புதிய பிள்ளைப்பருவங்கள்-9

மீனாட்சி பாலகணேஷ்
குருகுல வாசம்/ கல்வி கற்றல் (ஆண்பால் பிள்ளைத்தமிழ்)
ஒருவர் தம் வாழ்வில் முந்தியிருந்து சிறப்படைந்து விளங்க, கல்விகற்றல் பெரிதும் இன்றியமையாததாகும். ஆண்மக்களாயின் பழங்காலத்தில் அவர்களைக் குருகுலவாசம் செய்ய அனுப்புவது ஒரு வழக்கமாக இருந்து வந்தது. ஆசிரமத்தில் குருவுடன் தங்கி, அவரும் அவர் மனைவியுமிடும் பணிகளைச் செய்து உதவி, பின் கல்வியையும் கற்றொழுகி, அவற்றிற் சிறந்து வீடுதிரும்புதல் வழக்கிலிருந்து வந்தது.
கிருஷ்ணன் சந்தீபனி முனிவரிடம் கல்விகற்க அவருடைய குருகுலத்தில் இருந்ததைப் புராணங்களில் நாம் குருகுல வாசமாகக் காண்கிறோம். பதின்மூன்று வயதாகும்வரை கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் யசோதையின் செல்லக்குழந்தையாக வளர்ந்த கிருஷ்ணன் கம்சனைக் கொன்று தன்னைப் பெற்ற தாய்தந்தையரான தேவகி, வசுதேவர்களைச் சிறைமீட்கிறான். அதன்பின் வசுதேவர் கிருஷ்ணனுக்கு உபநயனம் செய்விக்கிறார். கிருஷ்ணனையும் பலராமனையும் முறையாகக் கல்விகற்க சந்தீபனி முனிவரின் ஆசிரமத்திற்கு வசுதேவர் அனுப்பி வைக்கிறார் எனவும் அறிகிறோம். இங்குதான் கிருஷ்ணன் பிற்காலத்தில் தன் உயிர்த்தோழனான சுதமா எனும் குசேலரைச் சந்திக்கிறான்.
இவர்கள் கல்விகற்று வந்த நாட்களில் ஒருநாள் குருவின் மனைவியார் அடுப்பெரிக்க, உலர்ந்த விறகினைக் கொண்டுவருமாறு இவர்களிடம் கூற, இவர்களும் காட்டினுள் பயணிக்கின்றனர். விறகினைத் தேடிக்கொண்டு நீண்ட தூரம் சென்றுவிட்டனர். நீண்டநேரமும் ஆகிவிட்டது. மின்னல், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்கின்றது. மழையில் வழி தவறித் தவறான பாதையில் சென்று பயத்துடன் ஒரு மரத்தினடியில் நிற்கின்றனர். இவர்களைக் கிருஷ்ணனே தைரியமூட்டி, கொடிய வனவிலங்குகளிடமிருந்து தப்பிக்க மரக்கிளைகளில் ஏறிக்கொண்டு வாகாக இருக்குமாறு செய்விக்கிறான். பொழுது புலர்ந்ததும் சீடர்களைக் காணாமல் குரு சந்தீபனி முனிவரே கவலைகொண்டு அவர்களைத் தேடிக்கொண்டு கானகத்துள் வந்து அவர்களை ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
கிருஷ்ணனும் பலராமனும் மிகக்குறைந்த காலத்திலேயே, அதாவது அறுபத்தொன்று நாட்களிலேயே தாம் கற்க வேண்டிய அனைத்தையும் கற்றுத்தேர்ந்தனர். குருவின் ஆசிரமத்தை விட்டுச் செல்லும் முன்பு குருதட்சிணையாக அவருக்கு என்ன வேண்டும் எனக்கேட்டு அதனையளிப்பது சீடர்களின் வழக்கம். ஆகவே கிருஷ்ணனும் பலராமனும் சந்தீபனி முனிவரிடம் குருதட்சிணை பற்றி அவரையே கேட்டனர். குருவிற்கு கிருஷ்ணன் திருமாலின் அவதாரம் எனத் தெரியும். நீண்ட நாட்களின் முன்பு கடலில் நீராடச் சென்ற அவரது ஒரே மகனை ஒரு அரக்கன் கடலினுள் இழுத்துச் சென்றுவிட்டான். அவனை மீட்டுத்தர இயலுமானால் அதுவே தாம் வேண்டும் குருதட்சிணை என்றார் குரு.
கிருஷ்ணன் பலராமனுடன் பிரபாச கடற்கரைக்குச் சென்று அங்கு சங்காசுரன் எனும் அசுரனைக்கொன்று அவனால் விழுங்கப்பட்ட சிறுவனை மீட்டு வருகின்றான். சங்காசுரனிடமிருந்து பாஞ்சசன்னியம் எனும் சங்கினையும் எடுத்துத் தனதாக்கிக் கொள்கிறான். தன் மகனைத் திரும்பப்பெற்ற குருவும் பெரிதும் மகிழ்ந்து கிருஷ்ணனையும் பலராமனையும் ஆசிர்வதிக்கிறார் எனப் பல புராணங்கள் கூறுகின்றன.
கற்கவே கசடறக் கல்வியைக் குருவிடம்
சந்தீபனி யாசிரமத்திற்
றந்தைதர மாசற்ற மற்ற சிறாருடன்
மனமகிழ்ந் துறைந்தங்கு
பொற்பாத மலர் பதித்துப் பூமகளின்
துணைவனே! பதுமநாபனே!
பொன்மகள் ருக்குமிணி கேள்வனே! கேசவனே!
பங்கமின்றிக் கல்விச்செல்வம்
பெற்றிடவே பார்த்தனுக் குக்கீதையு ரைத்தகண்ணனே!
பெருமைமிகு அண்ணன்
பலராமனு நண்பன் சுதாமாவு முடனிருக்க
பேரானந்த முடன்கல்வி
கற்றிடவே கருத்துடன் ஆங்கிருந்து ஆசானுமன
மகிழவவர் மனையாளும்
தமக்கிட்ட பணிகளைச் சிறக்கச் செய்து
குருகுலத்தே இருந்தவனே! 1.
————
பங்கமின்றிக் கற்றகல்வி பலித்திட ப்
பக்குவமாய்ப் பாடம்சொன்ன குருவுக்காகப்
பரிவுடனே காணிக்கை யளித்திடவே
பாங்காகப் பரந்தாமன் வினவிடவே
துங்கமுனியும் தவமிருந்து பெற்றமகன்
தன்னை யொருகட லரக்கன்
கவர்ந்து சென்றதைக் கவலையுடன்
கூறிடவே கண்ணன்பல ராமனுடனே
பொங்கிடும லைகள்புரண்டெ ழும்பெருங்கடலுள்
புகுந்தே யக்கடலினிடை புதுமையாகவே
பஞ்சசன்னிய வரக்கன்றன்னைப் பங்கஞ்செய்து
புங்கவரின் புதல்வனை மீட்டெடுத்தச்
சங்கமதனைக் கைப்பெற்று சாதனைசெய்து
சயத்துடனே குருவினிடம் வந்தடைந்தான்
சாகசஞ் செய்துமீட்ட சிறுமகனை
சந்தீபனி முனிமகிழக் கொடுத்திட்டான். 2.
———————-
சொற்ப தினமான பத்தாறு நாட்களிலே
அற்பு தமாய்க் கற்றகல்வி அருமையாகவே
கற்ப துவுங்கேட்ப துவும்பலித மாகவே
பற்ப நாபன் திருவடிகள் பணிந்திடுவமே! 3.
——————-
இப்பாடல்களில் கிருஷ்ணன் குருகுலவாசம் செய்து கல்வி கற்றதனைக் கண்டோம்.
இத்தகைய பிள்ளைப்பருவங்கள் காண்போர் கருத்திற்கேற்பவும், எண்ணுவோர் எண்ணத்திற்கிணங்கவும் இன்னும் பலவாகக்கூட இருக்கலாம். கடந்த ஒன்பது அத்தியாயங்களில் என் அறிவிற்கெட்டியவாறு நான் சிந்தையில் எண்ணிக் களித்த பருவங்களைப் பாடிக் களித்தேன். பகிர்ந்தும் கொண்டேன். இத்துடன் இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன். படித்து ரசித்த வாசக உள்ளங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.