Blog

  • நம்பிக்கை… அதானே எல்லாம்!

    அன்பு நண்பர்களே,

    154802_391620084268266_1265729100_nநம் வல்லமை குடும்பத்தில் நம்மோடு இணையும் முனைவர்.நா.சங்கரராமன் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பேராசிரியர் பணியில் 8 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல்வேறு இதழ்களில் தன்னம்பிக்கை குறித்த கட்டுரைகளை எழுதியும் வருகிறார். தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், புதுமைப்பித்தன் ஆகியோர் பயின்ற பெருமைமிகு நெல்லை ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் முடித்து தமிழ் மீது கொண்ட மோகத்தால் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை தமிழிலே முடித்தவர்.

    கல்லூரிக் காலங்களில் பொருநை எனும் மாணவ இதழைத் திறம்பட நடத்தி பலரின் பாரட்டுகளைப் பெற்றவர். பேச்சு,கட்டுரை, கவிதை போன்ற துறைகளில் சிறந்து விளங்கி தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவில் பரிசுகளை நிரப்பி பாராட்டுக்களைப் பெற்றவர். மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை விதைகளை தினந்தோறும் தூவி வருபவர்.

    தற்போது எஸ்.எஸ்.எம். சமுதாய வானொலியில் நாளொரு கதை, உன்னாலும் முடியும் என்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பேசி வருபவன். உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள், நினைவுகள் (கவிதைத் தொகுப்பு) முதலான நூல்களைத் தொடர்ந்து மூன்றாவது நூலான “வெற்றிகள் விற்பனைக்கு அல்ல” என்ற நூலினை கடந்த 2012 ஆகஸ்டு மாதம் கோவை விஜயா பதிப்பகத்தார் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளனர்

    அன்புடன்
    ஆசிரியர்

    ‘‘ நீ பிறப்பதற்கு முன்பே

    உன் உணவிற்காக

    உன் தாயின் மார்பகங்களில்

    பாலினைச் சுரக்கச் செய்தவன் இறைவன்…’’

    -யாரோ.

    நம்பிக்கை தரும் வரிகள் இவைகள். இந்த உலகம் நம்பிக்கை எனும் வார்த்தைகளால் மட்டுமே சுழன்றுகொண்டிருக்கிறது என்பதை ஞாபகப்படுத்தும் வரிகள். இந்த பூமியில் நாம் பிறப்பதற்கு முன்பே நமக்குத் தேவையான எல்லாவற்றையும் படைத்தவன் இறைவன் என்ற நம்பிக்கை விதைகளை நம்மிடையே விதைக்கும் வரிகள். அடுத்த நகர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் மனிதனையே வெற்றியும் எதிர்கொள்கிறது. நல்ல நம்பிக்கைகள் ஒருபோதும் தோற்பதில்லை என்பதே வாழ்ந்துகாட்டிய மகான்கள் நமக்கு விட்டுச் சென்ற உண்மையாகும்.

    சமீப காலமாக தொலைக்காட்சிகளில் அடிக்கடி பார்க்கும் விளம்பரம்… பிரபல நகைக்கடை ஒன்றிற்கு இளையதிலகம் பிரபு வரும் விளம்பம் அது. ஆதில் அவர் கூறும் வார்த்தைகள்தான் எனக்கு இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. அந்த உற்சாகம் தரும் வார்த்தைகள்தான் நம்பிக்கை அதானே எல்லாம் ..

    நம்மில் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நம்பிக்கை இருக்கும். அவை நல்ல நம்பிக்கைகளாக இருக்க வேண்டும். நேர்மறை நம்பிக்கையாக இருக்கவேண்டும். சமீபத்தில் எனக்கு ஒரு திருமணப்பத்திரிக்கை வந்தது. நண்பரின் திருமணம்… தேதியை பார்த்ததும் அசந்துபோனேன். நீங்களும் அசந்துபோவீர்கள். திருமணம் நடக்கும் நாள் 21.12.2012. உலகமே அழிந்து விடும் என்று அவநம்பிக்கைவாதிகள் குறித்த தேதி அது. உடனே நண்பருக்கு தொலைபேசியில் இரண்டு வாழத்துக்களைத் தெரிவித்துக்கொண்டேன். முதல் வாழ்த்து அவனின் திருமணத்திற்கு… இரண்டாவது வாழ்த்து அவன் தேர்ந்தெடுத்த நாளுக்காக… வணிக விஞ்ஞானிகளைப் புறம்தள்ளிய அவனது நம்பிக்கைக்காக… உலகமே பயந்து ஒதுக்கிய அந்த நாளை நம்பிக்கையோடு தன் வாழ்க்கையைத் தொடங்க முடிவெடுத்த அந்த நண்பரைப்போல நம்பிக்கையுடையவர்களால்தான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது.

    “அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். நமக்கெல்லாம் இது நடக்குமா?”.. நம்மோடு இருக்கும் சிலரின் முணுமுணுப்புகளை நாம் கேட்டதுண்டு. நம்பிக்கை இழந்து பேசும் நண்பர்களைப் பார்க்கும்போது சற்று வருத்தமாக இருக்கும். தனது இயலாமையை வெளிப்படுத்த அவர்களுக்குக் காரணம் வேண்டும் இல்லையா?… அந்த காரணம்தான் முணுமுணுப்பாக வெளிவருகிறது. தயவு செய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்திவிடுங்கள்.

    வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்குக் கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு வருகின்றன. வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது?.

    இளைப்பாறுதல் தேவைப்படும்போதெல்லாம் மரக்குச்சியை கடலின்மேல் மிதக்கவிட்டு அதன்மேல் அமர்ந்து ஒரே சிந்தனையோடு தனது இலக்கை நோக்கி பயணம் செய்யும் பறவைகள் நமக்கு நம்பிக்கையைக் கற்றுத்தந்து விடுகிறது.

    நேர்மறைச் சிந்தனைகளை விட எதிர்மறைச் சிந்தனைகளே நம்மில் பலருக்கு அதிகம். “கடைக்குப் போய் சாமான் வாங்கிட்டு வாடா” என்றால் “கடை பூட்டியிருந்தால் என்ன செய்ய?” என்ற சாதாரண கேள்வியில் இருந்தே தொடங்குகிறது நமது எதிர்மறைச் சிந்தனைகள்.

    ஒரு சிறிய கதை உங்களுக்காக…

    கனவுகளைச் சுமந்து நிற்கும் இளைஞன் அவன். சிறுவயதில் இருந்தே அவன் எதிர்மறைச் சிந்தனைகளாலும் சீக்குப்பிடித்த செயல்பாடுகளாலும் நிரம்பி காணப்பட்டவன். “நான் படிச்சு என்ன செய்யப்போறேன்..? இதுவரைக்கும் படிச்சவன்லாம் என்ன பண்ணிட்டான்?..” இந்த வசனங்களைப் போலான வசனங்களை அடிக்கடி பேசுபவன். “நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்” என்ற பி.எஸ்.வீரப்பாவின் வசனங்கள்தான் அவனுக்கு மிகவும் பிடித்தவை. சுருக்கமாகச் சொன்னால் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் கொண்ட இளைஞன் அவன்.

    வீட்டில் யார் எது சொன்னாலும் கேட்பதில்லை. நல்ல விசயங்கள் எல்லாம் அவனது ஒரு காது வழியே புகுந்து மறு காது வழியே வந்து விடும். இவனை என்ன செய்யலாம் என்று யோசித்து விட்டு நிறைவாக ஒரு குருவிடம் அழைத்துச் சென்றார் இளைஞனின் தந்தை. “குருவே ! இவனை நீங்கள் தான் மாற்ற வேண்டும். எதைச் சொன்னாலும் எதிர்மறையாகவே செய்கிறான்” என்றார். குருவோ சற்று நிதானமாகக் கேட்டு விட்டு “இந்த உலகத்தில் யாரும் யாரையும் திருத்த முடியாது. தவறுகளை உணரச் செய்வதன் மூலமே ஒருவரை மாற்ற முடியும். இவனின் தவறுகளை உணர வைக்க முயற்சி செய்கிறேன். உங்கள் மகனை என்னிடம் இரண்டு நாட்கள் விட்டுவிடுங்கள். திரும்பி வரும்போது திருந்தி வருவான்” என்றார்.

    மறுநாள் வழக்கம்போல்தான் விடிந்தது. குரு அந்த இளைஞனை அழைத்தார். “மகனே! இன்று உனக்கு ஆசிரமக் கூரைகளை வேயும் பணியினைத் தருகிறேன்” என்று கூறிவிட்டு கையில் ஒரு பெரிய உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தார். “இந்த உணவுப் பொட்டலத்தை வைத்துக்கொள். நீ சாப்பிட்ட பின்பு மீதமுள்ளதை உன் இடையில் கட்டி தொங்கவிட்டுக்கொள். எந்தக் காரணம் கொண்டும் அதனை கீழே வைத்துவிடாதே. நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்”, என்று சொல்லிவிட்டு வெளியிலே சென்று விட்டார். இளைஞனும் தன் வேலையைத் தொடங்கினான். காலை உணவு நேரம் வந்தது. பொட்டலத்தைப் பிரித்தான். சாப்பிட்டுவிட்டு மீதமுள்ளதைப் பொட்டலமாகக் கட்டி தன் இடையில் தொங்கவிட்டு விட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

    மதிய நேரமானது. பசிக்க ஆரம்பித்தது. மீண்டும் பொட்டலத்தைப் பிரித்தான். வெயில் அதிகமான காரணத்தாலும் ஏற்கனவே சாப்பிட்ட உணவு என்பதாலும் உணவு கெட்டு துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்தது. பசிதான்… கெட்டுப்போன உணவினைச் சாப்பிட முடியவில்லை. தண்ணீர் அருந்திவிட்டு வேலையைத் தொடர்ந்தான். சிறிது நேரத்தில் குரு அங்கே வந்தார். இளைஞனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. பொட்டலத்தை கொடுத்துவிடலாம் என்று குருவை நெருங்கினான். குருவோ பொட்டலத்தை வாங்கவில்லை. “வைத்திரு.வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

    மாலை நேரம் வந்துவிட்டது. துர்நாற்றம் அதிகமாகியது. கொசுக்களும் ஈக்களும் பொட்டலத்தை சுற்றின. இரவு வந்தது. குரு வரவில்லை. துர்நாற்றமும் கொசுக்களும் அவரைத் தூங்கவிடவில்லை. இரவு முழுவதும் தூங்காததால் காலையில் குருவை எதிர்பார்த்தான். குரு வந்தார். “குருவே! இதை வாங்கிக் கொள்ளுங்கள். இனி ஒரு நிமிடம் கூட இந்த பொட்டலத்தைத் தூக்க முடியாது” என்றான். குருவோ நிதானமாக “இதை ஏன் நான் வாங்கிக்கொள்ள வேண்டும்?” என்று கேட்டார். இது கெட்டுப்போன உணவுப்பொட்டலம். துர்நாற்றம் வருகிறது. என்னால் சுமக்க முடியவில்லை’’ என்றான் இளைஞன்.

    குரு இளைஞனுக்கு கூறிய பதிலில்தான் இந்தக்கதையின் அர்த்தமும் நம் வாழ்க்கையின் அர்த்தமும் அடங்கியுள்ளது. குருவின் பதில் ‘‘கெட்டுப்போன உணவினை உன்னால் ஒருநாள் கூட சுமக்கமுடியவில்லை. 20 வருடங்களாக கெட்டுப்போன மனதினை எப்படிச் சுமந்து கொண்டிருக்கிறாய். உடனடியாக அதனை அகற்றி எறி..” என்பதுதான்.

    தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.. நம்மில் எத்தனை பேர் இவ்வாறு இருக்கிறோம் என்று மனசாட்சியோடு எண்ணிப் பார்ப்போம். குப்பைகளைக் கொட்டி வைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே உலகம் தேடுகிறது. விரும்புகிறது. மனதினை அவ்வப்போது உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் அடைய முடியாத இலக்கு என்று எதுவும் கிடையாது. தகுந்த பயிற்சியும் இடைவிடாத முயற்சியும் இருந்தாலே எட்ட முடியாத இலக்கையும் எளிதில் அடையலாம் என்பதே சாதனையாளர்கள் நமக்கு விட்டுச்சென்ற பாடமாக அமைகிறது.

    நம்மில் பலருக்கு விழிப்பதற்கும் எழுவதற்குமே அதிக இடைவெளி உள்ளது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டியுள்ளது. காலையில் எழும்பும்போது மனதிற்கும் உடலிற்கும் இடையிலே ஒரு பெரிய சண்டையே நிகழ்கிறது. “காலைல சீக்கிரமே எழுந்திருச்சா படிக்கலாம். உடற்பயிற்சி செய்யலாம்….” என்று மனம் பலவற்றைச் சொல்கிறது.

    உடலோ “நல்லா குளுருது. இப்போ எழுந்திருச்சு என்ன சாதிக்கப்போறோம்?. அதெல்லாம் எழுந்திருச்ச பிறகு பார்த்துக்கலாம்… இல்லை நாளைல இருந்து சீக்கிரமா எழுந்திருக்கலாம்” என்று சொல்லும். மனம் சொன்ன படி நடந்தவர்கள் எல்லாரும் சாதனையாளர்களாக மலர்ந்துள்ளார்கள். உடல் சொன்ன படி கேட்டவர்கள் சராசரி மனிதர்களாக வாழந்து(?)கொண்டிருக்கிறார்கள்.

    இதில் நீங்கள் எந்த வகை என்பதை உங்கள் மனசாட்சியைக் கேட்டு முடிவு செய்யுங்கள்.

    நல்ல நம்பிக்கையோடு செயல்படும் அனைவருமே சாதனையாளர்களாக மலர்ந்துள்ளார்கள் என்பதே சரித்திரம் நமக்குத் தரும் பாடமாக உள்ளது. நம்பிக்கையோடு செயல்படுங்கள் … வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.

    நல்லவர்களிடம் பேசும்போதே

    நம்பிக்கை பிறந்துவிடுகிறது

    Share
  • மறுஜென்மம்

    நீச்சல்காரன்

    எடை கனமானாலும், வலுயில்லாததாக, தன்னால் மரபணு மாற்றப்பட்ட  மரத்துக் கட்டையால் அடிவாங்கியதால், பலமான காயமின்றி எழுந்த ஹான்ஹி வினித்தைத் தேடத் தொடங்கினார். மூலிகையின் வாசனை வழியே பயணிக்கத தொடங்கினார். தனது மூன்று மாதத் திருவிளையாடலின் பயனாக அந்த அபூர்வ மூலிகை வேர்களைக் கையாடல் செய்துவிட்டு, தனது திட்டப்படி இரகசிய இடம் நோக்கி மலை முகடுகளில் பயணித்துக் கொண்டிருந்தான் வினித்.
    யாரிந்த வினித்? கரட்டூர் கானதன்யாசி என்ற ஜோசியரின் வாக்குப்படி பெரிய அரண்மனையில், தன் இனத்திற்கே தலைவனாக இருந்தவனின்  மறுஜென்மம் தான் வினித்தாம். இந்த ஜென்மத்திலேயே முன்ஜென்மம் எடுக்கப் போகிறானாம். ஆனால் இதை எல்லாமல் துளியும் நம்பாத வினித்,  இந்திய மக்கள் தொகைக்  கணக்கின் படி  ஒரு மனைவி, மூன்று மகன்கள், நான்கு சகோதரிகள், இரண்டு தம்பிகள் என்று பெரிய குடும்பத்தின் மூத்த மகன். ஏறக்குறைய அனைத்துத் தொழில்களையும் முயன்று தோற்று, கடன்பட்டு, கஷ்டப்பட்டு, அடிபட்டு, ஊரைவிட்டு ஓடிவந்தவன். ஹான்ஹி என்ற சீன மருத்துவருடன் முதுமலைக் காட்டில் இதுவரை வசித்து வந்தான். ஹான்ஹி ஒரு இயற்கை மரபியல் ஆய்வாளர், எளிய மொழியில் சித்தர் என்றே சொல்லிவிட்டுப் போகலாம். தாவரங்கள் அல்லது விலங்குகளின் மரபணுக்களைச் சீண்டி புதிய குணங்களைக் கண்டுபிடிப்பதில் வல்லவர். வேப்ப மரத்தில் மாஞ்சுவையுடன் வேப்பங்கனிகள் உருவாக்குவார்;  மாமரத்தில் வேப்பஞ்சுவையுடன் மாங்கனிகள் உருவாக்குவார்; எளிதில் உரிக்கக்கூடிய தேங்காய், காரமான பாவற்காய்  என எவ்வளவோ செய்வார். ஆக ஒரு உயிரின் குணத்தையோ உருவத்தையோ மாற்றும் கலையில் கைதேர்ந்தவர். ஆனால் வெளியாட்களுடன் அவ்வளவாக பழகாதவர். முன்பு ஒருமுறை கள்ளக் கடவுச்சீட்டு பெற்று தான் நாடு கடக்க உதவிய  ஒரே காரணத்திற்காக வினித்தைத் தன்னுடன் இருக்க அனுமதித்தார்.

    வேறு வழியற்ற வினித்தும், தனது ஊருக்கே தெரியாமல் இவருடன் காட்டில் வசித்து வந்தான். ஹான்ஹி உடன் இருந்தபோது ஏதேனும் சூரணம், லேகியம் போன்று கற்றுவிட ஆசைப்பட்டான். முடியவில்லை. மாந்திரம், மாந்திரீகம், வசியம் என்றும் ஏதும் அமையவில்லை. பப்பாளி மரத்தில் தக்காளி பறிப்பது, ஆலமரத்தில் நாவல் பழம் பறிப்பது, சர்க்கரைப் பாறையிலிருந்து சர்க்கரை சுரண்டுவது, பேசும் குரங்கிடம் அடிவாங்குவது என்றே காலம் நகர்ந்தது. அந்த ஜோசியர் சொன்னதும் அவ்வப்போது இவன் நினைவுகளில் வந்து சென்றது. இறுதியாக ஒரு நாள் ஒரு உண்மை தெரிந்தது, ஹான்ஹி என்பவர் போன ஜென்மத்தில் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு சித்தராம், ஒரு அரிய மூலிகையின் பயனாக பழைய ஞாபகங்கள் மீட்கப்பட்டு மீண்டும் அதே தமிழ்நாட்டிற்கே வந்தவராம். இதைச் சற்றும் எதிர்பாராத வினித் விண்ணைத் தாண்டுமளவிற்குத் துள்ளல் கொண்டான். ஒரு மாசி மாத மாலை நேரத்தில் மண்டையைத் தடவியவாறே மல்லாந்து ஹான்ஹி படுத்திருந்த வேளையிலே, கட்டையால் கபாலத்தில் அடித்து அந்த மூலிகையைக் கைப்பற்றினான் என்பதே வினித்தின் முன்கதை. ஹன்ஹி வினித்தை நோக்கியும், வினித் இரகசிய இடம் நோக்கியும் ஓடிக் கொண்டிருக்க வானம் இருள் வசமானது.

    அந்த மூலிகையைக் குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் பழைய ஜென்மத்து உருவம் கிடைக்குமாம் மீண்டும் ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் உண்டால் இந்த ஜென்ம உடலை மீண்டும் பெறலாமாம். இதை நினைத்துக்கொண்டே வரவேண்டிய இடத்தை அடைகிறான் வினித். இராமசாமி பண்ணையாருக்கு ரெண்டு லட்சம், கருப்பாயி பேரனுக்கு ஒண்ண்ரை லட்சம், மனைவிக்கு அஞ்சு பவுன், தங்கைகளுக்கு மூணு பவுன், மகனுக்கு சைக்கள், கடைசியாக ‘உன் இனத்திற்கே தலைவன் என்று சொன்ன’ ஜோசியக்காரனுக்கு ஒரு பட்டு வேஷ்டி சட்டை என்று விருப்பப் பட்டியலையும் தயாரித்து முடித்தான். கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு,  எடுக்கப் போகும் ஜென்மத்தில் இந்த ஜென்ம ஞாபகங்கள் மறக்கக் கூடும் என்று யூகித்து, வேண்டிய குறிப்புகளைத் தெளிவாக காகிதத்தில் எழுதிக் கொண்டான். மூலிகையைப் பக்குவப்படுத்த தொடங்குகிறான்.  காபி இராகத்தில் பாடல் பாடிக் கொண்டே காபியைக் குடித்துக் கொண்டிருந்த வேளையிலே ஒரு ஞான உதயம். முன் ஜென்மத்தில் ஹான்ஹியைப் போல வேறு நாட்டில் பிறந்துவிட்டால் என்றும் யூகித்து, பல மொழிகளில் தான் யார் தனது குடும்பம் எங்கே உள்ளது எப்படி இப்படியானேன் என எழுதி வைத்துக் கொண்டான். எல்லாம் தயார் நிலையில் இருந்தது, சூரிய உதயம் வானைப் பிளந்தது. ஹான்ஹி எப்படியும் நம்மைப் பின் தொடர்வார் என யோசித்து, அவர் கண்ணில் பட்டுவிடக்கூடாது, விரைவில் முன்ஜென்மம் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் சீக்கிரமாக மூலிகைகளை உண்ணத் தொடங்கினான். கையில் காகிதங்களுடன், கண்கள் உருட்டி மயங்கி விழுந்தான். உலகம் இருண்டது…

    *                                   *                         *                                        *
    ஹான்ஹி இறுதியாக மூலிகை வேர் இருக்கும் இடத்தை அடைந்து எஞ்சியிருந்த வேர்களை சேகரித்தார், அவரருகே வினித்தின் உடையை மாற்றியவாறு இருந்த ஒரு கழுதையைக் கண்டார். ஏதோ அரண்மனைக் கழுதை போல, கழுதை இனத்திற்கே உரிய கம்பீரத்துடன் இருந்த அக்கழுதை ஏதோ பல்வேறு மொழியில் எழுதப்பட்ட காகிதங்களை மென்று கொண்டிருந்தது.!

    Share
  • மகாபாரத முத்துக்கள்!

    புவனேஷ்வர்

    வியாசர் இயற்றிய மகாபாரதத்தில் இருந்து எனக்குப் பிடித்த சில சுவையான பகுதிகளை “மகாபாரத முத்துக்கள்” என்ற பெயரில் கடந்த ஓராண்டாக எழுதி வைத்துக்கொண்டு வருகிறேன். அவற்றை வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வியாசர் சொன்னதைத்தான் தமிழில் ஓர் கதைசொல்லியாக சொல்லுகிறேன். மொழிபெயர்ப்பு + கதைசொல்லல் என்று கூட சொல்லிவிடலாம்.

    பாரத நாட்டுக்கே உரிய பண்பாடு, நாகரிக கோட்பாடுகள் ஆகியவை அந்நாளில் எங்ஙனம் இருந்தது என்பதை இக்காலத்தில் உள்ளோர் அறிந்து கொள்ள இவை உதவும். வெறும் கதையாக இல்லாமல் வாழ்வியல் நெறிகளையும் குறைவறக் கூறும் பண்டை நூற்கள் உற்ற தோழர்களே.
    முதல் பாகமாக, பூரிசிரவஸ் வதம் என்னும் பகுதியைக் காணலாம். இது நான்கு பாகங்களாக வரும். ராமாயணத்தில் வாலி வதம் போல மகாபாரதத்தில் பூரிசிரவஸ் வதம் சர்ச்சைக்குரிய ஒன்று (அபிமன்யு வதம் தார்தராஷ்டிரர்கள் பண்ணினது. இது பாண்டவர் பக்கம் செய்த ஒன்று).

    அதில் முதல் பாகம் – துரோணரின் அறிவுரை:

    அன்புடன்,
    புவனேஷ்வர்

    மகாபாரத முத்துக்கள்: பூரிசிரவஸ் வதம் – பகுதி 1 – துரோணரின் அறிவுரை!

    அபிமன்யு அநியாய விதமாக ஜயத்ரதனால் கொல்லப்பட்டதை அறிந்த அருச்சுனன் ரௌத்ராகாரமாக “நாளை மாலைக்குள் ஜயத்ரதனை கொல்வேன்; அவன் உயிருக்குப் பயந்து ஓடியோ, அல்லது தரும புத்திரரிடமோ க்ருஷ்ணணிடமோ சரண் அடைந்தாலோ அன்றி, நாளை மாலைக்குள் அவன் உயிரை காண்டீபம் குடிக்கும். இல்லையேல் ஜொலிக்கும் தீயினில் பாய்ந்து மகன் சென்ற உலகுக்கு நானும் செல்வேன், இது சத்தியம்” என கோரமான சபதம் பண்ணினான்.

    ஜயத்ரதனை முடிக்க முனைந்து அருச்சுனன் சென்றான். வில்லை இரு கைகளாலும் பிடித்து இடது கையாலும் அம்பெய்யும் திறமையை பெற்றவன் அர்ஜுனன் (சவ்யசாசி) என்று எல்லாரும் அது நாள் வரை கேள்விப்பட்டுத்தான் இருந்தார்கள். அன்று தான் கண்கூடாக பார்த்தார்கள்.

    இது வரை பதின்மூன்று நாட்கள் யுத்தத்தில் கூட, அருச்சுனன் வந்தால் எவரும் அவன் முன்னால் நிற்க முடியாது என்ற நிலை இருந்தது தான். வாய் திறந்த அந்தகனை போல அவன் எதிரிகளுக்குக் காட்சி தந்தான். ஆனால் அதுவரை கௌரவப்படை கண்ட அருச்சுனன் ஒன்றுமே இல்லை என்று ஆக்குவது போல அன்று காண்டீபம் தன் முழுப்பண்பையும் காட்ட ஆரம்பித்தது. பாணங்களை எடுப்பதும் தொடுப்பதும் விடுப்பதும் கண்ணுக்குத் தெரியவில்லை. அர்ஜுனனின் வில்வன்மையும் கண்ணனின் சாரத்யமும் சேர்ந்து, பயம் கொண்ட கௌரவப்படைகளுக்கு ஒரு அர்ஜுனன் அல்ல, நூறு நூறு அருச்சுனர்கள் தெரிய ஆரம்பித்தார்கள். “இதோ அருச்சுனன், இதோ விஜயன்” என கத்தி தங்களுக்குள்ளேயே வெட்டி மடிந்து பைத்தியம் கொண்டவர்கள் போல அப்படை குலைய ஆரம்பித்தது.

    யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சகாயம் செய்ய சாத்யகி போகிறான். வருஷ்ணி குலத்தவனும் அருச்சுனனின் உயிர் நண்பனும், சீடனும் ஆவான் சாத்யகி. அர்ஜுனனை மிஞ்சும் அளவுக்கு வில் வன்மை கொண்டவன் என வியாசர் அவனை புகழ்வார். துரோணருடன் புரிந்த போரில் அவரிடமே பாராட்டு பத்திரம் வாங்கின வீரன். போரில் அவர் வில்லை ஒரு அம்பால் உடைத்தான் சாத்யகி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அடுத்த வில்லை பிடித்து நின்றார் ஆசாரியர். அடுத்த கணம் கழுகு இறக்கைகள் பூட்டிய அம்பு ஒன்று அந்த வில்லை கைப்பிடியில் துண்டாக்கியது. அடுத்த வில்லை நாணேற்றினார் துரோணர். நாணேற்றும் போதே அதுவும் உடைந்தது. அதற்கு அடுத்த வில்லை நாணேற்ற கூட நேரம் தராமல் சாத்யகி ஒரே அம்பால் சேதித்தான். இப்படி தொண்ணூற்றாறு விற்களை ஆசாரியர் எடுக்க எடுக்க எடுத்ததும் உடைத்தான் யாதவ குல வீரன். பின் நடந்த யுத்தம் மயிர்க்கூச்செறியும் படி நடந்தது. இவன் சாதாரணமானவன் அல்ல என திவ்ய அஸ்திரங்களை விடுத்தார் பிராமணர். பயப்படாமல், அவர் பிரயோகித்த ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் பதிலடி கொடுத்தபடி சளைக்காமல் போரிட்டான் சாத்யகி. “யுத்தத்தில் இந்த சாத்யகி ஸ்ரீ ராமனையும், பரசுராமனையும், அர்ஜுனனையும், கார்தவீரியார்ச்சுனனியும் போல போர் புரிகிறான். அவர்களின் வில்வன்மையை நான் இவனுடன் காண்கிறேன்” என்று ஆசாரியார் மகிழ்ந்து பாராட்டினார். எதிரியாக வந்தாலும் வீரனின் மித்தையை ரசித்து பாராட்டும் ஆசாரியரின் உயர்ந்த பண்பு தான் என்னே! சஞ்சயனும் “இன்றைய உலகில் ஸ்ரீ கிருஷ்ணனும், அருச்சுனனும், சாத்யகியுமே சிறந்த வில்லாளிகள். நான்காவது யாரும் கிடையாது” என கண்ணிழந்த மன்னனிடம் பாராட்டினான்.

    அந்த சாத்யகி யுத்தத்தில் அதாகதம் பண்ணுகையில் அவனை எதிர்க்க கர்ணன் சென்றான். தோற்றான். கர்ணனை தான் கொல்வதாக அர்ஜுனனின் சபதத்தை நினைத்து அவனை கொல்லாமல் அனுப்பினான் சாத்யகி. க்ருதவர்மன் சென்றான். மயங்கி கிடந்தான். சில பல வீரர்கள் சென்றார்கள். சென்ற வேகத்திலேயே யமனுக்கு விருந்தாளியாக சென்றார்கள்.

    பின்னர் துச்சாதனன் போனான். கொஞ்ச நேரம் யுத்தம் நடந்தது. கர்ணனையும் துரோணரையும் தோற்கடித்த சாத்யகிக்கு துச்சாதனனை கர்வபங்கம் பண்ண அதிக நேரம் பிடிக்குமா என்ன? தேரிழந்து வில்லிழந்து ஆயுதங்கள் அழிந்து புறங்காட்டினான் துச்சாதனன். பீமனின் சபதத்தை எண்ணி அவனை உயிரோடு விட்டான் சாத்யகி.

    ஓடி வந்தவன் நேரே துரோணரிடம் வந்தான். அவனை துரோணர் நன்றாக திட்டி, சமாதானம் பண்ணிக்கொள், இப்போதும் கூட ஒன்றும் பாழாகவில்லை என கூறினார். போர்க்களத்தின் நடுவே துரோணர் உபதேசித்த வார்த்தைகள் இனி. வருபவை. இவை வியாசரின் வார்த்தைகள். தமிழ் நடைக்கு மட்டுமே நான் பொறுப்பு!

    “துச்சாதனா, ஏன் இந்த ரதங்கள் சிதறி ஓடுகின்றன? அரசன் நலம் தானே? சிந்து தேசத்தரசன் ஜெயத்ரதன் நலம் தானே? நீ ஒரு இளவரசன். நீ ஒரு அரசனின் சகோதரன். நீ ஒரு தேர் வீரன் தானே? ஏன் இப்படி யுத்தத்தில் பயந்து புறங்காட்டி பறந்தோடி வருகிறாய்? யுத்தத்தில் ஜெயித்து நீ இளவரசனாக வேண்டியது தானே?

    முன்னொரு நாளில் நீ பதிவ்ரதையான குற்றமற்ற திரௌபதியிடம் சொன்னாயே நினைவிருக்கிறதா? “சூதாட்டத்தில் ஜெயிக்கப்பட்ட நீ எங்கள் அடிமை, உன் கணவர்களுக்கு கட்டுப்படாமல், உன் கற்பை கழற்றி வீசி விட்டு துரியோதனனின் ஆடைகளை சுமந்து வா; உன் கணவர்கள் இறந்து விட்டவர்களுக்கு சமம், விதை அற்ற எள்ளுக்கு சமானமான அற்பர்கள் உன் கணவர்கள்” என கூசாமல் தைரியமாக அந்த பெண்ணிடம் சொன்னாயே, இப்போது ஏன், ஓ துச்சாதனா, யுத்தத்தில் தைரியம் கெட்டு மானமில்லாமல் ஓடி வருகிறாய்?

    நீ தானே இந்த கொடும் பகையை பாண்டவர்களுடனும் பாஞ்சாலர்களுடனும் மூட்டி விட்டாய்? மூடனே, இப்போது சாத்யகியை கண்டே தொடை நடுங்குகிறாயே? அன்றைக்கு உருட்டிய பகடைகள் சட்டை உரித்த விஷ சர்ப்பங்களை ஒத்த கூரிய அம்புகளாக உருமாறி தாக்கும் என உனக்கு அன்று புரியவில்லையா?

    ஒரு குற்றமும் அறியாத பாண்டவர்களை கேவலமான பல வார்த்தைகளால் சகோதரர்கள் எனவும் பாராது திட்டியவன் நீதானே?

    பாஞ்சாலியின் துயரங்கள் உன்னையே வேராக கொண்டவை. அன்று காட்டிய உனது மமதையும் கர்வமும் இப்போது எங்கே? அன்று பாண்டவர்களை சீண்டிய நீ இப்போது ஏன் புறங்காட்டி ஓடுகிறாய்?

    பயந்து போன இந்தப் படைகளை காக்காமல் ஏன் நீயே ஓடி வருகிறாய்?

    சாத்வத குலத்தை சேர்ந்த சாத்யகி ஒருத்தனை கண்டே உன் மனம் கோழைத்தனத்தை அடைந்து விட்டதே, நீயெல்லாம் காண்டீபத்தை கண்டால் என்ன செய்வாய்? பீமசேனனை கண்டால் என்ன செய்வாய்? இரட்டையர்களை (நகுல சகாதேவர்களை) கண்டால் என்ன செய்வாய்?

    நீ கண்டு பயந்து ஓடி வந்தாயே, அந்த சாத்யகி எய்த அம்புகள், சூரியனைப் போல யுத்தத்தில் எரிக்கும் அருச்சுனன் கையில் உள்ள காண்டீபத்தில் இருந்து வெளிப்படும் அம்புகளுக்கு சிறிதும் நிகராக மாட்டா, தெரிந்து கொள். நீயெல்லாம் காண்டீபத்தைக் கண்டால் என்ன செய்வாய்?

    இவ்வளவு பயந்து ஒடுபவனாக இருக்கிறாயே!

    உன் நன்மையை கருதி சொல்லுகிறேன், கேள். தருமராஜன் நல்லவன், நீதி தவறாதவன். அனைவருக்கும் இனியவன், எதிரிகளையும் அன்பால் கவர்பவன். அவனை போய் பகைக்கிறாயே. உன் அண்ணன் அவன். அவனுக்கு ராஜ்யத்தை கொடுத்து சமாதானம் பண்ணிக்கொள்.

    சட்டை உரித்த விஷ நாகங்கள் புற்றுக்குள்ளே நுழைவது போல போல ஒப்பற்ற பல்குணனின் (அர்ஜுனனின்) அம்புகள் உன் உடலுக்குள் புகும் முன், பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள். மகாத்மாக்கள் பாண்டவர்கள் உன் நூறு சகோதரர்களையும் கொன்று ராஜ்யத்தை அடைவதற்கு முன், நீ அவர்களோடு சமாதானம் செய்து கொள்.

    இன்னும் கோபப்படாத யுதிஷ்டிரன் கோபப்படும் முன் சமாதானம் பண்ணிக்கொள். யுத்தத்தில் களிப்பவனான கிருஷ்ணன் ஆத்திரப்ப்படுமுன், தோள்வலியில் நிகரற்ற பீமசேனன் இந்த படைகளுக்குள் புகுந்து உன் சகோதரர்களையும் உன்னையும் யமனுக்கு விருந்தாளிகள் ஆக்குவதற்கு முன் சமாதானம் செய்து கொள்.

    பாண்டவர்களை யுத்தத்தில் ஒருத்தராலும் ஜெயிக்க இயலாது, அவர்களோடு சமாதானம் பண்ணிக்கொள் என ஒப்பற்ற பேரறிவுடைய பீஷ்மர் உன் அண்ணனுக்கு (துரியோதனுக்கு) சொன்னார். மூடனும் கொடியவனுமான உன் அண்ணன் அவரது நன்மொழிகளை கேட்கவில்லை.”

    இதையெல்லாம் கேட்டு அப்புறமாவது துச்சாதனன் திருந்தினானா என்றால், அது தான் இல்லை. துரோணர் சொன்னது எதுவுமே தனக்கு காதில் விழாதது போல, அங்கிருந்து நழுவி சண்டைக்கு சென்றான். அவன் ஆயுள் துரோணர் சொன்னது போல பீமனின் வாளின் முனையில் மூன்று நாட்களில் முடிந்தது என்பது வேறு விஷயம்.

    (தொடரும்…)

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    இந்த பாழாய்ப்போன மனித ஜன்மத்துக்குத்தான் எத்தனை ஆசைகள். குழந்தையிலிருந்து இந்த ஆசை உணர்ச்சி ஆரம்பித்து விடுகின்றது. எதைப் பார்த்தாலும் அதைப் பெற முயற்சிக்கின்றது. தீபத்து ஒளியில் ஆசைப்பட்டு திரியில் கைவைத்து தீ சுடும் என்று தெரிந்தவுடன் அங்கே ஆசை அந்தக் குழந்தைக்குப் பயமாய் மாறுகிறது. ஆசை இப்படி குழந்தையாய் இருக்கும்போதே விஸ்வரூபமாய் மாறி பயமுறுத்தும் அந்த விந்தையையும் அந்த ஆசை என்கிற உணர்ச்சியையும் ஏன் படைத்தானோ ஆண்டவன்.

    ஆசைப்படாதே.. அவஸ்தைப்படுவாய், ஆசையே அத்தனை துன்பத்துக்கும் காரணம் என்று ஒருவர் சொல்கிறார்.. இன்னொருவரோ ‘எல்லாவற்றிற்கும் ஆசைப்படு.. அப்போதுதான் உன் இலக்கை எட்டுவாய்’ (இலக்கு என்ன என்பது இப்படிச் சொன்னவரைத்தான் கேட்கவேண்டும்) என்கிறார். ஆசை இங்கே குழப்பத்தையும் கூடவே உண்டாக்கி விடுகின்றது. எதை எடுத்துக்கொள்வது நாம். ஆசைதான் நன்மைக்கும் தீமைக்கும் நாம் அடியெடுத்துவைக்கும் வழி என்று எடுத்துக் கொள்ளலாமா..

    எனக்கு ஆசையே இல்லை என்று யாராவது சொன்னால் அவரை அடிமுட்டாளாகப் பார்க்கும் சமுதாயம் இதுவல்லவா.. இருந்தாலும் ஒரு வித்தியாசமான ஆசையை நாம் இங்கே பார்க்கலாமா?

    மேகம் ஆகி மலை உச்சியில் துஞ்ச வேண்டும்
    தாகம் தீர்க்கும் மழையாய் பூமியில் பெய்ய வேண்டும்
    பாய்ந்து செல்லும் ஆறாக விரைந்து ஓட வேண்டும்
    காய்ந்து கிடக்கும் நிலங்களுக்கு உயிர் ஊட்ட வேண்டும்

    மீனாகி பரந்த கடலில் நீந்தி மகிழ்ந்திட வேண்டும்
    மானாகி அடர்ந்த காட்டில் துள்ளி ஓடிட வேண்டும்
    வண்டு ஆகி மலர்கள் மேல் அமர்ந்து மகிழ வேண்டும்
    உண்டு தேனை மனதாற ரீங்காரம் செய்ய வேண்டும்

    மயிலாகி வண்ணத் தோகைகளை விரித்திட வேண்டும்
    ஒயிலாக நடனமாடி காண்போரை மகிழ்விக்க வேண்டும்
    குயில் ஆகி இனிய குரலிசையில் கூவிட வேண்டும்
    துயில் எழுப்பும் சுப்ரபாதமாய் அது ஒலித்திட வேண்டும்

    கெட்டியான விழுதுகள் தாங்கும் பெரிய ஆலமரமாக வேண்டும்
    வெட்டிச் சாய்ப்பார்களோ எனும் பயமின்றி நிழல் தர வேண்டும்
    சுகம் தரும் தென்றலாய் இதமாய் வீசிட வேண்டும்
    அகம் குளிர்ந்து அதை உணர்வோர் மகிழ்ந்திட வேண்டும்

    பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் மலராக வேண்டும்
    காய்த்துத் தொங்கும் தோப்பினில் கனியாக வேண்டும்
    தொடுத்த மாலையாக ஆண்டவனை அலங்கரிக்க வேண்டும்
    பறித்த பழமாக அவனுக்கு நிவேதனம் ஆகிட வேண்டும்

    மூங்கிலாய்த் தோன்றி கண்ணன் திருக்கரத்தில் வேய்ங்குழலாகி
    நீங்கிலா இனிமை பொங்கும் இசையாய் வெளிப்பட வேண்டும்
    அலையாக செந்தூர் கடலில் பிறந்து கந்தன் கழல் தழுவ வேண்டும்
    மலையாக ஓங்கி நின்று குமரனின் தாளினைத் தாங்கிட வேண்டும்

    ஆஹா இத்தனை ஆசைகளா இவருக்கு.. ஆனாலும் இத்தனை ஆசைகளும் நிறைவேறும்போது இந்த சமுதாயமும் கூடவே அந்தப் பயனில் பங்கு பெறுகிறதல்லாவா.. ஆகையினால் இப்படி ‘வேண்டும் வேண்டும்’ என்று கேட்ட திரு சு. கோபாலன் அவர்களின் ஆசை நிறைவேற வேண்டும் என்று கூறிக்கொள்ளும் அதே வேளையில் இந்த வார வல்லமையாளராகவும் தேர்ந்தெடுக்கிறோம்.

    கடைசி பாரா: தேமொழியின் குன்றக்குடி அடிகள் பற்றிய கட்டுரையிலிருந்து:

    ஆமை, தனக்கு நலம் பயக்காத சூழல்களில் தனது உறுப்புகளை உள்ளே இழுத்து ஒடுக்கிக் கொள்ளும். தனது நலனுக்கே ஏற்ற சூழ்நிலையில் தனது உறுப்புக்களை வெளியே நீட்டி அனுபவிக்கும். இதுபோல நாமும் நமக்கு நலம் பயக்கக்கூடிய காட்சிகளைக் கண்டு அனுபவிக்கலாம்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 84 (12.08.13)

    மலர் சபாpicture 84

     

    புகார்க்காண்டம் – 08. வேனில்காதை

    திருமுகத்தைக் கோவலன் மறுத்த செய்தியை வசந்தமாலை மாதவிக்கு உரைத்தல்

    அழகிய பொன் தோடு அணிந்த
    அழகுமுகத்தை உடைய மாதவி
    அழகிய தாழை மடலில்
    வரைந்து அனுப்பிய திருமுகத்தைக்
    கோவலன் வாங்க மறுத்தான்.
    இதனை உரைக்க,
    வாடிய மனதுடன்,
    இதழ்விரி மாலையணிந்த மாதவியிடம்
    விரைந்து சென்றனள் வசந்தமாலை.

    மாதவி செயலற்ற உள்ளத்துடன் மலர் அமளியில்
    கண் துயிலாது கிடத்தல்

    இதைக்கேட்ட மாதவி
    “சிறந்த அணிகலன்கள் அணிந்தவளே!
    இம்மாலைப் பொழுதில் அவர் வருவார்;
    வாராது போனாலும்
    நாளைக் காலையில் அவரைக் காணலாம்”
    எனக் கூறினாள்.
    பின் செயலற்ற மனத்தோடு
    தான் இருந்த மலர்ப்படுக்கையின் மீது
    அழகிய மலர் போன்ற கண்களையுடைய அவள்
    இமைகள் மூடாது வாடியே கிடந்தனள்.

    வெண்பா

    செந்தாமரை மலர்கள் விரிந்தன;
    மாமரங்களில் தளிர்கள் அழகுடன் துளிர்த்தன;
    அழகு பொருந்திய அசோகம் இதழ் விரித்தது;
    இளவேனில் காலம் வந்துவிட்ட இவ்வேளையில்
    அழகிய கண்களையுடைய
    மாதவியின் மனம் கோவலனைப் பிரிந்ததால்
    என்னவெல்லாம் துன்பறுமோ!

    உலகில் ஊடிப் பிரிந்து
    வாழும் உள்ளங்களே!
    நீங்கள் எல்லாம் கூடி வாழுங்கள்!
    இது மன்மதன் ஆணை!
    என்று கூவி அறிவித்தன குயில்கள்.

    மாதவி பாடிய கானல்வரி கேட்டு
    ஊடி நிற்கும் கோவலனே!
    உன்னோடு எப்போதும் கூடிக் கலந்திருந்த
    அவளின் அழகிய முகத்தை
    இந்த இளவேனில் பொழுதில்
    நினைவு கூர்ந்து காண்பாயாக!

    (வேனில் காதை முற்றிற்று.
    அடுத்து வருவது கனாத் திறம் உரைத்த காதை)

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 111 – 126
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html

    படத்துக்கு நன்றி:
    https://www.facebook.com/PaintingsLover

    Share
  • கென்யா பயணம் – 4

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நைரோபியில் எங்களைப் பயண வழிகாட்டி கூட்டிச் சென்ற இன்னொரு இடம் மாநாட்டு அரங்கம் (Convention Centre).   இது வணிக மையம்.  இது கென்யாவின் வணிக வளத்திற்கு ஒரு அடையாளம்.  நைரோபி நகரில் உள்ள கார்களின் எண்ணிக்கை நைரோபி தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று ஒருவர் ஜோக்கடித்தார்.  கிழக்கு ஆப்பிரிக்காவில் டான்ஸானியா, எத்தியோபியா, உகாண்டா, சூடான், சோமாலியா ஆகிய நாடுகளில் அதிகம் வளர்ந்திருப்பது கென்யா; ஆப்பிரிக்கக் கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக வளம் நிறைந்தது கென்யா.  வளர்ந்து வரும் இந்நாட்டின் வளத்தைப் பறைசாற்றுவது இது போன்ற இடங்கள்.  இது பல மாடிகளைக் கொண்டது.  44-வது மாடிக்குச் சென்று நைரோபியின் முழு தோற்றத்தையும் பார்க்கலாம்.  ஒரு பக்கம் பல மாடிக் கட்டடங்கள்; இன்னொரு பக்கம் நைரோபியின் சேரிப் பகுதி.  கென்யாவின் மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நைரோபியிலேயே காணலாம்.

    அடுத்து நாங்கள் சென்றது Nairobi City Market என்று அழைக்கப்படும் மார்க்கெட்.  சென்னையின் பழைய மூர் மார்க்கெட்போன்றது. இங்கு பல வகையான சாமான்கள் விற்கிறார்கள்.  ஆனால் மலிவான சாமான்கள்.  விலையுயர்ந்த சாமான்கள், அமெரிக்கச் சாமான்கள் எல்லாம் அமெரிக்க மாடல் மால்களுக்குச் சென்றுவிட்டன.  இந்த மார்க்கெட்டிற்குள் சென்றுவிட்டால் ‘எங்களிடம் வாங்குங்கள்’ என்று நம்மை கையைப் பற்றி இழுக்காத குறையாகக் கடைச் சொந்தக்காரர்கள் நம்மைச் சூழ்ந்துகொள்கிறார்கள்.  அதை விடச் சிரமமானது அவர்களிடம் பேரம் பேசுவது.  நம் இந்தியாவில் போல்தான் அங்கும் பேரம்பேசத் தெரிந்தவர்கள் பாடு கொண்டாட்டம்தான்.  இந்த சிட்டி மார்க்கெட்டின் ஒரு பக்கம் மீன் மார்க்கெட்டும் இருந்தது.  இங்கும் நம் இந்தியாவில் போலவே மீன் அப்போதுதான் பிடிக்கப்பட்டது, மிகவும் fresh-ஆக் இருக்கிறது என்பதை நிரூபிக்க மீனின் தலையின் பக்கவாட்டில் இருக்கும் அலகுகளைத் திறந்து காட்டுகிறார்கள்.  எனக்கு எங்கள் ஊர் மீன்மார்க்கெட்தான் ஞாபகத்திற்கு வந்தது.  அலகுகளின் அடியில் இருக்கும் மீனின் சுவாச உறுப்புக்களான gills  சிவப்பாக இருந்தால் புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் என்று அர்த்தம்.

    நைரோபியின் இன்னொரு முக்கியமான இடம் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி கென்யாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெடி வைத்து அல்கொய்தாவால் தாக்கப்பட்டதை நினைவுகூறும் நினைவுப் பூங்கா.  இந்தப் பூங்காவில் தாக்குதலில் எரிந்த கட்டடத்தின் சில இரும்புக் கம்பிகளை ஒரு உருவமாக வடித்துவைத்திருக்கிறார்கள்.  சம்பவத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் சிறு கண்காட்சியும் இருக்கிறது.  பூங்காவிற்குள் நுழையக் கட்டணம் உண்டு.  இருபது ஷில்லிங்தான்.  இருப்பினும் இங்கே உஹுரு (சுதந்திர) பூங்காவில் போல ஏழைகளைப் பார்க்க முடியவில்லை.

    தாக்குதல் நடந்த பதினைந்தாவது ஆண்டு தினத்தில் – இந்த ஆகஸ்டு ஏழாம் தேதி – நைரோபி விமானநிலையம் தீப்பற்றி எரிந்திருக்கிறது.  இது அல்கொய்தாவின் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருக்கிறது.  பெரிய தீ விபத்தைச் சமாளிக்கும் அளவிற்கு தீயணைப்புச் சாதனங்கள் இல்லாததால் விமானநிலையத்தின் பெரும்பகுதி சேதமடைந்திருப்பதாகத் தெரிகிறது.

    மசாய் பழங்குடி மக்களின் கைவினைப் பொருள்களை விற்கும் திறந்த வெளிச்சந்தை ஒன்று நைரோபியில் தினம் வேறு வேறு பகுதிகளில் நடக்கிறது.  இங்கு வரிசை வரிசையாகக் கடைகளில் மரத்தால், தோலால், துணியால் செய்த பொருள்கள் விற்கப்படுகின்றன்.  இங்கும் பேரம் உண்டு.  ஆனால் சிட்டி மார்க்கெட் அளவு மோசம் இல்லை.  தங்கள் பொருள்களை விற்கும் பழங்குடி மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.  இது பயணிகள் விரும்பி வரும் இடம்.  இந்தச் சாமான்களை வாஙக கென்ய இந்தியர்களும் வருகிறார்கள்.

    நைரோபியின் சாலைகளை ஒட்டிய நடைபாதைகளில் ஏழை வியாபாரிகள் கடை விரித்திருக்கிறார்கள்.  இந்தக் கடைகளில் நம் நாட்டு நடைபாதைக் கடைகளைப் போல வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்கள், செருப்புகள், தயார் உடைகள் முதலியன கிடைக்கும்.  இங்கு சாமான் வாங்க ஸ்வாஹிலி தெரிந்திருக்க வேண்டும்.  ஒரு சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு சந்தில் நெடுகக் காய்கறிக் கடைகள் இருந்தன.  இந்தக் கடைகளில் தேங்காய், பச்சைமிளகாய், பாகற்காய் போன்ற இந்தியக் காய்கறிக்ளும் இருந்தன.  இங்கும் வியாபார மொழி ஸ்வாஹிலியே.  காய்கறிகள் வாங்கும் கென்ய இந்தியப் பெண்களும் இந்த மொழியிலேயே பேரம் பேசுகிறார்கள்.

    சூப்பர் மார்க்கெட்டிலும் டிபார்மெண்ட் ஸ்டோர்களிலும் இந்தியர்கள் உப்யோகிக்கும் பல பொருள்கள் கிடைக்கின்றன.  குக்கர், சாஸ் பேன் போன்ற எவர்சில்வர் பாத்திரங்கள், மிக்ஸர், முறுக்கு முதலான பலகாரங்கள் எல்லாம் கிடைக்கின்றன . பல இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவை.  பல கடைகள் கென்ய இந்தியர்களுக்குச் சொந்தமானவை.

    அமெரிக்க மாடல் மால்களில் கிட்டத்தட்ட அமெரிக்க பிராண்டு சாமான்கள் எல்லாம் கிடைக்கின்றன.  சாக்கலேட்டுகள், சானிடரி நாப்கின்கள், குழந்தைகளுக்கான டயப்பர்கள் ஆகிய எல்லாம் கிடைக்கின்றன.  அமெரிக்காவைப் பின்பற்ற ஏன் இப்படி எல்லா நாடுகளும் துடிக்கின்றனவோ.  அமெரிக்க மாடலிலேயே கடைகள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.  நைரோபி முழுவதும் இப்படிப்பட்ட மால்கள் ஆங்காங்கே இருக்கின்றன.  பணம் படைத்த பகுதியில் இருந்த மால் மிகவும் பெரியதாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இருந்தது.  அதற்கு அருகே இருந்த வீடுகள் பெரிய மான்ஷன்களாக இருந்தன.  இந்த மான்ஷன்களைச் சுற்றியிருந்த மிக உயரமான சுவர்களில் நவீன பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன.  பணக்கார அமெரிக்கா, ஏழை அமெரிக்கா என்ற இரண்டு அமெரிக்காக்கள் உருவாவதைத் தடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் அறைகூவுவார்கள்.  கென்யாவிலும் இந்த மாதிரியான அரசியல் பேச்சு இருக்கிறதா என்று தெரியவில்லை.  ஆனால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

    தொடரும்

    நைரோபி நகரின் படங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

    படங்கள்: மெல்லியல்

    Share
  • கடல்நகர் காரோண நீலாயதாக்ஷியே

     

    நாகை வை. ராமஸ்வாமி    neelaiyadhakshi

     

    உள்ளின் உள்ளே உள்ளவளாய்

    உள்ளும் வெளியுமாகி நிற்கின்றாய்

    பள்ளம் அனைத்தும் நீக்குகிறாய்

    கள்ளம் எல்லாம் களைகின்றாய்

     

    என்னென்பேன் எவ்விதம் சொல்வேன் நின்னெழிலை

    என்னியதக் கமலமதில் என்றும் அமர்ந்தருளும்

    பொன்மயமானவளே புன்னகை பூத்தவளே

    எனதருமைத் தாயே நீலாயதாக்ஷியே

     

    கண்கள் கயலொத்த காரணமோ

    கண்காட்சி தந்தாய் அதிபக்தன் குளிர

    பண் பாடினான் மெய்மறந்து நின் புகழை

    எண்ணம் ஒன்றானானை நின்னடிக் கொண்டாயே

     

    மலர் வாசப் பந்தல் தோரண மாலையுடன்

    உலகாளும் உத்தமியே உன் பதம் போற்றி

    குளமாய்க் கண்கள் ஆனந்தமுற

    உளம் குளிர அலங்கார ஊஞ்சலிட்டோம்

     

    உல்லாசம் பொங்கிட ஒய்யார எழிலுடன்

    நலம் வளமாக பொன்னூஞ்சல் ஆடிடுவாய்

    சீலமிகு சிங்காரி சீர் பெற ஆடிடுவாய்

    வெள்ளமாய்க் கருணை பொழிந்திடுவாய்

     

    கடல்நகர் காரோண நீலாயதாக்ஷியே!                               

     

    Share
  • வெளிநாட்டார் நாடாளுமன்றம்

    வே.ம.அருச்சுணன்

     

    இன்றைய நடப்புகள்
    நாளைய வரலாறு அல்லவா
    மனத்துள் பல்வேறு பிம்பங்கள்
    வியப்பில் நிழலாடுகின்றன சில
    செவிகளுக்குத் தேனாகவும் பல
    குளவிகளாய் காதில் புதுமனை புகுவிழாவை
    விமரிசையாகவும் நடத்துகின்றன……….!

    அருவியாய்த் தவழ்ந்த பூமி
    அன்னியரின் படையெடுப்பால்
    தடம்மாறிப் போனதேனோ……?

    மூவினமும் சேர்ந்து பெற்ற
    சுதந்திரத்தை நடுவீதியில்
    தாரைவார்த்தல் முறையா……?

    மலாய் மக்களுக்குச் சிறப்புவழி
    வானுர்ந்த சொகுசு வாழ்வு
    சீனருக்குத் தனிவழி
    எதிலும் போதாதென்ற சுயநலப்போக்கு
    தமிழருக்கு மட்டும் வாழ்வே மாயம்தானா ?

    என்ன கொடுமை இது
    பிரமனும் நம்மை சபித்துவிட்டானா
    ஆள்பார்த்து ஒதுக்கிவிட்டானா……?

    ஆதியிலே வந்தகுடி
    காட்டையும் மேட்டையும் அழித்து
    தன்னையும் இலட்சம் இலட்சமாய்
    அழித்துக் கொண்ட தமிழனுக்குத் திருவோடு
    நிரந்திரமாய் வாழ்வதோ தெருவோடு……..!

    கள்ளக்குடியினர் இங்கே தொழில் மேதை
    அனுமதிச் சீட்டில் அரசின் கம்பீரமுத்திரை
    துணிக்கடை,பழக்கடை,மளிகைக்கடை,மதுக்கடை இன்னும்
    கணக்கில்லாக் கடைகளெல்லாம் அன்னியர் மயமாகி
    வியாபாரம் தூள்பறக்கிறது
    வெற்றிக் களிப்பு ஓங்காரமிடுகிறது
    தட்டிக்கேட்க ஆளில்லை
    தமிழனுக்கோ நாதியில்லை………!

    வயிற்றுப்பாட்டுக்குத் தெருவோரமாய்
    வெற்றிலைக் கடைவிரிப்புக்கு
    பண்டராயா அதிரடி அனுமதி மறுப்பு
    கேள்வி கேட்ட குமாருக்குப் பல்லுடைப்பு
    ஜாமினில் எடுக்க
    கர்பாலுக்கு அவசர அழைப்பு
    நாடாளுமன்றத்தில் தீர்மானம்
    குலசேகரன் தலைமையில்
    பலம் பொருந்தியக் குழுவமைப்பு…..!

    வெளிநாட்டார் தர்பார்
    விரைவில் முடியட்டும்! நாட்டில்
    மூவினத்தின் மாண்பு நாடெல்லாம்
    மீண்டும் ஜொலிக்கட்டும்! ஒன்றுபட்ட
    மலேசியர்கள் நாமென்றே கைகோர்த்திடுவோம்!
    அயல்நாட்டார் நம்மை வாழ்த்தி விடை பெறட்டும்!
    தன்மானச் சிங்கங்களாய்த் தமிழர்வாழ்வு
    மறுபடியும் ஓங்கி வளரட்டும்………..!

    வெளிநாட்டார் நாட்டாமைக்கு எதிராக
    ‘நம்பிக்கை வை’ பிரதமரின் முதல்
    ஓட்டு தவறாமல் விழட்டும் நாட்டில்
    தமிழர் வாழ்வு சிறக்கட்டும்……!

     

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!..(பகுதி-3)

    ராமஸ்வாமி ஸம்பத்

    porus

     

    porus1

    அலெக்சாண்டரின் ஆணைமேல் கூடாரத்திற்கு வந்த ரொக்ஸானா, “மன்னர் மன்னா, தங்களுக்கு என்ன சேவை செய்ய வேண்டும்” என்று இனிமையான குரலில் கேட்டாள்.

    “பிரியமானவளே, அந்த மருந்துப் பெட்டியில் உள்ள களிம்பினை இந்த புண்கள்மீது தடவு. மழைத் தண்ணீர் வேறு பலமாகப் பட்டுவிட்ட்து.. வலி பொறுக்க முடியவில்லை.”

    ”அப்படியே அரசே!” என்று சொல்லிய அவள் அலெக்சாண்டரின் உடலில் உள்ள காயங்களின்மீது தனது மெல்லிய வலதுகை விரல்களால் களிம்பினை தடவிவிட்டாள். அந்த ஸ்பரிசம் இதமாக இருந்தாலும், வலி குறையாத நிலையில் அதனால் அவனுக்கு பூரண நிவாரணம் கிட்டவில்லை.

    “ஐயோ, இந்த எரிச்சலில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்காதா?” என்று அலறினான் அம்மன்னன். வேதனையைப் புரிந்துகொண்ட ரொக்ஸானா மாசிடோனியப் படைகளுடன் வந்திருந்த மருத்துவரை அழைத்துவரச் சென்றாள்.

    அச்சமயம் ’மாவீரர் அலெக்சாண்டருக்கு வெற்றி உண்டாவதாக!’ என்று கூறியவாறு அவன் படைத்தலைவர்களில் ஒருவன் கூடாரத்தில் நுழைந்தான். “மன்னர் மன்னரே! தங்களால் தோற்கடிக்கப்பட்ட பவுரவ நாட்டரசரை தங்கள்முன் நிறுத்த அனுமதி தேவை” என்றான். வலி வேதனையாலோ என்னவோ, அலெக்சாண்டர் மவுனமாக இருந்தான். அதையே ஒப்புதலாகக் கருதி புருஷோத்தமனை மாசிடோனிய மன்னனின் முன் நிறுத்தினான்.

    விலங்குச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த புருஷோத்தமனைக் கண்ட அலெக்சாண்டர் ஒரு முனகலோடு, “ஓ நீதான் போரஸோ?” என்று கேட்டான்.

    “என் பெயர் புருஷோத்தமன். அதனைக் கொச்சைப்படுத்தி போரஸ் என அழைக்க வேண்டாம்.”

    “மன்னிக்க வேண்டும். ஒருவர் பெயரை இன்னொருவர் தன் இச்சைப்படி மாற்றிச் சொல்வது அநாகரீகமே! ஆனால் என் செய்வது? உங்கள் நாட்டுப் பெயர்கள் எங்கள் நாக்கில் சரியாக புரள மாட்டோம் என்கின்றனவே.”

    ”அப்படியென்றால், எங்களுக்கும் உங்கள் பெயரை உச்சரிப்பது கடினமாக உள்ளது. அதற்காக  நாங்கள் உங்களை ‘சிகந்தர்’ என அழைப்பதை ஒப்புவீர்களா?”

    ”தாராளமாக சிகந்தர் என்றே அழையுங்கள். எனக்கும் அப்பெயர் பிடித்திருக்கிறது.”

    அப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் வலி தாங்காமல், “ரொக்ஸானா, எங்கு சென்றுவிட்டாய்? என்னால் எரிச்சலைப் பொறுக்க முடியவில்லையே. அந்த களிம்பினை இன்னொரு முறை தடவு இப்புண்களின் மேல்” என்று புலம்பினான் அலெக்சாண்டர்.

    கூடாரத்திற்கு விரைந்து வந்த ரொக்ஸானா, ஒரு கணம் புருஷோத்தமனைக் கண்டு, “அண்ணா, தாங்களா இந்த நிலையில்?” என்று தழதழக்கும் குரலில் விளித்து, அவன் அடி பணிந்தாள்.

    அலெக்சாண்டருக்கு வியப்பு மேலிட்ட்து. “அண்ணாவா, இது என்ன புது உறவு?” என்று அவளை வினவினான்.

    ரொக்ஸானா அதற்கு பதில் அளிக்காமல், “அண்ணா, என் வருங்காலக் கணவர் விழுப்புண்களின் வலி தாங்காமல் தவிக்கிறார். எங்கள் மருத்துவர் கொண்டு வந்திருக்கும் களிம்பு பயனில்லாமல் போய்விட்டது. உங்கள் நாட்டு மருந்து ஏதேனும் உள்ளதா இப்பிணியைத் தீர்க்க?” என்று கேட்டாள்.

    “தங்காய், என்னுடன் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் என் மெய்க்காப்பாளனை விடுவித்து இங்கு அழைத்து வந்தால், நான் அவனை ஒரு நல்ல மருந்தினைக் கொண்டுவரச் சொல்கிறேன்.”

    ரொக்ஸானா அலெக்சாண்டரை நோக்கிக் கூறினாள், “என் பிராண நாதரே! இவர் என் உடன்பிறவா சகோதரர். அந்த விவரங்களைப் பிறகு சொல்கிறேன். இப்போது இவருடைய மெய்க்காப்பளரை விடுவித்து இங்கு கொணர்ந்தால், உங்கள் தீராத வலிக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.”

    வலி நீங்கினால் போதும் என்ற நிலையில் இருந்த யவன மன்னன், அதற்கு ஒப்புதல் அளித்தான்.

    சிறிது நேரத்தில் அங்கு வந்த மெய்க்காப்பாளன் செவியில் புருஷோத்தமன் ஏதோ கூறினான். அவனும் விரைந்து சென்று ஒரு களிம்பினை எடுத்துவந்து ரொக்ஸானாவிடம் கொடுத்தான்.

    அக்களிம்பினைத் தடவ விழைந்த அவளை, “நில், ரொக்ஸானா! முதலில் அம்மருந்தினை போரஸ் தன் புண்களில் தடவிக் காட்டட்டும். ஏனெனில் விரோதிகள் தங்கள் வைரிகளை நஞ்சு கலந்த விருந்தின் மூலமோ மருந்தின் மூலமோ கொல்ல முயற்சிப்பர்” என்று தடுத்தான் அலெக்சாண்டர்.

    ரொக்ஸானா அவன் சொன்னதை புருஷோத்தமனிடம் கூறி தன் காதலனின் சந்தேகத்தை நீக்கக் கோரினாள். புன்னகை முகத்தோடு அவனும் அவ்வாறே செய்தாள்.

    ‘போரஸுக்கு ஒன்றும் நேரவில்லையே. ஒருவேளை இக்களிம்பு உண்மையிலேயே சிறந்தது போலும்’ என நினைத்த அலெக்சாண்டர் அக்களிம்பினை தடவுமாறு அவளைப் பணித்தான்.

    ரொக்ஸானா மீண்டும் அந்த சேவையில் ஈடுபட்டாள். சில நொடிகளில் அலெக்சாண்டர் வலி நீங்கி பூரண குணமடைந்தான். மலர்ந்த முகத்தோடு, ‘”போரஸ், மிக்க நன்றி. இக்களிம்பு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?” என்று கேட்டான்.

    “சிகந்தர் அவர்களே! இது கத்தாழை எனப்படும் மூலிகைச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.”

    “அப்படியானால், அந்த மூலிகைச் செடியினை எனக்குக் கொடுங்கள். நான் அதனை எங்கள் நாட்டில் விளைவிக்க விரும்புகிறேன்.”

    “அது மிகவும் கடினம். எங்கள் பரத கண்டத்தின் தென்புலத்தில் உள்ள ‘திரமிள’ தேசத்தில்தான் இது விளையும். வேறு எங்கும் இதனை விளைவிப்பதற்கானச் சுற்றுச் சூழல் இல்லை. வேண்டுமென்றால் தாங்கள் இந்தக் களிம்பினை பெரிய அளவில் உங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.”

    “அப்படியா. ரொக்ஸானா இப்போது சொல். போரஸை எவ்வாறு நீ ‘அண்ணா’ என அழைக்கிறாய்?”

    அப்பாரசீகப் பேரழகி மலர்ந்த முகத்தோடு அந்த விருத்தாந்தத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

    ‘ திராவிட தேசத்தை’  அக்காலத்தினர் திரமிள தேசம் என்றே அழைத்தனர்.

    (தொடரும்)

    Share
  • பிரிவு ஒரு தொடர்கதையோ

    திவாகர்

    சென்னை ஏர்போர்ட் பகல் நேரத்தை இந்திய பிரயாணிகளுக்கும் இரவு நேரத்தை வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கும் பிரித்துக் கொடுத்துத் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டதாக அதற்கு ஒரு நினைப்போ என்னவோ. அதுவும் பகலை விட ராத்திரி நேரம்தான் ரொம்ப பிஸி போலும்.. ஒருவேளை சென்னையில் உள்ள மக்கள் ஏதோ பொருட்காட்சியைப் பார்ப்பது போல பார்க்க வருகிறார்களா இல்லை மெய்யாகவே இத்தனை பேரும் பிரயாணிகளா என்று ஆச்சரியப்படவைக்கும்தான். அதுவும் அந்த பல்நாட்டு விமானநிலையம் இருக்கிறதே அது அந்த இரவு நேரத்தில் சந்தைக் கூடம்தான். எத்தனை விமானங்கள்.. எத்தனை அலுவலர்கள்.. விதம் விதமான அலங்காரத்தில் உதடு ஒட்டாமல் விரித்துக்கொண்டே உள்ளே செல்லும் விமானப் பணிப்பெண்கள்..தங்கத் தமிழ்நாட்டில் இந்தியில் கறாராகப் பேசி அனுமதிச் சீட்டு இல்லாமல் உள்ளே விட மறுக்கும் காவலாளிகள்.. பலவிதமான எண்ணக் கலவைகளுடனே மனதில் ஆவல் பொங்க வந்திருக்கும் பிரயாணிகள்.. கனவு, இன்பம், பரபரப்பு, போராட்டம், துன்பம் கடமை என பலவித உணர்ச்சிக்கலவையைத் தாங்கி வரும் பிரயாணிகள் கூட்டம்

    அட, இந்த பிரயாணிகளுடன் கூடவே வரும் உறவுக்கார ஜனங்களைப் பார்க்கவேண்டுமே.. பிரயாணிகளில் முக்கால்வாசிப் பேர் துபாய் போன்ற அரபு நாடுகள் போலும்.. அப்படித்தான் அவர்கள் பேசும் விதத்தில் தெரிந்தது கூட..

    “இவங்கள்லாம் துபாய்’ல கஷ்டப்பட்டு சம்பாதிச்சு இங்கே குடும்பம் காப்பாத்தறாங்க இல்லே.. நன்றிக்கடனா அத்தனை உறவுகளும் வழியனுப்ப வந்திருக்கும்மா”

    அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களைக் காண்பித்து தன் மகளிடமும் சொன்னான்.. அந்த மகள் இவனை ஏதோ மாதிரி பார்த்தாள். தன் அம்மாவிடம் கோள் மூட்டினாள்.

    ”அம்மா! என்னம்மா இப்படி பே’ன்னு அப்பா எல்லாரையும் அரக்கப் பரக்க பாத்துண்டிருக்கார்.. எப்படிம்மா இத்தனை வருஷமா தாங்கினே..”

    ”அது ஒரு சோகக்கதைதான்.. என்னாத்துக்கு இப்போ அதை ஞாபகமூட்டறே.. அவர் கிடக்கார்.. உன் டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் ஜாக்கிரதையா வெச்சுக்கோ”

    அந்த மகள் மறுபடியும் சலித்தாள். “ஐயோ உனக்கு அப்பாவே பரவாயில்லே.. எத்தனை தரம் சொல்வே.. பாஸ்போர்ட் டிக்கெட் இந்த கேட்’ல காட்டறதிலேருந்து கையிலேயே வெச்சுக்கணும்.. எனக்குத் தெரியாதா?

    ஆனாலும் இவர்கள் அந்த இடத்திலேயே நின்றிருந்தனர் “இன்னும் எத்தனை நேரம் இங்கேயே நிக்கறது.. எனக்கு காலை வலிக்கறதும்மா! உள்ளே வுடுவானா’ன்னு கொஞ்சம் கேளும்மா”:

    ”போப்பா.. மூணுமணிநேரம் முன்னாடி அவன் உள்ளேயே விடமாட்டான்.. எதுக்கு அவன்கிட்டே போய் ஹிந்தி’ல திட்டு வாங்கணும்..”

    “அப்போ உன்னைத் தமிழ்லேயே நல்லா திட்டலாமா?”

    ”ஐய்யோ கடவுளே! நீங்க ஏன் இப்படி வெளில வந்தாலும் இவகிட்டே வாயைக் கொடுக்கறீங்க..” அம்மாவின் சொல் மகளை மேலும் கோபமாக்கியது.

    “அப்ப..நான் வாயாடின்னு பட்டம் கட்டறியா அம்மா!.. இதுக்கு என்னை வீட்’லயே டாடா காட்டி அனுப்பிச்சுருக்கலாம்.. ஏர்போர்ட் வரை வந்து ஏன் மானத்தை வாங்கறீங்க. ச்சே.. மூடையே ஸ்பாயில் பண்றீங்க!.”

    “இப்ப, என்னடி சொல்லிட்டேன் இவ்வளோ கோபம் வரது.. வெளியூர் போறே.. உனக்கு கோபம் கூடாது..”

    ”ஆமாம்.. கோபம் கூடாதுதான்” என்ற அப்பாவையும் கோபம் குறையாமல் பார்த்தாள். அப்பா உடனே சமாதானப் படுத்தினார்.

    ”சரி.. சரி.. நாம் இங்க இவ்வளோ தூரம் வந்து உன்னை சமத்தா வழி அனுப்பவேண்டாமா.. நம்மளை வுடு.. அதோ அங்கே பார்.. அந்தம்மா எப்படிக் கேவி கேவி அழறாங்க.. பாவம் இப்போ போற புருஷன் எப்போ வருவானோ.”.

    ”அதெல்லாம் சரிப்பா.. பட் எதுக்கு ஏர்போர்ட் வரை வந்துட்டு அழணும்.. ரெடிகுலஸ்.. இப்போ மாடர்ன் உலகத்துல அழுகை எல்லாம் ஒரு ஓல்ட் ஃபேஷன்..”

    அம்மாவுக்கு கோபம் குறையவில்லை. “அதுக்காக உன்னையும் உங்கப்பாவும் மாதிரி உணர்ச்சியே இல்லாம ஜனங்க எல்லா இடத்துலேயும் இருந்துடுவாங்களா..”

    அவள் உடனே சண்டைக்கு மறுபடியும் மல்லுக் கட்டினாள்.. “இப்போ நான் சொல்றதுல என்ன தப்பு பாக்கறே.. இதோ பார்.. இவங்க.. ஐ மீன்.. துபாய்க்கு இந்த ரெண்டு மூணு மணி நேர பிரயாணம்தான்.. கைல எப்பவுமே மொபைல் போன்.. சதா பேசிட்டே இருக்கறமாதிரி வசதி வந்தாச்சு.. இதுக்கே இப்படி சீன் காமிக்கறாங்களே.. நானெல்லாம் கிட்டத்தட்ட 30 மணிநேரம் பிரயாணம் பண்ணனும்.. மூணு ஏர்போர்ட் டிரான்சிட் பண்ணனும்.. நான் எவ்வளோ சீன் காமிக்கணும்.. என்னப்பா அங்கேயே பாக்கறியே நான் சொல்றதை சரின்னு சொல்லேன்”

    அப்பா சிரித்தான். “ஆமாமா.. ஆனா பாவம்மா.. புருஷன் பெண்ஜாதி இல்லையா.. அப்படித்தான் இருக்கும்.. அங்கே பாரு ஒரு கும்பலே கூட்டம் போட்டு கண்ணைக் கசக்கிண்டு இருக்கு.. இதெல்லாம் தமிழ்நாட்டுல சகஜம்மா.. அந்தக் கிழவன் கூட பாரேன் சந்தடி சாக்குல கண்ணைத் துடைச்சுக்குறான்..”

    அப்பாவின் சிரிப்புக்கு மகளும் பதில் சொல்வது போல சிரித்தாள். “நிஜம்மா இந்த ஏர்போர்ட் ஒரு சினிமா தியேட்டர்தான்பா.. சினிமா’ல சோகக் காட்சியெல்லாம் வரச்சே நம்ம ஜனங்க அழுவாங்க இல்லே அதே மாதிரிதான்..”

    ”அதேதான்.. ஒருத்தர் ஊருக்குப் போறார்னா டீசெண்டா வழி அனுப்பி வெக்கணும்.. ஒரு பூங்கொத்து அப்படி இப்படி கொடுத்து” அப்பா சிரித்துக்கொண்டே தலையாட்டினான்.

    ”ஐய்யோ போதுமே அப்பாவும் மகளும் இங்கே சிரிச்சது.. அப்பறம் இங்கே ஏதோ காமெடி சீன் நடக்கறது’ன்னு நினைச்சு ஜனங்க எல்லாம் நம்மளை சினிமா பார்ப்பாங்க.. வுடுங்க.. டைம் ஆயிடுத்து.. உள்ளே வுடுவான் போல அந்த கடங்காரன்.. உங்க ஏர்போர்ட் டிக்கெட்டையும் அவளோட டிக்கெட்டையும் அவன் மூஞ்சி நேரா காமிங்க.. அப்பதான் உடனே உள்ள வுடுவான்.”

    உள்ளே சென்றவர்கள் மகளை மட்டும் கவுண்டருக்கு அனுப்பி வைத்தார்கள். அவள்: அங்கிருந்து தன் கைபேசியில் ‘அப்பா ஒரு கிலோ ஜாஸ்தியா யிருக்கு.. எதை எடுக்கறது..”

    அவன் உடனடியாக மனைவியைத் திட்டினான். “இதுக்குதான் நான் அப்பவே தலையாலே அடிச்சுகிட்டேன்.. கண்ட கண்டதையெல்லாம் பேக் பண்ணாதே’ன்னு.. பாரு இப்போ எக்ஸ்ட்ரா லக்கேஜ்.. மறுபடியும் பாக்கேஜ் எல்லார் முன்னாடியும் ஓபன் பண்ணனும்”

    அதற்குள் மறுபடியும் அவள் கைபேசியில் பேசினாள். “அப்பா.. டோண்ட் வொர்ரி, அவங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறாங்களாம்..” அப்பா மௌனமாய் கையை ஆட்டினான். “என்னவாம்” மனைவி அதட்டினாள்.

    அவன் அசடு வழிந்தான்.. “இல்லே ஒரு கிலோல்லாம் பரவாயில்லையாம்”.

    மனைவி உடனே சண்டையைத் துவங்கிவிட்டாள். “அவசரபுத்தி உங்களை விட்டுப் போகவே மாட்டேங்குதே.. ஒரு நிமிஷத்துல என்னவெல்லாம் என்னைத் திட்டிப்புட்டீங்க.. நான் இதை அவ்வளோ ஈஸியா விடப்போறதில்லே.. எனக்குத் தெரியாதா யார் யார் எந்தந்த ஏர்லைன்ஸ் எவ்வளோ அக்செப்ட் பண்ணிப்பாங்க’ன்னு..”

    “இரு.. இரு” இந்த சின்ன விஷயத்தை பெரிசுபடுத்தாதே.. இதோ பார் உன் மகள் வராள். சிரிச்சமூஞ்சியோட வழியனுப்பி வையேன்..”

    “ஆஹா.. எனக்கு சிரிச்ச மூஞ்சியில்லே’ன்னு எனக்கு நல்லாவே தெரியும்..அதைக் கூட உங்க மகளுக்கு நீங்களே செஞ்சுடுங்க.”.

    ”என்னம்மா.. இன்னும் ஏதாவது சண்டை போடறீங்களா.. இப்போ சினிமால ஃபைட் சீனாக்கும்.. ஒண்ணு தெரியுமா.. வெளிலே இருக்கற கூட்டம் மாதிரி உள்ளே இல்லே.. ஸோ.. ஆடியன்ஸ் உங்க ஃபைட் சீனுக்கு ரொம்ப குறைவுதான்….

    ”’நல்லா சொன்னே போ’..என்று சொல்லிவிட்டு ஹஹ என்று கொஞ்சம் கத்தி சிரித்த அப்பாவை விசித்திரமாகப் பார்த்தாள் மகள்.

    “அப்பா.. நான் போகறச்சே ஏன் இப்படி சிரிச்சு பயமுறுத்தறே.. அப்புறம் ப்ளேன்’ல தூக்கம் வராது. அப்படியே வந்தாலும் நீ இப்ப சிரிச்சயே ஒரு சிரிப்பு, அது என்னை தூங்க வுடாதுப்பா”

    அம்மாவும் கொஞ்சம் சிரித்தாள். ”ஜாக்கிரதையா போயிட்டு வாடா தங்கம்..”

    “இம்மிகிரேஷன முடிந்ததும் ஒரு கால் கொடுத்தாள். பாதுகாப்பு முறைகள் முடிந்ததும் இன்னொரு கால் கொடுத்தாள்.

    ”சரிப்பா! நீங்க கிளம்புங்க! இரண்டு மணிநேரம் போல ஆகும்.. நான் பாத்துக்கறேன்..”

    ”பரவாயில்லேம்மா..விமானத்துல ஏறி உட்கார்ந்ததும் சொல்லு, அப்பவே போறோமே. வீட்டில போயி என்ன பண்ணப்போறோம். உங்கம்மா வேற கர்புர்’னு இருக்கா.. அதுக்கு இங்கயே இருக்கோம்..” என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவளும் கொஞ்சம் சத்தமாக சிரித்ததாக காதில் கேட்டது.

    இவர்களைப் போல ஒரு சிலர் உள்ளே வந்து வழி அனுப்பினாலும் அவர்கள் கண்களில் துக்கமும் ஒரு சேர இருந்ததை கவனிக்கவே செய்தான்.. ’உலகம் ரொம்ப சிறுசு.. என்பதை எப்போதுதான் இவர்கள் உணரப்போகிறார்களோ’ என்று மனைவியிடம் சொல்லி வருத்தப்படுவதைப் போல முகத்தை வைத்தான். அவள் இவனைச் சீண்டாமல் ஏர்போர்ட் முழுதும் பார்த்துக் கொண்டு கண்ணால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள். இன்னும் இரண்டு மணிநேரம் போகவேண்டுமே என்பதாகக் கவலைப் பட்டாளோ என்னவோ..

    இரண்டு மணிநேரமும் கழிந்தது. மகள் கைபேசியும் ஒலித்தது. “என்னம்மா.. ப்ளைட்’ல உக்காந்திட்டியா?”

    “இதோ போகணும்பா.. ஆமாம்ப்பா.. நான் எதுக்காக இவ்வளோ தூரம் பிரயாணம் செஞ்சு என்ன சாதிக்கணும்னு போறேன்’னு இவ்வளோ நேரம் நினைச்சுப் பார்த்தேன்..பா.. ஒண்ணுமே விளங்கலே.. எதுக்காகப்பா உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு நான் இப்படி தனியா போகணும்.. அப்பா எனக்கு இப்போ மனசெல்லாம் உங்க ரெண்டு பேரோடயே இருந்துடலாம்’னு தோணறது..” அவள் குரல் உடைந்திருந்ததைக் கவனித்ததும் இவனுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது..

    “ஆமாம்மா.. நாங்க எதுக்கு உன்னை இப்படி கம்பெல் பண்ணி அனுப்பணும்.. நாம் இப்படியே அப்பப்ப சண்டை போட்டுண்டு ஜாலியா கமெண்ட அடிச்சுண்டு இருக்கவேண்டாமா.. நீ எதுக்காக போகணும்..” அவன் குரலும் கம்மியது..

    “அப்பா…” அவள் அழுதது போல அவனுக்குக் கேட்டது..

    “என்னம்மா..”

    “நான் போகலேப்பா.. நான் உங்களோடயே வந்துடறேன்பா..” என்றவளின் கேவி அழும் சப்தம் கேட்டு அப்பாவுக்கு கண்ணில் நீர் பொங்க ஆரம்பித்து விட்டது. இதைக் கவனித்த அம்மா அந்த போனை சட்டென்று அவனிடமிருந்து பிடுங்கினாள். மகள் அம்மாவிடமும் அதையேதான் கேட்டாளோ.. அந்த அழுகைக் குரல் அம்மாவையும் தொற்றிக் கொண்டது.

    “நீ வந்துடுறா செல்லம்..அழாதே அழாதே.. அம்மா நான் இருக்கேன்.. பரவாயில்லே.. என்ன பெரிய படிப்பு வேண்டிக்கிடக்கு.. அங்க போய் படிக்கறதை இங்கேயே படிக்கமுடியாதா என்ன?..நீ முதல்ல அழுகையை நிறுத்தும்மா”

    “இல்லேம்மா.. நான் இப்போ உள்ளே இருக்கேன்மா.. எல்லாத்தையும் உதறிவிட்டு வரமுடியாது..”:

    “அப்ப ஒண்ணு பண்ணு.. போனவுடனே அங்கே நிலைமையைப் பாரு.. பிடிக்கலேன்னு வெச்சுக்க, உடனே புறப்பட்டு வந்துடு, என்னடா செல்லம்..”

    “சரிம்மா.. நீ அழாதே.. போனை அப்பாகிட்டே கொடு”

    ”என்னம்மா”

    “அப்பா! அம்மாகிட்டே நான் இல்லாத சமயத்துல சண்டை போடாதேப்பா..”

    ”சரிம்மா.. நீ வந்தவுடனே உன் முன்னாடியே சண்டை போடறோம்.”

    சட்டென மகள் சிரித்த சப்தம் அம்மாவுக்கும் கேட்டது போலும். மெல்ல புருஷன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

    Share
  • இந்த வார ராசிபலன்!

    காயத்ரி பாலசுப்பிரமனியன்

    மேஷம்:பெண்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சியும், பரபரப்பும் நிறைந்திரு க்கும்.மாணவர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். எனினும் தராதரமறிந்து அளவோடு பழகுதல் நல்லது. பணியில் இருப்பவர்கள் கவனக் குறைவிற்கு இடம் கொடாமல், உங் கள் பணியில் விழிப்பாய் இருங்கள். கலைஞர்கள் மேற்கொள்ளும் பிரயாணங்கள் மூலம் புதிய உறவுப் பாலம் உருவாகும். உங்களுக்கு நல்ல யோசனை சொல்பவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளலாம். வியாபாரம், தொழிலிடங்களில் உங்களின் சொல்லுக்கு தனி மதிப்பிரு க்கும்.

    ரிஷபம்: உங்கள் ,வாகனங்களை தகுந்த விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.பொது வாழ்வில் இருப்பவர்கள் விழிப்புணர்வோடு இருந்தால், வீண் சஞ்சலங்களிலிருந்து தப்பிக்கலாம்.வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணி புரியும் இடத்தில் அவ்வப்போது எழும் கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொண்டால், நிம்மதியாக வேலை செய்ய முடியும். கலைஞர்கள் திறமை என்பதுடன் பொறுமையும் உடனிருக்குமாறு பார்த்துக் கொண்டால், எளிதில் பணிகள் முடியும்.முதியவர்கள் உணவில் கவனமாக இருக்கவும்.

    மிதுனம்;மாணவர்கள் யோசித்து நிதானமாகச் செயல்பட்டால், எல்லா விஷயங்களும் ஏற்றமாகவே முடியும். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், பெற்றோரின் பெருமை உயரும். கர்ப்பிணிப் பெண்கள் அதிக அலைச்சல்,அறிமுகமில்லாத புதிய உணவு வகைகள் ஆகியவற்றை விலக்குவது நலம். வியாபாரிகள் கணக்கு வழக்குக்களில் நேர்மையான போக்கைக் கையாள்வது சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் தர்க்கங்கள் எழாதவாறு பேசி வந்தால்,மனதில் அமைதி நிலவும்.அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு தகுந்த மதிப்பும், மரியாதையும் அளிப்பார்கள்.

    கடகம்: மாணவர்கள் படிப்பில் நம்பிக்கையுடன் செயல்பட்டால், அதிக மதிப்பெண் பெறுவது உறுதி. சேமிக்கும் வகையில் பண வரவு தாராளமாய் இருக்கும். உறவினர் இடையே சிறு பிரச்னைகள் எழக்கூடும். எனவே சிறிய விஷயங்களை பெரிதுபடுத்தாமலிருப்பது நல்லது. சிலர் குடும்பத்தோடு இனிய சுற்றுலா சென்று வருவார்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் குறைந்து விடும். பணியில் இருப்பவர்கள் விலைஉயர்ந்த பொருள்களை கையாளுவதில் கவனம் தேவை. பெண்கள் அடிக்கடி வரும் கோபத்தை குறைத்து கொண்டால், இல்லத்தில் சச்சரவு எழாது.

    சிம்மம்: இந்த வாரம் நண்பர்களிடையே வேண்டாத விஷயங்களுக்காக சிறு வாக்குவாதங்கள் உண்டாகும். மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது விவேகத்தைக் கடைபிடித்து வந்தால், பயணங்கள் இனிமை யாய் இருக்கும் . பெண்கள் ,பணச் செலவில் கட்டுப்பாடாய் இருந்தால்,கடன்களும் கட்டுக்குள் இருக்கும். வேலையில் இருப்பவர்கள் பணியில் கவனமாய் இருந்தால், உயரதிகாரிகளின் சீற்றத்தித்திலிருந்து தப்பிக்க இயலும். வியாபாரிகள் பங்குதாரரின் எண்ண ஓட்டங் களை அறிந்து கொண்டு செயல்பட்டால், லாபம் குறையாது. கலைஞர்கள் ,நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும் .

    கன்னி: வீடு, நிலம் வாங்குகையில், பத்திரத்தை சரிபார்த்த பின் பணத்தைக் கட்டுவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்தால், இல்லறம் நல்லறமாகத் திகழும். பெண்கள் அக்கம் பக்கத் தாரிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாமல் அளவாகப் பழகுவது புத்திசாலித் தனம்.மாணவர்கள் பிறரிடம் கைமாற்றாக பணம் பெற்று செலவழித்தால், வீண் தொல்லைக்கு ஆளாக வேண்டியிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறர் மனம் புண்படாமல் பேசுவதை மேற்கொண்டால், அதிக நன்மை பெறலாம்.பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பக்குவமாக நடப்பது அவசியம்.

    துலாம்: பெண்கள் உறவுகளிடம் இன்முகம் காட்டினால், அவர்களின் அன்பும் குறையாமலிருக்கும். மாணவர்கள் கவனத்தை திசை திருப்பும் இடங் களுக்கு போவதைத் தவிர்த்து விடவும். வியாபாரிகள் சமயோசிதமாக செயல்பட்டால், எதனையும் சாதிக்க முடியும் . பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கோபமே பல சமயம் உங்களுக்கு வர வேண்டிய நன்மை க்குத் தடை போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து விட்டால், அவசியமான செயல்கள் நல்ல முறையில் நடைபெறும். பொறுப்பில் இருப்பவர்கள் பணியாளர்களிடம் உங்கள் கோப தாபங்களை பிரதிபலிக்க வேண்டாம்.

    விருச்சிகம்: பெண்கள் நிதிநிலைமைக்கேற்றவாறு செலவுகளை மேற்கொண்டால், கடன் தொல்லை இராது. அனுசரித்து நடந்து கொண்டால், கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்படாமல் இருக்கும்.வியாபாரிகள் இந்த வாரம் வாகன பயணங்கள் மற்றும் பராமரிப்பிற்கென கணிசமாக பணம் செலவு செய்யும் நிலை இருக்கும்.முதியவர்களின் உடல் நலம் சீராக இருப்பதால், உற்சாகத்துடன் செயல்படுவார்கள். வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு கிடைக்கும். உறவுகள் மற்றும் நண்பர்களோடு செலவு செய்யும் நேரம் இனிமையாகவும், மனதுக்கு இதமாகவும் அமையும்.

    தனுசு: கலைஞர்கள் தொல்லை தந்து கொண்டிருப்பவர்களிடமிருந்து தள்ளியே இருப்பது நலம். . நம்பிக்கையுடன் செயல்படும் குணத்தால்மாணவர்கள் , தொட்ட காரியம் யாவிலும் எளிதான் வெற்றி கிடைக்கும். பெண்கள் பக்குவமாக நடந்து கொண்டால், குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தானே நீங்கும். அடுத்தவர்க்கு உதவி செய்கையில் உங்கள் இரக்க குணத்தை பிறர் தவறாகப் பயன்படு த்த அனுமதிக்க வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் எளிமையாய் இருத்தல், இனிமை யாய் பேசுதல் இரண்டையும் கடை பிடித்தால், அனைவரும் உங்கள் பக்கமே இருப்பார்கள்.

    மகரம்: உங்கள் வரவு செலவுகள் கட்டு க்குள் இருந்தால், பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு இடமிராது. கலைஞர்கள் வாழ்க்கையில் உயர, வரும் வாய்ப்பு நல்லபடியாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில், கூட்டு முயற்சி முலம் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் அதிக லாபம் பெறலாம். கல்வியில் மேற்படிப்பு க்கான வாய்ப்புகளுக்கு மாணவர்கள் எதிர்பார்த்த வங்கி உதவி கிட்டும். வேலைக்குப் போகும் பெண்கள் இல்ல வேலை , அலுவலக பொறுப்பு இரண்டும் மோதாமல் பார்த்துக் கொண்டால், மன அமைதி குலையாமலிருக்கும்.

    கும்பம்: பெண்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், அலைச்சல், வேதனை- இரண்டையும் கட்டுக்குள் வைத்து விடலாம். மாணவர்கள் பேச்சில், படபடப்பும், பதற்றமும் காட்ட வேண்டாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் வேண்டாத ,செலவுகளை அதிகபடுத்தாம லிருப்பது அவசியம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகள் விரைந்து முடியும். வியாபாரிகள் பொருளாதாரத்தில் அகலக்கால் வைப்பதை தவிர்த்தால், செலவுப் பட்டியல் குறையும். கலைஞர்களின் வாழ்க்கை வளம் பெற்று விளங்க, உடன் இருப்பவர்களிடம் இதமாக நடந்து கொள்ளுங்கள்.

    மீனம்: இந்த வாரம் வியாபாரிகள் பயணங்களில் கவனமாக இருந்தால் பொருள் இழப்பைத் தவிர்க்கலாம். சச்சரவுகள் பெரிதாகாமலிருக்க பெண்கள் இணக்கம், பொறுமை இரண்டையும் கடை பிடிப்பது அவசியம். பெற்றோர்கள் பிள்ளைக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். உற்சாகம் குறையாமலிருக்கமுதியவர்கள் உணவு , உரையாடல் இரண்டிலும் கட்டுப்பாடாக இருப்பது நல்லது பணியிடங்களில் கவனமாக நடந்து கொண்டால், சிறு பிரச்னைகளால் சிந்தனை சிதறாமலிருக்கும். தொந்தரவுகள் புதிதாக முளைக்காமலிருக்க, பொது வாழ்வில் உள்ளவர்கள் இடம், பொருள் ஏவலறிந்து நடந்து கொள்வது நல்லது.

    Share
  • திருப்பாவை தந்த திருப்பாவை

     

    -கவிநயா

    கோபிகளுடன் கண்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறான். இந்தப் பக்கம் ஒருத்தியின் கண்களை ஒரு கையால் மூடிக் கொண்டே, அந்தப் பக்கம் இன்னொருத்தியின் பின்னலைப் பிடித்திழுக்கிறான். கூடவே ஒருத்தியின் காதுகளில் இரகசியம் வேறு பேசுகிறான்! பொல்லாத கண்ணன் என்பது சரியாகத்தான் இருக்கிறது!

    இந்தக் கோபியர்களின் பாவனையில்தான் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை துள்ளல்! உலகமே இவர்கள் காலடியில் கிடப்பது போல் அப்படி ஒரு பெருமிதம், இவர்கள் முகத்தில்! பூமியில் கால் பாவாமல், எங்கோ ஆகாயத்தில், கவலைகளே அற்ற ஒரு உலகத்தில் இருப்பது போன்ற எண்ணம் போலும்! வீடு என்று ஒன்று இருப்பதும், அங்கு பெற்றோர் இவர்களுக்காகக் காத்திருப்பதும், இவர்கள் நினைவிலிருந்தே மறைந்து விட்டது! கண்ணன்… கண்ணன்… கண்ணன்…மட்டும்தான் அவர்களின் கண்களுக்குத் தெரிகிறான். எங்கெங்கும் அவனுடைய குறும்புப் பார்வையும் கனிந்த புன்னகையும் மட்டும்தான் தெரிகிறது. அப்படி இருக்க, அவர்களுக்கென்ன பகலும், இரவும், பசியும், தாகமுமா தெரியப் போகிறது!

    அவன் மீது அவர்கள் கொண்டிருக்கும் பிரேமைக்கு அளவே இல்லை. கண்ணா, கண்ணா, என்று இவர்கள் அவனைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டாடிக் கூத்தாடுவதும், இவனும் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு அத்தனை பெண்களையும் சமாளிப்பதும்! எப்படித்தான் இவனால் முடிகிறதோ! ‘கண்ணன் எனக்கு மட்டுமே சொந்தம்; என்னிடம்தான் அவன் அதிகப் பிரியம் வைத்திருக்கிறான்’, என்று ஒவ்வொருத்தியும் எண்ணும்படியல்லவா நடந்து கொள்கிறான்!

    “கண்ணா! என்னைப் பாரேன்… என்னைப் பாராமல் ஏன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறாய்?”, ஒருத்தி அவன் முகவாயைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்புகிறாள்.

    “உன்னைப் பார்க்கப் பயந்துதான் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன்”, என்கிறான் அந்தக் கள்வன்.

    “என்னைப் பார்க்க பயமா?” செல்லக் கோபத்துடன் சிணுங்குகிறாள், அவள். “நான் என்ன அவ்வளவு பயங்கரமாகவா இருக்கிறேன்?”

    “அடடா. உன்னைப் பார்த்துக் குருடன் கூட அப்படிச் சொல்ல மாட்டானே. அப்படியிருக்க நான் சொல்வேனா என்ன? உன் கரிய பெரிய விழிகளைப் பார்த்தால், என் வசமிழந்து நான் அவற்றில் தொலைந்து விடுவேனோ என்று அஞ்சித்தான் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன்”, என்றானே பார்க்க வேண்டும்! அவள் முகத்தில் பெருமை பிடிபடவில்லை!

    “அப்படியானால்… நீ என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது?” என்று இன்னொருத்தி சிணுங்குகிறாள், இப்போது!

    “உன் மீது வைத்த கண்களை எடுக்க முடியாமல்தானே திணறிக் கொண்டிருந்தேன்…”, என்கிறான் அந்த திருடன்!

    இது மட்டுமா? கோபியர்கள் யமுனையில் நீராடப் போகையில் கண்ணனும் பின்னாலேயே போகிறான்… அவர்கள் ஆடைகளை மெதுவாக எடுத்து ஒளித்து வைத்து விடுகிறான்! அவனுடைய புல்லாங்குழல் இசையில் மயங்கி அனைவரும் இன்புற்று கிறங்கிக் கிடக்கும் போது, கோபிகளின் பின்னல்களை ஒன்றோடொன்றாக முடிந்து வைத்து விடுகிறான்! புத்தம் புது ஆடைகளை அவர்கள் உடுத்தி வந்தால், அவற்றில் மண்ணை வாரி இறைக்கிறான்!

    வீடுகளில் சிரமப்பட்டு எடுத்து வைத்த வெண்ணை எல்லாவற்றையும், கூட்டாளிகளோடு களவாடித் தின்று விடுகிறான்! வெண்ணை, தயிர், மோர், என்று இதெல்லாம் உண்டது போறாதென்று, மண்ணை வேறு உண்டு வைக்கிறான்!

    ஆனால், அவன் என்ன செய்தாலும், அவனை யாராலும் கோபித்துக் கொள்ளவே முடியவில்லை! மேலும் மேலும் அன்பைத்தான் பொழிகிறார்கள். மாயக் கண்ணன் என்பது சரியாகத்தானே இருக்கிறது!

    ஆயர்பாடியினரின், கோபியரின், அன்பையும், பக்தியையும், பிரேமையையும், பார்த்துக் கொண்டே இருந்த பிராட்டிக்கு ஒரு ஆசை வந்து விட்டது! தானும் கண்ணன் மேல் உருகி உருகி பிரேமை கொள்ள வேண்டும், அன்பு செய்ய வேண்டும், பக்தி செய்ய வேண்டும், காதலிக்க வேண்டும், என்று!

    அதோ… விஷ்ணுவை மட்டுமே தன் சித்தத்தில் நிறுத்திய விஷ்ணு சித்தர், தன் நந்தவனத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். களை எடுத்து, வாடிய இலைகளையும், உதிர்ந்து விட்ட பூக்களையும் அப்புறப்படுத்துகிறார். மலர்ச் செடிகளுக்கெல்லாம் நீர் பாய்ச்சுகிறார்…. துளசி, எம்பெருமானுக்கு மிகவும் உகப்பானது. அதைப் பார்க்கும் போதே அவருக்கு அவன் நினைவு வந்து விடும், உருகி விடுவார்…அந்தத் துளசிச் செடியின் அருகில்… அது என்ன?

    வித விதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்தப் பூந்தோட்டத்தில், சற்றே பெரியதொரு தாமரை மலர் போல, தன்னுடைய சின்னக் கைகளையும், தண்டைக் கால்களையும், உதைத்துக் கொண்டு, பொக்கை வாயைத் திறந்து’களுக்’கென்று சிரிக்கிறது, பேரழகான ஒரு பெண் குழந்தை!

    திருவாடிப் பூரத்து நாயகி, ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே, சரணம்!

     

    படத்திற்கு நன்றி: http://omsakthionline.com/?aanmigam=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8&publish=3079

    Share
  • மூன்றெழுத்துக்களின் போர்

    க.பிரபு தமிழன்friendshipindex

    உரிமை
    நம்பிக்கை
    எதிர்பார்ப்பின்மை
    இன்ப துன்ப பகிர்வு
    தோளோடு தோள் ,,,,,, இவைகளனைத்தும்
    அக்கால நட்பின் அணிகலன்களாகும்
    அன்று மூவாயிரம் சொற்கோவைகள்
    கொண்டது நட்பெனும் மூன்றெழுத்துச் சொல்
    இன்றோ “பணம்” என்ற மூன்றெழுத்துச் சொல்லுக்கு
    அடிமையாயுள்ளதடா

    இன்பமோ துன்பமோ
    தோழமையின் பலமொன்றே அன்று
    இன்றோ இன்பத்தின் பலமே
    ஆதிக்கத்திலுள்ளது பணத்திற்காக

    அன்றோ அடேய்
    உன் வறுமையும் என் வறுமையே
    என்றான்
    இன்றோ,  தோழா வறுமையா உனக்கு
    நான் பின்வருகிறேன்………………..

    நட்பின் பொருளறியா மூடர்களே
    நட்புக்காக உயிர்துறந்தவரின்
    மரபில் வந்தவன் நான்
    உன்  பணத்திற்கு நான் அடிமையாக மாட்டேன்
    பணம் கொண்ட உயிருள்ள உன் நட்பைவிட
    பேசாத தனிமையின் நட்பே
    எனக்கு போதுமடா

    படத்திற்கு நன்றி

    http://www.tumblr.com/explore

    Share
  • பட்டமங்கலம்

     

    திருசிற்றம்பலம்

    பட்ட மங்கலம்

    ஓர் பாண்டிய நாட்டு திருவாசக தலம்

    pttmngklm2raja

    நூ.த.முத்துமுதலி மயிலை

    தி.ஆ.2044/விஜய ஆடி 12 ஞாயிறு

     

    தமிழகத்து சித்தாந்த சைவநெறியின் பெருமறையாம் பன்னிரு திருமுறை 18000+ பாடல்களில் போற்றப்பட்ட 600க்கும் மேலுள்ள சிவவழிபாட்டிடங்கள் 1350 ஆண்டுகள் வரை பழமை உடையன எனும் மாண் பினால் இறை வழிபாட்டில் ஊக்கமுடையோர் வாழ்நாளில் ஒர் முறை சிலவற்றிற்காவது நேரடி வழிபடுதல் மரபெனக் கொண்டமை காண்கின்றோம். இக்கருத்தினிலேயே தென் இந்தியாவில் வாழ்வோர் வடகிழக்கு எல்லை இமயமலையில் உள்ள கயிலாயம் முதல் காசி போன்ற தலங்கள், ஈழத்திலுள்ள கேதீச்சரம் திரிகோணமலை எனும் தலங்களுக்கும் வடஇந்தியர் தென்கோடி இராமேசுவரம் வரை தீர்த்தங்கள் ஆட தெற்கே வருவதும் கண்கூடு.

    தேவாரப் பாடல் பெற்றத்தலங்களாவன திருநாவுக்கரசர், திஞானசம்பந்தர் சுந்தரர் எனும் மூவர்முதலிகளால் இயற்றப் பெற்று தே-வாரம் எனும் இனிமைமிகு பண்ணிசை அமைக்கப்படவை முதல் ஏழு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ள 8274 பாடல்களில் குறைந்தது ஓர் பதிகமாவது பெற்றவை 276ஆகும். முழுபதிகம் ஏதும் கிடைக்கப் பெறாமல் இத்தேவாரப் பாடல்களின் ஊடே சிவனுறை கோயில் என குறிக்கப்படுவன, வைப்புத் தலங்கள் எனவும் அறியப்படுவன, 325 க்கும் மேலாகும் ஓர் வளர்தொடர் என ஆய்வாளர் வகுத்து வருவது

    தேவாரக் காலத்து அடுத்து 1150 ஆண்டுகளுக்கு முன் இயற்றப் பெற்று எட்டாம் திருமுறையாக வைக்கப் பட்டுள்ள மாணிக்கவாசகரின் திருவாசகம்/திருக்கோவையார், தேவாரம் குறித்த சிலவற்றுடன் காட்டாத சில தலஙகளை போற்றியது. உத்தரகோசமங்கை, ஓரியூர், கல்லாடம், கவைத்தலை, குவைப்பதி, கொடிமங்கை, கோகழி, சந்திரதீபம், சாந்தம்புத்தூர், பட்டமங்கலம், பஞ்சப்பள்ளி, பாண்டூர், புன்னைத்துறை, பூந்துறை, பூவலம், பெருந்துறை, மணற்குன்று, வேலம்புத்தூர் என்பன அவை.

    நாம் இங்கு காணவந்தது இதனில் ஒன்று பட்டமங்கலம். திருவாசகம் கீர்த்தித் திருஅகவல் குறிக்கும் ஓர் தலம், பாண்டி நாட்டு பாடல்பெற்றத் தலமாம் திருப்பத்தூருக்கு தெற்கில் காளையார்கோயில் என இந்நாள் வழங்கப்படும் மற்றோர் பாடல்பெற்றத் தலமாம் கானப்பேருக்கு இடையே கற்சாலையில்5 மற்றும் 20 கி மீ தூரத்தே நல்ல பேருந்து தடத்தினில் இந்நாள் தட்சணாமூர்த்தி கோயில் என வியாழன் எனும் கோள்சிறப்பு வழிபாட்டுக் கோயிலாக அப்பகுதி மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றது. தமிழக வைணவரின் பெருமறையாம் ஆழ்வார்கள் இயற்றிய 3892 பாசுரங்களிலுள்ள 108 இல்ஓர் திவ்யதேசமாம் திருக்கோட்டியூர் இதனுக்கு 5. கிமீ மேற்கே அமைந்துள்ளது.

     

    வடக்கு வாயில்

    pttmngklm1

     

    இந்நாள் புதுமையாக மிகமிக நேர்த்தியான கருங்கற்சிற்பங்கள் மிளிறும் நல்கற்றளியாக நாட்டுக்கோட்டை சமூகத்தினரால் கிழக்கு நோக்கிய 5 நிலை கோபுரத்துடன் காணப்பட்டாலும் முன் ஓர் பழமையான கோவில் ஆகும் எனலாம். இங்குள்ள ஏழேழ் விழுதுகள் கொண்ட தென்முகக் கடவுளாம் தட்சணாமூர்த்தி எங்கும் அமரும் ஓர்ஆலமரம் சிறப்பானதாக போற்றப்படுவதைக் காணலாம். அதான்று பெரியதான தெப்பக் குளமும் மேற்காக உள்ளது. மிகத்தூய்மையாக தனியாரர் மேற்பார்வையில் பேணப்படும் இக்கோயில் தமிழ்மக்கள் தம் வாழ்நாளில் தவறாமல் ஒர் நாள் சென்று வழிபட வேண்டிய ஒன்றே என்றால் மிகையாகாது.

    சிற்றூர் ஆனாலும் பல பேருந்து தடங்கள் திருப்பத்தூர், திருக்கோட்டியூர், கல்லல், ஆலங்குடி, என பல ஊர் களிலிருந்தும் செல்ல வாய்ப்புகள் மிகஎளிதாக உள்ளன. காரைக்குடி அருகுள்ள ரயிலடியாகும்.

     

    பட்ட மங்கையில் பாங்காய் இருந்(து) அங்கு

    அட்டமா சித்திகள் அருளிய அதுவும்

    திருவாசக கீர்த்தித் திருஅகவல் (வரி 62-63)

    தமிழகத்தே பட்டமங்கலம் என சில ஊர்ப் பெயர்கள் இருப்பதாக காணினும் இவற்றில் பாண்டிநாட்டில் அமைந்த மதுரைக்கு அருகு அமைந்த பட்டமங்கலமே பல திருவாசக வரிகள் காட்டும் திருவிளையாடல் தொடர்பினால் நன்கு பொருந்தும். மேலும் அருகுள்ள வாதவூரார் என வழங்கிய மாணிக்கவாசகரின் மதுரைப் பிணைப்பு நன்கே அறிந்த புராண வரலாறு. மணிவாசகரின் தொடர்புடைய மற்றொரு பெயர்பெற்ற தலம் ஆவுடையார்கோயில் என அறியப்படும் திருப்பெருந்துறையும் பாண்டிய நாட்டிலேயே அருகு அமைந்துள்ளது. உத்தரகோசமங்கை, ஓரியூர், கொடிமங்கை, என்பனவும் பாண்டிநாட்டில் அமைந்தவையே பல மதுரைத் திருவிளையாடல்கள் திருவாசக கீர்தித் திருவகவல் வரிகளிலேயே குறித்தல் காண்க.

     

    “பட்ட மங்கையில் பாங்காய் இருந்(து) அங்கு
    அட்ட மாசித்தி அருளிய அதுவும்” 8.2.62 – அட்டமா சித்திகள் செய்த படலம்

    “கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்” 8.2.17 – வலை வீசிய படலம்

    “பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித்
    தூவண மேனி காட்டிய தொன்மையும்” 8.2.51 – மெய்காட்டிட்ட படலம்

    “நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்” 8.2.36 – நரியைக் குதிரைஆக்கிய படலம்

    “பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று” 8.2.392 – நரியைக் குதிரைஆக்கிய படலம்

    “மதுரைப் பெருநல் மாநகர் இருந்து
    குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்” 8.2.45 – நரியைக் குதிரை ஆக்கிய படலம்

    பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்” 8.2.47 – பிட்டுக்கு மண்சுமந்த படலம்

    “தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து 8.2.58 – தண்ணீர்பந்தல் வைத்த படலம்

    நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்”
    “ஓரியூரில் உகந்(து) இனி(து) அருளி
    பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்” 8.2.68 – விருத்த குமார பாலனாகிய படலம்

     

     

    ஏழேழ்ழேழ் விழுது ஆல்

    pttmngklm2alam

    தெப்பக்குளம்

    theppakkulam

    Share