Blog

  • TRY this ANGLE”(CHANGE THE ANGLE OF VISION)

    “பார்வையின் கோணத்தில் பேதம் விலகிட –
    பார்க்கும் பொருள்கள் பரமசிவம் -தீர்வை –
    அவனிடமே விட்டு அகார்யமாய் வாழு,
    சிவனிட பாகத்தைச் சார்ந்து “….கிரேசி மோகன் ….!

    சரியா !….இல்லை பகவான் சொல்வது போல ‘’சப்தஜால மஹாரண்யத்தில்(சொற்கள் என்னும் பெருங்காடு)’’ சஞ்சரிக்கின்றேனா….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender

    ”அன்பே எதுகையாய் ஆர்வமே மோனையாய்
    உன்பால் தளையற்ற உந்துதலால் -வெண்பாக்கள்
    பாடி அணுகுகிறேன் வேடிக்கைக்(கு) அல்லகண்ணா
    வாடிக்கை யாளனாக வா”….கிரேசி மோகன்….!

    Share
  • ஏவுகணைகள் – சிஏஜி அறிக்கை

    பவள சங்கரி

    தலையங்கம்

    சிஏஜி யின் அறிக்கையின்படி நமது ஏவுகணைகள் எட்டுவித காரணங்களால் தரம் தாழ்ந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகளைக்கொண்டு சீனாவோடு போர் மூண்டால் அதிக காலம் போரில் நிலைத்து நிற்பது சிரமம் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    இன்று பாகிசுதானில் அந்நாட்டு பிரதமர் தவறு செய்துள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டு பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதோடு இனி வாழ்நாள் முழுவதும் அரசு மற்றும் அரசியலில் பங்குகொள்ள இயலாதவாறு செயல்படுத்தப்படுகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை குறுகிய காலம் நிர்ணயிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஏவுகணைகளைப் பொறுத்தவரை தரக்கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தின் (DRDO) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டும் சிஏஜி யால் தரம் குறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டால் தவறு எங்கே நடந்துள்ளது என்று கண்டறியப்பட்டு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். பாதுகாப்பு விசயத்தில் மெத்தனம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.

    Share
  • இந்திய விண்ணுளவி சந்திரியான் நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில் பேரளவு நீர்வெள்ளம் இருப்பதைக் காட்டியுள்ளது

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++++++++++

    http://www.cbsnews.com/videos/scientists-say-theres-water-underneath-the-moons-crusty-surface/

    http://www.onenewspage.com/video/20170724/8525368/Interior-Of-The-Moon-May-Contain-Water.htm

    https://astrogeology.usgs.gov/geology/moon-pyroclastic-volcanism-project

    +++++++++++++++

    unnamed (4)

     

    நிலவின் ஒளிபுகா  துருவக் குழிகளில்
    நீர்ப்பனித் தேக்கம் பேரளவு
    இருப்பதாய் நாசா நிபுணர்
    தெரிவிக்கிறார் !
    குடிநீரை விண்கப்பலில்
    கொண்டு செல்வது
    கோடி கோடிச்  செலவு !
    மறைமுக நீர்ப்பனிப் பாறை
    பல யுகங்களாய்
    உறைந்து கிடக்கும்
    பரிதி ஒளிக்கதிர் படாமல் !
    எரிசக்தி உண்டாக்கும்
    அரிய வாயு ஹைடிரஜன்
    சோதனை மோதலில் வெளியேறும் !
    செவ்வாயிக்குச் செல்லும்
    பயணிகட்குத்
    தங்குமிடம் அமைக்க
    வெண்ணிலவில் பனிப்பாறைத்
    தண்ணீர் வசதி !
    எரிசக்தி ஹீலிய வாயு
    பிராண வாயு சேமிக்கும் !
    மீதேன், மெர்குரி, மெக்னீசியம்
    வெள்ளி, அம்மோனியம்
    உள்ளன !
    இந்திய விண்ணுளவி  சந்திரியான்
    துருவக் குழிகளில்
    பெரும் பனிநீர்ப் பாறைகள்
    இருப்பதைக் காட்டும் !
    நிலவின் அடித்தட்டிலும் நீர் உள்ளது  !
    பரிதி ஒளிக்கதிர் புகாத
    படு பாதாளத்தில்
    பாறை நீரைத் திரவ மாக்கி
    மேற்தளத் துக்கு
    ஏற்றுவது சிரம மானது !

    +++++++++++++++++

    Image result for water rich rocks on Moon

     

    நிலவின்  நீர்மயக் கரும் படிவுகள் பல தளங்களில் பரவியுள்ளன. அவற்றிலிருந்து தெரிவ தென்ன ?  அப்பெலோ -15 & -17 பயணத்தில் அமெரிக்க விண்வெளி விமானிகள் கொண்டு வந்த நீரியல் மாதிரிகள் ஒருதடவை நேர்ந்தவை அல்ல.  நிலவின்  எரிமலைக் கரும்படிவு மாதிரிகள்  [Lunar Pyroclastics] யாவும், நிலவின் உட்தள நீர்மயச் செழுமையைக் காட்டுகின்றன.

    ரால்ஃப்  மில்லிக்கன் [பிரௌன் பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியர், தலைமை ஆய்வாளர்]

    அப்பொலோ மாதிரிகள் நிலவின் உட்தளம் வெளியேற்றிய எரிமலைச் சாம்பல்கள்.  அவை ஆழ்ந்து சோதிக்கப் பட வேண்டியவை. ஆனால் சோதிக்கப் படாதவை.  ஏறக்குறைய மாதிரிகள் அனைத்தும் நீர்த்தடம் உள்ளதாகக் காட்டியுள்ளவை. ஆதலால் நிலவின் உட்தளம் ஈரமானது என்பது இப்போது ஆய்வு மூலம் அறியப் படுகிறது.

    ரால்ஃப்  மில்லிக்கன் [பிரௌன் பல்கலைக் கழகத் துணைப் பேராசிரியர், தலைமை ஆய்வாளர்]

    Evidence from ancient volcanic deposits suggests that lunar magma contained substantial amounts of water, bolstering the idea that the moon’s interior is water-rich.
    Credit: Olga Prilipko Huber

    நிலவின் உட்தளத்தில் நீர்மய இருப்புக்கு மிகுந்த ஆதாரங்கள், எப்படியோ சந்திரனில் நீர் வெள்ளம் நீடித்துப் பிழைத்துள்ளது என்பதைக் காட்டுகின்றன. மோதலில் தோன்றிய நிலவை, முரண்கோள், வால்மீன்கள் தாக்கி நீர் மேவி உடனே உறைந்து போயுள்ளது.  நிலவின் உட்பகுதியில் எப்படி நீர்வெள்ளம் புகுந்தது என்பதுதான் நமது இப்போதைய பெரிய கேள்வி !

    சூவாய் லி  : நிலவு உட்தள நீர்மயத் துணை ஆய்வாளர்

    நிலவின் குளிர்ந்த துருவங்களில் உள்ள  ஒளிமறைவுக் குழிகளில் நீர்ப்பனிக்கட்டிகளை விண்ணுளவிகள் படமெடுத்துள்ளன. ஆனால் நிலவின் மேற்தளத்தில் காணும் எரிமலைச் சாம்பல் படிவுகளை [Pyroclastic Deposits] எடுத்து ஆய்வு செய்வது எளிது. எதிர்கால விண்வெளி விமானிகட்கு பூமியிலிருந்து ஏராளமான தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வருவதைத் தவிர்க்கும் எந்த நீர்மயக் கண்டுபிடிப்பும் ஒருபெரும் முன்னடித் தடவைப்பே !  எமது ஆய்வு விளைவும் ஒரு புதிய மாற்று வழியைக் காட்டுகிறது.

    சூவாய் லி  : நிலவு உட்தள நீர்மயத் துணை ஆய்வாளர்

     

    [Click to Enlarge]

    நிலவின் தளம் மீது நீர்மயப் பாறைகள் கண்டுபிடிப்பு

    நிலவின் குளிர்ந்த துருவப் பகுதிகளில் உள்ள ஒளிபுகா உச்சக்குளிர் ஆழக் குழிகளில் [Shackleton Crater in South Pole] பேரளவு நீர்ப்பனிக் கட்டிகள் இருப்பதை நாசா விண்ணுளவி [Lunar Reconnaissance Orbiter (LRO)], இந்திய விண்ணுளவி சந்திரியான் -1 ஆகிய இரண்டும் கண்டுபிடித்துள்ளன.  இந்த நீர்வளம் நிலவிலிருந்து திரவமாய் எடுக்கப்பட்டால் அம்முயற்சி சிக்கன முறையில் எதிர்கால அண்டவெளிப் பயணங்கள் தொடர்ந்து திட்டமிடப் பேருதவி புரியும்.

    அந்த உச்சக்குளிர் ஆழ்குழியில் எத்தனைத் டன்  நீர்ப்பனிக் கட்டிகள் உள்ளன என்று தெரியாது.  ஆழ்குழி முழுவதும் நிரம்ப வில்லை. சாக்கிள்டன் ஆழ்குழி 12 மைல் [20 கி.மீ.] விட்டம் உள்ளது, 3 மைல் [4.4 கி.மீ.] ஆழம் கொண்டது.  அது நிலவில் உள்ள மிகப்பெருங்குழி என்று அறியப் படுகிறது.  நிலவின் வட துருவ  ஆழ்குழிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் நீர்ப்பனிக் கட்டிகளில் சுமார் 600 மில்லியன் மெட்ரிக் டன் நீர் வெள்ளம் இருப்பதாகக் கணிக்கப் படுகிறது.  அந்த நீர்க் கொள்ளளவை மின்சாரம் மூலம் பிரித்தெழும் வாயுக்களைத் திரவ ஹைடிரஜன்/ திரவ ஆக்சிஜென் ஆக மாற்றினால் 2200 ஆண்டுகளுக்கு தினமொரு விண்வெளி மீட்சிக் கப்பலை [NASA Space Shuttle] ஏவிட முடியும்.  விண்வெளிப் பயணத்தின் போது விமானிகள் குடிக்க ஏராளமான நீர்ப்புட்டிப் பாட்டில்களை மிகுந்த செலவில் சுமந்து செல்ல வேண்டாம். விண்வெளி விமானிகள் தங்கவும், ராக்கெட் எரிசக்தியை மீண்டும் நிரப்பிக் கொளவும் நிலவுக் குடியிருப்புக் கூடாரங்கள் நிறுவ ஏதுவாக இருக்கும்.

     

    “நிலவின் ஆழ்குழிப் பனிப் பாறையிலிருந்து நீரை எப்படி வெளியேற்றுவது என்பதே முக்கியப் பிரச்சனை !  இது பொறிநுணுக்க நிபுணருக்கு முதலில் தீர்க்க வேண்டிய ஒரு சவாலாக இருக்கும்.  நிலவின் நீரை அறுவடை செய்து பயன்படுத்த இன்னும் நீண்ட காலம் ஆகலாம்.  முதலில் நீர் நிலவில் எப்படித் சேர்ந்தது என்பதை அறிவதே அதைச் சேமிக்க ஏறும் முதற்படி.

    டெட்லெஃப் கோஸ்சினி (ESA Chandrayaan -1 Project Scientist)

    “நிலாவில் நீர் இருப்பதாக நாசா உறுதி செய்திருக்கிறது.  விண்வெளித் தேடலுக்கு வேண்டிய குடிநீர், மற்றும் மனிதர் சுவாசிக்க ஆக்ஸிஜன், ராக்கெட் எரிசக்திக்குப் பயன்படும் எரிவாயு ஹைடிரஜன் போன்ற முக்கிய தேவைகள் இருப்பதையும் நிரூபித்துள்ளது.”

    மைக்கேல் வார்கோ (பிரதம நிலா உளவு விஞ்ஞானி, நாசா தலைமைக் கூடம்)


    “வாயு மண்டலம் இல்லாத வரண்ட சந்திரனில் நிரந்தமாய் சூரிய வெளிச்சம் இல்லாத ஆழ்குழிகளில் நீண்ட காலம் நீர் இருக்க எப்படிச் சாத்தியமாகிறது ?  நிலவின் துருவப் பகுதிகளில் பரிதி வெளிச்சம் 2 டிகிரிக் கோணத்துக்கும் குறைவான தொடுவானில் பட்டும் படாமலும் தெரிகிறது.  ஆழ்குழிகளின் விளிம்புகள் நிரந்தரமாய்ப் பள்ளத்தின் கீழ்த்தரையைப் பல பில்லியன் ஆண்டுகளாக முற்றிலும் மறைத்து வந்துள்ளன.  அத்தளங்களின் குளிர் உஷ்ணம் (-200 டிகிரி C).  அவ்விதம் நீர்ப் பனிக்கட்டி ஆழ்குழிகளில் பேரளவு இருப்பதால் பிற்காலத்து விண்வெளி விமானிகளுக்குக் குடிநீராகவும், சுவாசிப்பு வாயுவாகவும், ஏவுகணை எரிவாயுவாகவும் உபயோகமாகும்.”

    டோனி கொலாபிரீட் லகிராஸ் திட்ட விஞ்ஞானி.

    “நிலவில் கண்ட (LCROSS Spacecraft) நீர் மாதிரிகள் பரிதி மண்டலம் உண்டான தோற்ற வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் அறியப் பயன்படும்.”

    கிரேக் டெலோரி (Greg Delory Senior Fellow Space Sciences Lab & Center)


    “தூரத்து உளவு செய்வதில் (Remote Sensing) இந்தச் சோதனை முடிவு (பனிப்படிவுக் கண்டுபிடிப்பு) சாதனையில் உயர்வானது.  நிலவில் கால் வைக்காமல் நிலவைத் தோண்டாமல் இவ்விதம் சோதனை புரிவது உன்னத முறை என்பதில் ஐயமில்லை.  கடினமான அந்தச் சோதனையை (Bi-Static Experiment) நாங்கள் செய்து முடித்தோம்.  பனிப்படிவு ரேடார் சமிக்கைத் தகவலை ஆராய்ந்து விளைகளை வெளியிடச் சில வாரங்கள் ஆகும்.”

    ஸ்டீவர்ட் நாஸெட் (Srewart Nozette NASA Mini-RF Principal Investigator, LRO)

    “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

    டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) (ஜனவரி 26, 2008)



    நிலவின் இருதுருவங்களிலும் பனிநீர் சேமிப்புகள் இருப்பது உறுதியானது

    2010 அக்டோபர் 22 தேதி மலர்ந்த ஆங்கில விஞ்ஞான வெளியீட்டில் (Journal of Science) பதிவாகியுள்ள ஆறு தனித்தனி அறிக்கைகள் நாசாவின் சோதனை விளைவுகளை மீளாய்வு செய்ததில் தென் துருவத்தில் இருக்கும் காபியஸ் ஆழ்குழியில்  (Cabeus Crater) மட்டும் பில்லியன் காலன் அளவு நீர் இருப்பதாக கணித்துள்ளன.  நாசா ரேடார் கருவி மூலம் இப்போது நிலவின் வட துருவ ஆழ்குழி களிலும் பனிநீர் ஏரிகள் இருப்பதாக உறுதிப் படுத்தியுள்ளது.  ஓராண்டுக்கு முன் (அக்டோபர் 9, 2009) நாசா லகிராஸ் விண்ணுளவி (LCROSS – Lunar Crater Observation & Sensing Satellite) நிலவில் மோத விடப்பட்டு பரிதி ஒளிபுகாத ஆழ்குழிகளில் பனிநீர் ஏரிகளும் மற்ற உலோக மூலக்கூறுகளும் இருப்பது உறுதி செய்யப் பட்டது.  முதல் சோதிப்பில் நாசா, மோதலில் எழுந்த தூசி, துணுக்குகளில் நீரோடு மற்றும் சிறிதளவு ஹைடிரஜன், கார்பன் மானாக்சைடு, அம்மோனியா, மீதேன், மெர்குரி, கந்தகம், வெள்ளி, மெக்னீசியம், சோடியம் ஆகிய உலோகக் கூட்டுகளையும் கண்டுள்ளது.  மோதலில் வெளியேறிய தூசி, துணுக்கு களில் குறிப்பாக பனிநீர் மட்டும் 5.6% பகுதி என்று நாசா அறிவித்துள்ளது.  2009 அக்டோபரில் வெளியான முதல் அறிவிப்பில் நாசா 200 பவுண்டு நீர் வெளியேறியது என்று கூறியது.  இப்போது (2010 அக்டோபர்) வந்த விஞ்ஞான வெளியீட்டில் நாசா துல்லியமாக 341 பவுண்டு என்று தன் அளவை மிகைப் படுத்தியுள்ளது.

    நிலவில் ஓரளவு நீர் இருப்பதாக வந்த முதல் நாசா அறிக்கை இப்போது நிலவில் உறைந்து கிடக்கும் நீர் ஏரிகள் பற்பல இருப்பாதாக மிகைப்படுத்தி, விஞ்ஞான வெளியீட்டில் ஆறு அறிக்கைகள் புதிய தகவலை எழுதியுள்ளன. இந்த அறிவிப்பு நிலவுக்குப் படையெடுக்கும் பல நாடுகளுக்கு (அமெரிக்கா, ரஷ்யா, ஈசா, சைனா, ஜப்பான், இந்தியா) மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்ச்சி.  1960 -1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் அமெரிக்க அபொல்லோ விமானிகளுக்கு விண்கப்பலில் ஒரு பவுண்டு நீர் சுமந்து செல்ல 50,000 டாலர் செலவானது.  இப்போது நீர்ச் சுமக்கும் நிர்ப்பந்தம், பணச் செலவு அதிகமில்லை என்பதாகி விட்டது ! ஹைடிரஜன், ஹீலிய-3 எரிவாயு நிலவில் கிடைப்பதால் விண்கப்பலுக்கு எரிசக்தியும் கிடைக்கிறது.  அதாவது செவ்வாய்க் கோளுக்கு 2020 ஆண்டுகளில் செல்லும் உலக நாடுகளுக்கு நிலவு ஓர் ஒப்பற்ற ஓய்வுத் தளமாக இருக்கக் எல்லாத் தகுதியும் பெறுகிறது.  1960 -1970 ஆண்டுகளில் உலவிய அமெரிக்க விமானிகள் சுகத் தளங்களில் மட்டும் ஆய்வு செய்து, வெகு பயன் அளிக்கும் ஆழ்குழிகளை ஆராயத் தவறி விட்டனர் !


    2009 ஆகஸ்டில் நிலவுக்குப் பயணம் செய்த சந்திரயான் -1 இந்திய விண்ணுளவியில் அமைக்கப் பட்ட “சாரா” கருவி (SARA -Sub-keV Atom Reflecting Analyzer) நிலவுத் தளத்தில் மனித வசிப்புக்குத் தேவையான நீரிருப்பதைக் காட்ட வழி வகுத்துள்ளது.

    நிலவின் துருவ ஆழ்குழிகளில் நீர் எப்படி உண்டானது ?

    சமீபத்தில்தான் வானியல் விஞ்ஞானிகள் நிலவில் எப்படி நீர் தோன்றியது என்பதற்கு விளக்கம் அறிவித்துள்ளார்.  சந்திரன் ஒருவித “உறிஞ்சு சேமிப்பியாக” (Sponge) இயங்குகிறது. நிலவின் மேற்தளம் “ரிகோலித்” என்னும் “தூசிப் பரல்கள்” (Dust Grains Called Regolith) தாறுமாறாக மேவிய தளப்பகுதி.  ரிகோலித் பரல்கள் பொதுவாக பரிதியிலிருந்து வெளியேறும் மின்னேற்றத் துகள்களை (Electrically Charged Particles) உறிஞ்சும்.  அந்தத் துகள்கள் ஏற்கனவே நிலவுத் தூசியில் (Dust & Voila) கலந்துள்ள ஆக்சிஜனோடு இணைந்து நீர் உண்டாக்குகின்றன.  தூசிப் பரல்களில் பரிதியின் புரோட்டான்கள் பிடிபட்டு ரிகோலித்தில் உள்ள ஆக்சிஜனோடு இணைத்து ஹைடிராக்சியல் (HO) மற்றும் நீர் (H2O) உருவாகின்றன.

    சந்திரயான் -1 இல் அமைக்கப் பட்ட சாரா கருவி நமது பரிதி மண்டலக் கோள்களைச் சீராக அறிய உதவுகிறது.  பரிதியி லிருந்து வரும் புரோட்டான்கள், விண்வெளியில் திரியும் எலக்டிரான்களுடன் சேர்ந்து ஹைடிரஜன் வாயுவாக மாறுகின்றன.  அதை நிலவின் ரிகோலித் பரல்கள் பிடித்து வைத்துக் கொள்கின்றன.

    நிலவில் இப்படித்தான் ஹைடிரஜன், ஹைடிராக்சியல், நீர் ஆகியவை உருவாகின்றன.  சாரா கருவி மூலம் நிலவின் மேற்தளத்தில் உள்ள மூலகங்களையும், மூலக் கூறுகளையும் நேரிடையாக அறிய முடிகிறது.  சந்திரயான் -1 இல் பணிசெய்த சாரா கருவி அமைப்பில் பன்னாட்டுக் கூட்டுழைப்பு (சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், இந்தியா) உள்ளது.  சமீபத்தில் நாசாவின் சந்திரயான் ரேடார் கருவி நிலவின் வடதுருவக் குழிகளில் குறைந்தது 600 மில்லியன் மெட்ரிக் டன் பனிநீர்க் கட்டி இருக்க வேண்டும் என்று காட்டியுள்ளது.

    வால்மீன்கள் நிலவில் மோதி நீரைக் கொட்டி இருக்கலாம் என்னும் ஒரு கோட்பாடு இருப்பினும், தற்போது விஞ்ஞானிகள் நிலவின் நீர் “உள்நாட்டுச் சரக்கு” தவிர புற அண்டப் பொழிவில்லை என்று ஊகிக்கிறார்.  வானியல் ஆய்வாளி டாக்டர் யாங் லியூ இதைத்தான் மேலும் வலியுறுத்துகிறார் : “வால்மீன் போன்ற பிற அண்டங்கள் நீரை வாரி நிலவில் இறைத்தி ருந்தால் இப்போது காணப்படும் நிலவின் நீரில் சோடியம், பொட்டாசியம் போன்ற எளிதில் ஆவியாகாத மூலகங்கள் (Less Volatile Elements) ஏன் மிகவும் சுருங்கிப் (Strongly Depleted) போயிருக்க வேண்டும் ?” என்று கேட்கிறார்.

    காபியஸ் போன்ற நிரந்தரமாய் பரிதி ஒளி பாயாத ஆழ்குழிகளின் உஷ்ணம் – 387  F (-233 C).  இந்தக் கடுங்குளிரில் நீர் பல பில்லியன் ஆண்டுகளாகச் சேர்ந்து திண்ணிய பனிப்பாறை யாகப் படிந்துள்ளது. சூரிய மண்டலத்தில் நிலவின் ஒளிமறைவுக் குழிகள் கடுங்குளிர்ப் பகுதிகளாக மாறிவிட்டன !  இந்தப் படுபாதாளக் பனிப் பாறைகளை இருட்டில் உருக்கி நீரை மேலேற்றிக் கொண்டு வருவது 21 நூற்றாண்டின் பெரும் சவாலான அசுர சாதனையாக இருக்கும் !

    வெண்ணிலவில் தண்ணீர் இருப்பதை நாசா உறுதிப் படுத்தி உள்ளது

    2009 நவம்பர் 13 ஆம் தேதி நிலவின் நிரந்தர நிழல் ஆழ்குழிகளில் (Shadow Craters) கணிச அளவு நீர் இருப்பதை சமீபத்தில் நாசா ஏவிய லகிராஸ் விண்ணுளவியை (LCROSS Spaceship – Lunar Crater Observation & Sensing Satellite) வெகு வேகமாக மோத விட்டு முதன்முதல் உறுதிப்படுத்தியது.  லகிராஸ் விண்ணுளவி தெரிந்த பூமி நீரின் நெருங்கிய உட்சிவப்பு ஒளி முத்திரையை (Known Near-Infrared Light Signature of Water) கைவசம் வைத்துக் கொண்டு மோதிய சிதறலில் வெளியேறிய ஒளிப்பட்டைப் பதிவை ஒப்புநோக்கித் தெளிவாக நீரிருப்பதை நிரூபித்தது.  உட்சிவப்பு ஒளிப்பட்டைமானி (Infrared Spectrometer) வெளியே சிதறிய துகள்கள் உமிழும் அல்லது விழுங்கும் ஒளியலை களின் நீளங்களை உளவிக் கனிமங்களில் உள்ள உட்பொருட்களை (Composition of Materials) ஆராய்ந்தது.


    அத்துடன் இரண்டாவது சோதனை உளவாக லகிராஸின் புறவூதா ஒளிப்பட்டை மானி (LCROSS Ultraviolet Spectrometer) பரிதி ஒளி நீரைப் பிரித்து விளைவிக்கும் ஹைடிராக்சியல் அயனிகளின் சக்தி முத்திரையை (Energy Signature of OH Ions) அளந்து மேலும் நீர் இருப்பை உறுதிப் படுத்தியது.  லகிராஸ் ஏவுகணை நிலவைத் தாக்கி வெளியேறிய நீர் மயம் சுமார் 24 காலன் (7.6 லிட்டர்) என்று கணிக்கப் படுகிறது.  நிலவு மோதல் சோதனையை நடத்த நாசா முன்பே தேர்ந்தெடுத்த இருட்பள்ளம் தென் துருவத்தில் உள்ள “காபியஸ் -ஏ” (Shadow Crater Cabeus -A).  25 மைல் (40 கி.மீடர்) அகண்ட இந்தக் குழி சூரிய வெளிச்சம் படாத ஒரு பள்ளம். இதில் படிந்துள்ள பனிநீர்ப் படிவு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் படிந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.

    இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து செய்த நிலவுச் சோதனை

    2009 ஆகஸ்டு 20 ஆம் தேதியன்று இந்திய விண்வெளி ஆய்வுக் குழுவும் நாசாவின் விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து ஒரு நூதனச் சோதனையை சந்திரனின் வடதுருவப் பகுதியில் புரிந்தன.  அந்த அரிய சோதனைக்கு இந்தியத் துணைக்கோள் சந்திராயன் -1, நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter -LRO) ஆகிய இரண்டும் இணையாகத் துருவப் பகுதிகளைத் துருவி நோக்கிப் பனிப்படிவைக் கண்டுபிடித்து நிலவுத் தள ஆய்வில் ஒரு புது மைல் கல்லை நாட்டின !  முதன் முதலாகக் காணப்பட்ட அந்த பனிப்படிவு நிலவின் வடதுருவப் பகுதியில் பரிதி ஒளிக்கு மறைவான “எர்லாஞ்சர்” என்னும் ஓர் படுகுழியில் (Lunar Crater Erlanger in the Polar Region) கிடந்தது !  அதன் சமிக்கையை ஒரே சமயத்தில் இந்தியாவின் சந்திரயான் கருவியும், நாசாவின் நிலாச் சுற்றியும் உறிஞ்சி எடுத்துள்ளன என்பது வியக்கத் தக்க நிகழ்ச்சி.

    அந்த ஆய்வுச் சோதனைக்குப் பெயர் ‘இரட்டை நிலைநோக்குச் சோதனை’ (Bi-Static Experiment).  நிலவைச் சுற்றி வரும் இரண்டு விண்ணுளவிகளில் உள்ள “நுண்ணலை ரேடியோ அதிர்வுக் கருவிகள்” (Miniature Radio Frequency Instrument: Mini-RF) பனிப்படிவுச் சமிக்கையை உறிஞ்சி தள ஆய்வு அரங்குகளுக்கு அனுப்பியுள்ளன.  இன்னும் சில நாட்களில் அந்தப் பனிப்படிவில் உள்ளது நீரா அல்லது வேறு வாயுவா என்று ஆராய்ந்து உறுதியாக உலகுக்கு அறிவிக்கப்படும் !  மேலும் ஆராய்ந்து சேமிக்கப்படும் தகவலில் மறைந்த குழிப் பகுதிகளில் ‘புதைபட்ட பனிப்படிவுகள்’ இருக்கலா மென்று தெரியவரும்.  இந்தப் பனிப்படிவு சமிக்கை நீர் என்று நிரூபிக்கப் பட்டால் நிலவில் நிரந்தர ஓய்வுக்கூடம் அமைக்கப் போகும் நாசாவுக்கு மாபெரும் வெற்றியாகும்.  இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பகமும் நாசாவைப் போல் பின்னால் சந்திரனில் ஓர் ஓய்வகம் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது !

    நிலவு பனிநீர்க் கண்டுபிடிப்பில் எதிர்காலப் பிரச்சனைகள்

    நாசா லாகிராஸ் விண்ணுளவியை அனுப்பி நிலவில் மோதவிட்டு நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதிப் படுத்தியது ஒரு முதற்படி வெற்றியே !  அதன் பயன்களை உபயோகப் படுத்த நாசா பன்முகச் சாதனங்களைத் தற்போது அமைக்க வேண்டும்.  இப்போது விஞ்ஞானிகளுக்கு எழும் வினாக்கள் இவை :  பல பில்லியன் ஆண்டுகளாக நிரந்தர நிழற்குழிகளில் நீர்க்கட்டிகள் எவ்விதம் படிந்தன என்று ஆராய்வது முதல் கேள்வி !  அடுத்து அந்தப் படுகுழிப் பனிநீர்க் கட்டியை பரிதி வெளிச்சம் படாத பள்ளத்தில் எப்படி உருக்கி நீர்த் திரவமாக்குவது என்பது இரண்டாவது கேள்வி !  அடுத்து அந்த நீரை எப்படி மின்சாரப் பம்ப்புகள் அங்கே அமைத்து மேலே நிலவின் மேற்தளத் துக்குக் கொண்டு வருவது என்பது மூன்றாவது கேள்வி !  அடுத்து ஹைடிரஜனையும் ஆக்ஸிஜனையும் எப்படிப் பிரிப்பது, எப்படிச் சேகரிப்பது போன்ற வினாக்கள் எழுகின்றன.  அனைத்துக்கும் பரிதியின் வெப்ப சக்தியைப் பயன்படுத்த மாபெரும் சூரியசக்தி சேமிப்புக் கலன்கள் பூமியில் அமைக்கப்பட்டு மற்ற சாதனங்களுடன் நிலவுக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். இவை யாவும் உலக நாடுகள் செய்ய வேண்டிய எதிர்கால அசுர சாதனைகளாக இருக்கும் !  இதற்கு அமெரிக்க அரசாங்கம் இப்போது போதிய நிதித் தொகை ஒதுக்குமா என்பது விடை அறிய முடியாத வினா !

    தகவல்:

    Picture Credits : NASA & ESA The Hindu, ISRO & other Science Websites

    1. Indian Space Program By: Wikipedia

    2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html (இந்தியத் துணைக்கோள் சந்திரனைச் சுற்றுகிறது)

    3. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html (இந்திய மூவர்ணக் கொடிச் சந்திரனில் தடம் வைத்தது)

    4. Times Now  India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]

    5. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]

    6 Cosmos Magazine  The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]

    7.  Chandrayaan-1 Enters Lunar Orbit Makes History [Nov 8, 2008]

    8.  Latest News Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]

    9  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]

    10. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]

    11 India Mulls Using Nuclear Energy to Power Chandrayaan -2 (August 8, 2009)

    12 The Search for Ice on the Moon Heats up By : Jeff Salton (August 2, 2009)

    13 Space Spin – LRO, Chandrayaan -1 Team up for Unique Search for Water Ice By : Nancy Atkinson (August 19, 2009)

    14 LRO & Chandrayaan -1 Perform in Tandem to Search for Ice on the Moon (August 22, 2009)

    15 Hindustan Times – Indo-Asian News Service, Bangalore “India’s Lunarcraft Hunts for Ice on Moon with NASA Lunar Reconnaissance Orbiter (August 21, 2009)

    16. IEES Spectrum Interview of G. Madhavan Nair Head of India Space Agency (June, 2009)

    17 Indian Space Research Organization (ISRO) Press Release – ISRO-NASA Joint Experiment to Search for Water Ice on the Moon. (August 21, 2009)

    18 ESA Moon Water Report – Hydrogen Offers a New Way to Study the Moon & The Moon Seen By Chandrayaan -1 (Oct 16, 2009)

    19. National Geographic News – Moon Crash, New Maps to Aid Search for Lunar Water By : Anne Minard (June 17, 2009)

    20.  Space Flight Now : NASA’s Smashing Way of Answering a Watery Question (June 17, 2009)

    21. National Geographic News – Moon Crash to Put All Eyes on the Crater Cabeus A (Sep 11, 2009)

    22  Water Found on the Moon By : Andrea Thompson (Sep 23, 2009)

    23. Scientific American :  LCROSS Impact Plumes Containing Moon Water By : John Matson (Nov 13, 2009)

    24 LCROSS Impact Data Indicates Water on the Moon By : Jonas Dina NASA Ames Research Center (Nov 11, 2009)

    25.  National Geographic News – Water on the Moon Confirmed By NASA Crashes By : Ker Than (November 13. 2009)

    26.  International – NASA Finds Water on the Moon (Nov 14, 2009)

    27 Daily Galaxy : Moon Water : Will Lunar-Base Humans be Able to Drink it ? (Nov 14, 2009)

    28 Wired Science : Lunar Impacter Finds Clear Evidence of Water Ice on the Moon (Nov 17, 2009)

    29 https://jayabarathan.wordpress.com/2009/08/27/chandrayaan-1-and-nasa-lro-find-ice/ (இந்தியாவும் நாசாவும் நிலவின் துருவப் பகுதியில் நீர்க்கட்டி கண்டுபிடிப்பு) (ஆகஸ்டு 27, 2009)

    30. ESA News – Hydrogen Offers a New Way to Study the Moon, Detlef Koschny, ESA Chandrayaan -1 Project Scientist (October 16, 2009)

    31 Space.com – Moon Craters Could Be Coldest Place in Solar System By Andrea Thompson (September 18, 2010)

    32. Daily Mail – Scientists Find Even More Evidence of Water on the Moon (July 22, 2010)

    33. Space.com – Tons of Water Ice Found on Moon’s North Pole By Tarq Malik (March 1, 2010)

    34. Space.com – Moon Crater Has More Water than Parts of Earth By Mike Wall (October 21. 2010)

    35. Daily Galaxy – Craters of the Moon – Huge Reservoirs Discovered By Casey Kazan & Rebecca Sato (October 25, 2010)

    36. https://www.technologyreview.com/s/428030/soviet-moon-lander-discovered-water-on-the-moon-in-1976/  [May 30, 2012]

    37.  https://www.theverge.com/2017/7/24/16020132/moon-water-rock-samples-mining-missions  [July 24, 2017]

    38.  https://www.sciencedaily.com/releases/2017/07/170724114125.htm  [July 24, 2017]

    39.  https://www.scientificamerican.com/article/scientists-spot-water-rich-rocks-on-moon/?WT.mc_id=SA_DD_20170725  [July 24, 2017]

    40. http://earthmysterynews.com/2017/07/27/scientists-spot-water-rich-rocks-on-moon/  [July 27, 2017]

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (July 29, 2017)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (3)

     

    மீ.விசுவநாதன்

     

    பகுதி: மூன்று

    பாலகாண்டம்
    இலக்குவனும், சீதையும் உடன் வருதல்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1

    அண்ணனுக்குத் தொண்டாற்றி ஆதிமுதல் வாழும்
    அடக்கமிகு இலக்குவனும் அடவிக்குச் சென்றான்
    மண்மகளாம் ஜானகியும் வருங்காலம் உங்கள்
    வரமென்றே தன்கணவன் மனமொப்பச் சென்றாள்!
    எண்ணத்தில் பாசத்தை ஏற்றிய மன்னன்
    ஈடிலா தயரதனும் எல்லைவரை வந்தான்
    தண்கங்கைக் கரைக்”குகனை” சந்தித்த பின்னால்
    தன்னுடைய மக்களைத் தா(ன்)அனுப்பி வைத்தான் ! (21)

    முனி பரத்வாஜர் ஆஸ்ரமம் அடைதல்

    ஒவ்வொரு வனப்பகுதி உள்ளேயும் சென்று
    ஓடிவரும் ஆறுகளை உற்சாகத் தோடு
    செவ்வானக் கோலமென சிந்தையிலே வைத்து
    சீர்முனியாம் பரத்வாஜர் சிறந்தகுடில் வந்தார் !
    அவ்வேளை அம்முனியின் ஆணையினை ஏற்று
    அழகு”சித்ரக் கூடத்தை” அப்போதே சேர்ந்தார் !
    இவ்விதமாய் மூவருமே இருக்கின்ற வேளை
    இறந்திட்டார் தசரதர் ஈடில்லா மன்னர் ! (22)

    பரதன் அரசேர்க்க மறுப்பதும் இராமனை வேண்டலும்

    வாரிசாய் பரதனை வசிட்டரும் மற்ற
    மகத்தான அந்தணரும் வருந்திட்ட போதும்
    நேரியநற் குணபரதன் நீதியைத்தான் தாங்கி
    நேராகக் காட்டிற்கு இராமவழி சென்றான் !
    நேரிலே அண்ணன்முன் நெஞ்சார வீழ்ந்து
    நீங்களே அரசரென நிசத்தோடு வேண்ட,
    “யார்வந்து சொன்னாலும் யான்கொடுத்த வாக்கை
    அப்படியே காப்பதாய் அண்ணலுமே சொன்னார்!” (23)

    பரதனுக்கு பாதுகை அளித்த இராமன்

    தன்னுடைய பாதுகையைத் தன்தம்பி கையில்
    தனிக்கருணை இராமனும் தந்தனுப்பி வைத்தார் !
    நன்றியுடன் அண்ணனது நல்மொழியைப் பெற்று
    “நந்திகிரா மத்”திலே நற்பாது கையால்
    அன்றுமுதல் பரதனும் ஆட்சியினைச் செய்தான் !
    அண்ணனை எதிர்பார்த்தே அருந்தவமும் ஏற்றான் !
    நன்றிந்த நேரமென, நாட்டோர்கள் யாரும்
    நடந்தறியாக் காட்டிற்குள் நல்ராமன் சென்றான் ! (24)

    ஸ்ரீராம பட்டாபிஷேகம் - ரவிவர்மா ஓவியம்

    அகத்தியமுனிவரை சந்தித்தல்

    “விராத”னெனும் அரக்கனை வீழ்த்திய பின்னே
    வேதமுனி “அகத்தியரின் வேள்விக்கூ டத்தில்
    இராமனும் சீதையும் இலக்குவனும் கூடி
    இணையிலா அகத்தியர் இணையடியைப் போற்ற
    வராதநற் செல்வமே வந்ததாக எண்ணி
    வாழ்த்தினர் மாமுனி வாஞ்சையாய் நன்றாய் !
    அராவணை விட்டுவந்த அழகனுக் கென்றே
    அம்பறாத்துணி இரண்டினை அகத்தியர் தந்தார். (25)

    தண்டகாரண்யத்தில் முனிவர்கள் வேண்டல்

    செந்தீயை வளர்த்துநிதம் வேள்விசெய்வோர் வந்து,
    “தீயதோர் அரக்கர்கள் தினம்தரும் தொல்லை
    இந்திரரே ஆனாலும் எதிர்த்துப்போர் செய்ய
    எப்போதும் அஞ்சுவர் ! இராமனே உங்கள்
    மந்திரவில் கொண்டுடன் மாற்றுவீர்எம் அச்சம் !
    மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்” என்று
    சுந்தர இராமனைத் தோத்திரம் செய்ய,
    “சூழ்வினை தீர்த்துமக்கு சுகந்தருவே” னென்றான் ! (26)

    சூர்ப்பணகையும், இராவணனும்

    அதன்பெயரே ஜனஸ்தானம் ! அங்குதான் தீய
    அரக்கியாம் சூர்ப்பணகை அட்டகாசம் செய்வாள் !
    அதனாலே அவளங்கு அங்கபங்கம் செய்து
    அவமானப் பட்டுவிட்டாள் ! ஆத்திரம் கொண்டு
    முதலாக கரதூஷண மூர்க்கரினை ஏவ
    முற்றுமவர் கொட்டத்தை முடித்திட்டான் ராமன் !
    பதிலுக்கு இராவணன் பழிதீர்க்க எண்ணி
    பற்றுள்ள மாரீசன் பக்கபலம் கேட்டான். (27)

    மாரீசன் நல்லுரை

    “ஆற்றலும், எந்நாளும் அறம்வழுவா நல்ல
    அகத்தாலும் உறுதிபெற்ற ஆண்வீரன் ராமன்
    தோற்றாலும் அவர்முன்னே தோற்றலே வெற்றி !
    தொலைத்திடு வீண்பகையை சொல்வதைக்கேள்” என்றான்.
    தூற்றினான் துப்பினான் தொடர்ந்துவா என்று
    துரத்தினான் மாரீசனை தூயராம தர்மம்
    நோற்றிடும் ஆசிரமம் நோக்கியே ! அந்த
    நூதன மாயாவி நொடியினில் சென்றான். (28)

    இராவணன் சீதையைக் கவர்தல்

    மாயாவி மாரீசன் வஞ்சகமாய் அங்கே
    வளையவந்து இராமனை மயக்கியே ஓட
    ஓயாத இலக்குவனும் ஓடிப்பின் போக
    ஒளிந்துவந்த இராவணனும் உத்தமியாம் சீதைத்
    தீயோடு போய்விட்டான் ! தேவமகள் கத்தும்
    திசைபார்த்து ஜடாயுவும் தேடிப்போர் செய்தார் !
    தீயோனோ ஜடாயுவை வெட்டியே சாய்த்தான் !
    இராமனிடம் கழுகுராஜன் எல்லாமும் சொன்னார் ! (29)

    ஜடாயுவும், சபரியும்

    கலங்கிநின்ற இராகவனோ கழுகுராஜன் ஈமக்
    கடன்முடித்தார் ! சீதையின் கண்ணீரைப் போக்கத்
    துலங்குகிற நாள்தேடிப் போகின்ற போது
    துட்டனாம் “கபந்தனை”க் கொன்றுதீ யிட்டார்!
    நிலம்விட்டுப் போகையில் “இராமாநீ நல்ல
    நெறியாளர் சபரிகுடில் செல்லுக வென்றான் !”
    அலம்பிவிட்ட நிலவொளியில் அமைதியைத் தேடி
    அலைந்தபடி “சபரி”யிடம் அமைதியைப் பெற்றார். (30)

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    ”ட்ராகனுக்கும் வாத்ஸல்யம், மோகனுக்கும் வாத்ஸல்யம்
    மேகவண்ணன் வாத்ஸல்யம் மேன்மையாம் -யோகமே:
    மானார்வ சீதையை மாருதி கண்டாற்போல்
    நானார் விசாரம் நிகழ்த்து”….கிரேசி மோகன்….!

    Share
  • ”படைப்பவரே காப்பவரே துடைப்பவரே”….!

     

    “படைப்பவரே காப்பவரே துடைப்பவரே -நீங்களெலாம் –
    அடைக்கலப் பொருள்தானா! இல்லை
    அடியார்கள் மருள்தானா !….
    கைலாசம் வைகுண்டம் கமலபுரம்
    இவைகளெலாம் -மெய்வி லாசங்களா! இல்லை மேதினி க்லேசங்களா! …,
    ஆத்திகம் நாத்திகம் அத்வைதம் -இவைகளெலாம் -பேத்தல் பயம்தானா! இல்லை ப்ரம்ம மயம்தானா! “
    வாழ்வதுவும்,வளர்வதுவும்,சாவதுவும் -இவைகளெலாம்-வாடிக்கைக் காட்ஷிகளா! இல்லை வேடிக்கை சாக்‌ஷிகளா’’….!கிரேசி மோகன்….!

    Share
  • புக்கெட் (Phuket) (பயணக் கட்டுரை)

    நிர்மலா ராகவன்

    தாய்லாந்தில் உள்ள புக்கெட் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படாத வெகு சுத்தமான, ஆகவே அரிதான, கடற்கரைப் பகுதி. அந்தமான் கடலால் சூழப்பட்டிருக்கும் இத்தீவிற்கு உலகெங்கும் உள்ள உல்லாசப்பயணிகள், குறிப்பாக குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்கள், வருகிறார்கள்.

    IMG_20170716_123346

    சுமார் இருபது வருடங்களுக்குமுன் மீனவர் கிராமமாக இருந்தது புக்கெட். இப்போதோ, அகில உலக விமான நிலையம். தாய்லாந்தின் தென்கோடியில் இருப்பதால், கோலாலம்பூரிலிருந்து விமானப்பயணம் ஒன்றேகால் மணிதான். Air Asia -வில் போனால்அவ்வளவாகக் கையைக் கடிக்காது.

    பொதுவாக, நீல வண்ணம் என்றுதானே கடல் வர்ணிக்கப்படுகிறது? இங்கிருக்கும் அந்தமான் கடல் se green என்ற வகை. வெளிர் பச்சைநிறக் கடல் கொள்ளை அழகு.

    கடை வெளியே அழகுப் பதுமை

    நாங்கள் தங்கியிருந்த கரோன் கடற்கரையை ஒட்டி தென்னை மரமும் சவுக்கு மரமும் அடர்ந்திருந்தன. எதிர்ப்புறம் தெருக்கள். தெருக்களுக்குப் பின்னால் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள்.

    அண்மையில் டெங்கிக் காய்ச்சல் கண்டு, பலவீனமாக இருந்த என் உடல் தேறுவதற்காக என்னுடன் வந்திருந்தாள் என் இளைய மகள் சித்ரா. கடலைப் பார்த்தாலே எனக்கு உற்சாகமாகி விடும் என்று புரிந்தவள்.

    ஆங்காங்கே, `இங்கு குளிக்கக் கூடாது!’ என்று அபாய அறிவிப்பு செய்யும் சிவப்புக் கொடிகள். `குளிக்கப் போவதில்லை. சும்மா காலை நனைத்துக் கொண்டால் என்ன!’ என்று நான் துணிந்து (அசட்டுத்தனமாக?) போக, ஒரு பேரலை எதிர்பாராவிதமாக என்னை வீழ்த்திவிட்டது. கையை ஊன்றி, ஒரு காலை மடித்து உட்கார்ந்து, சிரிக்க ஆரம்பித்தேன்.

    “இந்த இடத்தில் காலைக்கூட நனைக்க முடியாது. அப்படியே வீழ்த்திவிடும்!” என்று உள்ளூர்க்காரி ஒருத்தி என்னிடம் எச்சரிக்கையாகக் கூறினாள். நான் ஏன் வாயைத் திறக்கிறேன்!

    விடுமுறைக்காலம் முடிந்துவிட்டதால், கைத்தடியை ஊன்றி நடந்த, வயது முதிர்ந்த வெள்ளைக்காரர்கள்தாம் அவ்விடத்தில் அதிகம் காணப்பட்டனர். வாழ்க்கை என்றால் ஒரே இடத்தில் இருப்பதில்லை, எத்தனை வயதானாலும், உயிர் உடலில் ஒட்டிக்கொண்டிருந்தால் இயன்றவரை வாழ்ந்து பார்க்கவேண்டும் என்ற பாராட்டத்தக்க குறிக்கோள் உடையவர்கள் அவர்கள்.

    `வயசாயிடுத்து. ஒண்ணுமே முடியலே!’ என்று சுயபரிதாபத்துடன், இருந்த இடத்திலேயே இருப்பது அறிவீனம் என்பது நல்ல பாடமாக அமைந்தது. மனம் இன்னும் தளர வழி செய்வதுபோல்தானே அது?

    தாய்லாந்தில் பெரும்பாலான மக்கள் புத்த மதத்தினர். (ஆங்காங்கே மசூதிகளும் காணப்பட்டன). இங்கு எக்காலத்திலும் காலனித்துவம் இருக்கவில்லை. அதனாலோ என்னவோ, உயர்வு, மட்டம் என்று (பிறர் ஏற்படுத்திவிட்டுப் போகும்) வித்தியாசமும் கிடையாது. எல்லாரையும் அணைத்துப்போகும் குணம். `அலி’ என்று நாம் குறிப்பிடுபவர்கள் சமூகத்தில் பிறரைப்போல சமமாகக் கருதப்படுகின்றனர்.

    எந்தவித கண்டிப்பும் கிடையாது என்பதால் வீதிகளில் ஒரு சாண் அகல பிகினி அணிந்துபோகும் ஆண்களும் பெண்களும் சர்வ சாதாரணமான காட்சி. (முன்பு நிர்வாணக் குளியல் இருந்தது). குளிரால் பாதிப்பு அடையாதிருக்க விட்டமின் D உட்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தவர்களுக்கு எவ்வித பிரயத்தனமும் இல்லாது சூரியனே அதை அளிக்கும்போது, மூடி மறைத்துக்கொள்வானேன்! உச்சி வெயிலில், மூன்று மணி நேரம் நீச்சல் குளத்துள் காய்ந்தவர்களைப் பார்த்து எனக்கு ஒரே வியப்பு.

    உல்லாசப்பயணிகளை நம்பித்தான் வாழ வேண்டியிருக்கிறது என்ற நிலையில், பல இடங்களில் சர்வசாதாரணமாகக் காணப்பட்டபோலித்தனம் எனக்கு எரிச்சலை மூட்டியிருக்கிறது. புக்கெட் தீவில் உள்ளவர்களின் சிரிப்பில் எவரையும் ஏற்கும் நல்ல குணம்தான் தெரிந்தது.

    ஒரு கடை சாப்பாட்டுக்கடை என்றால், அடுத்தது மசாஜ் பார்லர். `உடலை இளைக்க வைக்கும் மசாஜ்’ என்று ஒரு வகை! பலருக்கும் அவசியம்தான் என்று தோன்ற, சிரிப்பு வந்தது. பின்னே? மலிவாகக் கிடைக்கிறதே என்று, வேளை பொழுது பாராது வகைவகையாக உள்ளே தள்ளினால்?

    IMG_20170717_171737

    “தேங்காய் எண்ணை மசாஜ் செய்து, உடலை பழுப்பு நிறமாக்குகிறோம்!” என்று ஒரு பலகை அறிவித்தது. நாமோ, முகத்தை வெண்மையாக்கும் கிரீம்களை நாடுகிறோம்! கருப்பாக இருக்கும் பெண்களுக்குக் கல்யாணம் ஆவதுகூட கடினம் என்ற நிலை! நல்ல உலகம்!

    தாய்லாந்தில் செய்யும் மசாஜ் உலகப் பிரசித்தமானதாகையால், தினமும் போனோம். எண்ணையைத் தடவி கையால் உடம்பை நீவிப் பிடித்துவிடுதல் ஒருவிதம். மூலிகைகளைத் துணியில் சுற்றி, சூடு காட்டி ஒத்தடம் கொடுப்பதுபோல் இன்னொன்று. இம்முறையைச் செய்பவர்கள் விசேடப் பயிற்சி பெற்றவர்கள். முதலில் கைகளையும் கால்களையும் முறுக்கினாள் எனக்கு மசாஜ் செய்தவள், கடினமான யோகப்பயிற்சியை ஒரே நாளில் கற்றுக்கொடுக்க விழைவதுபோல். வலி உயிர் போவதுபோல் இருந்தாலும், அதன்பின் புத்துணர்வு பிறந்தது. கண்கள் தெளிவாகின. குறித்த நேரத்துக்குமேல், நமக்குத் தேவையானவரை செய்கிறார்கள்.

    தீவானதால், இங்கு கடல்வாழ் இனங்களைக்கொண்டு ஆக்கப்பட்ட உணவுவகைகள் மலிவு. அதற்காகவே அண்டைநாடுகளிலிருந்து பயணிகள் வருகிறார்கள். காய் கனிகளும் மலிவு. ஒரு சாமானை விலை கேட்டு, வாங்காவிட்டால் கடைக்கார்கள் கோபிப்பதில்லை. புன்சிரிப்புடன், கைகூப்பி நமஸ்காரம் செய்கிறார்கள், `காபுன்கா’ (kapunka) என்று. (பெண்களுக்கு முகமன் கூறுவது, விடைபெறுவது இரண்டிற்கும் அதே வார்த்தைதான்).

    ஒரே மாதிரியான அக்கம்பக்கத்துக் கடைச் சிப்பந்திகளுக்குள் போட்டி இல்லை, நட்புடன் பழகுகிறார்கள் என்பது என்னை ஆச்சரியப்படுத்திய மற்றொரு சமாசாரம்.

    புக்கெட் தீவிலுள்ள எல்லாக் கடைகளிலும் ஒரு குறிப்பிட்ட பொருளுக்கோ, வாகன வசதிக்கோ ஒரே விலைதான். (இரண்டுமே அதிக விலை). அதனால் பேரம் என்பதே இல்லை.

    சைவ உணவில், மீனுக்குப் பதில் (fish stock) தேங்காய்ப்பால் சேர்த்துச் சமைத்துக் கொடுக்கிறார்கள். வருகிறவர்கள் திருப்தியாக உணவருந்தி மகிழ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஆக்குவதாலோ, என்னவோ, எல்லா இடங்களிலும் நல்ல ருசி. பெரிய அளவில் கொடுக்கிறார்கள்.

    ஒரு நாள், நான் நிறைய நடந்துவிட்டு, களைப்புடன் ஒரு சாப்பாட்டுக்கடையில் நுழையுமுன்னர், வாசலிலிருந்த இளைஞன் அருமையாக, “Mamma! Come!” என்று என் தோளைப்பற்றி, சற்று உயரமாக இருந்த வாசற்படியைக் கடக்கவைத்து, உள்ளே அழைத்துச் சென்றான். என்னைப் பிரத்தியேகமாகக் கவனித்தான்.

    திரும்பிப் போகையில், “உன் தாய் உன்னுடன் இல்லையா?” என்று விசாரித்தேன்.

    “வெகு தூரத்தில், பாங்காக்கில் இருக்கிறார்கள்!” என்று வருத்தத்துடன் கூறிவிட்டு, “எனக்கு நீங்கள்தான் அம்மா,’ என்றான்.

    ஆதரவுடன் அவன் தோளைத் தட்டிக்கொடுத்தேன். அவனுக்குப் பரம சந்தோஷம். “Take care of Mamma!” என்று என் மகளுக்கு அறிவுரை வழங்கினான்!

    காற்றோட்டமாக இருந்ததால், நிறைய நடக்க முடிந்தது. எந்த வேலையும் கிடையாது. வெயில் வேளையில் உறக்கம். உடலும் மனமும் ஒருங்கே லேசானதில், கற்பனையில் ஒரு நாட்டியப் பாடலும் எழுந்தது. போனதற்கு ஒரு நற்பயன்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    ’’ஆழ்ந்து படித்தென்ன ஆராய்ந்து பார்த்தென்ன
    வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம் -வீழ்ந்தடியை(வீழ்ந்து அடியை(பாதத்தை)
    ஆனத்தோல் போர்வைக்குள் ஆஅனன்யர் மால்மடிமேல்
    பூனைபோல் கள்ளமிதைப் பார்’’….கிரேசி மோகன்….!

    தீக்குளிட்டு பாரதி தீண்டிய தெய்வத்தை
    வாக்கிலெட்டா கண்ணனை வாழ்த்துவோம்-பூக்களிட்டு
    அப்பம் அதிரசம் முப்பழங்கள் வைத்தாலும்
    அப்பயலுக்(கு) அன்பே அறம்….!

    Share
  • வளமான பாரதம் எப்போது?

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்தியாவில் 89% அதிகப்படியான மழையோ, பெய்யவேண்டிய அளவான மழையோ பெய்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 600 பேர் பெரும்மழையினால் உயிரிழந்துள்ளனர். இரண்டு இலட்சத்து இருபதினாயிரம் மக்கள் தங்கும் வீடுகள் இழந்து பாதுகாப்புப் பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அசாமில் மட்டும் 1 இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். வடக்கே கங்கை, பிரம்மபுத்ரா ஆகிய நதிகளிலும் பெரும் வெள்ளம். இந்த வெள்ளம் ஒரிசாவையே புரட்டிப் போட்டுள்ளது. குஜராத் மக்களும் தாங்கொணாத் துயரில் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் குடி நீர் கூட இல்லாமல் மக்கள் அல்லலுற்று தெருவில் இறங்கிப் போராடும் நிலையே உள்ளது. இப்படி இரண்டு பக்கங்களிலும் நேர் எதிராக வாழும் சூழலே நம் இந்தியாவில் நிலவுகிறது. மொழிவாரி மாநிலம் இருக்கட்டும் என்றாலும் நதிகள் மாநில வாரியாக இல்லாமல் அனைத்து நதிகளும் தேசிய உடைமையாக்கப்பட்டு கங்கை – காவேரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தினால் ஊழலற்ற பாரதமாக மட்டுமல்லாமல் வளமான பாரதமாகவும் மாறும் என்பது உறுதி. இதன் முதற்கட்டமாக அந்தந்த பகுதிகளில் இருக்கும் நதிகளை இணைத்து இந்த அரியப் பணியை தொடங்கி வைக்கலாம். இதற்கு பொருளாதாரம் ஒரு பிரச்சனை என்றால், நதிநீர் இணைப்பிற்காக ஒரு தனி வரியை ஏற்படுத்தினாலும் மக்கள் மனமுவந்து கட்டக்கூடும். வெள்ளத்தால் உயிரிழக்கும் துயரச் சம்பவங்களும் நடைபெறாமல் தவிர்க்கலாம். ஊழலற்ற பாரதம் என்பதோடு வளமான பாரதத்தையும் மக்கள் எதிர் நோக்கியுள்ளார்கள் என்பதே உண்மை.

    Share
  • மூதறிஞர்கள்(ராஜாஜி & சோ. சார்)….!

    RAJAJI.....!

    ”அடியேன் இரண்டு ஓவியங்கள் கிண்டியில் பொறியியல் படிக்கும் காலத்தில் வரைந்தேன்….இருவருமே மூதறிஞர்கள்….ஒருவர் ‘’ராஜாஜி’’….மற்றவர் ‘’சோ ராமாசாமி’’ அவர்கள்….என்னிடம் இருப்பது மூதறிஞர் திரு.ராஜாஜி அவர்களின் ஓவியம்(இணைத்துள்ளேன்)….திரு. சோ சார் அவர்களின் ஓவியம் டாக்டர் ஜெகதீஸன் சாரிடம் உள்ளது….. ஓவியத்தில் கையெழுத்து வாங்கி தருவதாக ஓவியத்தை வாங்கிச் சென்ற எங்கள் குடும்ப வைத்தியர்(டாக்டர் ஜெகதீஸன் ‘’சோ சாருக்கு’’ நெருங்கியவர்) இப்போது சொர்கத்தில் உள்ளார்(’’டாக்டர் சோ வந்துருக்கார் சொர்கத்திற்கு கையெழுத்து வாங்கி வையுங்கள் அடியேன் வருகையில் கலெக்ட் செய்து கொள்கிறேன்’’)திரு சோ. சார் அவர்களின் ஓவியத்தை மீண்டும் வரைந்தேன்(இணைத்துள்ளேன்)…..’’ராஜாஜி’’ ஓவியத்தில் வாங்கித் தருவதாகச் சொன்ன என் தாத்தாவும் சொர்கம் சென்று விட்டார்….!’’ராஜாஜி’’ ‘’சோ’’ ’’ஜெகதீஸன்’’ மூவரும் சொர்கம் சென்றுவிட்டார்கள்…இருவரின் கையெழுத்துதான் இல்லை அந்தோ….!

    Cho....8888....!

    எனது ‘’சாக்லேட்-கிருஷ்ணா’’ ‘’சோ சாரின்’’ ‘’சம்பவாமி யுகே யுகே’’, வாலி சாரின் ‘’கலியுகக் கண்ணன்’’ inspiration என்றால் மிகையாகாது….திரு.ராஜாஜியும், திரு வெங்கடகிருஷ்ணைய்யங்காரும்(எனது தாத்தா) சொர்கத்தில் ‘’ஸ்வந்திரா பார்ட்டி’’ அமைக்கச் சென்றுள்ளார்கள்….அடியேன் பூமியில்….!

    வாழ்க மூதறிஞர்கள் இருவரும்….. வளர்க அவரது புகழ்….

    என்னால் முடிந்த இரங்கற்பா சோ சாருக்கு….

    ‘’சே’’என்(று) எவருமே சொல்லமாட் டார்துக்ளக்
    ‘’சோ’’என்ற ராமசாமி சொல்வதை; -’’நா’’வென்ற
    நாடகத் தந்தை நயத்தகு வாக்கது
    ஆடகச் செம்பொன் அழகு’’….கிரேசி மோகன்….!

    விவேகா ஃபைன் -ஆர்ட்ஸ் பூஜைப் பாடலில் ‘’ஆடகச் செம்பொன் மேனி முருகனே ‘’(நீலு அண்ணா குரல் தனியாகக் கேட்கும்) என்ற வரி வரும்….முருகரும் அழகு ,சோ சாரின் எழுத்தும் அழகு’’…..!

    Share
  • மணிமேகலையில் கூறப்படும் கடல் பெண் தெய்வங்கள்

    -முனைவர். இரா.ஜெயஸ்ரீ 

         பொங்கிப் பெருகி அலைமோதும் நீரைப் பார்த்த தமிழர்கள் அந்த நீருக்குக் கடல் என்று பெயரிட்டனர். கடத்தற்கு இயலாதது என்ற பொருளை இச்சொல் தாங்கி நிற்கிறது.

    manimekalai

         தமிழ்ப்பெரும் புலவர் தண்டமிழ் ஆசான் சாத்தனார் என்பவரால் புத்த சமயக் கருத்துக்களை நிறுவுவதற்கு எழுந்த காப்பியம் மணிமேகலை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த இக்காப்பியம் பெண்ணின் பெருமைக்குப் பெருமை சேர்ப்பது. இயற்கைக்கு அப்பாற்பட்ட இயற்கை இறந்த காட்சிகள் இந்நூலுள் அதிகம். இக்கட்டுரை மணிமேகலையில் கூறப்படும் கடல் பெண் தெய்வங்கள் குறித்தும் கடல் குறித்தும் ஆராய்கிறது.

    சம்பாபதி

         மணிமேகலைக் காப்பியத்தின் பதிகத்திலேயே சம்பாபதி பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு அப்பெயரும், சம்பாபதியால்தான் உண்டானது என்று புனைந்துரைக்கப்பட்டுள்ளது.

         பிரமதேவன் நாவலந்தீவிற்கே முதன்மையான பதியாக “சம்பாபதி” என்னும் கடல் தெய்வத்தின் பெயரால் இந்நகரை உருவாக்கினான் என்பது அதன் காலப்பழமையைச் சுட்டுகிறது.

         “தெய்வக் கருவும் திசை முகக்கருவும்
         செம்மலர் முதியோன் செய்த அந்நாள்
         என் பெயர்ப் படுத்தவிவ் விடும்பெயர்; மூதூர்
         நின்பெயர்ப் படுத்தேன் வாழிய என” (மணி. விழாவறை காதை-(28-31)

         சம்பாபதி காவிரித்தாய்க்கு ஆசியுரை வழங்குவதுபோல் கூறப்படுகிறது. சம்பாபதி நாவலந்தீவின் காவல் தெய்வம். விரித்த செஞ்சடை, செவ்வொளியால் சிவந்த திருமேனி கொண்டு அழகு விளங்கும் மேருவின் உச்சியிலே தோன்றியவள் அவள். சக்கரவாளக்கோட்டமுரைத்த காதையில், தனது மகனை இழந்து தவிக்கும் கோதமை என்ற தாய்க்கு உளவியல் உண்மையை உரைப்பவளாக இவள் காட்டப்படுகின்றாள்.

    மணிமேகலா தெய்வம்

         மணிமேகலா தெய்வம் கோவலனின் குலதெய்வம். “அதன் பெயரையே மாதவி மகளுக்கு இடுக” என்று கோவலன் கூறிய செய்தியும் சிலம்பினுள் காணலாம். உதயகுமரனுக்கு அஞ்சி மணிமேகலை பளிக்கறை புகுந்தாள். அவன் அகன்றவுடன் மணிமேகலையை மணிமேகலா தெய்வம் வான்வழி எடுத்துச்சென்று மணிபல்லவத்தீவில் விடுகிறது.

         “உருவுகொண்ட மின்னே போலத்
         திருவில் இட்டுத் திகழ்தரு மேனியாள்”                     (சக்கரவாளக் கோட்டமுரைத்த காதை 9-10)   என்று பெண்ணுருவம் கொண்டு வந்த ஒரு மின்னல் கொடியைப் போலவும், இந்திரவில்லைப் போலவும் ஒளிபரப்பி அழகினைத் தந்து கொண்டிருக்கின்ற திருமேனி உடையவளாகவும் அவள் தோற்றம் உரைக்கப்படுகிறது.

         உதயகுமரனிடமிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனைகள் கூறுகிறாள். வாழ்க்கையின் அரிய உண்மைகளை மணிமேகலா தெய்வம் கூறுவதுபோல,

         “அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
         கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
         மிக்க நல்லறம் விரும்பாது, வாழும்
         மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ?”

                         (சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை (101-104)     என்று கூறுவதன் மூலம், “இறப்பு உறுதி என்பது தெரிந்தும் நல்லற நெறிகளில் விருப்பமின்றி மக்களுள் வாழ்வோரும் உள்ளனரே” என்ற உலகியல் உண்மைகளைச் சாத்தனார் உரைக்கிறார்.

    மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடையே மணிமேகலையைக் கொண்டு போய்ச் சேர்த்தபின் இரவிலே புகாருக்கு வந்து அரசகுமாரனுக்கு அறிவுரையும் சொல்கிறது. பின்பு மணிமேகலையின் முற்பிறப்புக் கதையினைக் கூறியதோடு மூன்று மந்திரங்களையும் மணிமேகலைக்கு உபதேசித்து மறைந்தது.

    தீவதிலகை

         பாத்திரம் பெற்ற மணிமேகலையின் முன்னர்த் தீவதிலகை தோன்றினாள்.

         “பழுதில் காட்சியிந் நன்மணிப் பீடிகை
         தேவர்கோன் ஏவலிற் காவல் பூண்டேன்
         தீவதிலகை என்பெயர் – இது கேள்”     (பாத்திரம் பெற்றகாதை (27-29)

         என்று, “ பழுதற்ற தோற்றத்தினை உடைய நன்மையைத் தரக்கூடிய இந்த மாணிக்கப் பீடிகையைக் காவல் காக்கும் பணியினை மேற்கொண்டிருக்கின்ற தீவதிலகை யான்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாள். இலங்கையில் யாழ்ப்பாணப் பகுதியில் “இரத்தினகிரி” எனும் ஒரு நகரமும், “சமனெலை” எனவும் வழங்கப்படும் “சிவனொளி பாதமலை” இதுவே என்பாரும்  உளர்.

         மணிமேகலைக் காப்பியத்தின் பாவிகமான பசிப்பிணி போக்குதலைத் தீவதிலகை வாயிலாகக் கூறுகிறார் காப்பிய ஆசிரியர்.

         குடிப்பிறப்பு அழிக்கும், விழுப்பம் கொல்லும்
         பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
         நாணணி களையும்; மாணெழில் சிதைக்கும்;
         பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும், 
         பசிப்பிணி எனும் பாவி”     (பாத்திரம் பெற்றகாதை (76-80)     என்று பசிப்பிணி பற்றிக்கூறி, அமுதசுரபியைக் கோமுகிப் பொய்கையிலே மணிமேகலை பெற்ற பின்பு தீவதிலகையின் திருவடிகளை வணங்கினாள் மணிமேகலை.

    நாகநாடு

         ஆதிரையாளின் கணவன் சாதுவன் மரக்கலம் ஏறிப்பொருள் தேடிவர மரக்கலத்தில் பயணம் செய்த காட்சியானது

         “நளியிரு முந்நீர் வளிகலன் வெளவ”
         ஒடிமரம் பற்றி ஊர்திரை உதைப்ப” (ஆதிரை பிச்சையிட்ட காதை (13-14)     என்று கடல்சார் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.

         மணிமேகலையில் 24, 28, 29 ஆகிய காதைகளில் சோழநகரம் கடலால் அழிந்து ஒழிந்த காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. கடல்கோளின் பேரழிவையும், முழு அழிவையும் நேரில் பார்த்தவர்கள் தமிழர்கள் எனலாம். அழிந்த நாகர்நாடு இன்றைய நாகப்பட்டினத்திற்குத் தென்கிழக்காக இருந்திருக்கலாம் என்பர் அறிஞர். க.பா.அறவாணன். (தமிழ் மக்கள் வரலாறு, 134).

    கடல் சார்ந்த உவமைகள்

         மணிமேகலையின் பாட்டி சித்திராபதி உதயகுமரனிடம் சென்று அவன் மணிமேகலையை மணம் செய்து கொள்ளவேண்டும் என்று கூறினாள். அப்போது அவன் அடைந்த மகிழ்ச்சியைக் குறிப்பிடும் போது,

         “ஓங்கிய பௌவத்து உடைக்கலப் பட்டோன்
         வான்புணைப் பெற்றென” (உதயகுமரன் அம்பலம் புக்க காதை 05-66)

    என்ற உவமை குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அலைகள் மிக்கெழுந்து பொங்கிய கடலிடையே மரக்கலம் உடைபட்டுச் சிக்கிய ஒருவன். சிறந்ததோர் புணையினைத் தான் உயிர்தப்பிச் செல்வதற்கு உதவியாகப் பெற்றாற்போல உள்ளம் மகிழ்ந்தான்” என்று கடல் இங்கே காட்சி உவமையாக்கப்பட்டுள்ளது.

    கந்திற்பாவை

         உதயகுமரன் காஞ்சனனால் கொலை செய்யப்பட்ட பிறகு சாதாரண பெண்ணைப்போல அழுது புலம்பிய மணிமேகலையை கந்திற்பாவை தெளிவிக்கிறது. அவள் உயர்கதிக்குச் செல்ல இருப்பவள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

    புண்ணியராசன்

         நாகபுரத்தை அரசாள்வோன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராசன். அவன் மணிகேலையை நீ யார்? என்று வினவ, அவள் தன் கையிலுள்ள ஓடு அவனுடையதே என்றும், மணிபல்லவத்துப் பீடிகையைத் தொழுது பழம்பிறப்பு உணருமாறும் கூற அவனும் கப்பலில் புறப்படுகின்றான். தீவதிலகை புகார் கடலால் கொள்ளப்பட்டதைக் கூறுகிறாள்.

         “அணிநகர் தன்னை அலைகடல் கொள்க”
         என இட்டனள் சாபம், பட்டது இதுவால்”                      (ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை (199-200)  என்று மணிமேகலா தெய்வம் புகார் நகரத்தைக் கடலுள் பட்டு அழியச் சாபமிட்ட செய்தி உரைக்கப்பட்டுள்ளது.

         நாம் வாழுகின்ற இந்த புவிக்கோளின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்டு இருக்கின்றது. உலக நாடுகளின் மொத்தக் கடற்கரை நீளம் 3,15,000 மைல்கள். கடலில் உள்ள தண்ணீர் மொத்த எடை 1,450,00,00,00,00,000,0000 மெட்ரிக் டன்கள் புவியின் மொத்த எடையில் 0.0022 விழுக்காடு. தமிழகத்தில் 1000 கிலோ மீட்டர் நீளம் கடற்கரை உள்ளது. நாம் கடலுக்கு அருகிலேயே வசித்தாலும் அதைப்பற்றி சிந்திப்பதில்லை.

         நமது பழந்தமிழ்ப் பெருமை மீட்போம்!
         கடல் அறிவில் புகழ் குவிப்போம்!

    ***

    ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள் 

    1)    ஐம்பெருங்காப்பியங்கள், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ) இளங்கனி பதிப்பகம், சென்னை.

    2)    மணிமேகலை, புலியூர்க் கேசிகன்.

    3)    க.ப.அறவாணன், தமிழ் மக்கள் வரலாறு, தமிழ்க்கோட்டம், சென்னை.

     

     

    Share
  • பக்கத்து வீடு

    ராஜகவி ராகில்

     

     

    நகரம்

    சீமெந்துக் காடு

    தொலை தூரம் பக்கத்து வீடு

     

    கிராமம் சோலை

    உள் அறைக்குள் பூத்திருக்கும்

    பக்கத்து வீடு

     

    பக்கத்து வீட்டோடு

    பகை கொண்டவன்

    மனிதப் படியிலிருந்து கீழ் இறங்கியவன்

     

    தாகமென்றால்

    கிணற்றோடு வரும்

    பக்கத்துவீடு

     

    பக்கத்து வீடு

    சுவாசம்

    ஒவ்வொரு நாளும் பலகறி வீட்டில்

     

    புன்னகை கண்ணீர்

    பரிமாறுகின்ற பாத்திரம்

    பக்கத்து வீடு

     

    அடுப்பு எரியவில்லை

    அடுத்த வீட்டு நெருப்பில்

    உனக்காகப் பொங்கும் பால்

     

    பக்கத்து வீடுதான்

    முதல் முற்றம் சுற்றம்

     

    பக்கத்து வீடு

    லட்டு

    இனிக்கத் தொடங்கும்  இதய நா

     

    நரம்புகளில் தாலாட்டு ஒலிக்கும்

    பக்கத்து வீடு

    தாய் மடி போலானால்

     

    தூக்கம் தைக்கும்

    பக்கத்து வீடு

    முள்ளென்றால்

     

    பக்கத்து வீட்டோடு காதல் உண்டெனில்

    ஒவ்வொரு நாளும்

    மகிழ்ச்சிக்கு நடக்கும்

    திருமணம்

     

    Share
  • கல்யாணம்

     ரா.பார்த்தசாரதி 

     

    கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல காளை வந்தான்

    கழுத்தில் தாலி ஏறும் வேளை  வந்தது

    மாப்பிள்ளை  காசு கேட்டதால் கல்யாணம் நின்றது

    கல்யாண சந்தையில் மாப்பிள்ளை  ஒரு வியாபார பொருள்

     

    பிள்ளையை விற்கும் பெற்றோரை  பாருங்கள்

    தன்மானம் விற்று, சன்மானம் கேட்கின்ற விபரீதம் பாருங்கள்

    பிள்ளையின் படிப்பும், வேலையும் சந்தைப்பொருள்  ஆனதே

    கரும்பு தின்ன கூலி கேட்கும் அவலம்  ஆனதே!

     

    வரதட்சணை உங்களை பூம்,பூம் மாடாக்கியதே

    வருங்காலத்தில் வரதட்சிணை மறைமுகமாக வசூலாகிறதே

    வரதட்சணைக்கு  தடை விதியுங்கள்

    பெண்ணின் இதயத்தை தட்சணையாக கேட்டிடுங்கள்!

     

    உங்கள் அன்பை பெண்ணுக்கு கைமாறாய் கொடுத்திடுங்கள்

    மகள் இல்லா வீட்டில் , மருமகளை மகளாக நினைத்திடுங்கள்

    மகன் இல்லா வீட்டில்  மருமகனை மகனாய் நினைத்திடுங்கள்

    மாப்பிளைகளே வரும் காலத்தில், பூம்,பூம் மாடாய் இருக்காதீர்கள்

     

    வரதட்சணை  இல்லா வாழ்க்கைத்  துணையை நாடுங்கள்

    பணத்தை குறிக்கோளாய் என்றும் நினைத்திடாதே

    படிப்பிற்கும், அறிவுக்கும், மதிப்பு அளித்து விடு

    விட்டுக்கொடுத்து  வாழ்வதே நன்மை என நினைத்திடு  !

     

     

     

     

    Share