Featuredஇலக்கியம்பத்திகள்

கென்யா பயணம் – 4

நாகேஸ்வரி அண்ணாமலை

நைரோபியில் எங்களைப் பயண வழிகாட்டி கூட்டிச் சென்ற இன்னொரு இடம் மாநாட்டு அரங்கம் (Convention Centre).   இது வணிக மையம்.  இது கென்யாவின் வணிக வளத்திற்கு ஒரு அடையாளம்.  நைரோபி நகரில் உள்ள கார்களின் எண்ணிக்கை நைரோபி தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று ஒருவர் ஜோக்கடித்தார்.  கிழக்கு ஆப்பிரிக்காவில் டான்ஸானியா, எத்தியோபியா, உகாண்டா, சூடான், சோமாலியா ஆகிய நாடுகளில் அதிகம் வளர்ந்திருப்பது கென்யா; ஆப்பிரிக்கக் கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக வளம் நிறைந்தது கென்யா.  வளர்ந்து வரும் இந்நாட்டின் வளத்தைப் பறைசாற்றுவது இது போன்ற இடங்கள்.  இது பல மாடிகளைக் கொண்டது.  44-வது மாடிக்குச் சென்று நைரோபியின் முழு தோற்றத்தையும் பார்க்கலாம்.  ஒரு பக்கம் பல மாடிக் கட்டடங்கள்; இன்னொரு பக்கம் நைரோபியின் சேரிப் பகுதி.  கென்யாவின் மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நைரோபியிலேயே காணலாம்.

அடுத்து நாங்கள் சென்றது Nairobi City Market என்று அழைக்கப்படும் மார்க்கெட்.  சென்னையின் பழைய மூர் மார்க்கெட்போன்றது. இங்கு பல வகையான சாமான்கள் விற்கிறார்கள்.  ஆனால் மலிவான சாமான்கள்.  விலையுயர்ந்த சாமான்கள், அமெரிக்கச் சாமான்கள் எல்லாம் அமெரிக்க மாடல் மால்களுக்குச் சென்றுவிட்டன.  இந்த மார்க்கெட்டிற்குள் சென்றுவிட்டால் ‘எங்களிடம் வாங்குங்கள்’ என்று நம்மை கையைப் பற்றி இழுக்காத குறையாகக் கடைச் சொந்தக்காரர்கள் நம்மைச் சூழ்ந்துகொள்கிறார்கள்.  அதை விடச் சிரமமானது அவர்களிடம் பேரம் பேசுவது.  நம் இந்தியாவில் போல்தான் அங்கும் பேரம்பேசத் தெரிந்தவர்கள் பாடு கொண்டாட்டம்தான்.  இந்த சிட்டி மார்க்கெட்டின் ஒரு பக்கம் மீன் மார்க்கெட்டும் இருந்தது.  இங்கும் நம் இந்தியாவில் போலவே மீன் அப்போதுதான் பிடிக்கப்பட்டது, மிகவும் fresh-ஆக் இருக்கிறது என்பதை நிரூபிக்க மீனின் தலையின் பக்கவாட்டில் இருக்கும் அலகுகளைத் திறந்து காட்டுகிறார்கள்.  எனக்கு எங்கள் ஊர் மீன்மார்க்கெட்தான் ஞாபகத்திற்கு வந்தது.  அலகுகளின் அடியில் இருக்கும் மீனின் சுவாச உறுப்புக்களான gills  சிவப்பாக இருந்தால் புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் என்று அர்த்தம்.

நைரோபியின் இன்னொரு முக்கியமான இடம் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி கென்யாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெடி வைத்து அல்கொய்தாவால் தாக்கப்பட்டதை நினைவுகூறும் நினைவுப் பூங்கா.  இந்தப் பூங்காவில் தாக்குதலில் எரிந்த கட்டடத்தின் சில இரும்புக் கம்பிகளை ஒரு உருவமாக வடித்துவைத்திருக்கிறார்கள்.  சம்பவத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் சிறு கண்காட்சியும் இருக்கிறது.  பூங்காவிற்குள் நுழையக் கட்டணம் உண்டு.  இருபது ஷில்லிங்தான்.  இருப்பினும் இங்கே உஹுரு (சுதந்திர) பூங்காவில் போல ஏழைகளைப் பார்க்க முடியவில்லை.

தாக்குதல் நடந்த பதினைந்தாவது ஆண்டு தினத்தில் – இந்த ஆகஸ்டு ஏழாம் தேதி – நைரோபி விமானநிலையம் தீப்பற்றி எரிந்திருக்கிறது.  இது அல்கொய்தாவின் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருக்கிறது.  பெரிய தீ விபத்தைச் சமாளிக்கும் அளவிற்கு தீயணைப்புச் சாதனங்கள் இல்லாததால் விமானநிலையத்தின் பெரும்பகுதி சேதமடைந்திருப்பதாகத் தெரிகிறது.

மசாய் பழங்குடி மக்களின் கைவினைப் பொருள்களை விற்கும் திறந்த வெளிச்சந்தை ஒன்று நைரோபியில் தினம் வேறு வேறு பகுதிகளில் நடக்கிறது.  இங்கு வரிசை வரிசையாகக் கடைகளில் மரத்தால், தோலால், துணியால் செய்த பொருள்கள் விற்கப்படுகின்றன்.  இங்கும் பேரம் உண்டு.  ஆனால் சிட்டி மார்க்கெட் அளவு மோசம் இல்லை.  தங்கள் பொருள்களை விற்கும் பழங்குடி மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.  இது பயணிகள் விரும்பி வரும் இடம்.  இந்தச் சாமான்களை வாஙக கென்ய இந்தியர்களும் வருகிறார்கள்.

நைரோபியின் சாலைகளை ஒட்டிய நடைபாதைகளில் ஏழை வியாபாரிகள் கடை விரித்திருக்கிறார்கள்.  இந்தக் கடைகளில் நம் நாட்டு நடைபாதைக் கடைகளைப் போல வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்கள், செருப்புகள், தயார் உடைகள் முதலியன கிடைக்கும்.  இங்கு சாமான் வாங்க ஸ்வாஹிலி தெரிந்திருக்க வேண்டும்.  ஒரு சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு சந்தில் நெடுகக் காய்கறிக் கடைகள் இருந்தன.  இந்தக் கடைகளில் தேங்காய், பச்சைமிளகாய், பாகற்காய் போன்ற இந்தியக் காய்கறிக்ளும் இருந்தன.  இங்கும் வியாபார மொழி ஸ்வாஹிலியே.  காய்கறிகள் வாங்கும் கென்ய இந்தியப் பெண்களும் இந்த மொழியிலேயே பேரம் பேசுகிறார்கள்.

சூப்பர் மார்க்கெட்டிலும் டிபார்மெண்ட் ஸ்டோர்களிலும் இந்தியர்கள் உப்யோகிக்கும் பல பொருள்கள் கிடைக்கின்றன.  குக்கர், சாஸ் பேன் போன்ற எவர்சில்வர் பாத்திரங்கள், மிக்ஸர், முறுக்கு முதலான பலகாரங்கள் எல்லாம் கிடைக்கின்றன . பல இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவை.  பல கடைகள் கென்ய இந்தியர்களுக்குச் சொந்தமானவை.

அமெரிக்க மாடல் மால்களில் கிட்டத்தட்ட அமெரிக்க பிராண்டு சாமான்கள் எல்லாம் கிடைக்கின்றன.  சாக்கலேட்டுகள், சானிடரி நாப்கின்கள், குழந்தைகளுக்கான டயப்பர்கள் ஆகிய எல்லாம் கிடைக்கின்றன.  அமெரிக்காவைப் பின்பற்ற ஏன் இப்படி எல்லா நாடுகளும் துடிக்கின்றனவோ.  அமெரிக்க மாடலிலேயே கடைகள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.  நைரோபி முழுவதும் இப்படிப்பட்ட மால்கள் ஆங்காங்கே இருக்கின்றன.  பணம் படைத்த பகுதியில் இருந்த மால் மிகவும் பெரியதாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இருந்தது.  அதற்கு அருகே இருந்த வீடுகள் பெரிய மான்ஷன்களாக இருந்தன.  இந்த மான்ஷன்களைச் சுற்றியிருந்த மிக உயரமான சுவர்களில் நவீன பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன.  பணக்கார அமெரிக்கா, ஏழை அமெரிக்கா என்ற இரண்டு அமெரிக்காக்கள் உருவாவதைத் தடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் அறைகூவுவார்கள்.  கென்யாவிலும் இந்த மாதிரியான அரசியல் பேச்சு இருக்கிறதா என்று தெரியவில்லை.  ஆனால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

தொடரும்

நைரோபி நகரின் படங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

படங்கள்: மெல்லியல்

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க