புவனேஷ்வர்

வியாசர் இயற்றிய மகாபாரதத்தில் இருந்து எனக்குப் பிடித்த சில சுவையான பகுதிகளை “மகாபாரத முத்துக்கள்” என்ற பெயரில் கடந்த ஓராண்டாக எழுதி வைத்துக்கொண்டு வருகிறேன். அவற்றை வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வியாசர் சொன்னதைத்தான் தமிழில் ஓர் கதைசொல்லியாக சொல்லுகிறேன். மொழிபெயர்ப்பு + கதைசொல்லல் என்று கூட சொல்லிவிடலாம்.

பாரத நாட்டுக்கே உரிய பண்பாடு, நாகரிக கோட்பாடுகள் ஆகியவை அந்நாளில் எங்ஙனம் இருந்தது என்பதை இக்காலத்தில் உள்ளோர் அறிந்து கொள்ள இவை உதவும். வெறும் கதையாக இல்லாமல் வாழ்வியல் நெறிகளையும் குறைவறக் கூறும் பண்டை நூற்கள் உற்ற தோழர்களே.
முதல் பாகமாக, பூரிசிரவஸ் வதம் என்னும் பகுதியைக் காணலாம். இது நான்கு பாகங்களாக வரும். ராமாயணத்தில் வாலி வதம் போல மகாபாரதத்தில் பூரிசிரவஸ் வதம் சர்ச்சைக்குரிய ஒன்று (அபிமன்யு வதம் தார்தராஷ்டிரர்கள் பண்ணினது. இது பாண்டவர் பக்கம் செய்த ஒன்று).

அதில் முதல் பாகம் – துரோணரின் அறிவுரை:

அன்புடன்,
புவனேஷ்வர்

மகாபாரத முத்துக்கள்: பூரிசிரவஸ் வதம் – பகுதி 1 – துரோணரின் அறிவுரை!

அபிமன்யு அநியாய விதமாக ஜயத்ரதனால் கொல்லப்பட்டதை அறிந்த அருச்சுனன் ரௌத்ராகாரமாக “நாளை மாலைக்குள் ஜயத்ரதனை கொல்வேன்; அவன் உயிருக்குப் பயந்து ஓடியோ, அல்லது தரும புத்திரரிடமோ க்ருஷ்ணணிடமோ சரண் அடைந்தாலோ அன்றி, நாளை மாலைக்குள் அவன் உயிரை காண்டீபம் குடிக்கும். இல்லையேல் ஜொலிக்கும் தீயினில் பாய்ந்து மகன் சென்ற உலகுக்கு நானும் செல்வேன், இது சத்தியம்” என கோரமான சபதம் பண்ணினான்.

ஜயத்ரதனை முடிக்க முனைந்து அருச்சுனன் சென்றான். வில்லை இரு கைகளாலும் பிடித்து இடது கையாலும் அம்பெய்யும் திறமையை பெற்றவன் அர்ஜுனன் (சவ்யசாசி) என்று எல்லாரும் அது நாள் வரை கேள்விப்பட்டுத்தான் இருந்தார்கள். அன்று தான் கண்கூடாக பார்த்தார்கள்.

இது வரை பதின்மூன்று நாட்கள் யுத்தத்தில் கூட, அருச்சுனன் வந்தால் எவரும் அவன் முன்னால் நிற்க முடியாது என்ற நிலை இருந்தது தான். வாய் திறந்த அந்தகனை போல அவன் எதிரிகளுக்குக் காட்சி தந்தான். ஆனால் அதுவரை கௌரவப்படை கண்ட அருச்சுனன் ஒன்றுமே இல்லை என்று ஆக்குவது போல அன்று காண்டீபம் தன் முழுப்பண்பையும் காட்ட ஆரம்பித்தது. பாணங்களை எடுப்பதும் தொடுப்பதும் விடுப்பதும் கண்ணுக்குத் தெரியவில்லை. அர்ஜுனனின் வில்வன்மையும் கண்ணனின் சாரத்யமும் சேர்ந்து, பயம் கொண்ட கௌரவப்படைகளுக்கு ஒரு அர்ஜுனன் அல்ல, நூறு நூறு அருச்சுனர்கள் தெரிய ஆரம்பித்தார்கள். “இதோ அருச்சுனன், இதோ விஜயன்” என கத்தி தங்களுக்குள்ளேயே வெட்டி மடிந்து பைத்தியம் கொண்டவர்கள் போல அப்படை குலைய ஆரம்பித்தது.

யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சகாயம் செய்ய சாத்யகி போகிறான். வருஷ்ணி குலத்தவனும் அருச்சுனனின் உயிர் நண்பனும், சீடனும் ஆவான் சாத்யகி. அர்ஜுனனை மிஞ்சும் அளவுக்கு வில் வன்மை கொண்டவன் என வியாசர் அவனை புகழ்வார். துரோணருடன் புரிந்த போரில் அவரிடமே பாராட்டு பத்திரம் வாங்கின வீரன். போரில் அவர் வில்லை ஒரு அம்பால் உடைத்தான் சாத்யகி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அடுத்த வில்லை பிடித்து நின்றார் ஆசாரியர். அடுத்த கணம் கழுகு இறக்கைகள் பூட்டிய அம்பு ஒன்று அந்த வில்லை கைப்பிடியில் துண்டாக்கியது. அடுத்த வில்லை நாணேற்றினார் துரோணர். நாணேற்றும் போதே அதுவும் உடைந்தது. அதற்கு அடுத்த வில்லை நாணேற்ற கூட நேரம் தராமல் சாத்யகி ஒரே அம்பால் சேதித்தான். இப்படி தொண்ணூற்றாறு விற்களை ஆசாரியர் எடுக்க எடுக்க எடுத்ததும் உடைத்தான் யாதவ குல வீரன். பின் நடந்த யுத்தம் மயிர்க்கூச்செறியும் படி நடந்தது. இவன் சாதாரணமானவன் அல்ல என திவ்ய அஸ்திரங்களை விடுத்தார் பிராமணர். பயப்படாமல், அவர் பிரயோகித்த ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் பதிலடி கொடுத்தபடி சளைக்காமல் போரிட்டான் சாத்யகி. “யுத்தத்தில் இந்த சாத்யகி ஸ்ரீ ராமனையும், பரசுராமனையும், அர்ஜுனனையும், கார்தவீரியார்ச்சுனனியும் போல போர் புரிகிறான். அவர்களின் வில்வன்மையை நான் இவனுடன் காண்கிறேன்” என்று ஆசாரியார் மகிழ்ந்து பாராட்டினார். எதிரியாக வந்தாலும் வீரனின் மித்தையை ரசித்து பாராட்டும் ஆசாரியரின் உயர்ந்த பண்பு தான் என்னே! சஞ்சயனும் “இன்றைய உலகில் ஸ்ரீ கிருஷ்ணனும், அருச்சுனனும், சாத்யகியுமே சிறந்த வில்லாளிகள். நான்காவது யாரும் கிடையாது” என கண்ணிழந்த மன்னனிடம் பாராட்டினான்.

அந்த சாத்யகி யுத்தத்தில் அதாகதம் பண்ணுகையில் அவனை எதிர்க்க கர்ணன் சென்றான். தோற்றான். கர்ணனை தான் கொல்வதாக அர்ஜுனனின் சபதத்தை நினைத்து அவனை கொல்லாமல் அனுப்பினான் சாத்யகி. க்ருதவர்மன் சென்றான். மயங்கி கிடந்தான். சில பல வீரர்கள் சென்றார்கள். சென்ற வேகத்திலேயே யமனுக்கு விருந்தாளியாக சென்றார்கள்.

பின்னர் துச்சாதனன் போனான். கொஞ்ச நேரம் யுத்தம் நடந்தது. கர்ணனையும் துரோணரையும் தோற்கடித்த சாத்யகிக்கு துச்சாதனனை கர்வபங்கம் பண்ண அதிக நேரம் பிடிக்குமா என்ன? தேரிழந்து வில்லிழந்து ஆயுதங்கள் அழிந்து புறங்காட்டினான் துச்சாதனன். பீமனின் சபதத்தை எண்ணி அவனை உயிரோடு விட்டான் சாத்யகி.

ஓடி வந்தவன் நேரே துரோணரிடம் வந்தான். அவனை துரோணர் நன்றாக திட்டி, சமாதானம் பண்ணிக்கொள், இப்போதும் கூட ஒன்றும் பாழாகவில்லை என கூறினார். போர்க்களத்தின் நடுவே துரோணர் உபதேசித்த வார்த்தைகள் இனி. வருபவை. இவை வியாசரின் வார்த்தைகள். தமிழ் நடைக்கு மட்டுமே நான் பொறுப்பு!

“துச்சாதனா, ஏன் இந்த ரதங்கள் சிதறி ஓடுகின்றன? அரசன் நலம் தானே? சிந்து தேசத்தரசன் ஜெயத்ரதன் நலம் தானே? நீ ஒரு இளவரசன். நீ ஒரு அரசனின் சகோதரன். நீ ஒரு தேர் வீரன் தானே? ஏன் இப்படி யுத்தத்தில் பயந்து புறங்காட்டி பறந்தோடி வருகிறாய்? யுத்தத்தில் ஜெயித்து நீ இளவரசனாக வேண்டியது தானே?

முன்னொரு நாளில் நீ பதிவ்ரதையான குற்றமற்ற திரௌபதியிடம் சொன்னாயே நினைவிருக்கிறதா? “சூதாட்டத்தில் ஜெயிக்கப்பட்ட நீ எங்கள் அடிமை, உன் கணவர்களுக்கு கட்டுப்படாமல், உன் கற்பை கழற்றி வீசி விட்டு துரியோதனனின் ஆடைகளை சுமந்து வா; உன் கணவர்கள் இறந்து விட்டவர்களுக்கு சமம், விதை அற்ற எள்ளுக்கு சமானமான அற்பர்கள் உன் கணவர்கள்” என கூசாமல் தைரியமாக அந்த பெண்ணிடம் சொன்னாயே, இப்போது ஏன், ஓ துச்சாதனா, யுத்தத்தில் தைரியம் கெட்டு மானமில்லாமல் ஓடி வருகிறாய்?

நீ தானே இந்த கொடும் பகையை பாண்டவர்களுடனும் பாஞ்சாலர்களுடனும் மூட்டி விட்டாய்? மூடனே, இப்போது சாத்யகியை கண்டே தொடை நடுங்குகிறாயே? அன்றைக்கு உருட்டிய பகடைகள் சட்டை உரித்த விஷ சர்ப்பங்களை ஒத்த கூரிய அம்புகளாக உருமாறி தாக்கும் என உனக்கு அன்று புரியவில்லையா?

ஒரு குற்றமும் அறியாத பாண்டவர்களை கேவலமான பல வார்த்தைகளால் சகோதரர்கள் எனவும் பாராது திட்டியவன் நீதானே?

பாஞ்சாலியின் துயரங்கள் உன்னையே வேராக கொண்டவை. அன்று காட்டிய உனது மமதையும் கர்வமும் இப்போது எங்கே? அன்று பாண்டவர்களை சீண்டிய நீ இப்போது ஏன் புறங்காட்டி ஓடுகிறாய்?

பயந்து போன இந்தப் படைகளை காக்காமல் ஏன் நீயே ஓடி வருகிறாய்?

சாத்வத குலத்தை சேர்ந்த சாத்யகி ஒருத்தனை கண்டே உன் மனம் கோழைத்தனத்தை அடைந்து விட்டதே, நீயெல்லாம் காண்டீபத்தை கண்டால் என்ன செய்வாய்? பீமசேனனை கண்டால் என்ன செய்வாய்? இரட்டையர்களை (நகுல சகாதேவர்களை) கண்டால் என்ன செய்வாய்?

நீ கண்டு பயந்து ஓடி வந்தாயே, அந்த சாத்யகி எய்த அம்புகள், சூரியனைப் போல யுத்தத்தில் எரிக்கும் அருச்சுனன் கையில் உள்ள காண்டீபத்தில் இருந்து வெளிப்படும் அம்புகளுக்கு சிறிதும் நிகராக மாட்டா, தெரிந்து கொள். நீயெல்லாம் காண்டீபத்தைக் கண்டால் என்ன செய்வாய்?

இவ்வளவு பயந்து ஒடுபவனாக இருக்கிறாயே!

உன் நன்மையை கருதி சொல்லுகிறேன், கேள். தருமராஜன் நல்லவன், நீதி தவறாதவன். அனைவருக்கும் இனியவன், எதிரிகளையும் அன்பால் கவர்பவன். அவனை போய் பகைக்கிறாயே. உன் அண்ணன் அவன். அவனுக்கு ராஜ்யத்தை கொடுத்து சமாதானம் பண்ணிக்கொள்.

சட்டை உரித்த விஷ நாகங்கள் புற்றுக்குள்ளே நுழைவது போல போல ஒப்பற்ற பல்குணனின் (அர்ஜுனனின்) அம்புகள் உன் உடலுக்குள் புகும் முன், பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள். மகாத்மாக்கள் பாண்டவர்கள் உன் நூறு சகோதரர்களையும் கொன்று ராஜ்யத்தை அடைவதற்கு முன், நீ அவர்களோடு சமாதானம் செய்து கொள்.

இன்னும் கோபப்படாத யுதிஷ்டிரன் கோபப்படும் முன் சமாதானம் பண்ணிக்கொள். யுத்தத்தில் களிப்பவனான கிருஷ்ணன் ஆத்திரப்ப்படுமுன், தோள்வலியில் நிகரற்ற பீமசேனன் இந்த படைகளுக்குள் புகுந்து உன் சகோதரர்களையும் உன்னையும் யமனுக்கு விருந்தாளிகள் ஆக்குவதற்கு முன் சமாதானம் செய்து கொள்.

பாண்டவர்களை யுத்தத்தில் ஒருத்தராலும் ஜெயிக்க இயலாது, அவர்களோடு சமாதானம் பண்ணிக்கொள் என ஒப்பற்ற பேரறிவுடைய பீஷ்மர் உன் அண்ணனுக்கு (துரியோதனுக்கு) சொன்னார். மூடனும் கொடியவனுமான உன் அண்ணன் அவரது நன்மொழிகளை கேட்கவில்லை.”

இதையெல்லாம் கேட்டு அப்புறமாவது துச்சாதனன் திருந்தினானா என்றால், அது தான் இல்லை. துரோணர் சொன்னது எதுவுமே தனக்கு காதில் விழாதது போல, அங்கிருந்து நழுவி சண்டைக்கு சென்றான். அவன் ஆயுள் துரோணர் சொன்னது போல பீமனின் வாளின் முனையில் மூன்று நாட்களில் முடிந்தது என்பது வேறு விஷயம்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “மகாபாரத முத்துக்கள்!

 1. தமிழ் இலக்கியத்தில் இல்லாத ஏதோ ஒன்று வட நாட்டில் இருப்பதாக மதிமயங்கி சில இந்திய “குடி”மகன்கள் இங்கே பறைசாற்றுகின்றனர். நம் தமிழில் வில்லி பாரதம் இல்லையா? ஏன் வடமொழிச் சரக்கை இறக்குமதி செய்து ஏற்கெனவே புண்பட்ட தமிழர் மனத்தைப் மேலும் புண்படுத்த வேண்டும்?
  கேட்பன கேட்டு நாம் அமைதி கொள்கிறோம்.

 2. நமது இந்தியத் திருநாட்டின் பெருமைக்குரிய இதிகாசங்களுள் ஒன்றான மஹாபாரதக் கடலில் இருக்கும் முத்துக்களை, எடுத்து, கோர்க்க வரும் திரு.புவனேஷ்வர் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். அற்புதமான பணியைக் கையில் எடுத்திருக்கிறீர்கள். எண்ணற்ற கிளைக் கதைகளை உள்ளடக்கிய காவியம் மஹாபாரதம். அதில், அதிகம் வெளியில் தெரியாத ‘பூரிசிரவஸ் வதத்தை’ தாங்கள், தங்கள் தீந்தமிழால் தருவது நிச்சயம் ஒரு மகத்தான பணி. இறையருளால் தங்கள் பணி பெரும் சிறப்புகள் பல பெற்று இனிதே நிறைவேற வாழ்த்துகிறேன். தொடர்ந்து படிக்க பெரும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  மனமார்ந்த நல்வாழ்த்துக்களுடனும் பிரார்த்தனைகளுடனும்,

  பார்வதி இராமச்சந்திரன்.

 3. அன்புக்குரிய சுலோச்சனா அவர்களே,

  தங்கள் கருத்துரை கண்டேன். அதை மிக மதிக்கிறேன்.

  ஆயினும், தமிழ் இலக்கியத்தில் இல்லாத ஒன்று வடநாட்டில் இருப்பதாக நான் சொன்னது கிடையாது. தமிழகத்தின் ஒரு அருட்கவியாகிய வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதத்தையும் அடியேன் மறுக்கவில்லை (மூல நூலுக்கும் வில்லியார் பாரதத்துக்கும் சிற்சில வித்தியாசங்கள் உண்டு எனினும் அது கவிகளுக்கே உரிய ஸ்வதந்த்ரம் என்று விட்டு விடலாம்).

  வடமொழியும் தமிழும் அடியேனுக்கு தெரிந்த வரை கைகோர்த்து தான் வளர்ந்து வந்துள்ளன, வழக்கிலும் இருந்திருக்கின்றன. மொழிகளுக்குள் உயர்வு தாழ்வு இல்லை.

  பாரதம் இறக்குமதிச்சரக்கு இல்லை. பாண்டிய மன்னன் பாரதப்போரில் பாண்டவர் பக்ஷத்தில் போரிட்டான் எனபது வியாசரே சொல்லும் விஷயம்.

  சரி, அதாவது வியாசர் சொல்லுகிறார் என விட்டு விடலாம். நம்முடைய தமிழ் இலக்கியத்திலேயே (புறநானூறு பாடல் 2, இயற்றியவர் முரஞ்சியூர் முடிநாகனார்) சேரமன்னன் உதியன் சேரலாதன் பாரதப்போரில் பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் பெருஞ்சோறு அளித்தான் என்று தகவல் தருகிறார்.

  “ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்
  பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”

  என்று அம்மன்னனைப் புகழ்கிறார்.

  இம்மன்னன் பின்னால் சோழரிடம் தோற்றதால் வடக்கிருந்து உயிர் துறந்தான். இந்த வடக்கிருத்தலும் இதே பூரிசிரவஸ் வதத்தில் பின்னால் வரும்.

  வியாசருக்கு முன் பாரதத்தைப் பாடிவைத்த கவி யாராவது உண்டா எனில் இல்லை. அப்படி இருக்க வில்லியார் பாடியதும் மூல நூலைத் தழுவித்தான் என்பதால் தங்கள் அவர் செய்ததும் இறக்குமதியோ?

  எனக்குத் தெரிந்து தமிழர்கள், தமிழ் மாணவர்கள் ஆகியோர் வில்லி பாரதத்தை ரசித்து படித்து மகிழ்கின்றனர். யாரும் புண்படவில்லை என்று நினைக்கிறேன். அடியேன் கூறியதில் பிழை இருப்பின் திருத்தவும்.

  நமது பாரத தேசம் பண்பாட்டால் ஒன்றுபட்டது. இன்றைக்கு பல மாநிலங்களை எப்படி ஆங்கிலமும் ஹிந்தியும் இணைக்கிறதோ அதே போல அன்று பல பிராந்தியங்களை வடமொழி இணைத்தது. அவ்வளவே. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் கல்வெட்டுக்கள் தீந்தமிழ் மொழியிலும் அவர்களின் சாசன செப்பேடுகள் வடமொழியிலும் இருப்பதை நாம் மறுக்க முடியுமா? இன்றளவும் சோழர்களின் செப்பேடுகள் தஞ்சை நகரில் பாதுகாக்கப் பெறுகின்றன, பொதுமக்களும் பார்க்க அனுமதி உண்டு.

  எனது எழுத்தில் தங்கள் மனம் புண்பட்டிருப்பின், வருந்துகிறேன். அதே சமயம் ஏற்கெனவே புண்பட்டிருக்கும் தமிழர்களின் மனம் அடியேனுடைய எழுத்தால் மேலும் புண்பட்டதாக தாங்கள் கூறியுள்ளதை சற்றே விளக்கி அருளினால் மிக்க நலமாயிருக்கும்.

  முதல் பின்னூட்டமிட்டு சிறப்பித்தமைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி, சுலோச்சனா அவர்களே.

  பணிவன்புடன்,
  புவனேஷ்வர்

 4. பெருமதிப்பிற்குரிய சகோதரி பார்வதி அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களையும், நன்றிகளையும் உரித்தாக்குகிறேன். தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசியாலும் இறையருளாலும் இப்பணியைச் செவ்வனே செய்ய விழைகிறேன். பின்னூட்டமிட்டு பாராட்டி சிறப்பித்த மேன்மைக்கு நன்றி, சகோதரி.

  பணிவன்புடன்,
  புவனேஷ்வர்

 5. மதிப்பிற்குரிய சுலோச்சனா அவர்களே,

  முந்தைய எனது பின்னூட்டத்தில் சொல்ல மறந்து போன விஷயம் 🙂

  தமிழ் மொழியின் இணையில்லாக் கவியான பாரதியார் கூட

  “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
  தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் ;
  இறவாத புகழுடைய புதுநூல்கள்
  தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்”

  என்று பாடிவைத்திருக்கிறார் அல்லவோ?

  அது மட்டுமா? அவரது பாஞ்சாலி சபதத்தை ரசிக்காதோர் யார்? அதை அவர் வியாசரின் காவியத்தை தழுவி பாடியிருப்பதாகவும் தமிழ்நடைக்கு மட்டுமே தாம் சொந்தக்காரர் என்றும் சொல்லியிருக்கிறாரே?

  வடமொழியோ தமிழோ – எல்லாம் நம்முடையது தானே. நம் வீட்டுப் பரம்பரைச் சொத்தை நாமே எப்படி “இறக்குமதி” செய்வது?

  ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்.

  அனைவருக்கும் இனிய பாரத நன்னாட்டின் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  வாழ்க பாரதம்.

  பணிவன்புடன்,
  புவனேஷ்வர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *