திவாகர்

இந்த பாழாய்ப்போன மனித ஜன்மத்துக்குத்தான் எத்தனை ஆசைகள். குழந்தையிலிருந்து இந்த ஆசை உணர்ச்சி ஆரம்பித்து விடுகின்றது. எதைப் பார்த்தாலும் அதைப் பெற முயற்சிக்கின்றது. தீபத்து ஒளியில் ஆசைப்பட்டு திரியில் கைவைத்து தீ சுடும் என்று தெரிந்தவுடன் அங்கே ஆசை அந்தக் குழந்தைக்குப் பயமாய் மாறுகிறது. ஆசை இப்படி குழந்தையாய் இருக்கும்போதே விஸ்வரூபமாய் மாறி பயமுறுத்தும் அந்த விந்தையையும் அந்த ஆசை என்கிற உணர்ச்சியையும் ஏன் படைத்தானோ ஆண்டவன்.

ஆசைப்படாதே.. அவஸ்தைப்படுவாய், ஆசையே அத்தனை துன்பத்துக்கும் காரணம் என்று ஒருவர் சொல்கிறார்.. இன்னொருவரோ ‘எல்லாவற்றிற்கும் ஆசைப்படு.. அப்போதுதான் உன் இலக்கை எட்டுவாய்’ (இலக்கு என்ன என்பது இப்படிச் சொன்னவரைத்தான் கேட்கவேண்டும்) என்கிறார். ஆசை இங்கே குழப்பத்தையும் கூடவே உண்டாக்கி விடுகின்றது. எதை எடுத்துக்கொள்வது நாம். ஆசைதான் நன்மைக்கும் தீமைக்கும் நாம் அடியெடுத்துவைக்கும் வழி என்று எடுத்துக் கொள்ளலாமா..

எனக்கு ஆசையே இல்லை என்று யாராவது சொன்னால் அவரை அடிமுட்டாளாகப் பார்க்கும் சமுதாயம் இதுவல்லவா.. இருந்தாலும் ஒரு வித்தியாசமான ஆசையை நாம் இங்கே பார்க்கலாமா?

மேகம் ஆகி மலை உச்சியில் துஞ்ச வேண்டும்
தாகம் தீர்க்கும் மழையாய் பூமியில் பெய்ய வேண்டும்
பாய்ந்து செல்லும் ஆறாக விரைந்து ஓட வேண்டும்
காய்ந்து கிடக்கும் நிலங்களுக்கு உயிர் ஊட்ட வேண்டும்

மீனாகி பரந்த கடலில் நீந்தி மகிழ்ந்திட வேண்டும்
மானாகி அடர்ந்த காட்டில் துள்ளி ஓடிட வேண்டும்
வண்டு ஆகி மலர்கள் மேல் அமர்ந்து மகிழ வேண்டும்
உண்டு தேனை மனதாற ரீங்காரம் செய்ய வேண்டும்

மயிலாகி வண்ணத் தோகைகளை விரித்திட வேண்டும்
ஒயிலாக நடனமாடி காண்போரை மகிழ்விக்க வேண்டும்
குயில் ஆகி இனிய குரலிசையில் கூவிட வேண்டும்
துயில் எழுப்பும் சுப்ரபாதமாய் அது ஒலித்திட வேண்டும்

கெட்டியான விழுதுகள் தாங்கும் பெரிய ஆலமரமாக வேண்டும்
வெட்டிச் சாய்ப்பார்களோ எனும் பயமின்றி நிழல் தர வேண்டும்
சுகம் தரும் தென்றலாய் இதமாய் வீசிட வேண்டும்
அகம் குளிர்ந்து அதை உணர்வோர் மகிழ்ந்திட வேண்டும்

பூத்துக் குலுங்கும் நந்தவனத்தில் மலராக வேண்டும்
காய்த்துத் தொங்கும் தோப்பினில் கனியாக வேண்டும்
தொடுத்த மாலையாக ஆண்டவனை அலங்கரிக்க வேண்டும்
பறித்த பழமாக அவனுக்கு நிவேதனம் ஆகிட வேண்டும்

மூங்கிலாய்த் தோன்றி கண்ணன் திருக்கரத்தில் வேய்ங்குழலாகி
நீங்கிலா இனிமை பொங்கும் இசையாய் வெளிப்பட வேண்டும்
அலையாக செந்தூர் கடலில் பிறந்து கந்தன் கழல் தழுவ வேண்டும்
மலையாக ஓங்கி நின்று குமரனின் தாளினைத் தாங்கிட வேண்டும்

ஆஹா இத்தனை ஆசைகளா இவருக்கு.. ஆனாலும் இத்தனை ஆசைகளும் நிறைவேறும்போது இந்த சமுதாயமும் கூடவே அந்தப் பயனில் பங்கு பெறுகிறதல்லாவா.. ஆகையினால் இப்படி ‘வேண்டும் வேண்டும்’ என்று கேட்ட திரு சு. கோபாலன் அவர்களின் ஆசை நிறைவேற வேண்டும் என்று கூறிக்கொள்ளும் அதே வேளையில் இந்த வார வல்லமையாளராகவும் தேர்ந்தெடுக்கிறோம்.

கடைசி பாரா: தேமொழியின் குன்றக்குடி அடிகள் பற்றிய கட்டுரையிலிருந்து:

ஆமை, தனக்கு நலம் பயக்காத சூழல்களில் தனது உறுப்புகளை உள்ளே இழுத்து ஒடுக்கிக் கொள்ளும். தனது நலனுக்கே ஏற்ற சூழ்நிலையில் தனது உறுப்புக்களை வெளியே நீட்டி அனுபவிக்கும். இதுபோல நாமும் நமக்கு நலம் பயக்கக்கூடிய காட்சிகளைக் கண்டு அனுபவிக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. வல்லமையாளர் திரு சு. கோபாலன்அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  காலம் கடந்து நிற்கும், நல்வாழ்கை  வாழ பயன் தரும்  அறிவுரையைப் பகர்ந்த குன்றக்குடி அடிகள்  அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  அன்புடன் 
  ….. தேமொழி 

 2. திருமிகு சு. கோபாலன், திருமிகு.தேமொழி ஆகியோருக்கு வணக்கமும் வாழ்த்தும்!!

 3. வல்லமையாளர் திரு.சு.கோபாலன் அவர்களுக்கும், குன்றக்குடி அடிகளாரின் நூலைச் சிறந்த முறையில் தொடராக வழங்கி வரும் திருமதி.தேமொழி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

 4. வல்லமையாளர்கள் , திரு.கோபாலன் அவர்களுக்கும்,
  ‘வண்ணத் தூரிகை’ தேமொழிக்கும்
  வாழ்த்துக்கள…!

 5. வல்லமையாளராய்த் தேர்வாகியுள்ள கவிஞர் திரு. சு. கோபாலன் அவர்களுக்கும், கடைசி பாராவை அலங்கரிக்கும் கட்டுரை வரிகளை வழங்கிய தோழி தேமொழிக்கும் உளம்நிறை வாழ்த்துக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *