“ஸ்ரீராம தர்ம சரிதம்” (3)
மீ.விசுவநாதன்
பகுதி: மூன்று
பாலகாண்டம்
இலக்குவனும், சீதையும் உடன் வருதல்
அண்ணனுக்குத் தொண்டாற்றி ஆதிமுதல் வாழும்
அடக்கமிகு இலக்குவனும் அடவிக்குச் சென்றான்
மண்மகளாம் ஜானகியும் வருங்காலம் உங்கள்
வரமென்றே தன்கணவன் மனமொப்பச் சென்றாள்!
எண்ணத்தில் பாசத்தை ஏற்றிய மன்னன்
ஈடிலா தயரதனும் எல்லைவரை வந்தான்
தண்கங்கைக் கரைக்”குகனை” சந்தித்த பின்னால்
தன்னுடைய மக்களைத் தா(ன்)அனுப்பி வைத்தான் ! (21)
முனி பரத்வாஜர் ஆஸ்ரமம் அடைதல்
ஒவ்வொரு வனப்பகுதி உள்ளேயும் சென்று
ஓடிவரும் ஆறுகளை உற்சாகத் தோடு
செவ்வானக் கோலமென சிந்தையிலே வைத்து
சீர்முனியாம் பரத்வாஜர் சிறந்தகுடில் வந்தார் !
அவ்வேளை அம்முனியின் ஆணையினை ஏற்று
அழகு”சித்ரக் கூடத்தை” அப்போதே சேர்ந்தார் !
இவ்விதமாய் மூவருமே இருக்கின்ற வேளை
இறந்திட்டார் தசரதர் ஈடில்லா மன்னர் ! (22)
பரதன் அரசேர்க்க மறுப்பதும் இராமனை வேண்டலும்
வாரிசாய் பரதனை வசிட்டரும் மற்ற
மகத்தான அந்தணரும் வருந்திட்ட போதும்
நேரியநற் குணபரதன் நீதியைத்தான் தாங்கி
நேராகக் காட்டிற்கு இராமவழி சென்றான் !
நேரிலே அண்ணன்முன் நெஞ்சார வீழ்ந்து
நீங்களே அரசரென நிசத்தோடு வேண்ட,
“யார்வந்து சொன்னாலும் யான்கொடுத்த வாக்கை
அப்படியே காப்பதாய் அண்ணலுமே சொன்னார்!” (23)
பரதனுக்கு பாதுகை அளித்த இராமன்
தன்னுடைய பாதுகையைத் தன்தம்பி கையில்
தனிக்கருணை இராமனும் தந்தனுப்பி வைத்தார் !
நன்றியுடன் அண்ணனது நல்மொழியைப் பெற்று
“நந்திகிரா மத்”திலே நற்பாது கையால்
அன்றுமுதல் பரதனும் ஆட்சியினைச் செய்தான் !
அண்ணனை எதிர்பார்த்தே அருந்தவமும் ஏற்றான் !
நன்றிந்த நேரமென, நாட்டோர்கள் யாரும்
நடந்தறியாக் காட்டிற்குள் நல்ராமன் சென்றான் ! (24)
அகத்தியமுனிவரை சந்தித்தல்
“விராத”னெனும் அரக்கனை வீழ்த்திய பின்னே
வேதமுனி “அகத்தியரின் வேள்விக்கூ டத்தில்
இராமனும் சீதையும் இலக்குவனும் கூடி
இணையிலா அகத்தியர் இணையடியைப் போற்ற
வராதநற் செல்வமே வந்ததாக எண்ணி
வாழ்த்தினர் மாமுனி வாஞ்சையாய் நன்றாய் !
அராவணை விட்டுவந்த அழகனுக் கென்றே
அம்பறாத்துணி இரண்டினை அகத்தியர் தந்தார். (25)
தண்டகாரண்யத்தில் முனிவர்கள் வேண்டல்
செந்தீயை வளர்த்துநிதம் வேள்விசெய்வோர் வந்து,
“தீயதோர் அரக்கர்கள் தினம்தரும் தொல்லை
இந்திரரே ஆனாலும் எதிர்த்துப்போர் செய்ய
எப்போதும் அஞ்சுவர் ! இராமனே உங்கள்
மந்திரவில் கொண்டுடன் மாற்றுவீர்எம் அச்சம் !
மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்” என்று
சுந்தர இராமனைத் தோத்திரம் செய்ய,
“சூழ்வினை தீர்த்துமக்கு சுகந்தருவே” னென்றான் ! (26)
சூர்ப்பணகையும், இராவணனும்
அதன்பெயரே ஜனஸ்தானம் ! அங்குதான் தீய
அரக்கியாம் சூர்ப்பணகை அட்டகாசம் செய்வாள் !
அதனாலே அவளங்கு அங்கபங்கம் செய்து
அவமானப் பட்டுவிட்டாள் ! ஆத்திரம் கொண்டு
முதலாக கரதூஷண மூர்க்கரினை ஏவ
முற்றுமவர் கொட்டத்தை முடித்திட்டான் ராமன் !
பதிலுக்கு இராவணன் பழிதீர்க்க எண்ணி
பற்றுள்ள மாரீசன் பக்கபலம் கேட்டான். (27)
மாரீசன் நல்லுரை
“ஆற்றலும், எந்நாளும் அறம்வழுவா நல்ல
அகத்தாலும் உறுதிபெற்ற ஆண்வீரன் ராமன்
தோற்றாலும் அவர்முன்னே தோற்றலே வெற்றி !
தொலைத்திடு வீண்பகையை சொல்வதைக்கேள்” என்றான்.
தூற்றினான் துப்பினான் தொடர்ந்துவா என்று
துரத்தினான் மாரீசனை தூயராம தர்மம்
நோற்றிடும் ஆசிரமம் நோக்கியே ! அந்த
நூதன மாயாவி நொடியினில் சென்றான். (28)
இராவணன் சீதையைக் கவர்தல்
மாயாவி மாரீசன் வஞ்சகமாய் அங்கே
வளையவந்து இராமனை மயக்கியே ஓட
ஓயாத இலக்குவனும் ஓடிப்பின் போக
ஒளிந்துவந்த இராவணனும் உத்தமியாம் சீதைத்
தீயோடு போய்விட்டான் ! தேவமகள் கத்தும்
திசைபார்த்து ஜடாயுவும் தேடிப்போர் செய்தார் !
தீயோனோ ஜடாயுவை வெட்டியே சாய்த்தான் !
இராமனிடம் கழுகுராஜன் எல்லாமும் சொன்னார் ! (29)
ஜடாயுவும், சபரியும்
கலங்கிநின்ற இராகவனோ கழுகுராஜன் ஈமக்
கடன்முடித்தார் ! சீதையின் கண்ணீரைப் போக்கத்
துலங்குகிற நாள்தேடிப் போகின்ற போது
துட்டனாம் “கபந்தனை”க் கொன்றுதீ யிட்டார்!
நிலம்விட்டுப் போகையில் “இராமாநீ நல்ல
நெறியாளர் சபரிகுடில் செல்லுக வென்றான் !”
அலம்பிவிட்ட நிலவொளியில் அமைதியைத் தேடி
அலைந்தபடி “சபரி”யிடம் அமைதியைப் பெற்றார். (30)
(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)