வே.ம.அருச்சுணன்

 

இன்றைய நடப்புகள்
நாளைய வரலாறு அல்லவா
மனத்துள் பல்வேறு பிம்பங்கள்
வியப்பில் நிழலாடுகின்றன சில
செவிகளுக்குத் தேனாகவும் பல
குளவிகளாய் காதில் புதுமனை புகுவிழாவை
விமரிசையாகவும் நடத்துகின்றன……….!

அருவியாய்த் தவழ்ந்த பூமி
அன்னியரின் படையெடுப்பால்
தடம்மாறிப் போனதேனோ……?

மூவினமும் சேர்ந்து பெற்ற
சுதந்திரத்தை நடுவீதியில்
தாரைவார்த்தல் முறையா……?

மலாய் மக்களுக்குச் சிறப்புவழி
வானுர்ந்த சொகுசு வாழ்வு
சீனருக்குத் தனிவழி
எதிலும் போதாதென்ற சுயநலப்போக்கு
தமிழருக்கு மட்டும் வாழ்வே மாயம்தானா ?

என்ன கொடுமை இது
பிரமனும் நம்மை சபித்துவிட்டானா
ஆள்பார்த்து ஒதுக்கிவிட்டானா……?

ஆதியிலே வந்தகுடி
காட்டையும் மேட்டையும் அழித்து
தன்னையும் இலட்சம் இலட்சமாய்
அழித்துக் கொண்ட தமிழனுக்குத் திருவோடு
நிரந்திரமாய் வாழ்வதோ தெருவோடு……..!

கள்ளக்குடியினர் இங்கே தொழில் மேதை
அனுமதிச் சீட்டில் அரசின் கம்பீரமுத்திரை
துணிக்கடை,பழக்கடை,மளிகைக்கடை,மதுக்கடை இன்னும்
கணக்கில்லாக் கடைகளெல்லாம் அன்னியர் மயமாகி
வியாபாரம் தூள்பறக்கிறது
வெற்றிக் களிப்பு ஓங்காரமிடுகிறது
தட்டிக்கேட்க ஆளில்லை
தமிழனுக்கோ நாதியில்லை………!

வயிற்றுப்பாட்டுக்குத் தெருவோரமாய்
வெற்றிலைக் கடைவிரிப்புக்கு
பண்டராயா அதிரடி அனுமதி மறுப்பு
கேள்வி கேட்ட குமாருக்குப் பல்லுடைப்பு
ஜாமினில் எடுக்க
கர்பாலுக்கு அவசர அழைப்பு
நாடாளுமன்றத்தில் தீர்மானம்
குலசேகரன் தலைமையில்
பலம் பொருந்தியக் குழுவமைப்பு…..!

வெளிநாட்டார் தர்பார்
விரைவில் முடியட்டும்! நாட்டில்
மூவினத்தின் மாண்பு நாடெல்லாம்
மீண்டும் ஜொலிக்கட்டும்! ஒன்றுபட்ட
மலேசியர்கள் நாமென்றே கைகோர்த்திடுவோம்!
அயல்நாட்டார் நம்மை வாழ்த்தி விடை பெறட்டும்!
தன்மானச் சிங்கங்களாய்த் தமிழர்வாழ்வு
மறுபடியும் ஓங்கி வளரட்டும்………..!

வெளிநாட்டார் நாட்டாமைக்கு எதிராக
‘நம்பிக்கை வை’ பிரதமரின் முதல்
ஓட்டு தவறாமல் விழட்டும் நாட்டில்
தமிழர் வாழ்வு சிறக்கட்டும்……!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.