூகுள் குழுக்களில் நிறைய எழுதிய காலங்கள் முடிந்துவிட்டன. நூ.த.லோ.சு, போல, இன்னம்பூரானும் சில ஆண்டுகளாய் எழுதுவதைப் பார்க்க முடிவதில்லை.

“தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்று கின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.” – தேவாரம்.

நயமாக, தம் கருத்துகளை விளக்கும் முறையை இணையத்தில் பலருக்கும் கற்பித்த மூத்த நண்பர் இன்னம்பூரானுக்கு என் அஞ்சலிகள்.

முனைவர் அண்ணாகண்ணன், சென்னை

அடடா, பேரிழப்பு நமக்கு.

சில நாள்கள் முன்பு ஏனோ திடீரென இவரை நினைத்தேன். பேசி நாளாயிற்றே, அழைக்க வேண்டும் என. இந்தச் செய்தி அறிந்து வருந்துகிறேன்.
வல்லமையின் ஆலோசகராகப் பங்களித்தார். ஏராளமான கட்டுரைகள், கருத்துரைகள் வழங்கியவர். தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை, கனம் கோர்ட்டார் அவர்களே, இன்னம்பூரான் பக்கம், பாமர கீர்த்தி……… எனப் பல தொடர்களை வல்லமை மின்னிதழில் எழுதினார். அவருடைய படைப்புகளை இங்கே வாசிக்கலாம்
இங்கிலாந்தில் உள்ளது போன்ற குடிமக்கள் ஆலோசனை மையத்தை இந்தியாவில் தொடங்கலாமா என்பது குறித்து அவருடன் கலந்துரையாடினேன். இதற்காக, நான் பணியாற்றிய சென்னை ஆன்லைன் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆலோசனைகள் வழங்கினார்.
அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டிற்கு என் கட்டுரைச் சுருக்கம் தேர்வுபெற்றது. ஆனால், நேரில் வந்து கட்டுரை வழங்க வேண்டும் என்பதால், செல்ல இயலவில்லை என்றேன். நியாண்டர் செல்வனை எனக்கு அறிமுகப்படுத்தி, இவருடன் இணைந்து கட்டுரை எழுதுங்கள், அவர் நேரில் சென்று கட்டுரை வழங்குவார், இருவர் பெயரிலும் கட்டுரை வெளியாகும் என வழிகாட்டினார். ஆனால், நான் அந்த வாய்ப்பினை முன்னெடுத்துச் செல்லவில்லை.
நாகராஜன் வடிவேல், இன்னம்பூரான் ஆகியோருடன் இணைந்து பெசன்ட் நகரில் ஜிகர்தண்டா அருந்தியது நினைவில் நிற்கிறது.
இ என ஒற்றைச் சொல்லால் அறியப்பட்டார். இனிமை என்பதன் சுருக்கம் அது. அவர் நினைவுகளால் வாழ்வார்.
சி. ஜெயபாரதன், கனடா  
இனிய மேதையின் புனித வாழ்வு மறையாது, மறைந்தது. ஆழ்ந்த இரங்கல் அன்னாருக்கு.
செ.இரா.செல்வகுமார், கனடா
நா. கணேசனின் இரங்கற்செய்தி நல்ல தரவுகளைக் கொண்டுள்ளது.  அவர் எழுதிய தனிமடல்கள் சிலவற்றைப் பகிர முடியாது எனினும் அவருடைய நேர்மையான அன்பான பார்வையை என்னால் உணர முடிந்தது. அவரைப் போன்ற நல்லோர்கள் பெருகவேண்டும். வாழ்க அவர்தம் புகழும் நற்செயல்களும்.
பவளசங்கரி, ஈரோடு

இ ஐயா அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது. மின்தமிழில் இணைந்த ஆரம்பல் காலத்தில் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்து நிறைய தன்னம்பிக்கை அளித்து எழுதுவதற்கான பல கருத்துகளை கூறிக்கொண்டே இருப்பார். பல நேரங்களில் வலியுறுத்தி எழுத வைப்பார். என் எழுத்துலகின் அடுத்த கட்ட நகர்விற்கு ஐயாவும் ஒரு காரணமாக இருந்தவர் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். வெகு நாட்கள் தொடர்பில் இருந்தவர், சமீப காலங்களாக தொடர்பில் இல்லை என்று அவருடைய வலைதளங்களில் சென்று பார்த்தபோதுதான் அவர் இலண்டன் சென்று விட்டதை புரிந்து கொண்டு பின்னூட்டம் போட்டு வந்தேன். ஆனாலும் பதில் இல்லாதது கவலை அளித்தது. வேறு தொடர்பு எண் இல்லாததால் மின்னஞ்சலில் செய்தி போட்டு காத்திருந்தேன். நரசய்யா ஐயாவிடமிருந்து  இப்படியொரு செய்தி வரும் என்று நினைத்தே பார்க்கவில்லை.

திரு கணேசன் ஐயா அவர்களின் உள்ளம் நெகிழச் செய்த இரங்கல் செய்தி மனம் கலங்கச் செய்கிறது.
இ ஐயாவின் உன்னத ஆன்மா இறை நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல எம் இறையை இறைஞ்சுகிறேன். வாழ்க இ ஐயாவின் சேவைகள்.
துளசி கோபால், நியூசிலாந்து
வருந்துகின்றேன் 😔
முனைவர் கண்மணி
ஆழ்ந்த இரங்கல்கள்
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்ஸ்
இன்னம்பூரன் ஐயா அவர்களின் மறைவு தமிழுக்குப் பேரிழப்பு!
அவர் எழுத்துக்களை ஆர்வமுடன் படித்துச் சுவைத்தது உண்டு
நேரில்  பழக்கம் இல்லை எனினும் அவரைப் பற்றி அறிவேன்.
அவர் மறைவுக்கு ஆழ்ந்த  இரங்கல் தெரிவிக்கிறேன் !
அவரான்மா இறைவனின் நிழலில் இளைப்பாறுக!
பார்வதி இராமச்சந்திரன்
ஈடு செய்ய இயலாத பேரிழப்பு…! என் எழுத்துகளையும் படித்து அவரளித்த ஊக்கம் மறக்க முடியாது. இனிமையும் பண்பும் நிறைந்த மாமனிதர்.  தன் ஒவ்வொரு செயலும் பயன் தரத் தக்க வகையில் வாழ்ந்த உன்னதமானவர். சொல்லில் வடிக்க இயலாத வேதனை இது!
தேவ்

ஈடு செய்ய இயலா இழப்பு!

இளைஞர் போல் சுறுசுறுப்பாக இருப்பார்.
கவனப்படுத்திய கணேசர் ஐயாவுக்கு நன்றி.

சொ. வினைதீர்த்தான்

சிறந்த மனிதர் திரு இன்னம்பூரன் சார்.  நல்லறிஞர். ஆர்வத்துடன் குழு உரையாடலில் பங்கெடுப்பவர். பதிவுகளில் பரஸ்பர மதிப்புப் பாராட்டி எழுதுபவர். பல விடயங்கலிலும் ஆழ்ந்த புரிதலுடன் செய்திகளைப் பகிர்ந்துகொள்பவர்.
அழகப்பா பல்கலைகழகத்தில் உரை ஆற்றியுள்ளார். 4, 5 ஆண்டுகளுக்கு முன்னர் காரைகுடி கம்பன் கழக விழாவில் மூன்று நாட்கள் காரைக்குடியில் தங்கியிருந்து பங்கேற்றார். உடன் கழித்த பொழுதுகள் மறக்க முடியாதவை. பழகுதற்குக் குழந்தை போல எளியவர்.  திரு காளைராசன் இல்லத்தில் அன்புடன் தங்கியிருந்தார். அண்மையில் திரு மோகனரங்கன் இழையில் எழுதியிருந்தார். விசாரித்திருந்தார்.
ஒரு கிட்னி தானமளித்து மற்றொரு கிட்னியுடன் நெடிய நாள் வாழ்ந்திருந்து உறுப்புக் கொடைக்கு வழிகாட்டியவர். இன்று அவர் தன்னுடைய உடலையே மருத்துவ மாணவர் கற்றுக்கொள்ள உதவியுள்ளார் என்று நினைக்கும்போது மனம் நெகிழ்கிறது.
நா.கண்ணன், உலகக் குடிமகன்
இன்னம்பூரான் பற்றி எப்போதுமே இனிமையான நினைவுகள்தான். இன்னம்புரான் என முதலில் எழுதப்போய், “ஓய்! நான் பூரான், புரான் இல்லை! என்று சொன்னவர்”  இப்படித்தான் எப்போதும் நகைச்சுவையுடன் பேசுவார். மின்தமிழுக்கும், தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் நிறையப் பங்களித்துள்ளார். எத்தனையோ முன்னெடுப்புகள! எனக்கு மிகவும் பிடித்தது, “பாமரகீர்த்தி” எனும் முன்னெடுப்பு. மெய்கீர்த்திகள் எழுத அரசு இருக்கிறது. நம்மைப் போன்ற பாமரர்களின் கீர்த்தியை எழுத யார் உளர்? எனும் கேள்வி ஆழமானது, புத்திசாலித்தனமானது. ஒருவகையில் யோசித்துப் பார்த்தால் பேஸ்புக் எனும் முன்னெடுப்பு “பாமரகீர்த்திதான்”. நம் கீர்த்தியை நாம் சொல்லிக்கொள்ள ஒரு ஊடகம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். எனவே அது பேஸ்புக் எனும் முகநூல்.  இப்படிப் பல வகையில் சிந்திக்க வைப்பது ”பாமரகீர்த்தி”. அவர் தாம்பரம் அருகில் இருக்குமொரு காலனியில் வாழ்ந்தார். எனது சகோதரியும் அங்கு வாழ்கிறார். அங்கிருக்கும் போதும் பள்ளிச் சிறார்களுக்கு வித்யாதானம் செய்து கொண்டிருந்தார். கடைசியாக தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நிகழ்வில் பங்கு கொண்டு இனிமையான இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். வாழ்ந்த போது ஒரு சிறுநீரகம் தானம். இறந்த பின் முழு உடலும் தானம். அவ்வாறெனில் இன்னம்பூரான் வேறு, வேறு உடல்களில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று பொருள். கேட்டால் இதுவும், “மரணமில்லாப் பெருவாழ்வுதான்” என்று சொன்னாலும் சொல்வார். இனிக்கப் பேசும் இன்னம்பூரான் இனி எங்கு எவ்வாறு பேசுவார் என்பது ஆய்வுப் பொருள்! வாழ்க!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *