அன்பு நண்பர்களே,

154802_391620084268266_1265729100_nநம் வல்லமை குடும்பத்தில் நம்மோடு இணையும் முனைவர்.நா.சங்கரராமன் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பேராசிரியர் பணியில் 8 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல்வேறு இதழ்களில் தன்னம்பிக்கை குறித்த கட்டுரைகளை எழுதியும் வருகிறார். தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், புதுமைப்பித்தன் ஆகியோர் பயின்ற பெருமைமிகு நெல்லை ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் முடித்து தமிழ் மீது கொண்ட மோகத்தால் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை தமிழிலே முடித்தவர்.

கல்லூரிக் காலங்களில் பொருநை எனும் மாணவ இதழைத் திறம்பட நடத்தி பலரின் பாரட்டுகளைப் பெற்றவர். பேச்சு,கட்டுரை, கவிதை போன்ற துறைகளில் சிறந்து விளங்கி தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவில் பரிசுகளை நிரப்பி பாராட்டுக்களைப் பெற்றவர். மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை விதைகளை தினந்தோறும் தூவி வருபவர்.

தற்போது எஸ்.எஸ்.எம். சமுதாய வானொலியில் நாளொரு கதை, உன்னாலும் முடியும் என்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பேசி வருபவன். உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள், நினைவுகள் (கவிதைத் தொகுப்பு) முதலான நூல்களைத் தொடர்ந்து மூன்றாவது நூலான “வெற்றிகள் விற்பனைக்கு அல்ல” என்ற நூலினை கடந்த 2012 ஆகஸ்டு மாதம் கோவை விஜயா பதிப்பகத்தார் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளனர்

அன்புடன்
ஆசிரியர்

‘ நீ பிறப்பதற்கு முன்பே

உன் உணவிற்காக

உன் தாயின் மார்பகங்களில்

பாலினைச் சுரக்கச் செய்தவன் இறைவன்…’’

-யாரோ.

நம்பிக்கை தரும் வரிகள் இவைகள். இந்த உலகம் நம்பிக்கை எனும் வார்த்தைகளால் மட்டுமே சுழன்றுகொண்டிருக்கிறது என்பதை ஞாபகப்படுத்தும் வரிகள். இந்த பூமியில் நாம் பிறப்பதற்கு முன்பே நமக்குத் தேவையான எல்லாவற்றையும் படைத்தவன் இறைவன் என்ற நம்பிக்கை விதைகளை நம்மிடையே விதைக்கும் வரிகள். அடுத்த நகர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் மனிதனையே வெற்றியும் எதிர்கொள்கிறது. நல்ல நம்பிக்கைகள் ஒருபோதும் தோற்பதில்லை என்பதே வாழ்ந்துகாட்டிய மகான்கள் நமக்கு விட்டுச் சென்ற உண்மையாகும்.

சமீப காலமாக தொலைக்காட்சிகளில் அடிக்கடி பார்க்கும் விளம்பரம்… பிரபல நகைக்கடை ஒன்றிற்கு இளையதிலகம் பிரபு வரும் விளம்பம் அது. ஆதில் அவர் கூறும் வார்த்தைகள்தான் எனக்கு இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. அந்த உற்சாகம் தரும் வார்த்தைகள்தான் நம்பிக்கை அதானே எல்லாம் ..

நம்மில் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நம்பிக்கை இருக்கும். அவை நல்ல நம்பிக்கைகளாக இருக்க வேண்டும். நேர்மறை நம்பிக்கையாக இருக்கவேண்டும். சமீபத்தில் எனக்கு ஒரு திருமணப்பத்திரிக்கை வந்தது. நண்பரின் திருமணம்… தேதியை பார்த்ததும் அசந்துபோனேன். நீங்களும் அசந்துபோவீர்கள். திருமணம் நடக்கும் நாள் 21.12.2012. உலகமே அழிந்து விடும் என்று அவநம்பிக்கைவாதிகள் குறித்த தேதி அது. உடனே நண்பருக்கு தொலைபேசியில் இரண்டு வாழத்துக்களைத் தெரிவித்துக்கொண்டேன். முதல் வாழ்த்து அவனின் திருமணத்திற்கு… இரண்டாவது வாழ்த்து அவன் தேர்ந்தெடுத்த நாளுக்காக… வணிக விஞ்ஞானிகளைப் புறம்தள்ளிய அவனது நம்பிக்கைக்காக… உலகமே பயந்து ஒதுக்கிய அந்த நாளை நம்பிக்கையோடு தன் வாழ்க்கையைத் தொடங்க முடிவெடுத்த அந்த நண்பரைப்போல நம்பிக்கையுடையவர்களால்தான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது.

“அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். நமக்கெல்லாம் இது நடக்குமா?”.. நம்மோடு இருக்கும் சிலரின் முணுமுணுப்புகளை நாம் கேட்டதுண்டு. நம்பிக்கை இழந்து பேசும் நண்பர்களைப் பார்க்கும்போது சற்று வருத்தமாக இருக்கும். தனது இயலாமையை வெளிப்படுத்த அவர்களுக்குக் காரணம் வேண்டும் இல்லையா?… அந்த காரணம்தான் முணுமுணுப்பாக வெளிவருகிறது. தயவு செய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்திவிடுங்கள்.

வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்குக் கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு வருகின்றன. வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது?.

இளைப்பாறுதல் தேவைப்படும்போதெல்லாம் மரக்குச்சியை கடலின்மேல் மிதக்கவிட்டு அதன்மேல் அமர்ந்து ஒரே சிந்தனையோடு தனது இலக்கை நோக்கி பயணம் செய்யும் பறவைகள் நமக்கு நம்பிக்கையைக் கற்றுத்தந்து விடுகிறது.

நேர்மறைச் சிந்தனைகளை விட எதிர்மறைச் சிந்தனைகளே நம்மில் பலருக்கு அதிகம். “கடைக்குப் போய் சாமான் வாங்கிட்டு வாடா” என்றால் “கடை பூட்டியிருந்தால் என்ன செய்ய?” என்ற சாதாரண கேள்வியில் இருந்தே தொடங்குகிறது நமது எதிர்மறைச் சிந்தனைகள்.

ஒரு சிறிய கதை உங்களுக்காக…

கனவுகளைச் சுமந்து நிற்கும் இளைஞன் அவன். சிறுவயதில் இருந்தே அவன் எதிர்மறைச் சிந்தனைகளாலும் சீக்குப்பிடித்த செயல்பாடுகளாலும் நிரம்பி காணப்பட்டவன். “நான் படிச்சு என்ன செய்யப்போறேன்..? இதுவரைக்கும் படிச்சவன்லாம் என்ன பண்ணிட்டான்?..” இந்த வசனங்களைப் போலான வசனங்களை அடிக்கடி பேசுபவன். “நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்” என்ற பி.எஸ்.வீரப்பாவின் வசனங்கள்தான் அவனுக்கு மிகவும் பிடித்தவை. சுருக்கமாகச் சொன்னால் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் கொண்ட இளைஞன் அவன்.

வீட்டில் யார் எது சொன்னாலும் கேட்பதில்லை. நல்ல விசயங்கள் எல்லாம் அவனது ஒரு காது வழியே புகுந்து மறு காது வழியே வந்து விடும். இவனை என்ன செய்யலாம் என்று யோசித்து விட்டு நிறைவாக ஒரு குருவிடம் அழைத்துச் சென்றார் இளைஞனின் தந்தை. “குருவே ! இவனை நீங்கள் தான் மாற்ற வேண்டும். எதைச் சொன்னாலும் எதிர்மறையாகவே செய்கிறான்” என்றார். குருவோ சற்று நிதானமாகக் கேட்டு விட்டு “இந்த உலகத்தில் யாரும் யாரையும் திருத்த முடியாது. தவறுகளை உணரச் செய்வதன் மூலமே ஒருவரை மாற்ற முடியும். இவனின் தவறுகளை உணர வைக்க முயற்சி செய்கிறேன். உங்கள் மகனை என்னிடம் இரண்டு நாட்கள் விட்டுவிடுங்கள். திரும்பி வரும்போது திருந்தி வருவான்” என்றார்.

மறுநாள் வழக்கம்போல்தான் விடிந்தது. குரு அந்த இளைஞனை அழைத்தார். “மகனே! இன்று உனக்கு ஆசிரமக் கூரைகளை வேயும் பணியினைத் தருகிறேன்” என்று கூறிவிட்டு கையில் ஒரு பெரிய உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தார். “இந்த உணவுப் பொட்டலத்தை வைத்துக்கொள். நீ சாப்பிட்ட பின்பு மீதமுள்ளதை உன் இடையில் கட்டி தொங்கவிட்டுக்கொள். எந்தக் காரணம் கொண்டும் அதனை கீழே வைத்துவிடாதே. நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்”, என்று சொல்லிவிட்டு வெளியிலே சென்று விட்டார். இளைஞனும் தன் வேலையைத் தொடங்கினான். காலை உணவு நேரம் வந்தது. பொட்டலத்தைப் பிரித்தான். சாப்பிட்டுவிட்டு மீதமுள்ளதைப் பொட்டலமாகக் கட்டி தன் இடையில் தொங்கவிட்டு விட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

மதிய நேரமானது. பசிக்க ஆரம்பித்தது. மீண்டும் பொட்டலத்தைப் பிரித்தான். வெயில் அதிகமான காரணத்தாலும் ஏற்கனவே சாப்பிட்ட உணவு என்பதாலும் உணவு கெட்டு துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்தது. பசிதான்… கெட்டுப்போன உணவினைச் சாப்பிட முடியவில்லை. தண்ணீர் அருந்திவிட்டு வேலையைத் தொடர்ந்தான். சிறிது நேரத்தில் குரு அங்கே வந்தார். இளைஞனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. பொட்டலத்தை கொடுத்துவிடலாம் என்று குருவை நெருங்கினான். குருவோ பொட்டலத்தை வாங்கவில்லை. “வைத்திரு.வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

மாலை நேரம் வந்துவிட்டது. துர்நாற்றம் அதிகமாகியது. கொசுக்களும் ஈக்களும் பொட்டலத்தை சுற்றின. இரவு வந்தது. குரு வரவில்லை. துர்நாற்றமும் கொசுக்களும் அவரைத் தூங்கவிடவில்லை. இரவு முழுவதும் தூங்காததால் காலையில் குருவை எதிர்பார்த்தான். குரு வந்தார். “குருவே! இதை வாங்கிக் கொள்ளுங்கள். இனி ஒரு நிமிடம் கூட இந்த பொட்டலத்தைத் தூக்க முடியாது” என்றான். குருவோ நிதானமாக “இதை ஏன் நான் வாங்கிக்கொள்ள வேண்டும்?” என்று கேட்டார். இது கெட்டுப்போன உணவுப்பொட்டலம். துர்நாற்றம் வருகிறது. என்னால் சுமக்க முடியவில்லை’’ என்றான் இளைஞன்.

குரு இளைஞனுக்கு கூறிய பதிலில்தான் இந்தக்கதையின் அர்த்தமும் நம் வாழ்க்கையின் அர்த்தமும் அடங்கியுள்ளது. குருவின் பதில் ‘‘கெட்டுப்போன உணவினை உன்னால் ஒருநாள் கூட சுமக்கமுடியவில்லை. 20 வருடங்களாக கெட்டுப்போன மனதினை எப்படிச் சுமந்து கொண்டிருக்கிறாய். உடனடியாக அதனை அகற்றி எறி..” என்பதுதான்.

தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.. நம்மில் எத்தனை பேர் இவ்வாறு இருக்கிறோம் என்று மனசாட்சியோடு எண்ணிப் பார்ப்போம். குப்பைகளைக் கொட்டி வைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே உலகம் தேடுகிறது. விரும்புகிறது. மனதினை அவ்வப்போது உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் அடைய முடியாத இலக்கு என்று எதுவும் கிடையாது. தகுந்த பயிற்சியும் இடைவிடாத முயற்சியும் இருந்தாலே எட்ட முடியாத இலக்கையும் எளிதில் அடையலாம் என்பதே சாதனையாளர்கள் நமக்கு விட்டுச்சென்ற பாடமாக அமைகிறது.

நம்மில் பலருக்கு விழிப்பதற்கும் எழுவதற்குமே அதிக இடைவெளி உள்ளது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டியுள்ளது. காலையில் எழும்பும்போது மனதிற்கும் உடலிற்கும் இடையிலே ஒரு பெரிய சண்டையே நிகழ்கிறது. “காலைல சீக்கிரமே எழுந்திருச்சா படிக்கலாம். உடற்பயிற்சி செய்யலாம்….” என்று மனம் பலவற்றைச் சொல்கிறது.

உடலோ “நல்லா குளுருது. இப்போ எழுந்திருச்சு என்ன சாதிக்கப்போறோம்?. அதெல்லாம் எழுந்திருச்ச பிறகு பார்த்துக்கலாம்… இல்லை நாளைல இருந்து சீக்கிரமா எழுந்திருக்கலாம்” என்று சொல்லும். மனம் சொன்ன படி நடந்தவர்கள் எல்லாரும் சாதனையாளர்களாக மலர்ந்துள்ளார்கள். உடல் சொன்ன படி கேட்டவர்கள் சராசரி மனிதர்களாக வாழந்து(?)கொண்டிருக்கிறார்கள்.

இதில் நீங்கள் எந்த வகை என்பதை உங்கள் மனசாட்சியைக் கேட்டு முடிவு செய்யுங்கள்.

நல்ல நம்பிக்கையோடு செயல்படும் அனைவருமே சாதனையாளர்களாக மலர்ந்துள்ளார்கள் என்பதே சரித்திரம் நமக்குத் தரும் பாடமாக உள்ளது. நம்பிக்கையோடு செயல்படுங்கள் … வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.

நல்லவர்களிடம் பேசும்போதே

நம்பிக்கை பிறந்துவிடுகிறது

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நம்பிக்கை… அதானே எல்லாம்!

  1. ////நல்லவர்களிடம் பேசும்போதே
    நம்பிக்கை பிறந்துவிடுகிறது//////

    முத்திரை வரிகள். அருமையானதொரு பகிர்வு. திரும்பத் திரும்ப படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  2. முனைவர். நா.சங்கரராமன் அவர்கள் வரவு நல்வரவாகுக! நம்பிக்கை விதைகளை விதைக்கும் கட்டுரைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *